
பிறந்ததிலிருந்து இறப்பது வரை எல்லாமே நமக்கு இசைதானே…எல்லாத் தருணங்களிலும் ஏதோவொரு திரைப்படப் பாடல் நம் மனதில் ஓடிக்கொண்டே இருப்பதை நம்மால் தவிர்க்க இயலுமா?என்னால் கண்டிப்பாக முடியாது.ஏனெனில் தமிழ்த் திரையிசைப் பாடல்கள் நம் மக்களிடையே ஏற்படுத்தியுள்ள தாக்கம் அப்படி. காட்சிக்கான சூழலுக்குத் தக்கபடி கதாபாத்திரங்களின் அப்போதைய மனநிலையைப் பிரதிபலிப்பது மாதிரியான பாடல்கள் வாழ்வில் நாம் எதிர்கொண்ட தருணங்களை நமக்கு எப்படியோ நினைவூட்டிவிடுகின்றன.ஒரு இசைத் துணுக்கு அல்லது பாடலில் இடம்பெற்ற ஒரே ஒரு வரி என ஏதோவொரு புள்ளியில் சில பாடல்கள் நம் மனதில் நீங்கா இடம்பிடித்து விடுகின்றன.அப்படிப்பட்ட பாடல்கள் குறித்தும் அவை எனக்குள் உருவாக்கிய உணர்வலைகள் குறித்தும் இந்தத் தொடரில் உங்களுடன் பகிர்ந்துகொள்ள இருக்கிறேன்.அமைதியான பொழுதுகளில் தூரத்தில் கேட்கிற குருவியின் இசையாய் இக்கட்டுரைகளின் வழியே உங்களுக்குப் பிடித்தமான பாடல்களையும் உங்களிடம் வந்து சேர்ப்பேன் என நம்புகிறேன்.
இறந்த தன் காதலியைப் பற்றி காதாநாயகனின் கற்பனையில் வரும் பாடல் இது.
படம்: சர்வம்
பாடல்: சிறகுகள் வந்தது எங்கோ செல்ல…
பாடலாசிரியர்; பா.விஜய்
இசை; யுவன் ஷங்கர் ராஜா
இயக்கம்; விஷ்ணுவர்தன்
“உலகம் ஓர் புள்ளியாகுதே
நெஞ்சம் எங்கோ மிதந்து போகுதே
உயிரில் ஒரு பூ வெடிக்குதே
சுகமோ வலியோ எல்லை மீறுதே”
இந்த வரிகளுக்குள், வார்த்தையில் அகப்படாத ஒரு சுகமும் ,வலியும் சேர்ந்தே இருக்கிறது. ஒவ்வொரு முறை இதைக் கேட்கும்போதும் முதல் முறையாக கேட்பதைப் போன்ற உணர்வைக் கொடுக்கிறது.
இந்தப் பாடல் முழுவதுமே சுகமும் வலியும் சேர்ந்தே வரும்…..
காதலை உணர்ந்த அந்த,”ஒரு நொடிப்பொழுதை” வகுத்து ,உணர்வுகளைக் கோர்த்து , அதே நேரம் அவள் இல்லாத அவன் வாழ்க்கையின் நிலை எப்படி இருக்கும் என இந்தப் பாடல் சொல்கிறது.
அவள் இறந்து போனாலும் அவளுடைய நினைவுகளைச் சுமந்து அவன் வாழ்கிறான். அந்த நினைவுகள்தான் அவனுடைய இன்பம், வலி, ஏக்கம், காதல், கண்ணீர் எல்லாம்… .அதுவே அவன் ஆயுளின் நீட்சி.
நம் மனதுக்கு மிகவும் நெருங்கிய ஒரு நபர் நம்மை விட்டுப் பிரிந்தால், நாம் பார்க்கின்ற, எதிர்கொள்கின்ற ஏதேனும் ஒரு விடயத்தில் அவர்களின் சாயலை நாம் உணர்கிறோம். அதேபோல்தான் இவனும். தான் காதலித்த பெண்
இந்தத் தருணத்தில் உயிரோடு இல்லையென்றாலும், அவளுடைய இதயம் தற்போது ஒரு சிறுவனுக்குப் பொருத்தப்பட்டிருக்கிறதென்று தெரிந்ததும், அவன் முகத்தில் ஒரு அதிர்ச்சியும் சந்தோஷமும் ததும்பும்.
அந்தச் சிறுவனுக்குள் பொருத்தப்பட்டிருக்கும் அவளின் இதயம் வெறும் சதையோ இரத்தமோ அல்ல. அவனைப் பொருத்தவரை அது அவனுடைய காதலி சந்தியா.
