அந்த ஏழு மணி நேரம்
நான் அவ்வப்போது பொறியியல் கருத்தரங்குகளில் பேசுவதுண்டு. உரைகளுக்கு முன்பாகப் பேச்சாளரை அறிமுகப்படுத்துவார்கள். இது சடங்கு மட்டுமல்ல, பேச்சாளரைப் புகழ்த்திச் சொல்வதன் மூலம் பேச்சைக் கேட்க வைக்கும் உத்தியுங்கூட. என்னைப் பற்றிய அறிமுக உரைகளில் என்னவெல்லாம் சொல்வார்கள் என்பது எனக்குத் தெரியும். அறிமுக உரை வாசிக்கப்படுவதற்கு முன்னரே அதை நான் வரி வரியாக அறிவேன். ஏனெனில், அதை நான்தான் எழுதிக் கொடுத்திருப்பேன். பல நெறியாளர்கள் தாங்களே கண்டுபிடித்து எழுதியதைப் போல நிறைய ஏற்ற இறக்கங்களோடு வாசிப்பார்கள். நானும் புதிதாகக் கேட்பது போல் நாணத்தோடு அமர்ந்திருப்பேன். ‘நெறியாளரின் விரிவான அறிமுகத்திற்கு அடியேன் நன்றியுடையேன்’ என்பதாகத்தான் எனது உரை பெரும்பாலும் தொடங்கும். அந்த அறிமுக உரையில் நான் ஓர் அம்சத்தை மறக்காமல் சேர்ப்பேன். அது ‘இவர் பிரிட்டனின் புகழ்பெற்ற கட்டமைப்புப் பொறியாளர் கழகத்தின் (Institute of Structural Engineers- IStructE) உறுப்பினர்’ என்பது. கழகம் புகழ் பெற்றதுதான். ஆனால் அதில் உறுப்பினராக ஒரு தேர்வு எழுத வேண்டும். அந்தத் தேர்வு ஏழு மணி நேரம் நடக்கும். ஏன் இப்படிக் கடுமையான தேர்வு நடத்துகிறார்கள்? என ஹாங்காங் பின்புலத்திலிருந்து தொடங்கலாம்.
1995இல் நான் ஹாங்காங்கிற்குப் புலம் பெயர்ந்தேன். ஒரு கட்டமைப்புப் பொறியியல் (structural engineering) நிறுவனத்தில் வேலை கிடைத்தது. ஹாங்காங், சிங்கப்பூர் போன்ற கீழை நாடுகளிலும் பல மேலை நாடுகளிலும் பொறியியல் பணிகளை வடிவமைக்கவும் கட்டமைக்கவும் மேற்பார்க்கவும் அரசுத் துறையில் பதிவு பெற வேண்டும். இதற்கு உள்நாட்டு, பன்னாட்டுப் பொறியியல் கழகங்களில் உறுப்பினராக இருப்பது அவசியம். இந்தக் கழகங்களில் உறுப்பினராக எழுத்துத் தேர்வுகளும் நேர்முகங்களும் உண்டு. பொறியியல் என்றில்லை, மருத்துவம், சட்டம், கணக்காய்வு முதலான தொழிற்துறைகளில் பணியாற்ற பட்டயம் (chartered) பெறுவதும் அரசிதழில் (gazette) பதிவு பெறுவதும் பல மேலை நாடுகளில் அவசியம். இந்தியாவில் கணக்காளர்கள் மட்டும்தான் பட்டயம் (Chartered Accountant- CA) பெறும் நடைமுறையைப் பின்பற்றுகிறார்கள்.
