இணைய இதழ்இணைய இதழ் 79கட்டுரைகள்

காடு அவனை வென்றது – ஜெய்சங்கர்

கட்டுரை | வாசகசாலை

புத்தகத் திருவிழாக்களுக்கு செல்லும் போதெல்லாம் பதற்றம் ஒன்று பெருகி நெஞ்சில் அலையடிக்கின்றது. இவ்வளவு புத்தகங்களா என்ற மலைப்பும், இவற்றிற்கிடையில் நாமும் நூல் எழுதி வெளியிட ஆசை கொள்ள வேண்டுமா? இங்கே குவிந்துள்ள ஆயிரமாயிரம் புத்தகங்களுக்கிடையே கலந்து தொலைந்து போய் விடுமே, என்ற எண்ணமும் பெரும்பாறையாய் விழுந்து இதயத்தை அழுத்துகின்றது. ஈரோடு புத்தகத் திருவிழாவிற்கு சென்ற போதும் இதே சிந்தனை எழுந்து உடும்பாய் மூளையைப் பற்றிக் கொண்டு வருத்தியது

கடைசிச் சனிக்கிழமை. பள்ளி மாணவர்கள் அலை அலையாய் வந்து புத்தகக் கடைகளை மோதினர். அதில் நீந்திக் கொண்டே ஒவ்வொரு கடையாய் கரையேறினேன். நேஷனல் புக் டிரஸ்ட் கடையில், மூன்று புத்தகங்களை வாங்கினேன். அதில் ஒன்று அவன் காட்டை வென்றான் என்ற சிறிய நூல். தெலுங்கில் முனைவர் கேசவ ரெட்டி எழுதி, தமிழில் .ஜி. எத்திராஜூலு மொழி பெயர்த்துள்ள எழுபத்தெட்டு பக்கங்கள் மட்டுமே கொண்ட குறுநாவல்பச்சை நிறத்தில் வரையப்பட்ட அழகான ஒவியத்துடன் அட்டைப்படம் மனதைக் கவர்கிறது. அதோடு இயல்பாகவே காடுகள் குறித்து எழுதப்பட்ட நூல் என்பதால் தானாகவே கைகள் எடுத்துக் கொண்டன.

நாலரை மணி திருச்சி பயணிகள் ரயிலில் ஏறியவுடன்கொரானாவுக்குப் பிறகு பயணிகள் ரயில்கள் எல்லாம், முன் பதிவில்லா விரைவு வண்டி எனப் பெயர் மாற்றப்பட்டுவிட்டன. பையில் இருந்த புத்தகக் கட்டுகளில் அவன் காட்டை வென்றான் புத்தகத்தை மனம் எடுத்துக்கொண்டது. 

ஊரின் கடைக்கோடியில் குடிசையில் வசிக்கும் கிழவனும் அவன் வளர்க்கும் பன்றிகளும், அடர்ந்த வனமும் தான் கதையை நகர்த்தி செல்கிறார்கள். மேய்ச்சலுக்கு சென்ற பன்றிகளில், குட்டிகள் ஈனும் நிலையில் உள்ள தாய்ப்பன்றி ஒன்று கூட்டத்தை விட்டுத் தனியாகப் பிரிந்து ஆளரவமில்லா அடர்ந்த புதர்களை, குகையைத் தேடிக் காட்டுக்குள் ஓடி மறைந்து விடுகிறது

மாலை தாய்ப்பன்றி வீடு திரும்பாதது கண்டு அப்பன்றியைத் தொழுவத்திற்குக் கொண்டு வரக் காட்டுக்குள் செல்கிறான் கிழவன். இருளில் சில மணிநேரத் தேடலுக்குப் பிறகு சிட்டுக்குருவி ஒன்று எழுப்பும் பதறல் ஒலி மூலம் பன்றி இருக்கும் புதரை கண்டுபிடிக்கிறான். அங்கே பன்றி பத்து குட்டிகளை ஈன்று தாய்மையின் சுகத்தில் மூழ்கிக் கிடக்கிறது. இருளில் குட்டிகளைப் பார்க்க நெருங்கிச் சென்றக் கிழவனை, குட்டிகளை கவர்ந்து செல்ல வந்தவன் என எண்ணி தாய்ப்பன்றி தாக்குகிறது. மிகுந்த காயங்களோடு மரத்தின் கிளைகளில் ஏறி தப்பித்து அமர்ந்து கொள்கிறான்.

காட்டுக்குள் இரவு நகர்ந்து கொண்டிருக்க, வனத்தின் முகம் கொடூரமாக மாறுகிறது. வேட்டை விலங்குகள் தங்கள் இருப்பிடங்களிலிருந்து வெளியே வரத் தொடங்குகின்றன. பிரசவ வாசனை அவைகளை குட்டிகளை நோக்கி ஈர்க்கின்றது. முதலில் ஒற்றையாக வரும் நரியை பன்றி வலுவாகத் தாக்கித் தன் பற்களால் கிழித்துப் போட்டு விடுகிறது. அடுத்து நான்கு நரிகள் தந்திரமாக ஆளுக்கொரு திசையிலிருந்து அணுகி சூழ்ந்து கொள்ள, பன்றி ஒரு நரியைக் கொன்று போட, மரத்திலிருந்தபடியே ஈட்டியை எறிந்து கிழவன் மற்றொரு நரியை கொல்கிறான். கிடைத்த இடைவெளியைப் பயன்படுத்தி மீதமுள்ள இரண்டு நரிகள் ஆளுக்கொரு குட்டிகளைத் தூக்கிக் கொண்டு ஓடி விடுகின்றன. கிழவன் செய்வதறியாமல் மரக்கிளையில் தவிக்கிறான்.

