
கிழக்கு வட்ட வெளிச்சம் கண் கூசச் செய்துகொண்டிருந்தது. மண்டபத்தின் கால்களை முக்கியிருந்தது மழை வெள்ளம். இரண்டு வாரங்களாக அடித்துப் பெய்த மழையின் சேறு இன்னும் காய்ந்திருக்கவில்லை. ஆற்று நீரோட்டமே செங்கமலம் பூசியது போலத்தானிருந்தது. எப்படா என்று காத்திருந்து படித்துறைக்கு வந்து சேர்ந்தவர்கள் ஒவ்வொருத்தருக்கும் அவரவர்களின் உடுதுணிகளைத் துவைக்க இடம் பிடிக்கவும், குளிக்கத் தடம் தேடவுமே நேரம் போதுமானதாய் இருந்தது. எல்லாபேரையும் நின்று குளிப்பாட்டி, தன் கடன் போல அசைந்து சென்று கொண்டிருந்தது தாமிரபரணி ஆறு.
மந்திரமூர்த்தி இன்னும் அந்தப் பக்கம் வந்த மாதிரி தெரியவில்லை. ‘குறுக்குத்துறை முருகனே குளிச்சு முழுக்காட்டி கண்ணசரப் போயிருப்பார். இந்தக் கட்டையனுக்கு என்ன கேடு…’ என்று அவனை வைதுகொண்டே படித்துறைக்குப் பக்கம் வந்து சேர்ந்திருந்தார் ஆறுமுக நாடார். ஆற்றில் அவருக்குத் தெரிந்த பழைய முகமாக ஏகாலி சங்கரன் மட்டும் தானிருந்தார். விடிகாலையிலேயே வெளுப்புகளை அடித்து முடித்து, கஞ்சி குடிப்பதற்காக புல் தரையில் உட்கார்ந்திருந்தவரின் கிட்டே போய் நின்றார் ஆறுமுகம்.
“ஏ சங்கரா, இந்த மந்திரம் பயலப் பார்த்தியாடா…?”
“ஏட்டைய்யா, அவனுக்கா வேண்டியா இம்முட்டு தூரம் வாரீங்க…”
“அந்தப் பரதேசி, புள்ளைக்குச் சோமில்லன்னு கைமாத்தா ஒரு ஆயர்ரூவா தாங்கன்னு வேங்கிட்டுப் போனான்லா. ரெண்டு மாசமாச்சி, நானும் கேக்க மாச்சப்பட்டு லூசுல விட்டுட்டேன். இப்பக் கண்ணுலே ஆப்படாம நழுவிட்டு கெடக்கான். சரி, ஆத்துக்கு வருவாம், அவங்கிட்ட ஷேவிங்கப் போட்டு காசையும் கேட்டுட்டுப் போலாம்னு பாத்தேன். தூத்துப் போட்ட மாதிரி கெடக்கு எடம். பய தொழிலுக்கே வாரதில்லயோ…”
“வந்தா உண்டு. முன்னமாரி இல்லல்லா. இன்னைக்கு வேற தேரோட்டம். அதான் டவுனுக்குள்ள சலூன் கடை ஆளுங்களுக்கு கையாள் பத்தலன்னு போயிருப்பான். போலீஸ்காரவரு ஒங்க கண்ணுலயே ஆப்படலன்னா, மாறி எங்க கண்ணுல ஆப்புடுவானா?”
“அதாஞ்சரி. சிவ சிவா… தண்ணி என்னா குளுரு குளுருது. இங்க கசம் ஏதுமில்லிய?”
“மண்ணுதான். துணுஞ்சி எறங்குங்க”
“சப்பா என்ன இந்தக் கடி கடிக்கி, மீனுவ. கொஞ்சம் நாள் படித்துறை பக்கம் வரலன்னதும் வெளியூர்க்காரன்னு நினைச்சிக்கிட்டுவளா…”
“பார்த்து ஆழத்துக்குப் போய்டாதிய.. அங்கன இழுப்பு… பெறவு அத்தத்துல கொண்டுபோய் விட்ரும்”
“இங்கன எங்கனக் கூடில அத்தம் இருக்கு…”
“அதெல்லாம் மானங்கண்ணியமா மண்ணள்ளி, அங்கங்க ஆழங்கண்டுபோய் கெடக்கு.”
