தொடர்கள்

காகங்கள் கரையும் நிலவெளி;11 – சரோ லாமா

தொடர் | வாசகசாலை

மீண்டுமொரு முறை பதேர் பாஞ்சாலி பார்த்தேன். ரே-யின் மேதமையை மீறி படத்தில் நம்மைக் கவரும் இன்னொரு முக்கியமான அம்சம் படத்தின் ஒளிப்பதிவு.  சத்யஜித் ரே யைப் பற்றி குறைந்தபட்சம் 20 புத்தகங்களாவது நமக்கு வாசிக்கக் கிடைக்கின்றன. ஆனால் சுப்ரதோ மித்ராவைப் பற்றி ஒரு நல்ல புத்தகம் கூட இல்லை. இணையத்தில் சில நேர்காணல்கள் மட்டுமே உண்டு. மிருணாள் சென் அமெரிக்காவில் சுப்ரதோ மித்ராவை ஒரு நல்ல நேர்காணல் செய்திருக்கிறார். அது வாசிக்கக் கிடைக்கிறது. ஒருவேளை புனே திரைப்படக்கல்லூரி ஆவணக்காப்பகத்தில் அவரைப் பற்றிய தகவல்கள் காண அல்லது வாசிக்கக் கிடைக்கலாம்.

பதேர் பாஞ்சாலி படத்துக்கு ஒளிப்பதிவு செய்யும் முன் சினிமா ஒளிப்பதிவு கேமராவை தொட்டது கூட கிடையாது. அடிப்படையில் இசை ஆர்வம் உடையவர் மித்ரா. சிதார் கருவியை வாசிக்கும் அளவுக்கு திறமை கொண்டவர். ரே-யின் படங்களில் இவரது இசைப் பங்களிப்பும் ஓரளவு உண்டு என்று தாராளமாகச் சொல்ல முடியும். அறிவியல் படித்துக்கொண்டிருந்த, ஒளிப்பதிவில் அனுபவம் இல்லாத புகைப்படக்காரரான  மித்ராவை காலம் ஓர் ஒப்பற்ற ஒளிப்பதிவாளராக ஆக்கியது. அதற்கு முக்கியமான காரணம் சத்யஜித் ரே உடனான நட்பு.

ரே-வுக்கு பிரெஞ்சு புகைப்படக்காரர் ஹென்றி கார்த்தியே ப்ரஸ்ஸானை மிகவும் பிடிக்கும். இயற்கை ஒளியில் படம்பிடிக்கப்பட்ட பிரஸ்ஸானின் கருப்பு வெள்ளைப் புகைப்படங்கள், ரே மற்றும் சுப்ரதோ மித்ராவின் ஆதர்சங்கள். பிரஸ்ஸானிய புகைப்படத் தாக்கம் ரே-மித்ரா கூட்டில் உருவாகிய படங்களில் மிளிர்ந்ததை நம்மால் கண்டுணர முடியும். 1956ஆம் ஆண்டு பதேர் பாஞ்சாலியில் தொடங்கிய ரே-மித்ரா கூட்டு இந்திய சினிமாவின் தனித்துவமான கருப்பு வெள்ளை திரைப்படங்களை நமக்கு அளித்தது. ’பவுன்ஸ் லைட்டிங்’ என்னும் ஒளியமைப்பு முறையை ஒளிப்பதிவுத் துறைக்கு வழங்கிய ஒளிப்பதிவு மேதை சுப்ரதோ மித்ரா. இயற்கை ஒளியில் படம்பிடிப்பதில் நிபுணத்துவம் கொண்டவர். அந்த நிபுணத்துவத்தின் காலத்தால் அழியாத சாட்சியங்கள் சத்யஜித் ரேயுடன் அவர் பணியாற்றிய பதேர் பாஞ்சாலி, அபராஜிதோ, அபுர் சன்சார் மற்றும் சாருலதா ஆகிய கருப்பு வெள்ளைப் படங்கள்.

