இணைய இதழ்இணைய இதழ் 67தொடர்கள்

கடலும் மனிதனும்; 36 – நாராயணி சுப்ரமணியன்

தொடர் | வாசகசாலை

உயிருள்ள சோனார்கள்

மெரிக்கக் கடற்படையின் மிக முக்கியமான உறுப்பினர்களாக இவை போற்றப்படுகின்றன.  கே-டாக், கத்ரீனா, காஹிலி, மகாய் போன்ற பல பெயர்களில் இவை அமெரிக்காவின் கடற்படையில் தொடர்ந்து இயங்கி வருகின்றன. இவற்றின் பராமரிப்புக்காகவே பல பணியாளர்கள் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். இதை ஒரு திட்டமாக வகுத்து அமெரிக்க அரசு பிரம்மாண்டமாக செயல்படுத்தி வருகிறது. திட்டத்தின் பெயர் அமெரிக்க கடற்படையின் ராணுவ கடல் பாலூட்டிகள் திட்டம் (US Navy Military Marine Mammal Program). திட்டத்தின் அடிப்படை மிகவும் எளிமையானது. அமெரிக்காவின் கடற்படையில் சில வேலைகளுக்காக கடற்பாலூட்டிகளைப் பழக்கி அவற்றைப் பயன்படுத்துவதான் திட்டத்தின் ஒரே நோக்கம். 2019ம் ஆண்டின் கணக்குப்படி இந்தத் திட்டத்தின்மூலம் 70 ஓங்கில்களும் (Dolphins) 30 கடல் சிங்கங்களும் (Sea Lions) அமெரிக்க கடற்படையால் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்தத் திட்டத்தின் ஒரு ஆண்டு செலவு 14 மில்லியன் அமெரிக்க டாலர்கள், அதாவது இந்திய மதிப்பில் 115 கோடி ரூபாய். இது ஒரு ஆண்டுக்கான செலவு மட்டுமே, ஒட்டுமொத்தமாக இந்தத் திட்டத்தின் மதிப்பு பல நூறு மில்லியன் டாலர்கள் இருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இந்த கடல் பாலூட்டிகள் சிறு வயதிலேயே கடலில் இருந்து பிடிக்கப்பட்டு, பல்வேறு செயல்பாடுகளுக்காகப் பழக்கப்படுத்தப்படுகின்றன. தொலைந்துபோகும் கடற்படை வீரர்களை கவனித்து மீட்பது, கடற்படைக் கப்பல்களைப் பாதுகாப்பது, கடலில் இருக்கும் கண்ணிவெடிகளைக் கண்டுபிடிப்பது, தொலைந்த கருவிகளைக் கண்டுபிடித்து எடுத்துத் தருவது, அத்துமீறி எல்லைக்குள் வருபவர்களைக் கண்டுபிடிப்பது என்று பல்வேறு செயல்பாடுகளைச் செய்ய இவை பழக்கப்படுத்தப்படுகின்றன. 

இரண்டாம் உலகப் போரின்போது சில நீர்மூழ்கிகள் மிகவும் மோசமான வகையில் பழுதடைந்தன, அவற்றின் செயல்திறனும் எதிர்பார்த்த வகையில் இருக்கவில்லை. ஆகவே கடலுக்குள் மிகச்சிறப்பாக நீந்தும் ஓங்கில் போன்ற பாலூட்டிகளின் வடிவத்தையும் அவை நீந்தும் விதத்தையும் அடிப்படையாக வைத்து சிறப்பான நீர்மூழ்கிகளை உருவாக்கலாம் என்று ராணுவம் முடிவெடுத்தது. இதற்காக ஓங்கில்களையும் பிற பாலூட்டிகளையும் கவனிக்க ஆரம்பித்த ஆராய்ச்சியாளர்கள் அசந்து போனார்கள். துல்லியமான உடல் அமைப்பு, ஆற்றலைக் குறைவாகப் பயன்படுத்தி நீந்தும் பண்பு, வேட்டைத்திறன் என்று எல்லா விதத்திலும் அவை சிறப்பாக இருந்தன. அவற்றின் தகவல் தொடர்பு மற்றும் வழி கண்டுபிடிக்கும் முறையும் ஆராயப்பட்டது. வௌவால்களைப் போலவே கடல் பாலூட்டிகளும் ஒலியை வைத்து எதிரொலி இடமாக்கம் (Echolocation) மூலம் வழி கண்டுபிடிக்கின்றன என்பதையும் தெரிந்துகொண்டார்கள். அதாவது ஒலியை அனுப்பி, அது ஒரு பொருளின் மீது மோதி எதிரொலியாகத் திரும்பி வரும்போது அதைவைத்தே வழி கண்டுபிடிக்கும் ஆற்றல் இது. இந்த ஆற்றலை கவனித்த ஆராய்ச்சியாளர்கள், இந்தப் பண்பைக் கொண்ட கடல் பாலூட்டிகள் எல்லாமே துல்லியமாக இயங்குகின்றன என்பதையும் கண்டுகொண்டார்கள்.

