
வளர் இளம் பருவம்
நெகுண்டுயர்ந்த இளம்
பெண்கள் இருவர்
விளையன் தோட்டத்தில்
இடும்பன் பூசைக்கு
பத்திர இலைகளைக்
காவிக்கொண்டிருந்தார்கள்
சுற்றிலும் நல்லது கெட்டது
குறித்த அம்மாவின் சொலவடை
காட்டுச் சில்வண்டைப்போல
பம்மிக்கொண்டிருந்தது
நல்லது நமுட்டுச் சிரிப்போடு
குறுக்கும் நெடுக்குமாக கடந்தது
ஒருத்தி மற்றொருத்தியிடம் சொன்னாள்
பாத்திரத்தின் மூடியை மட்டும்
பற்றக்கூடாதென்பது உலக வழக்கம்
அப்போது
பாலரூபத்தில் தோட்டத்தில்
பிரசன்னமான சிறுவன்
அவனது சின்னஞ்சிறு உலகின்
மூடியை மட்டும் பற்றினான்
பிடி நழுவி பாத்திரம்
பூமிக்குள் சென்றதைக்
கண்ட சிறுமிகள்
பதற்றத்துடன் விடுதிரும்பினர்
நடந்ததை வெகுதூரத்திலிருந்து
கண்டு பதறினர் தம்பியின்
தகப்பனார் பாட்டனார் முப்பாட்டனார்.
**********
இவ்வாறு..
நான் சொல்லவில்லை நீ இப்போது
குளிர்ச்சியான நிலத்தின் காலத்திலிருந்து தப்பி
வெதுவெதுப்பான நிலத்தின்
காலத்திற்கு வந்திருக்கிறாய்
இப்போது நிலம்
விலைமதிப்பற்றதாகிறது
எனவே காலமும்
விலைமதிப்பற்றதாகவே இருக்கிறது
நீ முன்பிருந்த காலத்தின்
துலக்கமில்லாத பிணக்குநாட்கள்
நினைவில் தட்ட ஒரு எட்டு
பின்னோக்கி நகர நினைக்கிறாய்
வெள்ளித் தகட்டைப்போல பளபளக்கும்
இந்த வெதுவெதுப்பான நிலத்தின் காலம்
மிதக்கும் சிப்பாய்களை அனுப்பி
உனக்குச் சவாலைத் தருகிறது
உண்மையில் நீ உள்ளூர பயந்திருக்க
காதோரம்,நெற்றிப்பாகங்களில்
வியர்வை வழிந்தோடுகிறது
இப்போது மிதக்கும் சிப்பாய்கள்
புதிய திறப்புகளின் வழி
ஒளியைப் பாய்ச்சுகிறார்கள்
அது கபடமில்லாத அழகில்
மின்னவும் மினுக்கவுமிருக்க
திட்டமிடுவதுச் சவால்களை ஏற்பது
முடிவுகளை எட்டுவது போன்றவற்றில்
மதிப்பில்லாததைப்போல கிடக்கிறாய் கிட
பிறகு ஒட்டமுடியாத இக்காலத்தின்
ஓரமாக நின்று அண்ணார்ந்து பார்க்கிறாய்
பழைய வித்தைகள் போன பாதையிலிருந்து
வந்த துக்கம் தேம்பத் தேம்ப
புதிய காலசக்கரம் கொண்டு
மிதக்கும் சிப்பாய்கள்
வீதியின் இரண்டு ஓரங்களையும்
தொட்டு ஏறிக்கடக்கிற சப்தங்கள்
படார் படார் படார் படார்…
**********
திருவடிப்பேற்று வழிபாட்டு அழைப்பு.
அதுவொரு அழகிய அந்தி
பகல் இரவு எனக்கடந்த உனது காலங்கள்
இந்த அந்தியில் தேங்கி நிற்கிறது
பச்சைப் பசேலென விளைந்த தாவரங்கள்
காலத்தை மேலும் செம்மையாக்க
உனக்குப் பிரியமானப் பெண்
கிடைமட்டமாக உன்னருகில் சாய்ந்து
அதிரூபனே இது போதுமா என்கிறாள்
உனக்கோ ஜென்ம சாபல்யம்
அந்தியின் நறுமணம் கிறுகிறுக்க
படுத்த படுக்கையிலிருக்கும் உனக்கு
கண்களில் இருந்து சிறுநீரைப்போல
கண்ணீர் வழிகிறது
மகனே இல்லாத உனக்கு
அப்பாவிற்கு நினைவு தப்பிவிட்டது
ஆகவேண்டிய காரியங்களைப் பார்க்கலாம்
என்ற உனது மகனது குரல்
இறுதிச்சடங்கு ஏற்பாடுகளைச் செய்கிறது
அந்த அழைப்பை ஏற்றுச் செல்கின்றாய்
பத்திரமாகச்செல்.
**********
காலம் மையம் எச்சம் யாவும் உதிரிகள். இடைப்பட்ட இணைவுச் சரடுதான் களம். களத்தை மயக்கமண்டலமாக்கிவிட்டது கண்டராதித்தர் மொழி. அருமை.