தியோடர் சேசுராஜாவுக்கு லேசான அயர்ச்சியாகவும் கேவலமாகவும் இருந்தது. இன்னமும் ரெஜினா கத்திக் கொண்டுதான் இருந்தாள். திரும்பத் திரும்ப டக் டக்கென பாத்ரூமில் ப்ளஷ் செய்யப்படும் சத்தம் கேட்டது. இனி மாலை ஆறு ஏழு வாக்கில் ராஜா வரும் வரைக்கும் ரெஜினாவின் குரல் கேட்டுக் கொண்டே தானிருக்கும். ரெஜினா தன்னிடம் தான் பேசுகிறாள் என்று மிகத் தெளிவாக நம்பினார் அவர். ஆனால், ஏதோ ஒரு லஜ்ஜையால் அதை நேரிடையாக சொல்லும் தெம்பில்லாமல் இப்படி நீட்டி முழக்கி சொல்கிறாள் என்று தோன்றிற்று. அவளும் என்ன செய்வாள் என்று சட்டென தோன்ற தனக்கு எதிராக தனக்கே நினைக்கத் தோன்றுகிறதே என்பதை ஏற்க முடியாமல் அவர் தலையை பலவீனமாகத் திருப்பிக் கொண்டார்.
ஒரு கணம் தான் இளமையில், ஏன் படுக்கையில் விழும் வரை கூட இத்தனை பிசுபிசுப்பாய் கக்கா போனதில்லை என்றே தோன்றிற்று. இத்தனைக்கும் ராஜா இவர் அறையை ஒட்டி ஒரு அட்டாச்ட் பாத்ரூம் கட்டி கொடுத்தான். அதைக் கழுவ ஒரு ஆளைப் போட்டான். ஆனால், ரெஜினாவுக்கு பாத்ரூம் கட்டிய காசில் அவளுக்கு நகை வாங்கி இருக்கலாம் என்ற ஏக்கம் அவளுக்கு இருந்திருக்கிறது என்று அவளது புலம்பல்கள் பின்னாளில் காட்டிக் கொடுத்தன.
தியோடரின் மனைவி ஹெலன் நீண்ட வருடங்களாக சர்க்கரை நோயில் இருந்து பாடுபட்டு வந்து ஒரே இரவின் தூக்கத்தில் இறந்து போனாள். அவள் தூக்கத்தில் இறக்கும் சமயத்தில் எழுந்தாளா …கூப்பிட்டாளா என்பது கூட தியோடருக்குத் தெரியவில்லை. அதுவே அவரின் மிகப் பெரிய கவலையாக மாறியது. ஹெலனும் அவரும் ஐம்பது எட்டு வருடங்கள் ஒன்றாக ஒரே கூரைக்குக் கீழ் வாழ்ந்திருக்கிறார்கள். திடீரென காலையில் எழுந்து பார்த்தால் அந்த துணை தூங்குவது போலவே இறந்து கிடப்பது மிகப் பெரிய வலியைக் கொடுக்கும் இல்லையா. நீண்ட நாள் அவள் இறந்த நள்ளிரவில் இவர் உறங்காமல் விழித்திருந்து நீண்ட மவுனங்களுக்குப் பிறகு அவளின் குரல் துல்லியமாகக் கேட்க அதிர்ந்து அசையாமல் உட்கார்ந்திருப்பார்.
