கனவு – ஆலியா மம்தூஹ் (ஈராக் சிறுகதை) – தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்
மொழிபெயர்ப்பு சிறுகதை | வாசகசாலை

இரவு விடுதியிலிருந்து வெளியேறியவன், படிக்கட்டில் ஒவ்வொரு படியாக இறங்கியவாறே தன்னைச் சுற்றிவர கூர்ந்து கவனித்தான். அவனைக் கடந்து சென்றவர்கள் பழைய ஆடைகளை அணிந்திருந்த அவனையும், அவனது தாடியையும் விசித்திரமாகப் பார்த்தவாறே நடந்து சென்றார்கள்.
இரவு விடுதிக்குள் யாரோ கதறியழுவதைப் போல தோன்றச் செய்த இசைக்கு மத்தியில் நடனமாடிய நடனத் தாரகையின் கவர்ச்சிகரமான அசைவுகள் அவனது சிற்றின்ப உணர்வுகளையும், இனிய கற்பனைகளையும் தூண்டியிருந்தன. அங்கு அவன் தாகமாக உணர்ந்ததால் பல குவளைகள் மதுவை அருந்தியிருந்தான். எத்தனை குவளைகள் என்பது அவனுக்கே நினைவில்லை. மேலும் மேலும் தாகத்தோடு தன்னிலையை இழந்திருந்த அவன் தள்ளாடிக் கொண்டிருந்ததோடு முணுமுணுக்கவும் தொடங்கியிருந்தான்.
அந்த இரவு விடுதியின் சூழலைக் கெடுத்தது எதுவென்று அவனுக்குத் தெரியவில்லை. அந்த இசையா? அந்த நடனத் தாரகையின் ஆடைகளா? அவள் ஆடைகளை ஒவ்வொன்றாக அவிழ்த்துப் போட்டு ஆடியதா? வாடிக்கையாளர்களா? அவனா? அல்லது மதுவா?
இரவு விடுதிகளுக்கு அவன் இதற்கு முன்பு ஒருபோதும் போனதில்லை என்பதனால் அதற்குள் இன்று என்ன நடந்தது என்பது அவனுக்கே விளங்கவில்லை. அது அவனுக்குப் போகத் தடை விதிக்கப்பட்டதும், அவன் போக அஞ்சியதும், அவன் வெறுத்ததுமான ஓர் இடமாகத்தான் எப்போதும் இருந்தது.
இரவு விடுதியை விட்டு விலகி வெகுதூரம் நடந்தவன் சகதிக் குட்டைகளினதும், குப்பைகளினதும் துர்நாற்றம் வீசும் இருண்ட தெருக்களிலும், சந்துகளிலும் நுழைந்திருந்தான். திரும்பி நடக்கப் பயம் என்ற ஒன்று மாத்திரம் இல்லாமல் இருந்திருந்தால் அவன் உடனடியாக மீண்டும் இரவு விடுதிக்கே திரும்பிப் போயிருப்பான். காரணம் இப்போது மீண்டும் அவனது தாகம் அதிகரித்திருந்தது.
வீட்டிலோ அவனது மனைவி அவனுக்காகக் கவலையோடு காத்துக் கொண்டிருப்பாள். ஆகவே அதனாலும் இந்தத் தருணத்தில் அவன் மீண்டும் இரவு விடுதிக்கு செல்லத் துணியவில்லை.
அவனது நரம்புகள் வழியாக இரத்தம் சூடாகப் பாய்ந்து கொண்டிருந்தது. அந்தச் சந்துகளிலும், நடைபாதையிலும் ஆதிக்கம் செலுத்துவது போலத் தோன்றிய நடனத் தாரகையின் உதடுகள் அழகாகவும், கவர்ச்சியாகவும் தெரிந்தன.
ஆகவேதான் இந்தத் தருணம் அவனுக்கு ஒரு கனவைப் போலத் தோன்றியது. எனவே இந்தத் தருணத்தை வீணாகக் கழிக்கவோ, நழுவ விடவோ அவன் பயந்தான்.
