இணைய இதழ்இணைய இதழ் 74சிறுகதைகள்

இருளடக்கி நின்ற வானம் – பத்மகுமாரி

சிறுகதை | வாசகசாலை

செங்கமலத்தை நாளை பெண் பார்க்க வரப்போகிறார்கள். இதற்குமுன் பெண் பார்க்க வந்தவர்கள் எல்லோரும் வீட்டிற்கு போய் பேசி முடிவெடுத்துவிட்டு சொல்வதாக சொல்லிவிட்டு போனவர்கள் தான். இன்றுவரை யாரிடம் இருந்தும் எந்த முடிவும் வந்திருக்கவில்லை

செங்கமலத்திற்கு வடிவான முகம், ஒல்லியும் அல்லாத குண்டாகவும் அல்லாத  தேகவாகு. உயரம் கொஞ்சம் குள்ளம். இடது கை விரல்களில் நடு மூன்று விரல்கள் மட்டும்  உட்பக்கமாக வளைந்திருக்கும். பிறவியிலிருந்தே அப்படித்தான் இருக்கிறது. சின்ன பிள்ளையில் செங்கமலத்திற்கு திருஷ்டி சுத்தி போடுகையில் “ராஜகுமாரி மாதிரில இருக்கு என் புள்ள” என்பாள் சாரதா

இப்பொழுதும் அந்த பழக்கம் மாறாமல் வாரம் ஒருமுறை திருஷ்டி சுற்றிப் போடுவதுண்டு.  “என் பிள்ளை வாழ்க்கைக்கு ஒரு வெளிச்சத்த விடுப்பா.என்று மனதிற்குள் பொருமியபடி

லட்சுமியை கோவிலில் பார்த்ததிலிருந்து சாரதாவிற்கு மனது சரியில்லை. செங்கமலத்திற்கு நாளை வரும் வரனாவது நல்லபடியாக முடிய வேண்டும் என்று வேண்டிக்கொள்ளத்தான் கோவிலுக்கு போயிருந்தாள். லட்சுமியைப் பார்த்த மாத்திரத்தில் நெஞ்சில் பெரும் பாரம் வந்து சம்மணம் போட்டு உட்கார்ந்து கொண்டது. சாமி முன் கைக்கூப்பி நின்றபொழுது இன்னதென்று ஒன்றைக் கேட்க மனம் குவியவில்லை.  “உனக்கு தெரியாதது ஒன்னுமில்ல. எல்லாரையும் காப்பாத்துப்பா.”என்று பொத்தம் பொதுவாக வேண்டிக் கொண்டாள்

***

வேலன் போனதிலிருந்து லட்சுமி இப்படி ஆகிவிட்டாள்.வேலன் லட்சுமிக்கு ஒரே மகன். எட்டு வருட தவத்திற்கு பிறகு மடியில் நிரம்பியவன். முருகனிடம் மன்றாடி பெற்ற பிள்ளை என்பதால் வேலன் என்றே பெயர் வைத்தார்கள். முருகனே வந்து உதித்தது போல அப்படி ஒரு அழகன். படிப்பில் சுட்டியானவன். குணத்திலும் தங்கம். ஊர் பிள்ளைகளோடு கூடி விளையாடுகிற பொழுது மற்ற பிள்ளைகள் அடித்துக்கொண்டு இரு குழுக்களாக பிரிந்து நின்றால், நிதானமாய் சமரசம் பேசி அவர்களை ஒன்று சேர்த்து வைத்து உடன் சேர்ந்து விளையாடுவான். 

செங்கமலத்தை சாரதா  மற்ற பிள்ளைகளோடு விளையாட அனுப்பமாட்டாள். யாரேனும் அவள் விரல்கள் வளைந்திருப்பதைப்பற்றி கேலி செய்து அவள் மனதை உடைத்துவிடுவார்களோ என்கிற பயமும் எச்சரிக்கையும் சாரதாவிடம் இருந்தது. கணவன் அதைப்பற்றி கேட்டால், “எல்லாம் வாலாமடைக. அதுக கூட விளையாடி எசக்கு பிசக்க அடிபட்டுட்டா அப்புறம் அம்மான்னா வருமா, அப்பான்னா வருமா.” என்று அவனது வாயை அடைத்துவிடுவாள்

கமலம் இன்னிக்கு பள்ளிகூடத்தில என்ன சங்கதி மக்ளே. அம்மேட்ட சொல்லு. அம்ம கதைக் கேக்கியேன்.

