நூல் விமர்சனம்
Trending

பாடும் பறவையின் மௌனம் – வாசிப்பு அனுபவம்

முரளி ஜம்புலிங்கம்

பாடும் பறவையின் மௌனம் – ஹார்ப்பர் லீ என்ற அமெரிக்கப் பெண் எழுத்தாளரால் எழுதப்பட்ட “To Kill a Mocking Bird” என்ற ஆங்கில நாவலின் தமிழ் மொழி பெயர்ப்பு இது.

பாடும் பறவைகளை மட்டும் எப்போதும் சுட்டு விடாதீர்கள். பாடும்பறவை நமக்காக பாடுவதைத் தவிர வேறு எதுவும் செய்யாது. அவை மனிதர்களுக்கு எதுவும் தீங்கு செய்யாது . ஆனால், நமக்காக இதயத்திலிருந்து ரம்மியமாகப் பாடும். அதனால் அதைக் கொல்வது பாவம். கடந்த நூற்றாண்டின் முற்பகுதி வரை அமெரிக்காவில் இருந்த கறுப்பின மக்களின் மீது வெள்ளையர்கள் கொண்டிருந்த மதிப்பீடுகளை பேசுகிற நாவல் இது. எழுத்தாளர் இந்நாவலில் பாடும் பறவைகள் என்று குறிப்பிடுவது கறுப்பின மக்களைத்தான்.

ஸ்கௌட் என்று சிறுமியின் பார்வையில் இருந்து கதை சொல்லப்படுகிறது. ஸ்கௌட்டின் மூத்த சகோதரன் ஜெம், நண்பன் டில், வீட்டில் பணிபுரியும் கல்பூர்ணியா மற்றும் ஸ்கௌட்டின் தந்தை ஆட்டிகஸ் இவர்களுடன் கதை பயணிக்கிறது. ஆட்டிகஸ் ஒரு வழக்கறிஞர். அந்த பகுதியில் வசிக்கும் வெள்ளையினத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை பலாத்காரம் செய்துவிட்டான் என்று கறுப்பினத்தை சேர்ந்த டாம் ராபின்சன் குற்றஞ்சாட்டப்படுகிறான். அவனுக்காக ஆதாரவாக யாரும் வாதாடாத போது, ஆட்டிகஸ் முன்வந்து வாதாடுகிறார். அதற்கு அவர் சொல்லும் காரணம் “டாமின் வழக்கு – மனிதர்களின் மனசாட்சியின் அடித்தளத்தைத் தொடக்கூடிய ஒன்று. இவருக்கு நான் உதவி பண்ண முயற்சிக்கவில்லையென்றால் தேவாலயத்திற்குச் சென்று கடவுளைக் கும்பிடுவதற்கு அர்த்தமில்லாமல் போய்விடும். மற்றவர்களுடன் சேர்ந்து வாழ்வதற்கு முன்பு நான் என்னோடு வாழவேண்டும். மனிதர்களுடைய மனசாட்சி சம்பந்தப்பட்ட விஷயங்கள், பெரும்பான்மை விதிக்கு கட்டுப்படாத ஒன்று. உண்மை என்னவென்றால், சில நீக்ரோக்கள் பொய் சொல்லுவார்கள், சில நீக்ரோக்கள் ஒழுக்கமற்றவர்கள், சில நீக்ரோக்களை நம்பமுடியாது. இது ஒரு குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்த ஆண்களுக்கு மட்டுமில்லாமல் மனித இனத்தைச் சேர்ந்த அனைவருக்கும் பொருந்தும்” என்கிறார். கறுப்பினத்தை சேர்ந்தவன் என்ற ஒரே காரணத்திற்காக, அந்த பகுதியில் இருக்கும் பெரும்பான்மையினர் டாமையும் அவனுக்கு ஆதரவாக வாதாடும் ஆட்டிகஸையும் எதிர்க்கின்றனர். இந்த எதிர்ப்புகளை மீறி ஆட்டிகஸ் உண்மையை நிலைநாட்டினாரா? டாம் ராபின்சன் காப்பாற்றப்பட்டாரா?

