இணைய இதழ்இணைய இதழ் 92சிறுகதைகள்

நான் ஆதினி – பராந்தக மணியன்

சிறுகதை | வாசகசாலை

து நகரத்தை விட்டு சற்று ஒதுங்கி இருக்கும் காஃபி ஷாப். காஃபி ஷாப்பில் அதிக கூட்டம் இல்லாதது அவனுக்கு ஏதோ மனநிறைவைத் தந்தது. யாரையோ எதிர்பார்த்து தன் முன் இருக்கும் ஆவி பறக்கும் காஃபியை பார்த்தபடி இருக்கிறான். தரகர் செல்வம் உள்ளே வருகிறார். சுற்றிலும் பார்க்கிறார். அவன் இருக்கும் மேசையைப் பார்க்கிறார், அவனருகே சென்று ஒரு வணக்கம் வைத்தபடி அவன் எதிரே அமர்கிறார். “பொண்ண காலேஜ்ல விட்டுட்டு வர கொஞ்சம் லேட் ஆகிடிச்சி”, அவன் “பரவால்ல.”என்று சொல்லியபடி காஃபியை ஒரு வாய் சுவைக்கிறான். வெயிட்டர் செல்வம் முன்பு ஒரு டபரா டம்ளரில் காஃபியை வைத்து விட்டுச் செல்கிறார். அவன் “இங்க இருந்து எவ்ளோ தூரம் நாம பக்க போற வீடு?” என்று கேட்க, செல்வம் “பக்கம் தான் சார்”என்று சொல்லியபடி டபரா டம்ளரை ஆற்றுகிறார். அவன் வெளியே பார்த்தபடி “ஹவுஸ் ஓனர் எங்க இருக்காங்க?”. செல்வம் அவனைப் பார்க்கிறார். அவன் வெளியே பார்த்தபடி இருக்கிறான். “ஏன் சார்?” அவன் திரும்பி செல்வத்தை பார்க்கிறான். “கேட்டேன் செல்வம்”, செல்வம் காஃபியை ஒரு வாய் சுவைத்து விட்டு “ஹவுஸ் ஓனர்  திருநெல்வேலி பக்கம் சார். ரெண்டு பேரும் சென்ட்ரல் கவர்மெண்ட் ஸ்டாப். ரிட்டையர்டு ஆகிட்டாங்க, மாசத்துக்கு ஒரு தடவ வருவாங்க. ரெண்டு நாள் தங்கிட்டு போவாங்க, இப்போ ஒரு மூணு மாசமா வரது இல்ல. அவருக்கு கொஞ்சம் உடம்பு முடியல. அதான் இருக்கிற காலத்துல நல்ல இடமா பார்த்து வீட்டை முடிச்சிடலாம்னு இருக்காங்க”. வெயிட்டர் பில் கொண்டு வந்து வைக்கிறார், அவன் நூறு ரூபாய் தாள் ஒன்றை வைக்கிறான். இருவரும் எழுந்து காஃபி ஷாப்பை விட்டுச் செல்கின்றனர். 

எட்டு வழிசலையில் ஆங்காங்கே வாகனங்கள் பரபரப்பாக சென்றுகொண்டிருக்கிறது. வெள்ளை நிற க்ரட்டாவில் அவனும் செல்வமும் செல்கின்றனர். அவன் கார் டிரைவ் செய்தபடி “ஹவுஸ் ஓனர்க்கு பசங்க யாரும் இல்லையா?”. செல்வத்திடம் இருந்து பதில் ஏதும் இல்லை. அவன் திரும்பி செல்வத்தைப் பார்க்கிறான். செல்வம் படு சீரியஸாக மொபைலில் ஏதோ பார்த்து கொண்டிருக்கிறார். அவன் மீண்டும் சாலையைப் பார்த்தபடி டிரைவ் செய்கிறான். அவன் மீண்டும் செல்வத்தை பார்த்தபடி ”ஹவுஸ் ஓனர்க்கு பசங்க யாரும் இல்லையா?”, செல்வம் சட்டென நிமிர்ந்து “சார், வர ரைட்ல யு டர்ன் போட்டு முத லெஃப்ட் திரும்பணும். க்ரெட்டா எட்டு வழிசாலையில் மத்தியில் யு டர்ன் எடுக்கிறது. சாலையின் இடப்பக்கமாக திரும்புகின்ற நாற்பதடி அகலமுள்ள தெருவில் செல்கிறது. சிறிது தூரம் சென்று தெருவின் நடுப்பகுதியில் வலப்புறம் ஓரம் கட்டி கார் நிற்கிறது.

