சிறுகதைகள்
Trending

ரஞ்சிதம்- கனிமொழி.ஜி

கனிமொழி.ஜி

ஆறு ஓடற மாதிரி அகலமான தெரு. அதுல இடுப்பளவு ஒயரத்தில் சீமை ஓடு போட்ட பெரிய வீடு எங்களோடது. பித்தளை வளையம் வச்ச பெரிய கதவைத் திறந்தா கூடமும் பக்கத்தில் நாங்க இருக்கிற மூனு ரூமும், எதிர்ல நாலு வீட்டு குடித்தனக்காரங்களும் நடுவுல அகலமான முற்றம் மேலே தெறந்த வெளி சிமெண்ட் போட்ட இடத்தில பெரிய வட்டமான மூங்கில் தட்டுல வத்தலோ, மிளகாயோ, அரிசியோ இல்ல கொடியில துணியோ ஏதோவொன்னு வெயிலை வீணாக்காம காய்ஞ்சிட்டிருக்கும். நாலு வீட்டுக்கும் பொதுவா பின்புறம் தோட்டம், குளிரூமும் வாழையும், முருங்கையும் செம்பருத்தியும் நல்லா குளிர்ச்சியா இருக்கும். நாலு வீட்டிலேயுமே சின்னக் குடித்தனங்கள் தான் இருந்தாங்க. பெரிய சண்டை சச்சரவு இல்லாம ரொம்ப அமைதியா இருக்கும். நாங்க பயன்படுத்தற மூனு அறையும், குடித்தனங்க வீடுகளும், நடுவுல பின்னாடின்னு ரொம்ப சுத்தமா பெருக்கி வச்சிருக்கும்.. எல்லாத்துக்கும் காரணம் ரொம்ப கண்டிப்பான எங்க ரஞ்சிதம்தான். நான் ரஞ்சினு தான் கூப்பிடுவேன்.

ரஞ்சியைப் பாத்திருக்கிங்களா? ஒல்லியா நல்ல மஞ்சள் வெளுப்பா இருக்கும். சன்னமா பேசும். ஆனா அதுவே கண்டிப்பா இருக்கும். நான் அது பேச்சை எப்பவும் மீறனதில்ல. எப்பவும் கலைஞ்ச தலையோடயோ பொட்டில்லாமலோ யாரும் ரஞ்சித்தைப் பாத்திருக்க முடியாது. சுத்தமா குளிச்சி, பிசிறில்லாத பொட்டு வச்சி நெளிநெளியான முடிய வாரி கொண்டை போட்டிருக்கும். முன்னாடியெல்லாம் பெரிய ரிங் கொண்டை தான்.. இப்போதான் அதெல்லாம் போடறதில்லை. ரஞ்சி அப்பவே அவ்வளவு அழகி. எனக்கு ரஞ்சியைக் கட்டிக்க அவ்ளோ பிரமிப்பா இருந்திச்சி. என் ஈடு பசங்கள்லாம் எனக்கு வந்த திடீர் அதிர்ஷ்டத்தை கிண்டல் பண்ணாங்க. அது எப்பவும் சிரிக்காது. கொஞ்சம் இறுக்கமாத்தான் இருக்கும். ஆனா ஒரு வார்த்தை சொன்னாலும் சரியா இருக்கும். எனக்கு தான் யார் சரி தப்புன்னு சரியா புரியாது. வேலையில்லாத நேரத்தில எதையாவது படிச்சிட்டே இருக்கும். தேவையில்லாம ஒரு வார்த்தை பேசாது.