ரே திரையில் காட்ட விரும்பிய இந்திய வாழ்க்கையின் அசலான ரூபங்களுக்கு ரத்தமும் சதையுமாக உயிர் கொடுத்தவர் சுப்ரதோ மித்ரா. ரே-மித்ரா உருவாக்கிய காட்சி பிம்பங்கள் காலத்தால் அழியாதவை. பல தலைமுறைகளுக்கு நீடித்து நிலைத்திருக்கக் கூடியவை. பின்னால் வரும் பல சினிமா தலைமுறைகளை பாதிக்கும் திறன் கொண்டவை. இந்தியாவில் தொழில் நுட்பம் அவ்வளவாக வளர்ச்சி பெற்றிராத 1950 களின் காலகட்டத்தில் மித்ரா உருவாக்கிய திரைச் சட்டகங்களும் பிம்பங்களும் அசாத்தியமானவை. தான் உருவாக்க விரும்பிய திரைச்சட்டகங்களூக்கு தேவையான தொழில்நுட்பத்தை அவரே முயன்று உருவாக்கிக் கொண்டார். முப்பது வருடங்கள் ஒளிப்பதிவாளராக மித்ரா பணியாற்றியிருந்தாலும் ஒளிப்பதிவு செய்த மொத்த படங்களின் எண்ணிக்கை பதினேழு மட்டும்தான். அதில் பத்து படங்கள் சத்யஜித்ரேயுடன் இணைந்து பணியாற்றியவை. ”தான் சொல்ல வரும் கதைக்கு நெருக்கமான பிம்பங்களை உருவாக்கிய அதே வேளையில் ஒளிப்பதிவில் ஒரு நவீனத்தையும் ஒருங்கே உருவாக்கியவர்” என சுப்ரதோ மித்ராவைப் பற்றிய சத்யஜித் ரேயின் கூற்று நூறு சதவீதம் உண்மையானது.

1970 மற்றும் எண்பதுகளில் சுப்ரதோ மித்ரா படங்களில் பணியாற்றுவதைக் குறைத்துக்கொண்டு புனே திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவு துறைக்கு தன் பங்களிப்பை வழங்கினார்.  அந்தக் காலகட்டடத்தில் ரித்விக் கட்டக் ஒருசேர இயக்குநர் பிரிவில் படித்த மாணவர் குழாமை பாதித்தது போல மித்ரா ஒளிப்பதிவுத் துறை மாணவர்களை அதிகம் பாதித்தார் எனலாம். விரேந்திர சைனி, கே.யு மோகனன், திலிப் வர்மா, சன்னி ஜோசப், அனில் மேத்தா என தொன்னூறுகளுக்குப் பிறகு இந்தியத் திரையுலகை ஆண்ட ஒளிப்பதிவாளர்கள் மித்ராவிடம் பயின்றவர்களே.

இந்திய அளவில் குறிப்பிடத்தக்க சாதனையாளாராக இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த மித்ராவுக்கு உரிய அங்கீகாரம் கிடைத்ததா என்று பார்த்தால் இல்லை என்பதே என் பதில். தேசிய விருது அவர் ஒளிப்பதிவு செய்த கடைசி படத்துக்குத்தான் கொடுக்கப்பட்டது. சினிமா சாதனையாளார்களுக்கு வழங்கப்படும் தாதா சாகேப் பால்கே விருது அவருக்கு கடைசிவரை அளிக்கப்படவேயில்லை. அவரைப் பற்றிய. அவரை அவரது மேதமையை அறிய போதுமான அளவு ஆவணப்படங்கள் இல்லை. இந்தத் தொடரின் சென்ற அத்தியாயத்தில் ஒளிப்பதிவாளர், ஆவணப்பட இயக்குநர் ஹேமந்த் சதுர்வேதி பற்றி எழுதியதின் தொடர்ச்சியாகவே சுப்ரதோ மித்ராவைப் பற்றி இந்தப் பத்தியும் எழுதப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

