நாலு செவுர், மேல தார்சு, கீழ மார்பிள், வீட்டுக்கு வெளியே மண்ரோடு.. இல்லாட்டி தார்ரோடு.. காஞ்ச துணிகள எடுக்கப் போனா சிலபோது மேலே இருக்குது வானம்..
“விருந்துக்கு போவலாம்”.
“கல்யாணத்துக்குப் போவண்டாமா.. ரெடியாகு..”
“பேத்துக்குப் போவணும்னு சொன்னே.. கெளம்பலியா..”
“ஊருக்குப் போயிட்டு வரலாம் ரெண்டு நாளைக்கு..”
“வெளியே போலாமா.. கெளம்பு..”
போற எடமெல்லாம் நாலு செவுர், மேல தார்சு, கீழ மார்பிள், வீட்டுக்கு வெளியே மண்ரோடு.. இல்லாட்டி தார்ரோடு.. அண்ணார்ந்து பார்த்தா சிலபோது மேலே இருக்குது வானம்..
வெளியேங்குறது எல்லாம் வெளியேன்னு ஆயிடுமா. இன்னியொரு இடத்துக்குள்ள போறதுக்கான தடத்துக்குப் பேருதானே வெளியே..
………………………………………………………
நல்ல மினுமினுப்பும் வானத்தின் நீல நெறமுமா அட்டகாசமாயிருக்குது புது ஸ்கூட்டி.
மிதமான நீல நிறத்துல வானம். வானம் சொட்டிய நீலத்தின் ஒரு துளி போலத் திரண்டிருக்குது வண்டி. பார்க்கப் பார்க்கக் கண்ணப் பறிக்குது. வானத்துல மோதிக்குற மேகக்கூட்டங்களப் போல எல்லா மோதலும் இலகுவா இருக்குறதில்லியே…
“நீ இனி உள்ளேயே கெடக்கண்டாம். என் கையப் பிடிச்சுக்கோ நாம ரெண்டு பேருமா போவலாம்”ங்குது ஸ்கூட்டி.. மனுஷம்மாரு குரலைவிட தேவலாம்..
ஒரே எஜமானனின் ஊழியருகங்குறதத் தாண்டி எந்த ஒத்தொருமையும் இல்ல அதுக்கும் எனக்கும்.
குண்டும் மேடுமாயிறிக்குற எடம்ங்குறதால தூக்கித் தூக்கிப் போட்டுது. இப்ப தார் ரோடு எத்திட்டதால வாழப்பழத்துல கால்வச்சதப் போல வழுக்கீட்டுப் போவுதே….அடேங்கப்பா….
“எங்க புள்ளே இந்தப் பக்கமா?”…. எதுத்தாப்புல ஹைத்ரூஸ் மச்சான்.
சுத்தியலத் தூக்கி நடுமண்டையில போட்டதுபோல இரிக்குது. வண்டி இன்னமும் வழுக்கிக்கிட்டு போயிட்டே………
பூமி தன்னத் தானே ஒரு தடவ சுத்திக்கிடும்ங்குறது உண்மைதான்…
எங்கிருந்தெல்லாமோ யார் யாரோட குரலெல்லாமோ கேக்குது.
…………………………………………….
‘கழுத்துவலிச்சுட்டு வையா ஹஜரத்தே’ என்று முணுமுணுத்தபடியே கடந்து போனாள் தெளலத்துன்னிஸா.
‘அலிஃப் ப த ஹ’
“ஹ இல்ல ஹமுக்கே ஸ. பல்லுல நாக்கு பட்டும் படாமலும் சொல்லணும்”
முன்பல்லில்லாட்டி பட்டும் படாமலும் எப்பிடிச் சொல்றது? படாமதானே சொல்ல முடியும். அவர் உணர்ந்து கொள்ளட்டும். ஈஈஈ…யென்று இளித்தேன்.
“அடே ஓட்டப் பல்லி. அட்சர சுத்தமா கிதாபப் பார்த்து ஒதணும். இப்புடி ஹஜரத்தப் பார்த்து சும்மா பல்லக் காட்டதே”, தலையில் இட்டிருந்த தட்டத்தின் மீது கை வைத்து அழுத்தினார்.
‘ம்ம்… செரி..’ கழுத்து வலிக்குது. கண்ணில் நீர் கோர்த்துக் கொள்ளவும் கை நீங்கியது.
…………………………………………
‘உம்மா நாங்க சுட்டி வச்சு வெளயாடப் போறோம் யாஸ்மின் வீட்டுக்கு’
“வேண்டா. அவுங்க வாப்பா வாற நேரமாக்கும் போவண்டாம்”
‘போயிட்டு அவுங்க வாப்பா இரிந்தா இப்பலே வந்துடுவேம்மா’.
உற்றுப் பார்த்துட்டு, “தலையோடயும் நெஞ்சோடயும் சீலயில்லாம வெளிய போவப்புடாது. போட்டுக்கோ” – பெரிய்ய தாவணி கொடுத்தாள்.
“பாராக்குப் பார்த்திட்டு போவப்படாது. குமிஞ்ச தல நிமுறாம போயிட்டு வா”,
‘ம்ம்… செரி..’
……………………………………………………….
“ஏய் என்னாச்சு டீ”
‘தெரியல’
“உன் சுடிதாருல பின்னாடி ரத்தமா இருக்குது.. இரு வர்றேன்”
சொல்லிட்டுப் போன ரோஸினா கொஞ்சம் பெரிய அக்காவக் கூட்டிட்டு வந்தா. அந்த அக்கா டீச்சர்கிட்ட சொல்லிட்டு வீட்டுக்குக் கூட்டிட்டு வந்தாள்.
