கார்த்தியாயினி – கன்னடத்தில்: அப்துல் ரஷீத். தமிழிற்கு: கே. நல்லதம்பி
மொழிபெயர்ப்பு சிறுகதை | வாசகசாலை

மைசூரிலிருந்து பெங்களூரு போகும் வழியில் ரயில் வேகத்தை அதிகரிக்க வலது பக்கத்தில் புதர் செடிகள் இருந்த சின்னக் குன்றொன்று தெரிந்தது. பச்சைக் குன்றின் முனைக்கு ஏறும் கற்படிகளுக்கு பூசிய வெள்ளை நிறம் வெயிலுக்கு கண்ணைப் பறித்தது. அதிகரித்த ரயில் வேகத்திற்கு குன்றின் உச்சியில் இருக்கும் கோரிகளும், அவற்றின் மீது போர்த்தியிருந்த சாதர்*-கள் (*பட்டு அல்லது அதைப் போன்ற துணிப் போர்வை) மின்னி மறைந்துகொண்டிருந்தன. நீங்கள் ஏதாவது இரவுப் பொழுதில் ரயிலில் புறப்பட்டிருந்தால் அந்த கபர்கள் அடியில் எரியும் சின்ன மண் விளக்குகளின் ஒளியும், அந்த குன்றின் கற்படிகளை ஏறும் பாதையில் எரிந்து கொண்டிருக்கும் மின்சார விளக்குகளும், அந்த விளக்கின் மங்கலான ஒளியில் நடமாடும் மனித ஜீவன்களும் மின்னி மறையும். முன்பொரு காலத்தில் அந்த தண்டவாளங்கள் மீது பெங்களூருக்கு இயங்கிக் கொண்டிருந்த நிலக்கரி புகைவண்டிகள் அங்கு வந்தடையும் போது நின்று, நின்ற அந்த புகைவண்டியின் ஓட்டுநர் அங்கே இறங்கி மலையேறி அந்த கோரியின் கீழே இருக்கும் மண் விளக்கிற்கு நல்லெண்ணெய் ஊற்றி, திரி போட்டுப் பற்றவைத்து, அங்கே படுத்திருக்கும் புனிதத் துறவியை நினைத்து கைகூப்பிய பிறகு மீண்டும் அந்த புகைவண்டி ஒலி எழுப்பிக் கொண்டே முன்னே செல்லும். நான் இதை சொல்வது இந்த காலத்திலும் ரயில் ஓட்டுனர் விளக்கிற்கு நல்லெண்ணெய் ஊற்றி திரிபோட்டு ஏற்றி அந்த முஸ்லீம் துறவியை வணங்கி முன்னால் செல்லவெண்டுமென்று வலியுறுத்துவதற்காக அல்ல.
மாறாக அந்தக் காலம் என்பது எவ்வளவு நிதானமாக இருந்தது, அந்தக் காலத்து ரயில்கள் நம் மனவேகத்தை விடவும் எவ்வளவு வேகமாக இயங்குகின்றன என்று சொல்வதற்காக.
எவ்வளவு வேகமாக ஓடும் என்றால் அந்த குன்று கடந்து இரண்டு நிமிடத்தில் ரயில் கடந்து போகும் தண்டவாளங்களின் வலது பக்கம் தெரியும் மக்கள் வசிக்கும் பெரிய சேரியொன்று கண் இமை திறந்து மூடுவதற்குள் முடிந்து விடும். பழங்காலத்து துணியாலையொன்றின் சுவர்களை இடித்துப்போட்டு எழுந்து நின்றிருக்கும் சேரி அது. அங்கே வசித்துக் கொண்டிருந்த பல மக்கள் ஒரு காலத்தில் அந்த துணியாலையில் தொழிலாளர்களாக இருந்தவர்கள். தொழிலாளர்கள் போராட்டம் செய்தோ, முதலாளி திவால் ஆகியோ சுமார் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு மூடிவிட்ட அந்த ஆலை மீண்டும் தலை தூக்கவேயில்லை. மாறாக, வேலை இழந்த தொழிலாளர்கள் குடிசைகள் தலை தூக்கியிருக்கின்றன. அந்தக் காலத்தில் சுற்றி இருந்த இடங்களிலிருந்து ஆலைக்கு உழைக்க வந்த தமிழ், மலையாளிகள் முதற்கொண்டு இங்கிருக்கும் குடகுக்காரர்கள் எல்லோரும் குடிசை வாசிகளாக தங்களுக்கு பல பத்தாண்டுகளாக வரவேண்டிய பாக்கி ஊதியம் மற்றும் இதர சலுகைகளின் மொத்தத்திற்காக இங்கே காத்துக் கிடக்கிறார்கள். இந்த விவரங்களை நான் இங்கே சொல்லிக்கொண்டிருப்பது இங்கிருக்கும் தொழிலாளர்கள் – முதலாளி இடையில் இருக்கும் மோதலை விளக்குவதற்காக அல்ல.
மாறாக, அநேகமாக இப்போதும் அந்த பெரிய சேரியில் வாழ்ந்து கொண்டிருக்கலாம் என்ற கார்த்தியாயினியை நினைத்து.
சுத்தமான வெள்ளை திரைகள் போட்ட பெரிய கண்ணாடி சன்னல்களைக் கொண்ட அந்த வேகமான ரயிலின் வசதியான இருக்கையில் தலை சாய்த்து உட்கார்ந்து வாசிக்கத் தொடங்கியவன் திகிலடைந்து தலையை அசைத்து வெளியே பார்க்கிறேன். ரயில் அப்போதே பொன் வண்ணத்தில் ஒளிரும் நெல் வயல்களைக் கடந்து ஸ்ரீரங்கபட்டண காவேரி நதியின் நீளமான பாலத்தின் மீது ஓடிக்கொண்டிருக்கிறது. நதி மீது பறக்கும் நாரைகளின் வரிசை, இறந்து போனவர்களுக்கு தர்ப்பணம் விட தூய்மையாக நதியில் இறங்கி துக்கம் அனுஷ்டித்து முடித்தவர்கள் போல மின்னலைப் போல மறைந்து போய்க்கொண்டிருக்கின்றன.
‘அங்கிள், ஒருவேளை நான் இறந்து போனால் என்னை எங்கே புதைப்பீர்கள்? அல்லது எரிப்பீர்கள்? ஒருவேளை, எரித்தால் அந்த சாம்பல் மிச்சங்களை நீங்கள் எடுத்து வருவீர்களா?’ என்று கார்த்தியாயினி கலகலவென்று சிரித்தாள்.
‘அதற்கு முன்பே நீதான் என்னை நதியில் உயிருடன் மூழ்கடித்து விடுவாய் என்று தோன்றுகிறது’ என்று நானும் கலகலத்தேன்.