கமலமும் அம்மையும் பாம்பேணி ஆடுவோமா.விடுமுறை நாட்களில் செங்கமலத்தை வீட்டோடு வைக்க சாரதாவின் யுக்திகள் இவை. அதையும் மீறி செங்கமலம் மற்ற பிள்ளைகளோடு  விளையாட வேண்டுமென்று அடம் பிடித்தால்,  “வேண்டாம் மக்ளே. வெளில பாரு. மண்ணு, தூசி  சீ யாரு போய் விளையாடுவ அதுல. என் தங்ககட்டி பிள்ள அழுக்கால ஆயிரும்.” என்று அவள் மனதை மாற்ற முயற்சிப்பாள். செங்கமலத்திற்கு அம்மாவின் வார்த்தைகளில் பெரிதாக உடன்பாடு இல்லாவிட்டாலும் கூட அதற்கு மேல் அடம் பண்ணாமல் அடங்கிக்கொள்வாள். அவள் எதற்கும் மசியாமல் அடம் பண்ணுகிற நாட்களில், “வா பிள்ளைக்கு வெளில சேர் போட்டு தாரேன். எல்லோரும் விளையாடுகத பாரு. பிள்ளைக்கு நேரம் போயிரும்.செங்கமலத்திற்கென்றே வீட்டிலிருந்த குட்டி பச்சைநிற பிளாஸ்டிக் நாற்காலியை வெளி தாழ்வாரத்தில் கொண்டு வந்து போட்டு செங்கமலத்தை அதில் அமர்த்தி கொஞ்சுவாள். .ஊர் பிள்ளைகள் விளையாடும் மைதானம் வீட்டிற்கு எதிரிலேயே இருந்ததால் செங்கமலத்தை இப்படி ஒரு வழியில் சமாதானப்படுத்திவிட சாரதாவிற்கு வசதியாக இருந்தது

***

 செங்கமலத்தை கல்யாணத்திற்கு சம்மதிக்க வைக்க அத்தனை எளிதாக முடியவில்லை. காரணம் இன்னதென்று சொல்லாமல் எனக்கு கல்யாணமே வேண்டாமென்று செங்கமலம் பிடிவாதமாய் சொல்லிக் கொண்டிருந்தாள். இதற்கிடையே சாரதாவின் கணவனை கிட்னி நோய் சுருட்டிக் கொண்டு போனது

உனக்கு நான், எனக்கு நீன்னு சொல்லுகதுலாம் எத்தனை காலத்துக்கு செல்லும். எனக்கு பொறவு உனக்கு யார் இருப்பா.”

ஒத்த பிள்ளைய பெத்து வச்சிகிட்டு, அதுக்கு ஒரு கல்யாணத்த பண்ணி பார்க்காம போனா என் கட்டை வேகுமாக்கும்.”

இப்படி கொஞ்சம் கொஞ்சமாக   பேசி செங்கமலத்தை கல்யாணத்திற்கு ஒத்துக் கொள்ள வைப்பது பெரும்பாடாகப்போயிருந்தது

செங்கமலம் வாய்விட்டு சொல்லவில்லை என்றாலும், காரணம் வேலனாக இருக்குமோ என்ற சந்தேகம் சாரதாவிற்கு இருந்தது

வந்த வரன்கள் ஒவ்வொன்றாக தட்டிப் போய்க் கொண்டிருந்தபொழுதும் செங்கமலம் அதைப்பற்றி எந்த வருத்தமும் கொண்டிருக்கவில்லை. சாரதாவிற்கு தான் மகளின் எதிர்காலத்தைப்பற்றிய பயம் அதிகரித்துக் கொண்டிருந்தது