சுப்ரதோ மித்ராவைப் பற்றி எழுதியவுடன் தமிழில் இவ்வாறான இயக்குநர்-ஒளிப்பதிவாளர் கூட்டு பற்றிய சிந்தனை மேலெழுந்து வந்தது. ஏ.பி.நாகராஜன் – பாபு, ஸ்ரீதர்-வின்சென்ட், பாரதிராஜா-நிவாஸ்/கண்ணன், மகேந்திரன் – அசோக்குமார் என வரிசையாக தமிழ் சினிமாவில் நிலைத்து நிற்கும் ஒளிப்பதிவாளர்களும் அவர்கள் உருவாக்கிய திரைப்படங்களும் நெஞ்சில் அலையாடின. நம் வரலாறு சார்ந்தோ அல்லது கலை சார்ந்து இயங்கிய படைப்பாளிகள் குறித்தோ போதிய அக்கறையோ கவனமோ இல்லாத சமூகம் நம்முடையது.

யோசித்துப் பாருங்கள். ஸ்ரீதர் – வின்செண்ட் இயக்கிய படங்களை வரிசைப்படுத்திப் பாருங்கள். வின்சென்ட் மாஸ்டரைப் பற்றி ஒரு நல்ல புத்தகமோ அல்லது ஆவணப்படமோ நம்மிடம் இருக்கிறதா? வின்செண்ட் மாஸ்டர் ஒளிப்பதிவு செய்த, ’நெஞ்சில் ஓர் ஆலயம்’ படத்தில் எனக்கு மிகவும் பிடித்த பாடல், ’சொன்னது நீ தானா?’ ஒரு ஷாட் கூட திரும்ப (No Repeated Shots) வராது. நான் அடிக்கடி ’பார்க்க’ விரும்பும் பாடல்களில் அதுவும் ஒன்று.  ஸ்டெடி கேம் வசதி இல்லாமலேயே அந்தப் பாடலை அவ்வளவு நேர்த்தியுடனும் கலை அம்சத்துடனும் படமாக்கியிருப்பார் வின்சென்ட் மாஸ்டர். (கேமரா கட்டிலுக்கு அடியில் நுழைந்து மேலெழுந்து வரும்.) எனக்குத் தெரிந்தவரையில் காட்சிப்பிழை இதழில் ஒளிப்பதிவாளர் வின்செண்ட் மாஸ்டர் உடனான ஒரு நல்ல நேர்காணல் ஒன்றை இயக்குநர் ஜாய் பாண்டியராஜன் செய்திருக்கிறார்.

பாரதிராஜாவின் ஆரம்பகாலப் படங்களை கலையில் மிளிரச் செய்த ஒளிப்பதிவாளர் நிவாஸின் ஒரு நல்ல புகைப்படம் கூட நம்மிடம் கிடையாது. சமீபத்தில் நிவாஸ் இறந்தபோது அவரது புகைப்படத்தைக் கேட்டு நண்பர்கள் சமூக வளைதளத்தில் கோரிக்கை வைத்தனர். நிவாஸ் இறந்த பின்னர் அவரைப் பற்றி ஒரு நல்ல கட்டுரை தென்னிந்திய ஒளிப்பதிவாளர்கள் சங்க இணைய தளத்தில் வெளிவந்தது.

