சிறுகதைகள்

இருளில்லார்க்கு – அகராதி

சிறுகதைகள் | வாசகசாலை

அந்தி சாயும்போதே மலரத் தொடங்கி மயக்கம் வரச் செய்யும் மணத்தை வீசிக் கொண்டிருந்தது மல்லி. இந்தச் செடியைப் பார்த்துப் பார்த்து நட்டு ஆறு மாதங்கள் இருக்குமா? இதில் மலர்ந்த முதல் பூவுக்கு ஏதோ விருது பெற்றக் கணக்காகத் துள்ளின அவள் விழிகள். இதோ, இப்போது படர்ந்து நிறையப் பூக்கின்றன. பறித்துத் தொடுத்து வைத்துக்கொள்வதெல்லாம் அரிதாகத்தான். பல நேரங்களில் அப்படியே பறித்துப் படுக்கையில் பரத்திக்கொள்வாள். அவற்றுடன் படுத்துக்கொள்கையில் ஒரு மோனநிலைச் சிரிப்பு வேறு முகத்தில் ஒட்டிக்கொள்ளும். எரிச்சலாயிருக்கும். பாதி இரவில் தனியே போய் தோட்டத்தை, வானத்தைப் பார்த்துக்கொள்ளும் பழக்கம் வேறு இருக்கிறது.

அது என்ன இருட்டைப் பார்த்து அப்படி ஒரு சிரிப்பு மோகினிப் பேயாட்டம்! எதுவும் திட்டவும் சலித்துக்கொள்ளவும் முடியாது. அவள் உண்டு அவள் வேலை உண்டு என்றிருப்பாள். வாய்த் திறந்து கொட்டுவதில்லை வார்த்தைகளை. எப்போதாவது போடும் சண்டையில், எடுத்துவைக்கும் வாதங்களில், நம்மால் வாயே திறக்க முடியாது. கோபம்தான் கண்ணை மறைக்கும். பல்லைக் கடித்துக்கொண்டு வெளியே சென்றுவிடுவேன். பஸ்ஸில் போக ஆரம்பித்தால், ஜன்னலின் பக்கம் போகும் பார்வைத் திரும்பவே திரும்பாது. எதுவும் கேட்க வேண்டும் என்றாலும், இரண்டு முறை கூப்பிட்டுக் கூப்பிட்டு பேசவேண்டும். அலுக்காமல் வேடிக்கைப் பார்த்துக்கொண்டே வரமுடியுமா? கண்ணெல்லாம் எரியாதா? செடி, கொடி, மரம், ரோட்டை அவ்வளவு நேரம் பார்க்க என்ன இருக்கிறது? சில நேரம் பார்வை அப்படியே நிலைக்குத்திவிடும். கண், கழுத்துதான் வலிக்காதோ? ரிட்டர்ன் வருகையில் எதிர்வரிசை இருக்கையில் அமர்ந்து பார்க்கத் தொடங்கிவிடுவாள் கழுத்து வலியை பேலன்ஸ் செய்கிறாளாம். வேடிக்கை பார்ப்பது மட்டும் குறையாது. என்ன மனசோ!

சாயங்காலவேளையில் வெளியில் வந்தால், வானத்தைப் பார்த்துப் பார்த்து நடந்துகொண்டிருப்பது, சாயங்கால வானத்தில் அப்படி என்னதான் இருந்து தொலையுமோ? ஏதாவது வாகனத்தில் போய்க்கொண்டிருக்கையில் என்றால்கூட பரவாயில்லை. ரோட்டில் நடக்கும்போதே இப்படிக் கண்கள் வானேகும். வீடு கொண்டுவந்து சேர்ப்பதற்குள் தலைவலி எடுத்துவிடும். இதற்காகவே ஏதாவது வாகனத்தில் போவது வழக்கம். நாம் கண்டிக்கும்போது, முறைத்துப் பார்க்கும்போது, ஒரு சிரிப்பு! ஏளனமா சமாளிப்பா என்று தெரியாமல் பேயே என்று மனதுக்குள் திட்டிக்கொண்டு நகர்ந்துவிடுவேன். சாத்தானாய் ஜனித்திருப்பாள் போனப் பிறவியில்…

இரவு உணவுக்குப் பின்னர் வழக்கமான நடைப்பயிற்சிக்குச் சென்றுவிட்டு வீட்டுக்குள் நுழையும்போது, நன்கு மலர்ந்துவிட்டிருந்த மல்லி வாசம் வீசிக்கொண்டிருந்தது. நிலவொளியிலும் போதாமையான விளக்கொளியிலும் இலைகளின் பச்சை நிறம் அமுங்கி, மலர்களின் வெள்ளை வண்ணம் மட்டும் ஆங்காங்கே தெரிகிறது. பறிக்கையில் விடுபட்ட மலர்களோ, பறிக்கவேயில்லையோ தெரியவில்லை. அமைதியாயிருந்தது வீடு.