மகள் வயதுப் பெண் அவள். ஆனால், பேச்சு மட்டும் அச்சு அசல் அவள் அம்மா அம்மிணி போலவே. அம்மிணி என் வயதையொத்தவள். கூட விளையாடிக் கொண்டிருந்தவள். கூட விளையாடிக்கொண்டே திடீரென்று பக்கத்து உயரமான கொய்யா மரக் கிளையொன்றில் ஏறி, ‘இப்போது நான் இங்கே இருந்து குதித்து கீழே இருக்கும் துணி துவைக்கும் கல் மீது விழுந்து தலையுடைந்து செத்தால் யார் காப்பாற்றுவார்கள்?’ என்று உரக்கச் சிரிப்பாள்.
ஆனால், மரத்திலிருந்து குதிக்காமல் கீழேயிறங்கி வந்து பேச்சில்லாமல அமைதியாக நடப்பாள். என் வயதிருந்தாலும் என்னைவிட உயரமாக இருந்தாள். அவள் அம்மா அப்பாவும் அப்படி உயரமாக இருந்த மனிதர்கள். கார்த்தியாயினியும் அதுபோலத்தான், மகள் வயதாக இருந்தாலும் என்னைவிட உயரமாக இருந்தாள். அம்மாவின் அதே கெட்ட துணிச்சல், துடுக்கு. கைக்குக் கிடைக்கும் உயரமான காட்டுப் புல்லை பிடுங்கி பற்கள் இடையே மென்றுக்கொண்டு கேட்கும் அதே கேள்விகள். அவள் கேள்விகளுக்கு அவளுக்கே உரிய பைத்தியக்கார பதில்கள்.
‘ஒருவேளை நீங்கள் என் அம்மாவின் பால்ய கால பாய் ஃப்ரெண்ட்டாக இல்லாமல் இருந்தால் என்னையே தூக்கிக்கொண்டு போயிருப்பீர்கள், இல்லையா அங்கிள்?’ என்கிறாள்.
நான் எச்சிலை விழுங்கிக்கொள்கிறேன். ‘அப்படியொன்றுமில்லை. உடம்பில் தெம்பிருந்தால், உன்னை ஆகாயத்தில் பறக்க வைத்துகொண்டு போகுமளவு காசு வைத்திருந்தால் உன்னை இப்போதே தூக்கிக்கொண்டு போயிருப்பேன் குழந்தை’ என்கிறேன்.
‘காசுக் கவலையை விடுங்க அங்கிள். கண் மூடுவதற்குள் உங்கள் முன்னால் கட்டுக்கட்டாக கொண்டு வந்து கொட்டுகிறேன். ஆனால், உடம்பில் தெம்பிருக்கிறாதா என்று முதலில் உறுதி செய்து கொள்ளுங்கள்’ அவள் இந்த கிழவனின் வயதான கையை அழுத்திக் கிள்ளுகிறாள்.
நான் மீண்டும் எச்சில் விழுங்குகிறேன். ‘அந்த விஷயத்தை விடு குழந்தை, உன் இளமைக் கதைகளைச் சொல். நான் தெம்படைகிறேன். பிறகு மற்றவை.’
‘அவள் இளம் ஆனால், வலுவான கைகளில் இருந்து என் கையை விடுவித்துக்கொள்கிறேன். கார்த்தியாயினிக்கு அகலமான உறுதியான வலுவான. கைகள் விளையாட்டு வீராங்கனை தோள்கள். அந்த வாட்டசாட்டமான உடற்கட்டு அவளுக்கு அப்பா பௌலோஸ்ஸிடமிருந்து வந்திருக்க வேண்டும். அவள் கைப்பிடியோ ராணுவ கேப்டன் கைகுலுக்கல் அழுத்தத்தை விட பலமாக இருந்தது. இது அநேகமாக அவள் செய்யும் தொழிலின் விளைவாக இருக்கலாம்.
கார்த்தியாயினி மைசூரில் புகழ்பெற்ற புறநகர் ஆயுர்வேத மசாஜ் பார்லர் ஒன்றில் மசாஜ் செய்பவளாக கடந்த ஐந்தாண்டுகளாக வேலை செய்கிறாள். கேரள அப்பியங்க மசாஜ், தாய் மசாஜ், பாலி மசாஜ், க்ரீம் மசாஜ் எல்லாவற்றிலும் கைதேர்ந்தவள். அந்த பிரபல புறநகர் யோகப்பயிற்சிக்கும், சாஸ்திரிய சங்கீதத்திற்கும், இயற்கை உணவு கடைகளுக்கும், நாடி ஜோதிடம், யுனானி, கேரள ஜோதிடம், சூஃபி, யந்திர மந்திர தந்திரம் மற்றும் இவற்றைக் கற்பிக்கும் குரு, ஹக்கீம், உஸ்தாத்களுக்கு புகழ் வாய்ந்த பகுதி.
அந்த புறநகரில், பருவமழை முடிந்து சிவராத்திரி வரை அமெரிக்கா, ஐரோப்பா, லத்தீன் அமெரிக்கா, ருஷ்யா, சீனா, ஜப்பான்களிலிருந்து கூட்டம் கூட்டமாக ஆண் பெண்கள் வருவார்கள். யோகா கற்பார்கள், சங்கீதம் கற்பார்கள், குழல் கற்பார்கள், ஆயுர்வேதம், யுனானி, சித்த மருத்துவம், இயற்கை வேளாண்மை என்னவெல்லாம் முடியுமோ அவற்றை எல்லாம் கற்பார்கள். அவர்களில் சில ஆண் பெண்கள் அயர்ந்துபோய் மசாஜை விரும்புவார்கள். கார்த்தியாயினி அப்படிப்பட்ட மசாஜ் செய்பவர்களில் ஒருத்தி. ரயில் தண்டவாளத்திற்கு அருகில் இருந்த துணி ஆலை மூடிய பிறகு அம்மா அம்மிணியை விட்டு அப்பா பௌலோஸ் இறந்து போனார். அது மாரடைப்பால் என்று மருத்துவர் சொல்லியிருந்தார். இல்லை; அது குடியால் என்று ஜனங்கள் பேசிக்கொண்டார்கள்.
‘இல்லை என் பௌலோஸ்ஸை ஆலை முதலாளிகள் மதுவில் விஷம் கலந்து கொன்றார்கள்’ என்று அம்மணி தான் இறந்து போகும்வரை அவ்வப்போது மாரடித்துக்கொண்டு அழுவாள்.
‘இல்லை; என் அப்பா இறக்க இந்த எல்லாமும் மொத்தமாகக் காரணம்’ என்று கார்த்தியாயினி சொல்லியிருந்தாள்.
‘உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் என் அப்பா பௌலோஸ் இறக்க எல்லாவற்றையும் விட முக்கிய காரணம் என் அம்மா அம்மிணி’ என்று சொல்லியிருந்தாள்.
