
உறங்கும் வெடிகுண்டும் ஓராயிரம் காகிதக் கொக்குகளும்.
“பேசாப் பொருளைப் பேச நான் துணிந்தேன்.. கேட்கா வரத்தைக் கேட்க நான் துணிந்தேன்” இப்படித்தான் துவங்கியிருக்கும் தயாரிப்பாளர் பா.ரஞ்சித்திடம், இயக்குனர் அதியன் ஆதிரையின் பேச்சு . காலங்காலமாக திரைப்படம் எடுப்பவர்களையும் பார்ப்பவர்களையும் தொடர்ந்து துரத்திக் கொண்டே வரும் “எது நல்ல சினிமா ” என்கிற கேள்விக்கு வரையறுக்கப்பட்ட பதில் கிடையாது. நல்ல சினிமா என்பது பல அடையாளங்களைக் கொண்டது. வணிகக் காரணங்களை ஒதுக்கி விட்டுப் பார்த்தால், பேசாப் பொருளை பேசுவது, சமகால அரசியலைப் பேசுவது, ஏதாவது ஒரு விஷயத்தைப் பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு சொல்வது, வரலாற்றையும் நிகழ்வுகளையும் சொல்லி, அதன் வழியே நாம் படிக்கும் செய்திகளை தொடர்புப்படுத்தி பார்க்கச் செய்வது, சாமானிய மக்களின் உரிமையை பேசுவது, திரையில் அதிகம் சொல்லப் படாதவர்கள் வாழ்வைத் சொல்வது, அதில் அவர்களின் வாழ்வை, வாழும் மண்ணை ரத்தமும் சதையுமாகப் பதிவது என பல்வேறு விஷயங்களையும், அதிலும் முக்கியமாக இதையெல்லாம் பிரச்சாரமாக இல்லாமல், சுவாரசியமாக சொல்வது நல்ல சினிமாவின் சில குணங்கள் . இவையெல்லாமும், முதல் படத்திலேயே செய்து காட்டிய இயக்குனர் அதியன் ஆதிரைக்கும், நடிகர்கள், தொழில் நுட்பக் கலைஞர்களுக்கும் இந்த களத்தைத் தைரியமாக தேர்வு செய்த தயாரிப்பாளர் பா.ரஞ்சித் அவர்களுக்கும் பாராட்டுகளும், வாழ்த்துக்களும்.
கதை
இரண்டாம் உலகப் போரின் இறுதியில் பயன்படுத்தப்படாத குண்டுகள், இந்தியாவில் முதலில் மும்பைக்கும் அங்கிருந்து பின்னர் வங்காள விரிகுடாவிற்கும் வருகிறது. அவற்றில் ஒரு குண்டு மாமல்லபுரத்தில் கரை ஒதுங்கி, அது பல புதுக் கனவுகளுடன், பழைய இரும்புக்கடையில் லாரி ஓட்டுநராக வேலை செய்யும் செல்வத்தின் வாழ்வில் எப்படிப் பயணிக்கிறது என்பதும், ஆயுத வியாபாரிகள், அரசாங்கம், காவல்துறை, ஆயுதத்தடை கோரும் இந்திய மாணவர் சங்க உறுப்பினர் தான்யா , மாயவன் என பெயரிட்ட லாரி , வேவு பார்க்கக் கூடவே வரும் கிளீனர் சுப்பையா [பஞ்சரு], செல்வத்தின் காதலி சித்து [சித்ரா], அவள் காதல் பிடிக்காத அவளின் அண்ணன் என பலரும் துரத்த, அந்த குண்டும், செல்வமும் என்ன ஆனார்கள் என்பதே கதை.
