இணைய இதழ்இணைய இதழ் 56சிறுகதைகள்

கல்லறையை உள்ளிருந்து திறக்க முடியாது – மால்கம்

சிறுகதை | வாசகசாலை

சிக்னலை நோக்கி பைக்கை அழுத்தினேன். சிக்னல் விழுவதற்குள் கடந்து விட வேண்டும். என்னால் முடியவில்லை, சிக்னல் தடுத்து நிறுத்தி விட்டது. 

“ஏன் இங்க நிறுத்தின?”

“நானா நிறுத்தினேன்..? சிக்னல் விழுந்திருச்சி…”

“குப்பை நாத்தம் தாங்க முடியல… இந்த சிக்னல்லதான் இப்படி…”

“எனக்கு பழக்கமான நாத்தம்தான்…” அவளின் பெர்ஃப்யூம் வாசனையில் மயங்கியதால் இப்படிச் சொல்லவில்லை. 

“ம்….”

“மதி… வா அப்டியே பஜாருக்கு போயிட்டு போவோம். ப்ளீஸ்… “

“நேராத்தானே போறோம். ஏன் திடீர்னு ரைட் எடுக்கச் சொல்றமா… “

“போன வாரம் வாங்கித் தந்தேல்ல அந்த சுடிதாருக்கு மேட்ச்சா பேங்கிள்ஸ், நெக்லஸ் செட் வாங்கிடலாம் டா… நெக்ஸ்ட் வீக், எங்க ஹாஸ்பிடல்ல ஒர்க் பண்ணின அக்கா ஒருத்தங்களுக்கு மேரேஜ்… ப்ளீஸ் மதி… “

“நீ வீட்டுக்கு சீக்கிரம் போக வேணாமா?”

“போய் என்ன செய்யப் போறேன். வீட்டுக்குள்ள போக முடியாது. தனியாத்தான் இருக்கனும்… உன் கூட கொஞ்ச நேரம் இருந்திட்டு போறேனே…”

‘வீட்டுக்குள் வீடு’ பற்றி கருத்து சொல்லத் தொடங்கி விடுவேன் என நினைத்து அதை விரும்பாதவள் போல, “சிக்னல் போட்டாச்சி வண்டியை எடு” என்றாள். அவளின் பெர்ஃப்யூம் என்னை உந்தித் தள்ளியது. வலது புறம் வண்டியைத் திருப்பினேன்.

பின்னால் இருந்து குரல் வந்தது. “சார்… இன்னும் சிக்னல் போடல… “

“சாரி சார்… “

சிக்னல் வழி விட்டதும், வலது புறம் எடுக்காமல் நேராக வண்டியை ஓட்டினேன். எனக்குள் நானே பேசிக் கொண்டதால் இப்படி கவனச் சிதறல். ஹெல்மெட் மாட்டியிருப்பதால் என்னை யாரும் பைத்தியக்காரன் என நினைத்துக் கொள்ள மாட்டார்கள்.

அந்தப் பகுதியிலேயே வசிப்பவர்களுக்கு துர்நாற்றம் பழகி விட்டிருக்கும். ஆனால், அந்தப் பகுதியை புதிதாக கடக்கும் யாராலும் சகித்துக் கொள்ள முடியாது. குப்பை கிடங்கின் குபீர் நாற்றம் என்னை ஏதும் செய்யவில்லை. என் குடும்பத்தோடு நெருங்கிய தொடர்புடையதால், எனக்கு அந்த நாற்றம் பழகியிருந்ததும் ஒரு காரணம். 

***

தனியார் மருத்துவமனையின் சிறப்பம்சமே அழகான நர்ஸ்கள்தான் என இளைஞர்கள் சொன்னால் நீங்கள் கோபித்துக் கொள்ளக் கூடாது. அப்படி ஒரு நர்ஸிடம் மயங்கித்தான் நோயாளியாக இந்த மருத்துவமனைக்கு வந்திருக்கிறேன்.

“டாக்டரப் பார்க்க வந்தீங்களா? இங்க உட்கார்ந்து டிவி பார்த்திட்டு இருக்கீங்க? உங்க சேனல்லாம் நாங்க பார்க்க மாட்டோம்…” – சிறுவனின் எடையைப் பார்த்து குறித்துக் கொண்டே, வசீகரிக்கும் குரலில் கண்களிலேயே சிரிப்பைக் கொட்டிக் கொண்டு கேட்டாள் ரிசப்சனிஸ்ட்.

காய்ச்சல், தலைவலி, வயிற்றுப் பிரச்சினை என வழக்கமான நோய்களுக்கு மருத்துவம் பார்க்க வரவேற்பறையில் சிலர் அமர்ந்திருந்தனர். ஆனால், எனக்கு எந்த நோயும் இல்லை.

டாக்டர் எழிலன் நன்கு அறிமுகமானவர் என்பதால், முன் அனுமதி இல்லாமல் நேரடியாகச் சென்று அடிக்கடி அவரைப் பார்ப்பது வழக்கம்.

அந்த மருத்துவமனைக்கு வரும் போதெல்லாம் எந்த நர்ஸிடமும் பேசியது கிடையாது. டாக்டரைப் பார்த்து விட்டு, தேவையென்றால் பேட்டி எடுத்துவிட்டுச் சென்று விடுவேன்.

முதன்முதலாக அவளின் குரலை அங்கு கேட்க நேர்ந்த கணம், ‘இளைஞன் ஒருவனை நேசம் கொள்ள விரும்பும் இளம் நங்கையின் பேச்சு போல’ எனக்குத் தெரிந்தது. சட்டென மூளை விழித்து சுதாரித்துக் கொண்டு, ‘உன் வேலையைப் பார்’ என்பது போல முறைத்தேன். அவள் பயந்துவிட்டாள்.

இதைப் போன்ற கனிவான வார்த்தையில் விழுந்து, காதல் நோய் கொண்டுதான் இங்கு மருத்துவரைப் பார்க்க வந்திருக்கிறேன் என்பது எனக்கு மட்டுமே தெரியும்.

டாக்டர் எழிலனிடம் எனக்கு பொறாமை உண்டு. அதெப்படி கவர்ந்திழுக்கும் கன்னிகள் இந்த மருத்துவமனையில் இருந்தும் ஒருவர் மீதுகூட அவருக்கு காதல் வரவில்லை?

