‘ஏதிலி’ நாவல் குறித்த வாசிப்பு அனுபவம் – ச. ந. விக்னேஷ்

புதினம்-ஏதிலி
எழுத்தாளர்-அ. சி. விஜிதரன்
பதிப்பகம்- சிந்த்ன் புக்ஸ்
கலை என்பது நிகழ்காலத்தை மறக்கச் செய்து நம்மைக் கனவு உலகத்தில் மிதக்கச் செய்வது அன்று. நம்மைச் சுற்றி நடப்பவற்றைப் பிரதிபலித்து, நமது அசலான சிக்கல்களைச் சுட்டிக்காட்டி அவற்றிலிருந்து மீள்வதற்கான உத்வேகத்தை வழங்குவதாகும். எனவே, கலையானது அரசியல் நிலைப்பட்டதாகவே விளங்கும். அந்த வகையில், ‘ஏதிலி’ மிக முக்கியமான கலையாக்கமாகும்.
ஏதிலியின் உள்ளடக்கம் குறித்துப் பகிரும் முன் உருவம் பற்றிப் பேச நினைக்கிறேன். இந்த நாவல் 14 அத்தியாயங்களைக் கொண்டுள்ளது. அவற்றைத் தனித்தனியாக வாசிக்கும் பொழுதும் ஒரு முழுமையைக் கொண்டிருக்கின்றன. இத்தன்மையில், நான் வாசித்த முதல் புனைகதை இதுவேயாகும். (சில வருடங்களுக்குப் பிறகு முழுமையாக வாசிக்கும் முதல் புனைகதையும் இதுவே என்பது வேறு விடயம்) கதாசிரியரின் விவரணை, பயன்படுத்தும் சொற்கள், உவமைகள் யாவும் அவ்வளவு பொருத்தமாக அமைகின்றன. அவை, பேசுபொருளின் கனத்தை வாசகருக்கு மிகச் சரியாகக் கடத்தி விடுகின்றன; கணநேரம் ஸ்தம்பிக்கச் செய்கின்றன. ஒரே நாளில் வாசித்துவிடக் கூடிய சாத்தியத்தை நடையோட்டம் கொண்டிருக்கிறது. இனி உள்ளடக்கம்,
தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் பேசப்பட்ட/படுகின்ற ஒரு விஷயத்தின் பேசப்படாத பகுதியை இந்நாவல் மையமிட்டுள்ளது. இங்கு, இலங்கையின் உள்நாட்டுப் போர் குறித்தும் தமிழ் ஈழம் குறித்தும் கணிசமான உரையாடல் நடந்துள்ளது. ஆனால், அந்த அளவிற்கு, தமிழக முகாம்களில் அவதிப்படும் ஈழஅகதிகள் குறித்து உரையாடல் நடந்ததாகக் கூற முடியாது. ஈழத்தை முன்னிலைப்படுத்தி இங்கே அரசியல் கட்சி நடத்துபவர்களும் இது குறித்து மௌனம் சாதித்தே வந்துள்ளனர். இந்நிலையில், ஏதிலி மிக முக்கியமான உரையாடலை முன் வைக்கிறது.
முதல் அத்தியாயம் எல்லோருக்கும் பிடித்தமான, திறமை மிகுந்த, நல்ல குணம் பொருந்திய ஒருவர் தம்மைத் தனிமைப்படுத்திக் கொண்டு, குடிப்பழக்கத்திற்கு ஆளாகி, மனப்பிறழ்வு ஏற்படும் நிலைக்குச் செல்வதை மையமிட்ட அதே நேரத்தில் ஒட்டுமொத்த நாவலுக்கான முன்னுரையாகவும் அமைகிறது. முகாம் வாழ்வை எழுதுவதில் உள்ள சிக்கல்களும் எதை / எப்படி எழுதுவது முதலான சவால்களையும் பதிவு செய்கிறது.