பாலூட்டிகளை முன்வைத்து வடிவமைப்புக்கான யோசனையைப் பெறலாம் என்று கிளம்பிய ராணுவம், “இந்தப் பாலூட்டிகளையே பழக்கி நாம் ஏன் வேலைகளை முடித்துக்கொள்ளக்கூடாது?” என்று யோசித்தது. ராணுவ கடல் பாலூட்டித் திட்டம் பிறந்தது. முதற்கட்டமாக ஆர்கா என்று அழைக்கப்படும் ‘Killer Whale’ வகை ஓங்கில்களுக்குப் பயிற்சி கொடுக்க ஆரம்பித்தார்கள். அவை மிகவும் பிரம்மாண்டமாக இருந்தன என்பதால் பல நடைமுறை சிக்கல்கள் ஏற்பட்டன. ஆகவே அளவில் சிறிய ஓங்கில், கடல் சிங்கம், சீல் போன்ற பாலூட்டிகளைப் பழக்கத் தொடங்கினார்கள். 1959ம் ஆண்டில் வியட்நாம் போரின்போது முதல்முறையாக இந்தப் பாலூட்டிகளைப் போரில் பயன்படுத்தினார்கள். அடுத்தடுத்து வளைகுடாப் போர், ஈராக் போர் என்று இந்த விலங்குகள் தொடர்ந்து போரின்போது செயல்பட்டன. 2003ம் ஆண்டில் ஈராக் போரின்போது மட்டும் கடலில் இருந்த 100 கண்ணிவெடிகளை அமெரிக்கா கண்டுபிடித்ததாகவும், அவை எல்லாமே கடல் பாலூட்டிகளின் உதவியோடு கண்டுபிடிக்கப்பட்டன என்றும் தெரிவிக்கிறது ஒரு நாளிதழ்.

