தொடர்கள்ராஜ் சிவா கார்னர்

கடவுளும், சாத்தானும் (VII) – ராஜ்சிவா

தொடர்கள் | வாசகசாலை

நீண்ண்ண்ண்ட நாட்களின் பின்னர் மீண்டும் ‘கடவுளும், சாத்தானும்’. இந்தத் தொடரின் தலைப்புத்தான் கடவுளும், சாத்தானுமேயொழிய, இதில் சொல்லப்படும் துகள்களும், எதிர்த்துகள்களும் ஒன்றுக்கொன்று மாறானவையல்ல. எதிர்த்துகள்கள் ஒன்றும் சாத்தான்களும் கிடையாது. சாதாரணத் துகள்கள் போன்றவைதான் எதிர்த்துகள்களும். ஏற்றம் மட்டுமே மாற்றமானவை. அதனாலேயே இவற்றை, பிம்பத்துகள்கள் (mirror matter) என்றும் சொல்கின்றனர். கண்ணாடியில் நீங்கள் பார்க்கும் உங்கள் பிம்பம் ஒன்றும் உங்கள் எதிரியோ, சாத்தானோ கிடையாதல்லவா? ஆனாலும், சாதாத்துகள்களும், எதிர்த்துகள்களும் ஒன்றையொன்று சந்திக்கும்போது, தம்மை அழித்துக் கொள்கின்றன. தேவையற்ற வீண் விவாதங்களினால் இறை நம்பிக்கைவாதி ஒருவரும், இறை மறுப்பாளர் ஒருவரும் அடித்துக் கொள்வதுபோல, இவையும் அடித்துக்கொண்டு அழிந்து போகின்றன. அதனால் மட்டும் இவற்றைக் கடவுளும், சாத்தானும் என்று ஒரு பேச்சுக்குச் சொல்லிக் கொள்ளலாம். ஆனால், இவற்றில் எது கடவுள், எது சாத்தான் என்பதுதான் தெரியாது. எதிர்த்துகள்களை உருவாக்குவதற்குத் தொழிற்சாலை இருப்பதாகத் தொடரின் கடைசிப் பகுதியில் சொன்னதாக ஞாபகம். அதை நாம் இப்போது பார்க்கலாம். ஒரு தொழிற்சாலையில் பொருளொன்றை உற்பத்தி செய்கிறார்கள் என்றால், அந்தப் பொருளின் அடிப்படையை முதலில் நாம் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

