விடியற்காலை.
வழக்கம் போல தூக்கம் கலைந்தது. மெதுவாக எழுந்தமர்ந்து கை கால்களை நீட்டி மடக்கி ரத்த ஒட்டத்தை உறுதி செய்து, உடனே எழாமல் பக்கத்தில் தடவிப் பார்த்து செல்போனை தேடி எடுத்து விரல் ரேகையின் மூலம் உயிர்ப்பித்து மணி பார்த்தேன்.
நான்கு என டிஜிடலில் காட்டியது. மெதுவாக எழுந்து நடந்தேன்.
கட்டிலிலிருந்து நேரே நடந்தால் வலதுபுறம் உள்ள சுவரில் சுவிட்ச் போர்டில் தடவி மூன்றாவது சுவிட்ச்சை போட்டால் கழிவறை விளக்கு எரியும். சிறுநீர் கழித்துவிட்டு கைகால் முகத்தைக் கழுவிவிட்டு வெளியே வந்து தாளிட்டு சுவிட்சை அணைத்தேன்.
பசியாக இருந்தது. படுக்கையறையை விட்டு இருட்டில் சுவரைத் தடவியபடி வெளியே வந்தேன்.
வலது புறம் திரும்பினால் சமயலறை. அதற்கு எதிரில் இடதுபுறத்தில் இன்னொரு படுக்கையறை அதை எனது மகள் மட்டும் பயன்படுத்துவாள், நின்ற இடத்திற்கு எனக்கு முதுகுப் பக்கம் ஹால். அங்கே அம்மா படுத்திருப்பார்கள்.
சமயலறைக்கு கதவுகள் கிடையாது. சமயலறை விளக்கைப் போட்டு பிஸ்கட் போட்டு வைக்கும் பிளாஸ்டிக் டப்பாவிலிருந்து நான்கைந்து பிஸ்கட்டுகளை எடுத்துச் சாப்பிட்டு ஒரு டம்ளர் தண்ணீர் குடித்து விட்டு விளக்கை அணைத்தேன்.
திரும்பவும் கட்டிலுக்கே வந்து தலையணையை சரித்து சாய்ந்து படிக்குமாறு வைத்துக் கொண்டு செல்போனில் ஜெயமோகனின் வெண்முரசு ஆப்பில் வெண்முரசு வரிசையில் எனக்குப் பிடித்த தத்துவத்தை விளக்கும் சொல்வளர் காடு புத்தகத்தை மூன்றாவது முறையாக சாந்தீபனி காட்டின் தொடர்ச்சியை எடுத்துப் படிக்கத் தொடங்கினேன்.
மணி ஐந்தரை இருக்கும் வாட்சாப்பில் அஜித் ஒரு புகைப்படம் அனுப்பியிருந்தான்.
இது போல விடியற்காலையில் எனக்கு செய்தி ஏதும் அனுப்பமாட்டான். நானும் கண்டித்துள்ளேன் முன்பு நிறைய காலை வணக்கம். தேவையற்ற செய்திகளை அனுப்புவான். இன்று ஏதோ முக்கியம் என்றுணர்ந்து. வாட்ஸப்பைத் திறந்து பார்த்தேன்.
ஒரு கணம் திடுக்கிட்டேன், வயிறும் கலக்க ஆரம்பித்து நின்று விட்டது. மோகினியின் கண்ணீர் அஞ்சலி போஸ்டரை புகைப்படமாக அனுப்பியிருந்தான். நேற்று மாலை இறந்ததாகப் போட்டிருந்தது.
மிக இளம் வயது. வருத்தமாக இருந்தது. அவளை கடைசியாக நான்கு மாதங்களுக்கு முன்பு காதலனுடன் பார்த்துப் பேசியது ஞாபகம் வந்தது. அப்போது கூட மகிழ்ச்சியாகத்தானே இருந்தாள். மனிதர்களை எடை போடுவதில் அவள் சிறந்தவள், என் விஷயத்தில் அவள் தோற்றுப் போனாள். மூன்று வருடங்களுக்கு முன்பு நடந்ததை போஸ்டரில் சிரித்தபடி இருக்கும் மோகினி நினைவுபடுத்தினாள்.