இனி அவள் தன்னுடனே வாழப்போகிறாள் என அவன் நினைத்துக்கொண்டு, அந்தக் கற்பனையில் அவன் தன்னை மறக்கும்போது வரக்கூடிய பாடல் தான் இது.
“சிறகுகள் வந்தது எங்கோ செல்ல
இரவுகள் தீர்ந்த்து கண்ணில் மெல்ல
நினைவுகள் ஏங்குது உன்னைக் காணவே
கனவுகள் பொங்குது எதிலே அள்ள
வலிகளும் சேர்ந்த்து உள்ளே செல்ல
சுகங்களும் கூடுது உன்னைத் தேடியே”
இங்கு அனைவருக்குமே ஒரு தேடல் இருக்கின்றது. அதனை நோக்கித்தான் அவர்களது வாழ்கை நகர்ந்து செல்லகிறது. இங்கே இவனுடைய தேடலின் தூரம்தான் இவன் வாழ்கையின் தூரமும். தான் காதலித்த பெண் உயிரோடு இல்லை, ஆனால் அவள் ஏதோ ஒரு உடல் மூலமாக இப்போது வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறாள் என்று தெரிந்ததும் அவனுக்குள் அத்தனை சந்தோஷம்….அவளின் வாசம் தீண்டும் தூரத்தில் அவன் இருப்பதாக ஒரு பிரம்மை.
அவளைத் தேடிப் போகவேண்டும், இரவு பகல் கடந்து அவள் இருக்கும் இடத்தை அடைந்து ஒரு எல்லையில்லாத சந்தோஷத்தை அவன் உணரவேண்டும் என்று நினைக்கின்றான்.
முழுவதும் வெறுமையான, வெண்மையான வறண்ட நிலத்தில் அவன் கற்பனையில், அவர்களிருவரும் கரு நிற உடையில் இருப்பதாய் பாடல் துவங்கும்.அவனுடைய வலியையும் சோகத்தையும் கருமை நிறம் கொண்டு வெளிப்படுத்தியிருப்பார்கள்.
“ஓ நதியே நீ எங்கே என்று கரைகள் தேடக்கூடாதா
நிலவே நீ எங்கே என்று முகில்கள் தேடக்கூடாதா”
பொதுவாக நம் இலக்கியங்களில் கடல்,மேகம்,காற்று போன்றவற்றை காதலிக்கும் தலைவனோ / தலைவியோ தன் காதலைப் பிரிந்திருக்கும் போது தூதாக அனுப்பி அவர்களை விரைவில் தன்னிடம் வந்து சேருமாறு பாடுவார்கள். ஆனால் இங்கே அவன் எப்படி அவளைத் தேடி அலைகிறானோ அதேபோல் இந்த நதியும் நிலவும் அவளைத் தேடி அலைந்து அவனுக்கு உதவக்கூடாதா என்று கேட்கிறான்.
“மழை இரவினில் குயிலின் கீதம்
துடிப்பது யார் அறிவார்
கடல் மடியினில் கிடக்கும் பலரின்
கனவுகள் எவர் அறிவார்”
“மழை இரவினில் குயிலின் கீதம் துடிப்பது யார் அறிவார்?” இந்த வரியில் சொல்வதைப் போல் இருள் மழையில் அழுகிற குயிலுடைய சத்தத்தை யாராலும் கேட்க முடியாது. தன்னுடைய சோகம் தனக்கு மட்டுமே தெரியும் என்பதைப் போல் அந்தக் குயிலுக்கு மட்டும்தான் அந்த வலி புரியும்.
அதேபோல் அவனுடைய சோகம் அவனுக்குள் இருக்கும் அவளுக்குத் தெரியும்…
அவளுக்கு வேண்டியதெல்லாம் அவனுடைய சோகங்களை அகற்றி அவனை மீண்டும் சந்தோஷமாகப் பார்க்கவேண்டும் என்பதே…இதையும் அழகாக பாடலில் காட்சிபடுத்திருப்பார்கள்.
அவனுடைய சோகங்கள் எல்லாம் அவள் உள்வாங்கிக்கொள்வது போல் அவளைச் சுற்றி இருக்கும் கரு நிறத் துணி காற்றோடு அவளைச் சூழ்ந்து ,இறுதியில் அவையனைத்தும் அவள் மேலே விழும்…
“அழகே நீ எங்கிருக்கிறாய்
வலித்தால் அன்பே அங்கிருக்கிறாய்
உயிரே நீ என்ன செய்கிறாய்
உயிரின் உள்ளே வந்து செல்கிறாய்”
அவனுக்குள் இருக்கும் அவளை அவன் உணரத் துவங்கும்போது, “வலித்தால் அன்பே அங்கிருக்கிறாய்” என்ற வரி வருகிறது. தன் உணர்வுகளோடு அவள் கலந்துவிட்டதாய் அவனுக்குள் தீர்க்கமான எண்ணம் வரும். அது வரை வெண்ணமையாக இருந்த நிலத்தில் ஒரு திறந்த கதவு இருக்கும்..