ரஞ்சிக்கும் எனக்கும் கல்யாணம் ஆகும் போது நான் பஸ் ட்ரைவரா இருந்தேன். நிலம் தோட்டமெல்லாம் அப்பாவும், அவருக்கப்புறம் அண்ணனும் பாத்துக்கிட்டிருந்தாங்க. எனக்கு அந்த கணக்கு வழக்கு எல்லாம் தெரியாது.. தூரத்து சொந்தம் ரஞ்சிதம் குடும்பம் மலேசியாவுல இருந்த வந்த போது எனக்கு 26 வயசு. எங்க நிலம் தோட்டம் வீடு மதிப்பெல்லாம் பார்த்துட்டு 19 வயசு ரஞ்சியை வீட்ல எனக்கு கட்டி வைக்க சம்மதிச்சாங்க. கல்யாணத்துக்கப்புறம் எனக்கு இந்த வீடும், கொஞ்சம் பணமும் என் பங்குக்கு பிரிச்சிக் கொடுத்தாங்க. நிலமெல்லாம் அண்ணனும் அவர் புள்ளைங்களும் எடுத்துக்கிட்டாங்க. இது கூட ரஞ்சியோட பேச்சால தான் கிடைச்சிது. தனியாளா சண்டை போட்டு பிரிச்சி வாங்கிட்டு வந்திச்சி. நான் பஸ் வேலையை விட்டு 60 வயசுல வீட்டுக்கு வந்த போது கொஞ்சம் பணம் குடுத்தாங்க. அதை பேங்க்ல போட்டதுல மாசாமாசம் கொஞ்சமா வட்டிப் பணம் வருது. எனக்கு உடுத்தறதுல பெரிய ஆசையில்லை. தொளதொளன்னு பேண்டும் சட்டையும் தான் எப்பவும், வீட்டுக்குள்ள முட்டி வரை பெரிய ட்ரவுசரும் பனியனும். கல்யாணத்துக்குக் கூட வேட்டிக் கட்டத் தெரியாம எங்க அண்ணன் பெல்ட் போட்டு கட்டிவிட்டாரு. அப்புறம் ஒரு சைக்கிள் வச்சிருக்கேன். கொஞ்ச வருஷத்துக்கு முன்ன வரை நான் ரஞ்சியை வச்சி ஓட்டிட்டு வருவேன். இப்போதான் கொஞ்ச நாளா தனியா கூட ஓட்ட முடியல. அதனால கடைக்குப் போய் பையை பின்னாடி வச்சி தள்ளிட்டே வந்திடறேன்.

தான் பெத்த பொண்ணு புள்ளைக கிட்ட மட்டும் தான் ரஞ்சி சிரிக்கும். புள்ளைங்களை ஒரு வார்த்தை கடிஞ்சி பேசாது. ரெண்டையும் நல்லா உடுத்திப் பாத்து ரசிக்கும். நல்லா சமைச்சி குடுக்கும். அவங்க சாப்பாட்டுல எந்தக் கொறையும் இருக்காது. புள்ளைங்களும் வெளியாளு தெரியாம அமைதியா நல்லதனமா வளர்ந்திச்சிங்க. ரஞ்சிக்கு புள்ளைங்க பெருமைதான் எப்பவும். வீட்டுக்கு யாரும் பத்திரிகை வைக்க வந்தால் உடனே அவங்க கேக்கலைன்னாலும், பெருமையா சொல்லும். பெரியவள உள்ளூர்ல காலேஜ் ப்ரொபசரா இருந்த அவ தம்பிக்கே கட்டிக் குடுத்தோம். வாராவாரம் மத்தியான சாப்பாடு எங்க ரெண்டு பேருக்கும் அங்கதான். ராவுக்கு குழம்பு எடுத்திட்டு நானும் அதுவும் பேசிட்டே என் சைக்கிளைத் தள்ளிட்டு ஒன்றரை மைல் துரத்தை நடந்தே வந்திடுவோம். அடுத்த மகனை நல்லாத்தான் படிக்க வச்சோம். படிச்சி முடிச்சதும் சென்னையில் மத்திய அரசு வேலைக்குப் போயிட்டான். வெளியூரிலேயே படிச்ச பையன் வேலைக்குப் போன பினனாடியும் மாசமொரு முறைதான் வருவான். நாள் முழுக்க அறையிலேயே அடைஞ்சிருப்பான் ஒருத்தர் கிட்டயும் வாய் திறந்து பேசமாட்டான். சம்பளத்தில ஒரு பங்கை குடுத்திட்டு ராத்திரிக்கு கிளம்பிடுவான். 30 வயசாகியும் ஒரு பெண்ணும் சரியா அமையல. ரஞ்சி நல்ல வசதியான வீட்டுப்புள்ளையா கண்ணுக்கழகா இருக்கணும்னு சொல்லிட்டிருந்திச்சி.

