தொடர்கள்

கடலும் மனிதனும் : 4 – “நீங்கள் திரும்ப தண்ணீருக்குள் போகவே மாட்டீர்கள்” – ஹாலிவுட் பரிதாபங்கள்

-சு.நாராயணி

இருள் கவியும் நேரம். கடற்கரை

கடலுக்குள்  ஒரு பெண் தாவி நீந்தத் தொடங்குகிறாள். நீரில் துள்ளிமகிழ்வோடு நீந்துகிறாள். அவள் சிரித்து, விளையாடி, நீரைக் கலைக்கும் சத்தம்.

கடலுக்குள் அவள் கால்கள் அசைவது காட்டப்படுகிறது. கால்களுக்கு மிக அருகில் ஏதோ ஒன்று…. 

திடீரென்று அவள் இழுக்கப்படுகிறாள், சுதாரித்து நீந்துவதற்குள் அங்கும் இங்கும் அலைக்கழிக்கப்படுகிறாள், அலறுகிறாள். நீருக்குள் முற்றிலுமாக இழுக்கப்படுகிறாள்மீண்டும் அமைதியான கடல். அந்தி இருட்டு.

1975ல் வெளிவந்த ஜாஸ் (Jaws) திரைப்படத்தின் காட்சி இது. இருட்டு, அமைதிஅலறல், ஜான் வில்லியம்ஸின் பயங்கரமான பின்னணி இசைஒரு திகில் காட்சிக்கான எல்லா கூறுகளையும் கொண்டது

ஒரு சிறு நகரத்தில் இருக்கும் கடற்பகுதியில் பலரைக் கொல்லும்கொலைகாரசுறா மீனை மனிதர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பது பற்றிய கதை.  1974ல் பீட்டர் பெஞ்ச்லியால் எழுதப்பட்ட ஜாஸ் என்ற நாவலை அடிப்படையாக வைத்து ஸ்டீவன் ஸ்பீல்பர்க் இயக்கிய திரைப்படம்.

சர்வதேச அளவில், திரைப்பட உலகில் பல அதிர்வலைகளை ஏற்படுத்திய படம் என்று தாராளமாக சொல்லலாம். 100 மில்லியன் வசூலைக் குவித்த உலகின் முதல் ப்ளாக்பஸ்டர் இது. இன்றுவரை ஹாலிவுட்டில் எடுக்கப்பட்டு வரும் கோடைக்கால ப்ளாக்பஸ்டர் திரைப்படங்களுக்கெல்லாம் முன்னோடி. ஸ்பீல்பர்க்கின் புகழை உச்சத்துக்குக் கொண்டு சென்றது

“சுறாமீன்கள் மனிதர்களின் முகத்தை ஞாபகம் வைத்துக்கொண்டு, வன்மம் வைத்துக் கொல்லும்” என்பதுபோல அறிவியல் அடிப்படை இல்லாத பல புனைவுகள். நாவலின் பல பகுதிகளை சினிமாவுக்காக மாற்றிய ஸ்பீல்பர்க், ஆல்ஃப்ரெட் ஹிட்ச்காக்கின் திகில்பட உத்திகளை சேர்த்து தாக்குதல் காட்சிகளைப் படம்பிடித்தார்

திரையரங்கில் படம் பார்க்கும்போதே பலர் நடுங்கினார்கள்.. படம் பார்த்த குழந்தைகள் வீட்டுக்குள் இருக்கும் பாத் டப்பில் குளிக்ககூட பயந்தார்கள். படம் வெளியான பின்பு அமெரிக்காவின் கடற்கரைகளுக்கு மக்கள் செல்வது குறைந்தது.”நீங்கள் திரும்ப தண்ணீருக்குள் போகவே மாட்டீர்கள்என்ற திரைப்படத்தின் டேக்லைன் வெற்றிகரமாக நிஜவாழ்விலேயே நிகழ்த்திக்காட்டப்பட்டது.  

