இணைய இதழ்இணைய இதழ் 69கட்டுரைகள்

பேதை முதல் பேரிளம்பெண் வரை – ஆர். காளிப்ரசாத்

கட்டுரை | வாசகசாலை

(எழுத்தாளர் அமுதா ஆர்த்தி அவர்களின் பருந்து சிறுகதை தொகுப்பு குறித்து வாசகசாலை அமைப்பின் மாதாந்திரக் கலந்துரையாடலில் 25-03-2023 அன்று ஆற்றிய உரையின் சுருக்கப்பட்ட வடிவம்) 

முதா ஆர்த்தி என்கிற பெயரை கேள்விப்பட்டிருக்கவில்லை என்றே கருதியிருந்தேன். ஆகவே சென்ற செவ்வாயன்று வாசகசாலை அமைப்பினர் இந்தப் புத்தகத்தை அளித்தபோது இந்த உரையை முன்னிட்டுதான் உடனே வாசிக்கத் துவங்கினேன். எனக்குப் புதிய எழுத்தாளர்களை வாசிக்கும் போது தொகுத்துக் கொள்வதில் சில தடுமாற்றங்கள் நேர்ந்துவிடும். அதுவும் ஒரு உரைக்காக குறுகிய காலத்தில் வாசிக்கும் போது, அதை தொடர்புபடுத்தி உள்வாங்கிக் கொள்ள முயல்வது வழக்கம். ஆகவே அவரது எழுத்துக்களை நாம் வாசித்த பிறரின் கதைகளை வைத்தே ஒப்பிடத் தோன்றும்.

ஆனால் தொகுப்பின் இரண்டாவது கதையின் தலைப்பை பட்டியலில் பார்த்தபோதே ஒரு தயக்கம் அகன்றது போல இருந்தது. ‘அவளது உடைமரக்காடும் வெட்டுக் கத்தியும்’ என்கிற அந்தக் கதையை நான் காலச்சுவடில் வந்தபோதே வாசித்திருக்கிறேன். அந்த கதைசொல்லல் முறை மிகவும் கவர்ந்திருந்தது. நண்பர்களிடமும் விவாதித்தேன். அதில் ஒரு கணவன் மனைவி உறவு மெல்லியதாக சொல்லப்படுகிறது. வீடு விஸ்தாரமாக சொல்லப்படுகிறது. விஸ்தாரமான வீடு அல்ல. சிறிய வீடுதான். ஆனால் கதையில் விஸ்தாரமாக சொல்லப்படுகிறது.  அதற்குக் காரணம் அந்த வீடு கணவனுக்கு தனது ‘குடும்பத் தலைவன்’ பெயரை காப்பாற்றும் பற்றுகோல். வீடில்லாதவனை நம்பி வந்தப் பெண் என்பது பெண்ணுக்கு அன்பின் குறியீடு. கணவனுக்கு அவனது பொருளியல் இயலாமையின் பார்வை. அந்த முரண் அழகாக சொல்லப்பட்டக் கதை அது. மனைவிக்கு கணவன் தன் மீது கவனம் கொள்ளவேண்டும் என்கிற ஏக்கமும், கணவனுக்கு ஊரார் முன் தன்னை கெளரவமாக காட்டிக் கொள்ள வேண்டிய விழைவும் கலந்து இடறுகின்றன. கொஞ்சம் கொஞ்சமாக வீடும் கணவனும் அவளுக்குள் அமையும் நேரத்தில் ஒரு சிறு ஏமாற்றம் நிகழ்கிறது. இதற்குள் இரு இழைகள் இருக்கின்றன. அவளது புறம், அவளது அகம் இரண்டும் கலந்து வருகிறது. நான் அந்தக் கதையை இரண்டுமுறை வாசித்தேன். எதை எந்தளவு சொல்லவேண்டும் என்று கூறுவதற்கான ஒரு உதாரணமான கதையாக அதைக் கூறலாம்.  அதன்பிறகு இந்தத் தொகுப்பின் பிற கதைகளை வாசிக்கும் போது தமிழ்வெளியில் வந்த ‘கரிச்சான்’ வாசகசாலையில் வந்த ‘இரவை வெளிச்சமிடும் வானம்’ ஆகிய கதைகளையும் வாசித்திருந்த்து நினைவுக்கு வந்தது. ஆகவே ஒருவகையில் இது நான் அறிந்த எழுத்தாளரின் தொகுப்பை பற்றி வாசிப்பதாக இருக்கிறது.  அதேசமயம் ஒரு புதிய எழுத்தாளரின் கதைகள் என்று மட்டும் இல்லாது ஒரு புதிய உலகிற்குள் நுழைகிறோம் என்றும் சொல்லத்தக்கதாக இருக்கிறது.  ஆகவே முதலில் எழுத்தாளர் அமுதா ஆர்த்திக்கு வாழ்த்துக்களும்  வாசகசாலைக்கு நன்றிகளும் கூறிக்கொள்கிறேன்

