’மௌனம் துறக்கும் பெண்மை’ நூல் வாசிப்பனுபவ கட்டுரை – அ. ஜெ. அமலா
கட்டுரை | வாசகசாலை

இந்த நூலிற்கான பதிப்புரையை ஓவியா பதிப்பக உரிமையாளர் கவிஞர். வதிலைபிரபா அவர்கள் எழுதியுள்ளார். அவரின் வரிகளை படிக்கும் போதே சற்று நிமிர்ந்து அமர்ந்தேன் நான். அணிந்துரையை கவிஞர். முனைவர் சக்திஜோதி அவர்கள் வழங்கியுள்ளார். அவ்வுரையை படிக்கும் போது அக்கவிதைத்தொகுப்பின் மீதான ஆர்வமும், நாகநந்தினியின் மீதான மதிப்பும் அதிகமாகி அவ்வரிகளை படித்திடும் ஆவல் அதிகமானது. வாழ்த்துரையை வழங்கியுள்ள கவிஞர். சுசித்ரா மாரன் அவர்கள் மிக காத்திரமான உரையாகவே வழங்கியுள்ளார். அடுத்ததாக நாகநந்தினியின் உரை. பெண்ணடிமைத்தனம் பற்றி அவர் விளக்கி எழுதியிருப்பது உண்மையான வரிகள். அவரின் உரையே அத்தனை வீச்சு எனில் கவிதைகள் எப்படி இருக்கும் என்று ஆர்வமாய் புரட்ட ஆரம்பித்தாலும், ‘பெண்மை’ என்ற தலைப்பைப் பார்த்ததால் முழுக்க பெண்ணிய வரிகளாகவோ, சுதந்திரம், கனவு என்றே இருக்கும் என நினைத்து வாசிக்க ஆரம்பித்தேன் இப்புத்தகத்தினை. ஆனால், மகாகவி பாரதியின் “பேசாப் பொருளை பேச நான் துணிந்தேன்” என்கிற வரிகள் தான் நினைவிற்கு வந்தது எனக்கு. மிக இளம் வயதிலேயே எப்படி இந்த பெண்ணால் இத்தனை அடர்த்தியான வரிகளை எழுத முடிந்தது என்று……
இத் தொகுப்பில் மொத்தம் 71 கவிதைகள் உள்ளன. ஒவ்வொரு கவிதையும் ஒரு பெண். இது ஏதோ நிலா, வானம், காற்று, மேகம், கொடியிடை, பூந்தளிர் மேனி என்றெல்லாம் எழுதப்பட்ட, வர்ணிக்கப்பட்ட பெண்ணல்ல….. இரத்தமும், சதையுமாய், உயிரும், உணர்வுமாயும் உள்ள பெண். நாம் எளிதில் வன்முறைக்கு ஆளாக்கிடும் அந்தப் பெண்ணின் வலிகளை, அதன் துயரங்களை, அதன் ஆற்றாமையை நம் பக்கத்து விட்டு பெண் நம்மிடம் பகிரும் போது நமக்கு என்ன மாதிரியான உணர்வுகள் வந்து போகுமோ அப்படித்தான் இருந்தது இத் தொகுப்பினைப் படித்த போது.
“முதன் முதலாய்” என்கிற கவிதையில்,
எதிர்பார்த்த அதிர்ச்சியின்
அழுப்புக் கிளையில்
மனது வெளவாலாகத் தொங்குகிறது
என் இரவெங்கும் வயதின் மீயொலிகள்
ஏதோ ஒரு ஆசையின் அறைகூவலாகின
பெயரிடப்படாத உணர்ச்சிக் காற்றில்
கருப்பையின் மொழியாய் வீசும்
முதல் மாதவிடாயின்
உதிர வாடையைச் சுவாசிக்கிறது
என் கண்ணீர்
இவ்வலியை அனுபவிக்காத எந்தப் பெண்ணும் இருக்க முடியாது தானே……இந்த வரிகளை அனைத்துப் பெண்களுக்கும் சமர்ப்பணமாக்கிட விழையும் இந்த சிறிய பெண்ணின் ஆழமான வரிகள் இவை.