***

கோடை விடுமுறை நாளொன்றில் சாரதா செங்கமலத்தை வெளி தாழ்வாரத்தில் அமர்த்திவிட்டு புறவாசலில் மீன் கழுவச் சென்றுவிட்டாள். திரும்பி வந்து பார்த்தபொழுது குட்டி நாற்காலி மட்டும் தனித்து விடப்பட்டிருந்தது.கமலம் கமலம்சாரதாவின் குரலுக்கு எந்த பதில் குரலும் வரவில்லை. நடுங்கும் கால்களோடு செங்கமலத்தை தேடுவதற்காக சாரதா தெருவில் இறங்கிய பொழுது மைதானத்தின் வலது சுவர் பக்கமாக செங்கமலத்தின் பூ போட்ட பிராக்கின் விளிம்பு தெரிந்தது. விறுவிறுவென நடையை எட்டிப் போட்டு செங்கமலத்தை அடித்து விடும் ஆத்திரத்தோடு அவளை நெருங்கிய பொழுது, “அத்தை அவ நான் அடிச்ச பந்த பிடிச்சு என்ன அவுட் ஆக்கீட்டா.” வேலன் சிரித்த முகத்தோடு அம்மாவிடம் ஓடி வந்து சொன்னான். சாரதா அப்பொழுது தான் செங்கமலம் இடது கையை வயிற்றோடு சேர்த்து வைத்திருப்பதையும், அதன் வளைந்த விரல்களுக்குள் இருந்த பந்தையும் கவனித்தாள்.

அத்தை அவ நல்லா விளையாடுறா. எங்ககூட சேர்ந்து இன்னும் கொஞ்சம் நேரம் கிரிக்கெட் விளையாடிட்டு வீட்டுக்கு வருவா அத்தை. நானே கொண்டு விடுறேன் அத்தை. ப்ளீஸ்.” வேலன் கெஞ்சினான்

சாரதாவும் எதுவும் பேசாமல் தலையாட்டிவிட்டு திரும்ப வந்துவிட்டாள். மைதானத்தை விட்டு வெளியே வருகையில் திரும்பி செங்கமலத்தை ஒருமுறை பார்த்தாள். அதற்கு முன்னால் செங்கமலத்தின் முகத்தில் அப்படி ஒரு பூரணமான பூரிப்பை சாரதா பார்த்திருந்ததில்லை.

அன்றைய ஆட்டம் முடிந்து வீட்டிற்கு வந்தபொழுது, பந்தை தான் வேண்டுமென்று பிடிக்கவில்லை.வயற்றில் பந்து பட வலி பொறுக்காமல் வயிற்றுக்கு கைக்கொண்டு போனதில் தனது வளைந்த விரல்களுக்குள் பந்து சிக்கிக் கொண்டது என்ற உண்மையை சாரதாவிடம் சொல்ல வாயெடுத்து பின் வேண்டாமென்று தன்னைத்தானே அடக்கிக்கொண்டாள் செங்கமலம். அடுத்து வந்த விடுமுறை நாட்களில் வேலனின் குழுவோடு கிரிக்கெட் ஆடப்போவது செங்கமலத்தின் வழக்கமாக மாறியிருந்தது

என்ன இப்பெல்லாம் உன் மக கிரவுண்டே கதின்னு கிடக்கா.என்று கேட்ட கணவனிடம்வேலன் பார்த்துகிடுவான்.” என்றாள் சாரதாசெங்கமலம் வயதிற்கு வரும் வரையிலும் அவளின் கிரிக்கெட் ஆட்டம் தொடர்ந்து கொண்டிருந்தது