விளக்குகள் அணைக்கப்பட்டு இருந்தன. எங்கள் அறையில் மட்டும் ஒரு லைட் ஒளி விட்டுக்கொண்டிருந்தது.

பாத்ரூம் சென்றுவந்து வீட்டுக் கதவு, இரும்புக் கிராதி, பின்பக்கக் கதவு எல்லாம் பூட்டி, சாவிக்கொத்தை ஆணியில் மாட்டிவிட்டு அப்படியே சோஃபாவில் சாய்ந்தேன். செய்திச் சேனல்கள் ஓவ்வொன்றாய்ப் பார்த்துக்கொண்டே வந்தேன். ஆரம்பத்தில் அவள் ஏதாவது நிகழ்ச்சியைப் பார்த்துக்கொண்டிருக்கையில், நான் சேனல்கள் மாற்றினால் முறைப்பாகத் திரும்பிப் பார்த்தவள், இப்போதெல்லாம் எந்த பாவனையும் காட்டாமல் எழுந்து போய்விடுவாள். கேட்டால் குறைந்து போய்விடுவாளா? திமிர்! நானாகவே போய் ரிமோட்டைக் கொடுக்க வேண்டும். பக்கத்தில் வைத்துவிட்டு நகர்ந்துவிடுவேன். நண்பர்கள் வீட்டிலோ ரிமோட்டுக்கு நடக்கும் சண்டையைக் கதை கதையாகக் கூறுவார்கள். நமக்கு இப்படி ஒரு கல்லுளிமங்கி!

எவ்வளவு நேரம் சேனல்களை மாற்றி மாற்றி பார்த்துக்கொண்டிருப்பது? இப்போது செய்திப் பசி தீர்ந்துவிட்டது. அறையில் இருக்கிறாள். தூங்கினாலும் தூங்காவிட்டாலும் அமைதியாய் இருக்கும் அறை. உள்ளே நுழைந்து முதல் வேலையாக மின்பொத்தானை அழுத்த, அறையின் மின்ஒளி நின்றது. கண்கள் இருட்டுக்குப் பழக்கமாகும் வரை நின்று, பிறகு அவளுக்கு அருகில் அமர்ந்தேன். தூங்குகிறாளா விழித்திருக்கிறாளா? கண்கள் மூடியிருந்தன. நெகிழ்த்து, கிளர்த்து, இறுக்கு, நுகர், கரை எனக் கூறிக்கொண்டிரூந்தது உடல். ஆம்! கட்டிலில் மலர்ந்திருந்த பெண் உடல். விழிகள் மூடியுள்ள முகம் தேஜஸ் அளிக்க இயலுமா? இயன்றது. ஒளி அள்ளித் தெளித்தது. மூடிக்கிடந்த விழிகள் பனிக்குடத்துக்கு அசையும் குழந்தையாக நகர்வது, மாதுளை, கொய்யா மரங்கள் ஊடுருவி படுக்கையறை ஜன்னல் வழி வருகின்ற தெருவிளக்கின் மஞ்சள் ஒளியில் தெரிகிறது. விழித்திருக்கிறாள்!

ஓர்மையில் குவித்து உயரம் எழுப்பி விடுவிக்க என்னால் ஆகுமா?
மலர்ந்ததைச் சுருக்குகிறது.

இரவு தன் கருஞ்சிறகுகளுக்குள் கொண்டுவந்த உலகை ஆளத் தொடங்குகிறது.