சில நாட்கள் கழித்து இந்தத் திரைப்படத்தின் வீச்சு நேரடியான பின்விளைவுகளைத் தர ஆரம்பித்தது. கூட்டம் கூட்டமாகப் படகுகளில் கிளம்பிய மக்கள் சுறாக்களைக் கொன்று அழித்தார்கள். சுறாக்களைக் கொல்லும் போட்டிகள் வைக்கப்பட்டன. கொல்லப்பட்ட சுறாக்களின் உடல் பாகங்கள் பெருமையாக விற்பனை செய்யப்பட்டன.

இதற்கெல்லாம் ஒரு படி மேலே போய்சுறாக்களைக் கொல்வது சரிதான்என்ற எண்ணம் ஆட்சியாளர்களுக்கே வர ஆரம்பித்தது.

இந்தத் திரைப்படம் காட்சிப்படுத்திய முக்கியமான ஒரு விஷயம்ரௌடி சுறா” (Rogue shark) என்பதுதான். அதாவது சாதாரணமாக மீன்களை மட்டும் சாப்பிடும் ஒரு சுறாமீன், எதேச்சையாகவோ வேறு ஏதோ காரணத்தினாலோ மனிதர்களை சாப்பிட ஆரம்பித்துவிட்டால் அதன்பிறகு மனிதர்களை மட்டும் தேடித் தேடி சாப்பிடும் என்று 1950களில் ஒரு கணிப்பு இருந்தது, இதுபோன்ற ஆட்கொல்லி சுறாக்களுக்குரௌடி சுறாஎன்றும் பெயர் வைத்திருந்தார்கள். ஜாஸ் திரைப்படமும் இப்படிப்பட்ட ஒரு ரௌடி சுறாவைப் பற்றியதுதான். திரைப்படத்தை ஊன்றிப் பார்த்தால், இந்த சுறாவைக் கொல்வதுதான் சரி என்ற முடிவுக்கு நாமே வந்துவிடுவோம் என்ற ரீதியில் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன.

இதைத்தான் Jaws effect என்கிறார் ஆஸ்திரேலியப் பேராசிரியர் க்றிஸ்டோஃபர் நெஃப். மூன்று முக்கியமான நம்பிக்கைகளால் மக்கள் சுறாக்களைக் கொல்வதை ஏற்றுக்கொள்கிறார்கள் என்றார்:

  1. மனிதர்களைக் கடிக்கும் சுறாக்கள் வேண்டுமென்றேதான் கடிக்கின்றன
  2. ஒரு சுறா மனிதனைக் கடித்துவிட்டாலே அவன் இறந்துவிடுவான். சுறா கடித்தால் மீளவே முடியாது.
  3. ரௌடி சுறாக்கள்தான் கடிக்கின்றன என்பதால் அந்த சுறாக்களைக் கொன்றால் மட்டுமே தாக்குதல்களை நிறுத்த முடியும்.

சாதாரண மக்கள் இதுபோன்ற பீதிகளில் சுறாக்களைக் கொல்வது ஒரு புறம் இருக்க, ஆஸ்திரேலியாவில் ஆட்சியாளர்களே இந்தரௌடி சுறாநம்பிக்கையில் சுறாக்களைக் கொல்ல பல முறை உத்தரவிட்டிருக்கிறார்கள் என்று தனது ஆய்வில் கண்டறிந்துள்ளார். ரௌடி சுறா என்ற ஒன்று அறிவியலின்படி சாத்தியமே இல்லை என்பதையும் குறிப்பிடுகிறார். 

ஹவாய்த் தீவுகளிலும் இதுபோன்ற பயங்களால் சுறாக்கள் கொல்லப்பட்டன. ஆட்சியாளர்களே அனுமதி கொடுத்தார்கள். பல இடங்களில் இது நடந்தது. “ஊரை மிரட்டிய சுறா கொல்லப்பட்டதுஎன்றெல்லாம் அறிவித்து மக்களை அமைதிப்படுத்துவார்கள்.

