
காதலால் ஆள்பவன்
கத்தியைக்க காட்டி மிரட்டினாலும்
வந்த வழி திரும்புவதில்லை
இந்தக் கொடூரக் காதல்
வாழ்ந்துதான் பார்ப்போமேயென
ஊனோடு புகுந்து
ஆளையே கொன்றுவிடுகிறது
ஒன்றும் புரியாதது போல
வேடிக்கை பார்க்கும்
என் புரியாத புதிரோனே
இது நியாயம்தானா?
*
தேனே
திரவியமே
தெம்மாங்குப் பாட்டேயென
கொஞ்சியதெல்லாம் போதும்
உண்மையைச் சொல்லித் தொலையேன்
எப்படி எந்தவொரு தருணத்திலும்
என் மேல் கோபப்பாசி படியாமல்
தெளிந்த நீரைப் போலவே இருக்க முடிகிறது?
பாலே
பனங்கற்கண்டே
என் பஞ்சாமிர்தமே
பதில் சொல்லேன்.
•
தேங்காய்க்கு மயங்கி
எலிப்பொறிக்குள் நுழையும்
அப்பாவி எலியைப் போலத்தான் நீ
எதற்காக மயக்கம் கொள்கிறாயெனப்
புலப்படாமல் நான்
முற்றிலும் நான் மட்டுமே சூழ்ந்த வட்டத்தில்
நீ சுற்றி சுற்றி வருகிறாய்
தந்திரம் மிக்க பூனை
அருகிலேயே ஒளிந்து வாலாட்டுவதைப் போல
என்னைப் பின் தொடரும்
என் அண்ணனை
நீ அவ்வப்போது கவனத்தில் வை
என் பேரிச்சம்பழமே!
•
யாரோடாவது இருக்க வேண்டும் போலிருக்கிறது
நான் பார்த்துப் பார்த்து வளர்த்திருக்கும்
ம்…யாரையும் அனுமதிக்க மறுக்கும்
தனிமையெனும் வனத்திற்குள் நுழைய
எல்லோரும் அஞ்சும் வேளையில்
வசீகரிக்கும் உன் சொற்களையேந்தி
நீயாவது வாயேன்!