கடலும் மனிதனும் : 11 – சுவர்களால் சூழப்பட்ட சிறு கடல் – நாராயணி சுப்ரமணியன்

தனது குடும்பத்தினரோடு முதன்முறையாக சீவேர்ல்ட் மீன் காட்சியகத்துக்குள் நுழைந்தபோது சிறுமி டான் ப்ரான்சியாவுக்கு வயது ஒன்பது. ‘ஷாமூ’ என்கிற ஆர்கா திமிங்கிலத்தை விழிவிரியப் பார்த்த டான், தன் அம்மாவிடம் திரும்பி மகிழ்ச்சியுடன் சொன்னார் – “நான் பெரியவளானதும் ஆர்கா திமிங்கிலங்களுடன்தான் வேலை செய்யப்போகிறேன்”.
சவுத் கரோலினா பல்கலைக்கழகத்தில் விலங்குகள் பற்றிய பட்டப்படிப்பை முடித்துவிட்டு ஓங்கில் (டால்பின்) காட்சியகம் ஒன்றில் வேலை பார்த்தார் டான். தொடர் முயற்சியால் தனது கனவுக்கூடமான சீவேர்ல்டில் வேலைக்குச் சேர்ந்தார். இவரது ஆர்வத்தையும் அறிவையும் கவனித்த சீவேர்ல்ட் (Seaworld) நிர்வாகம், இரண்டு வருடங்களிலேயே அவரை ஆர்காக்கள் சார்ந்த பணிக்கு அமர்த்தியது. ஆர்காக்களோடு இணைந்து டான் நடத்திய எல்லா நிகழ்ச்சிகளும் பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன.
2010 பிப்ரவரி 24ம் தேதி… தில்லிகம் என்ற புகழ்பெற்ற ஆர்கா திமிங்கிலத்துடன் இணைந்து டான் ஒரு வெற்றிகரமான நிகழ்ச்சியை அப்போதுதான் நடத்தி முடித்திருந்தார். குளத்திலிருந்து தலையை நீட்டியபடி திமிங்கிலம் படுத்திருக்க, டான் அதன் தலையை மெல்ல வருடிக்கொண்டிருந்தார். என்ன நினைத்ததோ, திடீரென்று டானின் தலையில் போடப்பட்டிருந்த குதிரைவாலைக் கடித்து இழுத்தது தில்லிகம். நிலைதடுமாறிய டான் குளத்துக்குள் விழுந்தார்.
குளத்துக்குள் டான் விழுந்ததும் திமிங்கிலத்தின் மூர்க்கம் அதிகரித்தது. தாக்குதல் தொடங்கியது. டானின் இறந்த உடலைத் திமிங்கிலத்தின் வாயிலிருந்து மீட்கவே 45 நிமிடங்களாயின. முதுகெலும்பு உடைந்து, உடலில் பல்வேறு காயங்களுடன், ஒரு கை இல்லாத டானின் உடல் வெளியில் கொண்டு வரப்பட்டது. அதிர்ச்சியில் உறைந்தது சீவேர்ல்ட் நிர்வாகம்.
“டானின் இறப்பு கோரமான ஒரு நிகழ்வு. ஆனால் இது தற்செயலாக, எதிர்பாராமல் நடந்த ஒரு விபத்து அல்ல. பல வருடங்களுக்கு முன்னரே இந்தத் துயரச் சம்பவத்துக்கான விதை தூவப்பட்டுவிட்டது.” என்கிறனர் கடல்சார் ஆய்வாளர்கள். கடல் பாலூட்டிகளை மனிதன் சிறை பிடிக்கத் தொடங்கியதிலிருந்தே பிரச்சனை ஆரம்பமாகிவிட்டது என்பது அவர்களது வாதம்.
1861ல் நியூயார்க் நகரத்தில் உள்ள ஒரு மீன் காட்சியகத்தில் பெலூகா (Beluga Whale) என்ற ஒரு வகை வெள்ளைத்திமிங்கிலம் காட்சிக்கு வைக்கப்பட்டது. உலகில் மனிதர்களால் சிறைபிடிக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்ட முதல் கடல் பாலூட்டி இதுதான். ஓங்கில்களை (டால்பின்) காட்சிப்படுத்தும் வழக்கம் 1938ல் தொடங்கியது. சும்மா அழகுக்கு மட்டும் வைத்திருந்த ஓங்கில்களுக்கு எளிய வித்தைகளையும் கற்றுத்தர முடியும் என்று போகப்போக மனிதர்கள் புரிந்துகொண்டார்கள். ஓங்கில்களை வைத்து நடத்தப்படும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் அதிகரித்தன.
