
ஜீலுங்
அந்தக் கல் எனக்கொரு பெயர் வைத்திருக்கிறது
அந்த வழியாக எப்போது போனாலும்
அந்தப் பெயர் சொல்லித்தான் என்னை அழைக்கும்
நான் கூட வீதியில் செல்லும் யாரோவுக்கு
அழகான தமிழ் பெயரை வைத்துவிடுவேன்
நானழைக்கையில் யாரையோ அழைப்பது போல்
என்னைத் திரும்பித் திரும்பிப் பார்ப்பது வேடிக்கையாக இருக்கும்
என் வீட்டின் இரும்பு கிராதியில் தேன்சிட்டு அமர்ந்திருந்தது
தேன்சிட்டு… தேன்சிட்டு…
என்று ரகசியக் குரலில் அழைத்தேன்
அது கோபமாகத் தலையைத் திருப்பி
என் பெயர் தேன்சிட்டு அல்ல ஜீலுங் என்று சொல்லிவிட்டுப் பறந்தது
அடுத்த முறை ஜுலுங் என்வீட்டிற்கு வருகையில் கேட்க வேண்டும்
நீ எனக்கு என்ன பெயர் வைத்திருக்கிறாய் என்று.
***
காந்தாரக் கலை
கனிஷ்கர் காலத்து
போர்வீரன் சிலைக்கு அருகில்
என் காதலியை
நிற்க வைத்து விட்டுப் போயிருந்தேன்
திரும்பி வந்து பார்த்தபோது
காந்தாரக் கலைவடிவு கொண்ட கம்பீரமான அந்த ஆண் சிலை
அவளைத் தழுவிக் கொண்டிருந்தது
சிலையின் முதுகை வளைத்து இருந்த அவளது கைகளில்
புடைத்திருந்த அழுத்தம் என்னை நிலைகுலையச் செய்தது
நான் தன்னந்தனியாக வீடு திரும்பினேன்.
***
மதனோற்சவம்
நரைப் புள்ளிகள் வானத்தில் நட்சத்திரங்களாய்
மின்னத் தொடங்கிவிட்டன
நரைத்த உன் முன் வகிட்டின் குங்குமச்சொந்தம் நான்
பருவத்தில் பொங்கிய அழகு இப்போது உருகி
நீண்ட மல்லிகை பூக்களென நரைத்து தேங்கியிருக்கிறது
கருமையின் துக்கத்திலிருந்து விடுபட்ட ஒரு தூய்மையின் ராகத்தை
உன் நரை முடியில் மீட்டுகிறான் மதனன்
ஒன்றிரண்டு நரை இழைகள்
இளஞ்சூட்டில் புகைந்துகொண்டிருக்கின்றன
வாழ்வின் ரசம் நிரம்பிய உனதல்குல் கோப்பையில் .
***
ஆறுதல்
கொடிக்கம்பியைத் தாண்டமுடியாது தவித்த
இளங்காற்றுக்கு உதவுவான்
மழையில் நனைந்து தும்மிக்கொண்டிருந்த இளஞ்செடிகளுக்கு
இருமல் மருந்து வாங்கிக் கொடுப்பான்
பரோபகாரி என்று பெயரெடுத்த அவனுக்கும்
பரலோகம் போக யோகம் வந்தது
அவன் இறந்தபோது தர்மதேவதையின் அருளால்
அவனது கைகள் மட்டும் உயிரோடிருந்தன
தன் சடலத்தின் மீது விழுந்து அழுவோரை
பால்பேதம் பாராமல் கட்டியணைத்து ஆறுதல் கூறின அக்கைகள்.
***
கற்பூர லிங்கம்
அவள் கொஞ்சம் கொஞ்சமாக
மீனாகிக் கொண்டிருந்தாள்
என் நிழலுக்குள்ளும்
கருப்பு ரத்தமாய் படர்ந்தது படபடப்பு
எரிமலைக்கு மேல் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கும்
கற்பூர லிங்கத்தை அணையாமல்
கொண்டு வந்து வைத்து
வணங்கினால்தான் மீண்டும் அவளைப்
பெண்ணாக்க முடியும் என்றான் சம்பூரனன்
நிலவை உதைத்து ஸ்டார்ட் செய்து ஏறி அமர்ந்து
உலகை ஒருமுறை சுற்றி வந்து விட்டேன்
கற்பூர லிங்கத்தை எங்கேயும் காணவில்லை
துவண்ட மனதோடு அவள் முன் போய் நின்றேன்
மீனுரு தரித்துப் பெண்ணுரு கொண்டு எழுந்து வந்தாள்
ஆச்சரியம் என் கன்னத்தில் அறைய
சடாரென்று எனக்குள் திரும்பினேனங்கே
சடசடத்து எனக்குள்
எரிந்து கொண்டிருந்தது
கற்பூர லிங்கம் .
********