உட்கார்ந்தவாறே நாற்காலியைச் சற்றே பின்னோக்கித் தள்ளி, பக்கவாட்டில் இருந்த அலமாரியில் இருந்து, ஒரு கோப்பைக் கையில் எடுத்தான் மாதவன்.
’இன்’ செய்திருந்த சட்டை முழுதுமாக வெளியே வந்து விட்டது. அவன் கேசம் நன்றாகவே கலைந்து இருந்தது. சட்டையின் மடிப்பும் கலைந்து, பேண்ட்டும் கசங்கி விட்டது. ’கேப்’ பயணத்தில் பக்கத்தில் உட்காரும் ஷைலஜா பத்து செமீ தள்ளிதான் உட்காருவாள்.
பெண்கள், அலுவலகம் முடியும் முன் ஒப்பனை அறையில் தலையை சீர்படுத்திக் கொண்டும், முகத்தைப் பொலிவாக்கிக் கொண்டும் வருவார்கள். ஆண்களும் தங்கள் உருவத்தில், உடையில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டார்கள். முடியை வாரிச் சிலுப்பிக் கொள்வதுதான் ஒரு வாகனத்தில் இருந்து இறங்கியவுடன் ஒரு இளைஞன்…. ஏன் எல்லா வயது ஆண்களும் செய்யும் முதல் காரியமாக இருக்கிறது.
மாதவனுக்கும் தன்னை அழகுபடுத்திக் கொண்டு “கேப்”பில் பயணம் செய்ய வேண்டும் என்றுதான் ஆசை. இருந்தாலும் கடைசி மணித்துளி வரை ஏதாவது வேலை இருக்கும். அதனால் அப்படியே ஓடுவான். மெல்லிய ஏ.சி எப்போதும் அலுவலக அறையை வியாபித்து இருந்தாலும், அந்த “க்ளோசப்” ஃப்ரெஷ்னெஸ் ஆபிஸ் விட்டுப் போகும் போது அவனிடம் இருக்காது.
ஆனால், திலீப் மாலை வேளையில் கூட பொலிவோடு இருப்பான். அவன் கிளம்புவதற்கு முன் முகம் கழுவி க்ரீம் போடுகிறானோ என்று கூட மாதவன் சந்தேகித்தான். அவனது இழுப்பறையில் கார்னியர் ப்ராடக்ட்ஸ் சிலது இருப்பதையும் பார்த்திருக்கிறான்.
மாதவனுக்கு திலீப்பைப் பார்த்தால் இல்லை இல்லை… நினைத்தாலே மலைப்பாக இருக்கும். இளம்புன்னகையுடன்… எந்த ஒரு அழுத்தமும் இல்லாமல்… இவனுக்கெல்லாம் பிரச்சனை என்று எதுவுமே இருக்காதோ? குறைந்த பட்சம்… ஒரு பதட்டம்… ஒரு தவிப்பு என எதுவுமே அவன் முகத்தில் இருக்காது.
இந்த ‘தேவன் & தேவன் அசோஸியேட்ஸ்” நிறுவனத்தில் வேலை செய்வது அத்தனை எளிதல்ல. தாமதமாக வருபவர்களைக் கண்காணிக்கவும் கண்டிக்கவும், எம்.டி நேரடியாகவே களம் இறங்குவார் மாதம் இருமுறை.
அநேகமாக எல்லா நாட்களுமே ஐந்து நிமிட’கிரேஸ்’ டைமில் நுழையும் திலீப், அந்த இரு தினங்கள் மட்டும் எப்படியோ முன்பே வந்து இருப்பான். அவனுக்கு முன்கூட்டியே பக்க்ஷி ஏதும் சொல்லி இருக்குமோ ? தெரியவில்லை.
ஆனால் ‘கிரேஸ்’ டைம் சமயத்தில் வந்தாலும், சாவதானமாக வருவான். பலமாக, குஷியாக எல்லோருக்கும் ‘ஹலோ’, ’ஹாய்’, ‘மார்னிங்’, ‘குட் டே’ என பலவிதமாய் தன் வரவைத் தெரிவிப்பான்.
ஒரு நாள் மாதவன் ‘கிரேஸ்’ டைம் முடிகிற சமயத்தில் வந்தான். “ரொம்ப லேட் ஆயிடுச்சு இன்னிக்கி. கேஸ் தீந்து போச்சு. சிலிண்டர் மாத்தி, டிபன் ரெடி பண்ண டைம் ஆயிடுச்சு” என்று புலம்பினான் மாதவன்.