ஒருவர் பொறியியல் படித்ததும் பொறியாளர் ஆகிவிடுவதில்லை. அதற்குத் தொடர்ச்சியான பயிற்சியும் கல்வியும் அவசியம். படிப்பு முடிந்து பணியில் சேரும் ஒருவர் பட்டதாரிப் பொறியாளர் எனப்படுவார். இரண்டாண்டுகளுக்கு பிறகு அவர் ஹாங்காங் பொறியாளர் கழகத்தில் (Hong Kong Institution of Engineers- HKIE) பயிற்சிப் பொறியாளராகப் பதிவு செய்து கொள்ளலாம். அதன் பிறகு குறைந்தபட்சம் மூன்றாண்டு காலம் வடிவமைப்பு, கட்டமைப்பு உள்ளிட்ட முக்கியமான பிரிவுகளில் பணியாற்ற வேண்டும். பயிற்சிக் காலத்தில் கழகத்தின் ஒரு மூத்த உறுப்பினர் அவருக்கு வழிகாட்டியாக இருப்பார். ஒரு குறிப்பேட்டில் ஒவ்வொரு வாரமும் துறை சார்ந்து தான் கற்ற கல்வியை அவர் பதிவிட வேண்டும். அதை வழிகாட்டி மேற்பார்ப்பார். இதைத் தவிர ஆண்டிற்கு 50 மணி நேரம் தொழில் சார்ந்த கல்வியைப் பெற வேண்டும். இதற்குத் தொடரும் தொழிற்கல்வி மேம்பாடு (Contnuing Professioanl Development- CPD) என்று பெயர். கருத்தரங்குகள், களப்பயிற்சிகள், தொழில் ரீதியான சஞ்சிகைகள் போன்றவை வாயிலாக ஆண்டுதோறும் இந்த 50 மணி நேரக் கல்வியைத் தன் அம்புறாத்துணியில் சேர்த்துக்கொள்ள வேண்டும். உறுப்பினரான பின்னும் இந்தச் சேகரம் தொடரும்.
பயிற்சிக் காலம் முடியும் வேளையில் தேர்வர் இரண்டு கட்டுரைகள் எழுத வேண்டும். ஒன்று, ஒரு பட்டயப் பொறியாளராகப் பணியாற்ற தன்னை எப்படித் தகவமைத்துக் கொண்டிருக்கிறேன் என்று சொந்த அனுபவத்தின் வாயிலாக நிறுவ வேண்டும். இரண்டு, தான் பணியாற்றிய திட்டமொன்றை எடுத்துக்கொண்டு அதன் பொறியியல் கூறுகளை விளக்கி எழுத வேண்டும். இதன் பிறகு நேர்முகம் நடக்கும். அதில் தெரிவு பெற்றால் எழுத்துத் தேர்வு நடக்கும். அதிலும் தெரிவு பெற்ற பிறகு கழகத்தின் உறுப்பினராகலாம். பட்டயப் பொறியாளராவதும் அரசிதழில் பதிவு பெறுவதும் அடுத்த கட்டங்கள்.
ஹாங்காங் பொறியியல் கழகத்தில் (HKIE) ஒவ்வொரு பொறியியல் துறைக்கும் (branch/disciplne) தனிப் பிரிவு உண்டு. ஒவ்வொரு பிரிவிலும் இந்தப் பொது விதிகளில் சிற்சில மாற்றங்கள் இருக்கும். கட்டமைப்புத் துறையில் மட்டும் பெரிய மாற்றம் இருந்தது. அது எழுத்துத் தேர்வு தொடர்பானது. மற்ற எல்லாத் துறைகளிலும் எழுத்துத் தேர்வானது இரண்டு மணி நேரத்தையொட்டி இருக்கும். கட்டமைப்புத் துறை மட்டும் முன் குறிப்பிட்ட பிரிட்டனின் கட்டமைப்புப் பொறியாளர் கழகத்தின் (IStructE) தேர்வு எழுதுவதைக் கட்டாயமாக வைத்திருந்தது. இதுதான் ஏழு மணி நேரத் தேர்வு. இப்போது HKIE தனியாகத் தேர்வு நடத்துகிறது. ஏழு மணி நேரத்தில் மாற்றமில்லை.
இது படித்துப் பட்டம் பெற்று பணியில் சேரும் இளம் பொறியாளர்கள் பட்டயம் பெறுவதற்கான வழி. இதற்கு நேர் வழி (regular route) என்று பெயர். ஏற்கனவே 15 ஆண்டு காலம் பணியாற்றியவர்கள் வேறு ஒரு வழியைத் தெரிந்து கொள்ளலாம். அதற்கு குறுக்கு வழி என்றல்ல, முதிர் பாதை (mature route) என்று பெயர். இதில் தனியாகப் பயிற்சிக் காலம் இராது. கடந்த இரண்டாண்டுகளில் CPD சேகரம் இருந்தால், பதிவு செய்து கொண்டவுடன் தனது தகுதியைக் குறித்த கட்டுரையைச் சமர்ப்பிக்கலாம். கட்டுரை அங்கீகரிக்கப்பட்டால், அடுத்து தேர்வு எழுத வேண்டாம். மாற்றாக 10,000 வார்த்தைகளில் ஒரு பொறியியல் கட்டுரை எழுத வேண்டும். கட்டுரையின் உள்ளடக்கத்தைப் பொறுத்து இரண்டு மூத்த உறுப்பினர்கள் தேர்வாளார்களாக நியமிக்கப்படுவாகள். அவர்கள் கட்டுரை குறித்தும் தேர்வரின் பட்டயத் தகுதி குறித்தும் நேர்முகம் நடத்துவார்கள். தெரிவு பெற்றால் உறுப்பினராகலாம்.
