”பகை தீர்க்கும் போர் அல்ல” – இந்தியா – பாகிஸ்தான் உலக கோப்பை போட்டிகள்- ஓர் அலசல்
இரா. சேவியர் ராஜதுரை

கிரிக்கெட்டில் ஒரு சில போட்டிகளுக்கு எப்போதுமே எதிர்பார்ப்புகள் அதிகம். ஆஷஸ் தொடர் என அழைக்கப்படும் இங்கிலாந்து ஆஸ்திரேலியா தொடர் கிரிக்கெட்டின் ஆக்ரோஷமான தொடராகயிருக்கும். அந்த போட்டிகளில் வெற்றி பெற எல்லாவிதமான தாக்குதல்களும் தொடுக்கப்படும். அதற்கு இணையான, இல்லை அதை விட அதிகமான எதிர்பார்ப்பு நிறைந்த ஒரு போட்டி என்றால் இந்தியா பாகிஸ்தான் போட்டிகள் தான்.
இந்த உலகக்கோப்பையில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தப்போகும் போட்டி இன்று நடைப்பெறவிருக்கும் இந்தியா பாகிஸ்தான் போட்டி என்றால் அது மிகையில்லை.
இந்தப் போட்டிக்கான டிக்கெட் வெறும் 48 மணி நேரத்திற்குள்ளாகவே விற்றுத் தீர்ந்து விட்டது. ஒரு டிக்கெட் லட்சக்கணக்கில் ‘வியாகோகோ’ (viagogo) இணையதளத்தில் விற்கப்பட்டுள்ளது.
பொதுவாக ஒருநாள் போட்டிகளைப் பொறுத்த வரையில் இ்ந்தியாவை பாகிஸ்தான் அதிக முறை வீழ்த்தியுள்ளது. ஆனால் உலகக்கோப்பை போட்டிகளை மட்டும் எடுத்துக் கொண்டு பார்த்தால் அசாரூதினைப் போல காலரை தூக்கிவிட்டுக் கொண்டு, “ஒத்த மேட்சு கூட தோத்ததில்ல”னு கெத்தா சொல்லலாம்.
அந்த ஆறு போட்டிகளைப் பற்றிப் பார்க்கலாம்.
1992 ஆஸ்திரலியாவின் சிட்னியில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. சச்சினின் அரைசதம் மற்றும் அஜய் ஜடேஜாவின் 46 ரன்கள் மூலம் இந்திய அணி 49 ஓவர்களுக்கு 216 ரன்களை எடுத்தது. பாகிஸ்தான் பந்துவீச அதிக நேரம் எடுத்துக் கொண்டதால் ஆட்டம் 49 ஓவர்களுக்கு குறைக்கப்பட்டது. பாகிஸ்தான் அணி 173 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. ஆட்டநாயகன் விருதை சச்சின் பெற்றார்.
போட்டியின் 25 வது ஓவரில் ஜாவேத் மியான்தத் கிரீசில் நின்று கொண்டிருந்தார். ஒவ்வொரு பந்திற்கும் இந்திய விக்கெட்கீப்பர் கிரண் மூரே அம்பயரிடம் அப்பீல் செய்துக் கொண்டிருந்தார். கோபமடைந்த ஜாவேத் மியான்தத் பின்னால் திரும்பி கிரண் மூரேவிடம் பேசினார். அடுத்த பந்தை அடித்து விட்டு கிரண்மூரே அப்பீல் செய்வதை குரங்கைப் போல குதித்து குதித்து ஜாவேத் மியாதத் கிண்டல் செய்தது மிகப்பிரபலமான சம்பவங்களில் ஒன்று. அந்தப் போட்டியில் பாகிஸ்தான் தோற்றாலும் அந்த வருட உலகக்கோப்பையை தற்போதைய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான அணியே வென்றது.