1960ம் ஆண்டிலேயே இது பற்றிய ஒரு சிறிய காணொளியை அமெரிக்க அரசு வெளியிட்டது. ஆனாலும் இவை போர் தொடர்பான தகவல்கள் என்பதால் 1990ம் ஆண்டு வரை இந்தத் திட்டம் பற்றிய விவரங்கள் எல்லாமே ராணுவ ரகசியமாகவே பாதுகாக்கப்பட்டன. 1990ம் ஆண்டில் இந்தத் தகவல்கள் பொதுவெளியில் வைக்கப்பட்டன என்பதால் இந்தத் திட்டத்தின் வரலாறு, இப்போது உள்ள விலங்குகளின் எண்ணிக்கை, அவற்றின் செயல்பாடுகள் போன்ற சில விஷயங்கள் வெளிச்சத்துக்கு வந்திருக்கின்றன. இந்த ஆராய்ச்சிகள் பனிப்போரின்போதும் நடந்திருக்கின்றன என்பதால் சோவியத் யூனியனிலும் பாலூட்டிகளைக் கடற்படையில் பயன்படுத்தும் வழக்கம் உருவானது. முதன்முதலாக எந்த நாடு போரின்போது பாலூட்டிகளைப் பயன்படுத்தியது என்பதில் குழப்பம் நிலவுகிறது. அமெரிக்காவில் இருக்கும் அதிகாரப்பூர்வமான திட்டம் பற்றிய தகவல்கள் மட்டுமே நமக்குக் கிடைத்திருக்கின்றன. சோவியத் யூனியனில் என்ன நடந்தது என்று தெளிவாகத் தெரியவில்லை. அமெரிக்க ராணுவத்தின் இணையதளங்கள், “இதை முதன்முதலில் செய்தது அமெரிக்காதான், நம்மைப் பார்த்துதான் சோவியத் யூனியனும் இதில் இறங்கியது” என்று அறிவிக்கின்றன. தன் தரப்பிலிருந்து தற்போதைய ரஷ்யாவும் இதுபற்றி கருத்து சொல்லவில்லை.ஆக, யார் இதை ஆரம்பித்தார்கள் என்பது புதிராக இருக்கிறது. யார் தொடக்கி வைத்திருந்தாலும் இரண்டு நாடுகளிலும் இந்த நடைமுறை புழக்கத்தில் இருக்கிறது என்பதே உண்மை. அமெரிக்காவில் ஓங்கில்களும் கடல் சிங்கங்களும் ராணுவத்தில் இயங்கின என்றால், சோவியத் படையில் பெலூகா (Beluga) என்று அழைக்கப்படும் வெள்ளைத் திமிங்கிலங்களையும் பயன்படுத்தினார்கள். 

தங்களது ராணுவத்தில் இருந்த சில கடல் பாலூட்டிகளை வேறு சில நாடுகளுக்கு ரஷ்யா விற்றுவிட்டது என்றும், ஈராக் போன்ற சில மத்திய கிழக்கு நாடுகளின் ராணுவங்களிலும் கடல் பாலூட்டிகள் உண்டு என்றும் சொல்லப்படுகிறது. இதுவும் உண்மையா என்று தெரியவில்லை. சந்தேகத்துக்குரிய, உறுதி செய்யமுடியாத தகவல்களை எல்லாம் விலக்கிவிடலாம். ஏதோ ஒரு நாட்டில் 1960களில் உருவான இந்த வழக்கம், அமெரிக்கா, ரஷ்யா, ஒன்றிரண்டு பிற நாடுகள் ஆகியவற்றில் இன்றும் தொடர்கிறது என்று புரிந்துகொள்ளலாம்.

சரி…. இந்த விலங்குகள் இதுபோன்ற தேடுதல்/மீட்பு/கண்டுபிடிப்புப் பணிகளுக்கு மட்டும்தான் பயன்படுத்தப்படுகின்றனவா? ஆமாம். இவை அவற்றுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. தாக்குதல் நடத்தவோ மனிதர்களைக் கொல்லவோ கொலைக்கருவிகளாகவோ அவை நிச்சயம் பயன்படுத்தப்படுவதில்லை. இதை அறிவியலாளர்களும் ஒப்புக்கொள்கிறார்கள். “இவற்றைத் தாக்குதலுக்குப் பயன்படுத்தலாம் என்று ராணுவத்தினர் ஒருவேளை நினைத்தாலும் அது சாத்தியமில்லை. ஏனென்றால் இந்த விலங்குகளை அந்த செயல்பாட்டுக்குப் பழக்கவே முடியாது” என்று அவர்கள் உறுதியுடன் சொல்கிறார்கள். இந்த விலங்குகளின் இயற்கையான பண்பே அவற்றைப் பாதுகாத்துவிட்டது. அது ஒரு பெரிய ஆறுதல். தாக்குதல் நடத்தப் பயன்படுவதில்லை என்றாலும் வேறு சில அத்துமீறல்கள் இந்தத் திட்டத்தில் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. அவற்றை எதிர்த்துப் பல விஞ்ஞானிகள் போராடி வருகிறார்கள். உரிமைச்சட்டங்களைப் பயன்படுத்தி இந்தத் திட்டத்தின் தகவல்களைப் பெற்று அதில் இருக்கும் அறிவியல் தன்மையை ஆராய்ந்து வருகிறார்கள். இந்தத் திட்டத்தின்மூலம் கடல் பாலூட்டிகளை நேரடியாக ஆய்வு செய்ய முடிகிறது என்றும், இதிலிருந்து ஆயிரக்கணக்கான ஆய்வுக்கட்டுரைகள் வந்திருப்பதாகவும் அமெரிக்க ராணுவம் தொடர்ந்து சொல்லி வருகிறது. “ஆராய்ச்சி நடப்பது உண்மைதான் என்றாலும் அதற்குக் கடுமையான விலை கொடுக்கவேண்டியிருக்கிறது” என்று சூழலியலாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். 