காரின் முன் இருக்கையில் இருந்தபடி செல்வம் தனக்கு இடப்புறம் இருக்கும் ஒரு வீட்டை அவனுக்கு காட்டுகிறார். ”இந்த வீடுதான் சார்“. அவன் தலையைச் சற்று குனிந்து அந்த வீட்டை கார் ஜன்னல் வழியாகப் பார்க்கிறான். முற்றிலும் பராமரிக்காமல் ஓரளவு பராமரிக்கப்பட்ட தனி வீடு. வீட்டைச் சுற்றிலும் மரங்களும் செடிகளும் ஆடாமல் அசையாமல் அந்த வீட்டிற்குத் தேவையான நிழலை கொடுத்துக்கொண்டு அமைதியாக இருக்கின்றன. வீட்டைச் சுற்றிலும் 20 அடிக்கு இடம் விட்டு கட்டப்பட்டிருக்கும் ஐந்து அடி உயர கோட்டைச் சுவர். தெருவில் அத்தனை வீடுகள் இருந்தாலும் அந்த வீடு மட்டும் எதையோ இழந்ததைப் போன்று அமைதியாக காட்சியளித்துக் கொண்டிருந்தது, தாய் தந்தையை இழந்து தனியாக ரோட்டில் நிற்கும் குழந்தையை போல். 

செல்வம் போனில் ஒருவனிடம் “நாங்க வந்துட்டோம். சார் கூடத்தான் இருக்காங்க. சீக்கிரம் வா” மொபைலை கட் செய்து விட்டு அவனிடம் “என் மாப்ளதான் வீட்டு சாவியை வச்சிருக்கான். இப்போ வந்திடுவான்”. இருவரும் காரில் அமர்ந்திருக்கிறார்கள். தள்ளுவண்டியை தள்ளிக் கொண்டு காய்கறி விற்பவன் தன்னிடம் உள்ள காய்கறிகளை ரெகார்ட் செய்த ஒரு குழாய் ரேடியோவில் திரும்பத் திரும்ப ஒலிக்கவிட்டபடி அவர்களைக் கடந்து செல்கிறான். சிறிது நேரத்தில் அந்த வீட்டின் முன் பைக்கில் ஒருவன் வந்து நிற்கிறான். செல்வம் காரிலிருந்து இறங்கி அவனருகே செல்கிறார். அவன் சாவிக் கொத்தை செல்வத்திடம் கொடுக்கிறான். சாவியை கொடுத்துவிட்டு பைக்கில் வந்தவன் திரும்பிச் செல்கிறான். செல்வம் கையில் சாவிக் கொத்துடன் காரின் அருகே வந்து அவனிடம் “வாங்க சார் போலாம்”. 

அவன் காரிலிருந்து இறங்குகிறான். செல்வம் வீட்டின் கேட்டைத் திறந்து உள்ளே செல்கிறார். வீட்டைப் பார்த்தபடி செல்வத்தின் பின்னால் அவன் செல்கிறான். செல்வம் வாசலில் செருப்பை கழட்டிவிட்டு வீட்டின் கதவைத் திறக்கிறார். கதவை முழுவதுமாக திறந்தபடி “வாங்க சார்“. அவனை உள்ளே அழைத்தபடி செல்கிறார். அவன் ஷூவைக் கழட்டி விட்டு மெதுவாக வீட்டின் உள்ளே அடியெடுத்து வைக்கிறான். செல்வம் லைட், பேன் சுவிட்ச் ஆன் செய்தபடி “ரொம்ப நாள் புழங்காம இருக்குல்ல.. அதான் கொஞ்சம் ஸ்மெல் வருது“ சொல்லியபடி ஒவ்வொரு அறையின் கதவையும் திறந்து விட்டு  வீட்டின் உள்ளே செல்கிறார். அவன் ஹாலில் நின்றபடி சுற்றிப் பார்க்கிறான். ஹாலில் இருக்கும் சோபா, அதன் அருகில் ரெட் கலர் டெலிபோன், டிவி, சோபாவின் அருகில் இருக்கும் பெரிய ஜன்னல், சுவர் முழுக்க ஆர்ட் பிரேம்ஸ் என மனதிற்கு அமைதியாகவும் அதே நேரத்தில் எதையோ தொலைத்து விட்டு நிற்பதைப் போலவும் உணர்கிறான். செல்வம் பின்கதவைத் திறந்து விட்டு ஹாலிற்கு வந்து அவனிடம் “அக்ரீமெண்ட் சைன் பண்ணினதும் பொருள் எல்லாம் எடுத்துப்பாங்க சார், பின்னாடி செடி, கிணறு எல்லாம் இருக்கு. நீங்க பாத்துட்டு இருங்க நான் ஒரு போன் பேசிட்டு வந்திடுறேன்” சொல்லிவிட்டு செல்வம் போனை பாக்கெட்டிலிருந்து எடுத்தபடி வெளியே செல்கிறார்.