தங்கப்பன் எனது நீண்ட கால வாடிக்கையாளர்களில் ஒருவர். ஊரின் பல பகுதிகளில் வீடாக, கடையாக நிறைய சொத்துகள் உண்டு. பணமும் வட்டிக்கு விட்டு மாத, வார, தினசரி என வட்டியும் வாங்கினார்.
அவரின் அனைத்து இடங்களிலும் நானே எலக்ட்டிரிகல், பிளம்பிங் வேலைகளின் மொத்த பராமரிப்பும் செய்வேன். மலபார் கோல்டுக்கு பக்கத்தில் கீழே வெள்ளிக் கடையும் மாடியில் அவரது அலுவலகமும் புதியதாக கட்டப்பட்டு வேலைகள் முடிந்து எனது பராமரிப்பில் இருந்தது.
அவ்வலுவலகத்தைத்தான் அனைத்து கணக்குகளும் பார்க்குமிடமாக பயன்படுத்தி வந்தார். புதியதாக அலுவலகப் பணிக்காக பக்கத்தூரில் இருந்து தங்கப்பனுக்குத் தெரிந்தவர் மூலம் வேலைக்குச் சேர்க்கப்பட்டவள் மோகினி.
அவள் வேலைக்குச் சேர்ந்து ஒரு வருடமிருக்கும் போது அலுவலகத்தில் இரண்டு டியூப்லைட்டுகள் எரியவில்லை என வெளியூரிலிருந்த தங்கப்பன் சொன்னதால், ‘சனிக்கிழமை மதியத்திற்கு மேல் ஞாயிறு ஆகிய நாட்கள் அவசியம் விடுமுறை விட்டு விடுவீர்களே.. அலுவலகம் திறந்திருக்குமா?’ என்ற போது, ‘ஒரு முக்கிய வேல இருக்கு.. அதனால நீ போவலாம். ஆள் இருக்கும்’ என்றார். மதியம் நான்கு மணிக்குச் சென்ற போது தங்கப்பனின் ஒரே மகன் அபிசேக்கின் கார் அலுவலகத்தின் எதிரே இருந்த நகராட்சிப் பள்ளியின் சுற்றுச் சுவரை ஒட்டிய மரநிழலில் நின்று கொண்டிருத்ததைப் பார்த்தேன்.
ஏதோ வேலையாக வந்திருப்பார் என நினைத்துக் கொண்டு படியேறி அலுவலகத்தை அடைந்தேன். முதலில் வரவேற்பு அறையும், அடுத்தது காத்திருப்பு அறையும் அதையொட்டி அலுமினிய பிரேம்களால தடுக்கப்பட்ட அலுவலக அறையும், கடைசியாக கழிப்பறையுடன் கூடிய குளியலறையும் உண்டு.
மதியம் நான்கு மணி என்பதால் அந்த இடமே சற்று அமைதியாக இருந்தது. வரவேற்பு அறையில் மோகினி இல்லை,. காத்திருப்பு அறையில் யாரும் இல்லை, அலுவலக அறையின் கதவை மெதுவாகத் தள்ளியபோது திறக்கவில்லை.
சந்தேகம் தோன்றியதால் செல்போனை சைலண்ட் மோடில் போட்டுவிட்டு சாவித்துவாரத்தின் வழியே பார்த்தபோது அபிசேக்கும் மோகினியும் நிர்வாணமாக இயங்கிக் கொண்டிருந்தனர். ஒரு கணம் திடுக்கிட்டு பிறகு அறைக்கு வெளியே வந்து அமர்ந்தேன்
நாற்பது நிமிடம் கழித்து முதலில் வெளியே வந்த அபிசேக் என்னை எதிர்பாராததால் அதிர்ச்சியடைந்து உடனே அதை மறைத்துக் கொண்டு விசாரித்த போது அவரின் அப்பா சொன்னதன் பேரில் வந்ததைச் சொன்னேன். தலையாட்டிவிட்டு இறங்கி காரிலேறிச் சென்று விட்டார்.
அவர் போனதும் உள்ளே நுழைந்த போது முகம் கழுவி மேக்கப் போட்டுக் கொண்டு வரவேற்பறையில் இருந்த மோகினியை பார்த்தேன்.
