
கழுவும்போதே நழுவும் மீன்கள்
முட்டைப் பொடிமாஸ் சேர்த்து இந்த மீனை சமைப்பது டென்மார்க்கைச் சேர்ந்த ஒரு வழக்கம். இந்த இனத்தைச் சேர்ந்த சிறிய மீன்களை ஆலிவ் எண்ணெயில் பொரிக்கும் முறை ஸ்பெயினில் பிரபலமானது. இந்த மீனை வைத்து கபிடோன் ஃப்ரிட்டோ என்ற பெயரில் சமைக்கப்படும் ஒருவகை வறுவல் இத்தாலி நாட்டின் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுடைய முக்கிய உணவு. புகைபோட்டு வேகவைக்கப்படும் இந்த மீனை டச்சுக்காரர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். சோயா சாஸ் கலந்து இந்த மீனை சுட்டு அரிசிச் சோற்றுடன் தயாரிக்கப்படும் ஜப்பானிய உணவுக்கு உனாஜு என்று பெயர். பல நறுமணப் பொருட்களும் காரமும் நிறைந்த ஒருவகை நீரில் இந்த மீன்களைக் கொதிக்கவைத்து, அது ஜெல்லி போன்ற கட்டியாக ஆறியதும் பரிமாறும் முறை பதினெட்டாம் நூற்றாண்டிலிருந்தே இங்கிலாந்தில் புழக்கத்தில் இருக்கிறதாம். இரண்டாம் உலகப் போருக்குப் பின்னான காலகட்டத்தில் இந்த உணவுகளை விற்கும் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் லண்டனில் இருந்ததாக வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. நியூசிலாந்தின் மவோரி பழங்குடியினர் இந்த மீனை ஒரு மரபுப் பொக்கிஷமாகப் பார்க்கின்றனர். இது நீர்நிலைகளைக் காக்கும் சக்தியாகப் போற்றப்படுகிறது.
நமது செய்தித்தாள்களில் குறிப்பிடப்படுவதுபோல இது ஒன்றும் “அரிய வகை வெளிநாட்டு இனம்” அல்ல! நீர்நிலைகளில் நாம் பார்க்கும் விலாங்கு மீன் (Eel) இனம்தான். உலகெங்கும் பல இடங்களில் இது மனித உணவு வரலாற்றோடு பின்னிப் பிணைந்திருக்கிறது. பண்டைய ஜப்பானில் கல்லறைகளில்கூட இந்த மீனின் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கிறதாம். உலகெங்கிலும் 18க்கும் மேற்பட்ட விலாங்கு இனங்கள் உண்டு. நமது நீர்நிலைகளில் குளிரி, கருங்குளிரி, குழிப்பாம்பு, அணைக்குத்தி, பொரிவிலாங்கு போன்ற பல இனங்கள் காணப்படுகின்றன. வயலில் மேயும் மலங்கு (விலாங்குகளின் சங்ககாலப் பெயர்) மீன்களைப் பிடித்து நறுக்கி சமைத்து புது நெல் அரிசிப் பொங்கலோடு வயல் தொழிலாளர்கள் சாப்பிட்டதாகக் கூறுகிறது புறநானூறு.
“வயலில் மேயும் மீனா? கடல்சார்ந்த கட்டுரையில் இந்த மீனுக்கு என்ன வேலை?” என்று கேட்கிறீர்களா? இது வயலிலும் இருக்கும், ஆற்றிலும் இருக்கும், கடலிலும் இருக்கும்! கடலில் பிறந்து நன்னீரில் வாழ்ந்து மீண்டும் கடலுக்கே வந்து இனப்பெருக்கம் செய்யும் மீன் இது.