1996 உலகக்கோப்பை காலிறுதி ஆட்டத்தில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் பெங்களூருவில் மோதின. முதலில் பேட் செய்த இந்திய அணி சித்துவின் (93 ரன்கள் 115 பந்துகளில்) பொறுப்பான ஆட்டத்தால் 287 ரன்கள் சேர்த்தது. இறுதி நான்கு ஓவர்களில் மட்டும் 57 ரன்களை இந்திய அணி சேர்த்தது. இப்போது நாம் பார்க்கும் டி20 போட்டியைப் போல அஜய் ஜடேஜா அடித்து ஆடினார். வாக்கார் யூனிஸின் இறுதி ஓவரில் மட்டும் 22 ரன்கள் அடித்து “இன்னைக்கு யாரு வேணா மேட்ச பினிஷ் பண்ணலாம்! ஆனா விதை நான் போட்டது” என முடித்து வைத்தார்.
பின் களமிறங்கிய அன்றைய நடப்பு சேம்பியன் பாகிஸ்தான் அணியும் ஆக்ரோஷமாக ஆடியது. சயீத் அன்வர் மற்றும் அமீர்சோகைலின் அசத்தலான ஆட்டத்தால் முதல் பத்து ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 84 ரன்கள் அடித்தது.சயீத் அன்வர் 48 ரன்களில் ஆட்டமிழந்தாலும் கேப்டன் அமீர் சோகைல் அரைசதம் கடந்து அசத்திக்கொண்டிருந்தார். போட்டியில் உச்சக்கட்ட பரபரப்பு நிலவியது. ஆட்டத்தின் 15வது ஓவர் வெங்கடேஷ் பிரசாத் வீசினார். எக்ஸ்ட்ரா கவரில் ஒரு பவுண்டரி அடித்துவிட்டு வெங்கடேஷ் பிரசாத்திடம், “போய் பந்தை எடுத்துட்டு வா, என பந்து போன திசையைக் காட்டி திமிராக சொல்ல மைதானமே ஆக்ரோஷப்பட்டது. வெங்கடேஷ் பிரசாத் அதற்கான பதிலை அடுத்த பந்தில் தந்தார். அமீர் சோகைலுக்கு வீசிய அடுத்த பந்தில் ஆப் ஸ்டெம்பு பறந்து விழுந்தது.
“யார் எடத்துல வந்து யார் சீன போடறது” என அமீர் சோகைலின் விக்கெட்டை காலி செய்துவிட்டார் வெங்கடேஷ்பிரசாத். மைதானமே ஆர்ப்பரித்து துள்ளியது. வெங்கடேஷ் பிரசாத் பெங்களூர்தான். அவருடைய ஏரியாவிற்கே வந்து “பந்தை எடுத்துட்டு வா”ன்னு சொன்னால் எப்படியிருக்கும். அது பெங்களூர். வெங்கடேஷ் பிரசாத் கோட்டை. அதைத் தான் தன்னுடைய அடுத்த பந்தில் காட்டினார்.
அந்த ஸ்டெம்ப் பறந்து விழுந்ததைப் பார்த்த அத்தனை பேரும் ஒரு நிமிடம் உணர்ச்சிப் பெருக்கில் கத்தாமல் பார்த்திருக்க முடியாது. அமீர் சோகைல் அவுட்டான பிறகு ஆட்டம் இந்தியாவின் கைக்கு வந்தது. இந்திய அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்டநாயகன் விருதை 93 ரன்கள் அடித்த சித்து பெற்றார்.
அந்தப் போட்டியைப் பற்றி நினைக்கும் பொழுதெல்லாம் ஆட்டநாயகன் விருது வென்ற சித்து நினைவுக்கு வருவாரோ இல்லையோ வெங்கடேஷ் பிரசாத்தும், துள்ளி விழுந்த அந்த ஆப் ஸ்டெம்பும் அதற்கு ஸ்டேடியத்தில் இருந்து வந்த அந்த சத்தமுமே நியாபகத்திற்கு வரும்♥. இப்பொழுது அந்த வீடியோவை பார்த்தாலும் அந்த கூஸ்பம்ப்ஸ் குறையாது.