“இங்கயுமா அள்ளுதானுவ…?”
“ராவும் பவலும் ட்ராக்ட்டரு வச்சில்லா லோடு அடிக்கானுவ. மேல கீழன்னு எல்லாம் தெரிஞ்சிதான நடக்குது. கண்ணு முன்னால இந்த ஆத்தோட சேலைய உருவி, அம்மணக் கட்டையாக்கிட்டுத்தான் போறானுவ, ஏங்கேக்கீய!”
“ஆனாலும் உங்கள்வளுக்கு இந்த ஆத்து மேல உள்ள பிரயாசம் மட்டும் போவாது போலய…”
“அதெப்படி ஏட்டையா… இந்த ஆறு எங்க ஆத்தால்லா… எங்க பட்டாவுலதான நெல்லையப்பனுக்கே நீராட்டு…”
“அடி சக்கன்னானாம்… அந்தத் துண்டு சோப்ப இங்கன வீசு…”
“தூக்கிப்போட்டா பிடிச்சிருவியலா…”
“ச்சும்மா எக்கிப் போடுடே… ஆமா, என்ன துணி பாரம் ரொம்ப கொறவாத்தான் கெடக்கு..!”
“மழத் தண்ணின்னு வந்துட்டா மக்கமாறுகட்ட காசு புழக்கம் அத்துப் போயிருதே… அப்புறம் எங்கன வெளுத்துப் போட்டு உடுத்த… அங்க தொட்டு இங்க தொட்டு எங்க வயிறயும் காயப் போட்டுத்தான ஆவணும்…”
“அது சரி, ஊரு வளப்பம் வண்ணானுக்குத் தெரியும்… வீட்டு வளப்பம் மருமானுக்குத் தெரியும்னு சும்மயாச் சொன்னானுங்க. இப்ப நைனார் லாட்ஜுல வெளுப்பெடுக்குறது இல்லையோ!”
“எதோ கொஞ்ச நஞ்சம் வருது. வெள்ள உடுப்பு நெதம் கட்டுறதுக்கு சனமே இல்ல. எதோ பழக்கத்துக்காக கட்சி ஆளுங்களுக்கும் லாட்ஜு துணிகளுக்கும் வெளுப்பு ஓடுது. ஒங்க அதிகாரி உத்தியோகம் மாதிரியா எங்க ஒழைப்பு”
“அட ஏம்லா! என் வயித்தெரிச்சல திங்க. ஒங்க கழுதப் பொழக்கிற பொழப்பவிட லோல் பட்டுத் திரியிறது எங்க போலீஸ்காரன் பொழப்பு. எங்க எப்ப டூட்டி போடுவானுவன்னே தெரியாம அல்லாடணும். பாத்தல்லா ஆத்துப்பக்கம் வந்து எத்தன காலமாச்சுன்னு… இன்னைக்குத் தேரோட்டத்துக்கு பந்தோபஸ்து போட்டதால இங்கன எட்டிப் பாத்திருக்கேன் ”
“அதான கேக்கேன்… இப்ப எந்த டேஷன்ல இருக்கீங்கன்னே தெர்லயே?”
“சங்கரங்கோயில்லதாம்பா… உஸ்ஸ்ஸபா! ஆத்துல குளிச்சா அது ஒரு சொகம்தான் போ! ஆமா, எங்க மத்த ஆளுவளல்லாம் காணோம். உங்கள்வ எடத்தையெல்லாம் இடிக்கப் போறாம்ன்னு பேசிக்கிட்டு கெடந்தாவளே என்னாச்சு மாறி…”
“ஊருக்குள்ள சவம் போவக் கூடாதுன்னு ஆத்தங்கரைக்குள்ள ரோடு போட்டானுவ. ரோட்டப் போட்டு பின்னாலயே வந்து வீட்டையும் இடிச்சுப் போட்டானுவ. அப்புறம் இங்கனயே கெடந்து செங்க சொமக்க முடியுமா… பாதி சனம் ரெட்டியார்பட்டிக்கு அங்குட்டு காலனிக்கு குடிபோயிருச்சுங்க. மக்கமாருங்க பூராம் தேய்ப்புக்கடை ஷாப்பு வெச்சு ஆத்துப் பக்கம் வாரதே இல்ல.. எதோ கெழங்கட்டைக நாங்க ஏழெட்டு பேரு இந்தக் கரையில மிஞ்சிக் கெடக்கோம்.”