40 வயதைத் தொடும் அவர் இன்னும் திருமணம் செய்யவில்லை. தீவிர ஆத்திக எதிர்ப்பு ஆசாமியான அவருக்கு சாமியார்களை அறவே பிடிக்காது. அவர் துறவறம் மேற்கொண்டு விடுவார் என நான் நம்பவில்லை. மருத்துவர் என்பதால் உடலில் உள்ள குறைகளைத் தெரிந்து, திருமணம் செய்யாமல் இருக்கிறாரோ என்னவோ…?

இந்தக் கேள்விகளை எல்லாம் அவரிடம் கேட்க வேண்டும் என்று தோன்றும், ஆனால், என் மீதும் என் ஊடகப் பணியின் மீதும் அவர் வைத்திருக்கும் நன்மதிப்பின் காரணமாக கேட்டதில்லை.

“சட்டையை நல்லா மடக்கி விடுங்க. லைட்டா வலிக்கும்… உங்க பேரு என்ன?” கேட்டுக் கொண்டே ஊசியைப் போட்டாள் இன்னொரு நர்ஸ்.

இந்தக் குரல் கேட்டு சுயநினைவுக்கு திரும்பிய நான், அருகில் இருந்த இளைஞனைப் பார்த்தேன். ஊசி போட்டுக் கொண்ட வலி தெரியாமல், ஊசி போட்ட நர்ஸையே பார்த்துக் கொண்டிருந்தார்.

அந்த நர்ஸின் பெர்ஃபியூம் வாசனை ‘அவளை’ எனக்கு நினைவுபடுத்தியது. சில நாட்களாகவே சிவாவை மறக்க வேண்டும் என உச்சகட்ட போராட்டம் நடத்தினாலும் இப்படி ஏதாவதொரு வகையில் நினைவில் வந்து படுத்தி எடுக்கிறாள்.

நாசித் துவாரத்தின் உணர் நரம்புகளை எல்லாம் இல்லாமல் செய்ய வேண்டும் என அபாயகரமாக முடிவெடுக்கும் அளவுக்கு, அவளது நினைவு பயங்கரத் தொந்தரவாக மாறிவிட்டது.

என்னைக் கடக்கும் யாரிடமிருந்தாவது எழும் சோப்பு, பவுடர், மல்லிப் பூ வாசனை அவளைக் கண் முன் நிறுத்துகிறது. மறக்க நினைப்பவளை ஒரு சிறு துண்டு வாசனைகூட நினைவுக்கு கொண்டு வந்து விடுகிறது. என்ன கொடுமையான நோய் இந்தக் காதல்!

“ஜி… அந்த நர்ஸ் உங்க பேரக் கேட்டாங்களே… நீங்க சொல்லலியே?” – கண்கள் விரிய கன்னங்கள் குவிய புன்னகைத்து, அவளின் சிங்காரச் சீண்டலை நான் கவனித்து விட்டதாக நாணம் கொண்டார் அந்த இளைஞர்.

“இல்ல சார்… என் பேரு அவளுக்கு நல்லாத் தெரியும். என் பேரைச் சொல்லி கூப்பிட்டுத்தானே ஊசியை எடுத்திட்டு வந்தா…”

ஆமாம்… அதை கவனிக்க மறந்து விட்டேனே!

ஒருமையில் பேசியதை வைத்துப் பார்க்கும் போது, அவளைப் பார்க்கவே இவன் அடிக்கடி மருத்துவமனைக்கு வருவான் போல என நினைத்துக் கொண்டேன்.

“என்னோடு பேசணுமாம்…அதான் சார்…” – முகம் நெளிய அந்த இளைஞர் சொன்ன பதிலைக் கேட்டு, சாதித்தவனை பாராட்டும் பாங்கில், உதட்டைப் பிதுக்கி உவகையை வெளிப்படுத்தினேன். உண்மையில், அழுகைதான் எனக்கு முட்டிக் கொண்டு வந்தது.

எனக்கும் இந்த அனுபவம் உண்டு. இதே போன்ற நர்சிங் ஹோம்தான் அது…

ஒல்லியான தேகம். எந்த வகையிலும் அவளுக்கு பொருந்தாத நர்ஸ்கள் அணியும் பாவாடை, தாவணி. சிரிப்பை பாய்ச்சும் கண்கள். சிறு அசைவில் குறும்பைக் கொப்பளிக்கும் உதடுகள். யாரையும் கவர்ந்திழுக்கும் குறுகுறுப்பு.

“உங்க பேர் என்னங்க?” – ஒருமுறை ஊசி போட்டுக் கொள்ளும் போது கேட்டே விட்டேன். வேறு வழியே இல்லை. கேட்கவில்லை என்றால் வெறுமனே ஊசி போட்டே உடலில் நோய் வந்து விட்டிருக்கும்.

“சிவா”

இரண்டெழுத்தை நீட்டி நக்கலாகச் சொல்லி, அவளும் என்னுடன் பேச ஆவலாக இருந்ததை சிருங்காரத்தில் வெளிப்படுத்தினாள்.

“உங்க அப்பா பேர கேட்கலிங்க…”

“என் அப்பா பேர சொல்லலிங்க… என் பேரைத்தான் சொன்னேனுங்க…”

என்ன பாவனையில் நான் பேசினேனோ அதே பாவனையில் பதில் சொல்லி என்னை வெறுப்பேற்றினாள்.

“ஏன் உங்களுக்கு ஆம்பளப் பேரு வச்சாங்க…” – விடாமல் சீண்டினேன்.

முறைத்துப் பார்த்தாள்.

இன்னும் கடுப்பேற்றி சீண்டனும் போல தோன்றியது.

“நீங்க ஆணா பிறந்து பெண்ணா மாறிட்டீங்களா…”

“அடேய்… ஏதாவது ஏடாகூடமா சொல்லிடப் போறேன்… என் பேரு சிவகாமி. சுருக்கமா எல்லோருமே சிவான்னு கூப்பிடுவாங்க… போதுமா…”

‘அடேய்…’ – எவ்வளவு உரிமை எடுத்துக் கொண்டாள் என்னிடம்… எவ்வளவு கோபப்படுத்தினாலும் பதில் சொல்லிவிட்டுச் செல்லும் தன்மையிலேயே அவளது இதயத்தில் இடம் பிடித்து விட்ட பூரிப்பை என் உள்ளம் உணர்ந்தது. 