ஒரு கோப்பையை நீட்டும் சத்தம் கேட்கும். டண். “ கொஞ்சம் போல சீனி போடுங்க”
திருமணமான போது சீனி என்று அவள் சர்க்கரையைக் கேட்க, “அய்யோ எங்கய்யா ஒரு திருநெவேலி பட்டிக்காட்ட கட்ட வச்சிட்டார் பாரு.. ” என்று இவர் சிரித்திருக்கிறார். ஹெலன் பெரிதாக அதற்கு பதில் சொல்ல மாட்டாள். உதடு கடித்து தான் அவள் பேசுவாள். அது போலவே வார்த்தை இரு கதவுக்கு நடுவே நசுங்குவது போல உதட்டுக்குள் , “ சர்க்கரன்னா எங்கூர்ல வேற அர்த்தம் “ என்றாள். அதற்கு பிறகு இவர் இரண்டு நாள் அவளிடம் பேசவில்லை. அவள் கையால் சாப்பிடவில்லை. ஏன் என்று தெரியாமல் அவள் யாரிடமும் கேட்கக் கூட மாட்டாமல் சுருங்கிப் போனாள். மூன்றாவது நாள் இவரே கூப்பிட்டு, “ பொம்பளங்க கெட்ட வார்த்த பேசுரது எனக்கு புடிக்காது “
“எங்கூர்ல குழந்தகள கூட அப்டி வார்த்தலதான் கொஞ்சுவாக… நாஞ்சொன்னது கெட்ட வார்த்த இல்லல… பொம்பளங்க மானம் சம்பந்தப்பட்டா தான அது கெட்டதா போவுது… இது உடம்புல பாகம் தான… ”
அவர் பதில் பேசாமல் போனார். யாராவது ஹெலன் வீட்டுப் பக்கத்திலிருந்து கிறிஸ்துமஸ் புது வருஷத்துக்கு வந்தா, “ உங்கூர்ல இப்டி தான் எல்லாத்துக்கும் நியாயம் பேசுவீகளோ “ என்று கேட்பார். அதுவும் அவர்கள் சாப்பிட உட்கார்ந்து இரண்டாவது வாயை வைக்கும் போதுதான் பெரும்பாலும் கேட்பார்.
அவர்களுக்கு பதில் சொல்ல வார்த்தைகள் இருக்காது.
“ என்ன அமைதியாருக்கீங்க…எது கேட்டாலும் வக்கீலாட்டம் வாதம் செய்றா… அதான் கேட்டேன்”
பரிமாறும் ஹெலன் ஒரு கணம் ஸ்தம்பித்து பின் மெல்ல மூச்சு விடுகிறாள். சொந்தம் முன்னால் அந்த வார்த்தைகளைக் கூச்சநாச்சமில்லாமல் சொல்லி விடக்கூடியவன் என்று மிகவும் நம்பினாள். சரியாக நாற்பத்தியொரு வயதில் அவளுக்கு சர்க்கரை வியாதி வந்தது. மருத்துவர் அதை பல பரிசோதனைகள் செய்து “ஸ்டெரஸ் ஷூகர் “என்றார். அவள் அப்போதும் எதுவும் மன அழுத்தமே இருந்ததில்லை என்று பொய்யே சொன்னாள். முப்பத்து மூன்று வயதில் ராஜாவுக்கு பின் ஒருமுறை கருத்தரித்து பின் தியோடருக்கே தெரியாமல் கலைத்தாள். அந்த பதினைந்து நாள் உடல்நிலை சரியில்லை என அம்மா வீட்டுக்குப் போனாள். எதையோ எழுதி எழுதி அழித்தபடியே இருந்தாள். அவள் அப்பா என்ன என்று கேட்க கண் கலங்க குனிந்து கொண்டாள்.
வாழ்க்கை எப்போதுமே நினைத்தது போல் இருக்கவில்லை. இவருக்கு தனியார் ஆலையில் வேலை போகுமென்று நினைத்ததே இல்லை. ஆலை காவலாளி அங்கு பணி புரியும் பெண்ணின் மார்பை அழுத்துவதைப் பார்த்து இவர் சத்தம் போட்டார். செக்கிங் என்ற பெயரில் அவன் அவ்வாறு தன் வேலையை தான் செய்ததாகச் சொன்னான். பேச்சு நீண்டு அவன் இவர் சட்டையைப் பிடிக்க இவர் அவனை அடித்தார். ஜி. ஹெச்சில் பொய் சர்டிபிகேட் வாங்கி அவன் ஒரு என்கொயரிக்கு கூப்பிட இவருக்கு வேலை போனது. அப்போது ஹெலன் தன் நகையெல்லாம் விற்றுத் தான் சமாளித்தாள். தன் மேல் அவளும் அந்தக் காவலாளி மேல் அப்பெண்ணும் மலம் கழிப்பது போல் அவருக்கு அப்போது கனவுகள் வரும். ஆனால், வெளியே பகிர்ந்து கொண்டதில்லை. கொள்ள முடிந்ததில்லை.
