
“கொக்கரக்கோ! கொக்கரக்கோ!”
அதிகாலை நான்கு மணிக்கு காட்டுச் சேவல், மரத்து மேல் ஏறி உற்சாகமாகக் கூவியது.
அதன் பிறகு,கிழக்கு கொஞ்சங்கொஞ்சமாக வெளுத்து, வெளிச்சம் படரத் துவங்கியது. மரங்களில் குடியிருந்த பல்வேறு பறவைகள் கீச் கீச் என இனிமையாகக் குரல் எழுப்பியவண்ணம், அங்குமிங்கும் பறந்தன..
குக்கூ! குக்கூ என்று வேப்ப மரத்தில் அமர்ந்திருந்த ஆண் குயில் இனிமையாகக் கூவியதைக் கேட்ட சேவலுக்கு, அதன் மேல் கொஞ்சம் பொறாமை ஏற்பட்டது.
அது குயிலைப் பார்த்து, “உன் குரல் இனிமை தான். ஒத்துக்கொள்கிறேன்; ஆனால் சிவப்பு, மஞ்சள் என்று, என் இறக்கைகளில் வானவில்லைப் போல, அடுக்கடுக்காக எத்தனை அழகான நிறங்கள்? நான் ரொம்ப அழகு! நீயோ கறுப்பாக, அசிங்கமாக இருக்கிறாய்!” என்றது.
“நான் கறுப்பு தான். ஆனால் உன் குரலை யார் ரசிக்கிறார்கள்? இவ்வுலகில் என் குரலுக்கு, மயங்காதவர்கள் யாருமே இல்லை. நன்றாக பாடுபவர்களுக்குக் குயில் என்று மனிதர்கள் பட்டம் கொடுக்கிறார்கள் என்றால், எனக்கு எவ்வளவு பெருமை?,”என்றது குயில்.
கா கா என்று கரைந்து கொண்டு, காகம் ஒன்று அங்கு வந்தது.
“நான் கறுப்பாக இருந்தாலும், குரல் இனிமை; ஆனால் இந்தக் காக்காவைப் பார்! நிறமும் கறுப்பு! குரலையும் சகிக்க முடியாது,” என்று கிண்டல் செய்தது குயில்.
காக்காவுக்குக் கோபம் வந்துவிட்டது. “ஆமாம்! நான் அசிங்கமாகத் தான் இருக்கிறேன். குரலும் கேவலமாய் தான் இருக்கிறது. ஆனால் நான் முறையாகக் கூடு கட்டி,முட்டைகளை அடைகாத்து, அவற்றை பொரிக்கச் செய்து, குஞ்சுகளுக்குச் சோறூட்டிப் பொறுப்பாக வளர்த்தெடுக்கிறேன். ஆனால் நீயோ மகா சோம்பேறி!
கூடு கட்ட, குஞ்சுகளை வளர்க்க அலுப்புப் பட்டுக்கொண்டு, உன் முட்டைகளை நயவஞ்சகமாக என் கூட்டில், நான் இல்லாத சமயம் போட்டு விடுகிறாய்! அது தெரியாமல், உன் குஞ்சுகளையும், நான் வளர்த்து ஆளாக்குகிறேன். நான் இல்லையென்றால், உன் இனமே இந்நேரம் அழிந்து போயிருக்கும்,” என்றது காகம், குயிலிடம்.
அச்சமயம் அங்கு வந்த ஆண் மயில் ஒன்று “ஏன் எல்லோரும் வீணாகச் சண்டை போடுகிறீர்கள்? எல்லோரையும் விட, நான் தான் அழகு! என் தோகை எவ்வளவு அழகு! நான் தோகை விரித்து ஆடினால், நேரம் போவது தெரியாமல், பார்த்துக் கொண்டே இருக்கலாம்!; சிறப்பாக நாட்டியம் ஆடுபவர்களுக்கு, என் பெயரைத் தான் பட்டமாகக் கொடுக்கிறார்கள்!,” என்றது பெருமையாக!
நான் தான் உசத்தி, நீ மட்டம் என்று சண்டையிட்டுக் கொண்ட நான்கும், தீர்ப்பாயத்துக்குச் சென்றன. அங்கு சிம்பன்சி குரங்கு, குறை தீர்ப்பாளராக இருந்தது.
எல்லா வாதங்களையும் பொறுமையாக கேட்ட குரங்கு, முடிவில் தன் தீர்ப்பை வாசித்தது.