சிவாவுடனான அன்பில் மூழ்கிப் போய் காதல் வளர்த்த தருணங்கள் நினைவுக்கு வரும் போதெல்லாம் நெஞ்சம் விம்முகின்றது.

வெள்ளை உடை தரித்த நர்ஸ்களெல்லாம் என் பார்வைக்கு சிவாவாகவே தெரிந்தனர்.

“மதி சார்… டாக்டர் இன்னும் பத்து நிமிஷத்துல வந்திடுவாராம். நீங்க வந்திருக்கிறதா அவர்ட்ட சொல்லிட்டேன்.” மீண்டும் ரிசப்சனிஸ்ட் என்னிடம் பேச முயன்றாள். நான் சிவாவின் நினைப்பிலேயே இருந்தேன்.

அவள் நினைப்புத்தான் இப்போது எனக்கு பெரும் நோயாக மாறியிருந்தது.

சிவா வேலை செய்த மருத்துவமனையில் பணியாற்றியவர்தான் எழிலன். இப்போது தனியாக கிளினிக் ஆரம்பித்து விட்டார்.

இரண்டு ஆண்டுகள் நேசித்தோம். விரைவில் திருமணம் செய்து கொள்ளவும் திட்டமிட்டிருந்தோம். உடல் ஈர்ப்போ, பாலியல் கவர்ச்சியோ இல்லாமல் இருவரும் அன்பைப் பறிமாறி வந்தோம். காதல் உறவில் அறிவுக்கு முதலிடம் கொடுத்து, யதார்த்தமாய் மோகம் வளர்த்த இணை நாங்களாகத்தான் இருக்க முடியும்.

இதுதான் தவறோ என இப்போது எண்ணத் தோன்றுகிறது. காவிய காதலைப் போல, நானும் சிவாவும் காதலில் மோகித்திருந்தால் என்னை விட்டுப் பிரிய அவளுக்கு மனமிருந்திருக்காது.

சின்ன கருத்து வேறுபாடு எழுந்த போது, நாம் பிரிந்து விடுவோம் என ஒரு நாள் திடீரென காதலை முறித்துக் கொண்டாள்.

திருமண வாழ்வில் எவ்வளவு தூரம் இணையாகச் செல்ல முடியும் என்ற ஐயம் அவளுக்கு ஏற்பட்டிருக்கும் போல… அற்ப காரணத்துக்காக காதலனை கழற்றி விட அறிவு சொல்லிக் கொடுக்கும் போல!

நான் சிவாவை நேசித்தது டாக்டருக்கு தெரியும் என்பது எனக்கு தெரியாது.

மருத்துவமனை பரபரப்படைந்ததை வைத்து அவர் வந்து விட்டார் என்பதை உணர்ந்தேன்.

கை குலுக்கியவர், “எங்க கேமராமேனக் காணோம். உடம்புக்கு எதுவும் பிரச்சினையா மதி…?” கேட்டுக் கொண்டே நடந்து உள்ளே சென்றார்.

“உடம்புக்கு ஒண்ணும் இல்ல சார்…”

“ஓகே. கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. பேசண்ட்ட பாத்திடுறேன்…”

“நீங்க போங்க சார்”

நான் ஏதோ சொல்ல வருவதைத் தெரிந்து கொண்ட டாக்டர் எழிலன், நான் ஏதோ சிக்கலில் இருப்பதாக புரிந்து கொண்டதை தன் முக பாவனையில் வெளிப்படுத்திச் சென்றார்.

மீண்டும் இருக்கையில் அமர்ந்தேன். அந்த கிளினிக்கின் இயக்கம் ஒவ்வொன்றும் சிவாவை காட்சிப்படுத்திக் கொண்டே இருந்தது.

இதுதான் என்னுடைய நோய்.

“மதி சார், டாக்டர் உள்ள வரச் சொன்னாங்க” – ரிசப்சனிஸ்ட் கொஞ்சினாள்.

அவர் அறைக்குள் ஹாஸ்பிடல் வாடை இல்லை. யார்ட்லி பெர்ஃப்யூம் வாசனை வியாபித்திருந்தது. அந்த வாசனை திரவியத்தையும்கூட நான்தான் டாக்டருக்கு பரிந்துரைத்திருந்தேன். அந்த வாசனை சிவாவுக்கு பிடிக்கும். அவள்தான் அதை வாங்கிக் கொடுத்து, எனக்கு பழக்கினாள். அப்போது என்னிடம் பெர்ஃபியூம் பெயரைக் கேட்டு பயன்படுத்தத் தொடங்கினார் டாக்டர். சிவா என்னை விட்டு விலகியதிலிருந்து, பெர்ஃபியூம் என ஒன்றிருப்பதையே அறியாதவன் போல நான் ஆகிவிட்டேன்.

அந்த அறையில் கிராமங்களில் பயன்படுத்தும் கொட்டான் இருந்தது. உணவுப் பொருள் வீட்டிலிருந்து எடுத்து வந்திருப்பார் போல… பழமையான பொருட்களுக்கு இணையாக நவீன கண்டுபிடிப்புகளும் அந்த அறையில் இருந்தன. மேஜையில் அலெக்ஸா இருந்தாள். அவரை கன்சர்வேடிவ் என்றும் சொல்ல முடியவில்லை. முற்போக்காளர் பட்டியலிலும் சேர்க்க முடியவில்லை. 

என் குழப்பமான சிந்தனையை மேலும் சிக்கலாக்குவது போல என்னையே பார்த்து முறைத்துக் கொண்டிருந்தார் ஆயில் பெயிண்ட்டில் முக்கி தோய்க்கப்பட்டு சுவரில் தொங்கிய போட்டோவில் இருந்த ஃப்ரான்ஸ் ஃபனான். ஆஃப்ரிக்க உளவியல் மருத்துவர், 1925-1961 என அந்த போட்டோவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இன்னும் ஐந்து ஆண்டுகளில் இந்த உளவியல் மருத்துவருக்கு நூற்றாண்டு நினைவு தினம் கொண்டாடுவார்கள் என மனதில் கணக்குப் போட்டுக் கொண்டேன்.