அவன் ஹாலிலிருந்து நேராக இருக்கும் சின்ன ஹால் வேயில்  மெதுவாக நடந்து செல்கிறான். ஹால்வேயின் இடது புறம் இருக்கும் அறையின் கதவைத் திறந்து பார்க்கிறான். நல்ல பெரிய மாஸ்டர் பெட்ரூம். உள்ளே செல்கிறான் அறையில் இருக்கும் கட்டில் , பீரோ, ஏசி, அட்டாச்ட் டாய்லெட், பாத்ரூம் அனைத்தையும் பார்த்துவிட்டு அறையை விட்டு வெளியே வருகிறான். ஹால்வேயின் வலப்புறம் அறையின் கதவைத் திறக்கிறான். அந்த அறை ஆங்காங்கே ஒட்டடை படிந்து காணப்படுகிறது. அறையிலிருந்து வரும் ஒரு விதமான ஊச நெடி அவன் மூக்கைத் துளைக்கிறது. அவன் முகத்தைச் சுளித்தபடி அறைக்குள் தயங்கித் தயங்கிச் செல்கிறான். அறையில் இருக்கும் கட்டில் ஏடாகூடமாக கிடக்கிறது. அறையின் ஒரு மூலையில் இருக்கும் டேபிளைப் பார்க்கிறான். டேபிள் மேல் சிகப்பு நிற டைரி இருக்கிறது. அவன் அந்த டேபிள் அருகே செல்கிறான். தூசி படிந்திருக்கும் அந்த டைரியை ஒற்றை விரலால் திறக்கிறான். ஒவ்வொரு பக்கமாய் திருப்புகிறான். டைரியின் பக்கங்களில்  எதுவும் எழுதப்படாமல் இருக்கிறது. மேலும் சில பக்கங்களை மொத்தமாகத் திருப்பிப் பார்க்கிறான். நடுவில் சில பக்கங்களில் எழுதி இருப்பதை பார்க்கிறான். எழுதிய பக்கங்களை திருப்புகிறான். புறாக்களின் சத்தங்களும், பட படவென அதன் றெக்கைகளை அடிக்கும் சத்தமும் அவனுக்கு கேட்கிறது. அவனது இதயம் படபடக்கிறது. அந்த பக்கத்தில் “நான் ஆதினி“ என்று எழுதப்பட்டிருக்கிறது. 

இனி ஆதினியின் குரலில்…

நான் ஆதினி,

ஏன் எழுதுகிறேன் என்று தெரியவில்லை, இருந்தாலும் எழுதுகிறேன். என்றோ ஒரு நாள் இதை நீ படிப்பாய் என்ற நம்பிக்கையா? நிச்சயம் இல்லை. ஏனென்றால் நான் எங்கே இருக்கிறேன், எப்படி இருக்கிறேன் என்பதை விட , நீ எங்கே இருக்கிறாய்.. எப்படி இருக்கிறாய் என்று எனக்குத் தெரியாது. ஆனால், நான் உனக்காக காத்திருக்கிறேன். உன்னோடு வாழ்ந்துகொண்டு கொண்டிருக்கிறேன். ஒளியை விட வேகமாகச் செல்லும் கற்பனை என்னும் உலகத்தில் சஞ்சரித்து நானும் நீயுமாய் , நீயும் நானுமாய் உனக்கும் எனக்குமான உலகில் வாழ்ந்துகொண்டிருக்கிறேன்; இல்லை, நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். கற்பனை ஒரு மாபெரும் சுயநலவாதி. நடக்காதவற்றை நினைக்கச் செய்யும் பெரும் சக்தி கற்பனைக்கு உண்டு. அதில் பேரின்பம் காண்கிறோம். 