“ஒங்கவன் ஒருத்தனை வெட்டிக் கொன்னாங்கல்லா… அந்தப் பெரச்சனைக்கப்புறம் தான வீட்டையெல்லாம் இடிச்சது…”
“அவரு இருந்துருந்தா எங்கள விட்டுருப்பாரா… எங்காளுங்கள்ளே நாலு ஞாயமுந் தெரிஞ்ச மனுசன் அவருதானே. ஈரங்கொல்லி, பாண்டிங்க, துரும்பருங்கன்னு பிரிஞ்சிக் கெடந்தவங்கள ஒண்ணு தெரட்டி அவரும் என்னென்னம்மோல்லாம் பண்ணாரு. கடசீல அவரு கதையையும் முடிச்சு விட்டாங்க… எல்லாம் பழங்கதையா போச்சு. மின்னே மதுர ஒடியங் கம்பெனிகாரன் வண்ணா, வண்ணாத்தின்னு எங்க பொம்பளையாக்கள கேவலப்படுத்தி பாட்டு போட்டான்னு மொத்த சனமும் ஒண்ணுகூடி மெட்ராஸையே கலங்க அடிச்சோம். இந்த ‘மாத்து’ விரிக்கிற ஈனமும் எடுப்புச் சோறு எளவும் ஒழிஞ்சி கொஞ்சம் நிமிர்ந்து நிக்கோம்ன்னா அன்னைக்கு எங்க சனங்கட்ட வந்த ஒத்துமையும் ரோசமும்தான் காரணம்!”
“அதுசரி… நீ விட்டா இப்பயே கொடி புடிச்சுட்டு போராட்டத்துக்குக் கெளம்பிருவ போல. நீயும் கட்சில இருக்கல்லா. என்ன ஒரு ரெண்டாயிரம் ஓட்டு வச்சிருப்பீயளாடே… அத தெளிச்சியா வெச்சிருந்தாலே ஒங்க சனமும் நிமுந்திருக்கும். சரி, நாங்கெளம்புதேன். தேரோட்டத்துக்குப் பொறவு உங்களுவளுக்கு ஒரு நல்லது நடக்கட்டும்…” என்றபடி ஆறுமுக ஏட்டைய்யா ஆற்றங்கரையிலிருந்து புறப்பட்டுச் சென்றார்.
சங்கரனும் அடித்து முடித்த வெளுப்புகளை கொடியில் காயப் போட்டுவிட்டுக் கரையேறினார். மணி உச்சிப் பகலாகியிருந்தது. நிழல் பாதையில் வெக்கு வெக்கென சுலோச்சன முதலியார் பாலத்து நிழல் வழியாக பஜார் பாதைக்கு நடந்தார். கைலாசபுரம் சந்தியில் அவரது மகன் மாணிக்கத்தின் தேய்ப்புக் கடை பூட்டியிருந்தது. பக்கத்து டீக்கடையில் கொஞ்சம் தண்ணீர் வாங்கிக் குடித்தார். கடை பூட்டியிருப்பது பற்றி டீ மாஸ்டரிடம் விசாரித்தார். ‘இன்னும் வரலபோல உம்ம மவன்’ என்று மாஸ்டர் சொல்லிக் கொண்டிருந்தபோதே, பேராச்சி கண்ணீரும் கம்பலையுமாக அங்கு வந்து சேர்ந்தாள்.
“எம்மோ என்ன… இப்படி வந்து நிக்க… என்னாச்சு, என்ன வெவகாரம். சொல்லுத்தா” என்று அவளின் கோலத்தைப் பார்த்து சங்கரன் பதறினார். அழுகையை மென்னு விழுங்கிக்கொண்டு, “ஒங்களப் பாக்கத்தான் ஆத்துக்கு வந்தம் தாத்தா. நீங்க இந்தப் பாதைக்கு வந்ததாச் சொன்னாங்க. நேத்து ராத்திரி வேலைக்குப் போனவரு. இன்னும் வீட்டுக்கு வரல தாத்தா. டேஷன்ல அவரப் புடிச்சு வெச்சிருக்கதா சொல்றாங்க. கொஞ்சம் கூட வாங்க தாத்தா!” என்று பொங்கி உதிர்த்தாள் பேராச்சி.