எப்படியோ வீட்டை நெருங்கியபோது அவன் தள்ளாடவில்லை. நடனத் தாரகையின் மேனி, தோள்கள் மற்றும் உதடுகளை மீண்டும் நினைத்துப் பார்ப்பதற்காக வேண்டி அவன் தனது கண்களை மூடிக் கொண்டு நடக்க விரும்பினான். இனிமேல் அவளை நேரில் காணவே கிடைக்காது என்பது அவனுக்குத் தெரியும்.
அவன் அந்த நடனத் தாரகையின் தேகத்தைப் பற்றி மாத்திரம் சிந்திக்கவில்லை. அவளது வாழ்க்கை எப்படியிருக்கும் என்ற யோசனையும் அவனுக்குள் ஓடியது. அவனைப் போலவே அவளுக்குள்ளும் தன்னையே சந்தேகிக்கும் கணங்கள் இருக்குமோ என்று யோசித்தான்.
இந்த யோசனை வந்தபோது அவன் இருளில் மூழ்கியிருந்த தனது வீட்டை அடைந்திருந்தான். இங்குதான் அவன் தனது அகக் கொந்தளிப்பிலிருந்து விடுதலையடையப் போகிறான்.
கதவைத் திறந்த அவனது மனைவி தனது முகத்தை மூடியிருந்த முகத் திரையை விலக்கி அவனது கண்களைக் கூர்ந்து பார்த்தாள். அவன் கவலையோடும், ஏதோ குழப்பத்தோடும் இருப்பது தெரிந்தது.
உள்ளே சென்ற அவள் தனது முகத்திரையை நீக்கி விட்டு ஒரு முந்தானையை எடுத்துத் தன்னைப் போர்த்திக் கொண்டாள். அந்த அறை ஒடுங்கியதாகவும், ஒரு சிறிய கட்டிலோடும், வெறுந்தரையோடும் காணப்பட்டது. ஜன்னல் வழியே கடுமையான குளிர்க் காற்று உள்ளே வந்துகொண்டிருந்தது.
அவன் இப்போதும் அறையின் நடுவில் நின்றுகொண்டு அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். அவளது கழுத்தையும், முகத்தையும் சுற்றியிருந்த கறுப்பு முந்தானையின் விளிம்புகளிலிருந்த பருத்தி நூல் துண்டுகள் அவளது நெற்றியில் தொங்கிக் கொண்டிருந்தன. அவற்றைக் கண்டதும் அவனுக்கு வெண்மையாகவும், சிறியவையாகவும் இருந்த அந்த நடனத் தாரகையின் பற்கள் நினைவுக்கு வந்தன.
“சாப்பிட்டாயா?”
“இல்லை. எனக்குப் பசிக்கிறது.”
அவன் அவளைக் கூர்ந்து பார்த்தான்.
“முந்தானையைத் தலையிலிருந்து எடுத்து உனது தோள்களின் மீது போடு.”
அவள் பயத்தில் நடுங்கினாள். அவளது அந்தப் பயத்தினைக் கண்டு, அவள் தன்னை நேசிப்பதை அவன் உணர்ந்தான். அவனது மனக் கிலேசம் சற்றுக் குறைந்தது.
அவள் மெதுவாக அங்கிருந்து நகர்ந்தாள். உள்ளே பாத்திரங்களின் ஒலி கேட்டது.
“மகன் எங்கே?”
“நாளை விடுமுறைதானே. அவன் எனது தாய்வீட்டிற்குத் தங்கப் போயிருக்கிறான்.”
“இங்கே வா. எனக்கு இப்போது சாப்பாடு வேண்டாம். நான் சொல்வதைக் கேள். நமக்குக் கல்யாணம் ஆன நாளிலிருந்து இப்போது வரைக்கும் உனக்குக் கிடைத்த உனது எல்லா ஆடைகளையும் நான் இப்போதே பார்க்க வேண்டும். அவற்றை ஒவ்வொன்றாக நீ அணிந்து கொள்வதை நான் பார்க்க வேண்டும்.”