“எதுக்கு இப்படி தன்னிலை விளக்கம் கொடுத்து கிட்டு இருக்கீங்க? ரைட் டைம் வந்தாச்சுல்ல. கூல் பேபி” என்றான் திலீப். மாதவனுக்கு மூன்று வருஷம் சர்வீஸ். திலீப் சேர்ந்தே மூன்று மாசம்தான் ஆகிறது.
’தேவன் & தேவன் அஸோசியேட்ஸ்’ பல நிறுவனங்களின் பங்கு முதலீடுகள்,கணக்கு வழக்குகள், பெருவாரியான தனிநபர்களின் பங்கு முதலீடுகள் மற்றும் நிதி மேலாண்மை கவுன்சிலிங் போன்ற வேலைகளைத் தான் செய்து வருகிறது.
வாரக்கடைசியில் லீட் மேனேஜருடன் நடக்கும் ஸ்டேடஸ் மீட்டிங்கிற்கு மாதவன் ஒரு முழு ஆண்டுத் தேர்வு அளவுக்குத் தயாராவான். மாதக்கடைசியில் சீனியர் மேனேஜர்கள், வைஸ் பிரஸிடெண்ட் எல்லோரும் நிற்க வைத்து தண்ணீர் குடிக்க வைத்து விடுவார்கள். கேள்விகள் எல்லாம் ஃபையர் ஆக இருக்கும். திருப்தி இல்லை என்றால் வேலையும் ஃபையர்தான். மாதவன் மாதக்கடைசி மீட்டிங் என்றால், பன்னிரெண்டாம் வகுப்பு மாணவன் போல் இருநூறு சதவிகித தயாரிப்புடன் தான் வருவான்.
திலீப் சேர்ந்த முதல் வாரக் கூட்டம்! புதுசு என்பதால் தனிப்பட்ட வேலை இல்லை. மூன்றாவது வாரம்தான் ஒரு எளிய வேலை. சிறிய ‘டேலி’ சரிபார்த்தலைக் கூட ஒழுங்காகச் செய்யவில்லை திலீப். மேனேஜர் சுட்டிக் காட்டிய போது, ”ஒ! ஹௌ ஐ ஸிலிப்ட்?” எனத் தோளைக் குலுக்கிக் கொண்டான். கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளவே இல்லை. மேனேஜர்களும் புதியவன் என்பதால் மென்மையாக நடந்து கொண்டார்கள்.
திலீப் எந்த வேலையையும் ஆழ்ந்து செய்யவில்லை என்பது அப்பட்டமாகத் தெரிந்தது. மாதாந்திரக் கூட்டத்திற்கு சரியாக எல்லா வேலையையும் செய்து வைக்க வேண்டும் என்று அவன் நண்பிகள் பலமுறை சொல்லியும் கூட, கூலாக சமோசா சாப்பிட்டு, டீ குடித்து, போனில் வீட்டு வேலைகள், உறவினருக்கு போன் கால் என ஏதேச்சையாகத்தான் இருந்தான். திலீப் நன்றாக மாட்டுவான் என மாதவன் எதிர்பார்த்துக் கொண்டு இருந்தான்.
”சார், எங்க அம்மா மாடியிலிருந்து தவறி விழுந்துட்டாங்க. ஐம் லீவிங்” என்று மேனஜரிடம் ஓரே வரியில் சொல்லி விட்டு அவசரமாகக் கிளம்பி விட்டான்.
“ஜி, அவரு புதுசு, ஆளும் இல்ல. வைஸ் பிரஸிடண்ட் நம்மள நோண்டி நொங்கு எடுப்பாரு. இதயும் கொஞ்சம் பட்டி டிங்கரிங் பாத்துடுங்க” என மாதவனிடம் வந்தது திலீபின் வேலை.
பட்டி டிங்கரிங்கா! இரவு முழுதும் செலவிட வேண்டியதாயிற்று மாதவனுக்கு!
”ஓடிப் போனவனுக்கு ஒன்பதாம் இடத்தில் ராஜா, அகப்பட்டு கொண்டவனுக்கு அஷ்டமத்தில் சனி” என அவன் அம்மா சொல்லும் வசனம்தான் ஞாபகத்துக்கு வந்தது மாதவனுக்கு.
“இப்படி வேலை செய்தால், ஏன் ஹேப்பி -கோ-லக்கி யாக இருக்க முடியாது? மவனே! நாளைக்கி எப்படி உன்னக் கோர்த்து விடறேன் பாரு! “ என மனதுக்குள் கொக்கரித்தான் மாதவன்.
மறுநாள் மேனஜரிடம் சொல்ல சரியான சந்தர்ப்பத்துக்காக காத்திருந்தான் மாதவன்.