நேரம் 11.50

பெண் ஆரம்பம், பெண்ணே முடிவு. ஆணாகப் பிறந்தவன் நான். பிரபஞ்சமாய் விரியும் பெண்ணுலகு எனக்குப் பயத்தையே கொடுத்துக்கொண்டிருக்கிறது. பெண்ணை ஆண்டான், ஆண்டான் என்கிறார்கள் சர்வசாதாரணமாக… ஒரு துண்டு நிலத்தை ஆள்வதைப் போல. அப்படிச் சொல்லி நம்பவைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு அசாதாரணமானப் பொய் இன்னும் இருந்துகொண்டிருக்கிறது, தன் ஆயுளை முடித்துக்கொள்ளாமல். இல்லை! பெண்ணே இருக்க வைத்திருக்கிறாள் போலும். தனக்குள் நமுட்டுச் சிரிப்புச் சிரித்து வேடிக்கை பார்த்துக்கொள்ள. திரும்பவும் இவள் போனப் பிறவியில் சாத்தானாக இருந்திருக்கலாம் என்ற எண்ணமே தோன்றுகிறது. இப்படி மனதை ஆட்டுவிக்கிறாள்! படுத்திருந்தவள் எழுந்து நெருங்கி இயல்பானவள் போல ‘தூக்கம் வருது தூங்கறேன்’ என்கிறாள். ‘ம்ம்ம்’ என்று வெளிவருகிறேன்.

நாளை மீண்டும் உடல் மலரும்.

என் மனது வருந்தகூடாது, அல்லது தெரிந்துகொள்ளக்கூடாது என்று அவள் தூங்குவது போல பாசாங்குவிக்க, நானே இடைஞ்சலாக வேண்டாமே என்று இந்த வெளியேற்றம். அங்கொன்றும் இங்கொன்றுமாக நட்சத்திரங்கள் நீந்திக் கொண்டிருக்கின்றன மேகத் திரள்களிடையே. ஜூன் மாத வெப்பத்திலும் இந்த நேரம் கொடுத்த ஜில்லிப்பு மூக்கநுனித் தொட முயற்சித்தது. அவளானால் இந்நேரத்துக்கு இங்கிருந்தால், இப்போது கன்னத்தை இரும்புக் கிராதியில் வைத்துச் சிறிதாகச் சிரித்திருப்பாள். எனக்கு ஒரு போதும் அப்படித் தோன்றியதேயில்லை. ஆளில்லா நேரங்களில் பூக்களுக்கு முத்தம் கொடுப்பதை, படுக்கையறையின் ஜன்னல் வழியே பார்த்திருக்கிறேன். எப்படிப் பிள்ளைப் பிராயம் இவளிடம் விலகாமலிருக்கிறது? நான் சலித்துக்கொள்வேனென்றோ, கோபப்படுவேனென்றோ தனியாகத்தான் இப்படி நடந்துகொள்கிறாள். அப்படி இப்படி என்று கண்களில் படுவதுண்டு. நட்சத்திரங்கள் பெருகி இருந்தன. இப்போது நீந்தாமல் அப்படியே இருப்பது போலத் தெரிகிறது.

தூங்கியிருப்பாளா? தூங்கி இருப்பாள். சில நேரங்களில் முடிந்து பிரிந்து படுத்திருக்கையில் அவளின் விழிப்பு, அசையும் கொலுசின் சத்தம் வாயிலாக முள்ளாய் உறுத்தும். எப்படிக் கேட்பது? எப்படிக் கேட்டாலும் சமாளிப்பாள். ஓரிரு வார்த்தைகள்தான் வரும். எதையாவது கேட்டு எதையாவது பதில் வாங்கி, குழப்பத்தோடு கண்ணை இழுக்கும் தூக்கத்தை நிறுத்தி, அவளைக் கவனித்தால் தூங்க ஆரம்பித்து இருப்பாள். அப்பாடா என்றிருக்கும். நான் நோயாளி இல்லை, இயலாதவன் இல்லை. ஆர்வம் இல்லாதவனும் இல்லை. ஆனாலும், நிறைவளித்தேனா தெரியவில்லை. இவளானால் எல்லாவற்றுக்கும் சமனாகவே பதில் கூறிவருகிறாள். நான் எதுவும் பேச்சுக் கொடுக்காவிட்டால், அவளின் விழிப்பு இன்னும் சற்றுநேரம் இருந்திருக்கும். எனக்கோ கழிவுநீக்கம்தான் என்பது போல சட்டென தூக்கம் வந்து தொலைந்துவிடுகிறது. ஆயிரம் யோசனைகள், ஆயிரத்தோரு மருத்துவர்கள் இருந்தும் சந்தேகம் என்னவோ தீர்ந்த பாடில்லை ஆணுக்கு.