அவர்கள் உறவு எனக்குத் தெரிந்து விட்டது என உறுதியானதால் துயரப் புன்னகையோடு அனுகியவள் கண் கலங்கியபடி தங்கப்பனின் அலுவலகத்தில் ஒரு வருடத்தில் பல நாட்கள் தந்தையும் மகனும் நீண்ட உடலுறவுக்கு மாத்திரை போட்டுக் கொண்டு உடலளவிலும் மனதளவிலும் துன்புறுத்துவதாக. குற்றம் சாட்டியவள். கதறி அழுது என் மீது சாய்ந்து கொண்டு ஆறுதலை என்னிடம் எதிர்பார்த்து மேலும் அழுத்தமாக அணைத்தவளை, மென்மையாக அவள் தலையை வருடி முதுகில் தட்டிக் கொடுக்க கொடுக்க, அழுகை குறைந்து புன்னகைத்ததோடு மேலும் என்னை இறுகக் கட்டியணைத்தாள்.
எனக்கு ஒரு மாதிரியானது. சம்பந்தமில்லாமல் சிரிப்பது விலக்கத்தை உருவாக்கியதோடு எரிச்சலும், குழப்பமும், வெறுப்பும் உண்டானது. அவளது மார்பகங்களை என் மீது இழைத்தபடி பெருமூச்சு விட்டாள். உள்ளுணர்வின் விழிப்பால் சட்டென்று விலகி அணைப்பை விட்டு தள்ளி நின்றேன். தேர்ந்த தந்திரத்தோடு காமப் புன்முறுவலை வெளிப்படுத்தியபடி ‘புடிக்கலயா?’ என்றாள்.
நாவல் பழ வண்ணத்தில் இருந்த கண்களின் மிக ஆழத்தில் தெரிந்த நடிப்பை கண்டு கொண்டேன். ‘அப்படியில்ல, எனக்கு தேவை இல்லை . எனக்கு வேண்டாம்’ என்றபடி டூல்ஸ் பையை எடுத்துக் கொண்டு புறப்பட்டேன்.
கையை நீட்டி வழிமறித்தவளை மெதுவாகத் தள்ளி விட்டு ஆபிஸ் ரூமை விட்டு வெளியே வந்து படி வழியாக இறங்கி எனது இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு வெளியேறினேன். திரும்பிப் பார்க்கவில்லை.
வாகனத்தில் பயணிக்கும் போது நடந்த நிகழ்ச்சிகளை நினைத்து நிம்மதி பெருமூச்சு விட்டேன்.
இரு நாட்களுக்கு பிறகு தங்கப்பனிடம் தாமதித்திற்கு ஏதோ ஒரு பொய்யைச் சொல்லி ஆபீஸ் ரூமில் எரியாத இரண்டு டியூப்லைட்டுக்களை கழற்றிவிட்டு புதிதாக இரண்டு எல்ஈடி டியூப் லைட்டுகளை பொருத்தும் போது பேச வந்தவளிடம் அதிகம் ஈடுபாடு காட்டாமல் வந்த வேலையை முடித்துக் கொண்டு சொல்லிக்கொள்ளாமல் வந்து விட்டேன்,
ஐந்து மாதம் கழித்து தங்கப்பனின் சாவுக்கு பார்த்தது. கூட்டத்தோடு கூட்டத்தில் பொதுவாகப் பேச வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானேன். அப்போது என்னிடம் பயத்துடன் அபிசேக்கின் மனைவிக்கு அவர்கள் உறவு தெரிந்து விட்டதாக தெரிவித்தாள்.
அபிசேக்கின் பார்வையும் நடத்தையும் என்னிடம் விலக்கத்தை காட்டியது. தந்தை இறந்ததில் அவனுக்கு எந்த வித வருத்தமும் இல்லை என தெரிந்தது.
தங்கப்பனுக்கு அவர்கள் இருவரின் உறவும் தெரிந்திருக்குமோ? என்ற எண்ணம் மனதிலோடியது.
நான் உடனே, ‘இது எனக்கு தேவையில்லாத விஷயம். எங்கிட்ட ஏன் சொல்ற?’ என்று கேட்க, ‘இல்ல, உங்ககிட்ட சொல்லனும்னு தோனுச்சி அதான்.’ என்றாள்.
‘சரி, அப்புறம் பார்க்கலாம்’ என்று இறுதி ஊர்வல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு முற்றும் அவளைத் தவிர்த்து விட்டேன்.