ஒரு முறை வீட்டுக்கு வந்த சங்கர் மூனு நாளா ஊருக்குப் போகல. லீவுன்னு சொன்னான். அன்னைக்கு அவன் தோட்டத்தில பல்லை விளக்கிட்டு ரொம்ப நேரம் உள்ள வரல. அங்கேயே நின்னுட்டு பின்னாடி கந்தன் வீட்டு தோட்டத்தில அவன் பொண்ணைப் பார்த்து சிரிச்சிட்டிருந்தான். அதை ரஞ்சி பார்த்துட்டு உள்ளே கூப்பிட்டு அவனை விசாரிச்சதும், அவன் விருப்பத்தைச் சொன்னான். அவங்க வீட்டுக்கும் எங்க வீட்டுக்கும் சரியா பேச்சு வார்த்தை இல்லை. கந்தனைப் பாத்தாலே ரொம்ப கொடூரமா இருப்பான். எலும்பு முறிஞ்சவங்களுக்கு புத்துர் கட்டுப் போடறதுதான் அவன் வேலை. அதோட கொஞ்சம் நெலம் தோட்டமும் அவங்க இருக்கிற சின்ன மாடி வீடும் உண்டு. வேட்டியை உள் ட்ரவுசர் தெரியற மாதிரி மடிச்சிக்கட்டி பெரிய மீசையும் நல்லா சுருட்டி விட்ட சட்டை கையும்.. நான் எதிர்ல பாத்தா சிரிக்கக் கூட மாட்டேன். அவன் பொண்டாட்டி அவனை விட நல்ல ஒயரமா சிவப்பா… சத்தமா பேசுவா. அவங்க பொண்ணுதான் வளர்மதி. நல்ல சிவப்பா உயரமா களையா இருக்கும். ஆனா வாய் கொஞ்சம் துடுக்கு. அவங்கலாம் எனக்கு தூரத்து சொந்தம் தான்னாலும் வாய்ப் பேச்சு இல்ல. ஆனாலும், மறுநாள் காலையிலேயே நானும் ரஞ்சியும் போய் பொண்ணு கேட்டோம். கவர்மெண்ட் வேலை அமைதியான மாப்பிள்ளை கசக்குதா. கேட்டதும் சரின்னுட்டாங்க. அப்பவே கையை நனைச்சிட்டோம். காபியும் வடையும் சாப்பிட்டு வந்தோம்.

ரெண்டு மாசத்தில கல்யாணமானதும் மறுநாளே பொண்டாட்டியைக் கூட்டிட்டு சென்னைக்குப் போயிட்டான் சங்கரு. நாங்க இதை எதிர்ப்பாக்கல. அதுக்கப்புறம் மாசாமாசம் பணம் மட்டும் மணியார்டர்ல கொஞ்சம் போல வந்திச்சி. நாலு மாசம் கழிச்சி அதுவும் இல்லை. ஒரு ஞாயித்துக்கிழமை குடித்தனமிருக்கிற சந்திராம்மா, புள்ள மாமியார் வீட்டுக்கு வந்திருக்கிற சேதியைச் சொன்னாங்க. ரெண்டு நாளா இருக்கறாங்க. இங்க வரலையேன்னு சொன்னதும் தான் தெரிஞ்சது. நானும் ரஞ்சியும் தெருவைச் சுத்திக்கிட்டுதான் கந்தன் வீட்டுக்குப் போகணும் தோட்டத்துப் பக்கம் சுவரைத் தாண்டிப் போக முடியாது. நாங்க உள்ள போன போது யாருமே அதிர்ச்சியாகல. சங்கரும் அவன் பொண்டாட்டியும் சாப்பிட்டுக்கிட்டு இருந்தாங்க. சங்கரு, “சாப்பிடறியாமா?” ன்னு கேட்டான். ரஞ்சிக்கு தாங்கல. சத்தம் போட ஆரம்பிச்சிது. மொத முறையா சங்கரு எங்களை எதுத்துப் பேசினான். “இப்போ எதுக்குக் கத்தறிங்க? என் பொண்டாட்டி முழுகாம இருக்கா. அவங்க வீட்டுக்கு வந்திருக்கோம். அவளுக்கு உடம்பு முடியல. அதான் அங்க வரல. இன்னைக்கு ஊருக்குக் கிளம்பலாம்னு இருக்கோம்”னு சொன்னதும் ரஞ்சி நெஞ்சைப் பிடிச்சிக்கிட்டா. ஆனாலும், மருமக முழுகாம இருக்கறது எனக்கு உள்ளுர சந்தோஷமா இருந்திச்சி.