ஆனால், ஹெலன் ஒரு போதும் எந்தக் குறையும் அவரை சொன்னதில்லை. அதுவே மிகப் பெரிய வன்முறையாக இருந்தது அவருக்கு. “பாவங்க அந்தப் பொண்ணு… என்கொயரி நடக்கே … எங்க நீங்க அவங்க பேர சொல்லிடுவீங்களோன்னு தான் நினைக்கும்…. வேல போனா கூட பரவாலீங்க…. பேர சொல்லிடாதீங்க”
அவர் பல சமயங்களில் பேச முடியாமல் அவளையே பார்த்திருக்கிறார்.
சர்க்கரை நோய் முற்றி வலது கால் பெருவிரல் எடுத்தார்கள். ரெஜினா எந்த உதவியும் செய்யாததை ராஜா திட்ட, “ அட விடுப்பா… யாரயும் வற்புறுத்தாத…அதான் அப்பா நல்லா பாத்துக்கிறாரில்ல” என்றாள். அவள் இறக்கும் வரை அந்த ஒரு வார்த்தை தான் தியோடரின் மனதைக் கலைத்து போட அவளை மிக நன்றாக கவனித்துக் கொண்டார். அந்த குறிப்பிட்ட காலத்தில் இருவருக்குள்ளும் புது காதல் முளைத்தாற் போலிருந்தது. அடிக்கடி ஹெலன் அவரை ஓரக்கண்ணால் பார்ப்பதை ராஜா ஆச்சர்யமாய் பார்க்க ரெஜினா கிண்டல் செய்வாள்
“லவ்வு பண்ணுதாகளாம் உங்க அம்மையும் அப்பனும்…”
ஆனால், ஹெலன் இறந்த பிறகு ரெஜினாவிடம் ஒரு மாற்றம் தெரிந்தது. அது தன் மனதோடு சம்பந்தப்பட்டதாக இவர் நினைத்துக் கொண்டார். சாப்பாட்டு மேஜை மேலே தட்டு வைக்கும் சத்தம் மாறியது. பின் அவரை சுற்றிய தனிமை ரெஜினாவின் செய்கைகளுக்கு அதுவாகவே பொழிப்புரை எழுதிப் போனது. ராஜாவின் மவுனம் அவரை அலைக்கழித்தது. ஆனாலும் எதுவும் சொல்லாமல் இருக்க அவரது ப்ரஷர் ஏறியது. அது எக்கச்சத்துக்கு எகிறி மருந்து சாப்பிடாமல் இருந்தால் செத்து விடலாமென தீர்மானித்த போது தான் இரண்டாவது நாள் ஸ்டோரோக் வந்தது
“உங்கப்பா செலவு வச்சிட்டாரா?”
ரெஜினாவின் முனகல்களை ராஜா கண்டுகொள்ளவில்லை எனினும், அவருக்கு அது உறுத்தலாகவே இருந்தது. தனது பென்ஷனிலிருந்து ஒரு ஹோம் நர்ஸ் வைத்துக் கொள்ள அவனிடம் சைகை காட்டி கேட்க, அவன் அதைப் பொருட்படுத்தவில்லை. அவனே அவருக்கான எல்லா உதவிகளையும் செய்தான். ஆனால், தியோடருக்கு மனம் கொள்ளவில்லை.ரெஜினாவின் சின்னப் பெருமூச்சு கூட அவரைக் கஷ்டப்படுத்தியது.