நரிகளின் ஊளைகள் பெருகத் தொடங்க, கூட்டமாக நெருங்கி வருகின்றன. இத்தனை எண்ணிக்கையில் வரும் நரிகளிடமிருந்து குட்டிகளைக் காப்பாற்ற இறங்கினால் பன்றி அவனைத் தாக்கும் என்ற சிக்கலான நிலையில், பன்றியையும் அதன் மீதமுள்ள குட்டிகளையும் காப்பாற்றி வீட்டிற்கு அழைத்துச் செல்வதை லட்சியமாக கொண்டிருக்கும், காயம்பட்ட நிலையிலிருக்கும் கிழவன் தன் செயலில் வெற்றி பெற்றானா? என்பதை நாவல் அருமையாக விளக்கிச் செல்கிறது

எட்டுத் திக்கிலும் கதைகள் சிதறி கிடக்கின்ற நிலத்தில், எழுதப்படும் கதைகளின் இலக்கியத் தரத்தை நிர்ணயிக்கும் அளவுகோல்களில் ஒன்றாகக் கதையைக் கூறும் முறை உள்ளது. இக்குறுநாவலின் வெற்றி என்பது, சிறிய கதையினை ஆசிரியர் கூறிய விதத்திலேயே கதை மனதில் நீங்காமல் நிற்கின்றது. கிழவனின் எண்ணங்களின் வழியாக காட்டுக்குள் கதையை நகர்த்திச் சென்ற விதம், அந்த இரவை அதன் சூழ்நிலையை வாசிப்பவரின் மனதுக்குள் எளிதில் பதிய வைக்கும் வர்ணனைகள் என நாவல் சீரான நடையில், கதையின் இறுதியை நோக்கி நம்மைக் கொண்டு செல்கிறது. உதாரணமாய் கதைத் தொடங்கும் முதல் பக்கத்தில், தொழுவத்தில் இரண்டு நாட்களுக்கு முன் குட்டிகள் ஈன்ற ஒரு பன்றியைப் பற்றிய வர்ணனை இவ்வாறு செல்கிறது.

அவன் உறங்கிக் கொண்டிருக்கும் குடிசைக்கு வெளியே இரண்டு பன்றித் தொழுவங்கள் உள்ளன. ஒரு தொழுவத்தில் தாய்ப் பன்றி ஒன்று தன் குட்டிகளுடன் படுத்துக் கிடக்கிறது. அது தன் நான்கு கால்களையும் நீட்டிக் கொண்டு, முகத்தைத் தரையில் பதித்து, கண்களைப் பாதி மூடியவாறு பாசத்தின் இன்பத்தை நுகர்ந்து கொண்டிருக்கிறது. குட்டிகள் தாயின் மடியை மோதியவாறு பால் குடித்துக் கொண்டிருக்கின்றன. குட்டிகள் அதிக பலத்துடன் மோதும்போது தாய்ப் பன்றி மகிழ்ச்சியுடன் மெல்ல முனகுகிறது. இப்போது, தான் பன்னிரண்டு குட்டிகளின் தாய் என்கிற பெருமையும், சந்தோஷமும், மன நிறைவும் அதன் பாதி மூடிய கண்களில் தெரிந்து கொண்டிருந்தன.

நாற்பத்தைந்து பக்கங்கள் தாண்டி வாசித்துக் கொண்டிருக்கும்போது, கரூரில் ஆயத்த ஆடை தொழிற்சாலையில் பணிபுரியும் பணியாளர்கள் கூட்டம் ரயிலை நிரப்பியது. புத்தகத்தை மனதில்லாமல் மூடி வைத்துவிட்டு அவர்கள் பேசுவதை வேடிக்கைப் பார்க்கத் தொடங்கினேன். அப்போது கிழவன் மரக்கிளையில் அமர்ந்து, பன்றிக்குட்டிகளை எவ்வாறு காப்பாற்றிக் கொண்டு போவேனோ என தனக்குள் புலம்பிக் கொண்டிருக்கிறான்

ஐந்து தினங்களாக கிழவனும், பத்துக் குட்டி நிலாக்களும் தலைக்குள் சுழன்று கொண்டே இருந்தார்கள். பதற்றம் ஒன்று அலையடித்துக் கொண்டே இருந்தது. நூலை முழுவதும் வாசித்த பின்பு உள்ளத்தில் பெருகிய உணர்வுகளை வெளிப்படுத்தவியலவில்லை.

கதை முடிந்த பின்பு தான் வாசகனின் மனதில் தன் முழுப் பரிமாணங்களுடன் கதை செயல்படத் தொடங்குகிறது. இப்படைப்பைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தபோது எழுந்த எண்ணம், இது போன்ற ஒரு கதையினை எழுதிவிட்டால் ஆயிரமாயிரம் புத்தகங்களுக்கு இடையேயும் நம்முடைய நூல் தனித்து தெரியும் என்று மனம் ஆசை கொண்டது. காடு ஆயிரமாயிரம் விதைகளை உருவாக்கிப் பரப்புகிறது. ஏதோ சில விதைகள் தான் முளைத்துக் கிளைகளைப் பரப்பி பெருமரமாய் சிறகுகளை விரிக்கின்றன. கதைகள் முளைத்துப் பெருகிக் கிடக்கும் அடர்ந்த வனத்திற்குள் எனக்கான கதையினைத் தேடிக் கொண்டேயிருக்கிறேன்.

***********

goldeneyesankar@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button