கட்டுரைகள்
Trending

இசைக்குருவி (2) – “ஆத்தங்கர மரமே…”

சரண்யா தணிகாசலம்

“காத்திருப்புகளே காதலில் இனிமை. அதுவே பின் தவிப்பாகவும் மாறிவிடுகிறது. இந்தக் காத்திருப்புகளுக்கு உயிர்வார்ப்பவை நினைவுகள். தொலைத்தொடர்பு இல்லாத காலங்களில் காதலர்களின் காதல் கதைகளை சுமந்து செல்லும் தபால் பெட்டிகள் குலதெய்வங்கள். கடிதங்களின் இடைவெளியில் இரு உயிர்கள் காதல் கவிபாடும்.இந்த இடைவெளியே இருவருக்குமான நெருக்கங்களைக் கூட்டும்.

ஆனால் இங்கே இந்த இருவருக்கும் இடையில் அப்படியான கடிதங்கள் கிடையாது.குடும்பத்தின் சூழ்நிலையால் இருவரும் வெளிப்படையாக சந்திக்கவோ கடிதங்கள் மூலமாக காதலைப் பரிமாறவோ இயலாது. இந்த இருவருக்கும் இடையிலிருக்கும் காத்திருப்பு காதலால் நெய்தது.
சில வருடங்களுக்குப் பிறகு யாருக்கும் தெரியாமல் சந்தித்துக்கொள்கின்ற அத்தை மகளுக்கும், மாமன் மகனுக்கும் இருக்கும் காதல் உரையாடலே இந்தப் பாடல்.

படம்: கிழக்குச் சீமையிலே
பாடல்: ஆத்தங்கர மரமே
இசையமைப்பாளர்: ஏ.ஆர்.ரஹ்மான்
பாடலாசிரியர்: வைரமுத்து
பாடகர்கள்: மனோ ,சித்ரா
இயக்குநர்: பாரதிராஜா

“அத்தைக்குப் பிறந்தவளே
ஆளாகி நின்றவளே
பருவம் சுமந்து வரும்
பாவாடைத் தாமரையே
தட்டாம்பூச்சி பிடித்தவள்
தாவணிக்கு வந்ததெப்போ
மூன்றாம்பிறையே நீ முழு நிலவானதெப்போ
மௌனத்தில் நீயிருந்தா யாரைத்தான் கேட்பதிப்போ…”

அத்தனை வருடங்கள் கழித்து அவளைப் பார்க்கிறான். வயது, அவளின் அழகை பாவாடையிலிருந்து தாவணிக்கு குடிப்பெயர்த்தியிருக்கிறது. குறும்பாய் ஊரைச் சுற்றித் திரிந்தவள் இப்போது குமரியாய் இருக்கிறாள்.

“ஓடக்கர ஒழவுகாட்டுல ஒருத்தி
யாரு இவ வெடிச்சி நிக்குற பருத்தி
தாவிவந்து சண்டையிடும் அந்த முகமா
தாவணிக்கு வந்த ஒரு நந்தவனமா”

மென்மை தாளாமல் வெடித்த மொட்டிலிருந்து பூத்த பருத்தியைப்போல் அவள் முகம் அத்தனை மிருதுவாய் இருந்தது.காலம் அவளை அழகாய்ச் செதுக்கியிருந்தது.அன்று தன்னிடம் வீம்பாக சண்டை பிடித்து கோபத்தில் சிவந்த முகம் இன்று வெட்கத்தில் மலர்ந்திருக்கிறது.

“மாமனே உன்னக் காணாம வட்டியில் சோறும் பொங்காம
பாவி நான் பருத்தி நாராப் போனேனே
காகம்தான் கத்திப் போனாலும்
கதவுதான் சத்தம்போட்டாலும்
ஒம்முகம் பாக்க ஓடி வந்தேனே
ஒத்தையில் ஓடக்கரையோரம் கத்தியே
ஒம்பேர் சொன்னேனே
ஒத்தையில் ஓடும் ரயிலோரம்
கத்தியே ஒம்பெயர் சொன்னேனே
அந்த ரயில் தூரம் போனதும்
நேரம் ஆனதும் கண்ணீர் விட்டேனே”

வெகு நாட்களுக்குப்பிறகு சந்திக்கும் இருவரின் தவிப்புகள், இத்தனை நாளாக இருவரும் பரிமாறிக்கொள்ளாத விஷயங்கள் அத்தனையும் இந்தப் பாடலுக்கு அழகு சேர்க்கிறது. இருவரும் பிரிந்திருந்தாலும் அவர்களின் எண்ணங்கள் ஒன்றாகவே இருந்தது. பொதுவாகவே காதலர்கள் பிரிந்திருக்கும்போது மறுபடி எப்போது சந்திப்போம் என்றே மனம் ஏங்கிக்கிடக்கும். அந்த சமயத்தில் அன்றாடம் செய்கிற வேலைகள் சில சமயம் மறந்துபோகும்….எதிலும் ஈடுபாடு இல்லாமல் இருக்கும்.சாப்பாடு, தூக்கம் என எதுவும் நினைவுக்கு வராது.
கதவு தட்டும் சத்தம் கேட்டாலோ, காகம் கரையும் சத்தம் கேட்டாலோ அவன் வந்துவிட்டதாக எண்ணி வெளியில் சென்று பார்ப்பதுமாய் அவள் இத்தனை நாட்களைக் கழித்திருக்கிறாள்.