“எந்த டேஷன்லம்மா… யாரு வெபரம் சொன்னாங்க…”
“காலனில உள்ளவங்க சொல்றாங்க. நேத்து வேல முடிஞ்சி வரும்போது படம் பார்த்துட்டு வருவேன்னு சொல்லிட்டுப் போனாரு. விடிஞ்சப்புறமும் வரவேயில்ல… போனு போட்டா போனும் எடுக்கல. இப்பக் கேட்டா டவுண் மார்க்கெட் போலீஸ் புடிச்சு வெச்சிருக்காம். எனக்கு என்ன செய்றதுன்னே தெர்ல தாத்தா. நீங்க வாங்களேன்.”
“ரெண்டு நிமுசம் இருத்தா…” என்ற சங்கரன். விறுவிறுவென மாணிக்கத்தின் கடையைத் தன்னிடமிருந்த இன்னொரு சாவியைப் போட்டுத் திறந்தார். உள்ளே சென்று, மேல் பலகையில் பாலித்தீன் கவர் போட்டு மடித்து வைத்திருந்த கட்சியின் கரைவேட்டியை எடுத்து உடுத்தினார். வெளியே வந்து தன் சைக்கிள் பூட்டைத் திறந்து, “நீ ஏறு பின்னால” என்றபடி சைக்கிளை ஈரடுக்கு கீழ்பாலத்தின் பாதைக்கு அழுத்தினார். ஒரு கட்டத்துக்கு மேல் டபிள்ஸ் அடிக்க முடியாதென்று, “நீ கீழமானிக்குப் போயி அந்தக் கரைக்கு வந்து நில்லுத்தா…நான் வந்துருதேன்” என்றார். பேராச்சி ஒற்றை நடையாக பூர்ணகலா தியேட்டரைத் தாண்டி ரயில்வே நடைபாலத்தை அடைந்து, அங்கிருந்து கீழாக இறங்கி, நெல்லை லாட்ஜை நெருங்கியபோது எதிர்முகமாக சங்கரன் வந்துசேர்ந்திருந்தார்.
“ஒன்ன ஸ்ரீபுரத்துல விட்டுடுதேன். அங்கருந்து நடந்துட்டே இரு. தேரோட்டம்லா பஸ்சு இருக்காது. நான் குறுக்க புகுந்து டேஷனுக்கு முன்ன போயிடுவேன். நீ கோயில் மண்டபம் முன்னாடி வந்து நில்லு. இந்தா இதப்புடி கைல வெச்சிக்க” என்று இருபது ரூபா ஆரஞ்சுத் தாள் ஒன்றை அவள் கையில் திணித்தார்.
ஸ்ரீபுரத்தில் பேராச்சி இறங்கிக் கொண்டதும், நெல்லையப்பர் தேரோட்டத்துக்கு வந்து குமிந்திருந்த கூட்டத்துக்கிடையில் தன் சைக்கிளை மெல்ல நகர்த்திக் கொண்டே ஓரப் பாதை வழியாக முன்னேறிக்கொண்டிருந்தார் சங்கரன். தேர் காலையிலேயே புறப்பட்டு சந்திப் பிள்ளையார் முக்கத்தை அடைந்திருந்ததால், கீழ ரதவீதியில் கொஞ்சம் மூச்சுவிட முடிந்தது. அங்கிருந்து மார்க்கெட் பாதைக்குள் புகுந்து, நடுமத்தியிலிருந்த காவல் நிலையத்தை அவர் அடைந்த போது, பசி நேரத்தைத் தாண்டி இருந்தது மணி.