நாள் ஆக ஆக அவருக்கு தினம் காலையில் காலைக்கடன் கழிக்க இயலவில்லை. தினம் குறிப்பிட்ட நேரத்திற்கு நடக்கும் ஒரு நிகழ்வு நடைபெறாவிட்டால் எத்தனை வருத்தம் நேருமோ அத்தனை வருத்தம் இருந்தது அவருக்கு. அப்போது பிசியோதெரபி பயிற்சி கொடுக்கப்பட்டுக் கொண்டிருந்தது. அப்படியான பயிற்சி காலை பதினொரு மணிக்கு அந்தப் பயிற்றுநர் வந்து சொல்லிக் கொடுப்பார். அப்போது காலையில் கழிக்காத காலைக்கடன் வட்டி கேட்பது போல் வந்து தொலைக்கும். முதலில் வாயு பிரியும் போது எத்தனை முயற்சித்தாலும் சத்தம் குறைவாய் அவரால் அதை வெளியேற்ற முடியாமல் தலையை வேறு திசையில் திருப்பிக் கொள்வார். அந்த தெரப்பிஸ்ட் மூக்கை சாதாரணமாக நோண்டுவது போல் நோண்டி நாற்றம் உள்ளே செல்லாமல் தடுப்பதைப் பார்க்கும் போது ஹெலன் இருந்திருந்தால் அவள் முன் இத்தனை அவமானமாய் உணர்ந்திருக்க மாட்டோமெனத் தோன்றும். பின் எத்தனை அடக்கியும் கக்கா வெளியேற இயலாமையின் கோர முகம் அவரைக் கேவலமாகக் கொய்ய கண் கலங்கி உட்கார்ந்திருப்பார்.
தெரபிஸ்ட் வெளியே போய் ரெஜினாவை அழைக்க ரெஜினா உள்ளே வந்து,
“ என் தல எழுத்து… நா கஸ்டப்படுறேன்… நீங்க கெளம்புங்க சார்…”
தெரபிஸ்ட் போக அவள் டெட்டால் நீரை அவரது புட்டம் சுற்றி தெளித்துப் போனாள். அவ்வளவு தான். நேரம் ஆக ஆக கக்கா இறுகுவதை அவரால் உணர முடிந்தது. ராஜா வருவதற்குள் அவரை சுற்றிய வாடை மிகக் கேவலமாக அவரே தாங்கிக் கொள்ள முடியாததாய் இருந்தது. ராஜா கோபமாகி முதன்முறையாக ரெஜினாவை அடித்தான். அவள் அழுது கத்தினாள்.
“ இத்தன வருஷம் அடிக்காதவங்க உன் அப்பா பீய கழுவல்லன்னு அடிக்கல்ல… உனக்கு வாக்கைப்பட்டு வந்தேனா… இல்ல உங்கப்பன் பீய கழுவ வந்தேனா”
மீண்டும் அடி விழுந்தது. அவர்களுடையே போய் சண்டையை நிறுத்த இவருக்கு நகர வேண்டும் போலிருந்தது. ஆனால் உடனடியாக முடியவில்லை. அதுவே மிகப் பெரிய பிரச்சினையாக இருந்தது. கண்ணில் நீர் வடிய இருந்தவரை ராஜா ஒரு குழந்தை போல் அள்ளிக் கழுவி பவுடர் போட்டு கடைசியில் நெற்றியை முத்தமிட்டான். அவர் தேம்பித் தேம்பி அழுதார்.
“விடுங்கப்பா… அவ நல்லவ தான்… ஏதோ புத்தி மாறி பேசுறா…”
அடுத்த நாள் ரெஜினாவின் அப்பா, ராஜா அலுவலகம் கிளம்பும் முன்னமே வந்து விட்டார்
”தப்பு மாப்ள… ஆள் போட்டு அப்பாவ பாருங்க…என் மகள அடிக்கிற சோலிய வச்சிக்கப்படாது “
“நல்லா சொல்லுங்கப்பா… அந்தாளு சாதா கக்கா இருந்தா கூட பரவால்ல… மூணு மாசமா இருக்காதவனுக்கு போகும் பாரு… அப்டியொரு பேய் நாத்தத்தோட போகுது…”
” அவருக்கு உடம்பு சரியில்ல… பாத்துக்க என் அம்மாவும் இல்ல… எப்பவுமா பீ கழுவுற…அது ஒரு அவசரத்துக்கு தான மாமா… இல்லன்னா… எனக்கு ஒரு போன் போட்டா…”
“பீ கழுவ பதினஞ்சு கிலோமீட்டர் தாண்டி வருவீகளாக்கும்”
அவர் கையை நீட்டி அசால்டாக பேசினார். இவனுக்கு கோபம் வந்தது.