ஆர்கா (Orca) என்று அழைக்கப்படும் பாலூட்டிகள் கடல் ஓங்கில் குடும்பத்தைச் சேர்ந்தவை. இவற்றையும் காட்சிப்படுத்த முயற்சிகள் எடுக்கப்பட்டன. இரண்டு ஆர்காக்கள் வெற்றிகரமாக சிறைபிடிக்கப்பட்டாலும் அவற்றை ஒரு தொட்டியிலோ கூண்டிலோ வைத்துப் பாதுகாக்கும் முயற்சிகள் தோல்வியடைந்தன.
டெட் க்ரிஃபின் என்ற தொழில்முனைவோருக்கு சிறு வயது முதலே கடல்பாலூட்டிகள் மீது ஒரு தீராக்காதல் இருந்தது. “மனிதர்கள் குதிரைகள் மீது சவாரி செய்வதுபோல நானும் ஓங்கில்களின் மீதும் திமிங்கிலங்களின் மீது சவாரி செய்வேன்.” என்று சொல்லிக் கொண்டேயிருப்பார். 1962ல் சியாட்டிலில் ஒரு கடல் மீன் காட்சியகத்தை உருவாக்கி வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருந்தார். தொழில் வெற்றிகரமாகப் போய்க்கொண்டிருந்தாலும் தனது திமிங்கிலக் கனவு இன்னும் நிறைவேறாதது அவர் மனதை அரித்துக் கொண்டேயிருந்தது.
1965ல் பெரிய ஆர்கா திமிங்கிலத்தை ஒரு மீனவர் பிடித்திருப்பதாக டெட்டுக்குத் தகவல் வந்தது. மீனவர் ஒரு பெரிய தொகையை எதிர்பார்க்கிறார் என்று புரிந்து கொண்ட டெட், அங்கும் இங்கும் கடன் வாங்கி தாள்களும் நாணயங்களுமாக 8000 டாலர்களை அள்ளிக் கொண்டு கடலுக்கு விரைந்தார். முழுப் பணத்தையும் வாங்கிக்கொண்ட மீனவர், “கை மல்யுத்தப் போட்டி ஒன்று வைத்துக் கொள்வோம், என் கையை நீ சாய்த்துவிட்டால் திமிங்கிலம் உனக்குத்தான்.” என்று சவால் விட்டார். அதிலும் ஜெயித்து திமிங்கிலத்தை வாங்கினார் டெட்.
கனவுகளால் உந்தப்பட்டு திமிங்கிலத்தை வாங்கி விட்ட டெட்டுக்கு அடுத்த சவால் காத்திருந்தது. இத்தனை பெரிய திமிங்கிலத்தை எங்கே கொண்டு போய் வைப்பது? எல்லாரிடமும் ஆலோசனை கேட்ட டெட், இரவோடு இரவாக வெல்டிங் பணியாளர்களை வைத்துக் கொண்டு கடலுக்குள்ளேயே ஒரு கூண்டு போன்ற அமைப்பை உருவாக்கினார்.
வாங்கிய திமிங்கிலத்துக்கு நாமூ என்று பெயரிட்ட டெட், அதனுடன் நீந்தத் தொடங்கினார். ஒருவழியாக அதன் அன்பைச் சம்பாதித்து அதன் முதுகிலும் ஏறி வெற்றிகரமாக சவாரி செய்தார்! ஒரு நாளைக்கு 14 மணி நேரம் நீருக்குள்ளேயே செலவிட்ட டெட், தன் புதிய நண்பனைப் புரிந்து கொள்ளத் தொடங்கினார். இந்தச் செய்தி ஊரெங்கும் பரவத் தொடங்கியது. மக்கள் ஆர்வமாக இதைப் பற்றி விவாதித்தார்கள்.