காலத்தின் வேக சுழற்சியில் ஆளுக்கொரு பக்கமாக ஓட ஆரம்பித்திருந்தார்கள். பத்தாம் வகுப்பு பாடத்தை பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு விடுமுறையில் நடத்த ஆரம்பித்திருந்தபொழுது, வேலனின் வீட்டிற்கு அவனது பத்தாம் வகுப்பு புத்தகங்களை கேட்டு செங்கமலம் போயிருந்தாள். வீட்டில் வேலன் மட்டும் தனியாக இருந்தான். அம்மாவும் அப்பாவும் தூரத்து உறவுமுறை திருமணத்திற்கு போயிருப்பதாக சொன்னான். செங்கமலத்திற்கு பிஸ்கட்டும் தண்ணீரும் சாப்பிடக் கொடுத்தான். அவள்  வேண்டாமென்று மறுத்தபோதும்  விடாமல் வற்புறுத்தினான். “எனக்கு காப்பி போட தெரியாது.” என்று மேல்வரிசை தெத்திப்பல் தெரிய சிரித்தான்

அவள் கேட்டிருந்த புத்தகங்களோடு சேர்த்து, கைடு, கொஸ்டின் பேப்பர்ஸ் என்று எல்லாவற்றையும் எடுத்து அடுக்கினான். “அந்த கொஸ்டின் பேப்பர்ஸ் ரிபிடெட் கொஸ்டின்லாம் தனியா மார்க் பண்ணிருக்கும்.” என்றபடியே அவனே வாசல் வரை புத்தகங்களை எடுத்து வந்து கொடுத்து வழியனுப்பி வைத்தான். அடுத்தடுத்த வருடங்கள் பதினொன்று பன்னிரெண்டாம் வகுப்பு புத்தகங்களையும் செங்கமலம் வேலனிடம் தான் வாங்கினாள்.

சென்னையில நல்ல காலேஜ்ல எனக்கு இடம் கிடைச்சிருக்கு. நீயும் நல்லபடி. நிறைய மார்க் எடுத்து சென்னைக்கு வந்திரு.” பன்னிரெண்டாம் வகுப்பு புத்தகத்தை செங்கமலத்தின் கையில் கொடுக்கும்பொழுது சிரித்த முகத்தோடு சொன்னான் . அவளும் தலையாட்டினாள்

தேங்க்ஸ் வேல் அண்ணன்என்ற வழக்கத்திற்கு மாறாக இம்முறைதேங்க்ஸ் வேலா.” என்றாள்

முதல் முறை விடுமுறைக்கு ஊருக்கு வந்திருந்த பொழுது, சைக்கிளில் செங்கமலத்தின் வீட்டைக்கடந்த பொழுது, தெருவை விட்டுவிட்டு வேலனின் பார்வை செங்கமலத்தின் வீட்டிற்குள் நுழைய முயற்சித்து அடைத்திருந்த வாசல் கதவில் மோதி திரும்பியதுதாழ்வாரத்தில் பச்சை நிற குட்டி நாற்காலி ஒன்றை  கற்பனை செய்து பார்த்து மனதிற்குள் புன்னகைத்துக் கொண்டான்

இரண்டாம் விடுமுறையில் வேலனின் கூறுபோடப்பட்டிருந்த உடலை செங்கமலத்தின் வீட்டு வாசலைத் தாண்டி சுடுகாட்டிற்கு தூக்கிக் கொண்டு போன பொழுது, செங்கமலம்  திரண்டு வந்த மொத்த அழுகையையும் அடக்கிக்கொண்டு நின்றிருந்தாள்

லீவுக்கு வந்தப்பய வந்தமா போனமான்னு இல்லாம ஆத்துல குளிக்க போறேன்னு இப்படி வம்பா உயிர விட்டுட்டானே.

பழகுன ஆத்துல குளிக்கவே வேகம் பார்த்து இறங்கனும். இவனுக இப்படி எங்கேயோ கிடக்க ஆத்துக்கு போலாமா. அதுவும் அது காவு வாங்குக ஆறுன்னு பச்சை பிள்ளைக்கு கூட தெரியுமே.”

இந்த காலத்து பிள்ளேலுக்கு எல்லாமே அசால்ட் தான். அந்த ஆத்துக்கு போறதா சொன்னா வீட்டுல விடமாட்டாகன்னு பொய்ய சொல்லிட்டு போயிருக்காணுக.”

அவனுகள சொல்லியென்ன. விதி. எமன் புறப்டுட்டா நீ புடிச்சா நிப்பானா நான் புடிச்சா நிப்பானா.