அவனது குரல் அவளை அச்சுறுத்தியது. என்றாலும் அவனை நெருங்கியவள் அவனைக் கூர்ந்து கவனித்தாள். அவனது மூச்சிலிருந்தும், மூக்கிலிருந்தும், துடித்துக் கொண்டிருக்கும் மீசையிலிருந்தும் மதுவாடை வெளிப்படுவதை உணர்ந்தாள். அவனும் அவளைத் தொடாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.
“குடித்திருக்கிறீர்களா? நீங்கள் ஏன் தூங்கக் கூடாது?”
“இல்லையில்லை. நான் சந்தோஷமாக இருக்கிறேன். இந்தத் தருணத்தில் நீயும் சந்தோஷமாக இருக்க வேண்டும். நான் இப்படியே இந்தக் கட்டிலில் வீற்றிருந்து நீ உனது ஆடைகள் அனைத்தையும் அணிந்துகொள்வதைப் பார்க்கப் போகிறேன்” என்று அவனது வெறி மிகுந்த குரல் சத்தமாக ஒலித்தது.
தனது கணவனுக்கு ஏதோ உடல்நிலை சரியில்லை என்பதாகத்தான் அவள் உணர்ந்தாள். அவனது பிடிவாதமான தீர்மானங்களைத் தன்னால் மாற்றவே முடியாது என்பதை அறிந்திருந்த அவள் அவனுக்கு அடிபணியத் துணிந்தாள். கட்டிலுக்கு அடியிலிருந்த ஒரு பெரிய துணிமூட்டையை வெளியே இழுத்தெடுத்த அவள் அதை அவிழ்க்க முற்பட்டாள்.
“இங்கே கொடு. நானே உன்னுடைய உடைகளைப் பார்க்கிறேன். உனக்காக நான் தெரிவு செய்து தருகிறேன்.”
“இந்த நள்ளிரவில் என்னை எங்கேயாவது வெளியே கூட்டிக் கொண்டு போகப் போகிறீர்களா?”
“ஆமாம். கொஞ்ச நேரத்துக்குத்தான். இது உனக்கு மகிழ்ச்சியைத் தரவில்லையா?”
அவள் வெகுநேரமாக எதுவும் பேசாமல் தனது துணிகளையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். பின்னர் தனது துணிமூட்டையை அவனுக்கு முன்னால் நகர்த்தி வைத்தாள். அவனது மதுவாடை அந்த அறை முழுவதிலும் நிரம்பி அவளை மூச்சடைக்க வைத்தது.
“எனக்குப் பைத்தியம் என்று நினைக்கிறாயா?”
“ஐயோ, இல்லை. ஆண்டவன் காக்கட்டும்! ஆனால், நீங்கள் களைத்துப் போயிருக்கிறீர்கள்.”
அந்தப் பொதியிலிருந்து அவளது ஆடைகளை ஒவ்வொன்றாக வெளியே எடுக்கத் தொடங்கினான் அவன். முன்புறமாக சமையல் கறைகள் படிந்த ஓர் ஆடை, முதுகுப் புறமாகக் கிழிந்திருக்கும் ஓர் ஆடை, நிறம் மங்கிப் போன உள்ளாடைகள்தான் அதனுள்ளே இருந்தன. அவற்றைக் கண்டதும்தான் தாங்கள் எவ்வளவு வறியவர்கள் என்பதை அவன் திடீரென்று உணர்ந்தான்.
“இந்த இரண்டு ஆடைகளையும் ஒன்றன் மேல் ஒன்றாக அணிந்துகொள்” என்று கட்டளையிட்டான்.