ஹாங்காங்கில் பதிவு பெற்ற பொறியாளர்கள்தான் அரசுத் துறைகளுக்கு வரைபடங்களும் அறிக்கைகளும் சமர்ப்பிக்க முடியும்; கட்டுமானங்களை மேற்பார்க்க முடியும். ஆகவே போன சில மாதங்களிலேயே பட்டயம் பெறுவதன் முக்கியத்துவம் எனக்குப் புரிந்தது.
ஆனால், எனக்கு இரண்டு பிரச்சனைகள் இருந்தன. நேர் வழியில் போனால் பயிற்சிக் காலம் மூன்று ஆண்டுகள். நான் ஆதியிலிருந்து தொடங்க விரும்பவில்லை. முதிர் பாதையிலும் ஒரு சிக்கல் இருந்தது. நான் 1995இல் ஹாங்காங் போயிருந்தேன். அப்போது முதிர் பாதையைத் தேர்ந்தெடுக்கத் தொழில் அனுபவம் இரண்டாண்டு காலம் குறைவாக இருந்தது. நான் இரண்டு ஆண்டுகள் காத்திருந்து முதிர் பாதையைத் தேர்ந்தெடுக்கலாம் என்று முடிவெடுத்தேன்.
அடுத்த பிரச்சனை, ஏழு மணி நேரத் தேர்வு. கட்டுமானத் துறையில் முதிர் பாதையைத் தேர்ந்தெடுத்து மேற்சொன்ன ஏழு கடல்களைத் தாண்டினாலும் உறுப்பினராக முடியாது. அது ஏழு மணி நேரத் தேர்வை எழுதுவதற்கான அனுமதியாக மட்டுமே அமையும்.
கட்டுமானத் துறையிலேயே பணியாற்றினாலும் ஏழு மணி நேரத் தேர்வு என்பது மலைப்பாக இருந்தது. கட்டுமானத் துறை (structutal engineering) என்பது பொதுவியல் (civil engineering) எனும் பெருந்துறையின் பிரிவுகளில் ஒன்று. எனக்குப் பொதுவியல் துறையில் அனுபவம் இருந்தது. முதிர் பாதையில் பொதுவியல் துறைக்கு இன்ன பிற துறைகளைப் போல் ஏழு மணி நேரத் தேர்வு இல்லை. பொறியியல் கட்டுரை அங்கீகரிக்கப்பட்டால் உறுப்பினராகிவிடலாம். ஆகவே நான் பொதுவியில் துறையைத் தேர்ந்தெடுத்தேன்.
1998இல் முதிர் பாதையில் பொதுவியல் துறைக்கு விண்ணப்பித்தேன். ஒவ்வொரு கட்டமாகக் கடந்து 2000ஆம் ஆண்டில் ஹாங்காங் பொறியியல் கழகத்தில் (HKIE) உறுப்பினரானேன். அடுத்து இரண்டாண்டுகளில் அரசிதழில் பதிவு பெற்ற பொறியாளராகவும் இயன்றது. ஆனாலும் என்னோடு தோள் உரசிக்கொண்டிருந்த (உடன் பணியாற்றியவர்கள் என்று வாசிக்கவும்) பொறியாளர் பலரும் பிரிட்டனின் கட்டமைப்புப் பொறியாளர் கழகத்தின் (IStructE) உறுப்பினர்களாக இருந்தார்கள். அதாவது ஏழு மணி நேரக் கடலைத் தாண்டியிருந்தார்கள். அது என்னை உறுத்திக்கொண்டேயிருந்தது.
