இணைய இதழ்இணைய இதழ் 61சிறார் இலக்கியம்

ஜானு; 09 – கிருத்திகா தாஸ்

சிறார் இலக்கியம் | வாசகசாலை

அந்த ஒரு நொடி

“ஓடுவியா ஜானகி..?”

“ஓடுவேன் கீத்தாக்கா..”

“வேகமா ஓடுவியா ?”

“செம்ம ஸ்பீடா ஓடுவேன்”

“சரி.. நான் சொல்றத கவனமா கேளு..”

“ம்ம்..”

“அவங்க எத்தனை பேர் இருக்காங்க எங்க இருக்காங்கன்னு நமக்குத் தெரியாது..”

“.”

“இப்போ இந்தக் காம்பவுண்டுக்குள்ள இருந்து எட்டிக்குதிச்சு வெளிய போய்.. நாம வந்தோம்ல அந்த ரோட்டுக்குப் போகணும்..”

“சரி..”

“அங்கிருந்து கொஞ்சம் தூரம் போகணும்..”

“ஓகே..”

“அந்த ரோட்ல அதிகம் யாரும் இருக்க மாட்டாங்க.. வண்டி ஏதாவது கூட ரொம்ப தூரம் போனாத்தான் கிடைக்கும்.. அதனால நாம நிச்சயமா ஒளிஞ்சு தப்பிக்க முடியாது.. ஓடித்தான் தப்பிச்சாகனும்..”

“சரி கீத்தாக்கா..”

“ரொம்ப வேகமா.. திரும்பியே பாக்காம போகணும்..”

“ஓகே..”

“நிக்காமப் போயிட்டே இருக்கணும்”

“..”

“நடுல நான் எதாவது சொன்னா அந்த மாதிரி செய்யணும்..”

“சரி கீத்தாக்கா செய்றேன்..”

கீதா எழுந்து ஒளிந்து நின்று யாரேனும் சுற்றிலும் தென்படுகிறார்களா என்று பார்த்தார்..

அப்போது ஜானு கேட்டாள்..

“எங்க போறோம் கீத்தாக்கா..?”

“கமிஷனர் ஆஃபிஸ்க்கு”

“ஓ ..”

இதை எதிர்பார்த்திருக்காத ஜானு..”கீத்தாக்கா ..”

“ம்ம்..”

“ஐம் சாரி..”

ஜானுவைப் பரிவோடு திரும்பிப் பார்த்த கீதா, “ஹேய் எதுக்கு..”

“என்னால தான் இது நடந்துட்டு இருக்கு. என்னை டிராப் பண்ணத்தான் நீங்க இப்போ கிளம்பி வந்தீங்க.. அதனால தான் அவங்க இப்போ உங்களைத் துரத்திட்டு வராங்க.. இல்லைன்னா நீங்க ஸ்டேஷன்லதான் இருந்திருப்பீங்க..”

“ஜானகி.. நோ.. அப்படி நினைக்காத.. அப்படி இல்லவும் இல்ல.. இது இன்னிக்கு இல்லைன்னா இன்னொரு நாள் நடந்திருக்கும்.. அவங்க யாருன்னு எனக்குத் தெரியும்..”

“உங்களுக்கு அவங்களைத் தெரியுமா கீத்தாக்கா..?”

“ஆமா..”

வெளியே எட்டிப்பார்த்துப் பார்வைக்கு எட்டும் வரை யாருமில்லை என்பதை உறுதி செய்துகொண்ட கீதா.. ஜானுவைப் பார்த்து.. “போலாமா ஜானகி..”

“போலாம் கீத்தாக்கா..”

காம்பவுண்ட் சுவர் மேல் ஜானுவைத் தூக்கி உட்கார வைத்த கீதா.. தான் வெளியே எகிறிக்குதித்து ஜானுவைக் கீழே இறக்கிவிட்ட நொடி..

“ஜானகி ரன்..”

கைகளை இறுகப் பிடித்துக்கொண்டு இருவரும் ஓடத்தொடங்கினார்கள்..

கீதாவின் கண்கள் துரித நிலையில் சுற்றிலும் யாரேனும் வருகிறார்களா என்றே கவனித்துக் கொண்டிருந்தன.