அபிசேக்கின் மனைவி என்னிடம் ஏதோ கேட்க வேண்டுமென அருகில் வந்து ஏதும் போசாமல் போனதன் மூலம் அவர்களின் உறவு அவருக்கும் தெரிந்துவிட்டது என உறுதியான முடிவுக்கு வந்தேன்.
அந்நிகழ்விற்கு பிறகு அபிசேக்கின் மனைவி மட்டும் வீட்டில் ஏதாவது பழுது பார்ப்பது போன்ற வேலைகளுக்கு மட்டும் அழைத்தார். அபிசேக் பல வேலைகளை என்னிடம் தராமல் வேறு புதிய நபரை வைத்து முடித்துக் கொண்டதை வருத்தத்துடன் சொன்னார்.
‘பரவாயில்லை விடுங்க அவரு பிரியம். எம் மேல அவருக்கு கோவமிருக்கலாம்.’
‘ஆமா மாமா சொன்னாங்க, மாமாவும் அவ கிட்ட போனாருன்னு எங்கிட்ட ஒத்துகிட்டார்.’
எனக்கு என்ன சொல்வது எனத் தெரியவில்லை மையமாக தலையாட்டிவிட்டு, ‘சரி, நா கெளம்புறேன். ஏதாவது வேலைன்னா கூப்டுங்க’ என்று டூல்ஸ் பையுடன் வீட்டை விட்டு வெளியே வந்தேன்.
வெளியே கார் நிறுத்துமிடத்தில் காரை விட்டிறங்கியபடி என்னை முறைத்தார் அபிசேக்.
என்னை நெருங்கியவர், ‘அண்ணே, இனி வீட்டுக்கு போன் பண்ணா மட்டும் வந்து பாத்துட்டு போங்க.. ‘ எனவும், ‘சரிங்க அபிசேக்’ என்று விலகி நடந்தேன்.
பின்னால் வந்து, ‘நில்லுங்க, உங்களுக்கு பதில் வேற ஆள மாச சம்பளதுக்கு எல்லா இடத்துக்கும் போட்டாச்சி.’ என்றார்.
‘ம். சரிங்க உங்க விருப்பம்’ – அதற்கு மேல் ஒன்றும் பேசாமல் தனித்தனி வழிகளில் அவர் வீட்டுக்கும் நான் வெளியேயும் நடந்தோம்.
நல்ல அகலமான தெரு பணக்காரர்கள் மட்டுமே வசிக்கும் இடமாகையால் தெருவின் இருபுறமும் மரங்களின் வளர்ச்சியும் அடர்த்தியும் நன்றாக இருந்தது. ஏதோ சிறகடிக்கும் ஒசை கேட்டது தலை தூக்கி பார்த்த போது எனது வாகனத்தை நிழலுக்காக நிறுத்தியிருந்த மரத்தில் இரண்டு செம்போத்துக்கள் உள் கிளையில் அமர்ந்திருந்ததைப் பார்த்தேன்.
அவை பறக்கும் வரை எனது இருசக்கரவாகனத்தில் அமர்ந்திருந்தேன்.
மனதிலிருந்த சஞ்சலங்கள் வெளியேறின. இப்போது கிளையும் வெறுமையாக இருந்தது.
தங்கப்பனின் மரணத்திற்கு பிறகு மோகினி, அபிசேக்கின் லீலைகளை பற்றி அடிக்கடி நண்பர்கள், தெரிந்தவர்கள், அவர் மனைவி மூலமும் நிறைய கேள்விப்பட்டேன்.
வெளியூரில் ஜோடியாகத் தங்கி தங்களின் தொடர்பை வலுவாக்கி வைத்திருந்தனர்.
என்னிடமும் மோகினி செல்போனில் தொடர்பு கொண்டு மன்னித்துவிடும் படி கோரினாள். நான் ஒன்றும் சொல்லாமல் சொன்னதை மட்டும் காதில் வாங்கிக் கொண்டேன்.
வீட்டில் மின் இணைப்பில் ஏற்பட்ட பழுதிற்காக வேறு வழியில்லாததால் அபிசேக் போனில் தொடர்பு கொண்ட போது, ‘கடைசியாக ஒரு விஷயம் சொல்லலாமா?’ என கேட்டேன்.
‘ம். சரி, என்ன விஷயம்? சீக்கிரம் சொல்லுங்க.’