“ஏழு நாட்கள்” என்கிற கவிதையில் வருகிற அனைத்து வரிகளுமே ஆக நிதர்சனமானவை. அதிலும்,
விளம்பரங்களில் காட்டுவதைப் போல்
என் தூமை ரத்தத்தைப்
புழுக்கத்தின் பொருமலோடு சுமக்கும்
உணர்வேதுமில்லா மெல்லிய பஞ்சு
ஒரு போதும் என் முதுகில்
சிறகாகி விடுவதில்லை.
எத்தனை சிறப்பான வரிகள்…… ஒவ்வொரு பெண்ணிற்கும் மாதவிடாய் நாட்கள் எத்தனை துன்பமானது; வலி நிறைந்தது என்று அனுபவிக்கும் போது தான் தெரியும். அந்த நேரத்திய மிகப்பெரிய பலமாக இருப்பவை சானிடரி நாப்கின்கள் தான். ஆனாலும் அது அத்தனை எளிதல்ல என்பதை மிக செறிவான வரிகள் மூலம் கடத்துகிறார் கவிஞர். தற்போது தான் ஒரு சில கம்பெனிகள் மாதவிடாய் விடுப்பு அளிக்க முன்வந்துள்ளது. அந்த பெண்களுக்கு கிடைத்த ஓய்வு இன்னும் இன்னும் பரவலாக சென்று சேரனும் என்பதே என் ஆசை.
“வலி” என்கிற கவிதையை பிரசித்தி பெற்ற துணிக்கடைகளில் பணிபுரியும் பெண்களுக்காக…..
“சிறு பெண் தெய்வங்களின் கதறல் “ கவிதை முழுவதும் சிறு பெண் தெய்வங்கள் எப்படி உண்டாக்கப்படுகின்றார்கள் என்பதை தெளிவாய் எடுத்துரைத்து விட்டு, இறுதியில்
நீங்கள் என்னை
பல்லாக்கில் உயரே தூக்கும்
அதே நேரத்தில்
ஆணாதிக்கக் கல்லால் அடிக்கப்பட்டு
பல பெண்கள்
கீழே தள்ளி விடப்படுகின்றனர்
என்று வார்த்தைச் சாட்டையில் சுழற்றுகிறார் கவிஞர்.
“எழுதப்படாத இலக்கியம்“, “ஓய்வு” என்கிற இரு கவிதைகளின் வரிகளும் மிக மிக உண்மையானவை. எத்தனையோ பெண்களின் ஏக்கம் நிறைந்த வரிகள்.
“மிடுக்கு“ என்கிற கவிதையில் பெண்களின் கம்பீரத்தை மிகச் சிறப்பாய் கூறுகிறார்.
வேகத்தை நெருப்பாய் கக்கும்
இரும்பு டிராகனென உறுமும்
புல்லட் வண்டியை
அவள் ஓட்டுகிறாள்.
அச்சம் மடம் நாணம்
விபத்துக்குள்ளாகிச்
செத்துக் கிடக்கிறது !
செம்மையான வரிகள் இவை.
“உழத்தி“ என்கிற கவிதையை முழுவதும் உருவகமாகவே எழுதியுள்ள சிறப்பைக் கண்டு வியந்து, மகிழ்ந்து, கனிந்து கரைந்துள்ளேன் அவ் வரிகளில்.
“அவள்“ என்கிற கவிதையில்
அவளின் வியர்வைக் கடலோரத்தில்
வறுமை சேகரித்த
வலிகளின் உப்பளம்
கனவு மழையில் கரைகிறது.
மகன் படிக்கும் சில நொடிகளில்
நிம்மதி மரக்கிளையில்
அவளது ஆயுளுக்குத் தொட்டிலிட்டு
தாலாட்டுகிறாள்
இசையாகிறது பேரன்பு.
