இணைய இதழ்இணைய இதழ் 79தொடர்கள்

அந்நியநிலக் குறிப்புகள் – வளன் – பகுதி 23

தொடர் | வாசகசாலை

ன்னை நியூ யார்க் நகரத்துக்கு அழைத்துச் சென்ற பால் கிளிஃபர்ட் செப்டம்பர் 11 தாக்குதல் சமயத்தில் மீட்புப் பணிகளில் சேவையாற்றியவர். ஆக உலக வர்த்தக மையம் எங்கள் பயணத்தின் மையமாக இருந்தது. புதிதாக எழுப்பப்பட்டிருக்கும் வர்த்தக மையம் ஒற்றை கோபுரமாக நிற்கிறது. கட்டிடத்தின் அடித்தளத்தின் வழியாக மேலே செல்ல வேண்டும். போகும் போது அக்கட்டிடத்தின் வரலாறு வழியெங்கும் சித்தரிக்கப்பட்டிருந்தது. ராக்கஃபெல்லர் கட்டிடத்தில் லிஃப்டில் சென்ற போது லிஃப்டின் கூரையில் பலவிதமான வண்ண விளக்குகள் இசைக்கு தகுந்தார் போல் மின்னிக் கொண்டிருந்தன. சுற்றுலாப்பயணிகள் அதை வீடியோ எடுத்துக் கொண்டு வந்தனர். நான் எடுக்கத் தவறிவிட்டேன். ஆகவே உலக வர்த்தக மைய கட்டிடத்தின் உச்சிக்கு செல்ல லிஃப்டில் ஏறிய போது என் செல்போனை எடுத்து வீடியோ எடுக்க ஆரம்பித்தேன். உடனே பால் கிளிஃபர்ட் என்னைப் பார்த்து சற்று கடுமையான தொனியில் போனை உள்ளே வைக்கச் சொன்னார். ஏன் இப்படி சொன்னார் என்ற குழப்பத்துடன் போனை உள்ளே வைத்தேன். பால் என்னைப் பார்த்து ஒரு பேராச்சரியத்துக்கு தயாராகச் சொன்னார். லிஃப்டின் கதவு மூடியது. லிஃப்டின் உள்புறம் உடனடியாக ஒரு டிஜிட்டல் திரையானது. ஒவ்வொரு வருடமும் உலக வர்த்தகமையக் கட்டிடம் அடித்தளமிட்டதிலிருந்து என்னென்ன வளர்ச்சியை சந்தித்தது என்பதை காணொலியாக சமர்பித்தார்கள். அடித்தளத்திலிருந்து நூற்றி நான்காம் தளத்துக்குச் செல்ல மொத்தம் நாற்பத்திரண்டு வினாடிகள் தான். ஆனால் அதையும் வீணடிக்காமல் ஆக்கப் பூர்வமாக வடிவமைத்திருந்தது ஆச்சரியமாக இருந்தது. அந்த நாற்பத்திரண்டு வினாடிகளும் வாயை பிளந்துக் கொண்டு காட்சிகளைப் பார்த்துக் கொண்டிருந்தேன். பால் கிளிஃபர்ட் மேல் தளத்தில் இன்னொரு ஆச்சரியம் காத்திருப்பதாகச் சொன்னார். நாங்கள் மொத்தம் ஐம்பது பேர் இருப்போம் எங்கள் முன் ஒரு பெரிய நீண்ட திரை – ஐம்பது பேரும் வரிசையாக நின்றால் எவ்வளவு நீளம் இருக்குமோ அவ்வளவு நீளத் திரை. அந்த திரையில் நியூ யார்க் மேன்ஹாட்டன் நகரத்தின் பரபரப்பான வாழ்க்கை காட்சிப் படுத்தப்பட்டிருந்தது. பார்ப்பதற்கு சுவாரசியமாக இல்லை. ஆனால் காட்சி முடிந்த மாத்திரத்தில் அந்த திரை பாகம் பாகமாக மேலெழுந்தது. திரைக்கு அடுத்தப்பக்கம் கண்ணாடி. அப்போது நூற்றி நான்காம் மாடியின் உச்சியில் நிற்பதை உணர்ந்தேன். அங்கிருந்து கிடைத்த காட்சி மெய்சிலிர்க்க செய்துவிட்டது.

