எஸ்.ஏ.பெருமாளின் ‘கடவுள் பிறந்த கதை’ நூல் குறித்த வாசிப்பு அனுபவம் – செகுரா
செகுரா

இன்றைய காலகட்டத்தில் அதுவும் இன்றைக்கு நடக்கும் சமூக அவலங்களை புரிந்து கொள்ள இப்புத்தகத்தை வாசித்தால் ஒரு புரிதல் கிடைக்கும். புத்தகத்தின் தலைப்பே, அதை வாசிப்பதற்கு ஆர்வத்தை தூண்டும். “கடவுள் பிறந்த கதை” என்ற தலைப்பைப் பார்த்ததும். உள்ளே என்ன சொல்லியிருப்பார் என்ற ஆர்வம் அதிகரித்தது.
“நாமெல்லாம் கடவுளின் பிள்ளைகள் என்றும்…இல்லை..இல்லை… நாமெல்லாம் இயற்கையிலிருந்து உருவானவர்கள்” என்றும் பலவிதமான நம்பிக்கைகள் பரவலாக இருந்து வருகிறது.
நாமெல்லாம் கடவுளின் பிள்ளைகள் இல்லை என்றால், கடவுள் என்பவர் யார், யார் அதை உருவாக்கியிருப்பார்கள் என்ற கேள்விகளுக்கு இப்புத்தகத்தில் விடையைக் காணலாம்.
ஆதிமனிதன் எதையெல்லாம் பார்த்துப் பயந்தானோ அதையெல்லாம் கடவுள் ஆக்கினான். முதல்முதலில் ஒரு குழு தலைவன் விபரீதமாக இறந்த போது, துக்கம் தாளாது அந்த மொத்த குலமே தற்கொலை செய்து கொண்டது. இந்த மூடத்தனத்தை நிறுத்தும் தந்திரமாகவே ஆவி என்ற தத்துவம் உருவாக்கப்பட்டது.
ஆவிகளை வழிபடத் தொடங்கினான். ஆவிகளுக்கு படையலிட்டு தமது வேண்டுதல்களைக் கூறினால் நிறைவேறும் என்று ஆரம்பகால புரோகிதர்கள் கூறினார்கள். அதன் மூலம் குலத்தின் தற்கொலையைத் தடுத்தான்.
விலங்குகளை உணவுக்காக வேட்டையாடிய போது அதுவும் ஆவியாக மாறும் என நம்பினான். வேட்டையாடிய விலங்குகளின் தலைகளை வைத்து பூஜை செய்தான். மேலும் எந்த விலங்கை அதிகமாக வேட்டையாடினானோ அந்த விலங்குகளையே தனது குலமரபு சின்னங்களாக வழிப்பட்டான். மேலும் மிருகங்கள் முன்னோர்கள் ,அரசர்கள் போல தெய்வத் தன்மை ஏற்றப்பட்டு மனிதக் கடவுள்களாக கருதப்பட்டு வந்தன.
“கி.மு.600 ல் வாழ்ந்த தத்துவ ஞானியான ஜினோபென்ஸ், “கடவுள் பிறக்க வேண்டும். அது தங்களைப் போன்றே கையும் காலும், உடலும் குரலும் பெற்றிருக்க வேண்டும் என்ற கருத்தில் கடவுளை மனிதன் புனைந்தான்”. (நூலிருந்து)
“மிருகங்களுக்குக் கூட மனிதர்களைப் போல அறிவும் கைகளும் இருந்திருந்தால் தங்கள் உடல்களைப் போன்ற உருவம் கொண்ட கடவுள்களை உருவாக்கியிருக்கும்” (நூலிருந்து)
குறி வழிப்பாடு
அந்த காலத்தில் வேட்டையாட,உணவு சேகரிக்க மனிதர்கள் நிறைய தேவைப்பட்டதால், அதை உருவாக்கும் ஆண் குறிகள் மற்றும் பெண் குறிகளை வழிபடத் தொடங்கினான். இனப்பெருக்கத்தின் வெளி உறுப்புக்களான யோனியிலும் லிங்கத்திலும் படைப்பு சக்திகள் மிக்க ஆவிகள் இருப்பதாகக் கருதினான். இன்று கூட கோவில் தேர்களை சென்று பார்த்தால் அதில் காமக்கிளர்ச்சியூட்டும் சிற்பங்கள் இருக்கும். இது எல்லாம் இனப்பெருக்கத்தை அதிகப்படுத்துவதற்காக அந்தக் காலத்தில் உருவாக்கப்பட்டது.
மனிதனுக்கு எது பயத்தை தரு்கிறதோ எது புரியவில்லையோ அதைப் பற்றி கட்டுக்கதைகளை உருவாக்கினான். எதனால் நடந்தது என்று அறிய முடியாத நிலையில் ஆதிமனிதனுக்கு கட்டுக்கதைகள் அவசியமானதாக இருந்தது. கட்டுக்கதைகளில்ருந்து சடங்குகள், சடங்குகளில் இருந்து கலைகள் என விரிவடைந்தது.
காத்து – காற்று, கருப்பு –இருள்
சூறவாளிக் காற்றால் ஆதிகாலத்தில் பூமியில் காற்று குழி பறிக்கும், இதனால் புதையுண்ட பாஸ்பரஸ் வெளித் தெரிந்ததும் தீப்பற்றி எரியும். சூறாவளியோடு சேர்ந்து எரிகிற போது அதைப் பார்த்த ஆதிமக்கள் ” கொள்ளிவாய் பிசாசு” என்று பயந்தோடினர். இந்த மாதிரி கோரக் கடவுளான காத்து, கருப்பின் பெயரைத் தங்களின் வாரிசுகளுக்கு சூட்டினால் ஆபத்து நேராது என்று கருதினர். காற்று கடவுளை திருப்தி படுத்தப் படுத்த காத்தாயி, காத்தப்பன், காத்தவராயன் என்று தங்கள் பிள்ளைகளுக்கு பெயர் சூட்டினார்கள்.
இருள் கடவுளை திருப்தி படுத்த கருப்பன், கருப்பாயி, கருப்பசாமி, இருளன், இருளாயி என்று தங்கள் வாரிசுகளுக்குப் பெயர் சூட்டினார்கள். அது இன்றும் தொடர்கிறது.
இவ்வாறு பல கடவுள்கள் இருந்த சூழலில், அது ஒரு கடவுளாக மாற்றபட்டு மனிதர்களின் வளத்தை சுரண்டுவதற்கும் உழைக்காமல் வாழ்வதற்கும் ஒரு பிரிவினருக்கு வசதியாக இருந்தது .ஏற்கனவே இருந்த கட்டுக்கதைகளை உள்வாங்கி அதை மேலும் மெருகேற்றி மதங்களை உருவாக்கி பெருங்கடவுள் வழிப்பாட்டிற்கு மனிதன் வந்து நிற்கிறான் என்று வெறும் 32 பக்கத்தில் எளிமையாக கடவுள் உருவான கதையைக் கூறியுள்ளார் எஸ்.ஏ.பெருமாள் அவர்கள்.