எனக்கு குழந்தைங்கன்னா ரொம்பப் பிடிக்கும். நம்ம வீட்ல ஒரு குழந்தை விளையாடப் போகுதுன்னு நிறைவா போச்சி. ரஞ்சியை வீட்டுக்குக் கூட்டிட்டு வந்துப் படுக்க வச்சேன். என்ன சொல்றதுன்னே புரியல. நாலு வீடு தள்ளி என் கூடப் படிச்ச ஃப்ரண்டு இருக்கான். என் சின்ன வயசு கூட்டாளி அவன்தான். வெங்கடேசன் அவன் நல்லா படிப்பான். தினமும் பேப்பர் படிக்க வீட்டுக்கு வருவான். அதை ரஞ்சிதம்னு பேர் சொல்லிக் கூப்பிடறது அவன் மட்டும்தான். ரஞ்சி அவன்கிட்டயும், அவன் மனைவி கிட்டயும்தான் நல்லா மனம் விட்டு பேசும். போய் அவங்க ரெண்டு பேரையும் கூட்டிட்டு வந்தேன். ரஞ்சி அப்படியழுதிச்சி. எனக்கு ரொம்ப வருத்தமா இருந்திச்சி. அவங்க சாயந்திரம் வரை இருந்து பேசி சமாதானப் படுத்தி விட்டுப் போனாங்க. குழந்தை பொறாந்தா நம்ம வீட்டுக்கு வராமலா போயிடுவாங்கன்னு நினைச்சி அமைதியாயிட்டோம். அது தூங்குனதும் ராவெல்லாம் எனக்கு குழந்தை ஞாபகமாகவே இருந்திச்சி. வெங்கடேசன் பொண்ணுக்கு பொறந்த குழந்தையை எனக்கு சரியாத் தூக்கக்கூட வராது. ஆனா அந்தக் குழந்தையைப் பார்க்க தினமும் நான் அங்கே போயிடுவேன். அவன் வீட்டுக்குப் போனா ரஞ்சி எதுவும் சொல்லாது. சில நேரம் கூட வந்து புள்ளையை மடியில வச்சி ஆட்டிட்டிருக்கும்.

அடுத்த மாசம் சங்கரு கிட்ட இருந்து பணம் வந்திச்சி . ஆனா ரஞ்சி அதை வாங்காம திருப்பி விட்ருச்சி. அதுக்கப்பறம் பணம் எதுவும் வரல. பணத்துக்குக் கஷ்டப்பட்டாலும் ரொம்ப வைராக்கியமா இருந்தோம். வீட்டு வாடகையும், பேங்க்கில இருந்து வர கொஞ்ச வட்டியும் வச்சி சமாளிச்சிட்டிருந்தோம். சங்கர் சென்னை வீட்டு விலாசமே எங்களுக்குத் தெரியல. அவன் மாமியார் வீட்ல எல்லாரும் போய் அங்கேயே இருந்து புள்ளைப் பொறப்பை பார்த்துட்டு வந்ததா சந்திராம்மா சொன்னாங்க. ரஞ்சிக்கு மனசு ரொம்ப கொமச்சலாப் போச்சி. யார்கிட்டயும் சரியாப் பேசறதில்ல. ராத்திரியில எழுந்து தனியா உக்காந்திட்டிருந்திச்சி. எனக்கு என்ன சொல்றதுனே தெரியாது. அப்போல்லாம் நான் தூங்கற மாதிரி நடிப்பேன்.

சங்கர் எந்த சொந்த பந்தம் வீட்டு விசேஷத்துக்கும் வரதில்ல. ரெண்டாவது பொண்ணு பொறந்திருக்கறதா சொன்னாங்க. அவன் அக்காவுக்குக் கூட போன் பண்றதில்லையாம். ஒரு ஞாயித்துக்கிழமை பொண்ணு வீட்டுக்கு சாப்பிடப் போனப்போ ஏதோ மச்சான் பேச்சு கொஞ்சம் சரியில்லாம இருந்திச்சி. சாப்பிட்டதும் நடந்து வந்திட்டிருக்கும் போது, “ராவுக்கு என்னா கொழம்பு எடுத்திட்டு வந்த?” ன்னு நான் கேட்டதுக்கு அது ஒன்னும் சொல்லல. இனிமே அவ வீட்டுக்கு சாப்பிட போவக்கூடாதுன்னு உறுதியா சொல்லிச்சி. “நானும் அதான் நினைச்சேன்”னு சொல்லிக்கிட்டேன்.