யோசித்துப் பார்த்தால் பறவைகளைத் தவிர வேறு யாருக்கும் உலகத்தை மேலிருந்து பார்க்கும் வாய்ப்பு அமைவதில்லை. விமானங்களில் செல்பவர்களுக்கு அந்த வாய்ப்பு உண்டு என்றபோதிலும் நினைத்த உடனே விமான பயணங்கள் அமைவதில்லையே! மேலிருந்து பெரிய நகரங்களைப் பார்க்கும் போது மிக அழகாக இருக்கிறது. திருச்சியில் வசித்தபோது மலைக்கோட்டை உச்சியிலிருந்து ஆண்டார் தெருவில் இருந்த எங்கள் வீட்டைக் கண்டு பிடிப்பது ஒரு பொழுது போக்காக இருந்தது. தெருக்களும் சாலைகளும் தெளிவாக தெரியும். ஆனால் மேலிருந்து கீழிறங்கினால் சாலையின் போக்குவரத்து நெறிசல் எரிச்சலடைய வைக்கும். நியூ யார்க் நகரமும் அப்படித்தான். நூற்றி நான்காம் மாடியிலிருந்து பார்க்கும் போது பிரமிக்க வைக்கும் அதே நகரம் கீழே பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது. சாலைகள் குப்பைக் கூளமாக இருக்கிறது. இதனால் தான் பரபரப்பான நியூ யார்க் தினசரி வாழ்க்கையைக் காட்சிப்படுத்திய போது அது சுவாரசியமாக இல்லாமலும் உச்சியிலிருந்து நகரத்தைப் பார்ப்பது சிலிர்ப்பூட்டுவதுமாக அமைந்தது.

 

FILE – In this June 7, 2018, file photo, the September 11 Memorial and Museum are seen from an upper floor of 3 World Trade Center in New York. A U.S. Army soldier was arrested Tuesday, Jan. 19, 2021, in Georgia on terrorism charges after he spoke online about plots to blow up New York City’s 9/11 Memorial and other landmarks and attack U.S. soldiers in the Middle East, authorities said. (AP Photo/Mark Lennihan, File)

