
முற்பகலிலேயே மெல்லிய இருள் கவிந்திருந்தது. வேலைக்கான தேர்வில் தேறி வீட்டில் இந்த முறையாவது ‘பரவாயில்லை’ என்ற பெயர் வாங்கமுடியாமல் போனது குறித்து நந்தினிக்கு சலிப்பு .எந்த விஷயத்திலும் அவளுக்கு வீட்டில் இப்படித்தானாகும்.உண்மையில் அவள் தேர்வில் பாதிக் கேள்விகளை வாசிக்கக்கூட இல்லை.பின் எதற்காக வருத்தம் என்பது அவளுக்கே புரியாமலிருந்தது.
மனதை மாற்ற தொடர்ந்து வேலை செய்து கொண்டிருந்தாள். கவனமற்று சமையலறையில் இருக்கக்கூடாது என்று உள்மனம் விரட்டிக்கொண்டிருக்க அவள் அதை கவனிக்காமல் எதையோ மனதில் அசை போட்டுக்கொண்டிருந்தாள். உறக்கமில்லாத கண்கள் தன்னிருப்பை கனத்து உணர்த்திக் கொண்டிருந்தன.
இடதுகை பெருவிரல் நகத்திற்கு சற்று மேல் கத்தி பிறையென பதிந்து குருதி வழிந்தது. கையிலிருந்த தேங்காயையும் கத்தியையும் கீழே போட்டாள். கழுவுத்தொட்டியின் தண்ணீர்க்குழாயை திறந்து விட்டு கழுவியதில் மேலும் குருதி வழியத்தொடங்கியது. நந்தினிக்கு கண்களை இருட்டிக்கொண்டு வந்தது.உடனே மாமா வீட்டில் இருக்கார் என்ற எண்ணம் எழுந்தது. தண்ணீர் குடித்துவிட்டு துப்பட்டாவை எடுத்து தோளில்போட்டபடி தெருவில் இறங்கி நடந்தாள்.
விரல் வலிக்கத் தொடங்கியது. நிமிர்ந்து ஒளியைப்பார்க்க முடியாமல் குனிந்து நடந்தாள். கண்கண்ணாடி அதிக கோடுகள் விழுந்து தேய்ந்திருந்ததால் ஔியை சிதறடித்துக்காட்டின. மேலும் சமையலறையின் பிசுக்கு எத்தனை துடைத்தல்களுக்குப் பிறகும் துளியேனும் எஞ்சியிருந்த கண்ணாடி, கண்களுக்கு உபத்திரவமாக இருந்தது. கண்களை ஒருமுறை மூடித்திறந்து கசக்கிக்கொண்டாள்.
அம்மா வாசலில், “முணுக்குன்னா அங்க போய் நிக்கனும்.உடம்பு சரியில்லாதவரை தொந்தரவு பண்ணிக்கிட்டு,”என்று அதட்டியது முடக்குவரை காதில் கேட்டது.
இரண்டு நாட்களுக்கு முன்பே ஜலீன்கான் டாக்டர் அவளைப் பார்க்க வேண்டும் என்று பக்கத்து வீட்டுப்பையனிடம் சொல்லி அனுப்பியிருந்தார். அம்மாவிடம் சொல்லியிருக்கலாம். சொல்லித்தான் என்ன? எல்லாத்தையும் பேசிக்கொண்டேயிருந்துதான் என்ன செய்யப்போகிறோம்? என்று நடந்தாள்.பத்துஆண்டுகளாக தார்காணாத பாதை பழையகாலத்து ஜல்லிக்கற்கள் பாவப்பட்ட பாதை போல மாறியிருந்தது.
அந்த இருதளக்கட்டிடத்தின் மேற்கு மூலையில் கதவின் அருகில் நின்று தலையைத்தூக்கிப் பார்த்தாள். ஹோமியா மருந்துவமனையின் அழைப்புமணியும் பெயர்ப்பலகையும் இருந்த தடயம் செவ்வகமாகத் தெரிந்தது. நுழைந்தவுடன் நோயாளிகளுக்கான சிறிய தடுப்பறையைத் திறந்தாள். உள்ளே உயரமாகக்கிடந்த பச்சை மெத்தையும், இடது புறக்கட்டிலும் பாதியிருளுக்குள் கிடந்தன. மேலே கட்டிப்பிணைக்கப்பட்டிருந்த மேசை விளக்கு பாம்பு போல வளைந்து புழுதியுடன் தொங்கிக்கொண்டிருந்தது. வெளியே இருந்த நடைப்பாதையைக் கடந்து வரவேற்பறையில் நுழைந்தாள். ஜலீன்கான் கட்டிலில் படுத்திருந்தார். அரவம் கேட்டதும் மெதுவாகக் கண்களைத் திறந்தார். கருவளையங்கள் நிறம் அடர்ந்து சுருங்கியக் கண்கள். கண்ணாடியை எடுத்து மாட்டிக்கொண்டார்.