“இப்ப என்ன தான் சொல்லுதீக மாப்ள.. கைய நீட்டாதீக… நல்லதுக்கில்ல
“சரி…”
“அவரு சரின்னா நீங்க தலயாட்டிட்டுப் போவீகளாப்பா… சாரி கேக்க சொல்லுங்க
“சாரி…அடிச்சது தப்பு தான்”
“எல்லாமே தப்பு தான் … உங்கப்பன் பீ போனது கூட”
“எல்லாருமே முடியாம போனா ஆறது தான….”
”என்ன கூட்டிட்டுப் போயிறுப்பா… கண்டவன் பீ அள்ளவா பெத்து போட்ட…”
“ரொம்பப் பேசுறா உங்க மக”
“எல்லாத்துக்கும் உள்ள படுத்திருக்க அந்த மனுஷன் தான் காரணம் அப்பா… அவன் சாவணும்… அன்னிக்கு வாரேன் உன்னோட குப்ப கொட்ட”
மீண்டும் இப்போது ரெஜினாவின் அப்பா முன்னாலேயே ராஜா அவளை அடிக்க, அவள் அவளப்பா வீட்டுக்கு போனாள். தன் சாவு அவளை இங்கு கொண்டு வரக் கூடுமெனில் அது தனக்கு சீக்கிரம் நிகழ்ந்து விடாதா என்று தோன்றிற்று. என்ன வாழ்க்கை. ஒரு அக்டோபரின் பிடியில் வாழ்வது போல் வியாதியின் பிடியில் வாழ்வதென்பது. ஒரு நாள் காலை விடிகிறது. கஞ்சி. பால். ஒண்ணுக்கு. கக்கா. நாத்தம். மாத்திரை. ராத்திரி. இதுக்கு சாகலாம். அன்று இரவு ஜன்னல் வழியாய் தெரிந்த நட்சத்திரங்களைப் பார்க்கும் போது தான் சாகக் கூடாது. இன்னும் கொஞ்ச நாள் இருக்கலாம் என்று தோன்றிற்று. ஏன் கடவுள் வாசனையாய் கக்கா போகும் வழிமுறைகளை யோசிக்கவில்லை என்று தோன்றிற்று. இதை ரெஜினாவிடம் சொன்னால் சிரிப்பாள். பின் அவள் எப்படியும் திரும்ப வந்து விடுவாள் சில நாட்களில் என்று அவருக்கு நம்பிக்கை இருந்தது. ராஜாவும் அவரிடம் எதையும் காட்டிக் கொள்லவில்லை. அதனால் அந்த பாரம் அத்தனை தூரம் அலைக்கழிக்கவில்லை. ஆனால் கக்கா ஏன் பிசுபிசுப்பாக ஆனது என்று மனம் ஓயாமல் கேட்க, வழக்கமாக சாப்பிடும் சிலவற்றை அவர் தவிர்க்கத் துவங்கினார்.
அதை உணராமல் ராஜாவும் யோசிக்க ஆரம்பித்தான். பின் அவனாலும் அவரைத் தனியாக சமாளிக்க முடியவில்லை. ஒரு ஹோம் நர்ஸ் வைத்தான். அந்தப் பையனின் பெயர் குரு. அவன் எந்த ஒரு சிறு முக சுழிப்பும் இல்லாமல் அவரைப் பார்த்துக் கொண்டான். குறிப்பாக அவர் கக்கா இருக்கும் போது. அதன் பிசுபிசுப்பு மாறவில்லை. ஆனால், அவன் முகம் எப்போதும் போலிருந்தது. அதைக் கொட்டி வேகமாக குழாயைத் திறந்து கம்மோட் பாட்டைக் கழுவி அவன் வைத்து விட்டு பினாயில் ஊற்றி பின் இவருக்கு பவுடர் போட்டு விட்டு டிவி பார்க்க ஆரம்பிப்பான்.