புதிய வர்த்தக மைய உச்சியிலிருந்து பழைய இரட்டைக் கோபுர அடித்தளத்தைப் பார்க்க முடியும். இரண்டு சதுரங்கள். இவை இரண்டையும் அருகில் சென்று பார்த்தால் இதன் பிரம்மாண்டம் புரியும். இரண்டு கோபுரங்களும் பதினாறு ஏக்கர் பரப்பளவில் அமைந்திருந்தது. இவைகளைப் பார்ப்பதற்கு முன்னால் பால் கிளிஃபர்ட் என்னை அருகிலிருந்த புனித பேதுரு தேவாலயத்துக்கு அழைத்துச் சென்றார். பேதுரு தேவாலயம் மிகச் சிறிய தேவாலயம் தான். இதில் என்ன சிறப்பு இருக்கிறது என யோசித்துக் கொண்டிருந்தேன். பால் கிளிஃபர்ட் எனக்கு இரண்டாயிரத்தோராம் ஆண்டு செப்டம்பர் பதினோன்று நடந்ததை விளக்கிச் சொல்ல சொல்ல அவைகள் காட்சிகளாக விரிந்தது. வழக்கமாக நடைபெறும் அத்தனை நிகழ்வுகளும் அரங்கேறிக் கொண்டிருந்தன. யாரும் ஊகிக்காத நேரத்தில் வடக்கு கோபுரத்தின் மீது ஒரு விமானம் மோதியது. இன்னும் சரியாக சொல்வதென்றால் தொண்னூற்றி மூன்றாம் தளத்திலிருந்து தொண்னூற்றி ஒன்பதாம் தளம் வரையிலானப் பகுதி. முதலில் இதை விபத்து என்றே நினைத்தார்கள். மோதப்பட்ட பகுதியிலிருந்து காகிதக் கற்றைகள் நகரெங்கும் வீசியெறியப்பட்டது. கரும்புகை சூழ வடக்கு கோபுரம் புகைய ஆரம்பித்தது. விமானம் மோதியதில் விமானத்தின் பாகங்கள் நகரங்கும் சிதறியது. அப்படி விழுந்த விமானத்தின் பாகம் புனித பேதுரு தேவாலயத்தின் கூரையை சிதைத்தது. இந்தப் பரபரப்பு அடங்குவதற்குள் தெற்கு கோபுரத்தின் எழுபத்தி ஏழாம் தளத்திலிருந்து எண்பத்து ஐந்தாம் தளம் வரையிலான பகுதி மீது இன்னொரு விமானம் மோதியது. நகரெங்கும் இப்போது பீதி பரவியது. இப்போது நியூ யார்க் நகர மக்கள் இது தீவிரவாத தாக்குதல் என்பதை தெரிந்து கொண்டார்கள். தெற்கு கோபுரத்தின் மீது மோதிய விமானத்தில் எஞ்சியிருந்த பெட்ரோல் கட்டிடம் எங்கும் வழிந்தோடி தீப்பிடித்தது. அந்தத் தீ கட்டிடத்தின் உலோகத் தாங்கிகளை உருக்கி மடமடவென கோபுரம் சரிந்தது. சற்று தூரத்தில் அதாவது அடுத்த தெருவிலிருந்து இதை கவனித்துக் கொண்டிருந்த தீயணைப்பு வீரர்கள் கோபுரம் சரிவதை எதிர்ப்பார்த்திருக்கவில்லை. சரிந்த கோபுரம் அப்படியே இந்த வீரர்கள் மீது விழுந்து ஒரே சமயத்தில் சுமார் நூற்றியிருபது வீரர்கள் மாண்டார்கள். கரும்புகையும் புழுதியும் நகர் முழுமையும் நிறைத்தது. வேடிக்கைப் பார்க்க சென்ற பலர் புழுதியில் மூச்சடைத்து இறந்து போனார்கள். இதெல்லாம் அடங்குவதற்குள் வடக்கு கோபுரமும் சரிந்து அருகிலிருந்த கட்டிடங்களின் மேல் விழுந்தது. அடுத்த புழுதிப் புயல் அதனால் கிளம்பியது. நகரெங்கும் தீ. தீயணைப்பு வீரர்கள் எதுவும் செய்ய இயலவில்லை. காரணம் கட்டிடங்கள் நொறுங்கி விழுந்ததில் தண்ணீர் குழாய்கள் உடைந்துவிட்டது. உடனடியாக ஹட்சன் நதியிலிருந்து பெரிய பெரிய லாரிகளில் தண்ணீர் வரவழைக்கப்பட்டு மீட்புப் பணிகள் தொடங்கியது. ஆக முதல் சேதாரம் நடந்தது பேதுரு தேவாலயம் தான் என்று கருதப்படுகிறது. இதில் இடிபாடுகளில் சிக்கி மைக்கில் ஜட்ஜ் என்ற பாதிரியார் உயிரிழந்தார்.