ஆனால், மீட்டிங் சமயத்துக்கு முன் வந்துவிட்டான் திலீப்.
“மாசக் கடைசி மீட்டிங் ரொம்ப முக்கியம் அப்ப லீவு போடக் கூடாதுன்னு சொல்லி இருந்தீங்க. அதான் வந்துட்டேன்”
“என்ன ஈடுபாடு! பரவால்ல திலீ (செல்லமா கூப்பிடறாராம்)” என்றார் மேனஜர்.
புதிதாக வந்திருக்கிறவர் கூட நன்கு வேலை செய்திருக்கிறார் என்ற பாராட்டு கிடைத்தது மீட்டிங்கில்!
“லக்குதான் பயலுக்கு! ம்ம்… இப்படியே போயிடுமா என்ன? அடுத்த மாசம் எப்படி வேலை செய்யறான் பாப்போம்!” பொருமிக் கொண்டான் மாதவன்.
மாதவனுக்கு மட்டுமல்ல! மற்றவர்களுக்கும் இதே மனோபாவம்தான்!
திலீப் அடுத்த வந்த நாட்களிலும் ‘ரைட் டைம்’ வந்து, ‘ரைட் டைம்’ போய் விடுவான். இடைப்பட்ட நேரத்திலும் கேஷுவலாக… கூலாக ஏதோ வேலை பார்ப்பான்.
”ஒரு வேளை நமக்குத் தான் திறமை பத்தவில்லையோ? நாம கஷ்டப்பட்டு நிறைய டைம் எடுத்து செய்யற வேலையை, திலீப் கஷ்டப்படாம, குறுகிய காலத்திலேயே செய்யக் கூடிய திறமைசாலியோ?” என ஒரு நாள் நினைத்தான் மாதவன்.
அந்த சந்தேகத்தைத் தீர்த்து வைத்தார் இன்னொரு நண்பர்.
”போன மாசம் தொக்கா நீங்க மாட்டினீங்க! அவன் வொர்க்கை முடிக்க! இந்த மாசம் ஸ்வப்னாதான் அவன் வேலையைச் செய்யப் போறா! பதிலுக்கு ட்ரிபிள் சாக்கோ ஐஸ்கீரிம்… இத்தாலியன் க்யுசின் டின்னர்! “ என்றார் அருண்.
ஸ்வப்னா தயவில் இரண்டாவது மாசமும் வெற்றிகரமாக முடிந்தது. பாஸ் அதிக கேள்விகளை அவனிடம் கேட்கவில்லை என்பதும் ஒரு ஆச்சரியம்.
மூன்றாவது மாதம். வாராந்திர மீட்டிங்குகளில் அவனுக்கு டோஸ் கிடைக்க ஆரம்பித்தது. முழு வேலையையும் நம்மிடம் தள்ளி விடுவான் என்ற பயத்தில் அவனிடம் பேசுவதைக் குறைக்க ஆரம்பித்தார்கள், அதுவரை ஏமாளிகளாக அறியப்பட்டவர்கள்.
ஆனாலும் அவன் அதிர்ஷ்டக்காரன்தான்!
மாதந்தி மீட்டிங்குகளை மும்முரமாக நடத்தும் வைஸ் பிரசிடண்ட் ராமானுஜம் வெளிநாடு போகிறாராம். ஆறு மாதங்கள். அவர் இல்லை என்றால், பாக்கி சர.. புரா மேனஜர்களும் அவ்வளவு ஷார்ப்பாக இருக்க மாட்டார்கள்.
ஜனவரியிலிருந்து இழுத்துப் பிடிக்கலாம் என்று எல்லோரும் ஹாயாக இருக்கிறார்கள்.
திலீப் சாவதானமாக இயங்கிக் கொண்டிருந்தான். நல்ல நறுமணமும் நாரிமணிகளும் அவனைச் சூழ்ந்திருக்க, மாதவன் வழக்கம் போல தன் கடமைகளைச் செய்து கொண்டு இருந்தான்.
“இவ்வளவு நாள் பொறுப்பா நல்லா வேலை செஞ்சு இருக்கேன். என் பேரை நா காப்பாத்திக்க வேண்டாமா?” என்று தன்னுடனேயே விவாதித்துக் கொண்டு இருந்தான் மாதவன். இடையிடையே திலீப் பற்றிய நினைவுகளும்…
“அவனுக்கு ஒன்பாதாமிடத்தில் ராஜா இருக்கானோ? எல்லா சிக்கல்களிலுமிருந்து சுலபமா தப்பிக்கிறானே” என அங்கலாய்த்துக் கொண்டான் மாதவன்.