ஊர்காரர்கள் ஆதங்கப்பட்டுக் கொண்டிருந்தார்கள்

அதற்குபிறகு எங்கு ஆற்றைப் பார்த்தாலும்  வேலனின் உடலை ஆற்று சுழலில் இருந்து மீட்டு, நாக்கு வெளியே தள்ளிய நிலையில் பாறையில் போட்டு வைத்திருந்த புகைப்படத்தை செய்தித்தாளில் பார்த்தது செங்கமலத்தின் மனதிற்குள் ஆழமாக இறங்கி ஈட்டி வீசிக்கொண்டே இருந்தது. கரைபுரண்டு ஓடும் ஆற்றின் வேகத்தை அவள் மொத்தமாக வெறுக்க ஆரம்பித்திருந்தாள். லட்சுமிக்கு புத்தி பேதலித்து விட்டதாக ஊர்க்காரர்கள் பேசிக் கொண்டார்கள்.

கல்லூரி, வேலை, சென்னை வாசம் என்று வாழ்க்கை அதன் போக்கில் அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்ந்து கொண்டிருந்தாலும் வேலனின் இழப்பின் வலி செங்கமலத்திற்குள் ஆழ இறங்கியிருந்தது. வேலனின் அப்பா லட்சுமியை அழைத்துக் கொண்டு ஊரைவிட்டுப் போய் லட்சுமியின் பிறந்த வீட்டில் இரண்டு வருடங்கள் தங்கி இருந்தார். அதற்கும் எந்த பயனும் இல்லாமல் போக, மீண்டும் அவளை அழைத்துக் கொண்டு அவர்கள் வீட்டிற்கே வந்துவிட்டார்

***

கோவிலில் லட்சுமியை பார்த்ததை , அவள் எதுவும் புரியாத ஒரு குழந்தையைப் போல வேலனின் அப்பாவின் கையை பற்றிக் கொண்டு நின்றதை எதையும் செங்கமலத்திடம் சொல்லக் கூடாதென்று சாரதா உறுதியாக முடிவெடுத்திருந்தாள்

இதுக்கு முன்னாடி வந்த மாப்பிள்ளை வீட்டுக்காரங்கள மாதிரி இவங்களும் சென்னையிலேயே வந்து பார்த்திட்டு போயிருந்தா இங்கன வந்திருக்கவே வேண்டாம்.”

சொந்த ஊருல தான் வந்து பார்ப்போம்னு அவகளுக்கு அப்படி என்ன அடமோ.

சிந்தனையிலிருந்து மீண்டு  சாரதா அடுப்படியிலிருந்து  எட்டிப் பார்த்த பொழுது, எந்த சேனலிலும் கவனம் குவியாமல் ரிமோட்டை மனம் போன போக்கில் அழுத்தியபடி டிவி முன்னால் அமர்ந்திருந்தாள் செங்கமலம்.

என்ன பலத்த யோசனை எதோ ஓடுகு?”

ஒண்ணுமில்லம்மா.

சரி வெளியில கொடியில கிடக்க துணிய எடேன். பால் கட்டி நிக்க முலை மாதிரி வானம் அடச்சிட்டு நிக்கு.திடீர்னு கொட்டிரும். ‘

ம்ம்ம்.” 

 கொடியில் கிடந்த துணிகளை இடது கை மணிக்கட்டில் நிரப்பிக் கொண்டே அடுத்தடுத்த துணிக்கு செங்கமலம் நகர்ந்து கொண்டிருக்க, வேலனின் அப்பா லட்சுமியை தோளோடு அணைத்துப் பிடித்தபடி தெருவில் நடந்துவந்து கொண்டிருந்தார்

வேலா…” பெருங்குரலெடுத்து செங்கமலம் அழ ஆரம்பித்திருந்தபொழுது, கூடி நின்றுக் கொண்டிருந்த கருமேகங்கள் பெரும் மழையாக பொழிய ஆரம்பித்திருந்தது

*******

npadmakumari1993@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button