உனக்குத் தெரியுமா? என்னைப் போல அதிர்ஷ்டசாலி இந்த உலகத்தில் யாரும் இல்லை. தினமும் மிக நீண்ட பகல் பொழுதைக் கடக்கின்றேன். பாலைவனத்தைக் கடக்கும் ஒற்றை யாத்ரீகனைப் போல, தினமும் மிக நீண்ட இரவினை ரசிக்கிறேன். பால்வெளியில் மிதக்கும் ஒற்றை நட்சத்திரம் போல. நேரம் இல்லை என்று சொல்பவர்கள் யாரேனும் இருந்தால் என்னிடம் அனுப்பி வை. என்னுடைய மிக நீண்ட நெடிய நேரங்களைத் தருகிறேன்.. இலவசமாக. 

நான்கு சுவர்களுக்குள் நான். எப்பொழுதும் மூடியிருக்கும் ஒற்றைக் கதவு, எப்பொழுதும் திறந்திருக்கும் ஜன்னல், அறையின் மூலையின் இருக்கும் மர டேபிள் , ஒரு மர சேர், மற்றொரு ஓரத்தில் இருக்கும் பழங்காலத்து மர கட்டில். அதில் நான் படுத்து உறங்கி பலநாட்கள் ஆகின்றன. தரையில் சுருண்டு படுத்திருப்பதையே விரும்புகிறேன். பாவம், அந்தக் கட்டிலும் என்னைப் போல தனியாகத்தான் வாழ்கிறது. 

என் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மட்டுமே என் அறையை விட்டு வெளியே வருகிறேன். என் வீட்டு ஹாலில் இருக்கும் ஜன்னலின் அருகே அமர்ந்திருந்தால் எனக்கு நேரம் போவது தெரியாது. பேருந்தில் ஜன்னல் ஓரத்தில் அமர்ந்து பயணிக்கும் பயணிகள் போல. இசையும் ஜன்னல் ஒர பயணமும் தேனும் பாலும் போல, ருசித்தால் மட்டுமே தெரியும் அதன் சுவை. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எத்தனை போட்டிகள் அந்த ஜன்னல் ஒர இருகைக்காக. ஜன்னல் ஒர பயணத்தில் உழைக்கும் வர்க்கம் இருந்தால் அசதியில் உறங்குவார்கள். ஜன்னல் ஒர பயணத்தில் குழந்தைகள் இருந்தால் வேகமாய் நகர்ந்து செல்லும் மரங்களையும்,மலைகளையும் கூடவே வரும் மேகங்களையும் வியப்பில் ஆழ்ந்து பார்ப்பார்கள். ஜன்னல் ஒர பயணத்தில் கலைஞன் அமர்ந்தால் தன் எண்ணங்களையும் கற்பனைகளையும் வேகமாய் கடந்து செல்லும் இயற்கையிடம் கொட்டி தீர்த்து கொண்டு வருவான்.. இயற்கை கூட அவன் பாவக் கதையை நின்று கேட்காமல் ஓடி சென்று விடுகின்றது. பாவம் கலைஞர்கள். எத்தனை எத்தனை மனிதர்கள் எத்தனை எத்தனை நியாபகங்கள் அந்த ஜன்னல் ஒர பயணத்தில்! 

அப்பாவும் அம்மாவும் வேலைக்குச் சென்ற பிறகு அந்த ஹாலில் அமர்ந்தபடி ஜன்னல் வழியாக நான் பார்க்கும் உலகமும், நான் கேட்கும் சங்கீதமும் எத்தனை கோடி கொட்டினாலும் நிகர் இல்லை. எத்தனை எத்தனை ஜீவன்கள் இந்த பூமியிலே. பட்சிகளின் சத்தமும், இதமான காற்றின் தீண்டலும், எங்கோ தூரத்தில் கேட்கும் இளையராஜாவின் பாடலும். அப்பப்பா.. கேட்குதா உனக்கு அந்த பட்சிகளின் சத்தம்? கேட்குதா உனக்கு இளையராஜாவின் பாடல்? கேட்டுச்சொல். சுற்றியிருக்கும் வீடுகளில் எல்லாம் “நீயா நானாவும் , பிக் பாஸ் சீசன்களும்” இன்னும் பல நிகழ்ச்சிகளில் யாரோ எங்கையோ கத்திக் கொண்டும் பேசிக் கொண்டும் இருப்பதை அயராது பார்த்து ஓய்ந்து தேய்ந்து கொண்டிருக்கும்போது, நான் மட்டும் தெருவில் செல்லும் வாகனங்களின் இரைச்சலோடு பழம் விற்பவன், காய்கறி விற்பவன், பழைய பேப்பர் வாங்குபவன் என்று பலதரப்பட்ட விளிம்பு நிலை மக்களின் குரல்களை  அன்றாடம் இந்த ஜன்னல் அருகாமையில் இருந்தபடி கேட்டு கொண்டிருக்கிறேன். 