ஆர்கா திமிங்கிலங்கள் ஆங்கிலத்தில் பொதுவாகக் கொலைகாரத் திமிங்கிலங்கள் (Killer whales) என்று அழைக்கப்படுகின்றன. ஆர்காக்கள் மனிதர்களைப் பார்த்தவுடன் கடித்துத் தின்றுவிடும் என்றுதான் பொதுமக்கள் பரவலாக நம்பிக் கொண்டிருந்தனர். அப்படிப்பட்ட ஒரு காலகட்டத்தில் ஆர்காவுடன் ஒரு மனிதன் நீந்துகிறான், விளையாடுகிறான் என்ற செய்தி பலரையும் ஈர்த்தது. படகுகளின் மூலம் கூண்டுக்குச் சென்று பார்த்த மக்கள், “என்ன இது இவ்வளவு சாதுவா இருக்கு?” என்று பேசிக்கொண்டே வீடு திரும்பினார்கள். ஆர்காக்களைப் பற்றிய நேர்மறை எண்ணம் மனிதர்கள் மத்தியில் விதைக்கப்பட்டது.
சிறு கூண்டில் அடைபட்டதாலோ என்னவோ, அடுத்த ஒரு வருடத்துக்குள்ளேயே நோய்வாய்ப்பட்டு இறந்தது நாமூ. ஆனால் இந்த ஒரு வருட காலத்துக்குள் ஆர்காக்களை அணுக்கமான அறிந்து கொண்ட டெட், அடுத்தடுத்து ஆர்காக்களைப் பிடித்தார். தனது சியாட்டில் மீன் காட்சியகத்தில் ஆர்காவை வெற்றிகரமாகக் காட்சிப்படுத்தினார். ஷாமூ என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்ட பெண் ஆர்கா, ஏற்கனவே இருந்த ஆண் ஆர்காவுடன் முரண்பட்டுக் கொண்டேயிருந்தது. என்ன செய்வதென்று தெரியாமல் 75000 டாலர்கள் விலை வைத்து சீவேர்ல்ட்டுக்கு ஷாமூவை விற்றார் டெட்.
இப்படியாக சீவேர்ல்ட் அருங்காட்சியகத்தில் ஆர்காக்களின் பயணத்தைத் துவக்கி வைத்தது ஷாமூ. இப்போது உலக அளவில் 59 ஆர்காக்கள் காட்சிப்படுத்தப்படுகின்றன. அவற்றில் பெரும்பங்கு ஆர்காக்கள் இருப்பது சீவேர்ல்ட் காட்சியகத்தில்தான்.
மீன் காட்சியகத்தில் நீந்தும் மீன்களைப் பார்வையாளர்கள் கண்டு ரசிப்பார்கள். ஆனால் கடல் பாலூட்டிகள் புத்திசாலியான விலங்குகள் என்பதால் அவற்றுக்கு வித்தைகள் சொல்லித் தரப்படுகின்றன. தங்களோடு இணைந்து நடனமாடுவது, ஒரே மாதிரியாக நீந்துவது, ஒரே நேரத்தில் அழகாக நீரிலிருந்து வெளியில் குதிப்பது, இசைக்கு ஏற்றமாதிரி உடலை அசைப்பது என்று பல்வேறு வகையில் இந்தக் கடல்பாலூட்டிகளைப் பழக்குகிறார்கள் பயிற்சியாளர்கள். சில இடங்களில் வளையத்துக்குள் தாவச் செய்வது, நெருப்பு வளையத்தைத் தாண்டிக் குதிக்க வைப்பது போன்ற ஆபத்தான, குரூரமான வித்தைகளும் நடத்தப்படுகின்றன.
“டால்ஃபின் சிட்டி” என்ற பெயர் நினைவிருக்கிறதா? மார்ச் 1998ல் பல்கேரியாவிலிருந்து நான்கு ஓங்கில்கள் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டன. டால்ஃபின் சிட்டி என்ற ஒரு தீம் பார்க்கில் இவை காட்சிப்படுத்தப்பட்டன. சிறு சிறு விளையாட்டுகளைப் பார்வையாளர்கள் முன்னால் ஓங்கில்கள் நடத்திக் காட்டின. பார்வையாளர்கள் குவிந்தார்கள். கொண்டுவரப்பட்ட 6 மாதங்களிலேயே நான்கு ஓங்கில்களும் பரிதாபமாக இறந்தன! இதன் பிறகு கடல் சிங்கம் (sea lion) என்ற ஒருவகை கடல் பாலூட்டிகளோடு நிகழ்ச்சிகள் தொடரப்பட்டதாக சொல்லப்படுகிறது.