1980களோடு ஒப்பிடும்போது இந்த மீன் பெருமளவில், அதாவது 95%க்கும் மேலாக அழிந்துவிட்டதால் உலகெங்கும் இதுபற்றிப் பரவலாகப் பேசப்படுகிறது. சூழலியலாளர்களுக்கு இந்த மீனின் அழிவு ஒரு கவலை என்றால், ஆராய்ச்சியாளர்களுக்கு இருக்கும் கவலை வேறு விதமானது. “கடலில் இனப்பெருக்கம்” என்று சொல்கிறோமே தவிர, இந்த மீன்களின் இனப்பெருக்கம் பற்றியோ வாழ்க்கை சுழற்சி பற்றியோ மனிதர்களுக்கு அவ்வளவாகத் தெரியாது. தேடித் தேடிப் பார்த்துவிட்டு “இந்த மீன்கள் இணைசேர்வதில்லை, புதிய தலைமுறை அப்படியே உதிக்கிறது” என்று எழுதினார் கிரேக்க அறிஞர் அரிஸ்டாட்டில், விலாங்கு மீன்கள் சூரியக் கடவுளுக்குப் பிடித்தமானவை என்பதால், நைல் நதியில் சூரியனின் வெப்பம் படும்போது அவை புதிய தலைமுறையாக உயிர்த்தெழுகின்றன என்று பண்டைய எகிப்து மக்கள் நம்பிக்க்கொண்டிருந்தார்கள். திடீரென்று இந்த மீன்கள் உயிர்த்தெழுவது பற்றிய பண்டைய நம்பிக்கைகள் இப்போது நகைப்புக்குரியதாக இருக்கலாம். ஆனால் இந்த காலகட்டத்திலும் விலாங்கு மீன்களின் இனப்பெருக்கம் பற்றி நமக்குப் போதுமான அளவு தெரியவில்லை என்பதுதான் சோகம். பண்டைய எகிப்தியர்கள் இப்போது வந்து, “நாங்கள் ஏதோ சொன்னோம், கிண்டலடிக்கிறீர்கள். அதெல்லாம் சரி. நீங்கள் என்ன கண்டுபிடித்தீர்கள்?” என்றால் நாம் தலையைத் தொங்கப் போட்டுக் கொள்ள வேண்டியதுதான்.
அட்லாண்டிக் கடற்பகுதியில் பெர்முடாவுக்கு அருகில் இருக்கும் ஸர்காஸோ என்ற ஒரு கடலில்தான் இந்த மீன்கள் இனப்பெருக்கம் செய்கின்றன என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். இவை நன்னீரில் இருந்து கடல்நீருக்கு செல்லும் என்பதும், கடலில் முட்டைகளிலிருந்து வெளிவரும் குஞ்சுகள் கண்ணாடி போன்ற உடல் கொண்ட Glass eel என்ற சிறு மீன்களாக நன்னீருக்கு வந்து சேர்கின்றன எனவும் நமக்குத் தெரியும். இதைத் தவிர பல விஷயங்கள் கேள்விக்குறியாகத்தான் இருக்கின்றன. இந்த மீன்கள் நன்னீருக்கு வந்து சேரும்வரை, அவற்றின் பால் அடையாளங்கள் தோன்றுவதில்லை. நன்னீருக்கு வந்ததும் இவை ஆண்களாகவோ பெண்களாகவோ உருமாறுகின்றன! ஏன் இந்தப் பண்பு இத்தனை தாமதமாக முடிவாகிறது, இது எப்படி நடக்கிறது, ஒரு மீன் ஆணாகவோ பெண்ணாகவோ வாழப்போவதை நிர்ணயிப்பது எது என்பதெல்லாம் யாருக்கும் தெரியாது. கண்ணாடி விலாங்குகளை நன்னீரில் பிடிக்கும் பழக்கம் பல இடங்களில் உண்டு. ஆனால் வளர்ந்த விலாங்குகள் கடலுக்கு வலசை போவதை யாரும் பார்த்ததில்லை. அந்த வலசைக்கு உந்துசக்தியாக எது இருக்கிறது என்பதும் யாருக்கும் தெரியாது. கடலில் இவை இனப்பெருக்கம் செய்வது எப்படி என்றும் அறிவியலாளர்களால் இதுவரை கண்டுபிடிக்க முடிவதில்லை. அட, இவ்வளவு ஏன்? கடலுக்குப் போகும் வளர்ந்த மீன்கள் மீண்டும் நன்னீருக்குத் திரும்புவதில்லை என்பதாலேயே அவை இனப்பெருக்கம் முடிந்தபிறகு கடலில் இறந்துவிடுகின்றன என்று சும்மா கணித்துவைத்திருக்கிறார்கள்! இவை கடலில் என்ன செய்கின்றன, இனப்பெருக்கத்துக்குப் பிறகு என்னவாகின்றன என்பதெல்லாம் புரியாத புதிர்தான்.