“வா பொண்ணு…” என்று பெரிய மரக்கட்டிலில் படுத்துக்கொண்டே புன்னகைத்தார். கோடையில் ஆற்றில் எங்கேயோ ஆழப்பள்ளங்களில் நிறைந்திருக்கும் கையளவு நீரை பார்ப்பதைப்போல இருந்தது. தன்முகம் சுருங்குவதை உணர்ந்த அவள், முகத்தை மலர்த்திக் கொண்டாள். கண்களுக்கு மறைக்கத் தெரியவில்லை.
நந்தினியின் முகத்தை மறுபடி பார்த்து, “உடம்புக்கு என்ன?”என்றார். கையைக் காண்பித்தாள்.
“இங்க வா. சின்னகாயத்துக்கு இப்பிடி பயந்து வந்திருக்க..”
“வலிக்குது மாமா,”
“ நீ காலையில சாப்பிடாம இருக்கவே கூடாதுன்னு எத்தனை வருஷமா சொல்றேன். அந்த பாக்ஸையும் நீடிலையும் எடுத்துக்கிட்டு எம்பக்கமா வா,” என்று நிமிர்ந்தமர்ந்தார். அவர் அருகில் அமர்ந்ததும் அவளுக்கு மனதினுள் கருக்கென்றிருந்தது.
“சாப்டாச்சு மாமா,” என்று குனிந்து ஓரக்கண்ணால் படுக்கையைப் பார்த்தாள். அங்கு இருக்க வேண்டிய கால் இல்லை என்பது அங்கு அமர்வதற்கு தயக்கத்தை தந்தது. அவர் தளர்ந்த கைகளால் அவள் விரலைத் தொட்டுப்பார்த்தார். அவளுக்கு அவர் கைகளைப் பிடித்துக்கொள்ள வேண்டும் என்று தோன்றியது.
“ஆழமா இருக்கே. ஒரு இன்ஜெக்சன் போட்டுக்கலாம்,”என்று காயத்தைத் துடைக்கத் தொடங்கினார். கண்களின் மெல்லிய நீர்மை அதை உயிருள்ளாதாக்குகிறது என்று அவர் கண்களையே பார்த்துக்கொண்டிருந்த அவளுக்குத் தோன்றியது.
அவள் வயதிற்கு வந்த புதிதில் வைத்தியத்திற்கு வந்த அன்று, ஊசி போடுவதற்கு மாமா அவர் மனைவியை அழைத்தார். அந்தம்மாள் தான் பெண்களுக்கு ஊசி போடுபவர்.
“ நான் மாமாட்ட போட்டுக்கறேன்,” என்றதும் அவள் கன்னத்தைத் தட்டி புன்னகைத்த மாமாவின் அழகிய படர்ந்த சிவந்த முகம், இன்று கருத்து சுருங்கி நெல்லறுத்த வயல்காடு போல இருந்தது.
விரலில் டிங்க்ச்சர் வைக்கும் போது , “உன்ன ஒருமாசக் குழந்தையா கையில வாங்கினேன்,” என்று முகத்தைப் பார்த்தார். அவள் புன்னகைத்தாள்.
“ரொம்ப லோ வெய்ட்.. பூ மாதிரி,” வானவில் தோன்றுவது மாதிரி எப்போதாவது சட்டென்று இப்படி பேசுவார். மற்றபடி இறுக்கமான மருத்துவர் என்பதைப் பிடித்து வைத்திருப்பவர். அவரின் தோளைத்தொட்டு கால்சரியானதும் மறுபடி வைத்தியம் பாக்கலாம் மாமா என்று சொல்ல நினைத்தாள். சிறிது நேரம் அதே யோசனையிலிருந்தப்பின் அப்படியெல்லாம் திட்டமிட்டு ஒருவரை தொட்டுப் பேச முடியாது என்பது புரிந்தது.