FILE – In this Sept. 11, 2001, file photo, smoke billows from one of the towers of the World Trade Center and flames as debris explodes from the second tower in New York. Relatives of the victims of the Sept. 11 attacks called Thursday, Sept. 2, for the Justice Department’s inspector general to investigate the FBI’s failure to produce certain pieces of evidence from its investigation. (AP Photo/Chao Soi Cheong, File)

இவ்வளவும் ஏதோ நேற்று நடந்தது போன்று பால் நினைவு கூர்ந்தார். எனக்கும் அந்த தினம் நினைவில் இருப்பதைக் கூறினேன். அப்போது எனக்கு ஒன்பது வயது. மூன்றாவது படித்துக் கொண்டிருந்தேன். அமெரிக்காவில் தீவிரவாதத் தாக்குதல் என்று இரட்டை கோபுரத்தின் மீது விமானம் மோதியதை திரும்பத் திரும்பக் காட்டிக் கொண்டிருந்தார்கள். அமெரிக்காவின் எதிர்வினை எப்படியிருக்கும் என்று வல்லுனர்கள் பேசினார்கள். புகையும் இரட்டை கோபுர காட்சியை என்னால் மறக்கவே முடியாது. அடுத்த இருபது வருடத்தில் நான் நியூ யார்க்கில் இருக்கிறேன் என்பதை என்னால் நம்ப முடியவில்லை என்று பாலிடம் சொன்னேன். 

இந்த நினைவிடத்துக்கு நேரதிரில் சில மீட்டர் தொலைவில் புனித பால் சிற்றாலயம் இருக்கிறது. மேன்ஹாட்டன் நகரத்தின் மிகப் பழமையான கட்டிடங்களில் இந்தச் சிற்றாலயமும் ஒன்று. செப்டம்பர் தாக்குதலில் இந்தக் கட்டிடம் சுக்குநூறாக ஆகியிருக்கும் என்று நினைத்தார்கள். ஆனால் இதன் ஜன்னல் கண்ணாடியில் ஒரு விரிசல் கூட விழவில்லை என்பது ஆச்சரியம். கட்டிடம் சரிந்து விழுந்தபோது அத்தனை புழுதியும் இந்த இடத்தை ஆக்கிரமித்துக் கொண்டது. மீட்புக்குழுவினர் சிற்றாலயத்தை சுத்தம் செய்துவிட்டு இங்கிருந்து மீட்புப்பணிகளை செய்ய ஆரம்பித்தார்கள். தொடர்ந்து பிணங்களை எடுத்துக் கொண்டிருந்த மீட்புக்குழுவினரை உற்சாகப்படுத்த பல்வேறு இசைக் கலைஞர்கள் சிற்றாலயத்தின் ஆர்கனிலிருந்து தொடர்ந்து பாடல்கள் வாசித்துக் கொண்டிருந்தார்களாம். அதில் அதிகம் முறை வாசிக்கப்பட்டது ‘அமேசிங் க்ரேஸ்’ என்ற பாடல்.