உலகம் முழுக்க தேசபக்தி, இனம், நிறம், ஜாதி, மதம் போன்ற உருவாக்கப்பட்ட அடையாளங்களின் பெயரால் ஒரு கூட்டம், இன்னொரு கூட்டத்தை வஞ்சித்துக் கொண்டேதான் இருக்கிறது. பெரும்பான்மையினர் தங்களுடைய நம்பகத்தன்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் எதுவும் இல்லை. ஆனால், சிறுபான்மையினரோ தங்களுடைய நம்பகத்தன்மையை நிரூபித்துக்கொண்டே இருக்க வேண்டுமே. நிரூபிக்க மறுத்தால் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள். இதற்கு நீதிமன்றங்கள், வழிபாட்டுத்தளங்கள், கல்வி நிலையங்கள் என்ற எதுவும் விதிவிலக்கல்ல.

இந்நாவலில் வரும் நீதிமன்ற விசாரணை, மிக முக்கியமானது. தன்னை பலாத்காரத்திற்கு உட்படுத்தியதாக அந்த பெண் முறையிட்டுருப்பாள். அந்த சம்பவத்தை பார்த்ததாக அந்த பெண்ணின் தகப்பனும் சாட்சி சொல்கிறார். ஒரு நீக்ரோ இதை நிச்சயம் செய்திருப்பான் என்று வெள்ளையர்களும் நம்புகின்றனர். இந்நிலையில் உண்மையை வெளிக்கொணர ஆட்டிகஸ் முன் வைக்கும் வாதம் அப்பெண்ணெயும், அவள் தகப்பனையும் அயர்ச்சிக்கு உள்ளாக்குகிறது. உண்மை வெளிவந்துவிடுமோ என்கிற அச்சம் அவர்களை ஆட்கொள்கிறது. டாம் குற்றம் செய்யவில்லையென்றால், நான் உள்ளே வரும்போது அவன் ஏன் என் வீட்டை விட்டு ஓடவேண்டும் என்று அப்பெண்ணின் தந்தை முன்வைக்கிறார். அப்பெண்ணின் சார்பாக வாதாடும் வக்கீலும் அதையே வழிமொழிகிறார். அதற்கு டாம் சொல்லும் பதில் மிக முக்கியமானது. “நீங்கள் ஒரு நீக்ரோவாக இருந்தால் மட்டுமே நான் ஏன் அந்த இடத்தை விட்டு ஓடினேன் என்பது புரியும். நீங்கள் உங்கள் இடத்தில் இருந்து பார்ப்பதால், நான் கெட்டவனாகவும், குற்றம் செய்தவனாகவும் கருதப்படுகிறேன். சில நொடிகள் என் நிலையில் இருந்து என்னைப் பாருங்கள். என் வலியும் என் வேதனையும் உங்களுக்குப் புரியும். நீங்கள் என் இடத்தில் இருந்தால் என்னைப்போன்று அந்த இடத்தில் இருந்து ஓடத்தான் முயற்சி செய்திருப்பீர்களே தவிர்த்து, எதையும் எதிர்கொண்டிருக்க மாட்டீர்கள்” என்கிறான்.

டாமுக்கு ஆதரவாக வாதாடும் ஆட்டிகஸ், யாரால் அவன் குற்றம் சாட்டப்பட்டானோ அந்த பெண்ணின் நிலை கண்டு வருந்துகிறார். அந்த பெண்ணுக்காக மட்டும் இல்லாமல் அந்த பெண்ணின் தந்தையின் கோபத்தையும் புரிந்து கொள்கிறார். நீதிமன்றத்தை விட்டு வெளியே வரும் ஆட்டிகஸ் மீது அந்த பெண்ணின் தந்தை காரித்துப்பி விடுகிறார். அதைக் கண்டு கோபம் கொள்ளும் தன் குழந்தைகளிடம் “நீங்கள் அவர் இடத்தில் இருப்பதாக ஒரு நிமிடம் நினைத்துக்கொள்ளுங்கள். என் மீது துப்பியதும் , என்னை மிரட்டியதும், அவருடைய மகளை அடிவாங்குவதில் இருந்து காப்பாற்றி இருக்குமேயானால் அது எனக்கு சந்தோஷம். அவர் இந்த கோபத்தை யார் மேலாவது காண்பிக்க வேண்டும். அதற்கு அவர் வீடு நிறைய இருக்கும் குழந்தைகளையெல்லாம் விட்டு விட்டு என்னைத் தேர்ந்தெடுத்தது பரவாயில்லை” என்று புரியவைக்கிறார்.