இந்த அளவுக்கு நாம் அறியாத ஒரு இனம் அழிகின்றது என்றால் அதை எவ்வளவு துயரமானது? ஒரு பரிசுப்பொருளைப் பிரிக்காமலேயே எரித்துவிடுவதுபோன்றது இந்த நிலை. இதை அறிவியலாளர்கள் பெயரற்ற அழிவுகள் (Unnamed extinctions) என்கிறார்கள். கேட்பாரற்றுப் போன அழிவுகள் என்றும் இதை நாம் புரிந்துகொள்ளலாம். ஒருபுறம் சூழலியலாளர்கள் அழிவைத் தடுக்கும் வேலைகளில் இருக்க, அறிவியலாளர்கள் இவை அழிந்துவிடுவதற்குள் ஆராயப்படவேண்டும் என்று முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்கள்.
தேவைக்கு அதிகமாகப் பிடிக்கப்படுவது, நீரோட்டங்களில் மாற்றம் ஏற்படுவதால் வலசைப்பாதையில் ஏற்படும் தடைகள், ஒட்டுண்ணி நோய்கள், நீர் மாசு, வாழிட இழப்பு மற்றும் வலசைப் பாதைகளைத் தடுக்கும் அணைகள் ஆகியவை இந்த விலாங்கு இனங்களின் அழிவுக்கு முக்கியக் காரணமாக சொல்லப்படுகின்றன. “இதுபோன்ற இனங்கள் அழியும்போது பொதுமக்கள் அதுபற்றிப் பெரிதாகக் கவலைப்படுவதில்லை. பாம்பு போன்ற கறுத்த உடலுடன் ஏதோ விநோதமாக இருக்கின்றன என்பதாலேயே இந்த விலங்குகளுக்கு ஆதரவு கிடைப்பதில்லை” என்கிறார் இந்த மீன்களை ஆராய்ந்துவரும் ஜேம்ஸ் ப்ரோசெக்.
இந்த மீன்களின் அழிவுக்கு இன்னொரு முக்கிய காரணமாக சொல்லப்படுவது, கண்ணாடி விலாங்குகள் என்று அழைக்கப்படும் சிறிய மீன்களைக் குறிவைத்துப் பிடிக்கும் பழக்கம். பெரிய மீன்கள்தான் உணவாகப் போகின்றன எனும்போது, சிறிய மீன்கள் ஏன் பிடிக்கப்படுகின்றன என்று தேடிப் போனால், ஒரு சிக்கலான வர்த்தகப் பாதை நம் கண்முன் விரிகிறது. இந்த வர்த்தகத்தின் இறுதி சந்தை ஜப்பானில் இருக்கிறது. ஹாங்காங் இந்த வர்த்தகத்துக்கான இடைப்பட்ட புள்ளி, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் சந்தைக்கான விலாங்குகளை வழங்கும் இடங்கள். உலக அளவில் மிக அதிகமாகக் கடத்தப்படும் வன விலங்குகளில் ஒன்றாக இந்தக் கண்ணாடி விலாங்குகள் மாறியிருக்கின்றன. இந்த வர்த்தகத்தின் அம்சங்களை விரிவாகப் பார்க்கலாம்.