கொண்டுவரப்பட்ட பாலூட்டிகளின் இறப்பிற்கோ, பாலூட்டிகளால் மனிதர்கள் இறப்பதற்கோ காட்சியகங்களின் தரப்பிலிருந்து மேலோட்டமான சிறு காரணங்கள் மட்டுமே சொல்லப்படுகின்றன. ஆனால் பிரச்சனையின் வேர் ஆழமானது. “காட்சிப்படுத்துதல்” என்பதன் தேவையையே அது கேள்விக்குள்ளாக்குகிறது.
“விலங்குக் காட்சியகங்கள் ஏன் தேவை?” என்ற கேள்விக்கு சில அடிப்படையான பதில்கள் முன்வைக்கப்படுகின்றன. விலங்குகளை நேரில் பார்ப்பதால் மனிதர்கள் அந்த விலங்குகளை நேசிப்பார்கள்/மதிப்பார்கள் என்று சொல்லப்படுகிறது. இது ஓரளவு உண்மையும்கூட. ஆர்காக்கள் பற்றிய மோசமான பொதுக்கருத்துக்களை மாற்றியமைத்ததில் இந்தக் காட்சியகங்களுக்கு ஒரு பெரிய பங்கு இருக்கிறது என்பதை மறுக்க முடியாது. என்னதான் தொழில்நுட்பங்கள் வளர்ந்திருந்தாலும் ஒரு குறிப்பிட அளவுக்கு மேல் நேரடி கடல் ஆராய்ச்சிகளை செய்வது இன்னமும் கடினமாகத்தான் இருக்கிறது. ஆனால் ஒரு விலங்கை நம் அருகிலேயே வைத்து கவனிப்பதால் முக்கியமான சில சூழலியல் கூறுகளை எளிதில் புரிந்துகொள்ள முடியும். அழிந்துவரும் சில விலங்குகளை Captive Breeding என்ற இனப்பெருக்க முறையில் காப்பாற்றுவதற்கும் இது போன்ற காட்சியகங்கள் உதவுகின்றன.
இந்தக் காரணங்களைப் படிக்கும்போது “காட்சியகங்கள் தேவைதான்போல…” என்ற ஒரு பிம்பம் தோன்றலாம். ஆனால் காட்சியகங்களால் ஏற்படும் பிரச்சனைகளைக் கணக்கிலெடுத்துக் கொண்டால் புரிதல் தலைகீழாக மாறும்.
பாலூட்டிகள் அதிக தூரம் பயணிக்கும் இயல்பு கொண்டவை. உதாரணமாக ஆர்காக்கள் ஒரு நாளைக்கு 100 கிலோமீட்டர் பயணிப்பவை. சராசரியாக 100 முதல் 500 அடி ஆழம் வரை கடலுக்குள் சென்று உணவு தேடும் இயல்பு கொண்டவை. பெரும்பாலான காட்சியகங்களில் குளங்களின் அதிகபட்ச ஆழமே 40 மீட்டர்தான்! மோசமாக வடிவமைக்கப்பட்ட சில காட்சியகங்களிலோ குளத்தின் மொத்த நீளமே ஆர்காக்களின் உடல் நீளத்தைப் போல இரண்டு மடங்குதான்! ஒரு மனிதனை 10 அடி நீளமுள்ள ஒரு அறையில் வருடக்கணக்காக அடைத்து வைத்திருப்பதாக நாம் கற்பனை செய்துகொண்டால் இந்தச் சூழல் எத்தனை மோசமானது என்று புரியும். இதுபோன்ற சிறிய வாழிடங்களால் கடல் பாலூட்டிகளுக்குக் கடும் மன உளைச்சல் ஏற்படுகிறது.
புதிய விலங்குகள், கடற்தாவரங்கள், கடற்பறவைகள், மாறிக்கொண்டே வரும் கடற்காட்சிகள் என்று எதுவுமே இல்லாத ஒரு நீலக்குளத்தில் கடற்பாலூட்டிகள் வளர்க்கப்படுகின்றன. இதனால் இயற்கையான கடற்சூழலில் கிடைக்கும் அறிவுசார் தூண்டுதல் (Intellectual stimulation) முற்றிலுமாக இல்லாமல் போகிறது.