டேபிளில் கறுப்பினத் தலைவர் மால்கம் X பற்றிய புத்தகம் படித்த நிலையில் அட்டைப் படம் மேலாகத் தெரியும் வகையில் குப்புற வைக்கப்பட்டிருந்தது. தலைப்பையும் பின் அட்டைக் குறிப்புகளையும் படித்தேன். பின் அட்டையில் கியூப புரட்சியாளர் ஃபிடல் காஸ்ட்ரோவுடன் மால்கம் X அளவளாவிக் கொள்ளும் காட்சிகள் கொலாஜ் செய்யப்பட்டிருந்தது.

சுவற்றில் தொங்கியவர் ஆஃப்ரிக்க கறுப்பினத் தலைவர் என்றால், மேஜையில் இருந்தது அமெரிக்க கறுப்பினத் தலைவர்.

திறந்த நிலையில் ஒரு டைரி தன் பக்கங்களுக்குள் மூடியிருந்த ரகசியங்களை நிர்வாணமாக்கியது.

டைரியின் வரிகள் சிவாவின் வாட்ஸ் அப் கொஞ்சல்களை எனக்கு நினைவுபடுத்தின.

“என்ன விஷயம் மதி சார்… இந்தப் பக்கம்… இப்பத்தான் என்னைய பார்க்கனும்னு உங்களுக்கு தோனிச்சா…” கண்ணாடியை கழட்டி டேபிளில் வைத்து விட்டு, தாடியை தடவி விட்டுக் கொண்டு, நான் தாடி வளர்க்கத் தொடங்கியிருந்தைப் பார்த்து நக்கல் செய்யும் தோரணையில் கேட்டார் டாக்டர் எழிலன்.

இருக்கையில் அமர்ந்தவரை நான் முறைத்தேன். அந்த முறைப்பின் அர்த்தம் புரிந்து கண்ணாடியை எடுத்து அணிந்து கொண்டார்.

“உங்களுக்கு நல்ல நியூராலஜிஸ்ட் யாராவது தெரியுமா சார்…?”

“யாருக்கு…? என்ன பிரச்சினை…”

“எனக்குத்தான்… லைஃப்ல சில காலங்கள் நம்ம மூளையிலேயே இருக்காத மாதிரி நீக்கிடனும்… அதுக்கு ட்ரீட்மெண்ட் இருக்கா…? குறிப்பிட்ட வருஷத்துல நடந்ததெல்லாம் மூளையிலிருந்து அழிக்கிற மாதிரி ஆபரேஷன் ஏதாவது இருக்கா டாக்டர்…?”

காய்ச்சல், ஜலதோஷம் வந்து அவதிப்படும் சிறுவன் டாக்டரிடம் சரணடைவது போல கொட்டினேன்.

“என்ன ஆச்சு மதி… என்ன சொல்றீங்க…?”

மெத்த அக்கறையுடன் அவர் கேட்டதும் இதுவரை அடக்கி வைத்திருந்த மொத்த அழுகையும் உடைத்துக் கொண்டு வந்தது. முகத்தை மூடிக் கொண்டு அழுதேன்.

இருக்கையில் இருந்து எழுந்து வந்து என் தோள்களை அழுத்தினார். நான் பத்திரிகையாளன். எவ்வளவோ கடினமான சூழல்களை எதிர்கொண்டிருப்பேன். நான் இப்படி இடிந்து போவதை டாக்டர் எழிலன் எதிர்பார்த்திருக்க மாட்டார்.

அருகில் இருக்கையை இழுத்துப் போட்டு என் எதிரில் நெருக்கமாக அமர்ந்தார். நான் கேவலை நிறுத்தும் வரை அமைதியாக இருந்தார். கண்களை துடைத்துக் கொண்டேன்.

“உங்களுக்கு தெரியும்னு நினைக்கிறேன், சிவாவ நான் லவ் பண்ணினது… “

“ம்…”

மவுனமாக இருந்தேன். அவரும் எதுவும் பேசவில்லை. நான் ஆசுவாசம் அடைய அவகாசம் தந்தார்.

“ஆமா, நான் ஏற்கனவே ஒர்க் பண்ணின கிளினிக்ல ஒர்க் பண்ணின பொண்ணுதானே…”

“ஆமா…”

“என்னைய விட்டுப் போயிட்டாங்க… மேரேஜ் வரைக்கும் வந்திட்டோம். திடீர்னு வேணாம்னு சொல்லிட்டாங்க… நாலு மாசம் ஆச்சு… எந்த காண்டாக்ட்டும் இப்ப கிடையாது…”

‘ஏன்’ என எல்லோரையும் போல இவரும் கேட்பார் என எதிர்பார்த்தேன். ஆனால், கேட்கவில்லை.

அவருடைய இரு கண்களிலும் இடம் மாறிய கரு விழி இரண்டும், ‘இது காதலில் சாதாரணம்தான்’ என்பது போல குறிப்பால் எனக்கு உணர்த்தியது.

மீண்டும் கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தேன்.

“சின்ன மிஸ் அண்டர்ஸ்டாண்டிங்தான்… பாதுகாப்பு உணர்வில், அவள் தொடர்பான அனைத்து விஷயங்களிலும் நான் அக்கறை எடுத்துக் கொண்டதை, அவளை நான் கட்டுப்படுத்துவதாக புரிந்து கொண்டாள். நான் அவளை அடிமைப்படுத்துவதாக நினைத்து, கல்யாணத்துக்குப் பின்னாடி, இந்த மாதிரி இருந்தா எனக்கு சரியா வராது, இப்பவே நாம எந்த சங்கடமும் இல்லாம பிரிஞ்சிடலாம்னு ஒரு நாள் சடார்னு சொல்லிட்டா…”

நான் நிறுத்தி, கர்சீஃப்பை எடுத்து மூக்கைச் சிந்தினேன். அவர் எதுவும் பேசாமல், கைகளை மார்பில் கட்டிக் கொண்டு அமைதியாகப் பார்த்தார்.