அவள் ஓர் ஆடையை எடுத்து அணியத் தொடங்கினாள். பின்னர் அந்த அறையின் நடுவே நின்றுகொண்டிருந்த அவனை அவள் கேள்வியோடு பார்த்தாள். தொடர்ந்து தனக்கு மூச்சுத் திணறுவதைப் போல உணர்ந்தாள். ஆடைகளை வேகமாக அணிந்து கொண்டவள் மீண்டும் முந்தானையை எடுத்து தன்னைச் சுற்றி மூடிக் கொண்டாள்.
“அப்படியே இந்த அறையைச் சுற்றி வா. உனக்குப் பிடித்த ஏதாவது பாட்டைப் பாடு” என்றான்.
“நான் உங்களை வெகுவாக நேசிக்கிறேன். எனக்கு உங்களை மிகவும் பிடிக்கும். ஆனால், எனக்கு இன்று உங்களைப் பார்க்க பயமாக இருக்கிறது. உங்களுக்கு என்னதான் வேண்டும்? எனக்குத் தூக்கம் வருகிறது. நீங்களோ களைத்துப் போயிருக்கிறீர்கள்” என்றவளின் கைகளும், கால்களும் பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்தன.
“முதலில் அந்த முந்தானையைக் கழற்றி வீசு” என்ற அவனது குரல் சத்தமாக ஒலித்தது.
தொடர்ந்து மெதுவாக எழுந்து நின்றவன் அவளை நேருக்கு நேராகப் பார்த்தான். அவளது தலையை மூடியிருந்த முந்தானையைக் கழற்றி அவளது தோளில் இட்டான். பின்னர் அவளது நீண்ட கூந்தலைத் தனது விரல்களால் அளைந்தான். அது சுத்தமாகவும், பளபளப்பாகவும், மருதாணியின் வாசனையோடும் இருந்தது. உச்சியில் வகிடெடுத்து இரண்டு பின்னல்களாக ஜடை பின்னப்பட்டிருந்தது.
“சீப்பைக் கொடு.”
அவள் உடனடியாக சீப்பை எடுத்து அவனிடம் கொடுத்தாள். அவளது தோள்களைத் தாண்டி தொங்கிக் கொண்டிருந்த பின்னல்களை ஒவ்வொன்றாக அவிழ்த்தவன் அந்தச் சீப்பினால் அவளது கூந்தலை வாரி விட்டான்.
திகைப்போடு அவனைப் பார்த்துக் கொண்டிருந்த அவளது முகம் சிவந்திருந்தது. அவளது முந்தானையைக் கழற்றி தரையில் எறிந்தவன் சற்று விலகி நின்று அவளைப் பார்த்தான்.
“இப்போது இந்த அறையைச் சுற்றி மெதுவாக நடந்து வா. உனது தலைமுடி உனது முகத்தின் இரண்டு பக்கங்களிலும் விழட்டும்” என்றான்.
அவள் தயங்கி நின்று கொண்டிருந்தாள். அவனது குரல் மீண்டும் உயர்ந்து முன்பை விட சத்தமாக ஒலித்தது.
“நான் சொல்வதைச் செய்!”
அவனது அந்த உத்தரவுக்குக் கீழ்ப்படிய அவளால் முடியவில்லை. அவள் தனது முகத்தில் விழுந்திருந்த முடியை ஒதுக்கிக் கொண்டை கட்டிக் கொண்டாள். அதற்குள் அடுத்த உத்தரவும் சத்தமாக ஒலித்தது.
“இப்போது நீ அணிந்த ஆடைகளை ஒவ்வொன்றாக அவிழ்த்துப் போடு” என்றவாறே அவனே அருகில் வந்து அதை அவிழ்க்க முயன்றான்.
அவள் அவற்றைக் கழற்றியதும், அவளை அப்போதுதான் முதன்முறையாகப் பார்ப்பது போல வெறித்துப் பார்த்தவாறு நின்றுகொண்டிருந்தான். பின்னர்,
“உனது இரவாடையையும் கழற்றிப் போடு” என்றான்.
