
திசையறிதல்
சிறு பாதங்களில் நடந்து சென்று கடலடையும் தூரத்தில்
தங்கள் பெரும் வாழ்வின் திசைகளை
மூளையில் அடுக்கிக்கொள்கின்றன ஆமைக்குஞ்சுகள்.
தங்கள் பருவத்தில்
இங்கு வந்து முட்டையிடப் போகு மதிசயத்தை
சிறிய முதுகில் சுமந்த படியே அவை நீந்தத் துவங்குகின்றன.
ஒரு தூரத்திற்குப் பிறகு துவங்கும் இவ்வாழ்வை
ஆகச்சிறந்த ஒளியிலே காண்பித்துக்கொண்டிருக்கிறது
கடல்.
*
மீதி
1. புகைப்படத்தில் சிரித்துக்கொண்டிருப்பவனுக்கு அருகில்
கொஞ்ச காலத்திற்கு நின்று கொண்டிருந்தவன்
பிறகு
அதி தீவிர எதிரியானான்.
அவனைப் பிரித்துவிட்டு அப்புகைப்படத்தைப்
பார்ப்பதற்கு
சிரித்துக்கொண்டிருந்தவன் தன் காலம் முழுவதும்
பயந்து கொண்டேயிருந்தான்.
அவர்களுக்குள்ளிருந்த மீதியைத்தான்
நாம் ஒரு வலியுமின்றி அறுத்து முடித்தோம்.
2. தன் பாதையில் சேகரித்தவைகளையெல்லாம்
ஒவ்வொன்றாகப் பிரிக்கத்துவங்குகிறா னவன்.
சிலவற்றில் மீதமிருக்கும் இறுகிய ஞாபகங்களை
அவனால் எளிதாகப் பிரிக்க முடியாமல் போகவே
எல்லாவற்றையும் திசையெங்கும் வீசியெறிகிறான்.
அவனின் கைகளுக்குள்ளிருந்து விழுந்திடாத
நசுங்கிய சிறு பரிசொன்றை
அவன் காணநேர்ந்த போது தான்
அவனுக்கு மனப்பிறழ்வு கண்டது.
அவைகளுக்குள்ளிருந்த தடிமனான மீதியைத்தான்
ஒவ்வொரு நாளும் கதைகளென சொல்லித் தீர்த்துக்கொண்டிருக்கிறோம்
நாம்.
பகிர்தல்
1. தொட்டிக்கு ஒன்றாகத் தனியாகப் பிரித்து விடப்பட்ட மீன்கள்
நெருக்கமாகயிருக்கும் அத்தொட்டில்களையே பார்த்துக் கொண்டிருக்கின்றன.
அவைகள் ஒன்றுக்கொன்று பகிர்ந்து கொள்ளும் மொழிகளை
மிக நளினமாக அறுக்கின்றன அக்கண்ணாடியின் கூர்மைகள்.
சுவர்கள் மிக அதீதமான காயங்களையே உருவாக்குகின்றன
அவைகளையே மிக ஆழமாக பராமரிக்கின்றன.
2. கனிந்து விழுந்த பழங்கள் தங்களினிப்புகளை பகிர்ந்து கொடுக்கின்றன.
உலகம் தன் கசப்புகளை மறந்து கொள்கின்றது.
பழுத்த இலைகள் வேர்களின் திசைகளை அறியத்திருக்கின்றன
உலகம் தன் இரகசியங்களை ஒவ்வொன்றாக வெளியேற்றுகின்றது.
மரங்கள் தினசரி அசைந்து நிழல்களைப் பரப்புகின்றன.
உலகம் தன்னியல்புகளை மீட்டெடுக்க மெல்ல முயல்கிறது.
மீச்சிறு நொடிகள்
1. பிரம்மாண்டமானவைகளில் வெளிப்படுவதெல்லாம் மிக சொற்பமே.
வசந்தம் பெரும் கனவுகளுக்கருகில் கொஞ்சம் கற்பனையாகி விடுகிறது.
மிகஉயரே இருந்து விழுபவைகளில் சில தாங்களே எழுந்தும் கொள்கின்றன.
மறந்து போன எல்லா வழிகளும் உங்களைத் தேடிக்கொண்டேயிருக்கின்றன.
மீச்சிறு நொடியொன்றின் சுற்றுப் பாதையில் நீங்களொரு தடை.
2. அரவனைப்பதென்பதே எல்லாவற்றையும் மறந்து கொள்ளச் செய்கிறது
முழுவதும் எரிந்த உடல் தன் வாசனையை மேகமாக்கிக்கொள்கிறது
எல்லாக் குறிப்புகளிலும் ஒரு திருத்தம் தானாகவே அமைந்து விடுகிறது
ஆகக் கடைசியில் ஒரு இடைவெளியில் நீ இரண்டு முறை கூட சாகலாம்.
மீச்சிறு நொடியொன்றின் சுற்றுப் பாதையில் நீங்களொரு திசைதிருப்பி.
3. துரோகம் பின்னாலும் கண்கள் கொண்டலையும் மிருகம்
உனக்குக் கிடைத்த உலகில் நீ மறதிகளுடனே யிருப்பாய்
முதலில் வருபவையே ஒரு பருவத்தை முழுவதுமாக அனுபவிக்கின்றன
அன்றாடங்களின் செய்திகளுக்குள்ளிருக்கும் வலி மிகத்தனிமையானது
மீச்சிறு நொடியொன்றின் சுற்றுப் பாதையில் நீங்களொரு ஆறாத புண்..
4. கண்டடைந்தவை யெல்லாம் மிக மேலோட்டமானவையே
அறிதலுக்குப் பின்னாலிருக்கும் காரணங்களே ஆபத்தானவை
உலகம் முடிந்து விடும் இடத்திலிருக்கிறது அதன் பிரகாசம்
வாசனையே ஒரு ஞாபகத்தை ஆழத்திலிருந்து கொண்டுவருகிறது
மீச்சிறு நொடியொன்றின் சுற்றுப் பாதையில் நீங்களொரு தீவிரமான வலி