“இந்த நாலு மாசமும் எனக்கு நரகம்தான். எந்தப் பக்கம் திரும்பினாலும் அவங்கதான் நிக்கிறாங்க… ரெண்டு வருஷம் அவங்கள லவ் பண்ணின நேரத்துல, அவங்களோட வந்து போன இடம், பழகிய தருணம், பேசிய பேச்சுக்கள்… ஒரு பெர்ஃப்மியூம் ஸ்மெல்கூட என்னை நிலைகுலைய வைக்குது… இங்க ஆஸ்பத்திரிக்கு வர்ற வழியிலகூட சிக்னல்ல, இந்த மாதிரி தொந்தரவால ஆக்ஸிடெண்ட் ஆக பார்த்திச்சி… இப்படி எல்லாமே, அந்த நினைவுகள் எல்லாமே இப்ப பயங்கரமா என்னைத் தொந்தரவு பண்ணுது… என்ன செய்றதுன்னு எனக்குத் தெரியல…”

“அவங்க நினைவே வராத மாதிரி, அவங்களோட எல்லா தொடர்பையும் கட் பண்ணிட்டீங்கல்ல…” பேச ஆரம்பித்தார் டாக்டர்.

“பேஸ்புக், வாட்ஸ் அப், போன் காண்டாக்ட் எல்லாத்தையும் பிளாக் பண்ணிட்டேன். இதெல்லாம் அவங்களோட நெருக்கமா இருக்க உதவிச்சு… அதனால், இதையெல்லாம் கட் பண்ணிட்டேன். ஆனா, அவங்களோட இருந்த மொமண்ட்ஸ்… எப்படியாவது, யாராவது நினைவுபடுத்திடறாங்களே… என்ன செய்றது?”

இங்க கூட அவங்க உங்க சீட்டுக்குப் பக்கத்துல நிக்கிற மாதிரியேதான் இருக்கு… பழைய கிளினிக்ல அவங்க, உங்க பக்கத்துல நின்னு என்னைய சைட் அடிப்பாங்க தொடக்கத்துல…

அவ்வளவு ஏன்? நீங்க போட்டிருக்கிற பெர்ஃபியூம் வாசன கூட, அவங்கள எனக்கு நினைவுபடுத்துது… இந்த ஃபிளேவர் அவங்களுக்கு ரொம்பப் பிடிக்கும்…”

“ஓ… அதத்தான் எனக்கு ரெகமண்ட் பண்ணினீங்களா…” டாக்டர் சிரித்து விட்டார்.

புன்னகை என் உதட்டில் தோன்றினாலும், அடுத்த நொடியே மாறினேன்.

“அவங்களோட பைக்ல போன ரோட்டுல போகும் போது அவங்க பேசின பேச்சு நினைவுக்கு வந்து தொலைக்கும், ஒழுங்கா வண்டி ஓட்ட முடியாது. சினிமா தியேட்டருக்கு போறதயே நிறுத்திட்டேன். அங்க போனாலும் அவங்களோட நினைப்புதான்… ரெண்டு வருஷமும் அவங்கதான் என்னை இயக்கினாங்க… காலையில போன் போட்டு எழுப்பி விடறதுல்ல இருந்து, நான் என்ன செஞ்சிக்கிட்டிருந்தாலும் அவங்களுக்கு தகவல் சொல்லணும்… திடீர்னு இதெல்லாம் இல்லன்னு ஆனவுடனே, உலகம் ரிவர்ஸ்ல சுத்த ஆரம்பிச்ச மாதிரி பயங்கர குழப்பம் எனக்கு… இப்படி எங்க போனாலும் என்னைத் துரத்தும் அவங்க ஞாபத்திலேயிருந்து முழுசா நான் வெளிய வரணும்… ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி அதாவது அவங்கள பார்க்குறதுக்கு முன்னாடி நான் எப்படி இருந்தேனோ, அந்த மதியா நான் மாறணும் டாக்டர்…”

“மதி சார், காதல்ங்கிறது கிரேவ்யார்ட் மாதிரி… விக்டர் ஹியூகோ தன்னோட நாவல் ஒண்ணுல சொல்லியிருப்பார். அவர் வேற அர்த்தத்துல பயன்படுத்தினது காதலுக்கு சரியாப் பொருந்தும்னு நான் நினைக்கிறேன்… ‘The door of the tomb opens not from within.’ சவக் குழிக்குள்ள போன பின்னாடி, உள்ளே இருந்து திறக்க முடியுமா?” நீண்ட பெருமூச்சு விட்டு மீண்டும் தொடர்ந்தார். 

“இதுக்கு எதுக்கு தனியா ஒரு டாக்டர நீங்க பார்க்கணும்…?”

“அப்ப…”

“நான் சைக்கோபதாலஜிஸ்ட்தான் மதி… அதுமட்டுமில்ல… நான் நியூராலஜியும் முடிச்சிருக்கேன். இன்ஃபாக்ட் இங்க கிளினிக் தொடங்கின பின்னாடி, எம்ஏ சைக்காலஜியும் முடிச்சிருக்கேன்…”

எதற்கோ பீடிகை போட்டுக் கொண்டு போனார், நான் அமைதியாக தலையை ஆட்டினேன்.

“ஆனா, நீங்க சொல்ற மாதிரி இப்போதைக்கு மருத்துவ உலகில எந்தக் கண்டுபிடிப்பும் இல்ல… மூளையில் பதிவாகியிருக்கும் நினைவுகளில் ஒரு குறிப்பிட்ட பகுதிகளை டெலிட் பண்றதுக்கான ஆராய்ச்சி, பல்வேறு நாடுகள்ல போய்க்கிட்டிருக்கு… நானும்தான்…”

என்னுடைய பிரச்சினைகளை மறந்து, ஒரு செய்தியாளன் மனநிலைக்கு தாவினேன். இப்படி நான் தாவும் போதுகூட சிவா என் நினைவில் வந்து விடுவாள். அவளோடு சிரித்து பேசி மகிழ்ச்சியாக இருக்கும் போது, “இந்தச் சூழ்நிலைய நீங்க எப்படி ஃபீல் பண்றீங்க சிவா மேடம்…” ஒரு செய்தியாளர் மாதிரி, என் கையை மைக் போல அவள் வாயருகே நீட்டும் போது, பயங்கரமாகக் கோபமடைவாள்.