என் வீட்டு ஹாலின் ஜன்னலைத் திறந்தால் பக்கத்து வீட்டின் ஹால் ஜன்னல் தெரியும். என் பேதைமையை என்னவென்று சொல்ல.. அந்த ஜன்னலின் மறுபக்கம் நீ இருந்து என்னைப் பார்ப்பது போல உணருகிறேன். பள்ளிக்காலத்தில் என் வகுப்பறையில் இருந்து ஜன்னல் வழியாக உன் வகுப்பறையைப் பார்த்தபடி இருப்பேன். அப்பப்பா. ஜன்னலுக்கும் எனக்கும்தான் எவ்வளவு நெருக்கமான உறவு. முதன் முதல் உன்னைப் பார்த்த அந்த நாளின் நினைவுகள் இன்றும் என் இதயத்தில் படபடத்து கொண்டிருக்கின்றன புறாக்களின் றெக்கைகளை போல. மெதுவாக ஜன்னலைத் திறந்து பார்.. மொட்டை மாடியில் குடியிருக்கும் நூற்றுக்கணக்கான புறாக்களின் சத்தங்கள். அவைகளில் ரெக்கைகள் எழுப்பும் ஓசைகள். கூர்ந்து கேட்டுப் பார். என் இதயத் துடிப்பை உனக்கு உணர்த்தும்.

வழக்கம் போல வகுப்பில் கவனிக்காமல் வெளியே வேடிக்கை பார்த்தபடி இருந்தேன். நீயோ உன் வகுப்பறைக்கு வெளியே நின்று கொண்டிருந்தாய். உன்னையே பார்த்தபடி இருந்த என்னையும் என் வகுப்பாசிரியர் வெளியே அனுப்பினார். அப்போதான் நானும் நீயும் முதன் முதல் எதிர் எதிரே நின்று சந்தித்து கொண்டோம். அன்றைக்கு லஞ்ச் பிரேக்கில் நான் லைப்ரரிக்கு சென்று கொண்டிருந்தேன், நீ என் பின்னால் ஓடி வந்து என் கூடவே நடந்து வந்தாய். என் இதயத்தில் நூறு புறாக்கள் ஒன்றாக பறப்பது போல இருந்தது. ‘ஏன் க்ளாஸுக்கு வெளிய நின்னுட்டு இருந்த?’ன்னு கேட்டேன். நீ சொன்ன அந்த பதிலால் நான் திக்கு முக்காடிதான் போனேன். ஆனால், அது உனக்குத் தெரிய வாய்ப்பில்லை. ஏன்னா பெண்களுக்கே உண்டான குணம். ‘பாட்டு பாடிட்டு இருந்தேன்’னு சொன்னாய். அதோடு நிறுத்தியிருக்கலாம்.. ‘உன்னை நினைச்சு பாடிட்டு இருந்தேன்’னு நீ சொன்னதும். உண்மையோ பொய்யோ.. ஆனால், கேட்க சந்தோசமாக இருந்தது. நான்தான் பதில் ஏதும் சொல்லாமல் சென்றேன். எனக்கு சின்ன வருத்தம்… ச்ச ஏதாவது பதில் சொல்லிருக்கலாம் என்று. ஆனால், நீ அந்த பாடலைப் பாடியபடி என்னைத் தொடர்ந்து வந்ததைப் பார்த்ததும் உள்ளுக்குள் ஆயிரம் பட்டாம் பூச்சிகள் சிறகடிக்க ஆரம்பித்துவிட்டன. 