ஒரு புலர் காலைப் பொழுதில் பொருதிப் பார்கலாம் என்று முடிவு செய்தேன். விண்ணப்பம், தகுதிக் கட்டுரை, பொறியியல் கட்டுரை, நேர்முகம் என்று வரிசையாகத் தாண்டினேன். இப்படிச் சொல்வதன் மூலம் இவை வரிசைக்கிரமமாக நடந்தன என்பதல்ல பொருள். ஒரு முழு நேர வேலை பார்க்கும், ஒரு குடும்பத்தைப் போற்றும், இலக்கியத்திலும் அரசியலிலும் ஈடுபாடுள்ள, பல நேரங்களில் சோம்பல் மூடிக்கொள்ளும் ஒரு சராசரி நடுத்தர வயதுக்காரனுக்கு நேரும் எல்லாத் தாமதங்களையும் தாண்டியே இவை நடந்தன. நேர்முகத்தில் தெரிவானதும் ஆண்டிற்கு ஒரு முறை நடக்கும் ஏழு மணி நேரத் தேர்வெழுத அனுமதி கிடைத்தது.
இந்த எழுத்துத் தேர்வு எப்படி இருக்கும்? இதில் ஆறு கேள்விகள் இருக்கும். கான்கிரீட் கட்டிடம், இரும்புக் கட்டிடம், பாலம், கடலோரக் கட்டுமானம் ஆகியவற்றில் குறைந்தபட்சம் தலா ஒரு கேள்வி இருக்கும். இவை தவிர சுரங்கம், நிலத்தடிக் கட்டுமானம், பராம்பரியக் கட்டுமானம் முதலான இன்ன பிறவற்றிலிருந்து ஒன்றோ இரண்டோ கேள்விகள் இருக்கும். இவற்றிலிருந்து ஒரேயொரு கேள்வியை எடுத்துக்கொள்ள வேண்டும்.
கேள்வி எப்படி இருக்கும்? ஒரு ஏ4 பக்கத்தில் வழிகாட்டுப் படங்கள் இருக்கும். எதிர்ப் பக்கத்தில் வினா விவரிக்கப்பட்டிருக்கும். ஒரு தொழிற்சாலைக் கட்டிடம் குறித்த கேள்வி என்று வைத்துக்கொள்வோம். அதன் நீள அகலம் குறிப்பிடப்பட்டிருக்கும். கிரேன் இயங்க வேண்டிய உயரமும் அதற்கு மேல் அவசியமான உயரமும் தரப்பட்டிருக்கும். உள்ளே அமைய வேண்டிய இரண்டடுக்கு அலுவலகத்தின் பரப்பளவும் மண்ணின் தன்மையும் இருக்கும். அருகாமைச் சாலைகள், கட்டிடங்கள் குறித்த விவரம் இருக்கும். இவற்றிற்கு பாதிப்பு இல்லாமல் அடித்தளம் வடிவமைக்கப்பட வேண்டும். உள்ளுர் விதிகளின்படி முன்னாலும் பின்னாலும் விடவேண்டிய இடைவெளிகளைக் குறித்த குறிப்பு இருக்கும். சமயங்களில் அருகில் மழை நீர்க் கால்வாய் இருக்கும். அவை கடத்த வேண்டிய நீரளவும் தரப்படும். இது கட்டிடத்தின் தரைத் தளத்தின் உயரத்தை நிர்ணயித்துக்கொள்ள.
சரி, இந்த விவரங்களை வைத்துக்கொண்டு என்னவெல்லாம் செய்ய வேண்டும்? முதலில் இந்த தொழிற்சாலைக் கட்டுமானத்திற்கு இரண்டு சாத்தியமான திட்டங்களை, வழிகாட்டு வரைபடங்களோடு முன்மொழிய வேண்டும். மேற்குறித்த எடுத்துக்காட்டில் அடித்தளம் கான்கிரீட்டாகவும் கூரை (roof truss) இரும்பாகவும்தான் இருக்கும். தூண்களும் அலுவலகத் தளங்களும் கான்கிரீட்டாக இருக்கலாம், இரும்பாகவும் இருக்கலாம். இவற்றை இரண்டு சாத்தியங்களாக முன்வைத்து, அவற்றின் சாதக பாதகங்களை அலசி, இரண்டில் ஒரு திட்டத்தை தேர்ந்துகொள்ளலாம்.
அடுத்து, தேர்ந்த திட்டத்தை வடிவமைக்க வேண்டும். அதாவது அதன் அடித்தளம், தூண்கள், உத்திரங்கள், கிரேன்களைத் தாங்கும் அடைவு (bracket), கூரை இன்னோரன்ன முக்கியமான கட்டுமான உறுப்புகளின் அளவுகளைக் கணக்கிட வேண்டும். ஒரு கால்குலேட்டர் மட்டும் வைத்துக்கொள்ளலாம். அடுத்து, கட்டுமானத்தின் முக்கியக் கூறுகள் அடங்கிய படங்களை உரிய அளவில் (scale) வரைய வேண்டும். வரைபட உபகரணங்களுக்கு அனுமதி உண்டு. பிறகு எவ்விதம் கட்டுவது என்பதற்கான வழிமுறைகள் (method statements), கட்டுமானப் பொருட்களின் தரக்கட்டுப்பாடு முதலானவற்றைக் குறித்து ஓர் அறிக்கை எழுத வேண்டும். கட்டி முடிப்பதற்கான கால அளவை நிர்ணயித்து அதற்கேற்ற நிரல் (programme) ஒன்றை உருவாக்க வேண்டும்.