அதேபோல மகேந்திரனின் படங்களுக்கு ஆன்ம ஒளியூட்டிய அசோக்குமார் பற்றியோ அவரது ஒளிப்பதிவின் நுட்பங்கள் பற்றியோ ஒரு நல்ல ஆவணம் நம்மிடையே இல்லை. மகேந்திரன் தன்னுடைய ஒளிப்பதிவாளர் அசோக்குமார் பற்றி சில நேர்காணல்களில் பேசியிருக்கிறார். அது மட்டுமே அசோக்குமார் பற்றி நம்மிடையே மிச்சமிருக்கும் ஆவணம். பார்வையாளர்கள் மட்டுமில்லாமல் சினிமாவை கற்றுக்கொள்ள விரும்புபவர்களுக்கும் மகேந்திரன் – அசோக்குமார் படங்கள் முக்கியமானவை. உதிரிப்பூக்கள், ஜானி, நெஞ்சத்தைக் கிள்ளாதே, மெட்டி என மகேந்திரன் படங்களில் ஒரு நீரோட்டத் தொடர்ச்சி போல வெளிப்பட்ட ஒரு கிளாஸிக் தன்மைக்கு அசோக்குமாரின் ஒளிப்பதிவு ஒரு முக்கியமான காரணம் என்பது என் அவதானிப்பு. அசோக்குமார் இல்லாமல் பிற்காலங்களில் மகேந்திரன் இயக்கிய படங்களான, ’கண்ணுக்கு மை எழுது, ’சாசனம்’ உள்ளிட்ட படங்களைப் பார்த்தால் நான் சொல்லவருவதன் உள்ளர்த்தம் (Sub text) புரியும்.

இத்தனைக்கும் இந்தியாவிலேயே சினிமா மீது அதிக மோகம் [Obsession] கொண்ட சமூகம் நம்முடையது. ஆனால் அந்த Obsession எல்லாம் வெறும் மேலோட்டமானதோ என்று தோன்றுகிறது.

***

வீடடங்கு காலத்தில் மீண்டும் புதுமைப்பித்தனின், “பால்வண்ணம் பிள்ளை” – கதை படிக்கக் கிடைத்தது. வாழ்வின் எளிய தற்செயல் மீது எனக்கு இருக்கும் அபார நம்பிக்கை அந்த வாய்ப்பை ஒரு ஆகச் சிறந்த பெறுமதியாக நம்பத் தலைப்படுகிறது. ஒரு எளிய குமாஸ்தாவின் கதைதான். ஆணாதிக்கம் மிகுந்த, குடும்பக் கட்டுப்பாட்டில் நாட்டம் இல்லாத, அதனாலேயே வம்ச விருத்தியை ஆண்டுக் கணக்கில் விஸ்தரித்துப் போகும் தென்திசை நாட்டின் பிள்ளைமார் சமூகத்தின் ஒரு எளிய பிரதிநிதி பால்வண்ணம் பிள்ளை.

மெக்சிகோ இருப்பது வட அமெரிக்க கண்டத்திலா அல்லது தென் அமெரிக்கா கண்டத்திலா என்கிற அலுவலகப் போட்டியில் அவர் தோற்றுப் போகிறார். அந்த நேரத்தில் அவரது சகதர்மினி ஒரு நலத்திட்ட நோக்கத்தோடு ( வீட்டுக்கு ஒரு கறவை மாடு வாங்குவது) அவரை அணுக அதே வேகத்தில் அதை பால்வண்ணம் பிள்ளையவர்கள் நிராகரித்து விடுகிறார். அதை மனைவி தன் செயல் திறத்தால் மீற, தன் ஆணாதிக்க கொடுக்கால் முறித்துப் போடுகிறார். எழுபது ரூபாய்க்கு வாங்கிய மாட்டை முப்பது ரூபாய்க்கு கோனாருக்கு விற்று தன் மனைவியின் முகத்தில் கரி, சாம்பல் என சகலத்தையும் பூசுகிறார். அதன் பின்னர் அவர் கொள்ளும் ஆசுவாசம் ஆண்களுக்கே உரிய முட்டாள்கள் கொள்ளும் மூர்க்கமான ஆசுவாசம் என்று சொல்வது மிகை ஒன்றும் இல்லைதான். எம் பிள்ளைகள் நீச்சுத் தண்ணியைக் குடித்து வளர்ந்து கொள்ளும் என்று கொக்கரிக்கும் பால்வண்ணம் பிள்ளையின் வாரிசுகளில் ஒருவன், ‘அப்பா, மாடு’ என்று வாய்விட்டு அலற, ‘சும்மா கிட சவமே’ என்று சொல்வதோடு கதை முடிகிறது.