‘உங்க சொந்த விஷயம்தான். உங்க அப்பா என் மீது வைத்திருந்த அன்புக்காக சொல்றேன். மோகினி கூட இருக்குறது உங்க சொந்த விஷயம் அதில் தலையிட எனக்கு உரிமை இல்லை. மாத்திரை போட்டுகிட்டு அடிக்கடி செய்யுறது உடம்புக்கு நல்லதில்ல. உடம்பு முக்கியம். பாத்துக்குங்க ஞாபகப்படுத்த வேண்டியது அவசியம்னு நினைச்சேன். ‘
‘அது சரி. நீங்க ஒங்க வேலைய மட்டும் பாருங்க’ என்று கடுப்படித்தபடி போனை கட் செய்து விட்டார். எனக்கு கோபம் வரவில்லை அனுதாபமே ஏற்பட்டது..
ஏழு மாதங்களுக்குப் பிறகு அரசியல் தொடர்புடைய தங்கப்பனின் நண்பர் வீட்டில் மின்சார வேலைகளைச் செய்து கொண்டிருக்கும் போது அபிசேக்கின் மனைவியிடமிருந்து போன் வந்தது.
‘அண்ணே, உடனே புறப்பட்டு பழைய பஸ் ஸ்டாண்டு ஆபிசுக்கு வாங்க’ என்றார் பதற்றத்தோடு.
‘என்ன விஷயம்? ஏன் என்னாச்சி?’
‘நேர்ல சொல்றேன். உடனே வாங்க’ என கட்செய்தார்.
வீட்டு ஒனர் தங்கப்பனின் நண்பர் என்பதால் அவரிடம் நிலமையைச் சொல்லிவிட்டு உதவியாளன் அஜித்தை வேலையைத் தொடரும்படி சைகை செய்து புறப்பட்டு தங்கப்பனின் ஆபிசை அடைந்தேன்.
படிவழியாக ஏறி உள்ளே நுழைந்தேன். வரவேற்பறையின் நாற்காலியில் அரைகுறையாக சுற்றிய புடைவையோடு அரை நிர்வாணமாக உட்கார்ந்த நிலையில் மோகினி அழுத்தமாக பதற்றமின்றி இருந்தாள்.
அவளை வெறுப்போடு முறைத்தபடி அபிசேக்கின் மனைவி பதற்றத்தோடு அமர்ந்திருந்தார்.
‘என்ன ஆச்சு? ஏன் பதட்டம்?’
‘ஆபீஸ் ௹ம்ல போயி பாருங்க.’
‘ஏன், அப்படி என்னதான் ஆச்சு?’
‘உள்ளார போயிதான் பாருங்களேன் அந்த கோலத்த’ என்றார் அபிசேக்கின் மனைவி.
ஆபீஸ் ரூமே வெறுமை சூழ்ந்தது போல வெகு அமைதியாக இருந்தது. காத்திருப்பு ஆபீஸ் அறையின் கதவுகளைத் தள்ளித் திறந்து உள்ளே நுழைந்து வலது பக்கம் மார்பிள் தரையில் மேஜைக்கு அருகில் கண்ட காட்சி முகத்திலறைந்தது.
அருகில் சென்று பார்த்தேன். மேஜைக்கு பக்கவாட்டில் நின்ற வண்ணம் அப்படியே மல்லாந்து விழுந்திருக்க வேண்டும். நிர்வாணமான நிலையில் ஆண்குறி விரைத்தபடி இருக்க மலம் வெளியேறி அபிசேக் இறந்திருந்தான்.
எனக்கு வாந்தி வருவது போலவும் ஒரு வித பயமும் ஏற்பட்டது. உடனே அறையிலிருந்து வெளியேறி வரவேற்பறையை அடைந்தேன்.
கொஞ்ச நேரம் வார்த்தைகள் வரவில்லை.
தடுமாறினேன்.
அபிசேகின் மனைவியைப் பார்த்தேன் அவர் ஏதோ சொல்ல வந்தார்.
‘எல்லாம் இந்த தேவுடியாளால. மாத்ர நெறய போட்டுட்டாரு போல. அப்படியே நிக்கிது. ஆளும் போய்ட்டாரு. என்ன பண்ணலாம்?’