பொதுவாக காதலிப்பவர்களுக்கு தன் காதலன் பெயரை யாராவது கூறக்கேட்டால் அத்தனை ஆனந்தமாய் இருக்கும்.அவன் இங்கேதான் தன் அருகினில் இருப்பதாய் ஒரு எண்ணம் தோன்றும்.திடீரென இவளுக்கு விச்சித்திரமான ஒரு ஆசை வர யாரும் இல்லாத அந்த ஓடைக்குச் சென்று தன் மாமனின் பெயரை அந்த ஓடையே அதிரும் அளவிற்கு கூச்சல் செய்து மகிழ்கிறாள்.
ஓடும் ரயிலைக் கண்டதும் அவன் பெயரைச் சொல்லி அழைக்க, அந்த ரயில் அவளைக் கடந்து சென்றதும் அவன் அருகில் இல்லை என்ற நிஜம் அறிந்து வெகுளியாய் அழுகிறாள்.

அவன் மீதிருக்கும் அத்தனைக் காதலயும் காத்திருப்பையும் சுமந்து கொண்டிருக்கிறாள்.

“தாவணிப். பெண்னே சொகந்தானா
தங்கமே தழும்பும் சுகந்தானா
பாறையில் சின்னப் பாதம் சுகந்தானா
தொட்டபூ எல்லாம் சொகந்தானா தொடாத
பூவும் சொகந்தானா
தோப்புல ஜோடி மரங்கள் சொகந்தானா
ஐத்தயும் மாமனும் சொகந்தானா
ஆத்துல மீனும் சொகந்தானா
அன்னமே உன்னையும் என்னையும் தூக்கி வளர்த்த திண்ணையும் சொகந்தானா”

இவன் நினைவுகளின் போர்வைக்குள் சென்று அவளை நலம் விசாரிக்கின்றான். காதலில் நினைவுகள் பொக்கிஷம்.நினைத்து நினைத்து
பார்த்துக் கொள்ளும் அழகான தருணங்கள். ஒன்றாய் இருந்த அத்தனைப் பொழுதுகளையும் அவன் மனம் திருப்பிப் பார்க்கிறது. சிறு வயதிலிருந்து ஒருவரை ஒருவர் பிடித்துப் பழகி பின் காதலாகும் காதலர்களுக்கு, அந்தக் காதலின் நினைவுகள் என்பது சற்று நீளமாகவே இருக்கின்றது.நாள்தோறும் சுற்றித் திரிந்த ஆற்றங்கரையும், அங்கே மீன் பிடித்து விளையாடுவதும்,அப்போது ஏற்பட்ட காயங்களும், நேரம் காலம் மறந்து கழித்த திண்ணையும் அவன் இத்தனை காலமாக மறக்காத,மனதில் எண்ணிக்கொள்ளும் நினைவுச்சில்கள். அவளுக்கோ இருவரும் ஒன்றாகத் திரிந்த இடங்களில் தன் காதலைச் சுமந்துகொண்டு தனியாக ஏங்கிய பொழுதுகள்.அத்தனையையும் அவன் ஒவ்வொன்றாக நலம் விசாரிக்க , “தொட்டப்பூ எல்லாம் சுகம் தானா தொடாத பூவும் சுகம்தானா” என அவன் விரலறிந்த அவள் அங்கங்களையும் அறியப்போகும் அங்கங்களையும் குறும்பாய் நலம் விசாரிக்கிறான்.இத்தன வருடங்களாய் மனதில் சுமந்துகொண்டிருந்த காதலையும்,காத்திருப்புகளையும்,நினைவுகளையும் இருவரும் பரிமாறிக்கொள்வதே இந்தப் பாடல்.

இவ்வாறு கிராமத்து காதல் கதைகளில் காதலர்களை விடவும் அந்த ஆற்றங்கரைக்கும், ஊரின் ஒதுக்குப்புறமாய் இருக்கும் தோப்பிற்கும் காதல் நினைவுகள் எல்லை கடந்ததாய் இருக்கும்.பெரும்பாலும் காதலர்களின் சந்திப்புகள் அங்கே தான் நிகழும். அங்கிருக்கும் மரங்களும் நதிகளும் மலைகளும் அத்தனைக் காதலை சந்தித்திருக்கும். மறைமுகமாய் அவர்களுக்கு உதவிக்கொண்டும் இருக்கும். இந்த இருவரது காதலின் நினைவுகளில் எப்படி இந்த ஓடை, திண்ணை,நதிகள் இருக்கின்றதோ அவ்வாறே இந்த இயற்கைக்கும் தன்னைச் சார்ந்து வரும் அத்தனைக் காதலர்களுக்குள் இவர்களும் ஓர் நினைவு. இப்படியான காதலையும் காத்திருப்புகளையும் சுமப்பதினால்தான் இந்த பூமி இன்னும் அழகாக பூத்துக்கொண்டே இருக்கிறது.

-கீச்சு கீச் தொடரும்….

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

2 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button