1934 ஆம் ஆண்டு எழுதப்பட்ட கதை. 87 ஆண்டுகள் கடந்தபின்னும் இன்னும் அதன் வளமையோ அல்லது வலிமையோ கடுகளவும் குன்றவில்லை.

பால்வண்ணம் பிள்ளை கதையை எனது மேல்நிலை தமிழ் துணைப்பாடத்தில் படித்திருக்கிறேன். அதன் கருப்பொருள் குன்றாமல் கதைச் சுருக்கம் எழுதி கொள்ளை மதிப்பெண்கள் பெற்றும் இருக்கிறேன். பின்னாட்களில் என் இருபதாம் வயதில் நண்பர் மாமல்லன் கார்த்தியோடு நட்பு ஏற்பட்ட பின்னர் மேலும் பல புதுமைப்பித்தனின் கதைகளை வாசிக்கும் நல்வாய்ப்பு கிட்டியது. பல கதைகளை படமாக்கும் பொருட்டு அவர் முழுத் தொகுப்பை வாங்கி வைத்திருந்தார். அப்படித்தான் புதுமைப்பித்தனின் கதைகளை நான் வாசிக்க ஆரம்பித்தேன்.

வாசித்த வரையில் அதில் என்னை அதிகம் பாதித்த கதை என்று பால்வண்ணம் பிள்ளை கதையை தயங்காமல் சொல்ல முடியும். (இன்னொரு கதை – பொன்னகரம். அந்தக் கதையைப் பற்றி இன்னொரு வேளையில் எழுதுகிறேன்). அன்று முதல் இன்று வரை பால்வண்ணம் பிள்ளை கதையை வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு நிலப்பரப்புகளில் வெவ்வேறு மனநிலைகளில் வாசித்துள்ளேன். அதன் சொல் முறையும் வார்த்தைகளின் பயன்பாட்டு தேர்ச்சியும் கச்சிதமும் கூர்ந்த அங்கதமும் கூடிய கதை சொல்லல் முறையும் என்னைக் கட்டிப் போட்டது என்றே கூற வேண்டும். இத்தனை படித்தும், கண்டு கேட்டு பட்டறிவு கொண்ட பின்னும் உள்ளுக்குள் கொப்பளிக்கும் ஆணாதிக்க முள்ளை ஏன் என்னால் உடைத்துப் போட முடியவில்லை என்ற கேள்வியை நான் என்னை நோக்கிக் கேட்டுக் கொள்கிறேன். அது என்னுடைய XX குரோமோசோம் சம்மந்தப்பட்ட ஆதிக்கக் கொடுநோய் என்று அறிந்திருந்த போதும்…

***

என் ஆரம்பப் பள்ளிக்கூட நினைவுகளை கொஞ்சம் எழுதிப் பார்க்கலாம் என்று தோன்றுகிறது. காரணம் உண்டு. அந்தக் காரணத்தின் பெயர் ரூபி பிரிட்ஜஸ். முதன் முதலில் வெள்ளையினக் குழந்தைகளுடன் சேர்ந்து படிக்க பள்ளிக்குப் போன முதல் அமெரிக்க கறுப்பினப் பெண் குழந்தை. முதலில் என்னுடைய அனுபவத்தையும் பின்னால் ரூபியைப் பற்றியும் பார்க்கலாம்.

