
1970 பேட்ச் டென்த் ஸ்டாண்டார்டு தியாகுவின் தியாகம்
சீனுவை நெகிழ்வோடு
பார்த்து தியாகு தேங்கஸ் சொல்ல
சீனு வெட்கப்பட்டு
தலைகுனிந்து
நோ மென்ஷன் என்றான்
டிரடிஷனல் மேரேஜ் பொருத்தம் பார்முலாவும்
சயன்ஸும் மிக்ஸ் ஆகி இருந்தது
தியாகுவிற்கு பிடித்துப் போனது
காதல் கைகூடுவதற்கு
இவ்வளவு லகுவான
ரூட் எனக்குத் தெரியாமல்
போனது வருத்தம்தான்
நேதாஜி தெரு ஏல சீட்டு
விடோ கோதை மாமி
டாட்டர் கல்யாணியை
ஓரே நாளில் ஏழு முறை எதிர் எதிரே
மீட் செய்ய வேண்டும்
ஏழாவது மீட்டில் முடிச்சு விழுந்து
இருவரும் லவ் பண்ண ஆரம்பிப்போம்
இடங்களை மிகுந்த லவ்வோடு யோசித்தான்
ஸ்கூல் ரீசஸ் பிரியட்
ரமணா காபி ஒர்க்ஸ்
வாணி டைப்ரைட்டிங் இன்ஸ்டிடீயூட்
சிவா பால் பூத்
மீதி மூன்று இடங்களையும் யோசித்தான்
அந்த இடங்கள் நேச்சுரலாக இல்லை
கம்பல்சரியாக செய்தால் ஃபால்ட்
ஆகிவிடும்
லவ்வில் பிராப்ளம் வரும்
மீதி மூன்று இடங்கள் ஒரு மாதம் யோசித்து
கிடைக்கவே இல்லை
சீனுவிடம் நாட் பாசிபிள் சொல்லி
அவனுக்கு கல்யாணியை
விட்டுக் கொடுத்தான்
சீனு தோளில் தட்டி
தாங்க்ஸ்டா சீனு சொல்ல
தியாகு நோ மென்ஷன்
என்றான்.
***
ரொம்ப தூரத்து உறவு
எப்போதோ பார்த்திருந்த
தூரத்து உறவு அத்தைப் பாட்டி
இறந்துவிட்டதாகத் தகவல் வருகிறது
பண்டரிபாய் போல்
முகம் இருந்திருக்கிறது
நெய்வேத்தியம் செய்வதற்கு
முன்னமே ஒரு வடை கொடுத்திருக்கிறார்
சமத்தா படி என்று
வாஞ்சையாக கன்னத்தைக்
கிள்ளி இருக்கிறார்
ஈரத்தலையைத் துவட்டி விட்டிருக்கிறார்
சினிமாவுக்கு அழைத்துப் போயிருக்கிறார்
ரயில் ஜன்னல் ஒரத்தில்
உட்கார அனுமதித்திருக்கிறார்
அம்மா அடிக்கும்போது தடுத்திருக்கிறார்
இப்படியாக
அன்பு சுரந்து முடிகையில்
அவரே வீட்டிற்க்கு வருகிறார்
இறந்தது அவர் இல்லை
வேறு யாரோ ஒரு தூரத்து உறவு
பண்டரிபாய் போல்
முகம் இருக்கவில்லை
நெய்வேத்தியம் செய்வதற்கு
முன்னமே ஒரு வடை கொடுக்கவில்லை
அல்லது சமத்தா படி என்று
வாஞ்சையாக கன்னத்தைக்
கிள்ளி விடவில்லை
ஈரத்தலையைத் துவட்டி விடவில்லை
சினிமாவுக்கு அழைத்துப் போகவில்லை
ரயில் ஜன்னல் ஒரத்தில்
உட்கார அனுமதித்ததில்லை
அம்மா அடிக்கும்போது தடுக்கவில்லை
அந்த இறந்துப் போன
வேறு யாரோ ஒரு தூரத்து உறவின் மேல்
அன்பு சுரக்கிறது
அத்தைப் பாட்டிக்குச் சுரந்ததை விட
இரண்டு படி அதிகமாகவே சுரக்கிறது.
*