அம்மாவின் அதிகமான காதல், அதிகமான பிடிவாதம், எல்லா போட்டிகளிலும் அப்பா வெல்ல வெண்டும் என்ற அவள் பித்துப் பிடிவாதம் அவரைக் கொன்றது’ என்று அமைதியாகச் சொல்லியிருந்தாள்.
‘நானும் அம்மாவைப் போலத்தான். யாரையாவது காதலித்தால் அன்பால் அவரைக் கொன்று விடுவேன் என்று தோன்றுகிறது. அதனால் நான் எந்த ஆணையும் காதலிக்கவில்லை’ என்று சிரித்திருந்தாள்.
‘எந்த ஆணையும் காதலிக்காத நீ, அது எப்படி பெண்ணொருத்தியின் காதலுக்காக உன்னையே நீ கொன்று கொல்கிறாய்?’ நான் கேட்டிருந்தேன்.
‘அது அன்பல்ல. அது மற்றொரு வகையான கொல்லும் விளையாட்டாக இருந்தது. அந்த விளையாட்டில் அவள் என்னைக் கொன்று விட்டாள்.’
அவள் சொன்னது அவள் ஜெர்மன் தோழியைப் பற்றி. அவள் பெயர் அநேகமாக கிறிஸ்டீனா என்று இருக்கலாம். அநேகமாக அது அவளுடைய உண்மையான பெயராக இருக்கலாம். அவள் இவளை ‘கார்த்தா’ என்று அழைப்பாள். இவள் அவளை ‘கிறிஸ்டி’ என்றே அழைத்துக் கொண்டிருந்தாள். நேரான நீண்ட கூந்தல் கொண்ட அகலக்கண் அழகி. உடம்பின் ஒரு இஞ்ச் விடாமல் பச்சை குத்தியிருந்தவள். அவள் கண், நீண்ட கூந்தல், வலது காதுக்குக் கீழே அகலமான மச்சம். இவற்றைத் தவிர அவள் எப்படியிருந்தாள் என்பதற்கு கார்த்தியாயினியிடம் வேறெந்த ஆதாரங்களும் இருக்கவில்லை. இருந்தது; அவள் தன்னைப் பற்றி கொச்சை இங்கிலீஷில் சொன்ன சில கதைகள்.
போஸ்னியா உள்நாட்டுப் போரில் செர்பியா சார்பாக வாடகை சிப்பாயாக போராடியது, அமேசான் காடுகளில் மரத்திருடர்களுக்கு எதிரான சண்டையில் பங்கேற்றது, ஒருமுறை இமய மலையேற்றத்தில் பங்கு பெற்றது; அவளுக்கு எல்லாவற்றிலும் ஆர்வம். அப்படி யோகா கற்க மைசூர் வந்திருந்தாள். ஆயுர்வேத அப்பியங்கத்திற்காக கார்த்தியாயினி அங்கே போயிருந்தாள்.
அப்படி போய்க்கொண்டிருந்தவள் ஓரிரு சந்திப்பிலேயே கார்த்தியாயினியின் காதலில் விழுந்தாள். ‘பெண்ணொருத்தி காதலிக்க ஆணாகவே இருக்க வேண்டுமென்றில்லை’ என்று சொல்லியிருந்தாள். கார்த்தியாயினுக்கும் ஏனோ அப்படியே தோன்றியது.
தொலை தூர நாடுகளிலிருந்து வந்து இவள் மசாஜ் செய்யும் கைகளுக்கு தங்கள் வெற்றுடம்பை ஒப்புவித்து படுப்பவர்களில் சிலர், ‘உன் கைகள் ஆண்கள் கைகளை விடவும் கடுசு; தேவை என்றால் பறவையின் சிறகை விடவும் மென்மையானதும், பட்டுப்போன்றதும் கூட’ என்று சொல்லியிருந்தார்கள். அப்படிச் சொன்னவர்களில் ஆண்களும் பெண்களும் இருந்தார்கள். கிறிஸ்டீனா அதையும் தாண்டிப் போய் மேலும் என் தேகத்து இடா-பிங்கலா சுஷும்னா* நாடிகள் (*இவை மூன்றும் அடிப்படை நாடிகள் அல்லது அமைப்பில் உள்ள ஆற்றல் வழிகள். முதுகுத் தண்டின் இருபுறமும் இரண்டு துளைகள் இருப்பது தெரியும். அவை அனைத்து நரம்புகளும் கடந்து செல்லும் குழாய்களைப் போல இருக்கும். இது இடா, பிங்கலா. இடது மற்றும் வலது சேனல்கள்) பாயும் பாதை நீளத்திற்கும் கார்த்தியாயினியின் கைகளைப் பிடித்துக்கொண்டு நடத்திச் சென்றிருந்தாள். மூன்றாவது சந்திப்பில், ‘என் இடத்தில் நீ படுத்துக்கொள். நான் உன் மேஸுயர் ஆகிறேன்’ என்று கார்த்தியாயினியை பஞ்சகர்ம துரோணி* கட்டிலில் (*ஆயுர்வேத மசாஜ் செய்ய பயன்படுத்தும் ஒரு வகை கட்டில்) படுக்க வைத்திருந்தாள். கார்த்தியாயினிக்கு அது புதிது. தான் இத்தனை நாள் தன் கைகளால் அந்தக் கட்டிலில் படுத்த ஆண் பெண்கள் உடம்பில் எவ்வகைக் கிளர்ச்சிகளை எழுப்பிக் கொண்டிருந்தேன் என்று அவளுக்கு அதுவரை தெரிந்திருக்கவில்லை. கார்த்தியாயினி அந்த கட்டிலிலிருந்து மேலெழுந்த போது வேறொரு பெண்ணாக இருந்தாள். கிறிஸ்டீனா அவளின் புதிய ஆசானாகியிருந்தாள். தோழியும் ஆகியிருந்தாள். ‘வாழ்க்கை என்றால் ஏதோ இருட்டு மூலையில் உட்கார்ந்து கொண்டு அழுவதல்ல’ என்று அவள் சொல்லியிருந்தாள். கார்த்தியாயினி, ‘ஆம்; உண்மை’ என்று கிறிஸ்டீனாவின் பூக்கள் பச்சை குத்திய பெருத்த மார்பின் மீது தன் மார்பை அழுத்தி வைத்து அழுதிருந்தாள். ஏனென்றால் கிறிஸ்டீனா மூன்று மாத யோகா பயிற்சியை முடித்துக் கொண்டு திரும்பிப் போக இருந்தாள். ‘அழவேண்டாம்; என்னாலும் உன்னை விட்டு வாழமுடியாது. இன்னும் மூன்றே மாதங்களில் உன்னை ஜெர்மனிக்கு அழைத்துக் கொள்வேன்’ என்று வாக்குக் கொடுத்து, அந்த இருளில் அவளைக் காதலித்து ரயில் ஏறிப் புறப்பட்டுப் போயிருந்தாள்.
