இணைய இதழ்இணைய இதழ் 92கட்டுரைகள்

வான்கோவின் இரவு – சரத்

கட்டுரை | வாசகசாலை

வான்கோ, தற்கொலை செய்து கொண்டபோது அவருக்கு வயது வெறும் 37. ‘போஸ்ட் இம்ப்ரெஷனிஷம் வகை ஓவியங்களின் முன்னோடி’ என இன்று கொண்டாடப்படும் வான்கோ, வாழ்ந்த காலத்தில் அதற்குண்டான எந்தப் பலனையும் அனுபவிக்காமலேயே இறந்திருக்கிறார். 

இன்று கோடிக் கணக்கில் விலை போகும் அவருடைய ஓவியங்கள், அவை வரையப்பட்ட நேரத்தில் ஒன்று கூட விலை போகாமல் இருந்தது காலத்தின் முரண்.

தீவிர மனநோயால் பாதிக்கப்பட்டு இருந்த அவர், சாகும் வரை ஓவியங்கள் மட்டும் வரையத் தவறவில்லை.

முகத்தில் சோக ரேகைகள் ஓடும், வான்கோவின் Self Portrait ஓவியங்களை நீங்கள் பார்த்திருக்கக் கூடும். அவை எல்லாமே, இறுக்கமான மனச் சூழலில் அவர் வரைந்ததே.

வான்கோ என்றவுடன் நம் கற்பனையில் விரியும் திரை கூட, இருள் சூழ்ந்ததாகவே இருக்கிறது அல்லவா?

சரி, யார் இந்த வான்கோ?

வான்கோவின் முழுப்பெயர், வின்சென்ட் வில்லியம் வான்கோ ( Vincent Williem von Gogh).

1853ஆம் ஆண்டு, மார்ச் 30ஆம் நாள், நெதர்லாந்தின் ஒரு சிறு கிராமத்தில், சாதாரண ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர்.

தியோவை (Theodorus van Gogh ) சேர்த்து, அவருடன் பிறந்தவர்கள் மொத்தம் ஐந்து பேர். வான்கோவின் குடும்பமே ஓவியக் கலையோடு தொடர்புடையது. வான்கோவுடைய தந்தை ஒரு பாதிரியார். 

வான்கோ தனது 16வது வயதில், உறவினர் ஒருவருடன் இணைந்து, ஓவியங்கள் விற்கும் தொழிலை மேற்கொண்டார். அதுவே அவருக்கு ஓவியங்களின் மீது ஈர்ப்பு வரக் காரணமாக அமைந்தது.

தம்பி தியோவின் உதவியுடன் ஓவியம் பயின்றார் வான்கோ. அவர் வரைந்த ஓவியங்களை எப்படியாவது நல்ல விலைக்கு விற்று விட வேண்டும் என்பதே தியோவின் முழு நேர வேலையாக இருந்திருக்கிறது. அதற்குண்டான எல்லா முயற்சிகளையும் தியோ மேற்கொண்டார். அன்பின் வெளிப்பாடாக இருவரும் பறிமாறிக் கொண்ட கடிதங்கள், இன்றும் உலகப் புகழ் பெற்றவை. 

ஓவியக் கலையில் வான்கோவுக்கு நிறைய அனுபவங்கள் கிடைக்க வேண்டும் என்பதற்காக, அந்நாளில் பிரபலமாய் இருந்த பல ஓவியர்களிடம் வான்கோவை நட்பு பாராட்ட வைத்தார் தியோ. அதில் ஒருவர்தான் புகழ் மிக்க ஃப்ரெஞ்ச் ஓவியரான பால் காகின் (Paul Gauguin).

வான்கோவுக்கும் பால் காகினுக்கும் இருந்த நட்பு வினோதமானது. 1888ஆம் ஆண்டு, ஃப்ரான்ஸில் சந்தித்துக் கொண்ட இவர்கள், இரண்டே மாதங்களில் தங்கள் நட்பை முறித்துக் கொண்டனர்‌.

இந்த காலகட்டத்தில்தான் வான்கோவின் மனச்சிதைவு உச்சத்தைத் தொட்டிருந்தது. மித மிஞ்சிய குடிப்பழக்கம், மனநோயின் தீவிரத்தை மேலும் அதிகப்படுத்தியது. 

வான்கோவின் சிந்தனைகள், நிலை இல்லாமல் தத்தளித்தன. கவனச் சிதைவு உண்டானது. காதில் யாரோ பேசுவதைப் போன்ற மாயக்குரல் (Hallucination) ஒலித்தது. எளிதில் கோபமுற்றார். தூக்கம் இல்லாமல் தவித்தார்.