MEYRIN, SWITZERLAND

பூமியெங்கும் காணப்படும் சாதாரணத் துகள்களோடு ஒப்பிடும்போது, எதிர்த்துகள்கள் மிகநூதனமான அம்சங்களைக் கொண்டவை. ஒரு கிராம் அளவுடைய எதிர்த்துகள்கள், 50 மில்லியன் கிலோவாட்-மணி ஆற்றலைக் கொடுக்கக்கூடியவை. அதாவது, ஹிரோஷிமாவில் நடந்த அணுகுண்டு வெடிப்பைப் போல, மூன்று மடங்குகள் ஆற்றலை அவை வெளிப்படுத்தும். சரியாகக் கவனியுங்கள் வெறும் ஒரேயொரு கிராம் அளவிலான எதிர்த்துகள்கள் உருவாக்கக்கூடிய ஆற்றல் அவை. கால் சவரன் தங்கத்தின் அரைவாசியே போதும், சென்னையைப் போல மூன்று பெரிய நகரங்களை ‘ஜஸ்ட் லைக் தட்’ அழித்துவிடுவதற்கு. இதனாலேயே, உலகின் அதிகப் பெறுமதிவாய்ந்த துகள்களாக, எதிர்த்துகள்கள் மதிப்பிடப்படுகின்றன. ஆனால், இந்த ஆற்றல் அழிப்பதற்கு மட்டுமல்ல, ஆக்கலுக்காகவும் பயன்படுத்திக்கொள்ள முடியும். குறிப்பாக விண்கலங்களுக்கான எரியாற்றலாகவும் இவற்றைப் பயன்படுத்தலாம். மருதுவத்துறையிலும் இப்போது பயன்படுத்தப்படுகிறது. ஹாலிவூட் திரைப்படங்களிலும், அறிவியல் கதைகளிலும் மிகமோசமாகத் தவறான விதங்களில் எதிர்த்துகள்கள்பற்றிக் கதைகள் புனையப்படுகின்றன. அதனால், பலருக்கு அவற்றின் உண்மையான அறிவியல் கிடைக்காமலே போய்விடுகின்றது. அவர்கள் சொல்வதுபோல, எதிர்த்துகள்களை மொத்தமாக அதிகளவில் ஒன்று சேர்த்துச் சேமிக்க இதுவரை முடியவில்லை. சாதாரண வாழ்வில், ஓரிரு எதிர்த்துகள்கள் உருவாகிப் பின்னர் அழிந்து போகின்றன. வாழைப்பழத்தில்கூட எப்போதாவது எதிர்த்துகள்கள் உருவாவதுண்டு. பொட்டாசியத்தின் ஐசோடோப் (40), வாழைப்பழத்தில் சிதைவடைவயும்போது, பொசிட்ரோன் என்னும் எதிர்த்துகள்கள் அவ்வப்போது அதில் தோன்றுவதுண்டு. அந்த வாழைப்பழத்தை உண்ணுவதால், நம் உடலினுள்ளும் அந்தப் பொசிட்ரோன் துகள் உருவாகலாம். அது சாதாரணத் துகளுடன் இணைந்து தன்னை அடுத்த கணமே அழித்துக் கொள்ளும். அப்போது, உங்கள் உடலினுள் ஏதோ வெடிவிபத்து ஏற்பட்டுவிடுமே என்று நீங்கள் பதறிவிடத் தேவையில்லை. ஒரு பொசிட்ரோன் துகளின் அழிவு எதையும் குலைத்துவிடுவதில்லை. ஒரு கிராம் எதிர்த்துகள்கள் என்று எடுத்துக் கொண்டால், அதில் எத்தனை கோடி கோடி கோடி எதிர்த்துகள்கள் இருக்கும் தெரியுமா? அவற்றில் ஒரேயொரு துகள் எந்தத் தீங்கையும் செய்துவிடாது. ஆனால், ஒன்றுசேர்ந்த சில எதிர்த்துகள்கள் ஆபத்தானவையே!