அதே வேகமான இரயில். எங்கேயும் நிற்காமல் பெங்களூரு வந்து சேர்ந்து அங்கே இருந்து சென்னை சேரும் இரயில்.
கார்த்தியாயினி அவளை வழியனுப்பி வைக்க ரயில் நிலையம் வரை போயிருந்தாள். கிறிஸ்டீனா தன் கையிலிருந்த பூவேலைப்பாடு செய்த பையை இவளிடம் கொடுத்து, ‘ஜெர்மனிக்கு நான் உன்னை அழைத்துக் கொள்ளும்வரை, உன்னை நீ காதலித்துக்கொள்ள தேவையான பொருட்கள் இதில் இருக்கின்றன’ என்று எல்லோர் முன்னாலும் கார்த்தியாயினியின் உதடுகளில் முத்தமிட்டு, இதே ரயிலை ஏறி மறைந்திருந்தாள்.
அநேகமாக ரயிலின் இதே பெட்டியில் அமர்ந்து கிறிஸ்டீனா போயிருக்கலாம் என்று தோன்றியது. மூன்று ஆண்டுகளுக்கு முன் கோவிட்டிற்கும் முன்பு இதில் ஏறி, கிறிஸ்டீனா அநேகமாக இதே போன்று சன்னல் அருகே இருக்கையில் உட்கார்ந்து வேகமாக மூச்சை இழுத்துக்கொண்டிருந்திருக்கலாம் என்று தோன்றியது. என்னைப் போலவே புதிய அனுபவங்களுக்கு தவித்து இல்லாத உச்சங்களைத் தேடிக்கொண்டு இயங்கும் ஜீவன்.
தான் நுழைந்த உலகுகளில் எப்படிப்பட்ட கொந்தளிப்புகளை ஏற்படுத்திப் போய்க் கொண்டிருக்கிறாய் என்று தெரிந்திருந்தாலும் நிற்காமல் இயங்கும் ஜீவன். இப்போது உலகின் மற்றொரு உச்சத்தில் தன் தடித்த தேகத்தைச் சுமந்து கொண்டு மற்ற எதையோ வெல்ல நடந்து கொண்டிருக்கலாம். ‘அங்கிள், நான் போகப்போவதில்லை. ஆனால், மாய மந்திரம், சூனியம், ; சீகரணம் எதுவானாலும் சரி அவளை மீண்டும் என் கால்களுக்கு இடையே அழைத்துக் கொள்வேன்’ என்று கார்த்தியாயினி எங்கள் கடைசி சந்திப்பில் சொல்லியிருந்தாள்.
‘உனக்கு பைத்தியம் குழந்தை…’ என்று சொல்லி இருந்தேன்.
ரயில் பெங்களூரில் நின்று இறங்குபவர்கள் இறங்கி சென்னை பயணிகள் ஏறத் தொடங்கினார்கள். இறங்கிப் போய்க்கொண்டிருந்தவர்களில் ஏறப் போனவர்களில் எத்தனை வெளிநாட்டு முகங்கள்!
*****
பௌலோஸ் மைசூரின் அந்தக் காலத்து புகழ்வாய்ந்த கால்பந்து வீரன். வெகுதூரம்வரை கால்பந்து அபிமானிகள் அவன் பெயரைச் சொன்னால் புல்லரித்துப் போவார்கள். தங்கள் குழுவில் அவனைச் சேர்த்துக்கொள்ள ஆயிரமாயிரம் செலவு செய்வார்கள். பௌலோஸ் பத்தாம் எண் ஆட்டக்காரனாக தங்கள் குழுவில் இருந்தால் எப்படிப்பட்ட கால்பந்துப் போட்டியானாலும் வென்றுவிடலாம் என்ற நம்பிக்கையால் அவனை அழைத்துக் கொள்வார்கள்.
பௌலோஸ் அந்த நம்பிக்கையை பொய்யாக்கியதை நான் கேட்டிருக்கவில்லை. மைசூரில் அந்தக் காலத்தில் இந்த புகழ்பெற்ற துணியாலை கால்பந்து குழுவின் பத்தாவது எண் ஆட்டக்காரனாக இருந்த பௌலோஸ் ஆலை தொழிற்சங்க யூனியனின் சுறுசுறுப்பான தலைவனாகவும் இருந்தான். அந்தக் காரணத்திற்காக அவன் நாட்கணக்கில் ஆலையிலிருந்து வெளியே பெங்களூரு, கேரளா, குடகு போன்ற கால்பந்து குழுக்களில் விளையாடி காலத்தை கழித்துக் கொண்டிருந்தாலும் அவர்கள் எதுவும் சொல்லமாட்டார்கள். அப்படியாக பௌலோஸ் குடகுக்கும் வருவான். காப்பி அறுவடை காலம் முடிந்து, காப்பி பூ மலரும் இடைவெளியில் நடக்கும் எங்களூர் பிரபல போட்டியில் பௌலோஸ் குழு வெல்வது பகலைப்போலவே உறுதியாக இருந்தது. ஒருவேளை தோற்றுப்போனால் அதற்கு கண்டிப்பாக பௌலோஸ் காரணமாக இருக்கமாட்டான். அதுபோல ஒருமுறை பௌலோஸ் தோற்றபோது நானும், கார்த்தியாயினியின் அம்மாவான அம்மிணியும் எங்களூர் கால்பந்து மைதானத்தின் பக்கத்தில் செண்பக மரத்துக்குக் கீழே மழையில் நனைந்து கொண்டே நிற்க ஒரு காரணமிருந்தது.
கோடையில் விழும் காப்பி பூ மழை முழுமையாக நின்று போயிருந்தது. விளையாட்டு தொடங்கும் முன் வானில் கதிரவன் ஒளிரிக்கொண்டிருந்தான். மைதானத்தை சுற்றி இருந்த காப்பிச் செடிகள் நிறைய மலர்ந்திருந்த வெள்ளைப் பூக்களின் பரிமளம் மைதானத்தை முழுவதுமாக நிறைத்துக்கொண்டு விளையாடுபவர்களையும் பார்ப்பவர்களையும் தடவிக்கொண்டே அங்கே சுற்றிக்கொண்டிருந்தது. மைதான பசும்புல் இதழ்கள் மீது சூரியன் ஒளிரிக் கொண்டிருந்தான். பள்ளி விட்ட பிறகு வீட்டிற்குப் போகாமல் அம்மணியுடன் விளையாட்டைப் பார்க்க மைதானத்தில் தங்கிவிட்டேன். அவளுக்கு பௌலோஸ் பித்து. கண்ணால் வற்புறுத்தி ஆட்டத்தைப் பார்க்க என்னையும் தங்க வைத்துவிட்டாள்.