அவளோ மௌனமாக சில கணங்கள் அவனையே பயத்தோடு வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். என்னதான் அவன் அவளது கணவன் என்றாலும், அவளை வெட்கம் பிடுங்கித் தின்றது. அதை இவன் உணர மாட்டானா என்று அவளுக்குத் தோன்றியது.
அவள் தனது இரவாடையை அவிழ்க்கத் தயங்கியவாறு சிலை போல அப்படியே நின்றுகொண்டிருந்தாள். அவன் அவளை நெருங்கி வந்தான். அவள் தனது கண்களை இறுக மூடிக் கொண்டிருப்பதை அவன் கண்டான். அறையிலிருந்த வெளிச்சமோ அவனை மேலும் எரிச்சலடையச் செய்தது.
இரவு விடுதியிலோ அந்த நடனத் தாரகை மங்கலான வெளிச்சத்தில்தான் தனது தோள்களையும், நெஞ்சையும் குலுக்கிக் குலுக்கி, கால்களை அசைத்தசைத்து ஆடினாள். தனது ஆடைகளை அவிழ்த்தெறியும் முன்பு வெகுநேரமாக வாடிக்கையாளர்களையே முன்னும் பின்னுமாக சுற்றிச் சுற்றி வந்தாள் அவள்.
ஒப்பனையேதுமற்ற தனது மனைவியின் அழகிய முகம் இப்போது மேலும் அழகாகவும், வசீகரமாகவும் இருப்பதாக அவனுக்குத் தோன்றியது. அவள் இப்போதைக்கு கண்களைத் திறக்கக் கூடாது என்று அவன் விரும்பினான்.
அந்த நடனத் தாரகை ஆடிக் கொண்டிருக்கும்போதே செத்துப் போக நேர்ந்தால் அவளது உடலும் இப்படித்தான் நடுங்குமா? முதன்முதலாக அவள் தனது மார்புக் கச்சையைக் கழற்றிய பிறகும் வெகுநேரத்துக்கு வாடிக்கையாளர்களுக்கு தனது முதுகைத்தான் காட்டிக் கொண்டிருந்தாள். அவ்வேளையில் அந்த இரவு விடுதியின் அனைத்து மூலைகளிலிருந்தும் அவன் அதுவரை கேட்டேயிராத மெட்டுகளில், அவன் அறிந்தேயிராத இசைக்கருவிகளிலிருந்து எழுந்த இசைதான் பலமாக அதிர்ந்து கொண்டிருந்தது.
‘அவள் தனது கண்களை மூடிக் கொண்டிருந்த போது, அவளொரு பிணம் போலத்தான் தெரிந்தாள்’ என்று அவனுக்குத் தோன்றியது.
பின்னர் அந்த நடனத் தாரகை முன்னோக்கி நடந்தவாறே தனது ஆடைகளை ஒவ்வொன்றாக அவிழ்த்துக் கொண்டேயிருந்தாள். பல வர்ணங்களில் முக்கோணங்களையும், சதுரங்களையும், வட்டங்களையும் உருவாக்கிக் கொண்டேயிருந்த விளக்கு வெளிச்சங்கள் அவனது பார்வையை மங்கலாக்கிக் கொண்டேயிருந்தன. ஆகவே, அவனால் அவளது உடலை முழுமையாகப் பார்க்க முடியவேயில்லை. இசையோ உயர்ந்து கொண்டேயிருந்தது. தனக்குள் எரிந்து கொண்டிருக்கும் நெருப்பை எப்படி அணைப்பது என்று தெரியாமல், யாரிடமும் பேசவும் விரும்பாமல் அவ்வேளையில் அவன் திகைத்துப் போய் அந்த இரவு விடுதிக்குள் நின்று கொண்டிருந்தான். அவன், தான் அவமதிக்கப்பட்டது போலவும், ஏமாற்றப்பட்டது போலவும் உணர்ந்தான்.