கடலில் 60 வருடங்கள் வரை வாழக்கூடிய ஆர்காக்கள், காட்சியகங்களில் அதிகபட்சமாக 16 வருடங்கள் வரைதான் வாழ்கின்றன. காட்சியகங்களில் வளர்க்கப்படும் ஒங்கில்கள், பெலூகா திமிங்கிலங்கள் ஆகியவற்றின் வாழ்நாளும் மிகவும் குறைவுதான். காட்சியகங்களின் வாழிடச்சூழலே பாலூட்டிகளைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொன்றுவிடுகிறது எனலாம்.
பெலுகா திமிங்கிலங்கள் பனிக்கடல்களில் வசிக்கும் இயல்புடையவை. அவற்றை வெப்பமான குளங்களில் வளர்ப்பது சரியல்ல. வெளிப்படையான உடனடி பாதிப்புகள் எதுவும் இல்லாவிட்டாலும் போகப்போக எதிர்மறை விளைவுகள் ஏற்படலாம்.
பெரும்பாலான கடல் பாலூட்டிகள் சமூக விலங்குகளாக வாழ்பவை. பெரிய கூட்டங்களில் குடும்பமாகவே மொத்த வாழ்நாளையும் கழிக்கும் இயல்பு கொண்டவை. அதிலும் ஆர்காக்களுக்கு சூழல் குடும்பம் (Eco type) என்ற ஒரு சமூக அமைப்பு உண்டு. ஒவ்வொரு சூழல் குடும்பத்துக்கும் தனித்தனியான மொழி, உணவுப் பழக்கம், வேட்டை முறை எல்லாமே உண்டு! இவை தலைமுறை தலைமுறையாகக் சொல்லித் தரப்படுகின்றன. இவை எதுவுமே காட்சியகங்களில் கிடையாது. பெரிய குடும்பத்தில் வாழ்ந்த பாலூட்டிகள் தனியாக விடப்படுகின்றன. சில சமயங்களில் வெவ்வேறு சூழல் குடும்பத்தைச் சேர்ந்த ஆர்காக்கள் ஒரே குளத்தில் விடப்படுவது உண்டு, இதனால் முரண்கள் அதிகரிக்கின்றன.
இயற்கையாக ஆழத்தில் நீந்தும் இயல்புள்ள பாலூட்டிகள், காட்சியகங்களில் உள்ள ஆழம் குறைவான குளங்களில் தண்ணீரின் மேற்பரப்பிலேயே அதிக நேரம் செலவிடும் நிலைக்குத் தள்ளப்படுகின்றன. இதனால் அவற்றின் உடற்கூறுகள் மாற்றமடையலாம். சிறிய குளத்திலேயே தொடர்ந்து வசிப்பதால் ஆர்காக்களின் மேல் துடுப்பின் திசுக்கள் வலுவிழக்கின்றன. ஒருகட்டத்தில் மேல் துடுப்புகள் வளைந்து சரிந்து விடுகின்றன. மேல் துடுப்பு வளைந்த ஒரு ஆர்காவைப் பார்த்தாலே, “இது ஒரு குளத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறது” என்று நாம் புரிந்துகொள்ளலாம்.