ஆட்டம் வேகம் எடுக்கும் போது சன்னமாக மழை பொழியத் தொடங்கி பசும் புல் இதழ்களின் மீதான துளிகள் மீது சூரியன் ஒளிரத் தொடங்கினான். ஆட்டக்காரர்கள் ஈரப்புற்கள் மீது கால் வைத்து வழுக்கி விழுந்தார்கள். ஆட்டத்து கடைசி பெனால்டி உதையில் தன் குழுவை வெற்றியடையச் செய்ய வேண்டிய பௌலோஸ் தந்திரமாக உதைக்கப் போய் தானும் வழுக்கி விழுந்து, தன் குழுவை தோல்விக்கு ஆளாக்கி அவமானத்தை சகித்துக்கொள்ள முடியாமல் தலையில் அடித்துக் கொண்டு அனாமத்தாக விழுந்து தன் முகத்தில் சகதியை பூசிக்கொண்டு தேம்பத் தொடங்கினான்.
அம்மணி தன் முழங்கையை என் விலாவில் இடித்து, ‘பௌலோஸ் பாவம்’ என்று சொல்லியிருந்தாள்.
‘என்ன பாவம்? எப்போதும் அவனே வெல்ல வேண்டுமா? முதலில் பௌலோஸ் பித்தை விடு’ அவன் தோற்ற மகிழ்ச்சியில் சொல்லியிருந்தேன்.
‘பன்னி. உனக்கு வயிற்றெரிச்சல்’ அவள் விலாவில் இன்னொரு முறை வேகமாக இடித்தாள்.
‘பன்னி’ என்றதுதான் அவள் என்னுடன் பேசிய கடைசி வார்த்தை. அவளுடன் மூன்று ஆண்டுகள் பேசுவதை விட்டிருந்தேன். பிறகு அவளுடன் பேசவேண்டுமென்ற போது அவள் மிக உயரமாக வளர்ந்து விட்டாள். மிகவும் மாற்றமடைந்திருந்தாள். நான்காம் ஆண்டு அவள் பௌலோஸுடன் மைசூருக்கு ஓடிப்போயிருந்தாள்.
*****
ஓர் ஆண்டுக்கு முன்பு, இதே போன்ற ஒரு வியாழக்கிழமையின் பின்மதியம், இதே போன்ற ஒரு வேகமான ரயில், விட்ட அம்பு போல ஓடிக்கொண்டிருந்த போது, அந்தப் பசுமையான குன்றின் இன்னொரு பக்கத்து காட்டுப்புல்லின் ஏற்றப் பாதையில் நடந்துகொண்டே கார்த்தியாயினி அழுது கொண்டிருந்தாள். வாழ்க்கையில் நொந்து போனவர்கள், துணிச்சல் இழந்தவர்கள், ஏமாற்றமடைந்தவர்கள், தலைவிதி கெட்டவர்கள், பல இடங்களிலிருந்து வந்தவர்கள் அந்த பசுமையான குன்றின் கற்படிகளை ஏறிக்கொண்டு புனிதத்துறவியின் சமாதியை நோக்கிப் போய்க் கொண்டிருந்தார்கள். புர்கா போட்ட பெண்கள், தலை மீது ஒப்புக்கு முந்தானையை இழுத்துக் கொண்டவர்கள், சிரத்தின் மீது துண்டு, தொப்பி போட்ட ஆண்கள், ஊனமுற்றவர்கள், நோயாளிகள், அழகிகளான கண்ணைப்பறிக்கும் பெருத்த முலைப் பெண்கள், ஆணும் அல்லாத பெண்ணும் அல்லாத உளைச்சல் கண்களின் அரவாணிகள், வேசிப்பெண்கள், துணைவன் நடத்தையால் நொந்து வந்த அம்மாக்கள், ஆண்கள். அவர்களில் சிலர் புனிததுறவி சமாதியின் அருகே வேப்பமரத்து கெட்டியான அடியில் தலையை முட்டிக்கொண்டு அழுதுகொண்டிருந்தார்கள். ஒவ்வொருவர் கண்ணிலும் ஒரு பிரார்த்தனை, ஒரு ரோஷம், ஒரு வேதனை, ஒரு வாடிய சிரிப்பு, ஒரு அறைகூவல். சிலர் புனிததுறவி சமாதி முன் பரந்த பிராங்கணத்தில் எதெதையோ அரற்றிக்கொண்டு உருண்டு கொண்டிருந்தார்கள். எரியும் விளக்குகளிலிருந்து வெளியேறும் ஆமணக்கு எண்ணெயின் தீய்ந்த வாசம், தூபம், சாம்பிராணி, ஊதுவத்தி புகைகளிலிருந்து வெளிவரும் மரண வீட்டுத் தீட்டைப் போன்ற வாசம். அதே மரத்தில் சாய்ந்து உட்கார்ந்திருந்த கூர்மையான கண்களின் ஃபகீர் ஒருவன் கையில் மயிலிறகுக்கொத்துடன் அவர்கள் தலையைத் தடவி எதையோ முணுமுணுத்து ஆசீர்வதிப்பான்.
கார்த்தியாயினி என் தோளோடு தோள் உரசிக்கொண்டு ஏற்றப்பாதையில் குன்றை எறிக்கொண்டிருந்தாள். மிதமாக வியர்த்திருந்த அவள் முகம், அவள் முகத்தின் மீது விழும் குளிர்காலத்து பின்மாலையின் கூர்மையான சூரிய கிரணங்கள். அவளிடமிருந்து கேட்கும் மெல்லிய மேல்மூச்சு ஒலி.
‘இதெல்லாம் தேவையா குழந்தை?’ என்று சொல்லியிருந்தேன்.
‘தேவை’ என்பதைப் போல கண் நிறைந்து தலையசைத்தாள்.
‘கிறிஸ்டீனா உனக்கு மறுபடி கிடைக்கமாட்டாள் என்று தெரிந்திருந்தும்…’
‘கிடைக்காமல் எங்கே போவாள் அவள்’ கார்த்தியாயினி தன் பரந்த தோளை குலுக்கி படபடவேண்டு ஓடி புனிதனின் சமாதிக்கு எதிரில் இருந்த பிராங்கணத்தை சென்றடைந்தாள்.
பிராங்கணத்திற்கு வெளியே நின்றுகொண்டு வானைப் பார்க்கத் தொடங்கினாள். தொலைவில் தெரியும் மைசூர் மகாராஜாவின் கட்டடங்களின் குவியல். அருகிலேயே தெரியும் ரயில் நிலையத்தில் இறங்கும் வெயிலில் வரிசையாக நின்றிருக்கும் ரயில் பெட்டிகள். நடமாடும் மனிதப்புள்ளிகள்.