சிறிய ஏமாற்றங்களையும் அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. கோபத்தையும் அழுகையையும் மாறி மாறி வெளிப்படுத்தினார்.

1888 ஆம் ஆண்டு, டிசம்பர் 24 ம் நாள்‌.

வான்கோவின் மனச்சிதைவு, உச்சத்தை எட்டிய ஒரு சம்பவம் அரங்கேறியது.

வான்கோவை விட்டு வெளியேற வேண்டும் என்ற எண்ணத்துடன் இருந்த காகினிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் வான்கோ. அது கைகலப்பில் முடிந்தது. காகினின் முகத்தை, கண்ணாடிக் கோப்பையைக் கொண்டு காயப் படுத்தினார் வான்கோ.

அன்று இரவே கூரிய கத்தியைக் கொண்டு, தன்னுடைய இடது பக்க காதை தானே அறுத்துக் கொண்டார்!

அறுபட்டக் காதை, தனக்குப் பிடித்தமான விலைமாது, ரேச்சலிடம் கொண்டு போய் கொடுத்தார். தன்னுடைய காதை தானே அறுத்து, அதை ஒரு பெண்ணிடம் பரிசாகக் கொடுத்த சம்பவம் வரலாற்றில் வேறெங்கும் நடந்திருக்கிறதா எனத் தெரியவில்லை.

காளைச் சண்டையில் வெற்றி பெறும் ஆண், இறுதியில் அந்த காளையின் ஒரு பக்க காதை அறுத்துத் தனக்குப் பிடித்த பெண்ணிடம் கொடுப்பது அப்போதைய வழக்கில் இருந்து வந்தது. அதன் பாதிப்பாகவே வான்கோ இப்படிச் செய்திருக்கக் கூடும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

மூன்று வாரங்களுக்குப் பிறகு தலையில் கட்டுடன் இருக்கும் தன் முகத்தைத் தானே வரைந்தார் வான்கோ. 

மனநலத்துறையில், மனச்சிதைவு நோய் உள்ளவர்கள், தங்களைத் தாங்களே காயப் படுத்திக் கொள்வதற்குப் பெயர் Von Gogh Syndrome. இப்பெயர் உருவாகக் காரணமாக இருந்தது இந்நிகழ்வே! 

வான்கோவுக்கு இருந்த மனநோயைப் பற்றி பல மருத்துவர்கள் பலவிதமாக எழுதியுள்ளனர்.

அவருக்கு மனச்சிதைவு, இருதுருவ நோய், அதீத குடியால் உருவான மனச்சிதைவு, பார்டர் லைன் பர்சனாலிட்டி என அத்தனை தீவிர மனநோய்களையும் பட்டியலிடுகிறார்கள். ‘Temporal Lobe Epilepsy’ எனும் ஒரு வகையான வலிப்பு நோயும் வான்கோவுக்கு இருந்திருக்கிறது.

2016ஆம் ஆண்டு, நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம் வான்கோ அருங்காட்சியகத்தில் (Amsterdam von Gogh Museum ) , வான்கோவுக்கு இருந்த மனநோய் பற்றி விவாதம் செய்யப்பட்டது.

இருபதுக்கும் மேற்பட்ட மனநல மருத்துவர்கள் ஒன்றுகூடி, வான்கோவின் மனநலம் பற்றி சிறப்புரை ஆற்றினர்.

வான்கோவின் ஓவியங்களைக் கொண்டும் அவர் எழுதிய கடிதங்களை அடிப்படையாக வைத்தும் அவருடைய மனநிலையை ஆராய்ந்தனர்.

தன்னுடைய இருபதாவது வயதில் ஏற்பட்ட ஒரு பெண்ணின் நிராகரிப்பு, அவர் மனதில் ஆழமாகப் பதிந்திருக்கிறது. மன அழுத்தத்தில் சில நாட்கள் இருந்திருக்கிறார். பின்பு அதிலிருந்து விடுபட்டு, ஓவியங்கள் வரைவதில் கவனம் செலுத்தியிருக்கிறார். ஆனால், குடிப்பழக்கம், பண நெருக்கடி, தனிமை என சூழ்நிலை சார்ந்த விஷயங்கள், அவரை மீண்டும் மன அழுத்தத்திற்குத் தள்ளியது. மன அழுத்தம் மனச் சிதைவாக உருமாறியது.

1889ஆம் ஆண்டு, தியோவின் உதவியுடன், ஃப்ரான்ஸில் உள்ள, ‘சென்ட் ரெமி’ எனும் மனநல விடுதியில் சேர்ந்தார் வான்கோ.

