இணைய இதழ்இணைய இதழ் 67கட்டுரைகள்

நூல் மதிப்புரை: சரோ லாமாவின் ‘காகங்கள் கரையும் நிலவெளி’ – கவிதைக்காரன் இளங்கோ 

கட்டுரை | வாசகசாலை

கொரோனா காலத்தில் புத்தகங்களை வாசிக்கும் பழக்கமும் நிறைய திரைப்படங்களை ஓ.டி.டி. தளத்தில் பார்த்துப் பொழுதை நகர்த்தும் எத்தனிப்பும் அநேக பேர் செய்ததுதான். பல புதிய வாசகர்கள் அதில் உருவானார்கள் என்பது ஒரு வகை. ஏற்கனவே உள்ள வாசிப்பு பழக்கத்தை செம்மைப்படுத்திக் கொண்டவர்கள் இன்னொரு வகை. மூன்றாம் வகையினர் உண்டு. அவர்கள் எழுத்தாளர்கள், கவிஞர்கள். மனித வாழ்வில் உயிர் சம்பந்தப்பட்ட ஒரு புதிய சவாலையும் தாண்டி ஒரு தனிமனித மனம் தொடர்ந்து இயங்கிட ஒருவித ‘மேட்னெஸ்’ வேண்டும். எழுத்தாளர் சரோ லாமா தன் மனவெளியை ‘காகங்கள் கரையும் நிலவெளி’யாக பாவித்துக்கொன்டதன் விளைவாக, வாசகசாலை.காம் இணைய இதழில் ஒரு கட்டுரைத்தொடரை அவர் எழுதத் தொடங்குகிறார்.

கோவிட்-19ஐ பொறுத்தவரையில் இதுகாறும் பார்த்துக்கொண்டிருக்கும் உலகின் பொதுப்போக்கில் சராசரிகளின் வாழ்கைக்கோணம் கணிசமாக மாற்றம் அடைந்திருக்கிறது. அதுபோலவே வரலாற்றுப் பாவனைகளில் பதிவாகி இருக்கும் இண்டு இடுக்கு விஷயங்களை புதிய பார்வை கொண்டு ஆராய்ந்து அறிந்திட ஒரு நல்வாய்ப்பாக அக்காலம் இருந்தது எனலாம். அந்த வகையில் அதற்குரிய முயற்சியும் அக்கறையும் உழைப்பும் ஓர் ஆழ்ந்த கண்ணோட்டமும் இக்கட்டுரைகளில் தொழில்பட்டுள்ளது. அவையே ஒரு முழுமையான நூலாகத் தொகுக்கப்படும்போது கட்டுரைகளின் ஒருமித்த வீச்சு வாசகனை நகரவிடாமல் கட்டிப்போட்டுவிடுகிறது.

சரோ லாமா Biographical-ஆக ஆங்காங்கே தன்னுடைய சொந்த வாழ்வின் சம்பவங்களில் சிலவற்றை மெல்லிய பகடியோடு சொல்லிச் செல்கின்ற பாணி குறிப்பிடத்தக்கது. அது வாசிப்பு அனுபவத்திற்கு கூடுதல் மெருகேற்றியபடி கட்டுரையினூடே கச்சிதமாக இழையோடி உள்ளது. கட்டுரைக்காக தேர்ந்தெடுத்துக்கொள்ளும் விஷயத்திற்குரிய சம்பவங்களின் பின்னணிகளுக்காக மெனக்கிட்டு தகவல்களை சேகரித்திருக்கின்ற ஆர்வமும் அக்கறையும் கட்டுரைகளுக்கு நியாயம் செய்கின்றன. சொல்லும் முறையில் சின்னச் சின்ன வாக்கிய அமைப்புகளும் அவற்றின் எளிமையும் விஷயத்தை நேரிடையாகக் கொண்டுவந்து சேர்ப்பிக்கின்றது.