இந்தத் திட்டம் ஏன் மோசமானது என்பதற்கு சில அடிப்படையான விளக்கங்களைப் பார்க்கலாம். அதில் முதலாவதும் மிக முக்கியமானதுமான விளக்கம் – “ஒரு விலங்கைப் பிடித்து போருக்குப் பழக்குவதற்கு மனிதர்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது?” என்ற கேள்வி. இந்தக் கேள்விக்கு யாராலுமே பதில் தர முடியாது. நம்மிடம் அதற்கான அதிகாரம் இல்லை என்பதே உண்மை. “நாய்கள் காவல்துறையில் பயன்படுத்தப்படுகின்றனவே?” என்று நீங்கள் கேள்வி எழுப்பலாம். இப்போது உள்ள நாய்கள் மனிதர்களால் செயற்கைத் தேர்வு (Artificial Selection) மூலம் உருவாக்கப்பட்டவை. மனிதர்களின் அண்மை, அவர்களுடன் தொடர்ந்து இணைந்து செயல்படுவது ஆகியவற்றை விரும்பும் வகையில் நாய்களை நாம் உருவாக்கி வைத்திருக்கிறோம். 15,000 ஆண்டுகளுக்கு முன்பே நாய்களை நாம் வீட்டு விலங்குகளாக உருவாக்கத் தொடங்கிவிட்டோம். ஓங்கில்கள் அப்படிப்பட்ட வீட்டு விலங்குகளா என்ன? சுதந்திரமான விலங்கு ஒன்றைப் பிடித்து நம்முடைய தேவைக்காக அவற்றைப் பழக்குவது நிச்சயம் தவறுதான்.

இந்த விலங்குகள் கடலின் பரந்துபட்ட சூழலில் இருந்து பிடிக்கப்பட்டு சிறிய கூண்டுபோன்ற அமைப்புகளில் அடைக்கப்படுகின்றன. இவை அதீத அறிவாற்றல் கொண்ட சமூகப் பாலூட்டிகள். ஒரு கூண்டில் இருக்கும்போது இவை எந்தவிதமான ஊக்கமும் இன்றி சோர்ந்திருக்கின்றன. கப்பற்படை வீரர்களின் அருகாமை அவற்றின் வெறுமையை ஓரளவு போக்குகிறது, அது மட்டுமில்லாமல் கருவிகளை மீட்டெடுப்பது அவற்றுக்கு ஒரு விளையாட்டைப் போலத் தெரிகிறது. அந்த செயலை சரியாக செய்துவிட்டால் உணவு தரப்படுகிறது என்பதும் கூடுதல் நன்மைதான். இந்தக் காரணங்களால் மட்டுமே அவை இந்த வேலைகளை செய்கின்றன என்றும், அவை வேலை செய்வதாலேயே அவற்றுக்கு அந்த சூழல் பிடித்திருக்கிறது என்றும் புரிந்து கொள்ளக்கூடாது என்றும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். சமூகமாக வாழும் விலங்குகளை இப்படி ஒரு சிறு கூண்டில் தனியாக அடைத்து வைப்பதையும் அவர்கள் எதிர்க்கின்றனர்.