அப்பப்பா…… என்னவொரு வார்த்தை வளம்.
“கூடு” என்கிற கவிதை சிறுமிகளிடம் தங்கள் ஆண்மையைக் காட்டும் பராக்கிரமசாலிகளிடம் படிக்க கொடுக்கலாம். அதன் பிறகாவது அப்பராக்கிரமாசாலிகளின் மனதில் மாற்றம் வருமா?
“பெண்ணடிமைத்தனம்” என்கிற கவிதை சுளீர் …. சுளீர் வரிகள்.
“காட்சி” என்கிற கவிதையில் பெண்பிள்ளைகளின் அந்தரத்தைத துளைக்கும் CCTV கண்களுக்கு …. எந்த இடத்திலும் , எந்த நேரத்திலும் நான் பெண், நான் பெண் என்று பத்திரமா இருக்கனும் என்று இயல்பே இல்லாத எந்திரமாக்கி வைத்திருக்கிற இந்த சமூகத்தை நினைத்தால் ஆத்திரமாக வருகிறது.
“வித்தியாசம்” என்கிற கவிதையில்,
வாழ்வின் இரவில்
அவன்
ஆயிரம் பௌர்ணமிகளின்
வெளிச்சத்தில்
ஹைக்கூ எழுதிக் கொண்டிருக்கிறான்.
நானோ
ஒரேயொரு மின்மினிப் பூச்சியின்
வெளிச்சத்தில்
புதினங்களை எழுதிக் கொண்டிருக்கிறேன்.
பாலின சமத்துவம், ஆண்- பெண் சமம் என்று வெறுமனே பேசிக் கொண்டிருக்கிற சமூகத்தின் நிஜ முகத்தை அப்பட்டமாய் காட்டும் வரிகள் இவை. “பொருளல்ல நான் “ என்கிற கவிதையின் மையத் கருத்தை நாம் (பெண்கள் ) நிச்சயம் உணர்ந்திருப்போம் ஒரு நாள்.
“மனசு” என்கிற கவிதையை தன்னை எப்படி பிடிக்கல என்று சொல்லலாம், தன்னை எப்படி மறுதலிக்கலாம் என்று பொங்கி அதற்காக ஆசிட் வீசிட துடிக்கும் அற்ப ஆண்களின் கயமைக்கு அர்ப்பணம்.
இப்படியாக ஒவ்வொரு கவிதையும் ஒவ்வொரு இடர்ப்பாட்டிற்காக என இனம் பிரித்து பார்க்கலாம். அந்த அளவிற்கு மிக சிறப்பாக எழுதியுள்ள இளவல் நாகநந்தினியை எத்தனை பாராட்டினாலும் தகும். வருக! வருக! இலக்கிய உலகில் நவீன அவ்வையாய். (என்னிடம் நெல்லிக்கனி இல்லையே….. உன்னிடம் தந்து நெடுநாட்கள் நீயும் உன் தமிழும் வாழ்க..வாழ்க என்று வாழ்த்திட). மனம் நிறைந்த வாழ்த்துகள் நாகநந்தினி. காத்திரமான கவிஞர் என்று பெயர் பெற்று, மேன்மேலும் பல நல்ல படைப்புகளை வெளியிட வாழ்த்துகள். அடுத்த பதிப்பிற்கு போகும் போது முன் அட்டைப் படத்தை மட்டும் இன்னும் புதுமையாக வடிவமைத்திட அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.
நூலின் பெயர் : மௌனம் துறக்கும் பெண்மை
நூல் ஆசிரியர்: நாகநந்தினி
நூல் வகை: கவிதைத் தொகுப்பு
மொத்த பக்கங்கள் : 96
விலை : ரூ. 100/-
வெளியீடு : ஓவியா பதிப்பகம், திண்டுக்கல்.
பதிப்பு : முதற் பதிப்பு – ஏப்ரல் 2022
******