kadavulum saathanum
ஒரு கிராம் எதிர்த்துகளிலிருந்து நம்பவே முடியாதளவு ஆற்றலை நாம் பெறமுடியுமெனின், அதன் பெறுமதியும் அதிகமானதாகவே இருக்க வேண்டும். 2006 ஆம் ஆண்டு, ஒரு கிராம் எதிர்த்துகள்களைத் தயாரிப்பதற்கு 25 பில்லியன் டாலர்கள் தேவைப்படும் எனக் கணித்தார்கள். இன்றைய நிலையில், ஒருகிராம் எதிர்த்துகள்கள் மூன்று குவாட் ட்ரில்லியன் டாலர்கள் எனக் கணித்திருக்கிறார்கள். அதாவது 3,000,000,000,000,000 டாலர்கள். இவ்வளவு மதிப்புடைய எதிர்த்துகள்களைத் தயாரிப்பதற்குத்தான் ஒரு தொழிற்சாலை நிறுவப்ப்பட்டிருக்கிறது. அந்தத் தொழிற்சாலயின் பெயர், ELENA Antimatter factory. இந்த எதிர்த்துகள் தொழிற்சாலை வேறெங்கும் அமைக்கப்படவில்லை. உங்களுக்கு ஏற்கனவே அறிமுகமான, சுவிஸ் நாட்டு சேர்ன் நகரில் அமைக்கப்பட்டிருக்கும் ‘ஹாட்ரோன் பெருந்துகள்மோதி’ (Large Hadron Colider- LHC) இருக்கும் இடத்துடன் இணைந்தே இந்தத் தொழிற்சாலையும் அமைக்கப்பட்டிருக்கிறது. எலெக்ட்ரோன் நீக்கிய ஐதரசன் அணுவின் கருக்களை (ஹாட்ரோன்) ஒளியின் வேகத்துக்கு நிகரான வேகத்துடன், இருபக்கமும் வட்டவடிவப் பாதையில் மோதும்படி செலுத்துவதற்காக அமைக்கப்பட்டதே LHC. அங்கு மிகைவேகத்துடன் பயணிக்கும் துகள்கள் ஒன்றுடன் ஒன்று மோதுக்கொள்ளும். அப்போது, பெருவெடிப்புடன் இலட்சக்கணக்கான வெவ்வேறு புதுத்துகள்கள் உருவாகிச் சிதறும். கிட்டத்தட்ட பிக்பாங் பெருவெடிப்பின் ஆரம்பக் கணத்துக்கு இணையானது அது. ஆனால், மினி வெர்சன். அப்போது உருவாகும் துகள்களில். எதிர்த்துகள்களும் காணப்படும். உருவாகும் துகள்கள் பலதிசைகளிலும் சிதறிச் செல்லும். அப்படிச் செல்லும் துகள்களை ‘ELENA’ உள்வாங்கிக்கொள்ளும். ELENA என்பதன் அர்த்தம் Extra Low ENergy Antiproton ring என்பதாகும். அதிவேகத்துடன் வரும் துகள்களின் வேகத்தை இவை வட்டவடிவப் பாதையொன்றில் கட்டுப்படுத்தப்படுகின்றன. பெரும் ஆற்றல் கொண்ட காந்தங்களின்மூலம் அவற்றின் வேகம் வெகுவாகக் குறைக்கப்படுகின்றன. அப்போது, புரோட்டோன் துகளின் எதிர்த்துகளான அன்டிபுரோட்டோன்கள் அங்கு சிறைப்படுகின்றன. மின்காந்தப் புலன்கள் சூழ்ந்த ஒரு தொட்டியில் அங்கும் இங்கும் நகரமுடியாத வகையில் எதிர்ப்புரோட்டோன்கள் வலையில் மாட்டிக் கொள்கின்றன. இதை Penning Malmberg trap என்பார்கள்.