திட்டம் பற்றிய தகவல்களைத் தருவதற்குத் தயாராக இருக்கும் கப்பற்படை, இந்தத் திட்டத்தில் இருக்கும் விலங்குகளின் இறப்பு விகிதம், அவை இறந்த விதம் பற்றிக் கேட்டால் உடனே மறுக்கிறது என்கிறார் விஞ்ஞானி ரஸ் ரெக்டர். அதீத மன உளைச்சல், சரியான பராமரிப்பின்மை ஆகியவற்றால் பல விலங்குகள் இதில் இறக்கலாம் என்று அவர் கணிக்கிறார். ஒரு கட்டத்துக்கு மேல் இதன் தகவல்களைத் தேடிக்கொண்டே போனால், “ராணுவ ரகசியம்” என்று சொல்லி அவர்கள் கதவை மூடிவிடுகிறார்கள் என்றும் அவர் குற்றம் சாட்டுகிறார். இந்த விலங்குகள் வயது மூப்பிற்குப் பிறகு என்னவாகின்றன என்பது இன்னொரு முக்கியமான கேள்வி. அதைப் பற்றியும் சரியான தகவல்கள் கிடைக்கவில்லை.

“இந்தத் திட்டத்தால் விலங்குகளுக்கு ஏற்படும் பாதிப்புகளைப் பற்றிய சரியான தகவல்கள் எதுவுமே இல்லை, ஆகவே, சரியான முறையில் இதை எதிர்க்க முடியவில்லை” என்பதே இந்தத் திட்டத்தை எதிர்க்கும் சூழலியலாளர்கள் கூறும் பொதுவான கருத்து. பொதுவாகக் கடல்வாழ் பாலூட்டிகளை இப்படி அடைத்துவைப்பது கடுமையான பாதிப்புகளை ஏற்படும் என்று முந்தைய ஆய்வுகள் நிரூபித்திருக்கின்றன, ஆகவே, அவற்றை வைத்து இந்தத் திட்டத்திலும் பாதிப்பு வரும் என்று ஒரு யூகமாக மட்டுமே சொல்ல முடிகிறது. சரியான தரவுகளும் ஆராய்ச்சிக்கட்டுரைகளும் கிடைப்பதில்லை. ஏன் தகவல் இல்லை என்று கேட்டால், ராணுவ ரகசியம் என்பதைத் தாண்டி ஓர் அதிர்ச்சிகரமான காரணமும் இருக்கிறது.

உலகில் கடல் பாலூட்டிகள் பற்றி நடக்கும் ஆராய்ச்சிகளில் இரண்டில் ஒரு பங்கு, அதாவது 50% அமெரிக்க ராணுவம் மற்றும் கப்பற்படையின் நிதி உதவியுடன்தான் நடக்கிறது! நிதி உதவி தரும் அமைப்புகளுக்கு எதிரான ஆராய்ச்சியை நடத்த முடியாது, அது ஒரு முரண்பாட்டைத் தோற்றுவிக்கும். இதை Conflict of Interest என்பார்கள். ஆய்வறிக்கை சமர்ப்பித்தல், ஆய்வுக்கட்டுரைகளைப் பிரசுரம் செய்வது போன்ற பல செயல்பாடுகள் இதனால் தடைபடும். ஆராய்ச்சியும் ஆராய்ச்சியாளரும் அடுத்த கட்டத்துக்கு நகர முடியாது. ஆகவே, இந்தத் திட்டம் பற்றிய எதிர்மறையான ஆராய்ச்சிகள் நடப்பதில்லை. ஒருவேளை ஆங்காங்கே நடந்தாலும் அவை வெளியில் தெரிவதில்லை. ராணுவத் திட்டத்தில் இருக்கும் பாலூட்டிகளைக் காப்பாற்ற முடியாவிட்டாலும், உலகளாவிய பாலூட்டிகளையாவது ஆராய்ச்சி செய்யலாம், அவற்றைப் பாதுகாக்கும் திட்டங்களை வடிவமைக்கலாம் என்று ஒரு சமரசத்துக்கு விஞ்ஞானிகள் வந்துவிட்டார்கள். கடல்சார் ஆராய்ச்சிக்கான நிதி உதவியில் பெரும் போதாமைகள் இருப்பதால் உருவான சூழல் இது. அந்த சூழலை மாற்றாமல் விஞ்ஞானிகளைக் குறை சொல்லிப் பயன் இல்லை. அறிவியலின் மீதான எதிர்க்கருத்துகள் நிரம்பியிருக்கும் இந்த சூழலில், இப்படிப்பட்ட ஒரு கறுப்புப் பக்கத்தை வெளிப்படுத்துவதன் ஆபத்தை உணர்ந்தேதான் இதை எழுதுகிறேன். சில கசப்பான விஷயங்களை வெளிப்படையாகப் பேசித்தான் ஆகவேண்டும். குறைந்தபட்சம் அறிவியல் ஆராய்ச்சிக்கான நிதி உதவியின் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காகவேனும் இது பயன்படும்.