கட்டுமானக் காலத்தில் ஏற்படுக்கூடிய பிரச்சனை ஒன்றும் வினாத்தாளில் இருக்கும். எடுத்துக்காட்டாக, ஒரு வணிகக் கட்டிடத்தில் ஓர் அலுவலக அறையைக் கிடங்காக மாற்ற விரும்புவார் உரிமையாளர். அப்படியானால் அது கூடுதலாக பாரந்தாங்க வேண்டும். அதன் சாத்தியப்பாட்டைக் குறித்து உரிமையாளருக்குக் கடிதம் எழுத வேண்டும். அது அலுவல்ரீதியான மொழியில் இருக்க வேண்டும். தொழில்நுட்பத் தகவல்கள் இருந்தால், அது உரிமையாளருக்குப் புரியும்படியாக இருக்க வேண்டும்.
ஆக, இரண்டு திட்ட அறிக்கைகள், கணக்கீடு, வரைபடம், வழிமுறைகள், நிரல், கடிதம் ஆகிய அனைத்தையும் ஏழு மணி நேரத்தில் செய்து முடிக்க வேண்டும். சரி, ஒருவரால் ஏழு மணி நேரம் எப்படி இருந்த இடத்தில் இருந்தபடி தேர்வெழுத முடியும்? இடையில் அரை மணி நேரம் உணவு இடைவேளை இருக்கும். அப்போதும் அரங்கை விட்டு வெளியேற முடியாது. அவ்வேளையில் உண்பதும் உண்ணாமலிருப்பதும் அவரவர் விருப்பம். ஆனால் அந்த அரை மணி நேரத்தில் பேனா, பென்சிலைத் தீண்டக்கூடாது. எழுதவும் வரையவும் கூடாது. எத்தனை புத்தகங்களை வேண்டுமானாலும் கொண்டு போகலாம். அவற்றைப் புரட்டலாம். தடையில்லை. மதிய உணவோடு நொறுக்குத் தீனி, தேநீர் முதலானவற்றையும் கொண்டு போகலாம். தேர்வு நடக்கும்போது இருந்த இடத்தில் இருந்தபடியே தின்னலாம். குடிக்கலாம். கழிவறை உள்ளேயே இருக்கும். எத்தனை முறை போனாலும் தடை சொல்ல மாட்டார்கள்.
தேர்வுக்காகத் தயாரிக்கத் தொடங்கினேன். இந்தத் தேர்வு என்றில்லை, எல்லாத் தேர்வுகளுமே குறிபிட்ட கால அவகாசத்திற்குள் எல்லா வினாக்களையும் எங்கனம் நேரிடுவது என்கிற தந்திரோபாயத்தை வகுத்துக்கொள்வதுதான். இது ஆளாளாக்கு மாறுபடும். சீன இளைஞர்கள் அறிக்கைகளுக்கு கூடுதல் நேரம் தேவை என்றார்கள். எனக்குப் படம் வரைந்து பாகங்களைக் குறிப்பதற்குத்தான் அதிக நேரம் தேவைப்பட்டது. இதை முன்னுணர்ந்து நேரத்தைப் பிரித்துக்கொள்வது பயன் தரும்.