“திடீரென்று ஒரு திருப்பம்…. சத்தமே இல்லை. தண்ணீர் முதலில் இளஞ்சிவப்பாக மாறியது, பிறகு சிவப்பு, பிறகு அடர் சிவப்பு”

என்று சுறா பற்றிய ஒரு கவிதையில் வர்ணிக்கிறார் சார்லஸ் மார்ட்டின். இதுபோன்றதிகில்காட்சிகள் தான் சுறா திரைப்படங்களின் மூலதனம்

ஜாஸ் படத்தின் இமாலய வெற்றியால் அடுத்தடுத்து சுறாமீன் திரைப்படங்கள் வெளிவந்தன. ஜாஸ் 2, ஜாஸ் 3, டீப் ப்ளூ சீ, ஷேலோஸ், ரீஃப், ஒப்பன் வாட்டர் என்று பல படங்களில் சுறாமீன்கள் கொடூரமான மிருகங்களாக சித்தரிக்கப்பட்டன. 2018ல் கூட சுறாமீனை வில்லனாக சித்தரித்து மெக் என்ற ஒரு திரைப்படம் வெளியாகி வசூலை அள்ளியது.

குழந்தைகளுக்கான திரைப்படமானஃபைண்டிங் நீமோவில் வரும் ஒரு சுறாநான் கொடூரமானவன் என்று எல்லாரும் நினைக்கிறார்கள், நான் ஒரு நல்ல சுறா, நான் என்னை மாற்றிக்கொள்வேன், கொடூரமானவன் என்ற எண்ணத்தை மாற்றுவேன். மீன்கள் என் உணவு அல்ல, நண்பர்கள்என்றெல்லாம் பேசுவதாக வசனம் வந்தது. “சுறாமீன்கள் மீன்களை சாப்பிடுவது இயற்கைதானே?அதை ஏன் சுறாமீன்கள் மாற்றிக்கொள்ள வேண்டும்? இந்தகொடூரசித்தரிப்புகள் எல்லாம் சுறாமீனின் தவறுதான் என்பதாகவும், சுறாமீன்கள் திருந்தி வாழவேண்டும் என்றும் வசனம் எழுதியிருக்கிறார்கள். அது என்னநல்ல சுறா”? குழந்தைகளுக்கான படத்தில் இப்படியா பொறுப்பின்றி வசனம் எழுதுவது?” என்று கேள்விகள் எழுந்தன.

இதுபோன்ற திரைப்படங்கள் ஒருபக்கம் இருக்க, பிகிரேடு திரைப்படங்கள் என்று அழைக்கப்படும் வகைமையில் கதையைப் பற்றிக் கவலையே இல்லாமல் பல சுறா திரைப்படங்கள் வந்தன. கடலுக்குள் வாழாமல் மணலுக்குள் வாழ்வதால் கடற்கரையில் நிற்பவர்களைக் கொல்லும் சுறாக்கள் பற்றிய படம் (Sand shark), இரண்டு தலை சுறாக்கள் பற்றிய படம் (Two headed shark), மூன்று தலை சுறாக்கள் பற்றிய படம் (Three headed shark), பெரிய சுறாவுக்கும் ராட்சத கணவாய்க்கும் இடையே நடக்கும் வாழ்க்கைப் போராட்டம் பற்றிய காவியத் திரைப்படம் (Mega shark Vs Octopus), பேயாக வந்து பயமுறுத்தும் திகில் சுறா (Ghost shark), சுறா பாதி கணவாய் பாதி கலந்து செய்த அரக்கன் சுறா பற்றிய திரைப்படம் (Sharktopus) என்று இஷ்டத்துக்குத் திரைப்படங்கள் எடுத்துத் தள்ளப்பட்டன