சமீபத்தில் வெளிவந்த Avatar – Way of Water திரைப்படத்தில் ஒரு காட்சி வந்தது. அதில், திமிங்கிலம் போன்ற துல்குன் என்ற கடல்விலங்குகளைப் பிடிக்கும் பெரும்படகில் ஒரு கடல்சார் ஆராய்ச்சியாளரும் இருப்பதாகக் காட்டியிருப்பார்கள். ஒரு பிரம்மாண்ட துல்குனைக் கொடூரமாகக் கொன்று அதிலிருந்து ‘அம்ரித்’ என்ற திரவத்தை சேகரிக்கும் கப்பலின் தலைவன், “இதற்காகத்தான் இத்தனை போராட்டம், மிகவும் விலையுயர்ந்த பொருள் இந்த அம்ரித். பண்டோராவில் இருக்கும் எல்லா நிதியும் இதிலிருந்து தான் வருகிறது” என்பார். பிறகு அந்த ஆராய்ச்சியாளரைத் திரும்பிப் பார்த்து, “உங்கள் ஆராய்ச்சிக்கான நிதியும் இதிலிருந்துதான் வருகிறது” என்பார். மெதுவாகத் தலையாட்டும் அந்த விஞ்ஞானி, “அதனால்தான் நான் மது குடிக்கிறேன்” என்று சொல்லிக்கொண்டே சோர்வாக நடந்துபோவார்.

இந்தக் காட்சியைப் பார்த்ததும் திகைப்பாக இருந்தது. கடல்சார் ஆராய்ச்சிக்குத் மிக அதிகமான நிதி உதவி தேவை. ஆகவே, அதில் சில கறுப்புப் பக்கங்களும் சேர்ந்துவிடுகின்றன. அப்படிப்பட்ட ஒரு இருண்மையான இடத்தை இந்த வசனம் தொட்டுச் சென்றது. துல்குன்களும் கடல் பாலூட்டிகளைப் போலவே சித்தரிக்கப்பட்டிருக்கின்றன என்பதால் கடல் சார் ஆர்வலரான ஜேம்ஸ் கேமரூன் தெரிந்தே இந்த வசனத்தை வைத்திருப்பாரோ என்றுகூட சந்தேகம் வந்தது.

சரி. நாம் மீண்டும் கடல் பாலூட்டித் திட்டத்துக்குத் திரும்புவோம். ராணுவத்திடமிருந்து நிதி உதவி பெறுகின்ற கடல் பாலூட்டி ஆய்வுகளில் பல முக்கியமான அம்சங்கள் பேசப்படுவதே இல்லை என்று விஞ்ஞானி லூசி வேட் 2010ம் ஆண்டில் ஆதாரப்பூர்வமாக நிரூபித்திருக்கிறார். ஆனால், இதையெல்லாம் அமெரிக்க ராணுவம் கண்டுகொள்ளவில்லை. இவ்வளவு ஏன், 1992ம் ஆண்டில் அமெரிக்காவின் அரசாங்கமே இந்த விலங்குகளை விடுதலை செய்துவிடுமாறு பரிந்துரை செய்தது, அமெரிக்கக் கப்பற்படை அதைக்கூட மதிக்கவில்லை! அது மட்டுமில்லாமல் அமெரிக்காவில் இருக்கும் தேசிய கடல் பாலூட்டி பாதுகாப்பு சட்டத்தின்படி கடல் பாலூட்டிகளை எதுவும் செய்யக்கூடாது. இந்த ராணுவத் திட்டத்துக்கு மட்டும் சட்டத்திலிருந்தே விதிவிலக்கு பெற்றிருக்கிறார்கள்! 