கொஞ்ச நாளா குடித்தனக்காரங்க முனுமுனுப்பா இருந்தாங்க. பின்னாடி வீடு ஓடெல்லாம் உடைஞ்சி தரையெல்லாம் பேந்திருச்சி. எதையும் சரி செய்ய கையில காசில்லை. ஒவ்வொருத்தரா காலி பண்ணிட்டாங்க. அட்வான்ஸ் எதுவும் வாங்கற பழக்கமில்ல. வந்த வாடகையும் போச்சி. பேங்க் வட்டியில பால் வாங்கறதைக் கூட கொறச்சிக்கிட்டோம். நல்லா சாப்பாடு சாப்பிட்டு ரொம்ப நாளாச்சி. பக்கத்து வீட்டு அருணகிரி பையன் கல்யாணத்துக்கு வந்து பத்திரிகை வச்சான். ரெண்டு பேரும் போய் நல்லா சாப்பிட்டு, மொய் வைக்கிற எடத்தை திரும்பிப் பாக்காம வந்திட்டோம். அன்னைக்கு ராத்திரி ரஞ்சியோட அழுகை சத்தம் ரொம்ப நேரம் கேட்டுச்சி.

சங்கர் கிட்ட இருந்து எந்தத் தகவலும் இல்லை. பொண்ணும் ஏன் வரலன்னு வந்து கேக்கல. மறுநாள் ரஞ்சிக்கு உடம்பு சரியில்லன்னு போய்ச் சொன்னதுக்கு கையில கொஞ்சம் காசு கொடுத்து, எங்க நிலைமையும் சரியில்லப்பா.. இப்போ வர முடியலன்னு சொன்னதும், நான் அதை ரஞ்சிக்கிட்ட சொல்லவே இல்லை. வெங்கடேசனுக்கு திடீர்னு உடம்புக்கு ரொம்ப முடியாமப் போயிடுச்சி. வெளியூருகெல்லாம் கூட்டிட்டுப் போய் அவம்பொண்ணு வைத்தியம் பாத்திச்சி. அப்பவும் குணமாகல. கொஞ்ச நாளா பேச்சடங்கி ஒரு நாள் ஒரேயடியா அவனும் போயிட்டான். அன்னைக்கு சாவு வீட்ல ரஞ்சி அழுத அழுகை இருக்கே. அவ்வளவு சத்தமா அவ அழுது அன்னைக்கு தான் பாத்தேன். அந்த அழுகை வெங்கடேசனுக்காக மட்டுமா எனக்குத் தெரியல. பொண்ணு புள்ளை மேல வச்சிருந்த அத்தனை அன்பையும், ஆதங்கத்தையும் கண்ணீரா கரைச்சிடுச்சி. எனக்கும் அழுகையா இருந்திச்சி. அதுக்கப்புறம் வெங்கடேசன் பொண்ணு அவன் மனைவியை ஊருக்குக் கூட்டிட்டுப் போயிடுச்சி. ரஞ்சிக்கு பேச்சுவார்த்தையே நின்னுடுச்சி. என்கிட்டயும் ஒன்னும் பேசறதில்ல. அப்பவும் காலையில எழுந்து குளிச்சி நல்லாப் பொட்டு வச்சி பொடவை கட்டிக்கும். தனியா உக்கார்ந்து புலம்பும் போது எதையாவது ஆறுதலா சொன்னா என்னைத் திட்ட ஆரம்பிச்சிரும். அதனால நான் பெரிசா ஏதும் அது கிட்ட சொல்றதில்லை.

காலையில குழாய்த்தண்ணி வரும்போது குடித்தனக்காரங்க இருந்த காலத்தில ரஞ்சி பிடிச்சிப் பிடிச்சி குடுக்கும். நான் வீட்ல அண்டா குண்டா சொம்பு வரை ஊத்தி வைப்பேன். அது பிடிச்சி முடிச்சி ஏறுன பிறகுதான் குடித்தனக்காரங்க பள்ளத்தில எறங்குவாங்க. ஆனா, இன்னைக்குக் காலையில இருந்து ரஞ்சி எந்திரிக்கல. வீடு வாசல் பெருக்கல தூசியா இருந்திச்சி. வெய்யில் உச்சிக்கு வந்திடுச்சி. நான் காபி வச்சி குடிச்சேன். ரஞ்சி பக்கத்தில வச்ச காபியை சூடு பண்ணி திரும்பவும் குடிச்சேன். எவ்வளவு சொல்லியும் ரஞ்சி எந்திரிக்கல. ஒரு உலுக்கு உலுக்கினேன்.. அதிர்ச்சியில ரஞ்சி எந்திரிச்சது.