இந்தத் திரைப்படங்களுக்கெல்லாம் உச்சமாக Sharknado என்ற அதிரடித் திரைப்படம் ஒன்று வந்தது. அதாவது டொர்னேடோ சூறாவளி ஒன்று சுறாமீன்களை எல்லாம் திரட்டிக் கொண்டு ஊருக்குள் வந்துவிட்டதாகவும், சூறாவளி காரணமாக வானத்திலிருந்து விழும் ராட்சத சுறாக்கள் பார்ப்பவர்களை எல்லாம் கடித்துக் குதறுவதாகவும் ஒரு கதை!!

SHARKNADO

 இவற்றில் ஒன்றிரண்டு படங்கள் தவிர எல்லா திரைப்படங்களிலும் சுறாமீன்கள் கொடூரமான கொலைகார இயந்திரங்களாக சித்தரிக்கப்பட்டிருந்தன.சுறாமீன்கள் மீதான மக்களின் அச்சம், அச்சத்தால் சுறாக்கள் கொன்று அழிக்கப்படுவது ஆகியவற்றுக்கும் இதுபோன்ற திரைப்படங்களும் நிச்சயமாகத் தொடர்பு உண்டு என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

சரி….  சுறாக்கள் மனிதர்களைத் தாக்குமா

சில வகை சுறாக்கள் மனிதர்களைத் தாக்கக்கூடியவை. ஜாஸ் நாவல்கூட 1916ல் அமெரிக்காவின் கடற்பகுதிகளில் நடந்த சுறா தாக்குதல்களை அடிப்படையாக வைத்துப் புனையப்பட்டதுதான். சுறாமீன்கள் தாக்குவதால் வருடத்துக்கு 4 முதல் 10 மனிதர்கள் வரை இறக்கிறார்கள்.

புள்ளிவிவர அடிப்படையில் பார்த்தால் ஒரு சராசரி மனிதன் சுறா தாக்கி உயிரிழப்பதை விட சாலை விபத்திலோ அல்லது மின்னல்தாக்கியோ உயிரிழக்கும் சாத்தியம்தான் அதிகம்! உலக அளவில் சுறா கடிகளை விட நாய்க்கடியால் அதிக மக்கள் இறக்கிறார்கள்!

ஒரு முக்கியமான விஷயத்தை நாம் உணர்ந்துகொள்ளவேண்டும், சுறாமீன்கள் மனிதர்களை சாப்பிட விரும்புவதில்லை. கொழுப்பு அதிகமான சீல் முதலிய பாலூட்டிகளையே விரும்பி உண்ணும் சுறாக்களுக்கு, மனிதர்கள் நோஞ்சான் இரைகள்தான்.

 

சாப்பிட வேண்டாமென்றால் சுறாமீன்கள் ஏன் மனிதர்களைத் தாக்குகின்றன?

கடல் பரப்பில் நீந்தும் மனிதர்களைக் கீழிருந்து பார்க்கும் சுறாக்கள் நீந்துகின்ற சீல்கள் என்று தவறாக நினைக்கும், தாக்கும்  என்று ஒரு கருத்து உண்டு. (இதை சில அறிவியலாளர்கள் எதிர்க்கிறார்கள்சிறந்த புலன் உறுப்புகளைக் கொண்ட சுறாக்கள் இப்படி தவறாக நினைப்பதற்கு சாத்தியமே இல்லை என்கிறார்கள்.)

சுறாக்கள் புதிதாக ஏதாவது ஒன்றைப் பார்த்தால் அது என்ன என்று தெரிந்துகொள்ள ஒரு கடி கடித்துப் பார்க்கும். ருசி பிடிக்கவில்லையென்றால் விட்டுவிடும். ஆனால் மனிதர்களின் அளவோடு ஒப்பிடும்போது சுறாக்கள் மிகப்பெரியவை என்பதால் சின்ன கடியே நமக்கு ஆபத்தாகிவிடுகிறது.