“டாக்டர், நீங்களும் ரிசர்ச் பண்ணிக்கிட்டிருக்கீங்களா? சொல்லவே இல்ல… டீட்டெய்லா, அதே சமயம் எனக்கு புரியிற மாதிரி சொல்லுங்க டாக்டர்…”

“என்னுடைய ரிஸர்ச்சுக்கு பேரு, ‘புராஜக்ட் யாழினி’. ஒவ்வொரு டீமும் வேற வேற பேரு வச்சி ஆய்வு பண்ணிக்கிட்டு வர்றோம்…”

“என்ன பேரு…?”

“புராஜக்ட் யாழினி…”

“அதென்ன யாழினி?”

உதிக்க மறந்த சூரியன், வெளிச்சம் தராத வெயில், சூன்யப் புள்ளியில் உன்னை குவித்த சூத்திரதாரி, பலன் தர மறுத்து பயம் கவ்வச் செய்த பாரிஜாதம் – இதுக்கெல்லாம் நீ பெயர் வைத்து அழைக்கும் போது, ‘சிவா’ என நாவில் சுவை சொட்ட உச்சரிக்கும் போது, எனக்கு அப்படி ஒரு பெயர் இருக்கக் கூடாதா? – டாக்டர் தாடியை தடவி விட்டுக் கொண்டு, உன் வலிதான் என்னுடைய வலியும் என்பதைப் போன்ற பார்வையால் தாடையை மேலும் கீழும் அசைத்தார்.

டாக்டரின் கண்களின் கரு விழிகளை கூர்ந்து பார்த்தேன். காதல் கசிந்து கீழ் இமையை ஈரமாக்கியது. யாழினி யார் என்பதைச் சொல்லாமல் சொல்லியது அந்தக் கண்ணீர்த் துளி.

தன்னுடைய ஐபேடை எடுத்து திறந்தார். அதில் இருந்த மூளை வரைபடத்தை பெரிதாக்கினார். 

“இதுக்குப் பெயர் டெம்போரல் லோப்.” அடையாளமில்லாத மனித உருவின் தலைப்பகுதியைக் காட்டி விளக்கினார். 

தன்னுடைய நெற்றியில் விரல்களை வைத்து, “நாம் பார்க்கக்கூடிய இந்த நெத்திக்குப் பின்னாடிதான் இந்த டெம்போரல் லோப் அதாவது ‘நெற்றிப்பொட்டு மடல்’ இருக்கிறது. இது வலது, இடது என இரண்டு பிரிவாக செயல்படுகிறது. வலது பக்க மடல் நம்முடைய இடது பக்க செயல்பாட்டையும் இடது பக்க மடலானது வலது பக்க செயல்பாட்டையும் கட்டுப்படுத்துகிறது.” 

இடவல மாற்ற சமாச்சாரம் பற்றி பள்ளிக்கூடத்தில் படித்தது என் நினைவுக்கு வந்தது. ஐபாடில் உள்ள படத்தை டாக்டர் பெரிதாக்கினார். 

“டெம்போரல் லோப்-பின் மையப்பகுதியில் உள்ள அமைப்புக்குப் பெயர்தான் ஹிப்போ காம்பஸ். இதுதான் நினைவாற்றலின் நுழைவாயில். குறுகிய கால நினைவுகள் இந்த ஹிப்போகாம்பஸ் பகுதியில்தான் பதிவாகிறது. இதுக்குப் பெயர் கார்ட்டெக்ஸ். இந்தப் பகுதியில்தான் மூளையின் பெர்மனன்ட் மெமரி இருக்கிறது. ஹிப்போ காம்பஸ் டெம்ப்ரரி மெமரி. ஒரு குறிப்பிட்ட காலம் வரை ஹிப்போ காம்பஸ் பகுதியில் நினைவுகள் தற்காலிகமாக இருந்துவிட்டு, கொஞ்ச நாளைக்குப் பிறகு பெர்மனன்ட் மெமரி பகுதியில் சேகரமாகி விடுகிறது…” மூளையைப் பற்றி வரைபடத்தை பெரிதாக்கி பெரிதாக்கி சுவாரஸ்யங்களைச் சொல்லிக் கொண்டே வந்தார் டாக்டர் எழிலன்.

“அப்ப அந்த பெர்மனன்ட் பகுதிய வெட்டி எடுத்திட்டா என் பிரச்சினை தீர்ந்திடும்ல…” மனதுக்குள் நினைப்பதாக எண்ணிக் கொண்டு வெள்ளந்தியாக கேட்டு வைத்தேன்.

“மொத்தமா தீர்ந்திடும்… பரவாயில்லையா…?” என் முட்டாள்தனத்தை நகைச்சுவையாக மாற்றினார் டாக்டர்.

“மொத்தமா எடுத்திட்டா நிரந்தரமாக சேமிக்க மூளையில் ஒரு பகுதி வேண்டாமா? டெம்ப்ரரி மெமரி நிரம்பி வழிந்து புது பிரச்சினை உருவாகிடாதா?” 

கேட்டுவிட்டு என்னைப் பார்த்தார். பென்சில் திருடி மாட்டிக் கொண்ட மாணவன் போல விழித்தேன்.

“இந்த இடத்தில்தான் புதிய ஆராய்ச்சியின் அவசியம் ஏற்பட்டிருக்கிறது…” சொல்லிவிட்டு ஐபாடை மூடினார்.

பெர்மனன்ட் மெமரியான கார்ட்டெக்ஸ் பகுதியில் எந்தக் காலத்து நினைவுகள் பதிவாகின்றன, ஹிப்போ காம்பஸ் பகுதியிலிருந்து வரும் நினைவுகள் வந்து சேரச் சேர, கடைசியாக வந்த நினைவுகள் எங்கு வந்து அமர்கிறது என்பதைப் பற்றிய ஆராய்ச்சிதான் தற்போது நடந்து வருவதாக விளக்கினார். 