எப்பொழுதும் இல்லாத அளவிற்கு ஒழுங்கில்லாத கட்டு ஒன்றை விரலில் போட்டு முடித்திருந்தார்.அதிகமான டிங்க்ச்சர் கசிந்து கட்டு முழுதும் பரவி ஊறியது.அவளை இன்னும் பக்கத்தில் வர சொல்லி அமர்த்தினார். அவள் இடது கையின் தசையைப் பிடித்து தடுமாறும் கைககளால் ஊசியைக் குத்தி விட்டு மெதுவாக அவள் தோளைத்தட்டி, “இன்ஜெக்சன் பண்ணும் போது ஃப்லக்ஸிபிலா இருக்க ட்ரை பண்ணுன்னு பிறந்த காலத்திலருந்து சொல்றேன்..மாத்திக்க முடியல,”என்று அவள் முகத்தைப் பார்த்தார்.அவள் அவரை கவனித்ததாகத் தெரியவில்லை.
அங்கு நுழைந்ததிலிருந்து அவள் உள்ளுக்குள் ஒரு நிம்மதியின்மை. வழக்கம் போல எதுவாயிருந்தாலும் ஏத்துக்கனும் என்ற விசாரணை மனதிற்குள் நடமாடியது . அவளை அந்த இடத்தை தூய்மை செய்ய சொன்னார். மருந்து மட்டும் வலியை குறைத்து விடுகிறதா? என்ற எப்போதைக்குமான வியப்பு அவள் மனதில் எழுந்தது.
அந்தஅம்மாள், “உங்கமாமாவோட பேசிட்டு இருடி மருமவளே.. தொழுகபண்ணிட்டு வெளிய போயிட்டு வந்துடறேன்,”என்று திரையை விலக்கி வலதுபக்கமிருந்த நீண்ட அறைக்குள் நுழைந்தாள். அவ்வப்போது பணம் புழங்கப்புழங்க சிறுகச்சிறுக கட்டிய பெரிய வீட்டின் பழைய மூலையிலிருக்கும் பகுதி அது.
மாமா சாய்ந்து படுத்தார். அவள் சைக்கிள் பழகிக் கொண்டிருந்த நாட்களில் ஒருநாள் கேரியரைப் பிடித்துக்கொண்டே வந்த சபரி மாமா கேரியரை விட்டுவிட்டு பின்னால் நடந்து வந்தார். வழியெங்கும் ‘பழகியாச்சு..பழகியாச்சு’ என்றும் ‘அவ்வளவுதான் ஓட்டு ஓட்டு’ என்ற குரல்களைக் கேட்டு பின்னால் ஆள் இல்லை எனப் புரிந்து நந்தினி இறங்க காலெடுத்தாள். “பொண்ணு…இறங்காத மிதிமிதி..”என்ற மாமாவின் குரல்கேட்டதும் வேகமாக மிதித்து இறங்கத் தெரியாமல் ஊரைச் சுற்றி வந்தாள்.
ட்யூபர்குளாசிஸ் பாதிப்பால் இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து மருத்துவம் பார்த்துக்கொள்ள நேரிட்ட நாட்களில் ஊசி போட வேண்டிய மருந்தை எடுத்துக்கொண்டு இந்த இடத்தில்தான் நிற்பாள்.
“நேத்து எந்த ஸைடு போட்டாம்?”என்று கேட்டுக்கொண்டே ஊசி மருந்தை செலுத்தி தேய்த்து விட்டு கவுனை சரிசெய்து டியூசனுக்கு அனுப்புவார்.
பாதி உறங்கியும் உறங்காததுமான அந்த இரவுகளில், நீர்வற்றிய ஆற்று மணலில் வயல்காட்டில் ஓடிக்கொண்டிருப்பாள். துரத்தி வரும் பாம்பிடம் அகப்பட்டுக்கொள்ளும் நேரத்தில் ‘பொண்ணு ஊசிப்போட்டாச்சு எழுந்திரு’ என்ற குரல் கேட்கும். கண்களின் கீழ் இமையை இழுத்துப் பார்க்கும் மாமாவின் தொடுதலோ, ’வாயைத்திற’ என்று முகவாயைத் தொடும் அவரின் கரமோ அவளை எழுப்பிவிடும். கட்டிலில் எழுந்தமர்ந்தால் இருள் செறிய வீடு ஆழ்ந்த அமைதியிலிருக்கும். காலையில் மாமாகிட்ட போகலாம் என்ற நம்பிக்கையில் உறங்கிய இரவுகள் நினைவில் வந்துபோயின.