கார்த்தியாயினி மார்பின் மீது வீசியிருந்த முக்காட்டுத் துணியை முடிக்கும் இழுத்துவிட்டு புனிதத் துறவி எதிரில் பிராங்கணத்தில் பத்மாசனத்தில் அமர்ந்து தலையை அசைத்துக்கொண்டு கண்மூடி வேண்டிக் கொண்டிருந்தாள். இளம் பிராயத்தில் போதையேற்றும் நிறைந்த தேகத்து பித்துப் பெண். வேண்டுதல் பலிக்குமென்பது போல தலையை வட்டமாக திருப்பிக் கொண்டு, இரண்டு கரங்களையும் வானை நோக்கி ஏந்திக்கொண்டு வீணாக வழிபட்டுக் கொண்டிருந்தாள். அவளைப் போலவே அந்த பிராங்கணத்தில் பல காரணங்களுக்காக கூடியிருந்தவர்கள் அதுபோலவே புனிதனின் முன் மதி இழந்தவர்களைப் போல வேண்டிக் கொண்டிருந்தார்கள். அவர்களின் வேண்டுதல் சத்தத்துக்கு இடையே புனிததுறவியின் சமாதிக்கு அருகே சின்ன வழிபாட்டுக் கூடத்தில் மைக்கிலிருந்து மாலை நமாஸுக்கு அழைப்பு கூவல் கேட்கத் தொடங்கியது. வேண்டிக்கொண்டிருந்தவர்கள் தங்கள் வழிபாட்டை நிறுத்தி அமைதியாக உட்கார்ந்து கொண்டார்கள்.
அந்நிய மனதுடன் குன்றின் இறக்குப் பாதையில் சிறிது நடந்து பாறையொன்றின் மீது அமர்ந்து கொண்டேன். பாறைக்கு கீழே ஒற்றையடிப்பாதையில் செடிகள் மீது பறவைகளின் ஒலி. ஓரிரு ஆடுகள் காலை மேலே தூக்கி புதர் செடிகளின் இலைகளை மேய்ந்து கொண்டிருந்தன. வானிற்கு வெளியே இறங்கிக்கொண்டிருந்த சூரியன். ஒரு சிகரெட் பற்றவைத்து உதட்டில் வைத்துக் கொண்டேன்.
பின்னாலிருந்து வந்த கார்த்தியாயினி, ‘அங்கிள், போலாமா?’ என்றாள். எழுந்து அவள் பின்னால் நடக்கத் தொடங்கினேன். நாங்கள் இருவரும் ரயில் தண்டவாளங்களின் பக்கம் ஒற்றையடிப்பாதையில் நடந்து கொண்டிருந்தோம். புனிதத் துறவிக்கு பிரார்த்தனை செலுத்தி முடித்து விட்டு தன் வீட்டிற்கு அழைத்துச் செல்கிறேன் என்று வாக்களித்திருந்தாள். அப்படியே நடந்து தண்ணீர் நிறைந்த அழுக்கு சாக்கடைகளைத் தாண்டி, ஆலையின் இடிந்த தடுப்பு சுவர்களைக் கடந்து சேரிக்குள் நுழைந்தோம். எல்லா இடத்திலும் மனித மலத்தின் துர்நாற்றம். குடிசைகள் முன் மங்கலான ஒளியில் பந்து விளையாடிக்கொண்டிருந்த பிள்ளைகள், மூங்கில் கதவுகள் முன் பெண் பிள்ளைகளை உட்கார வைத்துக்கொண்டு ஜடை பின்னும் அம்மாக்கள், கெட்டு நின்ற ஆலையின் முறிந்து போன எந்திரங்கள், இரும்பு தூலங்கள், துருப்பிடித்த இரும்பு பொருட்களின் குவியல் மீது பரவிக்கிடந்து தலையசைக்கும் காட்டுப்பூக்கள், வடவிருட்சம் போல நிழல் தரும் மரங்கள் மீது பறந்து வந்து கூடு சேரும் பச்சைக்கிளிகளின் தலை வெடிக்கும் கூட்டுக் கத்தல்.
கார்த்தியாயினி அந்த சத்தங்களுக்கு நடுவில் சத்தமில்லாமல் நடந்து கொண்டிருந்தவள் வலது பக்கம் திரும்பி குடிசைகள் நடுவில் சிறு சந்தொன்றில் நுழைந்து கழுத்தை திருப்பி என் பக்கம் பார்த்தாள். நான் அவள் பின்னால் நடந்து கொண்டிருந்தேன். சந்தின் திருப்பத்தில் கலைந்து நின்றிருந்த பந்தலுக்கு கீழே கோழிக்கறிக் கடை. வெட்டி விற்று வீசி எரிந்த கோழிக் கழிசல்களுக்காக பல தெரு நாய்கள் ஆசையால் கண் விரித்து நின்றிருந்தன. திருப்பத்தின் மூலையில் சன்னல் கதவுகளை மூடிக்கொண்டு அவள் வசிக்குமிடம் நின்றிருந்தது. அவள் வசிக்குமிடத்தின் பெரிய பூட்டைத் திறந்து உள்ளே போய் சன்னல் திரைகளை விலக்கினாள். இருட்டு அறைக்குள் வெளி வெளிச்சம் புகுந்த வேகத்திற்கு கண்கள் எதிர்பாராமல் சிறுத்து மெல்ல அறையில் இருப்பது ஒன்றொன்றாக தெளிவாகத் தொடங்கியது.
பூப்பின்னல் போட்ட வெள்ளை விரிப்பு விரித்திருந்த டீபாய் மீது அவள் அப்பா அம்மா படம் சிரித்துக் கொண்டிருந்தது. கணவனின் தோள்களில் சேர்ந்து கொண்டு சிரிக்கும் அம்மணி. இன்னொரு போட்டோவில் பௌலோஸ் ஆளுயர கால்பந்து கோப்பையுடன் பத்தாவது எண் ஜெர்ஸி அணிந்து நின்றிருக்க, பின் சுவரில் அன்னை வேளாங்கண்ணி படம், கொல்லூர் மூகாம்பிக்கை படம். கார்த்தியாயினி குழந்தையாக இருந்ததிலிருந்து பெரியவளாகும் வரையான போட்டோக்கள் சின்னச் சின்ன சட்டங்களில் சுவர் நிறைய ஆணியில் தொங்கிக்கொண்டிருந்தன. ஆளுயர பழைய நிலைக்கண்ணாடியொன்றின் அருகே நீளமான சட்டம். அதற்குள் மொக்கு ஜடை போட்டுக்கொண்டு அழகாக நின்றிருக்கும் கார்த்தியாயினி. அது அவள் பெரியவளான போது ஸ்டுடியோவில் எடுத்துக் கொண்ட போட்டோ.
‘உன் அம்மா அம்மணியும் இந்த வயதில் இப்படித்தான் தெரிந்தாள்’ என்றேன். அவள் செயற்கையாகச் சிரித்தாள்.