கடல் பாலூட்டிகளைப் பயன்படுத்தும் பிற நாடுகளிலும் இதுபோன்ற பல்வேறு விதிமீறல்கள் நடக்கக்கூடும். அமெரிக்காவைப் பற்றிய செய்திகளாவது ஓரளவு நமக்குத் தெரிகின்றன. பிற நாடுகளைப் பொறுத்தவரை அதுகூடக் கிடைப்பதில்லை. இன்னும் சொல்லப்போனால், எந்தெந்த நாடுகளில் இது நடக்கிறது என்பதே இன்னும் உறுதியாகத் தெரியவில்லை. ஒருவேளை தெரிந்தாலும் அதனால் விலங்குகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் பற்றிய எந்தத் தரவுகளும் கிடைக்காது என்பதுதான் சோகம். இந்தத் தகவல் போதாமை இருப்பதாலேயே அறிவியல் ரீதியாக இல்லாமல் அறம்சார்ந்து மட்டுமே இதை எதிர்க்கும் நிலை வருகிறது. அவ்வாறு குரல் கொடுப்பவர்களை எதிர்தரப்பினரும் எளிதில் ஒதுக்கிவிடுகிறார்கள். 

இதில் இன்னொரு கோணமும் உண்டு. “2014ம் ஆண்டு தொடங்கி அடுத்த மூன்று ஆண்டுகளில் இந்தத் திட்டத்தில் இருக்கும் பாலூட்டிகளுக்கு மாற்றாக ரோபாட்களை அறிமுகப்படுத்துவோம். 2017ம் ஆண்டின் முடிவில் முழுமையாக ரோபாட் பயன்பாட்டுக்கு மாறிவிடுவோம்” என்று அமெரிக்க ராணுவம் அறிவித்தது. இந்த அறிவிப்பு வந்தபோதே பல கடல்சார் விஞ்ஞானிகள் குபீரென்று சிரித்திருப்பார்கள். பல லட்சம் ஆண்டுகளின் பரிணாம வளர்ச்சியின்மூலம் விலங்குகளுக்கு வந்த தகவமைப்புகள், அவற்றின் அறிவுத்திறன், தவறுகளிலிருந்து கற்றுக்கொள்ளும் தன்மை ஆகிய எல்லாவற்றையும் ஒரு ரோபாட்டுக்குள் புகுத்திவிடலாம் என்பதே அபத்தமான இறுமாப்புதான். இது நிச்சயம் நடக்காது என்று அனைவருக்கும் தெரிந்திருந்தது. 

விஞ்ஞானிகள் கணித்தபடியே இத்தனை திறமைகளும் கொண்ட ரோபாட்களை உருவாக்க முடியவில்லை. இன்றுவரை எந்த மாற்றமும் நடக்கவில்லை. குறைந்தபட்சம் பாதியளவு திறமை படைத்த சில ரோபாட்களையாவது இவர்கள் அறிமுகப்படுத்தியிருக்கலாம். ஆனால், புத்திசாலியான பழக்கப்பட்ட விலங்குகள் உள்ளங்கை நெல்லிக்கனியாக இருக்கும்போது எதற்காக மெனக்கெட வேண்டும் என்று கடல் பாலூட்டித் திட்டத்தையே தொடர்ந்து நடத்தி வருகிறார்கள். கடல் அரசர்களான புத்திசாலி விலங்குகள் ஒரு மனிதன் புதைத்து வைத்த கண்ணிவெடியைத் தேட இன்னொரு மனிதனின் கட்டளைப்படி நீருக்குள் பயணிக்கின்றன. இந்த அபத்த நாடகம் தினந்தோறும் கடல்களில் அரங்கேறிக்கொண்டே இருக்கிறது.

போரில் பயன்படுத்தப்பட்ட விலங்குகள் இவை என்றால், உணவுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டாலும் அதிகம் அறியப்படாமலேயே அழிந்துவரும் கடல் விலங்குகளும் உண்டு. அது என்ன வரலாறு? 

(தொடரும்…)

nans.mythila@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button