காலநிலை மாற்றம், வாழிட இழப்பு ஆகியவற்றால் சுறாக்கள் தொடர்ந்து இடம் பெயர்கின்றன, புதிய இடங்களில், மனிதர்கள் கூடும் கடற்கரைகளில் அவை வரும்போது இதுபோன்ற தற்செயல் விபத்துகள் நடக்கின்றன.

சில நேரங்களில்எங்க ஏரியா உள்ள வராதேஎன்று எச்சரிக்கவும் சுறாக்கள் கடிக்கும். பொதுவாக சுறாமீன்கள் எதிரிகளை எச்சரிப்பதற்காக விநோதமான உடல்மொழிகளைப் பயன்படுத்தும். உடனே தாக்காமல் இந்த உடல்மொழியாலேயே எதிரியை விரட்டும். அதையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து அந்த இடத்திலேயே சுற்றிக்கொண்டிருந்தாலோ சுறாக்களை நெருங்கி வம்பு செய்தாலோ தாக்குதல் நிகழலாம்.

இந்த ஹாலிவுட் சூப்பர்ஹிட் கொண்டாட்டங்களால் நடந்த ஒரே நன்மையையும் சொல்லியாகவேண்டும். ஜாஸ் திரைப்படம் வந்தபிறகுஎன்ன மீன் இது?” என்று பலரும் ஆர்வம் காட்டினார்கள். இதனால் பல நிறுவனங்கள் சுறாமீன்கள் பற்றிய ஆய்வுகளுக்கு நிதி வழங்க முன்வந்தன. சுறாமீன்களைப் பற்றிய நிறைய ஆய்வுகள் தொடங்கப்பட்டன!

ஜாஸ் திரைப்படம் இரண்டு மணிநேரம் ஓடக்கூடியது. அதில் நான்கு நிமிடங்கள் மட்டுமே தோன்றிய ஒரு மீன், உலக அளவில் சுறாக்களின் மீதான பெரும் அச்சத்தையும் வன்மத்தையும் விதைத்தது. ஒரு அசையும் சுறாமீன் பொம்மையை வைத்துக்கொண்டு 1975ல் ஆரம்பித்த இந்த சுறா வசூல் வேட்டை 2018ல் கிராபிக்ஸ் சுறாக்களை வைத்து எடுக்கப்பட்ட படங்கள் வரை தொடர்கிறது.

இதில் அதிரடித் திருப்பம் என்னவென்றால் ஜாஸ் நாவலை எழுதிய பீட்டர் பெஞ்ச்லி இந்தத் திரைப்படம் உருவாக்கிய எதிர்வினைகளையும் அதனால் சுறாக்கள் கொல்லப்படுவதையும் பார்த்து வருத்தப்பட்டார். “இப்போது இந்த நாவலை எழுதினால் கொலைகார இயந்திரமாக அந்த சுறாவை சித்தரிக்க மாட்டேன்என்று பேட்டி கொடுத்தார். தனது மொத்த வாழ்நாளையுமே சுறா மீன்களைப் பாதுக்காக்கவும் சுறாக்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அர்பணித்துக் கொண்டார்!

 திரைப்படங்கள் இப்படிக் குறுக்கிடுவதற்கு முன்பு சுறாக்களுக்கும் மனிதனுக்கும் இடையே இருந்த தொன்மமான பிணைப்பு  சிக்கலானது. சுவாரஸ்யங்களும் புதிர்களும் நிறைந்தது….  அது என்ன வரலாறு?

 

தொடரும்…….

 

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

One Comment

  1. சிறப்பான கட்டுரை!… திரைப்படங்கள் ஏற்படுத்தும் ்தாகத்தையும் அதன் விளைவுகளையும் ஒரு படத்தைக் கொண்டு விளக்கியிருப்பது சிறப்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button