இங்கே அருகில்தான் எங்கோ இருக்கிறார்கள் அவர்கள் என்ற உள்ளுணர்வு கீதாவுக்குத் தொடர்ந்து இருந்துகொண்டிருந்தது.

அதனாலேயே வெளிச்சத்தைத் தவிர்த்து இருட்டுக்குள்ளாகவே ஓடிக் கொண்டிருந்தார்கள்.

கொஞ்சமும் சத்தமின்றி… சுற்றிப் பார்த்துக்கொண்டே.. கீதா,

“ரைட்ல திரும்பணும் ஜானகி..”

அடுத்த வலது திருப்பத்தில்..

கீதா எதிர்பார்த்திருந்தது தான்.. ஆனால், இத்தனை அருகில் எதிர் பார்த்திருக்கவில்லை..

திருப்பத்தின் முக்கிலேயே நின்றிருந்தான்.. அந்தக் கும்பலைச் சேர்ந்த ஒருவன்.

அவனைக் கண்ட கீதா சட்டென்று அந்தத் திருப்பத்தைத் தவிர்த்து நேராகச் செல்ல முயன்றபோது..

கீதாவைப் பார்த்துவிட்ட அவன்.. “ஏய் ஏய் நீ இங்கதான் இருக்கியா.. அண்ணே அண்ணே….” என்று கத்தி மற்றவர்களை அழைத்தான்..

இமைக்கும் நேரத்தில் அங்கே சுற்றி அருகாமையில் யாரும் இல்லை என்பதை உறுதி செய்துகொண்ட கீதா..

“அண்…”

அடுத்த வார்த்தை அவன் கத்தும் முன்.. அந்த ஒரு நொடியில் அவனைச் சுவர் ஓரமாய்த் தர தரவென்று தள்ளி.. பக்கத்தில் கிடந்த பெரிய கல்லை எடுத்து அவனது மண்டையில் ஒரே அடி வைத்தார்.

அந்த அடியில் கீழே சரிந்துவிட்ட அவன்… திரும்பவும் எழுந்திருக்கும் முன்… “ஜானகி வா..”

ஜானு.. கீழே விழுந்து கிடந்த அவன் திரும்ப எழுந்து அலைபேசியை எடுத்ததைப் பார்த்துக்கொண்டே கீதாவோடு சென்றாள்..

அந்தச் சந்தில் இருந்து இருவரும் வேகமாய் வெளியே வந்து.. அவர்கள் செல்ல வேண்டிய சாலைக்கு வந்தார்கள்..

வந்த வேகத்தில் கீதா.. “ஜானகி இடது பக்கமாத் திரும்பி வேகமா போ.. எக்காரணம் கொண்டும் நிக்கக்கூடாது.. திரும்பிப் பாக்கக்கூடாது..”

ஜானு மின்னல் வேகத்தில் சென்றாள்.

நான் உன் கூடவே தான் வந்துட்டு இருக்கேன்..”

“சரி கீத்தாக்கா..”

கீதாவின் மனதில் ‘எப்படியாவது அவனுங்ககிட்ட இருந்து தப்பிச்சாகணும். ஜானகிக்கு ஏதும் ஆகிடக் கூடாது’ இது மட்டும் தான் ஆக்கிரமித்திருந்தது..

அப்போது

இவர்கள் கடந்து கொண்டிருந்த இடது புறச் சந்தின் உள்ளே அவர்களுள் ஒருவன் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்தான்.

அவனைப் பார்த்துக்கொண்டே கீதா கடந்து சென்றார்..

சட்டென்று திரும்பிய அவன் கீதாவைப் பார்த்துவிட்டான்..

“ஏய் ஏய் நில்லுடி… ஏய்”

அவன் கத்தியதைக் கேட்ட கீதா “ஜானகி வேகமாப் போ..”

ஜானு வேகத்தை அதிகப்படுத்தினாள்..

அவன்..இவர்களைத் துரத்திக்கொண்டு இவர்களின் பின்னாலே வந்தான்..

ஆனாலும் அவர்களைப் பிடிக்க முடியவில்லை..

கடுப்பான அவன் ஒரு கல்லை எடுத்து கீதாவை நோக்கி வீச.. அது கீதாவின் காலை இடறியது.. கீதா நிலை தடுமாறினார்..