ஸ்டேஷனுக்கு உள்ளே போலீஸ்காரர்கள் அதிகமில்லை. பேருக்கு ஒருத்தர் மட்டும் உள்வராந்தாவில் அமர்ந்து ரெண்டு பேரை விசாரித்துக் கொண்டிருந்தார். ஒரு மூலையில் ரவி லுங்கி அணிந்து குத்துக்காலிட்டு உட்கார்ந்திருந்தான். சங்கரனைப் பார்த்ததும் அவன் எந்திரிக்க முயன்றான். விசாரித்துக் கொண்டிருந்த போலீஸ்காரர் சங்கரனை தலை எக்கிப் பார்த்தார். “யாரு வேணும்…?” என்ற குரல் மட்டும் கேள்விக்கான அந்நியத்துடன் வெளிப்பட்டது.
“ரவி… என் பேரனுங்க…”
“ஐடி கார்டு இருக்கா…?”
“இருக்குங்க..எடுத்துட்டு வரல…”
“போய் ஐடி கார்டு இருக்க யாரயாச்சும் கூட்டிட்டு வாங்க”
“கட்சியில…”
“என்னது…”
“இல்லங்க கட்சியிலதான் இருக்கமுங்க…”
“எந்தக் கட்சி…” கேட்டுக்கொண்டே வேட்டிக் கரையைப் பார்த்தார் போலீஸ்காரர். பிறகு, “இதுல கையெழுத்துப் போட்டு, போன் நம்பர் எழுதிக் குடுத்துட்டு கூட்டிட்டுப் போங்க”’ என்றவர், “ஏய் நீ கெளம்பலாம்” என்றார் ரவியைப் பார்த்து.
சட்டையை உதறிப் போட்டுக்கொண்டு சங்கரனின் பின்னாலேயே நடந்து ஸ்டேஷனை விட்டு வெளியே வந்தான் ரவி. “நைட்டே உன் பேரைச் சொன்னேன் தாத்தா. விட மாட்டேன்னுட்டானுங்க. படம் பாத்துட்டு வந்த டிக்கெட்டெல்லாம் காமிச்சேன். பந்தோபஸ்துக்கு வந்த போலீஸ் போல, ராத்திரில கைலி கட்டிட்டு வந்தா புடிச்சு வெச்சிப்பானுங்களாமா… என்ன அநியாயமா இருக்கு.” என்றான்.
சங்கரன் அவனை ஏற இறங்கப் பார்த்துவிட்டு, “இப்பவும் அவன் விட்டது எம்பேருக்கு இல்ல. நான்போட்டு வந்த உடுப்புக்காண்டிதான். பேசாம வா.. அந்தப் புள்ள கோயில் முன்னாடி நிக்குது. நேரமா வீடு போயிச் சேருங்க. எனக்கு ஆத்துல சோலி கெடக்கு” என்றார்.
சன்னதிக்கு முன்னாலிருந்த கல் மண்டபத்தில் ஒதுங்கி நின்ற பேராச்சி அவர்களை அடையாளம் கண்டு, கிட்டே போனாள். சனங்கள் மொத்த மொத்தமாக தேர் எங்கே நிற்கிறது என்று விசாரித்தபடியே கோயில் வாசலைத் தாண்டி சென்று கொண்டிருந்தார்கள். கூட்டத்தினர் மீது விசிறியடித்த பன்னீர்த்துளி தங்கள் மேல் பட்டு விடாதா என்று ஒருபாடு சனம் சன்னதி வாசலில் கைதூக்கிக் கும்பிட்டுக்கொண்டிருந்தது. சங்கரனும் ரவியும் பேராச்சியும் அவர்களை வேடிக்கை பார்த்துக்கொண்டே எதிர்முகமாக வீடு திரும்பிக் கொண்டிருந்தார்கள்.
********
உடுப்புக்கு இருக்கும் மரியாதை. உடுத்தியவனுக்கு இல்லை என்பதை அழகாய் சொல்லியுள்ளீர்கள். படித்துறையில் நிகழும் உரையாடல்கள் கண்முன் காட்சியாய் விரிகிறது. நம் நெல்லை வட்டாரமொழி உங்கள் உடுப்பில் தாமிரபரணி ஆற்றுத்தண்ணீர் போல் தேனாய் இனிக்கிறது. உடுப்பு. சிறப்பு…! வாழ்த்துகள்ண்ணே…????????????❤️❤️❤️