மோசமான வாழிடச்சூழல், இயற்கையான வேட்டை முறை இல்லாமல் உறைய வைக்கப்பட்ட மீன்களை மட்டுமே உண்ண வேண்டியிருப்பது, மன உளைச்சல் எல்லாம் கடல் பாலூட்டிகளைப் பெரிய அளவில் பாதிக்கின்றன. அடிக்கடி குளத்தின் சுவற்றில் முட்டிக்கொள்வது, குளத்திலிருக்கும் மற்ற விலங்குகளைத் தாக்குவது, குளத்தைச் சுற்றிப் போடப்பட்டிருக்கும் இரும்புக் கம்பிகளைக் கடித்து வாயைப் புண்ணாக்கிக்கொள்வது/பற்களை உடைத்துக்கொள்வது, காட்சியகங்களில் உள்ள கண்ணாடிகளை மோதி உடைப்பது, அடிக்கடி தலையை வெளியில் நீட்டியபடி சோகமாகக் குரலெழுப்புவது, குளத்தில் இருக்கும் மற்ற விலங்குகளைத் தாக்குவது, தன்னைத்தானே காயப்படுத்திக்கொள்வது, பயிற்சியாளர்களைத் தாக்குவது என்று பாலூட்டிகள் பல்வேறு வகைகளில் தங்கள் மன உளைச்சலை வெளிப்படுத்துகின்றன. பயிற்சியாளர் டானைக் கொன்ற தில்லிகம் என்ற ஆர்கா ஏற்கனவே மன உளைச்சலில் இருந்ததாக சொல்லப்படுகிறது. குளத்தில் வசித்த சக ஆர்காக்கள் தொடர்ந்து தில்லிகமைக் கடித்து காயப்படுத்தியிருக்கின்றன.கடலில் இதுபோன்ற மோதல் வந்தால் ஆர்காக்களால் விலகி நீந்திச் சென்றுவிட முடியும். ஆனால் ஒரு சிறிய குளத்தில், தொடர்ந்து துன்புறுத்தும் சக விலங்குகளோடு இருந்துதான் ஆகவேண்டும் என்ற கட்டாயம் வந்தால் எந்த விலங்கும் மூர்க்கமாக மாறும்!
தண்ணீரின் மேற்பரப்பிலேயே அதிக நேரம் செலவிடுவதால் கடல் பாலூட்டிகள் எளிதில் நோய்வாய்ப்படுகின்றன. கொசுக்களால் பரவும் தொற்றுநோய்கள், தோல் அழற்சி போன்ற பல பாதிப்புகள் ஏற்படுகின்றன. தொடர்ச்சியாக நோய்வாய்ப்படுவதால் அவற்றின் நோய் எதிர்ப்பு சக்தியும் உடல் வலுவும் குறைகிறது.
கடல் பாலூட்டிகளைப் பிடித்துக் காட்சிப்படுத்துவதால் ஏற்படும் இதுபோன்ற மோசமான விளைவுகள் ஆராய்ச்சிகளின் மூலம் நிரூபிக்கப்பட்டன. Blackfish முதலான பல்வேறு ஆவணப்படங்களும் இதுபோன்ற காட்சியகங்களுக்கு எதிரான தரவுகளை அழுத்தமாக முன்வைத்தன. சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், அறிவியலாளர்கள், பொதுமக்கள் என்று பல்வேறு தரப்பினரும் காட்சியகங்களுக்கு எதிராகக் குரல் எழுப்பினார்கள். அதன் விளைவாக, “கடலிலிருந்து பாலூட்டிகளைப் பிடித்துக் காட்சிப்படுத்தக்கூடாது.” என்று பல நாடுகள் தடை விதித்தன.”வணிகப் பயன்பாடுகளுக்காகவோ, காட்சிப்படுத்தவோ ஓங்கில்களைப் பிடிக்ககூடாது.” என்று 2013ல் தடைவிதித்தது இந்திய அரசு. “செயற்கை இனப்பெருக்க முறையைக் கை விடுகிறோம்.” என்று சீவேர்ல்ட் நிர்வாகம் 2016ல் அறிவித்தது.
இனிமேல் பாலூட்டிகளைப் பிடிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுவிட்டது…. ஏற்கனவே பிடிக்கப்பட்டு சிறைவைக்கப்பட்டிருக்கும் 59 ஆர்காக்கள், இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட ஓங்கில்கள், 227 பெலூகா திமிங்கிலங்கள் ஆகியவற்றை என்ன செய்வது?
பிரச்சனை இடியாப்பச் சிக்கலாக மாறுவது இங்கேதான்.