“ரஞ்சி போதும் ரஞ்சி. இதுக்கு மேல எதுவும் வேணாம். என்னால உன்னை இப்படிப் பார்க்க முடியல. நாம் வாழ்ந்த வாழ்க்கை.. பெத்த புள்ளைங்க. இந்த வீடு, ஊரு எதுவும் வேணாம். ஒரு முடிவுக்கு வருவோம்” னு சொன்னேன். இந்த முறை ரஞ்சி என்னை எதுத்து ஒன்னுமே சொல்லல. சரின்னு தலையாட்டுச்சி. “குளிச்சி ரெடியா இரு”ன்னு சொன்னேன்.

உச்சி வெய்யில்ல பேங்க்குக்கு போனேன். கொஞ்சம் பணம் எடுத்துட்டு சாப்பாடு வாங்கிட்டு பால் வாங்கிட்டு வந்தேன். வெங்கடேசன் வீடு பூட்டியிருந்தது. வித்துட்டதாச் சொன்னாங்க. கொஞ்சநேரம் வாசல்ல நின்னுட்டு வீட்டுக்கு வந்தேன். ரஞ்சி என்னைப் பார்த்து புதுசா சிரிச்சிது. எனக்கு அழுகையா வந்திச்சி. கூப்ட்டு பக்கத்தில சாப்பாட்டைப் பிரிச்சி வச்சேன்.. சாப்பிட்டு நான் காபி போட்டு எடுத்துட்டு வந்து ரெண்டு பேரும் குடிச்சோம். வீடு சுத்தமா பெருக்கி, வௌக்கெல்லாம் வௌக்கி, சாமி போட்டோவுக்கெல்லாம் பூக்கட்டி போட்டிருந்திச்சி. தலையிலயும் கொஞ்சம் போல வச்சிருந்திச்சி. நல்ல இருட்டினப்புறம் கதவை சாத்திட்டு வந்தேன். ரஞ்சி நல்வௌக்குல தளும்ப எண்ணெய் விட்டு ஏத்தி வச்சி கையெடுத்து கும்புட்டுச்சி.. வௌக்கு வெளிச்சத்தில அது மொகம் அவ்வளவு தெளிவா இருந்திச்சி. நான் மடிப்புக்கலையாம பீரோவுக்கு அடியில வச்சிருந்த ரஞ்சியோட புடவையை எடுத்து உருவி முடிச்சி போட்டு தூலத்தில வீசினேன். ரொம்ப சரியா இந்தப்பக்கம் வந்திடுச்சி.. பக்கத்தில இருந்த ஸ்டூலை நகர்த்திப் போட்டு ஏறி நின்னு ரெண்டு முனையும் பிடிச்சி சுருக்கு முடிச்சிப் போட்டேன். ரஞ்சீன்னு சத்தமாக் கூப்பிட்டேன். அது என்னென்னே கேக்காம உள்ள வந்திச்சி. அதுக்கு என்னைப் பார்த்து எந்த ஆச்சர்யமும் இல்ல. தானா வந்து கையை நீட்டுச்சி. நான் கையைக் குடுத்து த க்கி விட்டேன். வட்டமான புடவைச் சுருக்கு ரெண்டு பேர் கழுத்திலயும்… என் பனியனை ரெண்டாக்கிழிச்சி என் கண்ணைக் கட்டச் சொன்னேன். ஏன்னு புரியாம பாத்துச்சி.. மீதி துணியை அது வாயில திணிச்சேன். எனக்கு எப்படி அவ்வளவு வலு வந்திச்சின்னு தெரியல ஒரே ஒதை ஸ்டூல் தள்ளிப்போய் விழுந்திச்சி.. ரஞ்சி அழுவுற சத்தம் எனக்குக் கேக்கல. அதை என்னால எப்பவுமே பாக்க முடியாது.

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button