முன்பொரு முறை யாரிடமாவது பேசவேண்டும் போலத் தோன்ற, பன்னிரண்டு வருட நண்பன் ரகுவிடம் பேச்சுக் கொடுத்தேன், “அட, என்னடா இதுலாம் பேசிக்கிட்டு? எரக்ட் எஜக்ட்னு தூங்கினோமானு இல்லாம… நினச்சாலே ஜகஜகானு இருக்கு.” – அவன்தான் ஒரு முறை கண்ணடித்தவாறு கூறினான். அதுவும் நாங்கள் ஊர்க்கார நண்பர்கள் நான்கு பேர் சுற்றி இருந்தோம், “நான்லாம் சாயந்திரம் ஆனாலே ரெடியாயிடுவேன்.”

ஒவ்வொருவரும் தனியல்லவா? அவரவர் தனிப்பட்ட விருப்பம் என்னவென்று அவரவர்தான் அறிவர். மகிழ்ச்சியாக இருப்பது போலக் காட்டிக்கொள்ளுதல் எளிதுதானே?

உடலெங்கும் முத்திடுவது பிடிக்குமென்றாள் மிக ஆரம்ப நாட்களில். சினிமா பாடல் காட்சி ஒன்றில், காலிலிருந்து துவக்கம் என்பதாக ஹீரோயின் கொலுசை சிணுக்கியபடி இருப்பான் ஹீரோ. அதன் ஞாபகத்தில் காலிலிருந்து என ஆரம்பித்தேன். அவள் முகம் அத்தனைத் திருப்தி தருவதாக இல்லை. ஆசை உந்துதலில் ஆடைகளை வேகமாகக் களைத்துத் தூங்கி எழுந்தப் பிறகு, காலை வந்திருந்த செய்தித்தாளில் ஒரு விளம்பரப் படத்தின் மேல், பென்சிலில் அழுத்தமாக எழுதி இருந்தாள். `களைதல் என்பது மலர்வித்தல்.’

இதுபோன்ற கிறுக்குத்தனமான வரி, வார்த்தைகளைப் பார்க்கையில் அயற்சியாக வரும். அந்த நேரங்களில் கோபமாக, வேகமாக என்று நடந்துகொள்ளத் தொடங்கினேன். எரிச்சல் மண்டியது. எப்படித்தான் நடப்பது? எப்போதோ ஒருமுறை விடியற்காலைப் பொழுதொன்றில்,
பைத்தியம் போல அவள் கைகளைக் காட்டி,“இது எல்லாம் பூக்கள் தெரியுமா?” என்றாள். “லூசா நீ” என்றபோது, அசாத்தியமானச் சிரிப்பொன்றை அளித்து…

“உடம்பெல்லாம் மொட்டுகளா இருக்கு. அத மலர்த்தினா வாசம் கிடைக்கும்” என்றாள். முறைத்து திரும்பிப் படுத்தேன். முட்டிக்கொண்டு வந்த கோபத்தை கட்டுப்படுத்தி, பாதி இரவு தனியே திட்டிக்கொண்டிருந்தேன்.

சில வருடங்களுக்குப் பிறகு வேறு வழியேயின்றி, அலுவலக நண்பனுடன் நடந்த உரையாடலின் விளைவாக, முத்திட கை, முகம் என்று கால் விரல்களுக்கு நகர்கையில், மனது இறங்கவே மாட்டேன் என்றது. வீணையின் ஒரு கம்பியைச் சுண்டினார் போல ஒரு மெல்லியத் துள்ளல் ஸ்வரத்தோடு தீண்டுகையில், அவள் உடம்பின் பாகங்களுக்கு… அவள் பேசாவிட்டாலும் அவளது உடல் பேசிக் கொல்கிறது. நெருங்குகையில் அதனின் எதுவோ தயக்கமடைய வைக்கிறது. ஒரு சில முத்திடலுக்கு மேல் அளித்திட இயலாமற்போக, முகம் பாராதுதான் தொடர்ந்திட வேண்டியிருக்கிறது.

“இன்னுமா தூங்கல? டைமாகுதே” உள்ளிருந்து குரல் வருகிறது.

அடர்ந்த ஆற்றல்கொண்ட தூய இருள் விட்டுக்கொடுத்து விலக, தயங்கித் தயங்கி மெது மெதுவாகக் கதிர்களைப் பாய்ச்சுகிறது ஒளி.

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button