1993ல் Free Willy என்ற ஒரு திரைப்படம் வெளியானது. காட்சியகத்தில் இருக்கும் ஒரு ஆர்கா திமிங்கிலத்துக்கும் சிறுவனுக்கும் இடையே பூக்கும் நட்பை மையமாகக் கொண்ட திரைப்படம். சிறு குளத்தில் இருக்கும் ஆர்கா, தனது குடும்பத்தினருக்காகவும் கடலுக்காகவும் ஏங்குவதைப் புரிந்துகொள்ளும் சிறுவன் ஜெஸ்ஸி, திமிங்கிலத்தை வெற்றிகரமாக மீண்டும் கடலுக்கே கொண்டு சேர்ப்பதாகக் கதை முடியும். நிஜமாகவே காட்சியகத்தில் சிறை வைக்கப்பட்டிருந்த ‘கீக்கோ’ என்ற ஒரு ஆர்கா அதில் நடித்திருந்தது. படம் மிகப்பெரும் வெற்றியடைந்தது.ஆர்காக்களின் மன உளைச்சல் பார்வையாளர்களைத் தாக்கியது. “இந்தப் படத்தில் நடித்திருப்பதும் அப்படி சிறை வைக்கப்பட்ட ஒரு ஆர்காதானே! அந்த ஆர்காவை விடுவிக்கவேண்டும்.” என்று குரல்கள் எழுந்தன. பெரிய அளவில் கையெழுத்து இயக்கம் ஒன்று நடத்தப்பட்டது.
கீக்கோவை விடுவிக்கும் முயற்சிகள் தொடங்கின. 1998ல் முதற்கட்டமாக கடலிலேயே ஒரு பெரிய கூண்டு போன்ற அமைப்புக்குள் கீக்கோ விடப்பட்டது. தொடர்ந்து கீக்கோவின் உடல்நலம் கண்காணிக்கப்பட்டது. கடலின் சூழலுக்குக் கீக்கோ பழகியபின், ஒரு படகை எடுத்துக் கொண்டு கடலுக்குள்ளேயே கீக்கோவை நடைப்பயிற்சிக்கு அழைத்துச் சென்றார்கள் பயிற்சியாளர்கள். கொஞ்சம் கொஞ்சமாகக் கடலில் உள்ள ஆர்காக்களோடு கீக்கோவைப் பழக அனுமதித்தார்கள். கூண்டைத் திறந்துவிட்டு சுதந்திரமாகப் போகவும் வரவும் கீக்கோ பழக்கப்பட்டது. சில நாட்களில் கூண்டை விட்டு வெளியேறிய கீக்கோ, 2002ல் பல்லாயிரம் கிலோமீட்டர்கள் நீந்தி ஐஸ்லாண்டை வந்தடைந்தது. வந்த சில மாதங்களிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்தது!
கடலுக்குள் திரும்ப விடுவதற்கான எல்லா அறிவியல்பூர்வமான வழிமுறைகளும் பார்த்துப் பார்த்து செய்யப்பட்டன. ஆனாலும் கீக்கோவால் கடலில் வாழ முடியவில்லை. “கீக்கோவுக்குத் தானாக உணவு தேடுவதே மறந்துவிட்டது. மனிதர்களிடமிருந்து உணவு வாங்கியே பழக்கப்பட்ட ஒரு விலங்கைக் கடலில் விட முடியுமா? மனிதர்களின் உதவியின்றி வாழத் தெரியாமல்தான் அது நோய்வாய்ப்பட்டிருக்கிறது, அதற்குத் தனியாகத் தாக்குப்பிடிக்கத் தெரியவில்லை” என்று குரல்கள் எழுந்தன.
“ஒரு ஆயுள் தண்டனைக் கைதியை திடீரென்று வெளியில் விட்டால் என்ன ஆகும்? காட்சியகத்தில் பல வருடங்களாக வைத்திருந்துவிட்டு பிறகு நம் இஷ்டத்துக்கு இந்த விலங்குகளைக் கடலில் விடுகிறோம். அவற்றுக்கு மிக அதீதமாக பயம் வருவது இயல்புதானே?” என்கிறார் விலங்குகளின் பழக்கவழக்கங்கள்/உளவியல் குறித்து ஆராய்ந்துவரும் ஹெரால்ட் யூர்க்.
“இந்த விலங்குகளைத் திரும்ப கடலில் விடுவது என்ற பேச்சுக்கே இடமில்லை” என்பதே பெரும்பாலான அறிவியலாளர்களின் வாதம். கடலுக்குள்ளேயே சரணாலயங்கள் அமைத்து இந்த விலங்குகளைக் காப்பது பற்றிய ஆராய்ச்சியும் நடந்து கொண்டிருக்கிறது. இதற்கான சரியான தீர்வு என்ன என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது. கடலிலிருந்து இந்த விலங்குகளை வெளியில் எடுத்த அந்த நொடியிலிருந்தே அவை நம் பாதுகாப்புக்குள் வந்துவிட்டன. இப்போது காட்சியகங்களில் இருக்கும் கடல்பாலூட்டிகள் அனைத்தையும் இறுதி வரை மனிதர்கள்தான் காப்பாற்றவேண்டும் என்றே தோன்றுகிறது.