அடிப்படையில் நான் ஒரு நோஞ்சான் குழந்தை. குறை பிரசவம் வேறு. நான் கரு தரித்தவுடன் அப்பாவுடன் சண்டை சச்சரவுகள் ஆரம்பித்துவிட்டது என்று அம்மா சொல்லியிருக்கிறார். அது வல்லிய குற்றச்சாட்டுதாம் என்று இப்பொழுது நான் எண்ணிப் பார்க்கிறேன். அப்பாவுக்கு ஜாதகத்தில் நம்பிக்கை அதிகம். என் தொடக்கம் அவ்வளவு உவப்பானதாக இல்லை என்று அவருடைய ஜோதிடர் சொல்ல மனதளவில் அப்பா என்னை விலக்க அல்லது வெறுக்க ஆரம்பித்திருக்கிறார். அதுவே அப்பாவுக்கும் அம்மாவுக்கும் இடையேயான பிரச்சனையாக வெடித்தது. நான் பிறந்த சில ஆண்டுகளில் எங்கள் ஊரிலிருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நான் தாத்தா பாட்டியிடம் வளர்க்க அனுப்பப்பட்டேன். அன்று முதல் இன்று வரை அதுதான் என் சொந்த ஊர்.

சிறுவயதில் நோஞ்சான் குழந்தையான என்னை யாரும் விளையாட்டில் சேர்த்துக் கொள்ளவில்லை. எனக்கு நினைவு தெரிந்து என்னை விளையாட்டில் சேர்த்துக் கொண்ட ஒரே பெண் என் அத்தை மகள்தான். இன்று வரை என் பால்யகால ஸ்நேகிதி அவள்தான். அம்மா வேலை செய்த பள்ளியிலேயே நான் ஒன்றாம் வகுப்பு சேர்ந்தேன். அதனால் கண்காணிப்பு அதிகம். அந்தக் கண்காணிப்பு எனக்குக் கொஞ்சமும் பிடிக்கவில்லை.

பின்னாளில் ஆறாம் வகுப்பு போனபோது மோகன், முருகன், பிரபாகரன் என நண்பர்கள் அமைந்தார்கள். அம்மாவின் கண்காணிப்பு குறைய விளையாட்டுக்கள் அதிகமாய் என் பொழுதுகளை ஆக்கிரமித்தன. என் வாழ்நாளில் பள்ளிப்பிராயத்தின்போது இருந்த சந்தோஷம் வளர்ந்த பிறகு வாய்க்கவில்லை. அந்த சந்தோஷத்திற்கு இணை எதுவுமில்லை. காரணம் நண்பர்களுடன் கழித்த பொழுதுகள். அளவில் அப்பொழுதுகள் சிறியவை என்றாலும் விலை மதிப்பில்லாதவை. இன்றுவரை என் நண்பர்கள் சேர்ந்து உருவாக்கிய, ’’நான்’’ தான் நான். தன்னிலை மறந்த ஏகாந்தப் பொழுதுகளில் ஒரு பெண்ணிணுடைய நினைவை விடவும் எனக்கு என் பள்ளி, கல்லூரிகால நண்பர்களே நினைவில் மேலதிக ஆதிக்கம் செலுத்துகிறார்கள், இன்று வரையிலும்.

***

தொழில்நுட்பமும் சமூகப் படிநிலைகளும் எவ்வளவோ வளர்ந்துவிட்டபின்னும் சாதி நம் சமுகத்தில் இன்னும் முக்கியமான கூறாக வேரோடி நிலைத்து நிற்கிறது. சாதியப் பிடிமானம் சார்ந்து இன்று எழும் மூர்க்கங்கள் கடந்தகால சமூக சூழலைப் பற்றி யோசிக்க வைக்கின்றன. அந்த காலகட்டத்தில் சாதியத்தால் ஒடுக்கப்பட்ட மக்கள் பட்ட துயரத்தை எவராலும் எழுதித் தீர்த்துவிட இயலாதுதான். நம் சமூகத்தில் சாதி எனில் நாகரிகம் மிக்க அமெரிக்க-ஐரோப்பிய காலனியாதிக்க சமூகத்தில் நிறவெறி. வெள்ளை இன மக்களால் சொல்லானாத துயரங்களை அனுபவித்த ஆப்ரிக்க கருப்பின மக்களின் துயரம் வரலாற்றில் ஒரு வண்டல் படுகை போல படர்ந்து கிடக்கிறது. அந்த வண்டலில் கிளைத்த ஒரு பெருமரம்தான் ரூபி பிரிட்ஜஸ்.