2011ம் ஆண்டு ஜப்பானில் வந்த ஒரு சுனாமியால் அங்கு இருந்த விலாங்குகளின் எண்ணிக்கை அதலபாதாளத்துக்கு சரிந்தது. அதே நேரம் அந்த ஊரின் பாரம்பரிய உணவான உனாஜுவும் பிரபலமாகத் தொடங்கியது. ஜப்பானில் விலாங்குகளை வளர்க்கும் மீன் பண்ணைகள் தொடங்கப்பட்டன. பண்ணைகளில் வளர்க்க மீன்குஞ்சுகள் வேண்டுமல்லவா? அந்தத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காகக் கறுப்பு சந்தை களமிறங்கியது. அமெரிக்காவிலிருந்தும் ஐரோப்பாவிலிருந்தும் கண்ணாடி விலாங்குகள் கடத்தி வரப்பட்டன. அவற்றைத் தங்களது பண்ணைகளில் வளர்த்து இனத்தின் பெயரைக் குறிப்பிடாமல் ஜப்பானிய விலாங்குகளைப் போலவே விற்கத் தொடங்கினார்கள் பண்ணை முதலாளிகள். ஏற்கனவே அழிந்துகொண்டிருக்கும் இனம் என்றாலும் அதை மேலும் மேலும் பிடித்து ஐரோப்பிய விலாங்கு இனங்களை ஜப்பானுக்கு அனுப்பும் போக்கு தொடர்கிறது. பெட்டிகளில் மறைத்து வைக்கப்பட்டும் வேறு இறைச்சியின் பெயரை ஒட்டியும் இந்த மீன்கள் ஜப்பானுக்குக் கடத்தப்படுகின்றன.
ஜப்பானில் விற்கப்படும் விலாங்குகளை மரபணு ஆராய்ச்சிக்கு உட்படுத்திய ஒரு ஆய்வுக்குழு, “இவர்கள் ஜப்பானில் விற்கிற 45% விலாங்குகள் ஐரோப்பிய இனங்கள்! இவை இங்கு எப்படி வந்தன?” என்று கேள்வி எழுப்புகிறார்கள். ஜப்பானியப் பண்ணைகளில் இருக்கும் 40 முதல் 60% மீன்கள் வெளிநாட்டு இனங்கள் என்றும் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. ஜப்பானில் இருக்கும் தேவை ஒரு உலகளாவிய கறுப்பு சந்தையை உருவாக்கியிருக்கிறது.
2019ம் ஆண்டில் மட்டும் ஐரோப்பிய யூனியனின் காவல்துறை சட்டவிரோதமாகக் கடத்தப்பட்ட ஐயாயிரம் கிலோ விலாங்குகளைக் கைப்பற்றி இருக்கிறது. இதைத் தவிர பல சிறு ஐரோப்பிய நகரங்களில் 500 கிலோ, 700 கிலோ என்ற அளவில் கறுப்பு சந்தையிலிருந்து விலாங்குகள் கைப்பற்றப்படுகின்றன. 2019ம் ஆண்டில், இந்த வர்த்தகத்தின் இடைநிலைப் புள்ளியாக இருக்கும் ஹாங்காங்கில் 25.3 டன் விலாங்குகள் கைப்பற்றப்பட்டன. ஹாங்காங்கின் வணிகக் கட்டுப்பாடுகளின்படி, “விலாங்கு” என்று குறிப்பிட்டால் போதுமாம், இனத்தின் பெயரை அறிவிக்கத் தேவையில்லாததால், அங்கிருந்து கடத்தலை மேற்கொள்வது சுலபமாக நடப்பதாக வல்லுநர்கள் அனுமானிக்கின்றனர்.