புதிய கதை உலகு என்று சொல்வது வழமையான சொல்லாக ஆகிவிட்டது. ஆகவே அது என்ன என்பதை விளக்க வேண்டும் என நினைக்கிறேன். பெண்ணின் அகவுலகு என்பதை ஆணின் கண்ணோட்டத்தில் வாசிப்பது என்பது எப்படிப் பார்த்தாலும் எழுத்தாளரின் புரிதல் என்பதுதான். ஆகவே அதை இதுதான் என்று உய்த்துணர முடியாது. ஒரு உதாரணத்துக்கு இதிகாச பாத்திரமான குந்தியின் பாத்திரம் பற்றிய அபிப்ராயங்கள் எப்படியெல்லாம் மாறுகின்றன. மைதிலி ஷரண் குப்தா, புராண பெண் பாத்திரங்கள் குறித்து எழுதுகிறார். அவர் பெரும்பாலும் உணர்வு நிலையில் நின்று எழுதுகறார். எவ்வளவு எழுதினாலும் பெண் கதாபாத்திரங்கள் மீது கருணையோ அல்லது உயர் மதிப்போ கொள்கிற  ஆணின் புரிதலுக்குச் சென்றுவிடுகிறது.  ஒருவகையில்   அதுவுமே தன்னை ஒரு படி மேலே நிறுத்திக் கொள்வது போலத்தான். ஆனால் அவருக்குப் பின்னால் வந்த  பெண் எழுத்தாளரான மஹாஸ்வேதாதேவி ஒன்று எழுதுகிறார். அவர் குந்தியை கருணையற்று அணுகுவதைக் காணமுடிகிறது. ஒரு தர்க்கமாக அவரது கேள்விகள் வாசகரை என்ன செய்கின்றன என்பதைத் தாண்டி அதில் இருக்கும் ஒரு கருணையற்றத்தன்மை பிடித்திருக்கிறது. அகவுலகைச் சித்தரிக்கும் இந்த பருந்து தொகுப்பின் கதைகளில் ‘நெகிழிக் கனவு’ என்கிற ஒரு கதை தவிர்த்த அனைத்தும் பெண்களின் அகத்தைக் கூறுபவையாக உள்ளன. எந்த அறிவுத்தேடலும் இல்லாத கதைகளாகவும் உணர்வுகளை நேரடியாக வெளிப்படுத்தும் கதைகளாகவும் உள்ளன. நேரடியாக என்றால் கோஷமாக அல்ல, நுட்பமாக வெளிப்படுத்துகின்றன. மாறுபட்ட வகை என்று சொல்லுவது இதைத்தான்.

அந்த வகையில் இதன் முக்கிய பலம் என்று இரண்டைச் சொல்லலாம். ஒன்று நடை, மற்றொன்று ஒவ்வொரு கதையின் கதைமாந்தர்கள். ‘கடல் கரம் பற்றிய தடம்’ கதையில் வரும் ராசாத்தியின் அப்பா பாத்திரம் தவிர்த்து பொதுவாகவே முரண்படும் கணவன், அடிக்கும் கணவன், வீட்டைவிட்டு வெளியேற்றும் கணவன், கோபித்து வெளியேறும் மகன் என இதில் வரும் அனைத்து ஆண்களும்  எதிர்மறை பாத்திரங்கள் என்று சொல்லலாம். 

