
உன்னை பிரிந்தால் உயிர்வாழா அன்றில் பறவை நான் – பசலையுருதல் கலை
யஷோதோரா சித்தார்த்தனின் காதல் மனைவி. நேற்று வரை இனியவனாய் முகத்திரை தரித்தவன், அமுதாய் பேசி பழகிக் குழைந்த கணவன் பேறுகால வலி வந்த நாளன்று மறைகிறான். பிரசவ வேதனை வதைக்க விமோசனமாய் அவன் கைகள் தன்தலை வருடவரும் எனக் காத்திருந்த யசோதராவுக்கு பணிப்பெண் மூலம் சித்தார்த்தன் கானகம் சென்றான் என்ற சேதி வருகிறது. தன் ஊனில் உயிரில் பாதுகாத்து வைத்தவனை எங்கு தொலைத்தாள் என்று அறியாமல் தவிக்கிறாள். இந்த பிரிவிற்கான ஆரம்பம் என்று நிகழ்ந்ததென்று ஆராய்கிறாள். கண்ணீர் வடிக்கிறாள். தோழிகளிடம் புலம்புகிறாள். ஆம் தானே, பிரிவென்பது எளிதன்று அதிலும் அன்புற்றவர்கள் பிரிதலென்பது சதை அறுத்து எதிரி புசிக்கச் செயலற்று பார்பதற்கிணை. பிரபல ஹிந்தி கவிஞர் மைதிலி சரணகுப்த் யசோதராவின் விசும்பல் நிறைந்த கண்ணீரைக் கதையாக வடித்திருப்பார். அதிகம் அவனைத் தெரிந்தவள் என்ற மமதை கொண்டிருந்தேன் சகி , இன்று யாரோவாகி போனதென்ன சகி என்று யசோதரா கேட்க, சகி அவள் மடியில் இவளை தளர்த்திக்கொள்வாள் .
சங்கத்தமிழ் மரபில் காதல் கொண்ட தலைவன் பிரிந்த பிற்பாடு தலைவி தோழியிடமோ அவளது நற்றையிடமோ தலைவன் பிரிவைப் பற்றி விசனம் கொள்ள ஆரம்பிக்கும்போது தன்னை பசலை பீடித்து வதைக்க விட்டு சென்ற கண்ணாளன் என்று தலைவனை வர்ணிக்கிறாள். பசலைகொண்ட தலைவி தனது பொழிவுகளையும் பெண்ணிய செருக்குகளை துறக்கிறாளாம், அவனைக் காணாது இளைத்து கடியாரமாம் சங்கு வலையில் இடுப்பில் பொருந்தும் அளவு இளைத்தாளாம்.
”இளைத்தேன் துடித்தேன் பொறுக்கவில்லை இடையினில் மேகலை இருக்கவில்லை” – வைரமுத்து (நறுமுகையே – இருவர்)
தான் கொண்ட காமமும் காதலும் கன்றும் உண்ணாது கலத்தினும் படாத பாலைப்போல் வீணாவதை நினைத்து விம்மி பெருமூச்சு விடுகிறாள் தலைவி. அவள் சுவாசத்தின் வெப்பம் பட்டு அவள் மார்பை அலங்கரிக்கும் முத்துக்கள் கருக கண்டாளாம்
”முத்தும் மணியும் கருகிடும் வண்ணம் மோகத்தில் ஆழ்ந்தாள் தலைவி” – கண்ணதாசன் (தூது செல்ல ஒரு தோழி இல்லையென -பச்சை விளக்கு)
ஷேக்ஸ்பியர் பிரிவை இயற்கைகளோடு பொருத்தி அவைகளின் சீற்றங்களில் மனபுயலை எழுதினர். அடை மழையோடும் கடல் சீற்றங்களோடும் காதலன் பிரிந்த காதலி மனதை ஒப்பிட்டார் (TEMPEST) . இந்த பேரிரைச்சலை இன்னும் புரியும்படி சொல்லவேண்டுமெனில், சேரவே முடியாத காதலனை எண்ணி பூங்குழலி பாடும் அலைகடலும் ஓய்ந்திருக்க அக்கடல்தான் பொங்குவதேன் என்ற மனநிலை தான். தென்றலும் சுட்டு இரவும் தகித்து முள்வேலியில் சிக்குண்ட பட்டாடையாக இதயம் தவிக்கும் .
”தொடு வானம் சிவந்து போகும். தொலை தூரம் குறைந்து போகும் கரைகின்ற நொடிகளில் நான் நெருங்கி வந்தேனே.” – தாமரை (நீயின்றி நானும் – வாரணம் ஆயிரம்)
ஒரு பிரிவைச் சுவீகரிப்பதென்பது எல்லாருக்கும் அவ்வளவு இயல்பாகக் கை வராது. ஒரு வகை அந்த ஆற்றாமை மிகுந்த கோவத்தையும் தனது ஈகோவையும் சீண்டும் . என்னில் குறைகளென்ன என் செய்கைகளில் பிழைகளென்ன என்று தேடும். ஏன் வேர் அறுத்தார்களென்று மூளை காரணம் கண்டுபிடிப்பதற்குள் மனம் கனத்து வெறுமையோடு கதறும். இதுவரை திளைத்து மகிழ்ந்த அன்பை திடீரென பொய் என்றாக்குவது. அது அவ்வளவு சுலபமாக இருக்காது . இது வரை கட்டிய மனக் கோட்டைகளை காத்திருப்பும் நாட்களும் ஒவ்வொரு செங்கல்லாகப் பெயர்த்து அதை நிலைகுலைய வைக்கும். பிரிவோர் இணையும் வரை நெஞ்சில் சுமக்கும் வலி பிரசவத்திற்குக் காத்திருக்கும் நிறைமாத தாயின் தவிப்பிற்கு ஒப்பாக இருக்கும்.