மாமா கண்விழித்து நேரத்தைப் பார்த்தார். குளிர்சாதனப்பெட்டியிலிருந்த இன்சுலினை எடுத்துவர சொல்லும் போதே அம்மாள் உணவுத்தட்டுடன் நுழைந்தாள்.
“பொண்ணு இந்த ஊசிய எனக்குப் போடறியா..” மிரண்ட கண்களைப் பார்த்து, “ ஈசியா போடலாம்,” என்றார்.
பூனையின் மென்ரோமம் போன்ற அவரின் வயோதிக தசையைத் தொட அவளின் கைகள் கூசின. அவர் சிரித்தார். அவர் சொல்ல சொல்ல இன்சுலினை அவர் உடலில் செலுத்திவிட்டு வெளியில் வந்து நின்றாள்.
அவளுக்கு ஏனோ மனம் நிலைகொள்ளாமல் இருந்தது. முன்னாலிருந்த வேம்பில் அமர்ந்திருந்த சிட்டு ‘விருட்’ என்று பறக்கவும் திடுக்கிட்டாள். அவளுக்கு பக்கத்தில் தண்ணீர் ஊற்றாமல் நித்யமல்லி செடி பூக்களுடன் சோம்பியிருந்து. கைகளால் அதைத்தடவினாள்.
அவள் திரும்பி உள்ளே பார்த்தாள். “தனியா போய் நிக்கற பழக்கத்தை மாத்து. இங்க வந்து உக்காரு பொண்ணு,” என்றார்.
இவள் சற்று உரத்தக்குரலில், “முன்னாடி செடிகளுக்கு தண்ணி ஊத்த மறந்துட்டீங்களாம்மா?”என்றாள்.
மாமா ,“என்ன பண்ணிட்டு இருக்க? நானும் ஆறுமாசமா அலைச்சல்ல இருக்கவும் சரியா கவனிக்கமுடியல. ஸ்கூல் பிடிக்கலயா?” என்றார்.
“ம்..”
“எல்லாரும் ஏதோ ஒரு வேலைக்கு போகத்தானே செய்யறாங்க. நானும் தம்மப்பட்டி பிடிக்காமதான் இங்க வந்தேன். அப்ப உன் வயசிருக்கும். ஆனா உன்னமாதிரி இவ்வளவு பெரும்போக்கு எண்ணமில்ல. பொம்பளப்பிள்ளை இப்பிடி இருந்து..என்னத்த..” என்று பெருமூச்சுவிட்டார்.
“எனக்கு எந்த வேலயும் பிடிக்கல,” என்று முகத்தை சுருக்கினாள்.
“பின்ன எதுக்கு கவர்மெண்ட் வேலைக்கு எக்ஸாம் எழுதின,” அவள் மெதுவாக, “ நீங்க.. அவங்க.. பெத்தவங்க.. மத்தவங்க..” என்றாள்.
“சலிச்சுக்கறதுக்கு பதிலா கோவப்படலாம். என்னதான் பண்ணப்போற.கொஞ்சமாச்சும் எதிலயாச்சும் ஈகர் இருக்கனும்…”
அவள் பேசாமலிருந்தாள்.
“உடம்பு சரியில்லாம சின்னதிலேயே தனியாவே இருந்ததுதான் உன்னோட சிக்கல். உன்னய மாத்தறத்துக்கு எவ்வளவு முயற்சி பண்ணியும் முடியல,” என்றார்.
“கடைசியா நிக்கறவன் எத்தனக்கூட்டத்திலயும் தனிதான் மாமா,”
“சரி..பட்டுத்தெளிஞ்சுக்க. வேல முக்கியமில்லங்கற… எக்ஸாமில் கட்ஆப் வரலன்னா விடவேண்டியது தானே.உடம்பிலயும் மனசிலயும் ஏன் சிக்கல இழுத்து வச்சிருக்க,”
“..”
“நான் நம்பாத எத்தனையோ நாள்ல்ல நீ சரியாகி எழுந்திருக்க. ஒருதடவ உனக்கு அம்மை மறுஉரு கண்டப்ப யாருமே நம்பல தெரியுமா?”
அவள் புன்னகைத்தாள்.அறியா நேரத்தில் மெல்லிய வெளிச்சம் பின்புற முற்றத்திலிருந்து உள்ளே படர்ந்தது.