ஆனால் அது வாசகருக்குத்தான் எதிர்மறை பாத்திரம். அந்தக் கதையின் நாயகிக்கு அவன் முற்றிலும் எதிர்மறையாக இருக்கிறானா என்பதுதான் இந்தக் கதைகளின் நுணுக்கம். அதை சரியாக கடத்துபவையாக இந்தக் கதைகள இருக்கின்றன. ஒரு வகையில் இங்கு திருமணம், குடும்பம் என்கிற அமைப்பு ஆணுக்கு சாதகமானது என்று அறிவுஜீவிகளால் வற்புறுத்தப்படுகிறது. நிறுவப்படுகிறது. ஆனால் அப்படி நீடித்து இருப்பதில் பெண்கள் தரப்பிலான சில கேள்விகளை இந்தக் கதைகள் வாசகர் மனத்தில் விதைக்கின்றன. ஆனால் எதுவுமே உரக்க பேசியோ அல்லது அதிர்ச்சியை சித்தரித்தோ நிகழ்வது இல்லை.  அதைச் சொல்வதில் ஒரு நேர்மையும் வெளிப்படைத்தன்மையும் இந்தக் கதைகளில் உள்ளன.  ஒரு பெண்ணின் மனம் எப்படி உணர்கிறது என்பதை பெண்கள் கூறும்போதுதான் ஒருவித புரிதல் கோணம் சிக்குகிறது. அதன் தொடர்ச்சியாக ஒரு விவாத பார்வையை வாசகருக்குள் உருவாக்குகிறது. 

புத்தகத்தின் பின்னட்டைக் குறிப்பைக் கண்டு இவரும் கன்னியாகுமரி / நாகர்கோயில் பகுதியைச் சேர்ந்த எழுத்தாளர் என்று அறிந்தபோது ஒரு வியப்பு உண்டானது. எழுத்தாளர்கள் நிரம்பிய அப்பகுதியில் அமுதாஆர்த்தியின் முன்தொடர்ச்சியாக   மா.அரங்கநாதனின் மனிதர்கள் நினைவுக்கு வருகின்றனர். ஒருவிதத்தில் தன்னைக் குறுக்கிக் கொள்ளும் மனிதர்கள். அல்லது தன்னை ஏமாற்றிக் கொள்ளும் மனிதர்கள். அவர் வெவ்வேறு மனிதர்களுக்கு முத்துக்கருப்பன் என்று ஒரே பெயரை சூட்டினார். அதேபோல் இங்கு அமுதாஆர்த்தி காட்டுவது ஒரு விதத்தில் ஒரே மக்களின் வாழ்க்கை, விளிம்புநிலை வாழ்க்கை என்று சொல்லலாம். ஒரே சமயத்தில்  ஒட்டுமொத்தமாக கைவிடப்பட்டும் யாரோ ஒரு பெயர் தெரியாதவரின் ஒரு நிமிட ஆதரவோடும் இருக்கும் மனுஷிகளின் கதைகள். 