அவன் தனது மனைவியை நெருங்கி அவளது இரவாடையை பலவந்தமாக அகற்ற முற்பட்டான். வேறு வழியற்று அவள் தயக்கத்துடன் அவனுக்கு அடிபணிந்தாள். அவன் அவளது இரவாடையை தலைவழியே இழுத்தெடுத்த வேளையில் அவளது கூந்தல் கலைந்ததோடு, அவளது முகத்திலும், கண்களிலும் தெரிந்த உணர்வு வெளிப்பாடுகளும் மாறியிருந்தன.
அவள் நடுங்கியவாறும், கோபத்தோடும் தனது உள்ளாடைகளோடு மாத்திரம் அவனை விட்டுத் தொலைவாகி தனியாக நின்றுகொண்டிருந்தாள். பின்னர் தரையிலிருந்த தனது ஆடைக் குவியலின் மீது அப்படியே சரிந்து விழுந்து சலனமின்றிக் கிடந்தாள்.
தொடர்ந்து, ஆடையின்றியிருக்கும் தனது உடலைக் குறித்த வேதனையோடு, வெட்கத்தையும் உணர்ந்தவள் தலைகுனிந்து தனது கண்களைத் துடைத்துக் கொண்டாள். அவளது தோரணை அவளது இக்கட்டான கையறு நிலைமையைப் பிரதிபலித்தது.
எந்த நிலைமையென்றாலும் தன்னைச் சமாதானப்படுத்திக் கொண்டு அதற்கு ஈடுகொடுத்து வாழும் ஓர் எளிய பெண் அவள். அவன் திகைத்துப் போய் நின்றுகொண்டிருந்தான்.
நடந்தவைகளும், அவனது கனவுகளும், பண்பாடுகளும் அவனது மனதில் குவிந்து அவனுக்குள் குழப்பத்தை ஏற்படுத்தியிருந்தன. அவனது வெளித் தோற்றத்தில் அவன் உள்ளுக்குள் ஏதோ கடும் வலியால் துடித்துக் கொண்டிருப்பது போலத் தெரிந்தது.
தனது தலையிலும், மார்பிலும் பலமாகக் கையால் அடித்துக் கொண்டு சத்தமாகக் கதறியழத் தொடங்கியிருந்தான் அவன்.
*****
எழுத்தாளர் பற்றிய குறிப்பு

ஈராக்கைச் சேர்ந்த எழுத்தாளரும், ஊடகவியலாளரும், நாவலாசிரியையுமான ஆலியா மம்தூஹ் 1944 ஆம் ஆண்டு பாக்தாதில் பிறந்தவர். முஸ்தன்ஸிரியா பல்கலைக்கழகத்தின் உளவியல் பட்டதாரியான இவர் பின்னர் ஊடகவியலாளராக ஈராக் பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் பணி புரிந்திருக்கிறார். தொடர்ந்து லெபனான், மொராக்கோ ஆகிய தேசங்களுக்கு புலம்பெயர்ந்த இவர் அங்கும் ஊடகவியலாளராகப் பணி புரிந்திருக்கிறார்.
தற்போது ஃபிரான்ஸில் வசித்து வரும் இவரது முதலாவது சிறுகதைத் தொகுப்பு 1973 ஆம் ஆண்டு வெளிவந்ததைத் தொடர்ந்து பல சிறுகதைத் தொகுப்புகளையும், கட்டுரைத் தொகுப்புகளையும், நாவல்களையும் எழுதி வெளியிட்டிருக்கிறார். இவரது நாவல்களில் ஒன்று நஜீப் மஹ்பூஸ் சாகித்திய விருதை வென்றதுவும், மற்றுமொரு நாவல் அரபு இலக்கியங்களுக்கான சர்வதேச புக்கர் விருதுக்குரிய நெடும்பட்டியலில் தெரிவாகியிருந்ததுவும் குறிப்பிடத்தக்கது.
**********