இணைய இதழ்இணைய இதழ் 92கட்டுரைகள்

கவிதையில் ஒளிரும் பூனைக் கண்கள் – புதியமாதவி

கட்டுரை | வாசகசாலை

விஞனிடம் இருக்கும் சமூக மனிதன், தனிமனிதன், இந்த இரண்டுக்கும் நடுவில் பிளவுற்றும் பிளவுபடாமலும் அவன் படைப்புலகம் வியாபித்திருக்கிறது. இரண்டையும் சரியாக தன் படைப்புகளில் கொண்டுவரும் கவிஞன் ஒற்றை பரிமாண சிக்கலிலிருந்து விடுபடுகிறான். அவன் ஆளுமையை புற உலகு தீர்மானிப்பதில்லை. 

அண்மையில் வாசித்த சீனு ராமசாமியின் கவிதைகள் இந்த இரண்டுக்கும் நடுவில் தன்னைப் பிரதி எடுத்து எழுதப்பட்டிருக்கின்றன.

காதலும் பெண்ணொடு கொண்ட நேசமும் அந்த முதல் தொடுதலும் அந்த நினைவுகளும் இன்றுவரை கவிதை உலகம் எழுதி தீர்க்காதப் பக்கங்களாகவே இருக்கின்றன. 

“நினைவு பூ “ என்ற கவிதையின் தலைப்பே கவிதையின் சாரத்தைப் பேசி விடுகிறது. 

பவளமல்லி 
தோட்டத்து வீட்டில் 
அவளின் சாகச முத்தம்
அருளப்பட்ட இரவில்…
என்றுதான் வழக்கம்போல நினைவு பூ விரிகிறது.
‘பருவத்து வயதில்
நம்பி தந்த
தேகத்தினைத் தொட்ட து போல’

கவிதை ஒரு நினைவுகளின் கதையை வாசிக்கிறது. ஆனால், அதன் இறுதிவரிகள், கவிதையை கதைத் தளத்தின் வேறொரு உச்சிக்கு இழுத்துச் செல்கின்றன.

அந்த வீடு.. வெறும் நினைவு பூ மலரும் வீடல்ல.

“ஆளற்ற 
இவ்வீட்டில்
பெண் தெய்வம் உண்டு “

என்று முடிகிறது. கவிதைக்கும் அந்த வீட்டுக்கும் ஒரு மாயத்தோற்றம்.. அதிலிருந்து அப்பெண் தெய்வத்தின் வாசனை.

இத்தனை மாயங்களையும் அந்தக் கடைசிவரிகள் கொண்டுவந்து விடுகின்றன.

ஒவ்வொரு கவிதையும் வாசகனுக்கு அவன் வாசிப்பில் ஏற்கனவே அறிந்த படைப்புலகத்தை தாண்டி பயணிக்க வேண்டும். இன்றைய கவிஞனுக்கு

இந்தப் பயணம் ஓர்மையுடனும் உணர்வுத்தளத்திலும் கலந்தாக வேண்டும்.

புதுக்கவிதை எழுதிய மகாகவி பாரதி தன் பாடலில்,

காணி நிலம் வேண்டும் – பராசக்தி
காணி நிலம் வேண்டும், – அங்கு
தூணில் அழகியதாய் – நன்மாடங்கள்
துய்ய நிறத்தினதாய் – அந்தக்
காணி நிலத்தினிடையே – ஓர்மாளிகை
கட்டித் தரவேண்டும் – அங்கு
கேணியருகினிலே – தென்னைமரம்
கீற்று மிளநீரும்.
பாட்டுக் கலந்திடவே – அங்கேயொரு
பத்தினிப் பெண்வேணும் – எங்கள்
கூட்டுக் களியினிலே – கவிதைகள்
கொண்டுதர வேணும்

என்று பராசக்தியிடம் வேண்டுகிறான். 

பாரதிக்கு பின் வந்த வானம்பாடிகள் கவிதை இயக்கத்தின் கவிஞர் மீரா

தன் கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள் கவிதைகளில் 

என் மூதாதை ஒருவன்
பராசக்தியிடன் வரம் கேட்டான்.
காணி நிலம்
மாடமாளிகை
தென்னந்தோப்பு
அதுஇது என்று வேண்டி
இறுதியில்
ஒரு பத்தினிப்பெண்ணை கேட்டான்.
நான் கேட்டால்
உன்னை மட்டும்தான் கேட்பேன்.
உன்னைப் பெற்றால்
உலகத்தில் உள்ள
எல்லாம் பெற்ற மாதிரிதானே.

கவிஞர் சீனு ராமசாமி “பராசக்தி” என்ற கவிதையை

கனவு ஒன்று
அவனைப்போல காண்பவன்
என்பதாலோ
என்
வாழ்வுக்குள் வாழ வந்தவன்
மகாகவி.

அதே பாரசக்தியிடமும் தன் வாழ்வுக்குள் வந்திருக்கும் பாரதியிடமும்

கவிஞர் “புகார்” சொல்கிறார்.