kadavulum saathanum
ஒரு பொருளையோ, திரவத்தையோ, வாயுவையோ நம்மால் ஒரு குடுவையிலுள் சேர்த்து வைத்திருக்க முடியும். கண்ணாடிக் குடுவைகள் பெரும்பான்மையானவற்றைச் சேர்த்து வைக்கக்கூடிய பொதுக் குடுவையாகும். ஆனால், எதிர்த்துகள்களை எதில் சேர்த்து வைப்பது? பூமியில் காணப்படும் எதனுடன் சேர்த்தாலும் அவை தாமும் அழிந்து, சேர்பவனையும் சேர்த்து அழித்துவிடுகின்றன. அதனால், இந்த எதிர்ப்புரோட்டோன்களை எதில் சேர்த்துப் பாதுகாப்பது? எதனாலும் அதைச் சேர்த்துப் பாதுகாக்க முடியாதே! ஆனால், நவீன அறிவியல் அதற்கு ஒரு வழியைக் கண்டுபிடித்தது. எதிர்த்துகள்களுக்கு என்னவிதமான ஏற்றம் இருக்கின்றனவோ, அதே ஏற்றம் கொண்ட காந்தப் புலனைச் சுற்றிலும் ஏற்படுத்தினால், அவை எங்கும் நகர முடியாமல் அந்த இடத்திலேயே அசைய முடியாமல் சிறைபிடிக்கப்படும். இதையே, பென்னிங் மாம்பேர்க் சிறைப்பிடித்தல் என்கிறார்கள். கிட்டத்தட்ட குளிக்கும் தொட்டிபோன்ற (bath tub) அமைப்பில் காணப்படும் குழாய்களினூடாகச் செல்லும் துகள்களில், எதிர்ப்புரோட்டோன்கள் மட்டும் காந்தப் புலனங்களினால் சிறையாக்கப்படுகின்றன. சிறைப்பிடிக்கப்பட்டுச் சேமிக்கப்படுகின்றன. “ஓஹோ! அப்படியென்றால், இதுவரை நிறைய எதிர்த்துகள்களைச் சேர்த்து வைத்திருப்பார்களே! அவையெல்லாம் அதிகப் பெறுமதி வாய்ந்தவையே! இதை வைத்தே உலகப் பணக்காரர்களாகிவிடலாமே!” என்று நீங்கள் நினைக்கலாம். ‘வெரி சாரி!’. இதுவரை காலமும் வெறும் 10 நானோகிராம் அளவுள்ள எதிர்த்துகள்களையே நம்மால் சேமிக்க முடிந்தது. வெறும் இருநூறு எதிர்ப்புரோட்டான்களை நானூறு நாட்களுக்குச் சேமித்து வைத்திருக்கவே முடிகிறது. ஹாலிவூட் திரைப்படங்களில் காட்டப்படுவதுபோல, ஒரு கண்ணாடிக் குப்பியிலெல்லாம் அவற்றை எடுத்துச் செல்ல முடியாது. வில்லன் கடத்திச் செல்லும் பொருளாக ஒரு சிறியளவு சூட்கேசில் அதை வைத்துக்கொண்டு போக முடியாது. கிட்டத்தட்ட, மிகப்பெரிய பார உந்துகளில் பிரமாண்டமான அமைப்புடன் மட்டுமே அவற்ரை ஓரிடத்திலிருந்து இன்னுமொரு இடத்திற்குக் கொண்டு செல்ல முடியும். அதற்கும் பல கோடிகளில் டாலர்களைக் கொட்டிச் செலவு செய்யவேண்டும்.

kadavulum saathanum

அன்டிமாட்டர் ஃபாக்டரி என்றதும், ஏதோ ஒரு தொழிற்சாலையில் தினமும் இலட்சக்கணக்கான எதிர்த்துகள்கள் உருவாக்கப்படுகின்றன என்று நீங்கள் நினைத்திருந்தால், மன்னிக்க. அங்கு சேரனைப் போலத் தவமாய்த் தவமிருந்தே எதிர்துகள்களைச் சேமிக்கிறார்கள். இன்றுள்ள நிலையில், ஒரு கிராம் எதிர்த்துகள்களைச் சேமிப்பதற்கு 2 மில்லியன் ஆண்டுகள்கூட ஆகலாம். ஆனாலும், நமது அறிவியல் வளர்ச்சியில் ஆச்சரியங்கள் எப்போதும் நடைபெறும். யாருக்குத் தெரியும், இன்னும் சில ஆண்டுகளில்கூட அதற்கான அறிவியலை நாம் பெற்றுவிடலாம். அதுவரை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இதுவரை, ‘கடவுளும் சாத்தானும்’ தொடரைப் படித்து ஆதரவு தந்த அனைவருக்கும் என் நன்றிகள். இந்த வாய்ப்பை ஏற்படுத்திய வாசகசாலைக்கும் என் நன்றிகள். என் உடல்நிலை காரணமாகவும், வேறு சில பணிகளின் காரணமாகவும் உங்களிடமிருந்து தற்காலிகமாக இப்போது விடைபெறுகிறேன். வெகுசீக்கிரம் இன்னுமொரு தகவலுடன் வாசகசாலையில் உங்களைச் சந்திக்கிறேன். அதுவரை பை பை….!

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button