இப்போது பழைய வர்த்தகமைய வளாகமான பதினாறு ஏக்கரும் நினைவிடமாக இருக்கிறது லட்சக்கணக்கான மக்கள் அங்கே சூழ்ந்திருந்தார்கள் ஆனால் அங்கே ஒரு அமானுஷ்ய பேரமைதி நிலவியது. இரண்டு கோபுரங்களின் அடித்தளங்களும் நீறூற்றுகளாக மாற்றப்பட்டு இறந்த அத்தனைப்பேரின் பெயர்களும் அதன் சுற்றுச் சுவரில் பொறிக்கப்பட்டுள்ளது. யாரும் வலியுறுத்தாமலே மக்கள் அமைதியில் பேசிக் கொள்கிறார்கள். நீறூற்றின் பேரிரைச்சல் எனக்கு அழுகையை வரவழைத்தது. நான் அமைதியாக அங்கிருந்த பெயர்களை தொட்டுக் கொண்டு நின்றிருந்தேன். ஒரு மூதாட்டி என்னை சற்று விலகி நிற்கும் படி கனிவுடன் கேட்டுக் கொண்டு ஒரு வெள்ளை ரோஜா மலரை அங்கிருந்த ஒரு பெயரின் மீது பொருத்திவிட்டு அமைதியாக கண்ணீர் சிந்திக் கொண்டிருந்தாள். அவர்களிடம் ஆறுதலாக ஏதாவது பேச வேண்டும் போல இருந்தது. பால் என்னை அழைத்து மேலும் சில அடிகள் தள்ளிச் சென்று பார்க்கச் சொன்னார். அங்கிருந்த ஒருசில பெயர்கள் மீது முன்பு பார்த்தது போல வெள்ளை ரோஜா மலர்கள் இருந்தது. இறந்தவர்களை எப்போதும் நினைவில் வைத்திருக்க அவர்களின் பிறந்த நாளில் அவர்களின் பெயர்களில் ஒற்றை ரோஜா மலர் சூட்டப்படுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்களாம். இதற்காகவே இறந்தவர்களின் பிறந்த நாள் அடங்கிய குறிப்பேடு ஒன்றை நிர்வாகம் பராமரித்து வருகிறது. ஆக தினமும் பணியாளர்கள் அக்குறிப்பேட்டின்படி நினைவகத்தைச் சுற்றி வந்து இப்படி வெள்ளை ரோஜாக்களை பொருத்துவார்களாம். அச்சமயத்தில் குடும்ப உறுப்பினர்கள் யாராவது வந்தால் அவர்களை மலர் சூட வைக்கிறது நிர்வாகம்.

அடுத்ததாக பால் என்னை எதிரில் இருந்த இன்னொரு நினைவிடத்துக்கு அழைத்துச் சென்றார். நியூ யார்க் வரும் முக்கால்வாசி பேருக்கு இப்படியொரு நினைவிடம் இருப்பது தெரியாது என்றார். பதினோரு கண்ணீர் துளிகள் நினைவகம். கென் ஸ்மித் என்கிற கட்டிடக்கலைஞர் உருவாக்கியது இது. சுமார் முன்னூறு கிலோ எடையுள்ள ஸ்படிகம் கண்ணீர் வடிவில் ஒரு நீர்த்தேக்கத்தின் மீது தொங்குகிறது. இது முப்பத்தைந்து அடி நீளமுள்ள பதினோரு உலோக கம்பிகளினால் மேலிருந்து பிணைக்கப்பட்டிருக்கிறது. கீழிருக்கும் நீர்த்தேக்கம் பதினோரு பக்கங்களை கொண்டிருக்கிறது. மேலிருந்து ஒவ்வொரு பதினோரு நிமிடத்திற்கு ஒருமுறை ஒவ்வொரு துளியாக நீரின் மீது விழுந்து வளையங்களை ஏற்படுத்துகிறது. இதுதான் பதினோரு கண்ணீர்துளிகளின் நினைவகம். பழைய வர்த்தகமைய கட்டிடத்தில் தொண்னூற்றி நான்காவது மாடியில் அமெரிக்கன் எக்ஸ்ப்ரஸ் என்ற அலுவலகத்தில் பதினோரு நண்பர்கள் வேலைப்பார்த்தார்கள். பதினோருபேரும் வேலை சமயத்தில் மட்டுமல்லாது எல்லா நேரமும் சிறந்த நண்பர்கள். செப்டம்பர் தாக்குதலில் பதினொருவரும் ஒன்றாகவே இறந்தார்கள். இவர்களின் நினைவாகவே இந்த பதினோரு கண்ணீர் துளிகள் நினைவகம். நீர்த் தேக்கத்தின் பதினோரு பக்கத்தில் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு பெயராக பதினொருவரின் பெயர்களும் அவர்களைக் குறித்த ஐந்து சொற்றொடர்களும் இருக்கிறது. பதினொருவரின் பெயர்களையும் வாசித்து அவர்களைக் குறித்த சிறு சொற்றடர்களை வாசித்த போது மனம் தானாகவே பதற்றம் கொள்ளத் தொடங்கியது. மேலிருந்து கீழே சொட்டும் துளிகள் ஏற்படுத்திய தண்ணீர் வளையங்கள் ஏதேதோ எண்ணங்களைப் பீறிடச் செய்தது. வாழ்க்கை என்பது இவ்வளவு தானா? இந்தப் பதினோரு பேருக்கும் என்னக்கும் என்ன சம்மந்தம்? நான் ஏன் இவர்களுக்காக கண்ணீர் சிந்துகிறேன்? ஐந்து சொற்றொடர்களில் இவர்களின் வாழ்க்கை அடங்கிவிட்டதா? நாம் இல்லாமல் போகும் போது இப்படி ஐந்து சொற்றடர்களில் தான் நினைவுக்கூறப்படுவோமா? ஐந்து சொற்றொடர்களில் ஒரு வாழ்க்கையை கூறிவிட முடியுமா? மிகக் குறைவாக சொல்லப்பட்டதால் தான் எனக்கு கண்ணீர் வருகிறதா? நான் இல்லாமல் போகும் போது என்னைப் பற்றிய ஐந்து சொற்றொடர்கள் என்னவாக இருக்கும்? இப்படியாக எண்ணம் ஒன்றன்பின் ஒன்றாக விரியும் தண்ணீர் வளையங்களாக சென்றுக் கொண்டிருந்தது.