சில ஆண்டுகளுக்கு முன்பாக, கண்ணாடி விலாங்குகளின் ஏற்றுமதியை ஐரோப்பா தடை செய்தது. அது ஓரளவு இந்த சந்தையைக் கட்டுப்படுத்தியது என்றாலும், ஐரோப்பாவிலிருந்து விலாங்குகளின் வருகை குறைந்ததால் கடத்தல் செய்பவர்கள் அமெரிக்காவைக் குறிவைக்கத் தொடங்கியிருக்கின்றனர். ஆரம்பகட்ட சில விசாரணைகளிலேயே 19க்கும் மேற்பட்ட சட்டவிரோத குழுக்கள் இந்த விலாங்குக் கடத்தலில் ஈடுபடுவதை அமெரிக்க வனவிலங்குத் துறை கண்டுபிடித்திருக்கிறது. அமெரிக்காவில் தொல்குடிகளைத் தவிர இந்த மீன்களை யாரும் அவ்வளவாக சாப்பிடுவதில்லை. இந்த வர்த்தகம் வருவதற்கு முன்புவரை அமெரிக்க நீர்நிலைகளில் விலாங்குகளின் எண்ணிக்கையும் நன்றாகவே இருந்தது. ஆனால் 2014ம் ஆண்டுக்குப் பின்னான காலகட்டத்தில் விலாங்குகளின் எண்ணிக்கை பாதியாகக் குறைந்திருக்கிறது. விலாங்கு வர்த்தகத்தின் முக்கியமான மையப்புள்ளியான மெய்ன் மாகாணத்தில் இந்தத் துறையின் மதிப்பு 38 பில்லியன் அமெரிக்க டாலர்கள்! இதே நிலை தொடர்ந்தால், ஐரோப்பிய விலாங்கு இனத்தைப் போலவே அதிவேகமாக அழிந்துவரும் இனமாக அமெரிக்க விலாங்கு இனமும் மாறிவிடும் என்று சூழலியலாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இத்தனை போராட்டங்களுக்கும் மீறி ஜப்பானியர்கள் ஏன் விலாங்குகளை சாப்பிடவேண்டும் என்று நினைக்கிறார்கள்? ஏனென்றால் விலாங்கு சாப்பிடுவது அவர்களது மரபின் ஒரு அங்கம். ஒவ்வொரு ஆண்டும் கோடைக்காலத்தின் மிக வெப்பமான நாள் டோயோ உஷினோஷி (விலாங்கு தினம்) என்று அழைக்கப்படுகிறது. இந்த நாளில் விலாங்குகளை சாப்பிடுவது உடலுக்கு ஆற்றல் அளித்து சூட்டைத் தணிக்கும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. அவர்களது மரபோடு பிணைந்திருக்கும் இனம் இது.
ஜப்பானைச் சேர்ந்த சில விஞ்ஞானிகள், இந்த மீன்கள் அழிந்துவிடக்கூடாது என்பதற்காக பல முயற்சிகளை எடுத்துவருகின்றனர். விலாங்குகளின் சுவை அவ்வளவு தனித்துவமானது அல்ல என்பதால் அதற்கு பதிலாக வேறு சில மீன்களை சமைத்து உணவுப்பழக்கத்தில் சேர்க்கும் முயற்சிகளும் நடந்துவருகின்றன. ஜப்பானில் உள்ள பல சூழலியலாளர்கள், விலாங்குகள் பற்றிய விழிப்புணர்வைப் பொதுமக்களுக்குக் கொண்டு சேர்ப்பதில் முனைப்புடன் இருக்கின்றனர். ஆய்வகத்தில் இந்த மீன்களின் செல்களை உருவாக்கும் முயற்சியும் நடந்துவருகிறது.