“இந்த ஆய்வில் ஒருமித்த கருத்துக்கு ஆராய்ச்சியாளர்கள் வந்துவிட்டனர், அதாவது, கடைசியாக வந்து சேரும் நினைவுகள் எங்கு சேகரமாகிறது என்பதை துல்லியமாகச் சொல்லிடலாம். இந்த ஆய்வு முடிவுகள் உங்கள் பிரச்சினைக்கு தீர்வு அளிக்கலாம்…” 

“அப்ப, எனக்கு எப்பவோ உள்ள, எந்தக் காலத்திலோ நிகழ்ந்ததை அழிக்கத் தேவையில்லை. கடைசி இரண்டு வருடங்கள்தான்… கடைசியாக சேர்ந்த நினைவுகளை அழித்து விட்டால் என் பிரச்சினை தீர்ந்து விடும்…”

“ஆமாம்… கார்ட்டெக்ஸ் பகுதியோடு, டெம்ப்ரரி மெமரியான ஹிப்போ காம்பஸ் பகுதி இணையும் இடத்தில்தான் புதிய நினைவுகள் சேகரமாகின்றன.”

“அந்த இடத்தில் உள்ள நினைவுகளை மட்டும் எரேஸ் பண்ண முடியுமா டாக்டர்?” அப்பாவியாக கேட்டேன்.

“மிஸ்டர் இது என்ன கட்டியா? தனியா வெட்டி எடுக்க…. மூளை… அப்டிலாம் எதுவும் செய்ய முடியாது. அந்தக் குறிப்பிட்ட இடத்தில் மிக மிக கவனமாக மின் அதிர்ச்சி கொடுப்பதன் மூலமா நினைவுகள் அழிந்து விடும். புதிய செல்கள் அந்த இடத்தில் உற்பத்தியாகும் போது, புதிய நினைவுகள் மீண்டும் அங்கு பதிவாகும். உங்க பிரச்சினைக்கும் தீர்வு கிடைச்சிடும்…” – சிரித்துக் கொண்டே என் கன்னங்களைத் தட்டிக் கொடுத்தார்.

“சூப்பர் சார்… அப்ப, எப்ப ஆபரேசன் வச்சிக்கலாம்…?”

“ஏங்க… இருங்க… இன்னும் முழுமையாக இந்த ஆய்வு முடியல… சோதனை முயற்சியில்தான் இருக்கு. மனிதர்களில் யாருக்கும் இதுவரை சோதனை செய்து பார்க்கவில்லை. பொனபோ-வோட மூளையில் மின் அதிர்ச்சி கொடுத்துப் பார்த்ததில, அது தன்னோட கேர்ள் ஃபிரண்டோட சுத்துறத நிறுத்திடுச்சி. இருந்தாலும் நினைவுகள் பெர்மணன்ட் மெமரியான கார்ட்டெக்ஸ் பகுதிக்கு கடத்தப்பட்டிருக்குமா இல்லையா என்பதை துல்லியமாகச் சொல்ல முடியவில்லை. நாள், மணிக் கணக்கெல்லாம் மூளைக்கு இருக்கா என்ன?”

“மனிதனுக்கு சோதனை செய்யலன்னு சொன்னீங்க, யாரு பொனபோ?”

“அது மனிதர் இல்ல. மனிதக் குரங்கு. பொனபோ வகை மனிதக் குரங்கு, மனிதர்களைப் போலவே ஏறக்குறைய மூளை அமைப்பைக் கொண்ட விலங்கு”

ஐபாடில் அந்தக் குரங்கை காட்டினார். அப்படியே அச்சு அசலாக மனிதர் போலவே இருந்தது. பத்தாம் வகுப்பு தமிழ் வாத்தியாரின் மூக்கை அப்படியே பிரதி எடுத்தது போல இருந்தது பொனபோ-வின் மூக்கு.

“மனிதர்களுக்கு சோதனை செய்து பார்த்து விட வேண்டியதுதானே…” ஒரு முன்முடிவோடு கேள்வியை முன்வைத்தேன்.

“யார் முன்வருவா? ஏதாவது சிக்கலாகி… அப்டிலாம் ஆகாது. ஒருவேளை சிக்கலாகி மூளை குழம்பிப் போயிட்டா?” டாக்டர் அதிர்ச்சியை வெளிப்படுத்தினார்.

“அப்படி ஆகிடும்னு நீங்க நினைக்கிறீங்களா டாக்டர்?”

“இல்ல… பெர்ஃபெக்ட்டா முடிச்சிடலாம். ஆனா, யாரிடம் சோதனையை மேற்கொள்வது?”

நானிருக்கிறேன் என சொல்லிக் கொண்டே என் தலையை நீட்டினேன். நான் விளையாடுவதாக டாக்டர் கருதினார். சீரியஸாகவே சோதனை மனிதனாக மாற நான் தயார் என உறுதி கொடுத்தேன். அவர் ஒப்புக் கொள்ளவில்லை. ஒரு வழியாக அவரைச் சம்மதிக்க வைத்தேன். நாளையும் குறித்தோம்.

ஒரு வார இடைவெளியில், ஆபரேசனுக்கான தயாரிப்புகளைச் செய்ததோடு வெளிநாட்டிலிருந்து சிறப்பு மருத்துவரையும் அவர் வரவழைத்திருந்தார். இது வெறுமனே ஓர் அறுவை சிகிச்சை மட்டுமல்ல; ஓர் ஆராய்ச்சியின் முடிவும்கூட. அதுவும் முக்கியமான ஆராய்ச்சியின் முடிவு என்பதால் கூடுதல் அக்கறை எடுத்துக் கொள்ளப்பட்டது.

சரியாக காலை 10 மணி. வெள்ளிக்கிழமை. என்னுடைய உடல் தகுதி பற்றி முழுமையான சோதனை போடப்பட்டது. வெளிநாட்டு மருத்துவ நிபுணர்கள் குழு என் உடலை முழுமையாகப் பரிசோதனை செய்தார்கள். குறிப்புகள் எடுத்துக் கொண்டார்கள். ஒரு மணி நேர ஆய்வுக்குப் பின்பு, ஆபரேசன் தியேட்டருக்குள் நான் கொண்டு செல்லப்பட்டேன்.