உதாரணத்திற்கு ஜே.டி. சாலிங்கர் என்கிற அமெரிக்க நாவலாசிரியர் பற்றிய கட்டுரையில் அவரின் வாழ்வில் வந்து போகிற வெவ்வேறு காலகட்டத்தை சேர்ந்த மற்ற மனிதர்களின் இணைப்புப் புள்ளியாகட்டும் அல்லது அதன் விலகலில் ஏற்பட்ட விளைவின் தொடர்ச்சியாகட்டும், நம்மை பேச்சற்று போகச் செய்கிறது. ஜே.டி. சாலிங்கரின் ‘The Catcher in the Rye’ நாவல் 1951ல் வெளியாகிறது. அந்த ஒரே நாவலோடு அவர், வெளி உலகத் தொடர்புகளில் இருந்து முற்றிலும் தன்னைத் துண்டித்துக்கொள்கிறார். அதன்பிறகு தொடர்பு என்பது அவருக்கும் அவருடைய பதிப்பாளருக்கும் மட்டுமே என மிஞ்சுகிறது. அதற்கு என்ன காரணம் என்பது ஒரு புதிர். ஆனால், அதனை வாசகர்களாக நாம் யூகிக்கத் தொடங்கினால் கிளைக்கிளையாக யோசனை ஓடுமளவிற்கு தொடர்பு ஏற்படுத்தித் தரும் வேறு ஒரு கட்டுரையும் எழுதப்பட்டிருக்கிறது. அந்த அதிசயம் நாவல் வெளிவந்து சுமார் நாற்பத்தைந்து ஆண்டுகள் கழித்து நடக்கிறது. அதனை வாசித்துத்தான் அனுபவித்துக்கொள்ள வேண்டும். ஆனால், சொல்லுவதற்கு இன்னொன்று இருக்கிறது.

1980-ல் பீட்டில்ஸ் இசைக்குழுவின் பிரபல பாடகர் ஜான் லெனானை மிகச் சரியாக அவருடைய பிறந்த நாளுக்கு முந்தைய தினம் மாலை நேரம் அவரின் வீடருகே காத்திருந்து மார்க் டேவிட் சாப்மேன் என்ற ஒரு ரசிகன் துப்பாக்கியால் சுட்டுக்கொல்கிறான். அதற்கு முன்னதாக பகல் வேளையில் அவன் ஜான் லெனானிடம் ஆட்டோகிராப் வாங்கியிருக்கிறான். ஜான் லெனானை சுட்டுக்கொன்றுவிட்டு அவன் அங்கிருந்து தப்பியோடவில்லை. போலீஸ் வரும்வரை அங்கேயே உட்கார்ந்தபடி ஜே.டி சாலிங்கரின் ‘The Catcher in the Rye’ நாவலை வாசித்துக்கொண்டிருக்கிறான். அவனுடைய மனத்தூண்டலுக்கு காரணம், அந்நாவலின் பிரதான கதாபாத்திரம் ‘ஹோல்டன் காஃபீல்ட்’ தான் என்கிறான். இன்றுவரை டேவிட் சாப்மேனுக்கு பரோலை கூட மறுத்துவருகிறது நீதிமன்றம். அவரைப் போன்ற குற்றவாளிகளுக்கு அது ஒரு மோசமான உதாரணமாக ஆகிவிடும் என்பது அதன் தரப்பு. இப்போதும் சிறையில் மிச்ச வாழ்வைக் கழித்துக்கொண்டிருக்கும் டேவிட் சாப்மேனுக்கு அறுபத்தி ஏழு வயதாகிறது.

ஜே.டி. சாலிங்கரின் வாழ்வில் வேறொரு காரணத்தோடு சம்பந்தப்படுகிற இன்னொரு பிரபலம் யாரென்று பார்த்தால், அது சார்லி சாப்ளின். ஒரு கேயாஸ் தியரி போல ஒரு படைப்பும் படைப்பாளியின் இருப்பும் இப்படியெல்லாம் கூட செயல்படுமா என்கிற ஆச்சரியத்தையும் இத்தகவல்கள் நமக்கு ஏற்படுத்துகின்றன.

அதே மாதிரி, ஆக்னஸ் வர்தாவின் ‘The Gleaners and I’ என்கிற ஆவணப்படம், சுற்றுச் சூழல் சமநிலையின் முக்கியத்துவத்தை ‘Food Wastes’ என்கிற பார்வையில் முன்வைக்கின்ற விஷயம் நம்மை நிறையவே யோசிக்க வைக்கிறது. அதுபோல, பிரான்ஸ் காஃப்காவின் உலகப் பிரசித்திப் பெற்ற நாவலான ‘Metamorphosis’-ஐ (உருமாற்றம்) மா.அரங்கநாதனின் ‘மைலாப்பூர்’ என்கிற சிறுகதையோடு செய்துபார்க்கிற ஓர் ஒப்பீடு. அதைச் சொன்ன கையோடு, தம் வாழ்வின் ஓர் அமானுஷ்ய அனுபவத்தை பகிர்ந்துகொள்ளுகின்ற தொடர்ச்சியில் ஒட்டுமொத்த கட்டுரையும் மனதில் அப்படியே பதிந்துவிடுகிறது.