‘நீங்க சொல்லுங்க. எனக்கும் ஒன்னும் புரியல’ என்றபடி மோகினியைப் பார்த்தேன். அவள் அழுதபடி என்னைப் பார்த்தாள். காப்பாற்றுங்கள் என கண்கள் சொல்லியது.
‘ஒன்னு பண்ணலாம் இத அவசியம் மூடி மறச்சே ஆவனும். இது மாறி செத்தாருன்னு வெளிய தெரிஞ்சா அசிங்கமாய்டும். போலீசு கேஸ்னு நானும் அவளும் அலைய முடியாது. இவனுங்க பண்ண தப்புக்கு, காசுக்காக வந்த அவள பலிகடா ஆக்க கூடாது. ஏதாவது செய்ங்க, மறைச்சி செஞ்சிடலாம்.. என்ன செலவானாலும்’ என்றார் அபிசேக்கின் மனைவி.
யோசித்தேன் உடனே ஏதும் தோன்றவில்லை.
சட்டென்று தங்கப்பனின் அரசியல் நண்பரின் ஞாபகம் வந்தது. அவர் எண்ணில் தொடர்பு கொண்டேன் முதல்முறை அவர் எடுக்கவில்லை இண்டாவது முயற்ச்சியில் லைனில் வந்தார்.
விஷயத்தைச் சொன்னதும் மூன்று நான்கு நொடிகள் மெளனம் காத்தவர் ‘சரி வந்துர்றேன்’ என்றார்.
அவர் வருவதற்கு பதினைந்து நிமிடங்களேயானது வரும் போதே ஆறு நபர்களுடன் வந்தார் நிகழ்ந்தவற்றை பொறுமையுடன் கேட்டுக் கொண்டு மோகினியிடம் தனியாக கேள்விகள் கேட்டு பதிலை பெற்றுக் கொண்டார்.
‘சரி, நடந்தது நடத்திருச்சி. எனக்கு அபிசேக்கும் அவனோட அப்பாவும் ரெம்பவும் நெருங்கிய பழக்கம். இந்த சாவ இப்படியே விட முடியாது யாருக்கும் தெரியாம மூடிவைக்கணும்’ என்று தன்னுடன் அழைத்து வந்த நபர்கள் மூலம் அபிசேக்கின் உடலை பெரிய பாலிதீன் பைகளாலும் அங்கிருந்த மேஜைவிரிப்பையும் பயன்படுத்தி கட்டி தூக்கிக் கொண்டு சென்றனர்.
போலீசுக்கு போகாமல் காரியம் முடிந்ததால் மோகினி எந்தவித தொல்லைக்கும் உள்ளாகாமல் தப்பித்தத்தோடு கொஞ்ச நாட்களில் வேறு இடத்திற்கும் வேலைக்குப் போய்விட்டாள்.
அதற்கு பிறகு இரண்டு வருடங்களில் பல இடங்களில் வேலை பார்த்து விட்டாள்.
ஒவ்வொருமுறையும் இடம் மாறும் போது புதுப்புது எண்களில் தொடர்பு கொள்வாள். அதோடு சரி.
கடைசியாக மூன்று மாதத்திற்கு முன்பு பழைய பேருந்து நிலையத்தில் உள்ளே இடது புறத்தில் இருந்த காபி கடையில் காதலனுடன் பார்த்தது. அப்போது தான் அவனை அறிமுகம் செய்துவைத்தாள்.
‘இவர் சுரேஷ். மருந்து மொத்தமா வாங்கி சப்ளை செய்யுற பார்மாசூட்டிகல்ஸ் வச்சிருக்காங்க, இவரோட அப்பாதான் ஒனரு. நாங்க கொஞ்சநாள்ல கல்யாணம் பண்ணிக்கப் போறோம்’ என்றாள்.
‘ம். நல்லது’ என்றபடி கைக் குலுக்கினேன்.
சராசரி உயரம். நல்ல செம்பு. மீசையில்லாமல் தூக்கி சீவிய தலைமுடியுடன் பார்க்க நன்றாகவே இருந்தான்.
‘மோகினிய பாத்துக்கங்க. ரெம்ப நாளா கல்யாணத்துக்கு மாப்பிள்ளை தேடுறா. நீங்க மாட்டிகிட்டிங்க’ என்றபடி சிரித்து விட்டு மீதமிருந்த காப்பியைக் குடித்துவிட்டு கை செய்கையின் மூலம் பிறகு பார்க்கலாம் என காண்பித்ததுதான். பிறகு பார்க்கவில்லை.