உலக அளவில் கடல் பாலூட்டிகள் பற்றிய உரிமைக்குரல்கள் தொடர்ந்து எழுந்தபடி இருக்கின்றன. கடல் பாலூட்டிகளை “Non Human persons” என்கிறார்கள். அதாவது “மனிதனைப் போலத் தோற்றம் இல்லாவிட்டாலும் அவையும் மனிதர்கள்தான், ஆகவே மனிதர்களுக்கு இருக்கும் சட்டரீதியான எல்லா உரிமைகளும் இவற்றுக்கும் உண்டு.” என்று ஒரு வாதம் முன்வைக்கப்படுகிறது.
சிரிப்பது போன்ற தோற்றம், பெரிய உடல், பாடல்கள்/ஒலி மூலமாகத் தகவல் பரிமாற்றம் செய்துகொள்வது, குடும்ப அமைப்பு, சோகமாக இருக்கும்போது அழுவதுபோலக் குரலெழுப்புவது, கூட்டமாக வசிப்பது, உணர்வுரீதியாக சூழலைப் புரிந்துகொள்ளும் தன்மை என்று கடல் பாலூட்டிகளிடம் பல தனித்தன்மைகள் உண்டு. ஆகவே அவற்றை மனிதர்கள் என்றே அங்கீகரிப்பதிலோ உரிமைக்குரல் எழுப்புவதிலோ நமக்கு எந்தச் சிக்கலும் இல்லை. ஆனால் இது எதுவுமே இல்லாத ஒரு சிறு மீனுக்கோ சிப்பிக்கோ அதே உரிமையை நாம் எளிதில் வழங்கிவிடுவோமா?
Animal Rights சார்ந்த விவாதங்கள் தடுமாறுவது இந்த இடத்தில்தான். ஒருபக்கம் உணவுக்காக விலங்குகளைக் கொல்வதுகூடத் தவறு என்று மேட்டிமைவாத உணவு மரபுகள் மற்றவர்கள் மீது திணிக்கப்படுகின்றன. விலங்குகளை மட்டுமே முன்னிறுத்தி சக மனிதர்களின் உணவுத் தேவைகளை, வாழ்வாதாரங்களைப் புறக்கணிக்கும் முயற்சி இது. மற்றொரு புறம் நம்மைப் போலவே இருக்கும் விலங்குகள் மீது மட்டும் நமக்கு வரும் தனிப்பட்ட கரிசனம். இது மனிதனை மட்டுமே மையப்படுத்திய Anthropocentric கருத்தாக்கத்தைத் தூக்கிப் பிடிக்கிறது. அழகாக இல்லாத, அருவருக்கச் செய்கிற, நமக்கு எந்த வகையிலும் உதவாத விலங்குகளுக்கும் எல்லா உரிமைகளும் உண்டு என்று நம்மால் ஏற்றுக்கொள்ள முடியுமா? ஒரு அழகான ஓங்கில் கொல்லப்பட்டதாக வரும் செய்தியையும் கடல் பாம்பு ஒன்று கொல்லப்பட்டதாக வரும் செய்தியையும் நாம் ஒரே பார்வையில்தான் அணுகுகிறோமா? விலங்குகளின் உரிமை பற்றிப் பேசும்போது அறிவியல் புரிதலும் மென்னுணர்வுகளும் சமநிலையில் இருக்க வேண்டியது அவசியம். இல்லாவிட்டால் அவை உணர்ச்சிவசப்பட்ட குரல்களுக்கே வழிவகுக்கும்.
“கடலின் அரசன்” என்று புகழப்படும் ஆர்காக்களை சிறு குளத்தில் சிறை வைத்த வரலாறு இது. “மீன்களின் அரசி” என்று புகழப்படும் ஒரு மீன், கடலிலிருந்தே கொஞ்சங்கொஞ்சமாக மறைந்து கொண்டிருக்கிறது. அது என்ன வரலாறு?