1999 உலகக்கோப்பை: இங்கிலாந்திலுள்ள ‘ஓல்ட் ட்ராபார்ட்’ அரங்கில் நடந்தது. இந்தப் போட்டி கார்கில் போர் நடந்துகொண்டிருந்த பரபரப்பான சமயத்தில் நடந்தது. ஒட்டுமொத்த தேசமும் இந்தப் போட்டியை ஒரு யுத்தமாகவே பார்த்தது.
டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. சவுரவ் கங்குலிக்கு ஏற்பட்ட காயம் காரணமாக கங்குலி ஆடவில்லை. அவருக்கு பதிலாக சடகோபன் ரமேஷ் களமிறங்கினார். அந்த சீசனில் கங்குலி மொத்தம் 359 ரன்கள் 7 போட்டிகளில் குவித்திருந்தார். கங்குலி இல்லாமல் களமிறங்கியது மிகப்பெரும் இழப்பாகவே இருந்தது. இந்த போட்டியில் சச்சின் உலகக்கோப்பையில் ஆயிரம் ரன்களைக் கடந்தார். இந்திய அணி 50 ஓவர் முடிவில் 227 ரன்கள் எடுத்தது.
227 தான் சேசிங் அவ்வளவு கஷ்டமாக இருக்காது என நினைத்த பாகிஸ்தானுக்கு “என்னைத் தாண்டி அட்றா பாப்போம்” என பவுலிங் செய்ய வந்தார் வெங்கடேஷ் பிரசாத். பாகிஸ்தான் அணி வெங்கடேஷ் பிரசாத்தின் பந்து வீச்சு தாக்குதலில் இந்தியாவிடம் சரணடைந்தது. ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்தி 23 ரன்களே விட்டுக்கொடுத்த வெங்கடேஷ் பிரசாத் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த சீசனில் சூப்பர் சிக்ஸ் சுற்றோடு வெளியேறினாலும் ராகுல் டிராவிட் தான் அதிக ரன் விளாசிய பட்டியலில் முதலிடத்தில் தொடர்ந்தார். 8 போட்டிகளில் ஆடிய ராகுல் டிராவிட் 461 ரன்கள் குவித்திருந்தார். அந்த சீசனின் ஹீரோவாக டிராவிட் திகழ்ந்தார்.
2003 உலகக்கோப்பை: 80 மற்றும் 90 கிட்ஸ்களால் மறக்க முடியாத உலகக்கோப்பை இது. சச்சின் அசுரத்தனமான பார்மில் இருந்தார். இந்த உலகக்கோப்பை இந்தியாவிற்குதான் என்ற அளவில் அணி பலமாக இருந்தது.
செஞ்சூரியனில் நடந்த இந்தியா பாகிஸ்தான் போட்டியில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி அன்வரின் அட்டகாசமான சதத்தால் 273 ரன்கள் சேர்த்தது. களமிறங்கியவுடனே ஆட்டத்தைத் தன் கைக்குள் கொண்டு வந்துவிட்டார் சச்சின். பவுண்டரியின் மூலம் ரன் கணக்கை துவக்கிய சச்சின் இரண்டாவது ஓவரில் ராயல் பிண்டி எக்ஸ்பிரஸ் என அழைக்கப்படும் அக்தர் வீசிய பந்துகளை தொடர்ச்சியாக ஒரு சிக்ஸர் மற்றும் இரண்டு பவுண்டரிகளை பறக்கவிட்டார். ஷார்ட் மற்றும் வைடாக வீசப்பட்ட பந்தை சச்சின் ‘தேர்ட் மேன்’ திசையில் பறக்கவிட்ட பொழுதே இந்திய அணியின் ரசிகர்கள் வெற்றி பெற்ற உற்சாகத்தில் கொண்டாடினர். 37 பந்துகளில் அரைசதம் கடந்த சச்சின் ரன் ரேட்டை 6 க்கு நெருக்கமாகவே வைத்திருந்தார். 75 பந்துகளில் 98 ரன்களுடன் அக்தர் பந்தில் அவுட்டானார். சதமடிக்கும் வாய்ப்பை நழுவ விட்டிருந்தாலும் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்ற அவர் ஆட்டநாயகன் விருதைப் பெற்றார்.