“அல்லா..பெரியகாரியங்கள உத்தேசிப்பவர்ன்னு வாப்பா சொல்வார்,”
அவள் அந்தவெளிச்சத்தில் பறக்கும் புழுதியை பார்த்தபடியிருந்தாள்.
அவளின் தோளைப் பிடித்து உலுக்கிய அவர், “அல்லா கூடஇருப்பார்,” என்றார். மீண்டும் அவர், “ எத்தன பேர் இருந்தாலும் ஒவ்வொருத்தருமே தனியாளுங்க தான். அந்த நிஜம் உடம்புக்கு முடியாதப்பதான் தெரியும். சின்னவயசிலயே தெரிஞ்சவங்க அருளப்பட்டவங்க,” என்றார்.
“மனுசங்க மட்டுந்தானா இப்பிடி..மிருகங்களுக்கும் இருக்குமா?அதுங்க என்ன பண்ணும்,”
“முதல்ல நல்லா சாப்பிடு. நல்லா தூங்கு. பின்னாடி யோசிக்கலாம்,”
“ம்,”
“நீ இன்னும் கொஞ்சம் ஃப்லெக்சிபிலா இருக்கலாம்,”
“நான் முரடா மாமா,”
“ஆமா…”
அதுவரை அமைதியாக இருந்த அம்மாள், “யாரையும் ஒருவார்த்த கடிஞ்சு பேசாத பிள்ளைய என்ன சொல்றீங்க?” என்றாள்.
“அதத்தான் சொல்றேன் பொண்ணு. யாருக்காச்சும் வழி விடு,”
அவர் மகன் வந்ததும் வீதியில் இறங்கி நடந்தாள். வேம்பின் சறுகுகள் காற்றில் நகர்ந்து கொண்டிருந்தன.
கல்லூரி நாட்களில் சிறிய இரும்புத்துகள் அவளின் மோதிரவிரல் நகத்தின் நடுவில் குத்தி சிக்கிக்கொண்டது. அந்த ஊரில் மருத்துவம் பார்த்து வீட்டிற்கு வந்த மறுநாள் இரவு கை இசுவு எடுத்துக் கொண்டது. நடுஇரவில் அய்யாவுடன் இதே வீட்டைத்தட்டி எழுப்பினாள்.
எடுக்காமல் விடப்பட்டிருந்த சிறுதுகளை நோண்டி எடுக்கும் வரை பல்லைக்கடித்து அமர்ந்திருந்த அவளிடம், “ரொம்ப வலிக்குதுன்னா சொல்லிறனும்,”என்று வாசல்வரை கைப்பிடித்து வந்தார்.
வீட்டிற்குள் படியேறும் பொழுது பெருவிரலின் கட்டைப் பார்த்தாள்.“இங்க பாரு பொண்ணு…இன்னிக்கு சொல்றதுத மனசில வச்சுக்க.உனக்கு உடம்பில ஒரு சின்ன ஜர்க்.அது மனசிலயும் விழுந்திருச்சு. தாண்டனுங்கற எண்ணம் மட்டும் போதும்,”என்ற மாமாவின் குரல் தெளிவாகக்கேட்டது.
அவள் மனதில் இன்னும் எத்தனை நாளைக்கு மாமா இருப்பார்? என்று இரவு முழுவதும் அலையடித்துக் கொண்டிருந்தது. உடம்பையும் மனசையும் புரிஞ்சுக்கிட்ட ஒருத்தரை சீக்கிரமே இழக்கப்போகும் அதிர்வு மனதில் இருந்து கொண்டேயிருந்தது.
விடியலில் வீதியில் இறங்கியதும் மாமாவின் இறப்பு செய்தி காதில் விழுந்தது. ஹார்ட்அட்டாக்காக இருக்குமா? என்று நினைத்துமுடிக்கும் முன்பே ,“ஏ..நந்தினி தம்மபட்டியாரு அவராவே ராத்திரி ஏதோ ஊசியப்போட்டுக்கிட்டு செத்து போயிட்டாராம்…”என்று சொல்லிவிட்டு ஜெயா அக்காவுடன் பேச ஆரம்பித்தாள்.
நந்தினிக்கு கொஞ்சம் தூங்கி எழுந்தால் போதும் என்று தோன்றியது.சூரியனின் கதிர்கள் ஐன்னல்வழியே பரவிய படுக்கையில் அவள் உறங்குவதற்காகப் படுத்தாள்.