ஒன்று சொல்ல மறந்து விட்டேன்.. இப்போல்லாம் அடிக்கடி கண்ணாடி முன் நின்று பேசிக் கொண்டிருக்கின்றேன். ஒரு நாள் எங்க அப்பா பார்த்து விட்டு சத்தம் போட்டார். ‘எத்தனை தடவ சொல்றது இப்டி தனியா நின்னு பேசாதேனு?’ எனக்கோ உள்ளுக்குள் சிரிப்புதான் வந்தது. அவருக்கு எப்படித் தெரியும் நான் உன்னிடம் பேசிக் கொண்டிருக்கின்றேன் என்று. நீ அன்றைக்கு பாடின பாட்டு இப்போ வரைக்கும் என் மனதில் ரீங்காரமிட்டு கொண்டிருக்கிறது. என் அறையில் தனியாக நான் அந்த பாடலை பாடிக்கொண்டிருக்கிறேன்.

ஹான்.. முதலில் சொன்னபடி லைப்ரரிக்குப் போகாமல் எதையோ சொல்லிக் கொண்டிருக்கிறேன். நான் லைப்ரரி உள்ளே போனபின்னும் தொடர்ந்து என் பின்னால் வந்தாய். நீ ஏதோ முடிவோடு இருக்கிறாய் என்று நினைத்து கொண்டேன். உன் காதலை என்னிடம் சொல்லாமல் சொன்னாய் . எனக்கு அப்போது பதில் சொல்லத் தெரியவில்லை. எனக்காக பைக்காரா பக்கத்துல இருக்கிற மலை உச்சியிலே காத்துக் கொண்டிருப்பேன் என்று சொன்னாய். நான் வர மாட்டேன் என்று சொன்னேன். நீ எனது பதிலைக் கூட கேட்காமல் சென்றாய். நீ செல்வதையே பார்த்துக்கொண்டு இருந்தேன், லைப்ரரி வாசல் அருகில் சென்று திரும்பி பார்த்தாய். நாளைக்கு மதியம் பைக்காரா 12 மணி என்று சைகையால் சொல்லி விட்டு மறைந்தாய். அன்றுதான் நான் உன்னை கடைசியாகப் பார்த்தது. அதன் பிறகு நீ எங்கு சென்றாய்? ஏன் என்னைப் பார்க்க வரவில்லை? எதுவும் எனக்குத் தெரியவில்லை. நான் எங்கு இருக்கிறேன்.. எப்படி இருக்கிறேன் என்று உனக்குத் தெரிய வாய்ப்பும் இல்லை. நான் உன்னைத் தேடி வந்தேன். ஆனால், நீ அங்கு இல்லை. அன்றைக்கு முழுவதும் உனக்காக அங்கு காத்திருந்தேன். உன்னைத் தேடி தேடி எனக்கு மிகவும் களைப்பாகி விட்டது.  நான் வரமாட்டேன் என்று நினைத்தாயா? எனக்காக சில மணித் துளிகள் காத்திருப்பு உன்னை இறுக்கமடைய செய்து விட்டதா? இல்லை.. எனக்காக நீ காத்திருந்து காத்திருந்து இந்த உலகத்தை வெறுத்தாயா? நீ எங்கே சென்றாய் என்று தெரியாமல் இன்றும் உனக்காக நான் காத்துக்கொண்டிருக்கிறேன். நீ பாடிய அந்தப் பாடலை பாடியபடி. உன்னிடம் பேசிய அந்த நாட்களை அசைபோட்டபடி. கடைசியாக கேட்கிறேன் – “நீ எங்கு இருக்கிறாய் மகி?”

எனக்கு இங்கு யாரையும் தெரியாது. எனக்குத் தெரிந்ததெல்லாம் என் அறையைச் சுற்றி சுற்றி வரும் இந்தக் குருவி, காக்கா, புறா, என் அறையில் வலை கட்டி இருக்கும் எட்டுக் கால் பூச்சி, எப்போதும் சுவற்றிலும், அவ்வப்போது கட்டிலுக்கு கீழும் வலம் வரும் பல்லி.. இவர்கள் மட்டும்தான். இவர்களுக்கு மட்டும்தான் என் கதை தெரியும். எத்தனை தடவை சொல்லியிருப்பேன் என்று தெரியவில்லை. ஆனால், ஒவ்வொரு தடவையும் பொறுமையாக கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். இப்போல்லாம் அப்பா என்னைச் சத்தம் போடுவது இல்லை. 