சில மாதங்கள் உள் நோயாளியாக தங்கி இருந்த அவர் அப்போது எழுதிய கடிதங்களும், வரைந்த ஓவியங்களும் உலகப் புகழ் பெற்றவை. அதில் ஒன்றுதான் ‘The Starry Night’ ஓவியம்.

வான்கோவின் ஓவியங்களுள், ‘The Starry Night’ முக்கியமானது. அவருடைய மனநலம் பற்றிய ஆராய்ச்சிகளில், மிக முக்கியப் பங்கு வகிப்பது. 

29*36 அளவில் வரையப் பட்ட இந்த ஓவியம், இன்று நியூயார்க் மார்டன் மியூசியத்தில் உள்ளது.

‘The Starry Night’ ஓவியம் விழித்திருப்பவனின் இரவைப் படம் பிடித்துக் காட்டுகிறது. வான்கோவின் இரவை பிரதிபலிக்கிறது. 

வான்கோவின் இரவு நீண்டது. அடர்த்தியானது. தனிமையால் பின்னப்பட்டது. இருளில் மூழ்கிக் கிடக்கும் நிழலைப் போல அது உருவமற்றது. 

அந்த ஓவியத்தை ஒருமுறை உற்று பாருங்கள்.

கடல் அலையைப் போல பொங்கி எழும் அடர் நீல மேகங்கள், வான்கோவின் வெறுமையான மனநிலையைக் காட்டுகிறது.

மஞ்சள் நிற நட்சத்திரங்களும், அதிலிருந்து பீறிடும் கதிர்களும் அவருடைய குழப்பமான மனநிலையைக் காட்டுகிறது.

கீழே சிறு பகுதியாக‌ மட்டுமே வரையப்பட்டிருக்கும் கிராமப்புற வீடுகள், அவர் மனதின் ஏதோ ஒரு மூலையில் மிச்சமாக ஒட்டிக் கிடக்கும் அமைதியைக் குறிக்கிறது.

வான் உயர வளர்ந்து நிற்கும் சைப்ரஸ் தாவரம், ஓவியத்தின் பெரும்பகுதியை ஆக்கிரமிப்பு செய்திருக்கிறது‌. சைப்ரஸ் தாவரத்தை மரணச் சடங்கில் பயன்படுத்துவார்கள்.

எனில், இந்த ஓவியம் மரணத்தின் குறியீடா?

‘University Of South Alabama’ வைச் சேர்ந்த, மூளை சிகிச்சை சார்ந்த மருத்துவக் குழு ஒன்று, ‘ The Neuro Anatomical Interpretation Of The Painting – Starry Night’ என்ற பெயரில் ஒரு ஆய்வை நடத்தியது.

அதில், ‘The Starry Night’ ஓவியத்தை மனித மூளையுடன் அவர்கள் ஒப்பிடுகிறார்கள்!

‘மூளையில் உள்ள ‘Hippocampus’ எனும் பகுதி, ‘The Starry Night’ ஓவியத்துடன் ஒத்துப்போகிறது’ என்ற அவர்களுடைய கோட்பாடு தனித்துவமானது.

வான்கோவின் பெரும்பாலான ஓவியங்கள், மஞ்சள் நிறத்தில் வரையப்பட்டிருக்கும். 

தனது பிரதான நிறமாக மஞ்சள் நிறத்தை ஏன் அவர் தேர்ந்தெடுக்க வேண்டும்?

‘Creativity and Chronic Disease Vincent Van Gogh (1853 – 1890)’ எனும் தலைப்பில், Paul Wolf என்பவர், ஓர் கட்டுரையை எழுதி இருக்கிறார். அதில், இதற்கான விடை கிடைக்கிறது.

இரண்டு முக்கிய காரணங்களை Wolf முன் வைக்கிறார்.

1. Absinthe எனப்படும் ஒரு வகையான மதுவுக்கு‌ அடிமை ஆகியிருந்தார் வான்கோ. அதில் இருக்கும் Thujone எனப்படும் சேர்மம், கண் பார்வையை பாதிக்கக் கூடியது. அதன் விளைவாகவே அவர் மஞ்சள் நிறத்தில் வரைந்தார்.

2. வான்கோவின் தீராத வலிப்பு நோய்க்கு உதவும் Digitalis எனும் மருந்தின் பக்கவிளைவே அவரை மஞ்சள் நிறத்தில் வரைய வைத்தது.

இதில், இரண்டாவது காரணம் ஏற்கும்படியாக இருக்கிறது. 