வர்ற வழியில வாப்பாவோட ஃப்ரெண்ட் காதர் மாமாவக் கண்டதும் ஸலாம் சொன்னேன். கூட வந்த அக்கா மொறச்சாள்.
“ஆம்புளயளக் காணப்படாது பண்டாரமே. மொகறையில பரு வரும். கருத்துப் போவும். நிலத்த மாத்திரம் பார்த்து நட”
‘ம்ம்… செரி..’
…………………………………………………………
பட்டுச்சேலையும் நக நட்டும் போட்டுவுட்டுட்டு, தலை பின்னி, ஒரு கூடை பூவுங்கட்டி வச்சு, ஜடசிங்காரமும் கட்டி, ஜரிகைத் துப்பட்டா போட்டுவுட்டுட்டு சின்னம்மா சொன்னது,
“மண்டபத்துல யாரயும் நிமுந்து பார்க்கண்டாம். குமிஞ்சே உக்காரணும். நேராப் பார்த்துட்டு உக்கார்ந்தா அடக்கம் ஒதுக்கம் ஒண்ணுமில்லன்னு வாயடிப்பாளுகோ கேட்டியா”
‘ம்ம்… செரி..’
…………………………………………………………….
“இது தலைச்ச பையன். ஒனக்கு மொத மச்சான்தாரு”
முகம் பார்த்து புன்முறுவலித்து விட்டு நீங்கியதும், மாமி சொன்னா.
“வூட்டுக்குள்ள ஆம்பிளயோ வர்ற காலடிச் சத்தம் கேட்டாலே ஸலாம் சொல்லிட்டு தலையில சீல போட்டுட்டு அடுப்படிக்குப் போயிறனும். ஆம்புளயோ முன்னுக்கே வரப்புடாது”
‘ம்ம்… செரி..’
………………………………………………
புர்காவுக்குள்ள பொத்தி வச்சு என்னைப் பாதுகாத்ததோட ஊருல உள்ள ஆம்பிளைகள் எல்லாத்தையும் பாதுகாக்குற மாறி என்னவர் ஒரு பிரசங்கம் பன்னுனாரு.
“எதுப்பட்ட ஆம்புளகள ஒருக்க பார்த்தா குத்தமில்ல. ரெண்டாமத்த வாட்டி பார்க்கண்டாம். அது விபச்சாரமாக்கும். பார்வையத் தாழ்த்திக்கோ”
‘ம்ம்… செரி..’
………………………………………………………..
“வண்டியில நேரா உட்காரணும்”
“கால பாலன்ஸ் பன்னனும்”
“ஹான்ட்பார நல்லா புடிக்கனும்”
“நிமிர்ந்து உக்காரனும்”
“ஓட்டு..”
“எனக்கு ஒரொருவாட்டியும் வந்து ஒன்னயும் மக்களயும் கூட்டிட்டு வந்து வுட்டுட்டுப் போவ முடியாது”
“நீ பழகிக்கோ”
“யாரையும் எதிர்பார்க்கண்டாம்”
“தைரியம் வேணும்”
“ஓட்டுளா”
“நல்லாத்தான ஓட்டுற. நிமிர்ந்து பார்த்து ஓட்டு. என்ன புது மணவாட்டியோ. குமிஞ்சே பார்த்து ஓட்டுற”
‘நிமிரணும்ன்னு புத்திக்குத் தெரியுதுங்கனு. கழுத்துதான் ஒத்துழைக்க மாட்டேங்குது.’
“புத்தியிருந்தாவல்லவோ தெரியறதுக்கு. நீ வேலைக்கே ஆவமாட்டே. ஒனக்கு ஒன்னுத்துக்குங் கையாலாகாது டீ”
‘ம்ம்… செரி..’
…………………………………………………………..
“என்னத்தளா வரையு”’
‘கொட வரைஞ்சேன் ம்மா. கலர் கொட’
“ஆங்.. கம்பி ஏன் வளஞ்சிரிக்குது”
‘எல்லாரும் அப்புடித்தானே வரையுறாங்கோ’
“ஆஹாங்.. ஈஸா மூஸா காலத்துல வந்த கொடயில்லா இப்பிடியிரிக்கும். இப்பத்ததொண்ணும் இதுபோல வாரது இல்லியே. கம்பிய நீட்டி கீழ புடி வச்சு வரயேம்புளா”
“இல்ல ம்மா. நான் வரைஞ்சாச்சு. இனி அழிக்கது பெரும்பாடாக்கும்’
“ஒளவ்வ்.. அழிலப்பர எங்கட்ட கொண்டாளா. அதொண்ணும் மனுஷ மக்களோட கழுத்த நிமுத்துறாப்புல ஒருபாடு கஸ்டமில்ல. நிமுத்தலாம்.. ட்டா..”
‘ஆங்.. செரி’
………………………
மொகத்துல தண்ணிய தெளிச்சு எழுப்புனப்போதான் கெவுனிச்சேன்.
எப்பயாச்சும் அண்ணாந்தா பார்க்குற வானம்.. மொத தடவையா குமிஞ்சு பார்க்குது.
சுத்திலும் நிக்குற ஆம்பளைங்க கூட்டத்துக்கு நடுவுல உத்துப் பார்க்குற அந்த வானம் கீழ விழுந்து காயம்பட்ட ஸ்கூட்டியின் நீலத்துல சிரிக்குது.
………………………..