ஜானு முன்னால் போய்க்கொண்டிருந்தாள்.

திரும்பி அவனைப் பார்த்தார் கீதா .. அவன் இன்னொரு கல்லை எடுத்து வீசினான்..

அப்போது கீதா ஜானுவின் பக்கம் திரும்பி..”ஜானகி, நான் உன் பின்னாடியே தான் வந்துட்டு இருக்கேன் போயிட்டே இரு..”

“ஓகே கீத்தாக்கா..”

சொன்ன வேகத்தில் பட்டென்று ஓடுவதை நிறுத்திய கீதா.. நின்று அவனைத் திரும்பிப் பார்த்தார்..

இதை எதிர்பார்த்திருக்காத அவன் அதிர்ந்து நின்றான்..

அவனருகே வந்தார் கீதா..

கீதாவின் முகத்தில் இருந்த கோபத்தைப் பார்த்து இரண்டடி பின்னால் தள்ளிச்சென்ற அவன்.. பின் மீண்டும் கீதாவின் அருகில் வந்து அவரின் பின்னங்கழுத்தில் கை வைத்து வெடுக்கென்று முன்னே தள்ளினான்.

அந்த வேகத்தில் கொஞ்சம் முன்னாடி நகர்ந்த கீதா மீண்டும் அவன் பக்கம் திரும்பினார்.

அவன் அவனுடைய கத்தியை எடுத்து கீதாவின் வலது கையில் குத்தினான். கத்தி கொஞ்சம் கையில் இறங்கியபோது அவனுடைய கையினைக் கெட்டியாகப் பிடித்தார் கீதா.

இருந்தும்.. இன்னும் ஆழமாகக் குத்த முயன்றான் அவன்.

கீதா அவனின் கையை இன்னும் இன்னும் இறுகப் பிடித்தார்.

அந்தப் பிடியில் இருந்து அவனின் கையை அவனால் விடுவிக்கவே முடியவில்லை.

“ஏய் விட்றி…”

கீதாவை அடிக்க அவன் இன்னொரு கையை ஓங்கியபோது அந்தக் கையையும் பிடித்துக்கொண்ட கீதா அவன் வயிற்றில் ஓங்கி உதைத்தார்.

அவன் கீழே விழுந்து மீண்டும் எழுந்து ஓடி வந்தான்.

அவனுக்கு இன்னொரு வாய்ப்பு கிடைக்கும் முன்.. அவனைப் பிடித்துப் பின்புறமாய் வளைத்து தன்னுடைய முழங்கையை மடக்கி நெஞ்சில் ஓங்கி ஒன்று வைத்தார்..

அடி பொறுக்காமல் நெஞ்சைப் பிடித்துக்கொண்டு கீழே மல்லாக்க விழுந்த அவன்.

“அண்…ணே, அண்…ணே..” கத்தி அழைக்க முயன்றான்.

அவனருகே வந்த கீதா… வாய் மேல் ஓங்கி ஒரு மிதி மிதித்ததில் பற்கள் உடைந்தது அவனுக்கு.

கீழே கிடந்த கத்தியை எடுத்து அவனின் முழங்காலில் குத்தினார் கீதா.. அவன் மீண்டும் எழுந்து துரத்தி வருவதைத் தவிர்க்க.

அவன் வலியில் அனத்தத் தொடங்கினான்.. அவனை ரோட்டோரமாய்த் தள்ளிவிட்டுவிட்டு..

மீண்டும் ஜானுவை நோக்கி வேகமாகப் போனார் கீதா.

இன்னும் யாரேனும் இருக்கிறார்களா என்று திரும்பிப் பார்த்துக்கொண்டே..

ஜானுவின் அருகே சென்றபின் கீதா, “நான் உன் கூடவே தான் வந்துட்டு இருக்கேன் ஜானகி..”

“ஓகே கீத்தாக்கா”

“இன்னும் கொஞ்சம் தூரம் தான்”

“சரி..”

ஆனால்..

இல்லை..

கொஞ்சமும் எதிர்பார்த்திருக்கவில்லை

அந்தக் கும்பலைச் சேர்ந்த நான்கு பேர் அந்தத் தெரு முனையில் நின்றிருந்தார்கள்..