இலங்கையில் இருந்து இந்தியா வருவதில் உள்ள சிக்கல்களில் இருந்து நாவல் விரிகிறது. அகதியாகச் செல்லும் போதும் சாதியைப் பிடித்துக் கொண்டிருத்தல், அங்கம் இழந்ததாலேயே இயக்கத்தில் இருந்தவர் என்ற சந்தேகத்திற்கு ஆட்படல், முகாம் அமைப்பு, கல்வி, வேலை, தாயகம் திரும்புவதில் உள்ள சிக்கல் என அகதி வாழ்வின் பல்வேறு அம்சங்கள் குறித்துப் பேசுகிறது. இவர்களின் இந்த எல்லாத் துன்பங்களுக்கும் சொந்த நிலம் இல்லாததே காரணமாகிறது. இந்தப் புள்ளியில், அகதிகளின் சிக்கலும் தலித் சிக்கலும் ஒன்றுபடுவதை ஆசிரியர் சுட்டுகிறார்.
இந்நாவலில், மூவர் குறித்து எழுதியே தீர வேண்டும் எனத் தோன்றுகிறது. ஒருவர் ஷாமினி. சுமார் 22 வயதிற்குள்ளாக முகாம் வாழ்வின் அத்தனை கொடூரங்களை அனுபவித்தவர். தம் வாழ்வில் நடப்பவற்றைச் சொல்வதற்கு மட்டும் ஓர் அண்ணனைத் தேடிக் கொண்டவர். எந்தச் சூழலிலும் யாரையும் சார்ந்து வாழக்கூடாது என்ற வைராக்கியம் பொருந்திய அவரது குணம் ஆச்சரியத்தைத் தருகிறது.
அடுத்து குமார் அண்ணன். முகாம்வாசி என்பதாலேயே, குற்றவாளி போல் நடத்தப்படுவதற்கு எதிர்ப்புக் குரலைப் பதிவு செய்பவர். நடந்த நிகழ்வின் பல்வேறு அம்சங்களைக் கவனப்படுத்திச் சரியான தீர்வை முன்மொழிந்தவர். அகதிகளின் சுயமரியாதையை நிலைநிறுத்த முயன்றவர். குமார் அண்ணன் குறித்து எழுத வேண்டும் என்ற ஆர்வத்திற்கு இணையான அறிவு இல்லையாதலால், நிறைவாக எழுத இயலவில்லை. எனவே, நேரடியாகப் படித்து உணர்ந்து கொள்க.
நாவலின் கடைசி 5 அத்தியாயங்கள் நம்பிக்கை தரும் மனிதர்களால் நிறைந்தவை. அவர்களுள் சாரு முக்கியமானவர். இறைவன் அனுப்பிய கடைசி தூதுவன் நான் என்பது போல, பிரபாகரன் என்னிடம் தான் எல்லாப் பொறுப்புகளையும் கொடுத்தார் எனச் சொல்லிப் பிழைப்பு நடத்துபவர்களை அம்பலப்படுத்துகிறார். ஒவ்வொரு நிகழ்வுகளையும் காரண காரியத்தோடு புரிந்துகொள்ளும் அவரை எண்ணுகையில் வியப்பு மேலிடுகிறது.
முதல் அத்தியாத்தில் உள்ளவாறே, ஒவ்வொருவரின் வாழ்க்கை நிலையை விடவும் அதற்கான காரணங்களே விரிவாகப் பேசப்பட்டுள்ளன. எல்லா அத்தியாயங்களும் பொருத்தமான மேற்கோளுடன் தொடங்குகின்றன. நிறைவாக ‘உண்டாலம்ம இவ்வுலகம்’ எனும் பாடல் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. பெரிய நம்பிக்கையோடு நாவல் நிறைவடைகிறது. இப்புனைவு, ஈழஅகதிகள் குறித்த முக்கியமான ஆவணமாகத் திகழ்கிறது.
Like!! I blog frequently and I really thank you for your content. The article has truly peaked my interest.