1954ஆம் ஆண்டு அமெரிக்காவில் கருப்பின பெற்றோர்களுக்கு மூத்த மகளாக ரூபி ப்ரிட்ஜஸ் பிறந்தார். எல்லாப் பிள்ளைகளையும் போலவேதான் அவர் ஆரம்பக் கல்வியை கற்றார். அப்போது அமெரிக்காவில் வெள்ளையின – கருப்பின குழந்தைகள் பள்ளியில் ஒன்றாக அமர்ந்து பாடம் படிக்க இயலாது. 1960 ஆம் ஆண்டு அந்தத் தடையை நீக்க சட்டம் கொண்டுவரப்பட்டது. அப்படியான ஒரு காலகட்டத்தில் அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸ் மாகாணத்தில் வெள்ளை இனக் குழந்தைகளுடன் சேர்ந்து வகுப்பில் படிக்கப் போன முதல் ஆப்ரிக்க – அமெரிக்க பெண்தான் ரூபி ப்ரிட்ஜஸ்.

முதல் நாள் வகுப்புக்கு நான்கு காவல் அதிகாரிகள் உதவியுடன் ரூபி பள்ளிக்குள் நுழைந்தார். அது ஒரு வரலாற்று சிறப்புமிக்க தருணம். அந்தத் தருணத்தை வெள்ளையின மக்கள் மூர்க்கத்துடன் எதிர்த்தார்கள். வெள்ளையின பெற்றோர்கள் தன் குழந்தைகள் கருப்பின குழந்தைகளுடன் சேர்ந்து படிப்பதை விரும்பவில்லை. கருப்பினக் குழந்தைகளுக்கு போதிக்க விருப்பம் இல்லை என்று கூறி சில ஆசிரியர்கள் வேலையை ராஜினாமா செய்தார்கள். பெற்றோர்கள் எல்லோரும் தங்களது குழந்தைகளைப் பள்ளி வகுப்பறையிலிருந்து வெளியே கூட்டிவந்து பள்ளிக்கு முன் போராட்டத்தில் இறங்கினார்கள். ரூபிக்கு ஏன் இந்தப் போராட்டம் என்று சுத்தமாக விளங்கிக் கொள்ள முடியவில்லை. ஆறு வயது பிஞ்சு மனதுக்கு அது வருத்தத்தை அளித்தது. ’’அவர்கள் அதுவரை என்னைப் பார்த்தது கூட இல்லை. பிறகேன் அவர்கள் என்னை அளவுக்கதிகமாய் வெறுத்தார்கள் என எனக்குப் புரியவில்லை. அவர்களை என் நிறத்தை மட்டும்தான் பார்த்தார்கள், என்னை ஒரு குழந்தையாகப் பார்க்கவில்லை’’ என்று ரூபி தனது நூலில் நினைவு கூர்ந்துள்ளார்.

முதல் நாள் ரூபி, சக குழந்தைகள் இல்லாமல் வகுப்பறையில் இருந்துவிட்டு வீடு திரும்பினார். ரூபி வெள்ளையர்கள் படிக்கும் பள்ளியில் சேர்ந்ததால் அவரது குடும்பம் பலத்த மிரட்டலுக்கு உள்ளானது. ஆனாலும் ரூபியின் அப்பா தன் மகள் பள்ளிக்கு போகவேண்டும் என்பதிலும் கல்வி மட்டுமே தன் குழந்தைக்கு சமூக பாதுகாப்பை அளிக்கும் என்பதிலும் உறுதியாக இருந்தார். ரூபியின் அப்பாவுக்கு வேலை போனது. எனினும் ரூபியின் அப்பா வேலையிழந்த போது அவருக்கு பணம் அனுப்பி பாதுகாத்த வெள்ளையின பெற்றோர்களும் இருந்தார்கள் என்பதையும் இங்கே சொல்லியாகவேண்டும்.