‘இதைப் பார்த்தீர்களா?’ படுக்கை அறைக்கு அழைத்துப் போய் அறையின் டியூப் லைட் ‘பள்’ என்று ஒளிரப் போட்டு கதவைச் சாத்தினாள். கதவுக்குப் பின்னால் பெரிய போஸ்டர் போல விசாலமான படம். பின்னணியில் அமைதியான நீலக்கடல். நீண்டு பரவிக் கிடந்த கடற்கரை மணல். உடல் திறந்து படுத்திருந்த வெளிநாட்டுப் பயணிகள். அவர்களுக்கு நடுவில் தொடையைக் கொஞ்சம் தூக்கி போஸ் கொடுத்திருக்கும் கார்த்தியாயினி மற்றொருவள் வெள்ளைக்காரப் பெண். அவள்தான் கிறிஸ்டீனாவாக இருக்கலாம் என்று நினைத்தேன். உடம்பின் ஒரு இஞ்ச் கூட விடாமல் பச்சை குத்திக்கொண்ட விலங்கு, பறவை, ஊர்வன, பூ, நட்சத்திரங்கள். அவள் பெரிய மார்பகங்கள் மீது தலை வைத்து படுத்து தானும் போஸ் கொடுத்த கார்த்தியாயினி.
அவளும் கடல் பின்னணியில் மிளிரும் மணல் குவியல் மீது அதிசயமான அழகியாக ஒளிரிக்கொண்டிருந்தாள். ‘அவள்தான் என் கிறிஸ்டீனா. திரும்பிப் போகும் முன் கோகர்ணா கடற்கரைக்கு அழைத்துக் கொண்டு போயிருந்தாள்’ படுக்கையில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தவன் அருகில் அவளும் வந்து உட்கார்ந்து கொண்டாள். இருள் நிறைந்திருந்த மங்கலான அறை. சிலந்தி வலைகளுக்கு நடுவில் எரிந்து கொண்டிருந்த நீல நிற டியூப் லைட் ஒளி. கம்பியொன்றின் மீது சீர்குலைந்து தொங்கிக்கொண்டிருந்த கார்த்தியாயினியின் ஆடைகள், உள்ளாடைகள். அரைகுறையாக கதவு திறந்துகொண்டு அந்த சின்ன அறையின் மூலையில் அனாதையாக நின்று கொண்டிருந்த பழைய இரும்பு அலமாரி.
வெளியே இருந்து நகத்தால் யாரோ கதவை கீறும் சத்தம்.
‘ஓ பம்மி…’ கார்த்தியாயினி கதவைத் திறந்தாள். பழுப்பு நிற குட்டி பாமரேனியன் நாய் உள்ளே வந்து காரத்தியாயினி மீது தாவி அவள் முகத்தை வேகமாக நக்கத் தொடங்கியது. அவளும் எல்லாம் மறந்து பம்மியை கட்டிக்கொண்டு கொஞ்சினாள்.
‘பம்மி, அங்கிள் வந்திருக்கிறார். என் அம்மாவின் பாய் ஃப்ரெண்ட். ஷேக் ஹேன்ட் செய்’ என்று என் முகத்தருகே கொண்டு வந்தாள். பம்மி அறிமுகமில்லாதவனைப் பார்த்து திகைத்து கார்த்தியாயினியின் கையிலிருந்து தாவி தரை மீது படுத்துக்கொண்டு என் முகத்தை பார்க்கத் தொடங்கியது.
‘அங்கிள், இதைப் பாருங்கள்’ கார்த்தியாயினி கொஞ்சமாகத் திறந்திருந்த அலமாரி கதவை இன்னமும் திறந்தாள். அது கிரீச்சிட்டுக் கொண்டு பெரிதாக வாய் திறந்தது. அவள் அதன் மூலைக்கு கை விட்டு பூப்பின்னல் போட்ட கைப்பையொன்றை வெளியே எடுத்தாள்.
‘கிறிஸ்டீ கடைசியாக இரயில் ஏறிப்போகும்போது கொடுத்த பை’ அவள் தனக்குத் தானே தனிமொழியாக சொன்னாள். அருகில் வந்து அமர்ந்து கொண்டாள். ‘இதற்குள் என்னவெல்லாம் இருக்கிறது பாருங்கள்’ பையிலிருந்து சின்ன சுருக்குப்பை ஒன்றை எடுத்து படுக்கை மீது கொட்டினாள். சின்னச்சின்ன பிளாஸ்டிக் பொட்டணங்கள். அநேகமாக கஞ்சாயிலை பொட்டணங்களாக இருக்கலாம். அதன் தீயவாடை அங்கே பரவத் தொடங்கியது. சிகரெட் சுருட்டும் வெள்ளைத்தாள் பொட்டணங்கள், புகைக்கும் குழாய் பொட்டணங்கள், உதட்டு சாய, நகச்சாய வண்ணவண்ண பேக்கட்டுகள்.
‘அங்கிள், இதை நீங்கள் பார்த்தே ஆகவேண்டும். அவள் பூப்பின்னல் போட்ட கைப்பையிலிருந்து இன்னொரு சின்ன பெட்டியை எடுத்து படுக்கை மீது கொட்டினாள். ரப்பர் ஆண் உறுப்பொன்று படுக்கை மீது அமைதியாக விழுந்து கிடந்தது.
கடினமான தசைகள் கொண்ட, பார்க்க உண்மையான ஆண் உறுப்பு அல்லவே அல்ல என்று தெரியாத பாலியல் விளையாட்டுப் பொருள்.
அதன் மற்றொரு நுனியில் தொங்கிக்கொண்டிருக்கும் அண்டங்கள். ‘அங்கிள், இதுவரை நீங்கள் பார்த்தே இருக்காத பொருள்’ அவள் நக்கல் குரலில் சிரித்து அதை படுக்கையிலிருந்து மெதுவாக எடுத்து, ‘தயவு செய்து இந்த பிரசாதத்தை சுவீகரிக்கவும்’ என்று என் கையில் கொடுத்தாள். அந்த ரப்பர் ஆண் உறுப்பு குளிர்ச்சியாக என் தணிந்த கைக்குள் மரத்துப்போன பெரியதொரு மண்புழுவைப் போல அமர்ந்திருந்தது.
‘இன்பத்தை அனுபவிக்க உண்மையான ஆண்கள் தேவை இல்லை என்று எனக்கு கிறிஸ்டி இதை கொடுத்துப் போனாள்’ கார்த்தியாயினி நெருங்கி உட்கார்ந்து அந்த கையைக் கிள்ளிச் சிரித்தாள்.
‘வெட்கங்கெட்ட பெண் நீ’ அவள் கையை உதறினேன். உதறிய வேகத்திற்கு அந்த செயற்கை ஆணுறுப்பு கையிலிருந்து நழுவியது. நழுவிய அந்த உறுப்பை பாமேரேனியன் பம்மி தவ்வி வந்து கவ்விக்கொண்டது. பாமரேனியன் வாயிலிருந்த ஆணுறுப்பை தெரு நாய்கள் கவ்வி இழுத்துக் கொண்டிருந்தன.