2011 உலகக்கோப்பை: 2007 ல் லீக் சுற்றோடு வங்காளதேசத்தோடு தோற்று வெளியேறி துவண்டு போயிருந்த இந்திய அணிக்கு கேப்டனாக தோனி வந்த பின்பு 2007 டி20 கோப்பை வென்றது பெரும் உற்சாகத்தைத் தந்தது. தோனி தலைமையிலான அணியின் மீது மிகப்பெரும் நம்பிக்கை ரசிகர்களுக்கு இருந்தது. காலிறுதியில் ஆஸ்திரேலியாவை வென்றுவிட்டு, அரையிறுதியில் பாகிஸ்தானுடன் மோதத் தயாராக இருந்தது இந்தியா. பாகிஸ்தான் அணியின் கேப்டன் அப்ரிடி பந்துவீச்சில் மிரட்டிக்கொண்டிருந்தார். 7 போட்டிகளில் 21 விக்கெட் எடுத்திருந்தார்.
டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவர்களுக்கு 250 ரன் எடுத்தது. அதிகபட்சமாக சச்சின் 85 ரன்கள் குவித்தார். பாகிஸ்தான் தரப்பில் வாகாப் ரியாஸ் 5 விக்கெட் வீழ்த்தினார். அச்சுறுத்தலாக கருதப்பட்ட அப்ரிடி ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை . பின் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 231 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இறுதிவரை போராடிய மிஸ்பா உல் ஹக் அதிகபட்சமாக 56 ரன்கள் எடுத்தார்.
ஆட்டநாயகன் விருதை சச்சின் பெற்றார். இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தி 2003க்கு பிறகு மீண்டும் பைனலுக்குள் நுழைந்தது. உண்மையில் இந்தியா மூன்று பைனல் விளையாடியது என்றே கூறலாம். காலிறுதியில் ஆஸ்திரேலியா, அரையிறுதியில் பாகிஸ்தான், இறுதிப்போட்டியில் இலங்கை என சிறந்த அணிகளை வீழ்த்தி கோப்பையை வென்றது.
2015 உலகக்கோப்பை: இந்த முறை சச்சின் இல்லை. அதுவரை நடந்த பாகிஸ்தான் உடனான ஐந்து உலகக்கோப்பை போட்டிகளிலும் சச்சின் இருந்தார். மூன்று போட்டிகளில் அவர்தான் ஆட்டநாயகன் விருதுகள் வென்றவர். அவர் இல்லாமல் 5 உலகக்கோப்பைகள் கழித்து இந்திய அணி களமிறங்குகிறது.
ஆஸ்திரேலியாவின் அடிலெய்டில் நடந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.
பத்தாவது நம்பர் செய்து வந்த வேலையை பதினெட்டாம் நம்பர் செய்தது.
விராத் கோலியின் அட்டகாசமான சதம் மற்றும் தவான் மற்றும் ரெய்னாவின் பொறுப்பான ஆட்டம் மூலம் இந்தியா 300 ரன்கள் சேர்த்தது. பின் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 224 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. “மாப்ள எவன் அடிக்கலனாலும் இவன் மட்டும் எல்லா மேட்சும் அடிக்கிறான்டா” என சொல்வது போலவே மிஸ்பா உல் ஹக் 76 ரன்கள் அடித்தார். ஆட்டநாயகன் விருதை கோலி வாங்கினார். இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது.
இதற்குப் பிறகு நடந்த சேம்பியன்ஸ் ட்ராபி இறுதிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தான் சேம்பியன்ஸ் ட்ராபியை வென்றது.
அதற்குப் பழிதீர்க்கும் விதமாக இன்று (16-06-2019) நடைப்பெறும் 2019 ம் ஆண்டுக்கான உலகக்கோப்பைக்கான போட்டியில் இந்தியாவும், ஆறுமுறை உலகக்கோப்பையில் தோற்றதற்கு பழி தீர்த்துக்கொள்ள பாகிஸ்தானும் தயாராக உள்ளது.