பிற்பகல் 2 மணி வாக்கில் எனக்கு நினைவு திரும்பியது. ஆல்ரைட்…. எந்தச் சிக்கலும் இல்லாமல் நான் பேசினேன். மொத்த டாக்டர்கள் குழுவும் மகிழ்ச்சியில் திளைத்தது. மருத்துவ உலகில் ஒரு மைல்கல்லை எட்டிய உற்சாகத்தில் அவர்கள் துள்ளிக் குதித்தனர். 21-ம் நூற்றாண்டின் கண்டுபிடிப்புகளில் இந்த அறுவை சிகிச்சை முக்கியமான கண்டுபிடிப்பு என்றும், மருத்துவ வரலாற்றில் இந்தக் கண்டுபிடிப்பு இடம்பெறுவதோடு, அதில் உங்களுடைய பெயரும் இடம்பெறும் என்றும் டாக்டர்கள் என்னை வெகுவாகப் பாராட்டினர். இரண்டு நாள் அப்சர்வேசனுக்குப் பின்பு நான் வீடு திரும்பினேன்.

ஐந்து ஆண்டுகளுக்குப் பின்பு… மருத்துவ சந்தேகம் ஒன்றிற்காக பேட்டி எடுக்க டாக்டர் எழிலனைப் பார்க்க அவருடைய மருத்துவமனைக்கு வந்தேன். அங்கிருந்த பணியாளர்கள் புதிதாக இருந்தார்கள். குறிப்பாக கொஞ்சிப் கொஞ்சிப் பேசும் அந்த ரிசப்ஷனிஸ்ட் இல்லை. 

இறுதியாக இங்கிருந்து ஆபரேசன் செய்து விட்டுப் போன நினைவுகள் என் மனக்கண் முன் வந்தன. அந்த அறுவை சிகிச்சைக்குப் பின்பு சர்வதேச அளவில் என் பெயர் உச்சரிக்கப்பட்டது. வெளிநாட்டு ஊடகங்களெல்லாம்கூட என்னை பேட்டி எடுத்து ஒளிபரப்பினார்கள். மூளையில் இருந்து குறிப்பிட்ட கால நினைவுகளை அகற்றிய விந்தை மனிதன் என்று பத்திரிகைகள் வியந்து எழுதின. வேற்று கிரகவாசியைப் போலவும், புதிய வகை மனிதன் என்றும்கூட என்னை விளித்தார்கள்.

இந்தப் பாராட்டுரைகள் ஒரு பக்கம் இருந்தாலும் அந்த அறுவை சிகிச்சைக்குப் பின்பு, சிவாவின் நினைவுகள் என்னைத் தொந்தரவு செய்யவில்லை. அவளைக் காதலித்த நாட்களை நான் முற்றிலுமாக மறந்தே போனேன்.

***

காத்திருந்தேன். அந்த அறையில் எந்த மாற்றமும் இல்லை. அப்படியே இருந்தது. மேஜையில் டைரி இல்லை. ‘ஒரு புத்தகக் கடைக்காரரின் கதை’ என்ற புத்தகம் இருந்தது. அதன் பின் அட்டையில் பிரபல குத்துச்சண்டை வீரர் முஹம்மது அலீ, ஒரு புத்தகக் கடையில் நின்று கொண்டிருந்தார். 

டாக்டரும் வந்தார். நிறைய வெள்ளை முடி. தாடியும் வெளுத்திருந்தது. 

“மதி…. எவ்ளோ நாளாச்சி… உங்களைப் பார்த்து… எப்டி இருக்கீங்க… பாராட்டு நிகழ்ச்சிகளில் பார்த்ததுக்குப் பிறகு உங்களைப் பார்க்கவே முடியல…”

“ஆமாம் டாக்டர்… பிரேக்கிங்… பிரேக்கிங்னு நான் ஓடிக்கிட்டே இருக்கேன்… இப்ப உங்களோட ஒரு பேட்டி வேணும்…”

“மறக்காம நினைவு வச்சிருக்கீங்களே… அதுவரைக்கும் சந்தோசம்தான்…” ‘மறக்காம’ ‘நினைவு’ என்ற வார்த்தைகள் மூலம், மூளை ஆபரேஷன் செய்து கொண்ட பின்பும்கூட நான், ‘நார்மல் பெர்ஸன்’ ஆகத்தான் இருக்கிறேன் என்பதை உணர்த்தினார்.

“திருமணம் முடிச்சிட்டீங்களா?” தயங்கித் தயங்கி கேட்டார்.

“ஓ… முடிஞ்சிருச்சி… சிவாவையே கல்யாணம் பண்ணிக்கிட்டேன்…”

“என்னங்க சொல்றீங்க… சிவாவை மறக்கனும்னுதானே ஆபரேசன் பண்ணினீங்க… ஆங்… அவருக்கும் வேறொருத்தருக்கும்கூட கல்யாணம் நடந்திடுச்சின்னு கேள்விப்பட்டேனே… அவங்க ஹஸ்பண்ட டிவோர்ஸ் பண்ணிட்டு உங்களை மேரேஜ் பண்ணிக்கிட்டாங்களா…” ஆச்சரியம் தாங்காமல் அடுத்தடுத்து கேள்விகளை அடுக்கினார்.

“எங்களுக்கு ரெண்டு குழந்தைங்ககூட இருக்காங்க சார்… ரெண்டும் ஆண் குழந்தைகள்… ஒருத்தன் பேரு மால்கம், இன்னொருத்தன் பேரு ஃபனான்…”

குழந்தைகளுக்கு சூட்டப்பப்பட்ட பெயர்களைச் சொல்லும் போது, அவரைக் கிண்டல் செய்வதாகக் கருதி புருவங்களைச் சுருக்கி விரித்தார் டாக்டர். 

“டாக்டர்… விழித்திருக்கும் போது வரும் நினைவுகளை அழிக்கத்தான் நீங்க ஆபரேஷன் பண்ணினீங்க… கனவுல சிவா வருவதை அந்த ஆபரேஷனால் தடுக்க முடியலையே… கனவுலயே அவளை கல்யாணம் பண்ணி குடும்பம் நடத்திக்கிட்டு இருக்கேன்.”

டாக்டர் தலையில் மாட்டியிருந்த கூலிங் கிளாஸை கண்களில் இறக்கி விட்டு தலையை அசைத்தார். அவர் ஏன் இன்னும் திருமணம் செய்யவில்லை என்பதை உணர்த்தியது அந்த அசைப்பு.

******

writerqutub@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button