“காணி நிலம் வாங்க 
கோடி நிலம் பார்த்திருப்பேன் சாமி “

புகார் கொடுத்துவிட்டு இறுதியாக ஒரு வேண்டுகோள் வைக்கிறான். அந்த வேண்டுகோள் பாரதி, மீரா இருவரின் காணி நிலம் தாண்டி வேறொரு தளத்தில் கவிதையை இழுத்துச் செல்கிறது.

“ஒரு வீடு 
எனக்கு வேண்டும்
பராசக்தி
நான் வாழ,
பொறுத்திருந்து
தூக்கிச் செல்ல”

இன்றைய சமகால சமூக அரசியல் கவிஞனுக்கு கொடுத்திருக்கும் வீடு குறித்த பார்வை இது. கொரொனா காலத்தில் பல்லாயிரம் மைல்கள் நடந்தே பயணித்தவர் தங்கள் பயணத்தின் போது சொன்னதும் இதுதான்.

‘சொந்த வூரில் சொந்த வீட்டில் சாக வேண்டும்’

இதுவரை பராசக்தி இப்படி ஒரு வேண்டுதலை கேட்டிருக்க மாட்டாள்!

ராமேஸ்வரம் பலருக்கு பல நினைவுகளைக் கொடுக்கும். கவிஞர் அறிவுமதிக்கு ஈழத்திலிருந்து ராமேஸ்வரம் வந்திறங்கும் அகதிகளை நினைவூட்டியது. சீனு ராமசாமிக்கும் அதே நினைவுகள்தான்.

இராமேசுவரத்தில்
எல்லோரும்
குளித்துக்
கரையேறுகிறார்கள்
நாங்கள்குதித்துக்
கரையேறுகிறோம்

அங்கே
அவனா
என்றுகேட்டு
அடித்தார்கள்
வலிக்கவில்லை.

இங்கே
திருடனா
என்றுகேட்டு
அடிக்கிறார்கள்
வலிக்கிறது.

முகாமிற்கு
அருகில்உள்ள
பள்ளியிலிருந்து
கேட்கிறது

யாதும்ஊரே
யாவரும் கேளிர்.

அறிவுமதியின் கவிதையின் அடுத்தக்கட்ட நகர்வாக அவர்களை “உருவமற்ற மக்கள்” என்று அடையாளப்படுத்துகிறது இவர் கவிதை.

இராமேஸ்வரம் கடலைப் பார்த்து
சதா குரைத்துக் கொண்டிருக்கிறது
ஒரு எல்லையோர ரோந்து நாய்.
ஒருவேளை அதன்
ஒளிரும் கண்களுக்குத்
தெரிந்திருக்க கூடும்
வசிப்பிடமின்றிக் கடலில்
அலைந்து கொண்டிருக்கும்
உருவமற்ற
எம் மக்களை

இக்கவிதையில் இடம்பெறும் ‘எல்லையோர ரோந்து நாய்’, ‘வசிப்பிடமின்றி’, ‘உருவமற்ற எம் மக்கள்’ கவிதையின் தலைப்பாக ஒளிரும் உருவங்கள்.. கவிதையை பல்வேறு அர்த்தப்பாடுகளுடன் வாசிக்க வைக்கும் அர்த்தங்களை இச்சொற்கள் தருகின்றன. 

கானல் நீரைப் பற்றி எழுதாதக் கவிஞர்கள் இல்லை. சங்ககாலம் தொட்டு

படைப்புலகில் கானல் நீர் கவிஞர்களின் தாகம் தணிக்கிறது. சீனு ராமசாமியின் வேட்கை கவிதை கானல் நீரின் புதிய படிமம்.

“பூமியின் பிரசவக்கோடுகள்
உச்சி வெயிலில் தெரியும்
கானல் நீர்”

பிச்சை எடுக்க இதுவரை சொல்லப்படும் காரணங்களையும் தாண்டிய

இன்னொரு காரணமும் இருக்கலாம் என்பதை “காசு கேட்கிறாள்” என்ற கவிதையில் காட்சிப்படுத்தி இருக்கிறார். “பிழைக்க மட்டுமல்ல பிச்சை” என்ற கவிதை ஓர் ஒரங்க நாடக காட்சியாக விரிகிறது.

சீனு ராமசாமியின் “புகார் பெட்டியின் மீது படுத்துறங்கும் பூனை” யிடம்

சொல்வதற்கு ஒரே ஒரு புகார் உண்டு. கவிதைப் புத்தகத்தை 300 பக்கங்களுக்கும் அதிகமாக அச்சில் கொண்டுவருவதெல்லாம் பூனைகளின் அதீத மீயாவ் மீயாவ் துணிச்சல்!

நூல்: புகார் பெட்டியின் மீது படுத்துறங்கும் பூனை
வகைமை: கவிதை
ஆசிரியர்: இயக்குநர் சீனு ராமசாமி 
பக்கம்: 303
விலை ரூ 330.
வெளியீடு : டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ், சென்னை.

*******

mallikasankaran@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button