நீதிமன்றமும் டாமுக்கு எதிராக இருக்கிறது. ஆட்டிகஸ் தன் மகனிடம் ” மனிதர்கள் வானவில்லில் உள்ள எந்த நிறமாக இருந்தாலும் நியாயம் கிடைக்கும் ஒரு இடமாக நீதிமன்றம் இருக்கவேண்டும். ஆனால், அவர்கள் தங்களுக்குள் உள்ள ஆத்திரத்தையும், கோபத்தையும் வழக்கறிஞர்களின் கூண்டுக்குள் எடுத்து சென்று கொண்டிருக்கிறார்கள். நீ பெரியவனாக வளர்ந்து வரும்போது, ஒவ்வொரு நாளும் வெள்ளையர்கள் கறுப்பர்களை ஏமாற்றுவதைப் பார்க்கலாம். ஆனால் உன்னிடம் ஒன்றைச் சொல்கிறேன், நீ அதை மறக்காதே – எப்போதாவது அந்தமாதிரி வெள்ளையினத்தை சேர்ந்த ஒருவர் கறுப்பினத்தைச் சேர்ந்த ஒருவருக்குச் செய்தார் என்றால், அவர் யாராக இருந்தாலும், எவ்வளவு பெரிய பணக்காரராக இருந்தாலும் அல்லது எவ்வளவு நல்ல குடும்பத்தில் பிறந்திருந்தாலும், அந்த வெள்ளையர் ஒரு குப்பைக்கு சமம். நீக்ரோக்களின் அறியாமையைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் தரம் குறைந்த வெள்ளையர்களை நினைத்தால் மனச்சோர்வும், வெறுப்பும் ஏற்படுகிறது. உன்னை நீயே இதனால் முட்டாளாக்கிக் கொள்ளாதே – இதெல்லாம் அதிகரித்துக் கொண்டே போகிறது. நாம் இதற்கான கூலியை ஒரு நாள் கொடுக்கத்தான் போகிறோம். அது உனது குழந்தைகள் காலத்தில் இருக்காது என நம்புகிறேன்” என்பார்.என்ன ஒரு வீரியமான வார்த்தைகள் ! சகமனிதர்களை பிறப்பின் காரணமாக சிறுமைப்படுத்துகிற ஒவ்வொரு தேசத்திற்கும் இது பொருந்தும். அதுவும் ஜாதியின் பெயரால் மிருகங்களை விட கேவலமாக நடத்தப்படுகிற மனிதர்கள் இருக்கிற நம் தேசத்திற்கு இவ்வரிகள் சாலப்பொருந்தும். போலிப் பெருமிதங்கள் பேசுவதற்கு பதில், அந்த பெருமிதங்கள் நம் சகோதரர்களை எப்படி சிறுமைப்படுத்திவைத்திருந்தது என்பதையும் நம் குழந்தைகளிடம் நாம் இப்போது பேசித்தான் ஆகவேண்டும்.

எது சுதந்திரம்? , நாம் விரும்புகிற உடைகளை உடுத்துவதோ, நாம் விரும்புகிற உணவை உண்ணுவதோ, நாம் விரும்புகிற இடங்களுக்கு செல்லுவதோ சுதந்திரம் கிடையாது. எந்த தடையும் இன்றி நம்மால் சிந்திக்க முடிந்தால் மட்டுமே நான் சுதந்திரமானவர்கள். நம் சிந்தனையின்போது, மதம், மொழி, தேசம், நிறம், கடவுள் என்று எது குறிக்கிட்டாலும் நாம் சுதந்திரமானவர்கள் என்று சொல்லிக்கொள்வதற்கு நமக்கு எந்த தகுதியும் கிடையாது. இது போன்ற எந்த தடைகளும் இன்றி சிந்தித்த, தன் குழந்தைகளுக்கும் சிந்திக்க கற்றுக்கொடுத்த மனிதனின் கதை தான் பாடும் பறவையின் மௌனம்.

புலிட்சர் விருதுபெற்ற இந்நாவல் “Robert Mulligan” என்ற இயக்குனரால் திரைப்படமாகவும் எடுக்கப்பட்டது. பல்வேறு பிரிவுகளின் கீழ் ஆஸ்கார் முதல் கோல்டன் குளோப், அகாடமி விருது வரை பெற்றது.

நாவலின் பெயர் – பாடும் பறவையின் மௌனம் (To Kill a Mocking Bird)

எழுத்தாளர் – ஹார்ப்பர் லீ ( Harper Lee)

தமிழில் – சித்தார்த்தன் சுந்தரம்

பதிப்பகம் – எதிர் வெளியீடு

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button