கீதா அவர்களைப் பார்த்தார்.

ஜானு முன்னால் போய்க் கொண்டிருந்தாள்.

கீதாவை அவர்கள் பார்த்துவிட்டார்கள்.

கையில் வைத்திருந்த பீடிகளைக் கீழே போட்டுவிட்டு வேகமாய் இவர்களைத் துரத்திக்கொண்டு வந்தார்கள்.

அவர்கள் தன்னைப் பார்த்துவிட்டதை உணர்ந்தார் கீதா..

‘இதுக்கு மேல தப்பிக்க முடியாது’

சட்டென்று ஜானுவிடம்..

“ஜானகி, இடது பக்கமாத் திரும்பு..”

அடுத்த நொடி இடது சந்தில் திரும்பினாள் ஜானு..

“அந்த புது பில்டிங்க்குள்ள போ…”

அங்கே கட்டுமானப் பணிகள் நடந்து கொண்டிருந்த அடுக்குமாடிக் கட்டிடத்துக்குள் நுழைந்தாள் ஜானு..

அவர்கள் கீதாவைப் பின் தொடர்ந்து துரத்தி வந்தார்கள்..

“ஜானகி, இங்க வா..”

கீதா.. அங்கே ஓரமாய் இருந்த சில ட்ரம்களுக்கு நடுவே ஒரு ட்ரம்மைத் தூக்கி அதற்குள் ஜானுவை உட்கார வைத்துவிட்டு ஒரு சின்னக் கல்லை எடுத்து மூச்சு விட காற்றோட்டத்துக்கு முட்டுக்கொடுத்துவிட்டு ஜானுவிடம்..

“ஜானகி, உனக்கு எதுவும் ஆகாது. கவலைப்படாதே..”

“ம்ம்”

“நானா திரும்ப வந்து உன்னைக் கூட்டிட்டுப் போற வரைக்கும் இங்க இருந்து நகரக்கூடாது.. என்ன நடந்தாலும் இங்க என்ன சத்தம் கேட்டாலும் நானே உன் பேரைக் கத்திக் கூப்பிட்டாலும் நீ இந்த இடத்தை விட்டு வெளிய வரவே கூடாது..”

சொன்ன அடுத்த நொடி எழுந்து கட்டிடத்துக்குள் ஓடினார் கீதா..

நான்கு மாடிக் கட்டிடம்..

படிகளின் அருகே ஓடிய கீதா படிகளேறாமல் உற்றுக் கவனித்து நின்று கொண்டிருந்தார்.

அப்போது அவர்களின் குரல் கேட்டது.

“ஏய், அங்க இருக்கா பாரு..”

குரல் கேட்ட நொடி அசுர வேகத்தில் படிகளில் ஏறி ஓடினார் கீதா..

இரண்டாவது மாடிக்கு ஓடிச் சென்றார்.

அவரைப் பின் தொடர்ந்து மூன்று பேர் ஓடினார்கள்..

ஒருவன் தரைத் தளத்திலேயே நின்றிருந்தான்.

முதல் மாடிக்குப் போன அவர்கள்.. “எங்கடா..இங்கதான வந்தா..”

“காணோமேண்ணே..”

“நீ போய் மேல தேடு..”

சொன்னவன் இரண்டாவது மாடிக்குச் சென்றான்.

இரண்டு பேர் மூன்றாவது மாடிக்குச் சென்றார்கள்..

மூன்றாவது மாடிக்குச் சென்று தேடிய பிறகு அங்கிருந்தே கத்தினான் ஒருவன் இரண்டாவது மாடியில் இருந்தவனை நோக்கி, “அண்ணே.. இங்க இல்லண்ணே அவ..”

“அங்க தான் இருப்பா.. நல்லாப் பாருங்கடா..” – என்று சொன்ன இரண்டாவது மாடியில் இருந்தவன்.. சுற்றிச் சுற்றி எல்லாப் பக்கமும் தேடினான்.

எங்கேயும் கீதாவைக் காணவில்லை.

தரைத் தளத்தில் நின்றிருந்தவனை எட்டிப் பார்த்து காணோம் என்று கை அசைத்துவிட்டு நடந்தான்.