“புயல் மழையால் வானம் இருண்டு கிடந்தால் கூட, நாள் தவறாது அதிகாலையில் கூவி, உலகத்தை விழிக்கச் செய்யும் சேவலின் கடமையுணர்வைப் பாராட்ட வேண்டும்.
தன் இனிமையான குரலால் பாட்டுப் பாடி, நம்மையெல்லாம் மகிழ்ச்சியில் ஆழ்த்தும் குயிலையும் பாராட்ட வார்த்தைகள் இல்லை.
அடுத்தது காகம். மனிதர்கள் வீசும் கழிவுகளையும், குப்பைகளையும் தின்று சுற்றுப்புறத்தைச் சுத்தமாக்குகிறது.
கொஞ்சம் உணவு கிடைத்தால் கூட, கா கா என்று தன் சுற்றத்தைக் கூவி அழைத்துச் சேர்ந்து உண்ணுகிறது. அந்த நல்ல பண்பை,,நாம் அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டும்!
மயில் அழகான தோகையை விரித்து, ஆடிப் பார்ப்பவர்களை பரவசப்படுத்துகிறது.அதனால் தான், மயிலைத் தேசப் பறவையாக இந்தியா கொண்டாடுகின்றது!
ஒவ்வொருவரும் அவரவர் கடமைகளைத் தவறாமல் செய்கின்றனர். இதில் யார் உசத்தி? யார் மட்டம்? யார் அழகு? யார் அசிங்கம்?
பிறப்பில் உயர்வு, தாழ்வு சொல்வது மடத்தனம்! வெறும் நிறத்தையும், வெளித் தோற்றத்தையும் வைத்து அழகு, அசிங்கம் எனப் பிரிப்பது, அதை விட பெரிய முட்டாள்தனம்!
இந்த மூடத்தனத்தைச் செய்பவர்கள் மனிதர்களே! இயற்கை ஒவ்வொரு உயிருக்கும் ஒரு தனிப்பட்ட திறமையைக் கொடுத்திருக்கிறது. ஒன்று போல் இன்னொன்று இல்லை! படைப்பின் அதிசயம் இது!.
நம்மைவிட அறிவில் மேம்பட்டவர்கள்(!) என்று சொல்லிக் கொள்ளும் இந்த மனிதர்களுக்கு, இயற்கையைப் பற்றிய அறிவு, மிகவும் குறைவு..
தன் பெட்டையைக் கவர ஆண் குயில் மட்டும் தான் பாடும்; பெண் குயில் என்றுமே பாடாது என்ற உண்மை தெரியாமல், பாடகிகளுக்குக் குயில் என்று பட்டம் கொடுக்கிறார்கள்!
அது போல் ஆண் மயில் தான் தோகை விரித்தாடும்; பெண்ணுக்குத் தோகையே கிடையாது என்ற விபரம் புரியாமல், நாட்டியப் பெண்ணுக்கு மயூரி என்ற விருது கொடுக்கிறார்கள்!
வெள்ளை நிறம் தான் உயர்ந்தது, அழகானது; கறுப்பு தாழ்ந்தது; அசிங்கம் என்பதெல்லாம் சுய நலமிக்க மனிதர்கள் சிலர், ஏற்படுத்தி வைத்த பேதங்கள். அவை நமக்குள் புக, ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது.
ஏற்கெனவே மனிதர்கள் காடுகளைப் பெருமளவு அழித்து விட்டதால், நம் குழந்தைகள்வாழ வீடில்லாமல், நம்எண்ணிக்கை பெருமளவு குறைந்துவிட்டது.
குறைந்த எண்ணிக்கையில் மிஞ்சி இருக்கின்ற நாமும், ஒற்றுமையாய் இல்லாமல், இது போல் சண்டை போட்டால், விரைவிலேயே ஒட்டு மொத்தமாக அழிந்து போய்விடுவோம்.
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு; ம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவருக்கும் தாழ்வு என்பது உங்களுக்கெல்லாம் தெரியும் தானே?
எனவே வேற்றுமைகளை மறந்து கூடி வாழ்வோம்! கூடி வாழ்ந்தால் கோடி நன்மை!”
குரங்கு சொன்னதிலிருந்த நியாயத்தை உணர்ந்த நான்கும், தம் தவறுக்கு மன்னிப்புக் கேட்டு விட்டு, இனிமேல் ஒற்றுமையாக வாழ்வதாகச் சொல்லிவிட்டு, அமைதியாக கலைந்து சென்றன.