
இதுவரை…
தங்களின் கருப்பு வெள்ளைத் தீவுக்கு நிறைய வண்ணங்கள் தேடி தீவைத் தாண்டிப் போக சிறுவர்கள் முடிவு செய்து, அதற்கான ஏற்பாடுகளுடன் கடலில் பயணம் செய்யத் தொடங்கினர். எதிர்பாராதவிதமாக கடலுக்குள் ஓர் ஆபத்தில் சிக்கி என்ன செய்வது எனப் புரியாமல் நின்றபோது அந்த இறகின் ரகசியம் தெரிய வந்தது.
இனி…
இந்த இறகு உதவும் என்று சயின்டிஸ்ட் தாத்தா சொன்னாரே தவிர, என்ன வகையில் உதவும் என்று சொல்லவில்லை.
நிறைய இறகுகள் முளைத்துப் பறக்கத் தொடங்கியதைப் பார்த்ததும் இது உதவலாம் என்று நினைத்து பாலா எடுத்து வந்திருந்தான்.
ராம்: என்ன இது? கடலுக்கு உள்ள இருந்து மொளச்ச றெக்கைல இருந்து பிச்சுட்டு வந்துட்டியா?
மகேஷ்: இல்லையே இது வேற மாதிரி இருக்கே?
பாலா: இது நம்ம சயின்டிஸ்ட் தாத்தா கொடுத்தது. எப்படிப் பயன்படும்னு அவருக்கும் தெரியாதுனு தான் சொன்னாரு. ஆனா தேவதையோட றெக்கைனு சொல்லி, ரொம்ப வருசங்களா நம்ம முன்னோர்கள் பாதுகாத்துட்டு வர்றாங்களாம். நமக்குப் பயன்பட வாய்ப்பிருக்குனு நம்ம safety boxல வச்சிருக்காரு.
ராம்: இத வச்சு என்னடா பண்றது?
பாலாவும் அதை எப்படி எப்படியோ திருப்பி, உதறி, காற்றில் மிதக்க விட்டு என என்னென்னவோ செய்து பார்த்தான். அதிலிருந்து எதுவும் நடக்கவில்லை.
பாலா: இதுல இருந்து நமக்கு ஒரு உதவியும் கிடைக்கப் போறதில்ல.
மகேஷ்: இப்ப என்னடா பண்றது?
பாலா: எனக்கும் ஒண்ணும் புரியல.
கடலில் இருந்து எழும் இறக்கைகள் இவர்களைச் சுற்றி சுழல் போல் சுழன்று, நெருக்கிக்கொண்டே வந்தது. அருகில் வரவர எல்லோருக்கும் பயம் தொற்றிக் கொண்டது. அம்மு மீன் அழ ஆரம்பித்தது.
ராம் அந்த இறகை எடுத்து பார்த்துக் கொண்டிருந்தான். அப்போது திடீரென இறகு பலபல வண்ணங்களில் மாறத் தொடங்கியது.
ராம் மற்ற இருவரையும் அழைத்தான். அவர்களும் கண்கள் விரியப் பார்த்தனர். மகேஷ் கையில் வாங்கியவுடன் அது பழையபடி வெள்ளை நிறத்திற்கே மாறியது.
மூவரும் மாற்றி மாற்றி வாங்கிப் பார்த்தனர், அது ராமின் கைகளில் இருக்கும்போது மட்டும் வண்ண வண்ணமாய் வெளிச்சத்தை உமிழ்ந்தது.
மகேஷ்: டேய் ராம்… உன் கையில் இருக்கும்போது மட்டும்தான் வண்ணம் வண்ணமா மாறுது.
ராம்: ஆமா. இப்போ நான் என்ன பண்றது?
பாலா: ஜீபூம்பா மாதிரி ஏதாவது மந்திரம் சொல்லிப்பாருடா. இல்லனா இறகுக்கு ஆர்டர் போடு.
ராம்: ம்ம்ம்..
அந்த மேஜிக் இறகைக் கையில் பிடித்தபடி, “கடல்ல இருந்து முளைக்கற இறக்கைகள் எல்லாம் மறைஞ்சு போகட்டும்” என்று கூறினான்.
ஒரு மாற்றமும் நிகழவில்லை. ஆனால் இதை வைத்து கண்டிப்பாக ஏதாவது செய்ய முடியும் என்ற நம்பிக்கை மூவருக்கும் இருந்தது.
ஒவ்வொருவராக என்னென்னவோ சொல்லிப் பார்த்தனர். கப்பலோ ஒரு திசையில் வேகமாக இழுக்கப்பட்டுக் கொண்டிருந்தது.
அங்கு 2 பெரிய மலைகள் சேர்ந்து M போல் ஒட்டி இருந்தன. அதற்கு இடையில் ஒரு வாசல் போல் இருந்தது. அந்த இடத்திற்கு வந்ததும் கடலில் இருந்து இறக்கைகள் முளைப்பது தானாக நின்று போனது.
அங்கு இரண்டு மலைகளையும் சேர்ப்பது போல ஒரு பெரிய கதவு இருந்தது. அதுவும் இறக்கை வடிவத்தில் தான் இருந்தது. திரும்பவும் அதே குரல் கேட்டது. “சலனபுரியின் வாசலுக்கு வந்துள்ள தங்களுக்கு மீண்டும் என் வருகையை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த எல்லை வழியே உள் நுழைந்த யாரும் வெளியே செல்ல முடியாது. அதே சமயம் சலனபுரி வாசல் தானாகத் திறக்காது. கதவைத் திறக்க தாமதம் ஆக ஆக, குளிர் அதிகரித்துக்கொண்டே இருக்கும். சிந்தித்து உள்ளே நுழைய என் வாழ்த்துக்கள்” என்று கூறியது.
மூவருக்கும் பெருங்குழப்பம் வந்தது. எல்லோருக்கும் பயங்கர சோர்வாக இருந்தது. யோசிக்க ஒருவருக்கும் தெம்பில்லை. குளிரும் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துக் கொண்டே வந்தது.
ராம்: டேய், ஏதாவது சொல்லுங்கடா. இப்பவே இப்படி குளிருது.
லூனா: ஆமாப்பா. இங்க தண்ணி உறையற அளவுக்கு குளிருது. எங்களாலயும் முடியல.
மகேஷ்: கதவுக்கு பக்கத்துல போய் பாக்கலாம்னா ரொம்ப உயரமா இருக்கு. இப்ப என்னதான்டா பண்றது?
பாலா: கதவே இவ்ளோ உயரமா இருக்கும்போது சாவி ஓட்டை வழியா எப்படிப் பாக்க முடியும்? குளிர் இன்னும் அதிகமாகுறதுக்குள்ள ஏதாச்சும் வழி கண்டுபிடிக்கணும்.
தொடரும்…