“உயிரின் உள்ளே வந்து செல்கிறாய்…” நம் மனதுக்கு பிடித்த ஒருவர் நம் அருகே இல்லையொன்றாலும் அவருடைய குரலோ வாசமோ நம் எண்ணத்தில் இருந்துக்கொண்டேதான் இருக்கும். அவனுக்கும் அதேபோல் ஒரு எண்ணம்.அவனைச் சுற்றி அவளின் சாயல் இருந்துக்கொண்டே இருப்பதாய் ஒரு நினைப்பு.காட்சியில் வரும் அந்த திறந்த கதவிற்குப் பின் இருவரும் ஒன்றாய் இருப்பதாய் இருக்கும்.அதில் அவனுடன் அவள் வந்து சேரந்து விட்டதாய் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.
“எனக்கே நான் சுமையாய்
மாறி என்னைச் சுமந்து வந்தேனே
உனக்கே நான் நிழலாய் மாறி
உன்னைத் தேடி வந்தேனே”
தன்னுடலே தனக்கு பாரமாய் மாறி அவளத் தேடி சுற்றி அலைந்து அவளைக் கண்டதும், அவளுக்கு அவன் நிழலாகி அவள் போகும் வழியில் தன் வாழ்வை நகர்த்திச் செல்ல நினைக்கின்றான்.
“விழி நனைந்திடும் நேரம் பார்த்து
இமை விலகிவிடாது
உயிர் துடித்திடும் உன்னை
எந்தன் உயிர் ஒதுக்கி விடாது”
கண்கள் கலங்கி இருக்கும்போது அந்த வலிகளை கண்ணீராக வெளிக்கொண்டுவரும் இமைகளைப் போல அவனுடைய சோகங்கள், காயங்கள் அத்தனையயும் அவள் அவனிடமிருந்து களைகிறாள்.
“உலகம் ஒரு புள்ளியானதே
நெஞ்சம் எங்கோ மிதந்து செல்லுதே
உயிரில் ஒரு பூ வெடிக்குதே
சுகமோ வலியோ எல்லை மீறுதே”
அவள் ஏதோ ஒரு ரூபத்தில் இனி தன்னோடு இருப்பாள் என்ற சந்தோஷம் அவன் தலைக்கு ஏறி, அவனைச் சுற்றி இருக்கும் எதுவும் அவன் கண்களுக்குத் தெரியாமல் போனது.இந்த உலகமே ஒரு சின்ன புள்ளியாவும் இந்த உலகத்தை விட்டு ஒரு ராட்ஷச சந்தோஷத்தில் அவன் மனம் எங்கோ பறந்து செல்வதாய் ஓர் உணர்வு. இது வலியா ?சுகமா ? சரியாக கணிக்க முடியாத ஒரு எல்லலைக்குள் அவன் மனம் ஒரு திகைப்பில் ஆழ்ந்து மூழ்குகிறது.
இந்தக் காதலுக்கு என்றுமே முடிவென்பது இல்லாத ஒன்றுதான்.விருப்பத்துடனே இருவரும் விலகினாலும் ஏதோ ஒருநாள் அந்த நினைவுகளைக் கடக்க நேர்ந்துவிடும்.
சூழ்நிலையால் பிரிவைக் கண்டவர்களுக்கு தான் காணும் ஏதோ ஒன்றிலாவது தன் முறிந்த உறவின் சாயலைக் கண்டுவிட மாட்டோமா என்ற எண்ணம் இருந்துகொண்டுதான் இருக்கும்.
நினைவுகள் பொக்கிஷமாகவும் அதே நினைவுகள் காலப்போக்கில் ரணமாகவும் மாறுவது காதலில்தானே…
இங்கு இவனுக்கு மட்டும் இந்தக் காதல் வெயிலோடு மழையைக் கொடுக்கிறது. அவள் அவளாய் அவனுடன் இல்லாவிட்டாலும் , ஒரு சிறுவனின் உடலுக்குள் உயிராய் இருக்கிறாள்.அந்த சிறுவனுடன் எப்போதும் அவன் இருப்பான்.
பறத்தல் தொடரும்…