கவிதைகள்
கவிதை-வசந்ததீபன்

புயல்சின்னம்
முதுமக்கள் தாழிகளிலிருந்து
மீண்டெழுந்து வருகின்றன
மூதாதையர்களின்
பெருமூச்சுகள்.
கண்ணீர் புரண்ட
தரிசு நிலங்களின் வெக்கை
யுகம் யுகமாய்
வீசிக்கொண்டிருக்கிறது.
நான்மறைகள்
கழிவு நீரால் நனைபட்டு
தெய்வ நம்பிக்கைகளெல்லாம்
நாறுகிறது.
நீள் கூந்தல் மழிக்கப்பட்டு
இருள் கிடங்களுக்குள்ளும்..
புழைக்கடைகளுக்குள்ளும்..
தள்ளப்பட்ட அபலைகளின்
அல்லாடல்கள்..
தேம்பல்கள்..
கடிகாரங்களின் ஒலிப்போடு
எதிரொலிக்கின்றன.
வெற்றுப் பாத்திரங்களில்
தேங்கிக்கிடக்கும்
பசியின் ஓலங்கள்
வெறிகொண்டு குரைக்கின்றன.
புராணங்களிலிருந்து
பீறிட்டு வரும்
சொருபங்களின் மேல்
அர்ச்சிக்கப்பட்ட வாசமலர்கள்
பலியிடப்பட்ட
மிருகங்களின்..மனிதர்களின்
குருதியாற்றிலிருந்து
சுறாக்களாய் துள்ளுகின்றன.
பிரார்த்தனைகளால் தான்
வரலாற்றின்
தீராப்பகை
புரையோடிக்கொண்டிருக்கிறது.