*****
விழிப்பு வந்து கண் திறந்தால் வேகமான ரயில் ஏதோ அறியாத உலகில் தானாக ஓடிக்கொண்டிருந்தது. ஏதோ பட்டிணத்து தெரு விளக்குகள், இயங்கிக்கொண்டிருந்த வாகனங்களின் குறுக்கு நெடுக்கான ஒளிகள். சிறிய சிரிப்புடன் விழிப்பு வந்தது. வாயில் ஏதோ கசப்பு. போத்தாலிலிருந்து தண்ணீர் குடித்தேன். எதிர் இருக்கையில் அமர்ந்திருந்தவள் சிறு வயது பக்கத்து இளைஞனின் மார்பில் சாய்ந்து கொண்டு உறங்கிப் போயிருந்தாள். அவள் உதடுகளில் ஏதோ கற்பனை செய்ய முடியாத சிரிப்பு. அநேகமாக தோழனாக இருக்கலாம். ஏதோ கனவு கண்டுகொண்டிருந்தவள் விழித்து வாய் மூடி மீண்டும் தூங்கிப்போனாள். அவன் கல் போல உட்கார்ந்தே இருந்தான்.
சிரிப்பு வந்தது. நாய்களிடம் சிக்கிய ஆணுறுப்பு! ஓடிக்கொண்டிருந்த ரயிலில் அதே காட்சிகள் ரீல் போல மீண்டும் மீண்டும் வந்து போயிருந்தன.
சேரிப்பிள்ளைகள், ஜனங்கள் அதை உண்மையான உறுப்பென்றே நினைத்திருந்தார்கள். வெறுத்துப் போன யாரோ ஒரு பெண் தன் பணிவற்ற கணவனுக்கு தகுந்த தண்டனை கொடுத்திருக்கிறாள் என்று நக்கல் பேசி பயத்தின் நடுவிலும் சிரித்தார்கள்.
‘உங்களுக்கு வேறு வேலை இல்லை. எல்லோரும் இங்கே இருந்து போங்கள்’ கார்த்தியாயினி அவர்களை மிரட்டி கதவை மூடப் போனாள்.
‘கதவைச் சாத்த வேண்டாம். எனக்கும் போகும் நேரமானது’ உணர்ச்சியின்றி நான் வெளியே வந்து தெருவில் இறங்கினேன். அங்கே இருட்டி சேரித்தெரு விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன.
******
ரயில் வேகத்தை அதிகரித்துக்கொண்டு ஓடியது. சென்னை வந்தடைய இன்னும் அரை மணி நேரம் இருக்கிறது என்று கைபேசி கடியாரம் சொல்லிக் கொண்டிருந்தது. இரவு எங்காவது மலிவான விடுதியில் தங்கி காலை எழுந்து பசந்த் நகரில் இருக்கும் போதைபொருள் கட்டுப்பாடு அலுவலகத்திற்கு போகவேண்டியிருந்தது. அந்த குற்றத்தில் கார்த்தியாயினி தவறு எதுவும் இல்லை என்று அவர்களுக்கு தெளிவுபடுத்த வேண்டி இருந்தது. ஆறு மாதங்களுக்கு முன்பு அவளை சென்னை போலீஸ்காரர்கள் பிடித்துக் கொண்டு போன செய்தியும் அறிவுக்கு எட்டியிருக்கவில்லை.
கிறிஸ்டியை தேடிக்கொண்டு போயிருக்கலாம் என்று நினைத்தேன். சென்னை சிறையிலிருந்து யாரிடமிருந்தோ அவள் ஃபோன் செய்ய வைத்திருந்தாள். ‘அங்கிள், எனக்கு இப்போது இருப்பது நீங்கள் மட்டும் தான்’ என்று சொல்லியிருந்தாள். மற்ற எதையும் யோசிக்காமல் நான் விரைவு ரயிலில் ஏறினேன்.
*********
*******
எழுத்தாளர் குறிப்பு:

1965 பிப்ரவரி 28 இல் சுண்டிகொப்பா, குடகு, கர்நாடகாவில் பிறந்தவர். பத்திரிகை துறையிலும், ஆங்கில இலக்கியத்திலும் மைசூர் பல்கலைக்கழக்கத்திலிருந்து பட்டம் பெற்றவர்.
அகில இந்தியா ரேடியோவில் நிகழ்ச்சி இயக்குனராக பணிபுரிகிறார். ‘கென்ட சம்பிகே’, ‘மைசூர் போஸ்ட்’ என்ற மின்னிதழ்களை நடத்தி வருகிறார்.
இவருடைய இரு புதினங்கள், நான்கு சிறுகதைத் தொகுப்புகள், நான்கு கட்டுரைத் தொகுப்புகள் இரண்டு கவிதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன.
‘காரன்வாலீஸ், குவீன் எலிசபத் II’ நூலை கன்னடத்திற்கு மொழிபெயர்த்துள்ளார்.
சாகித்திய அகாதமி, கர்நாடக சாகித்திய அகாதமி விருதுகளைப் பெற்றுள்ளார்.
கன்னடத்தில் மிகச் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர்.
****
மொழிபெயர்ப்பாளர் குறிப்பு:
கே. நல்லதம்பி – பிறப்பு 1949 மைசூரில். படிப்பு B.A.வரை. ஒரு தனியார் கம்பெனியில் வியாபாரப் பிரிவின் அகில இந்திய மேலாளராக 35 வருடங்கள் வேலை பார்த்து, ஓய்வுபெற்றவர். நிழற்படக் கலையில் ஆர்வமிக்கவர். பல உலக மற்றும் தேசிய கண்காட்சிகளில் இவரது நிழற்படங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு, பல பரிசுகளும் பெற்றிருக்கின்றன. இந்திய லலித கலா அகாடெமியில் இவரது 6 புகைப்படங்கள் நிரந்தர அருங்காட்சியகத்தில் இருக்கிறது. கன்னடத்திலிருந்து தமிழுக்கும், தமிழிலிருந்து கன்னடத்திற்கும் கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் மொழிபெயர்த்து, பல கன்னட மற்றும் தமிழ் இதழ்களிலும் வெளியாகியுள்ளன.
கன்னடத்திலிருந்து தமிழிற்கு சுமார் 25 நூல்களும் தமிழிலிருந்து கன்னடத்திற்கு 15 நூல்கலும், சுயமாக கன்னடத்தில் ஒரு கவிதைத் தொகுப்பும், தமிழிலும் கன்னடத்திலும் ஒவ்வொரு சிறுகதைத் தொகுப்பும் வெளியாகியுள்ளது. இவர் சிறுகதைத் தொகுப்பு தெலுங்கில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
சாகித்திய அகாதமி விருது, குவெம்பு பாஷா பாரதி ‘கௌரவ விருது’ போன்ற பல விருதுகளை பெற்றிருக்கிறார்.
தற்போது பெங்களூரில் வசிக்கிறார்.
********