அவளும் போன் செய்யவில்லை..
வாட்சப் செய்தியை பார்த்துவிட்டு காலையில் 8 மணிக்கு மேல் அஜித்தை தொடர்பு கொண்டேன்.
‘எத்தன மணிக்கு தூக்கப் போறாங்க அஜித்?’
‘3 மணிக்கு மேல தூக்கிருவாங்க, நீங்க எப்ப வர்றீங்க?’ என்றான்.
‘சரி, மூணு மூணரைக்குள்ள வந்துடுறேன்.’
மனம் சரியில்லாததாலும் மோகினியின் தற்கொலை சற்றே கவலை கொள்ள வைத்ததாலும் பசி எடுக்கவில்லை. சாப்பிடவும் இயலவில்லை பேருக்கு உட்கார்ந்து சாப்பிட்டுவிட்டோம் என சமாதானப்படுத்திக் கொண்டு புறப்பட்டு மோகினியின் ஊரையடைந்தேன்
அது ஒரு சிறிய கிராமம்.
கிராமத்திற்கே உரித்தான அனைத்தும் அடங்கியது.
இருபுறமும் வயல்வெளிகள். பாதையின் இருபக்கங்களிலும் வரிசையாக பனைமரங்கள். அதில் தூக்கணாங் குருவிக்கூடுகளும் தொங்கி காற்றிலாடியபடி இருந்தது. கொஞ்சம் போல மனம் இலகுவானது.
வீடுகள் மட்டும் நிறைய மாற்றங்கள். திண்ணை வைத்த வீடுகள் ஒன்றிரண்டு மட்டுமே பார்க்க முடிந்தது. கலவையான வீடுகளின் தொடர்ச்சி இருபுறமும் இருந்தது. இரண்டு மூன்று வீடுகள் மட்டுமே குடிசை வீடுகள்.
தெருவிலிருந்தவர்களும் நண்பர்களும் நண்பிகளும் அதிகமிருந்தனர்.
பந்தல் போடப்பட்டு அதில் நடுவில் குளிர்சாதன பெட்டியில் மோகினியின் உடல் வைக்கப்பட்டிருந்தது.
பறையிசையின் லயம் ஊர் முழுவதும் வியாபித்திருந்தது. இசையின் துள்ளல்களால் தன்னால் கால்களும் உடலும் ஆடத் தயாரானது போல உணர்வு மேலோங்கியது. என்னை கட்டுப்படுத்திக் கொண்டேன்.
கலவையான கூட்டத்தில் அஜித்தை கண்டுகொண்டு சைகை செய்தேன் என்னை கூட்டமில்லா இடத்தில் வந்து பார்க்கும்டி.
கூட்டத்தை விலக்கியடி தெருமுனையில் இருந்த டீக்கடை நோக்கி நடந்தேன். அஜித்தும் என்னைப் பின்தொடர்ந்து வந்து சேர்ந்தான். பக்கத்தில் யாரும் இல்லாத இடம் பார்த்து நின்று கொண்டோம்.
இரண்டு டீ சொல்லிவிட்டு எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம்.
‘என்ன நடந்தது அஜித்?’
‘எப்படி சொல்றதுன்னே தெரியலண்ணே.’
‘சொல்லுடா நடந்து முடிஞ்சி போச்சில்ல. அவ தற்கொலை பண்ணிக்கிற ஆள் இல்ல. எனக்கு நிச்சயமா தெரியும்.’
‘இல்லண்ணே நீங்க தப்பு கணக்கு போட்டுட்டீங்க.’
‘என்னடா சொல்ற?’
‘மோகினி தற்கொலை செய்து கிட்டதுக்கு காரணம் அவ மூனு மாசம் முழுகாம இருந்திருக்கா. போஸ்ட்மார்ட்டம் ரிப்போட்டுல சொல்லிட்டாங்க. அதுக்கு காரணம் அந்த மெடிக்கல் ஃபார்மாவோட ஒனரு. இது அவரோட பையனுக்கும் தெரிஞ்சிடுச்சி’ என்றான்.
எனக்கு என்ன சொல்வது என்றே தெரியாமல் தடுமாறிப் போனேன்.