‘கொஞ்சம் பொறு. அம்மா சாப்பாடு கொண்டு வராங்க சாப்டுட்டு வரேன். ஹ்ம்ம் சாப்பிட்டேன். என்னமோ தெர்ல இன்னைக்கு அம்மாதான் ஊட்டி விட்டாங்க. ரொம்ப நாளாச்சு அம்மா கையால சாப்பிட்டு. அவங்க கண்ணு லேசா கலங்கின மாதிரி இருந்தது. அம்மா ரொம்ப அழகா இருப்பாங்க. இன்னைக்கு ஏனோ ரொம்ப வாடிப் போய் இருக்காங்க. எல்லாம் என்னாலதான்னு நினைக்கிறேன். வெயிட், வெளிய ஏதோ சத்தம் கேட்குது. ஒரே கூச்சலும் சத்தமுமாக இருக்கு. என் வீட்டு முன்னால ஏதோ வண்டி வந்து நிக்கிற மாதிரி இருக்கு. வெளிய என்னை நடக்குதுன்னு தெர்ல.கண்ணெல்லாம் சொருகுது. தூக்கம் தூக்கமா வருது. என்னைச் சுத்தி ஏதோ நடக்குத்து.  ஆனா, என்னன்னு தெரியல!’ 

மிக நீண்ட இரவை ரசித்தபடி இதை எழுதுகிறேன் , என் கண்கள் நெடு நாட்களாகத் தூக்கமின்றி தவிக்கிறது. நான் உன்னோடு வாழ்கின்ற வாழ்க்கையை முழுமையாக ஒரு நாள் எழுதுகிறேன். இன்னும் எத்தனை நாள் இந்த அறையில் இருப்பேன் என்று எனக்குத் தெரியாது. சுவற்றில் இருக்கும் பல்லி என்னை வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறது. இன்றைக்கு முழுவதும் அதோடு நான் பேசவில்லை. நான் போய்விட்டால் இந்த அறையில் அது தனியாக இருக்கும். பாவம், என்னைப் போல் நீண்ட பகலையும் இரவையும் கடக்கத் தெரியாது அதற்கு. என் நினைவுகளை மட்டும் விட்டு செல்கிறேன் இந்த அறையில். 

என்றும் அன்புடன் 

உன் ஆதினி.

கையில் உள்ள டைரியை வெறித்துப் பார்த்தபடி அவன் நிற்கிறான். செல்வம் உள்ளே வருகிறார். அவன் தலை குனிந்தபடி நின்றுகொண்டிருக்கிறான். செல்வம் அவனை அழைக்கிறார் “சார்… “ அவன் பதில் ஏதும் சொல்லாமல் தலை குனிந்தபடி நிற்கிறான். செல்வம் மீண்டும் அவனைக் கூப்பிடுகிறார் “மகி சார்“.. அவன் திரும்பி பார்க்கிறான். அவன் கையில் டைரியுடன் இருப்பதை செல்வம் பார்க்கிறார். செல்வம் மெதுவாக அவனிடம் வற்றிய குரலில் “அவங்களுக்கு ஒரு பொண்ணு இருக்கு சார்“ அவன் மெதுவாகத் திரும்பி செல்வத்தைப் பார்க்கிறான். 