இந்திய அணியைப் பொறுத்தவரை வலுவாக உள்ளது. கடந்த போட்டியில் சதமடித்த ஷிகர்தவான் காயம் காரணமாக ஆடாதது பின்னடைவு. இதை கோலியும் கூறிவிட்டார். தவான் இல்லாத பட்சத்தில் துவக்க வீரராக கே.எல்.ராகுல் களமிறங்குவார். ரோகித் பற்றி கவலையில்லை. செம பார்மில் உள்ளார். இவ்வளவு நாட்களாக இருந்த நம்பர் 4 பேட்ஸ்மேன் விவகாரம் மீண்டும் தலையெடுக்கிறது. பயிற்சி ஆட்டத்தில் சதமடித்த கே.எல்.ராகுல் தற்போது துவக்க வீரராக களமிறங்கப் போவதால், யார் அணியில் இடம்பெறுவார் என்பது கேள்விக்குறியாக உள்ளது. “அனுபவம் வாய்ந்த தினேஷ் கார்த்திக்கா?” இல்லை “ஆல்ரவுண்டர் விஜய் ஷங்கரா?” என அணியே குழப்பத்தில் இருக்கும்.
ஹர்திக் பாண்ட்யா, தோனியும் நம்பிக்கைத் தருகின்றனர். ஹர்திக் பாண்ட்யா தான் அணியின் வெற்றிக்காரணியாக இருப்பார் என பலரும் எதிர்பார்க்கின்றனர். உலகின் நம்பர் ஒன் பவுலரான பும்ரா அதகளப்படுத்துகிறார். அவருக்குத் துணையாக புவனேஷ்குமாரும் அட்டகாசமாக பந்து வீசுகிறார். சுழலில் சாஹல், குல்தீப் கூட்டணியும் விக்கெட் எடுக்கும் பட்சத்தில் வெற்றி உறுதி. இக்கட்டான நேரங்களில் ஜாதவும் விக்கெட் எடுத்து தருவார். ஒட்டு மொத்தமாக பார்க்கையில் இந்திய அணி பலமாகவே உள்ளது.
பாகிஸ்தான் அணியைப் பொறுத்தவரை அணியின் துவக்க வீரரான இமாம் உல்ஹக் அறிமுகமான போட்டியிலேயே சதமடித்து ஆச்சரியப்படுத்தினார். இந்த உலகக்கோப்பையிலும் சிறப்பான ஆட்டத்தையே வெளிப்படுத்துகிறார். பாபர் அசாம், ஹபீஸ், பக்கர் ஜமான், சோயப் மாலிக் என வலுவான பேட்டிங் ஆர்டரையே கொண்டுள்ளது. ஆஸ்திரலியாவுக்கு எதிரான போட்டியில் ஹசன் அலியும் வாகாப் ரியாஸும் திடீரென அடித்து ஆச்சர்யபடுத்தினர். பவுலிங்கில் அமீர் அசால்ட் செய்கிறார். அமீரின் பந்துவீச்சில் முந்தையை போட்டிகளில் இந்திய அணி வீரர்கள் சற்று தடுமாறினர். வாகாப் ரியாஸும் சிறப்பாக பந்து வீசுகிறார். ஹசன் அலி, அப்ரிடி, ஹபீசும் சிறப்பாக பந்துவீசும் பட்சத்தில் இந்தப் போட்டி இந்திய அணிக்கு பெரும் சவாலாக இருக்கும். பாகிஸ்தான் அணியை நம்ப முடியாது. 105 ரன்களுக்கு வெஸ்ட்இன்டீசிடம் ஆல் அவுட்டாகி படுதோல்வியடையும். பலம் வாய்ந்த இங்கிலாந்து அணியுடனும் 348 அடித்தும் வெற்றிபெறும் . எனவே இந்தப் போட்டியில் வெற்றி என்பது கணிக்க முடியாதது.
2015 ல் வெளிவந்த ‘மோக்கா மோக்கா’ (Mauka Mauka) விளம்பரத்தை மறக்க முடியாது. அந்த விளம்பரம் செம ஹிட் ஆனது. கிரிக்கெட் பார்க்காதவர்களையும் அந்த விளம்பரம் கவர்ந்தது.