பார்வை
மூட நம்பிக்கையில் ஊறிப்போய், பழைய படத்தின் தலைப்பையே வைத்துக் கொள்வதும், கற்பனை வறட்சியில் மட்டமான தலைப்பு வைக்கும் சம காலத்தில், ஒரு தலைப்பே கதை சொல்லும் அழகான தலைப்பை வைத்த அதியன் ஆதிரையைப் பற்றிப் பார்ப்போம். விழுப்புரம் அருகே கல்லுடைக்கும் குடும்பத்தில் பிறந்து, தாவரவியல் இளநிலையிலும், தமிழ் இலக்கியம் முதுநிலையிலும் படித்து 2008 இல் உதவி இயக்குனராக வேலை பார்த்து, இரண்டு கவிதைத் தொகுப்புகள் வெளியிட்டு, சினிமா ஒத்துப்போகாமல் சிறிது காலம் அனிமேஷன் துறையில் இருந்து பின்னர் ஒரு பழைய இரும்பு கடையில் வேலை பார்த்து, இறுதியில் பா.ரஞ்சித்தின் பட்டறைக்கு வந்து சேர்கிறார் அதியன். படத்தின் துவக்கத்திலேயே கதையின் சர்வதேச தீவிரத் தன்மையையும், அது தாங்கிய அபாயத்தையும் சொல்லி விட்டு படத்தின் மற்ற பாகங்களான செல்வத்தின் பாதுகாப்பில்லாத இரும்பு கடை வாழ்வு, முதலாளித்துவம், அவன் காதல், பஞ்சராக வரும் முனீஸ்காந்தின் நகைச்சுவை , ஒரு கிராமிய வழிபாடு,அங்கு நிகழும் தெருக்கூத்து, அந்த குண்டை தேடும் மற்றவர்கள் என வெகு இயல்பாக ஒரு பூச்சரம் போல மெதுவாக தொடுக்க ஆரம்பித்து, இறுதியில் அனைத்தையும் ஒரே புள்ளியில் இணைக்கிறார், மேலும் ஒரு மிகப் பெரிய விஷயத்தோடு, மிகவும் குறிப்பிட்டு சொல்லவேண்டிய இன்னொரு விஷயம் படத்தின் இறுதியில் அனிமேஷனாக சொல்லப்பட்ட ஜப்பானிய சிறுமி சடகோ சசாகியின் கதை. பள்ளி பாடப்புத்தகத்தில் வந்த கதையின் தீவிரத்தன்மையை கச்சிதமாக சொல்லப்பட்டிருக்கிறது. “அடுத்தது என்ன” – இதுவே கதை சொல்லுதலின் ஆதாரமான எளிய கேள்வி. அதை மிக அழகாக நிகழ்த்திக் காட்டியிருக்கிறார் கதாசிரியர் இயக்குனர் அதியன் ஆதிரை. [ கூடுதலாக எழுதியவர்கள் ஆதவன் தீட்சண்யா, ஜெயக்குமார் ]
படம் முழுக்கவே, ஒரு வெடிகுண்டு பயணிக்கும் கதைகள் நம்மிடம் குறைவு [ எஸ்.பாலச்சந்தரின் பொம்மை, விக்ரம், விஸ்வருபம், வல்லினம்,ஏழாவது மனிதன் என சில சொல்லிக்கொள்ளலாம். காதலன், சேதுபதி ஐ.பி.எஸ். போன்ற இதிகாசங்களை தவிர்த்து விடுவோம்]. அதே போல் ஒரு உயிரற்ற பொருள் படம் நெடுக ஒரு சஸ்பென்ஸ் தன்மைக்காக வருவதும் குறைவே [ குரங்கு பொம்மை – பை , வானமே எல்லை – ட்ரங்கு பெட்டி, முண்டாசுப்பட்டி வேற்று கிரகக் கல்].
நடிப்பில் குறிப்பிட்டு சொல்லப்பட்ட வேண்டியவர்கள் – பிரத்யேக உடல் மொழியும், வசன உச்சரிப்பும், புலம்பலும் கொண்ட தினேஷ் [குடித்து விட்டு அரற்றுவதும், முதன்முறை குண்டு என அதை உச்சரிக்கவே தடுமாறுவதும் ], பஞ்சராக வரும் முனீஸ்காந்த் [இவரே பார்வையாளர்களின் பிரதிநிதி – நம் கேள்விகள் அத்தனையும் இவரே கேட்கிறார் – மோ, மாநகரம் படங்களுக்கு அடுத்து நல்ல வேடம்] மற்றும் தான்யாவாக வரும் ரித்விகா. ஆனந்திக்கு, இது ஏற்கனவே பல படங்களில் வந்த வேடமே. சொல்லப் போனால் கலையரசன் தவிர பா.ரஞ்சித்தின் கம்பெனி நடிகர்கள் எல்லாருமே சரியான பங்களிப்பைச் செய்திருக்கிறார்கள்.