ஜூலை 16, 2004 அன்று அந்த ஏழு மணி நேரத்தை நோக்கி வீட்டிலிருந்து புறப்பட்டேன். மதிய உணவிற்கு ப்ரைட் ரைஸ், பிளாஸ்கில் காபி, பார்வைக்குக் குறிப்பு நூல்கள் எல்லாம் என் பையில் இருந்தன. தேர்வில் ஒரு எதிர்பாராத சிக்கல் வந்தது. ஹாங்காங்கில் நெடிதுயர்ந்த கான்கிரீட் கட்டிடங்கள் அதிகம். ஹாங்காங்கில் இந்தத் தேர்வு எழுதுவோரில் 90% பேர் கான்கிரீட் கட்டிடத்தையே தேர்ந்தெடுத்துப் படிப்பார்கள். நானும் அதையேதான் செய்தேன். முதல் கேள்வி கான்கிரீட் கேள்விதான். வடிவமைக்க வேண்டிய கட்டுமானத்தைப் பற்றிய குறிப்புகள்
மட்டும் இரண்டு பக்கங்களுக்கு மேல் நீண்டது. வரைமுறைகள் ஏராளமாக இருந்தன. நான் முழுக் கேள்வியையும் படித்தேன். எனக்கு வெள்ளிடை மலையாக விளங்கியது. இந்தக் கட்டுமானத்தை ஏழு மணி நேரத்திற்குள் வடிவமைப்பது என் திறனுக்கு அப்பாற்பட்டது. என் முன்னால் 6¾ மணி நேரம் இருந்தது. வினாத்தாளைப் புரட்டினேன். இரும்புக் கட்டுமானத்திலும் பாலத்திலும் தலா ஒரு கேள்வி. கடலோரக் கட்டுமனத்தில் இரண்டு கேள்விகள். இவை எதற்கும் நான் தயாராக இல்லை. கடைசிக் கேள்வி நிலத்தடி நீர்த் தேக்கம் (Flood Alleviation Tank). இதைப் பற்றி எனக்குக் கொஞ்சம் விவரம் இருந்தது.
ஹாங்காங்கின் மழைநீர் வடிகால்கள் 1989இல் விரிவுபடுத்தப்பட்டன. அப்போது வளர்ச்சியடைந்த பகுதிகளில் இடப் பற்றாக்குறையால் வடிகால்களைப் போதிய அளவில் அமைக்க முடியவில்லை. அதனால் 2000இல் தை-ஹாங் என்கிற இடத்தில் ஒரு பாதாளக் கிடங்கைக் கட்டினார்கள். பெருமழையின் போது, வடிகால்கள் பெருகினால், கூடுதல் மழைநீரை இந்தக் கிடங்குக்குக் கடத்தி விடுவார்கள். பிற்பாடு மழை குறைந்ததும் இந்த நீரை வடிகால்களுக்கு வெளியேற்றுவார்கள். இந்தக் கிடங்கு மூன்று கால்பந்தாட்டப் பரப்பளவிலானது. இதை நான் பார்த்திருந்தேன். பிற்பாடு இதே போன்ற இன்னொரு கிடங்கை
2017இல் ஹேப்பி வேலி எனும் இடத்தில் குதிரைப் பந்தய
மைதானத்தின் கீழும் கட்டினார்கள்.
இந்தியாவில் இப்படியான தொட்டிகள் கட்டப்படுவதில்லை. நிலத்திற்கு மேல் நம் முன்னோர்கள் விட்டுச் சென்ற எண்ணற்ற குளங்களையும் ஏரிகளையும் நாம் பராமரிப்பதில்லை என்பது வேறு. சரி, நிலத்தடி நீர்த் தேக்கத்தை வடிவமைக்கலாம் என்று முடிவெடுத்தேன். என் முன்னால் 6½ மணி நேரம் இருந்தது.
தேர்வானவர்களின் பட்டியலைக் குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் கழகத்தின் இணையதளத்தில் வலையேற்றுவார்கள். நான் மூச்சைப் பிடித்துக்கொண்டு பட்டியலைப் படித்தேன். ஆங்கிலப் பெயர்களுக்கும் சீனப் பெயர்களுக்கும் இடையில் ஒரு நீளமான தமிழ்ப் பெயரும் இருந்தது!
முடிவுகளில் ஹாங்காங் தேர்வர்களுக்கு ஓர் அதிர்ச்சி இருந்தது. பொதுவாக ஹாங்காங்கில் 30% பேர் தேர்ச்சி பெறுவார்கள். அந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 10%ஆகக் குறைந்தது. பலரும் கடினமான கான்கிரீட் கட்டிடத்தின் சுவரில் மோதிக்கொண்டதுதான் காரணம். நான் பாதுகாப்பாக நிலத்திற்கு அடியில் தஞ்சம் புகுந்திருந்தேன்.
தொடரும்…
வரும் இளம் தலை முறை பொறியாளர் களுக்கு அருமையான, தகுதியான வழிகாட்டி. நண்பன் என்னும் முறையில் பெருமிதம் கொள்கிறேன்.வளர்க நின் பொறியியல் திறமை. வணக்கம்