அமெரிக்காவின் சில கார்களின் பின்புறம் ‘9/11 நாங்கள் என்றுமே மறக்க மாட்டோம்’ எழுதியிருப்பதைப் பார்த்திருக்கிறேன். அதே போல 9/11 என்பது நியூ யார்க் மீது நிகழ்த்தப்பட்டதையே உலகம் நினைவில் வைத்திருக்கிறது. அன்று மொத்தம் நான்கு விமானங்கள் கடத்தப்பட்டன. இரண்டு விமானங்கள் நியூ யார்க் மேன்ஹாட்டன் வர்த்தக மையத்தில் மோதியது. ஒரு விமானம் பெண்டகன் மீது மோதியது. இதில் நூற்றி எண்பத்து நான்கு பேர் உயிரிழந்தார்கள். அடுத்ததாக ஒரு விமானம் வாஷிங்டன் டீ சி நோக்கி வந்தது ஆனால் அதிலிருந்த பயணிகள் தீவிரவாதிகளைத் தாக்க அது பென்சில்வேனியாவிலிருக்கும் ஒரு வெற்று நிலத்தில் விழுந்து வெடித்து சிதறியது அதில் பயணம் செய்த 40பேரும் உயிரிழந்தார்கள். அல்-கொய்தா அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு எதிரான தாக்குதலாக அறிவித்தார்கள். அதனால் தான் வர்த்தக தலைமையகமான நியூ யார்க் மீது ஒரு தாக்குதலும். இராணுவ தலைமையகமான பெண்டகனில் ஒரு தாக்குதலும் அமைந்தது. அரசியல் தலைமையகமான வெள்ளை மாளிகையோ அல்லது காங்கிரஸ் மாளிகையோ தாக்கப்படுவதற்குள் விமானம் விபத்துக்குள்ளாகிவிட்டது. இதை அரசியல் நகர்வாக சிலர் பார்த்தாலும் கொல்லப்பட்ட பல ஆயிரம் சராசரி மனிதர்களைக் குறித்தும் அவர்களின் குடும்பங்களையும் நினைத்தால் 9/11 தாக்குதலை யாராலும் மறக்கவே முடியாது தான்.

(தொடரும்…)

[email protected]

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

One Comment

  1. Kindly let me know from where i can get book release , tamil authors speech , tamil story telling dates in advance. So that I can make use of it.

    மிக்க நன்றி.
    தி. கார்த்திகேயன்
    9840327970
    [email protected]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button