அடுத்து குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய விஷயம் ஆச்சரியமான இசை- புதியவர் டென்மா. தலைப்பு வரும்போது வரும் அமானுஷ்ய இசை தொடங்கி இறுதியில் வரும் ஜப்பானிய அனிமேஷன் இசை வரை மிகச் சிறந்த பங்களித்திருக்கிறார் இசையமைப்பாளர் டென்மா. ஆறு வித்தியாசமான பாடல்களும் மிகச் சிறந்த வரிகளும் அதில் அடக்கம் [“நிலமெல்லாம் எங்கள் ” பாடல் ஒரு உதாரணம் – பாரங்களே நீளுமென்றால் பூகம்பம் நேர்த்திடுமே பக்கத்திலே பாம்பு வந்தால் கோழி கூட சீறிடுமே – கவிஞர் உமாதேவி ]. ஒளிப்பதிவாளர் கிஷோர் குமாரும், படத்தொகுப்பாளர் ஆர்.கே.செல்வாவும் சரியான பங்களிப்பைச் செய்திருக்கிறார்கள்.
இது குறைகளே இல்லாத படமும் அல்ல.. அலைபேசி சிக்னல் கொண்டே குண்டை தேடாமல் இருப்பது, சின்ன கதாபாத்திர குழப்பங்களும் [முதலாளியை இஸ்லாமியர் பெயர் வைத்து அழைப்பது], செல்வத்தின் தந்தையின் இறப்பில் குழப்பம் , வேகத்தடையான இருள் வானம் பாடல், சுலபமாகவே ரகசியம் பேசி மாட்டிக்கொள்ளும் காவலர், ஆனந்தியின் அதே பாத்திர படைப்பு என சொல்லி பட்டியலிடுவதில் எந்த நன்மையையும் இல்லை. காரணம், இந்த வருடத்தில் வெளிவந்த டு-லெட், சூப்பர் டீலக்ஸ், கேம் ஓவர், அசுரன், கைதி படங்களுக்கு அடுத்து ஒரு நேர்மையான படைப்பாக இந்தப் படத்தையும் சொல்லியாக வேண்டும். கோமாளி, கேப்மாரி, சங்கத்தமிழன், எனை நோக்கிப் பாயும் தோட்டா போன்ற போலியான படங்கள் பெருகிப் போன சமகாலத்தில் இப்படியானதொரு படைப்பை நாம் கொண்டாடியே தீர வேண்டும். இதற்கு அதி முக்கியமான காரணம் இது இயக்குனரின் முதல் படைப்பு என்பதற்காக மட்டுமல்ல – சமரசமில்லாமல் [தெருக்கூத்திற்கு பதிலாக ஒரு கரகாட்டம் வைத்து ஏமாற்றியிருக்கலாம்], பார்வையாளனின் ரசனையை மலினப் படுத்தாமல், காசு கொடுத்து திரையரங்கத்திற்கு வருபவர்களை ஏமாற்றாமல், நேர்மையான ஒரு படைப்பை வழங்கியதற்காகவும்தான். இன்னொன்று, உலகப் படங்கள் என்று ஒரு தனி பட்டியல் போட்டு புரியாத படைப்புகளை தலையில் வைத்தாடும் பிரிவினர், இந்தப் படைப்பை பற்றி பெரிதாக எழுதாததும் ஒரு குறையே – உலகப் பிரச்சினையைப் பேசும் இந்தப் படமும் ஒரு உலக சினிமாதானே? எந்தவித தகுதியும் இல்லாத படங்களுக்கு மத்தியில், சேற்றில் மூச்சுத் திணறும் மீன் போன்ற இம்மாதிரியான படைப்புகளை ரசிப்பதும், ஆதரிப்பதும் பாராட்டுவதும் பார்வையாளனின் கடமை.
விழுந்தது இரண்டு
உலோக உருளைகள்..
அழிந்தது சில கோடி
உலக உயிர்கள்..
இத்தனை பத்தாண்டுகளுக்குப்
பின்னர், இன்னமும்
காகிதக் கொக்குகள்
செய்யப்பட்டு வருகிறது
ஆயுதங்களுக்கு எதிராகவும்,
உயிர் மட்டும் உறைந்து,
தப்பிப்பிழைத்தப் பின்
கொக்குகள் செய்து மறைந்துபோன,
சடகோ சசாகியின் நினைவாகவும்!