Digitalis எனும் மருந்து, அந்த காலத்தில் வலிப்பு நோய் சிகிச்சைக்கான முக்கிய மருந்து. ஆனால், பல்வேறு பக்கவிளைவுகளால் Digitalis, சிகிச்சை முறையில் இருந்து கைவிடப்பட்டது. அதன் ஒரு பக்கவிளைவுதான், பார்க்கும் இடமெல்லாம் மஞ்சளாகத் தெரிவது.

Julian Schnabel இயக்கி Willem Defoe நடிப்பில் 2018இல் வெளியான திரைப்படம் ‘At Eternity’s Gate’ வான்கோவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படங்களுள் முதன்மையானது. இதில் இடம்பெறும் முக்கியக் காட்சிகள், மஞ்சள் நிற பின்னணியில் வருகின்றன.

இத்திரைப்படம், வான்கோவுக்காக செய்யப்பட்ட ஓர் அர்ப்பணிப்பு என்றே தோன்றுகிறது.

வான்கோவின் இறுதி நாட்கள், பாரிஸிலிருந்து தனிமைப்படுத்தப்பட்ட ஒரு கிராமத்தில்தான் கழிந்தது. தனியறை ஒன்றில் அவர் தங்கி இருந்தார்.

1890ஆம் ஆண்டு, ஜூலை 29 ம் நாள். 

வழக்கம் போல, தான் தங்கி இருந்த அறையின் அருகில், ஓவியம் வரைந்து கொண்டிருந்தார் வான்கோ.

என்ன நினைத்தாரோ தெரியவில்லை, திடீரென ஓவியம் வரைவதை நிறுத்திவிட்டு, தன்னுடைய துப்பாக்கியைக் கொண்டு, தானே சுட்டுக் கொண்டார். அப்போது அவரைத் தவிர அங்கே வேறு யாரும் இல்லை.

எழுத்தாளர் எஸ்‌.ராமகிருஷ்ணன், இந்நிகழ்வை ஒரு கட்டுரையில் இப்படி எழுதியிருப்பார்‌.

‘துப்பாக்கியின் வெடிச்சத்தம் கேட்டுப் பறப்பதற்கு, அங்கே காகங்கள் கூட இல்லை…’

வான்கோவின் உயிர், அந்த இரவு முழுவதும் ஊசலாடிக் கொண்டிருந்தது. பாரிஸில் இருந்து அவரச அவசரமாக தியோ வரவழைக்கப்பட்டார்.

தியோவின் மடியில் வான்கோவின் உயிர் பிரிந்தது. 

சாகும் போது தியோவிடம் அவர் சொன்ன வார்த்தைகள்:

‘எனது துயரங்களில் இருந்து நிரந்தரமாக விடுபடப் போகிறேன்…’

இன்று ஓவியக் கலையில் சாதிக்க விரும்புவோர், வான்கோவையே முன்மாதிரியாகக் கொண்டு ஓவியம் வரைய வருகிறார்கள்‌. கலையை நேசிக்கும் ஒவ்வொருவருக்கும் வான்கோ, ஒரு தவிர்க்க முடியாத பிம்பமாகி இருக்கிறார்.

ஆனால், வாழ்ந்த காலத்தில் அவருக்கு, தன் எண்ணங்களுடன் போராடவே நேரம் சரியாக இருந்திருக்கிறது. 

வான்கோவின் வாழ்க்கை வரலாற்றை ஒட்டி, இர்விங் ஸ்டோன் எழுதிய ‘Lust For Life’ எனும் புத்தகம் முக்கியமானது. தமிழில், சுரா – வின் மொழிபெயர்ப்பில் வ.உ.சி நூலகம் வெளியிட்டிருக்கிறது.

வாழ்நாள் முழுக்க வண்ணங்களுடன் நேரத்தை செலவிட்ட ஓர் கலைஞனின் வாழ்க்கையில், இருள் எப்படிச் சூழ்ந்தது என்பதனை இப்புத்தகத்திலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

இன்றும், ‘The Starry Night’ ஓவியத்தை முன்வைத்து பல கோட்பாடுகள் வெளியிடப்படுகின்றன. ‘Sunflowers, The Potato Eaters, Wheatfield With Crows’ போன்ற அவருடைய மற்ற ஓவியங்களும் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்படுகின்றன.

எல்லா ஓவியங்களிலும், அந்த மஞ்சள் நிற வண்ணத்தின் பின்னே ஒளிந்து கொண்டு, நம்மைப் பார்த்து அவர் கண் அசைப்பது போலவே உள்ளது.

******

drsarathkumar1991@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button