எழுத்தாளர் கி.அ.சச்சிதானந்தத்துடன் தமக்குள்ள நேரிடைப் பரிச்சயம் பற்றி சொல்லுகிறவர், அப்படியே அவருடைய ‘அம்மாவின் அத்தை’ என்கிற குறுநாவலை எடுத்துப் பேசிக்கொண்டே போகும்போது கட்டுரையின் முடிவில், ஓர் அடிக்கோடாக தன் மனத்திற்கு பட்ட ஒரு விமரிசனத்தை அப்பட்டமாக வைக்கவும் தவறவில்லை.

‘One flew over the cuckoo’s nest’ நாவலையும் அதன் ஆசிரியரான Ken Kesey-யையும் சரோ லாமா அறிமுகப்படுத்தும்போது நமக்கு கிடைக்கிற சுவாரஸ்யமான விஷயம் நாவலாசிரியரின் குணாம்சம். அதிலிருந்து வெளிப்படுகிற வினோதமான முடிவெடுத்தல்கள், பிடிவாதங்கள். அதற்கான காரணங்கள் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன.

இக்கட்டுரைகள் நிறைய படைப்பாளிகளையும், அவர்களின் வாழ்க்கைப் போக்கில் அவர்கள் எடுத்திருக்கக்கூடிய தீர்மானங்களையும், எப்படி அவை அவர்களை வரலாற்றில் இடம்பெறச் செய்திருக்கின்றன என்கிற உழைப்பையும் அதிசயங்களையும் படம்பிடித்துக் காட்டுகின்றன. இவற்றையெல்லாம் சரோ லாமா எழுதிப்போகும் பாணியில் ஒரு தேர்ந்த கதைசொல்லியின் வாகு அவருக்கு அனாயசமாகக் கைகூடியிருக்கிறது. புத்தகத்தை கீழே வைத்துவிட மனம் வராத அளவிற்கு விறுவிறுப்பான ஓர் எழுத்துநடை அவருடையது.

சரோ லாமாவின் கட்டுரைகளின் வெற்றியை நான் இப்படியும் பார்க்கிறேன். கையில் ஒரு காபி கோப்பையோடு மனதுக்குப் பிரியமான நண்பனோடு உட்கார்ந்து உரையாடுவது போல உள்ளது.

இறுதியாக சரோ லாமாவிற்கு ஒரு கோரிக்கையையும் வைக்கிறேன். சீக்கிரமாக இந்தக் கட்டுரைத்தொடரை அவர் மீண்டும் தொடங்கிவிடவேண்டும். இத்தொகுப்பின் தொடர்ச்சியாக இன்னும் நிறைய புத்தகங்களையும் திரைப்படங்களையும் அரிதான செய்திகளையும் பகிர்ந்துகொள்ள வேண்டும். ஒரு நல்லக் கட்டுரைத்தொடர் என்பது வாசகனுக்கு புதிய பாதைகளைத் திறந்துவிடுவதோடு வெவ்வேறு திசைகளைச் சுட்டிக்காட்டி புத்தம்புதிய தேடல்களுக்குரிய ஒரு வரைபடமாகவும் இருக்கவேண்டும். இதற்கு, ‘காகங்கள் கரையும் நிலவெளி’ ஒரு சிறந்த உதாரணம். தேர்ந்த வாசிப்பாளர்களின் தனிப்பட்ட புத்தகச் சேகரிப்பில் தவறாமல் இடம்பெறவேண்டிய புத்தகம்.

பதினெட்டு கட்டுரைகள் அடங்கிய இத்தொகுப்பை வாசகசாலை பதிப்பகம் வெளியிட்டுள்ளது. 

நூல்: காகங்கள் கரையும் நிலவெளி
ஆசிரியர்: சரோ லாமா
பதிப்பகம்: வாசகசாலை பதிப்பகம்
விலை: ரூ 200/-
தொடர்புக்கு: பாலு – 9962814443

********

elangomib@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button