சூழலைப் பாதுகாப்பதற்காக ஜப்பானியர்கள் தங்களது மரபுப்பழக்கத்தைக் கைவிடத் தயாராக இருக்கிறார்களா என்பது ஒரு முக்கியமான கேள்வி. ஆனால் அந்தக் கேள்விக்குத் தேவையே இல்லாமல், ஜப்பானிய விலாங்குகளில் போதாமை வந்த உடனே அதை இட்டு நிரப்புவதற்குக் கறுப்பு சந்தை தயாராகிவிட்டது. கறுப்பு சந்தைகள் ஏன் உருவாகின்றன, அதற்கான பொருளாதார/அரசியல் காரணங்கள் என்ன என்பதைப் பல முந்தைய கட்டுரைகளில் பார்த்திருக்கிறோம். ஒரு கறுப்பு சந்தை உருவாகிவிட்டால் அதிசயமாக ஏதாவது நடந்தாலன்றி அதை அழிக்க முடிவதில்லை. ஒருவேளை இதெல்லாம் நடந்திருக்காவிட்டால் காலப்போக்கில் இந்த மீன்களின் எண்ணிக்கை குறைந்து,கிடைக்கும் மீன்களின் விலை ஏறி. அதனால் உணவகங்களின் பட்டியலிருந்து இந்த மீன் காணாமல் போயிருக்கும். மீதமிருக்கும் மீன்களைப் பாதுகாப்பதில் சூழலியலாளர்கள் கவனம் செலுத்தியிருப்பார்கள். இந்த மீன் பற்றிய விழிப்புணர்வையும் மக்களுக்கு ஏற்படுத்தியிருக்கலாம். கறுப்பு சந்தை உள்ளே நுழைந்ததால் எதுவுமே நடக்காததுபோல ஜப்பானிய உணவகங்கள் தொடர்ந்து இந்த மீனைப் பரிமாறிக்கொண்டிருக்கின்றன. பெரிய அரசியல் சிக்கல் இது.
இன்னொருபுறம் ஜேம்ஸ் ப்ரெஸ்காட் குறிப்பிட்டதுபோல கறுப்பான விநோதமான இந்த மீனுக்குப் போதுமான மக்கள் ஆதரவும் கிடைப்பதில்லை. இந்த மீனைப் பற்றிய அறிவியல் புரிதலும் குறைவு என்பதால் இதை எப்படி சரியாகப் பாதுகாப்பது என்பதற்கான வழிமுறையை உருவாக்குவதிலும் தாமதம் ஏற்படுகிறது. அந்த இடைவெளிக்குள் கறுப்பு சந்தை மீதமிருக்கும் மீன்களையெல்லாம் சுரண்டிக்கொண்டிருக்கிறது. அவர்களின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் விஞ்ஞானிகள் திணறுகின்றனர். இருக்கும் தகவல்களை வைத்து அவர்கள் தரும் அறிக்கைகளை அரசுகள் மதிப்பதில்லை என்பதும் ஒரு முக்கியமான குற்றச்சாட்டு. டிசம்பர் 2022ம் ஆண்டில், அறிவியல் ரீதியாக விஞ்ஞானிகள் தந்த கணக்கை விட அதிகமான உச்சவரம்பை விலாங்கு மீன்களுக்காக அறிவித்தது ஐரோப்பிய யூனியன். “இந்த உச்சவரம்போடு விலாங்குகள் பிடிக்கப்பட்டால் அவை நிச்சயமாக அழியும்” என்று விஞ்ஞானிகள் குரல் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள். அறிவியலுக்கும் சட்டத்துக்கும் அகப்படாமல் நழுவி நீந்திக்கொண்டிருக்கின்றன விலாங்கு மீன்கள்.
இது உணவுப்பழக்கத்தால் பாதிக்கப்படும் கடல் உயிரியின் வரலாறு என்றால், பொழுதுபோக்கு செயல்பாடுகளால் கடல் விலங்குகள் பாதிக்கப்படுவதும் உண்டு. அது என்ன கதை?
(தொடரும்..)