அதில் சிறுமிகளின் விளையாட்டுத்தனத்தை வைத்து வரும் கதைகள் மிகவும் துள்ளலாகவும், திருமண வயது அல்லது காதல் வயப்பட்டவர்களின் கதைகள் சஞ்சலத்துடனும்,  மணமானவர்களின் கதைகள் ஒருவித பட்டும் படாத தன்மையுடனும் இருப்பதை உணரமுடிகிறது. ஆனால் ஒட்டுமொத்தமாக ஒரு வாழ்க்கை சித்திரத்தை கண்டடையவும் முடிகிறது. அனைத்துக் கதைகளையும் ஒன்றன்பின் ஒன்றாக வாசித்துக் கண்டடைய முடிகிறது. பெண்ணின் ஏழு பருவங்களை தொகுக்கிறதா என்று தோன்ற வைக்கிறது. அந்த வகையில் இதில் வரும் ஆம்பக்காய் கதை மிகவும் முக்கியமான ஒன்றாக வருகிறது. அதில் ஒரு குதூகலம் உள்ளது. ஒவ்வொரு கதையாக அந்த குதூகலம் மாறுவதைக் காணலாம். அது ஒருவித காவிய அழகியல். சீதையின் துயரைச் சொல்லும் கம்பனின் பாலகாண்டம் வெறும் மகிழ்ச்சியையும் ஆடலை பாடலை நீர்விளையாட்டுகளை  மட்டுமே சொல்லித் துவங்கி அவளின் துயரத்தை சொல்வது போல  இதிலும் இடையிற மகளிர்கள் எறிபுனல் மறுகுகின்றனர். குமுதம் போல அவர்களின் துவரிதழ் மலர்கின்றது. அந்த ஒரு சித்திரம் ஆம்பக்காய் கதையில் இருக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக அந்தச் சிறுமி வளர்வதைக் காண்கிறோம். வேறொரு கதையில் கொலுசுக்கு ஆசைப்படும் சிறுமி, பதின்ம வயதில் காதல் வசப்படும் கன்னியாக ஆகிறாள். இவர்கள் வெவ்வேறு பெண்களாக இருக்கலாம் ஆனால் அனைவருக்கும் சில விஷயங்கள் பொதுவானதாகவே இருக்கின்றன. அதிலும் இன்னும் பூடகமாக அவர் கூறும் ஒன்று இருக்கிறது. அவர்களில் பெரும்பாலானவர்கள் தாய் அல்லது தந்தை அல்லது இருவரும் இல்லாத பெண்களாக வருகிறார்கள். அத்தை சித்தி அல்லது பாட்டியுடன் வருகிறார்கள். ஆனால் அவர்களிடமும் ஒரு அந்நியோன்யம் இருக்கிறது.

இதில் ஆணை மையமாகக் கொண்ட  நெகிழிக்கனவு கதை, அது இயற்கை உபாதைக்கு எங்கு ஒதுங்குவது என்கிற நாயகனின் தவிப்பைச் சொல்கிறது. ஒரு சுதந்திர மனிதன் சுவருக்குள் அடைவதன் எதிர்வினையாகவும் அதைப் பார்க்கலாம்.  இதே சிக்கலை வீட்டைவிட்டு வெளியேறும் பெண்களும் எதிர்கொள்கின்றனர். அது கதையின் மையம் அல்ல ஆனால் அதைக் கூறியபடி செல்கிறார். இயல்பாக ஓடும் கதைகளில் அது மட்டும் தொடர்ந்து கவிக்கூற்றாக ஒலிக்கிறது.  அதேநேரம், கதாபாத்திரத்தின் உணர்வை உருவகப் படுத்துவதில் ஒரு நேர்த்தியையும் காட்சிப்படுத்தியது போல இருக்கிறது அவரது நடை. ‘கடல் கரம் பற்றிய தடம்’ கதையில் கடல் அலை என்பது தாய் மீதான அவளது அன்பாக மாறுவதும் ‘செல்வி’ கதையில் நாயகனின் தாய் மீதான   எதிர்ப்புணர்வு கொஞ்சம் கொஞ்சமாக திரிபடைய வைத்து அது எவ்வாறு அவன் வளர்க்கும் நாயான ‘செல்வி’ யின் மீதான வன்மமாக மாறுகிறது என்பதும் அதற்கான உதாரணங்கள்

சென்ற இரு ஆண்டுகளில் எழுத வந்த பெண் எழுத்தாளர்களில் இருவரை நான் முழுமையாக வாசித்திருக்கிறேன்  ஒருவர் அருண்மொழிநங்கை அவர்கள். அவர்கள் எழுத்தில் ஒரு செளந்தர்யம் இருக்கும். அதற்கு எதிரான ஒன்று பீபத்ஸம் என்பது. அமுதா ஆர்த்தி அவர்கள் கதைகளின் மாந்தர்கள் அத்தகையவர்கள். அவர்களின் கதை மாந்தர்கள் அடித்தட்டில் அல்லது அதற்கும் கீழே இருப்பவர்களாக இருக்கிறார்கள். அதைச் சித்தரிக்கும் அவரது நடையில் ஒரு அழகியல் இருக்கிறது. அதுவே அந்த தொகுப்பையும் மிகவும் அழகாக்குகிறது.

*****

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button