செய்தி கேட்டதும் ரெஜினா வீட்டுக்கு வந்து விட்டாள். ராஜா வீட்டில் இல்லாத நாட்களில் குருவிடம் தியோடரைப் பற்றி குறை சொல்வது அவருக்குக் கேட்டபடியே தான் இருந்தது. ஆனால் அவருக்கு அது பிரச்சினையாய் இல்லை.. ஆனால், சில மாதங்களிலேயே குரு நின்று விட்டான். அதைத் தொடர்ந்து வேறு சிலர் வந்தனர். ஒரே ஒருவன் மட்டும் கக்கா போகும் போது முகம் சுழித்தான். அவன் குடித்து வைத்திருந்த தேநீரில் இவர் துப்பி வைத்தார். இப்படியான ஒரு உணர்வில் அவர் முற்றிலுமாக தேங்கி இருந்த போது தான் ரெஜினாவுக்கு ஒரு மதியம் போன் வந்தது. மீன் குழம்பு கொதித்துக் கொண்டிருக்கையில் போன் வந்ததும் அசிரத்தையாக எடுத்தவள் அலறி அடித்துக் கொண்டு தன் அப்பா சேர்ந்திருந்த ஆஸ்பத்திரிக்கு வந்தாள். குடல் சுழற்சியில் உடனடியாக அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருக்க அவள் மிகப் பெரிய அலைக்கழிப்பில் ராஜாவுக்கு போன் செய்து பணம் கேட்டாள்.
“எவ்ளோன்னு தெரில… கொஞ்சம் உதவுனேனா நல்லாருக்கும்… பின்ன அண்ணன் கூட அடச்சிடும் உனக்கு”
“கொண்டு வாரேன்”
அவன் ஆஸ்பத்திரிக்கு வந்த போது அவருக்கு எனிமா கொடுத்துக் கொண்டிருந்தார்கள். ரெஜினா அறைக்கதவுக்கு வெளியே நிற்க, உள்ளே அவர் அப்பா அயர்ச்சியான முனங்கலோடு வெளியேற்ற ரெஜினா கண்களை குனிந்து கொண்டாள். அவன் பணத்தைக் கொடுத்து விட்டு சிறிது நேரம் அவர் அறுவை சிகிச்சைக்காக அழைத்து செல்லப்படும் வரை இருந்து விட்டுக் கிளம்பினான். மனசில் “உங்கப்பனுக்கும் போச்சு பாத்தியா” என்ற ஒற்றை வரி சொல்லப்படாமலே இருந்தது. அதை சொல்லி விடுவானோ என்ற பயத்திலேயே அவள் நகர்ந்தே இருந்தாள்.
வீட்டுக்குப் போனவன் ஹோம் நர்சை போக சொல்லிய போது அவனும் சாப்பாட்டு பாத்திரத்தோடு கிளம்பினான். பின் ஏதோ ஞாபகம் வந்தவனாய், “ அவரு இன்னும் கக்கா போவல இன்னிக்கு “ என்றான். தியோடரின் கண்கள் ராஜாவை விரித்து பார்த்தன. அவன் ஏதும் சொல்லாமல் இருக்க இவர் பக்கத்தில் வருமாறு கூப்பிட்டு டயாபர் வாங்கி வருமாறு சைகையில் சொல்லி, மூக்கை பொத்தி தான் கண்ட நேரத்தில் கக்கா போவதால் சிரமம் என்பது போல் செய்ய ராஜா அவர் கைகளைப் பிடித்து கொண்டான்,
மறுநாள் முதல் டயாபர் கட்ட ஆரம்பித்தாகி விட்டது. ஈரக்கக்கா காய்ந்து உறுத்தும் அளவுக்கு ஆனது . தன் நிலையின் வருத்தம் தெரிவிக்க இயலாமல் தியோடர் மிக மன அழுத்திற்கு ஆளாகி சில நாட்களுக்குப் பின் கக்கா போவதற்கு முன் இதயம் நின்று இறந்து போனார். குளிப்பாட்ட வந்தவர் ராஜா காதில் கிசுகிசுப்பாய், ” கடைசியா மலம் கழிச்சிருப்பாங்க… நீங்க கொஞ்சம் பாத்து அப்டி இருந்துச்சுன்னா கழுவிடுங்க “ என்று சொல்ல ராஜா மெல்ல வேஷ்டியை நகர்த்தி பார்க்க அதில் கக்கா இல்லை.