செல்வம் தொடர்ந்து “பாவம் சார் அந்த பொண்ணு, நானே அந்த பொண்ணப் பார்த்தது இல்ல.. ஏன், இந்தத் தெருல யாருமே பார்த்திருக்க மாட்டாங்க. ரெண்டு பேரும் வேல பாக்கிறதால சின்ன வயசுலயே அந்த பொண்ண போர்டிங் ஸ்கூல்ல சேர்த்து விட்டுட்டாங்க. மாசத்துல ஒரு தடவ இல்ல ரெண்டு தடவ போய் பார்த்துட்டு வருவாங்க. அந்தப் பொண்ணு பிளஸ் டூ படிக்கும்போது பாதியிலேயே படிப்பை நிறுத்திட்டு கூட்டிட்டு வந்துட்டாங்க. ஏதோ சித்தபிரம்ம பிடிச்சிட்டுனு அக்கம்பக்கம் பேசிக்கிட்டாங்க. திடீர் திடீர்னு நைட் அந்த பொண்ணு கத்தும். ஊரையே கூப்பிடற அளவுக்கு சத்தம் போடும். கொஞ்ச நேரத்தில அதுவா அடங்கிடும். இது இங்க இருக்கிறவங்களுக்கு தொந்தரவா இருந்திருக்கு. அந்த வீட்டைக் கடந்து போறதுக்கே சின்ன புள்ளைங்க பயப்பிடறாங்க, நைட் ஆனா தூங்க முடியல அப்படி இப்படினு போலீஸ்ல கம்பளைண்ட் பண்ணிட்டாங்க. ஒரு நாள் போலீஸ் வந்திச்சி. பொண்ணோட அப்பா அம்மாட்ட பேசினாங்க.. அவங்க சம்மதிக்கல. ஊருக்கு பைத்தியமா தெரிஞ்சாலும் பெத்தவங்களுக்கு புள்ளதான சார். பொண்ணோட அப்பா அம்மா கெஞ்சி கதறினாங்க சார். எங்க புள்ள எங்க கூடையே இருக்கட்டும்னு. யாரும் கேட்கல. பாவம் சார் அவங்க. பெத்த வயிறு தாங்கமுடியல அந்த அம்மாவுக்கு.

ஒரு நாள் நைட் ஆம்புலன்ஸ் வந்தது.. கூடவே போலீசும் வந்தாங்க. அந்த அம்மா கையாலையே அந்த பொண்ணுக்கு சாப்பாட்ல மயக்க மருந்து கொடுக்க வச்சாங்க. மயக்க நிலைல அந்த பொண்ண ஸ்ட்ரெச்சர்ல தூக்கிட்டு வீட்ல இருந்து வெளிய கொண்டு வந்தாங்க சார். இந்த தெருல இருக்கிற எல்லாரும் அப்போதான் சார் அந்தப் பொண்ணோட முகத்தை முதன் முதலா பார்க்கிறாங்க. ஒண்ணு சொல்லவா, பைத்தியம்னு சொன்னா யாரும் நம்ப மாட்டாங்க சார். செல்வம் கண்ணில் வழியும் நீரை துடைத்தபடி … “தேவதை சார் . “

செல்வம் தொடர்ந்து “ஆம்புலன்ஸ்ல ஏத்தி மெண்டல் ஹாஸ்பிடல் கூப்டு போய்ட்டாங்க.” அங்கு சிறிது அமைதி நிலவுகிறது. செல்வம் அந்த ரூமை சுற்றிலும் பார்க்கிறார். “நானே இப்போதான் சார் இந்த ரூம்க்குள்ள வந்து பார்க்கிறேன். இந்த ரூம் மட்டும் அவ இங்கேயிருந்து போகும்போது எப்படி இருந்திச்சோ அப்டியே இருக்கட்டும்னு விட்டுட்டாங்க“

அவன் கண்கள் கலங்கியபடி அந்த அறையைச் சுற்றிப் பார்க்கிறான். வர்ணம் பூசப்படாமல் கைவிடப்பட்ட நிலையில் அந்த அறை இருப்பதை உணர்கிறான். கையில் இருக்கும் டைரியை தடவிப் பார்க்கிறான். மெதுவாக அந்த அறையை விட்டு வெளியே சென்று ஹாலில் வந்து நிற்கிறான். செல்வமும் அவன் அருகில் வந்து நிற்கிறார். அவன் ஹால் ஜன்னலைப் பார்க்கிறான். ஜன்னல் பூட்டி இருக்கிறது. ஜன்னல் அருகே செல்கிறான். ஜன்னலை மெதுவாகத் திறக்கிறான் மெல்லிய காற்று அவனைத் தீண்டுகிறது பட்சிகளின் ரீங்காரத்தைக் கேட்கிறான். ஜன்னல் கம்பிக்கருகில் நின்றபடி தலையை உயர்த்தி வானத்தைப் பார்க்கிறான். புறாக்களின் சத்தத்தைக் கேட்கிறான். பட படவென அவை றெக்கைகளை அடிக்கும் சத்தத்தைக் கேட்கிறான். அவன் இதயம் படபடக்கிறது. தூரத்தில் எங்கோ இளையராஜாவின் பாடல் ஒலித்துக் கொண்டிருக்கிறது. 

********

paritalkies79@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button