இரண்டாம் நாள் பள்ளிக்குப் போனார் ரூபி. வெள்ளையினப் பெற்றோர்களின் போராட்டம் வலுத்தது. வன்முறை வெடித்தது. குழந்தைகள் யாரும் பள்ளிக்கு வரவில்லை. ஆனால் அமெரிக்க மெதெடிஸ்ட் தேவாலயங்களின் போதகர் லாய்ட் ஆன்டி ஃபொர்மென் தனது மகள் பாம்-உடன் ப்ராண்ட்ஸ் தொடக்கப் பள்ளிக்கு வந்தார். ஏராளமான மிரட்டல்களையும் மீறி தன் சொந்த பாதுகாப்பைப் பணயம் வைத்து தனது மகளைத் தொடர்ந்து பள்ளிக்கு அனுப்பினார். சில நாட்கள் கழித்து வேறு சில பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பினார்கள். நிறவெறியை மீற, ஒரு சமூக உரிமையை நிலைநாட்ட ஆன்டி ஃபொர்மென் ஒரு மகத்தான செயலைச் செய்தார். பள்ளியில் ரூபிக்கு கற்பித்தவர் பார்பரா ஹென்றி.  அந்த முதல் வருடம் முழுவதும் ரூபியுடன் தனிப்பட்ட அளவில் கவனம் செலுத்தி போதித்தார், விளையாடினார். ரூபியின் பள்ளி அனுபவத்தை மறக்கவியலாத அனுபவமாகி மாற்றினார் பார்பரா. ரூபியின் மனோதிடமும், அவரது அப்பாவின் துணிவும் சேர்ந்து அந்த பள்ளிப்பிரவேசத்தை வெறுமனே ஒரு நிகழ்வாக மட்டுமில்லாமல் ஒரு வரலாற்று நிகழ்வாக மாற்றிவிட்டது.

படித்து பட்டம் பெற்ற பின் அமெரிக்காவின் முக்கியமான சமூக செயல்பாட்டாளராக உருவெடுத்தார் ரூபி. கருப்பின மக்களின் உரிமைக் குரலாக அவர் இருந்து வருகிறார். பன்னிரெண்டு வருடங்களுக்கு முன் பராக் ஒபாமா அமெரிக்காவின் அதிபரானார். அமெரிக்காவின் முதல் கருப்பின அதிபர். அவர் அதிபராக பதவியேற்றபின் ரூபி வெள்ளை மாளிகைக்குச் சென்று ஒபாமாவைச் சந்தித்தார். அப்போது அவர்கள் இருவரும் சேர்ந்து, வெள்ளை மாளிகையில் இருக்கும் ஓவியக் காணரங்கில் ’ரூபி ராணுவப் பாதுகாப்புடன் பள்ளிக்கு செல்லும்’ நார்மல் ராக்வெல் வரைந்த ஓவியத்தைப் பார்வையிட்டார்கள். அப்போது ஒபாமா சொன்ன வார்த்தைகள் உன்மையின் ஒளி பொருந்தியவை. ’’ ரூபி, அன்று நீங்கள் மன உறுதியுடன் பள்ளிப்படிப்பை தொடராமல் போயிருந்தால், நான் அமெரிக்க அதிபராகியிருக்க முடியாது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஓவியத்தை நாம் இருவரும் சேர்ந்து கண்டிருக்க முடியாது.’’

உண்மைதான். வரலாற்றில் எது ஒன்றும் வெறுமனே நிகழ்வதில்லை. ஒன்றின் தொடர்ச்சிதான் இன்னொன்று. அந்த இன்னொன்று வேறொன்றின் தொடர்ச்சியாக மாறும், முடிவில்லாமல்.

தொடரும்…   

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button