2015 ல் நடந்த இந்தியா பாகிஸ்தான் போட்டியே அதிகம் பேர் பார்த்த கிரிக்கெட் போட்டியாகும் . இந்த முறை அதை விட அதிகமான பார்வையாளர்களை பார்க்க வைக்க எதிர்பார்ப்பை எகிற வைக்க ஞாயிற்றுக்கிழமையில் போட்டி வைக்கப்பட்டுள்ளது. அபி நந்தனை வைத்து பாகிஸ்தான் சேனல் ஒன்று செய்த விளம்பரம் பெரிய சர்ச்சைகளுக்குள்ளாகியுள்ளது.
முன்னாள் கிரிக்கெட் வீரர் கம்பீரும் ( தற்போதைய பா.ஜ.க எம்.பி) இந்திய அணி பாகிஸ்தானோடு விளையாடக்கூடாது. ஒருவேளை பைனல்ஸ் பாகிஸ்தானோடு வந்தாலும் நாம் விளையாடக்கூடாது என சர்சைக்குரிய முறையில் கூறியுள்ளார். இந்தியா பாகிஸ்தான் போட்டிகளின் இவ்வளவு எதிர்பார்ப்புகளுக்கு இந்தப் போட்டியை ஒரு யுத்தமாக காணும் மனப்போக்கும் ஒரு காரணம் என்பதில் சந்தேகமில்லை. இந்திய அணி பாகிஸ்தானோடு விளையாடுவதில்லை பாகிஸ்தான் வீரர்களையும் ஐபிஎல் போட்டிகளில் ஆட அனுமதிப்பதில்லை. இதற்கெல்லாம் பாதுகாப்பு பிரச்சனை என எவ்வளவு சப்பைக் காரணம் சொன்னாலும் எதிரி நாடு அவன் கூட விளையாடக் கூடாது என்கிற மனநிலையே காரணமாகும். கிரிக்கெட் ஒரு ‘ஜென்டில்மேன் கேம்’ என்று கூறுவார்கள். ஜென்டில்மேன்களாக மைதானத்துக்குள் ஆடுவோம். கொடியில் இருக்கும் நீலநிறமும் பச்சைநிறமும் போல இந்தியா பாகிஸ்தான் ஆடட்டும். அது வெண்மை என்கிற சமாதானத்தையே உண்டு பண்ணும்.
1999 ஆம் ஆண்டு கார்கில் சமயத்தில் இந்தியா பாகிஸ்தான் உலகக்கோப்பை போட்டி நடந்த அதே மைதானத்தில் தான் இந்த போட்டியும் நடைபெறுகிறது. அப்பொழுது கார்கில் போரைப் போல இந்த முறை புல்வாமா தாக்குதல்.
இந்த அரசியல், போர், பழி இவை எல்லாவற்றையும் ஒதுக்கி வைப்போம். மூன்று நாட்களுக்கு முன்பு லாகூரில் பாகிஸ்தான் டீசர்ட்டில் கோஹ்லியின் பெயரும் 18 ஆம் எண் பொறித்த டீசர்ட் அணிந்து சென்ற இளைஞனின் போட்டோ வைரலானது. கோஹ்லியை பாகிஸ்தானைச் சேர்ந்தவன் எப்படி ரசிக்கலாம் என்ற மனநிலையில் தான் சிக்கல். உண்மையான கிரிக்கெட் எல்லா திறமையான ப்ளேயர்களையும் ரசிக்க வைக்கும். நாடு என்னும் சிறு வட்டத்திற்குள் அடங்காது.
அமீர் மிகச் சிறந்த பவுலர். பாபர் அசாம் சிறந்த பேட்ஸ்மேன். அவர்கள் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்கிற ஒரே காரணத்திற்காக மட்டும் வெறுப்பது முட்டாள்தனம். இது ஒரு விளையாட்டு. விளையாட்டாக மட்டுமே பார்ப்போம்.