அங்கிருந்து திரும்பி நடந்த அவனுக்கு ..

அந்தத் தளத்தின் கடைசியில் ஓரமாய் இருந்த பகுதியைப் பார்க்கும்போது .. ஏதோ உறுத்தியது..

மெதுவாகச் சுற்றிலும் ஒரு முறை பார்த்துவிட்டுச் சத்தமின்றி அந்த இடத்திற்கு நடந்து போய் எட்டிப்பார்த்தான்..

அங்கே..

இருட்டுக்குள்.. சுவரோடு ஒட்டிக்கொண்டு இவனைப் பார்த்தபடி நின்றிருந்தார் கீதா..

“ஏய்”

அத்தனை இருட்டுக்குள்.. கீதா தன்னைப் பார்த்துக் கொண்டு நின்றிருந்ததைப் பார்க்க கதி கலங்கியது இவனுக்கு.

அசையாமல் நின்றிருந்தார் கீதா..

“ஏய், உன்ன அங்க தேடிட் ….”

வாய் உளறியது அவனுக்கு..

பட்டென்று கத்தியை எடுத்து கீதாவைக் குத்த வந்தான் அவன்..

அப்போது…..

மிக மெல்லிய கம்பி ஒன்றைக் கொண்டு சரக்கென்று அவனது வலது புறக் கழுத்தில் இறக்கினார் கீதா..

அவன் நிலை குலைந்த அந்த ஒரு நொடி அவன் கையிலிருந்த கத்தியைப் பிடுங்கி அவனின் இடது முழங்கைக்கு மேலே குத்தினார்.

“ஏய்ய்ய்…..”

கீதாவை அடிக்க அவன் வலது கையை ஓங்கியபோது அவனது கழுத்தில் குத்தியிருந்த கம்பியை இன்னும் உள்ளே தள்ளினார்..

கண்கள் இருட்டியது அவனுக்கு..

அவன் தொய்ந்துபோன அந்த நொடியில்..

கீதா.. அங்கே கிடந்த கயிற்றை எடுத்துக் கொஞ்சமாய் வெட்டி அவனின் வாயைச் சுற்றிக் கட்டிவிட்டு, அதே கயிறைக்கொண்டு அவனின் இரண்டு கால்களைச் சேர்த்து ஒரு தூணிலும், இரண்டு கைகளைச் சேர்த்து இன்னொரு தூணிலும் கட்டிவிட்டு அங்கிருந்து நகர்ந்தார்..

மாடிப் படிகளுக்கருகே சென்ற கீதா தரைத்தளத்தை எட்டிப் பார்த்தார்..

ஒருவன் நின்றிருந்தான்..

ட்ரம்களைப் பார்த்தார்.. எந்தப் பிரச்சனையும் இல்லை..

அருகில் பேச்சுக் குரல்கள் கேட்கிறதா என்று கவனித்தார்..

இல்லை..

கொஞ்சமும் சத்தமின்றி மிக மெதுவாகப் படியேறி மூன்றாவது மாடிக்குச் சென்ற கீதா… அங்கே யாரும் இல்லாததை உறுதி செய்துகொண்டு … சத்தமாக அழைத்தார்..

“ஜானகி, அங்க ஓடாத என்கிட்ட வா.. வேகமா வா ஜானகி..”

நான்காவது மாடியில் இருந்த அவர்களுக்கு கீதாவின் குரல் கேட்டது..

பட்டென்று.. மூன்றாவது மாடிக்கு ஒருவனும் இரண்டாவது மாடிக்கு ஒருவனும் ஓடினார்கள்..

மூன்றாவது மாடியிலிருந்த கீதா மீண்டும் சத்தமாக அழைத்தார்..

“ஜானகி.. வேகமா என்கிட்ட வா..”

கீழே தரைத்தளத்தில்..

ட்ரம்க்குள் உட்கார்ந்திருந்த ஜானுவுக்கு கீதாவின் குரல் கேட்டது.

பட்டென்று நிமிர்ந்து பார்த்தாள் ஜானு.

‘கீத்தாக்கா கூப்புட்றாங்க’

(ஜானு தொடர்வாள்…)

kritikadass86@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button