இணைய இதழ்இணைய இதழ் 88கட்டுரைகள்

கறையான்; வங்காள நாவல் வாசிப்பு அனுபவம் – கா. முஜ்ஜம்மில்

கட்டுரை | வாசகசாலை

ந்த வருட வாசிப்பில் முதல் நாவலாக வங்காள எழுத்தாளர் சீர்சேந்து முகோபாத்யாய அவர்கள் எழுதிய கறையான் என்ற நாவலை வாசித்தேன். மொழிபெயர்ப்பாளர் சு. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் மிகச் சிறப்பாக மொழி பெயர்த்துள்ளார். நேஷனல் புக் ட்ரஸ்ட் வெளியிட்டு இருக்கும் இந்த நாவலை இந்த வருட சென்னை புத்தக கண்காட்சியில் தான் வாங்கினேன். இந்த நாவலை பற்றி சொல்வதற்கு முன் மொழிபெயர்ப்பாளர் சு கிருஷ்ணமூர்த்தி அவர்களை பற்றி கூற வேண்டும். அவரை பற்றி இணையத்தில் தான் வாசித்தேன். பல இந்திய நாவல்களையும் குறிப்பாக வங்காள நாவல்களையும் அதிக அளவு தமிழில் மொழி பெயர்த்துள்ளார். ஆங்கில மொழிபெயர்ப்புகள் இருந்தாலும், தமிழில் வங்காள இலக்கியங்களை வாசிக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு சு.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் மொழிபெயர்ப்புகள் மிகப்பெரிய பொக்கிஷங்களாக இருக்கும். மிக சிரத்தையோடும், ஆழ்ந்தும் இந்த மொழிபெயர்ப்புகளை அவர் செய்துள்ளார் என்பதை அந்த மொழிபெயர்ப்புகளை வாசிக்கும் பொழுது நாம் உணர முடிகிறது. இதற்கு முன்னே நீலகண்ட பறவையைத் தேடி என்ற நாவலை இவருடைய மொழிபெயர்ப்பில் தான் வாசித்திருந்தேன். சில மாதங்களுக்கு முன், வங்காளி சிறுகதைகள் என்ற தொகுப்பின் இரண்டாம் நூலை வாசித்தேன். அந்த நூல் குறித்த என்னுடைய பதிவை வாசகசாலை இணைய இதழில் எழுதியிருந்தேன். அந்த நூலையும் சு.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தான் மொழிபெயர்த்திருந்தார். புரட்சி காலம் என்ற ஒரு சிறிய நாவலையும் அவர் மொழிபெயர்த்துள்ளார். அதை இந்த வருட சென்னை புத்தக கண்காட்சியில் வாங்கி வந்தேன். மேலும் இவருடைய மொழிபெயர்ப்பில்  வங்க சிறுகதைகள் என்ற தொகுப்பையும், கொல்லப்படுவதில்லை என்ற வங்காள மொழிபெயர்ப்பு நாவலையும்  பழைய நூல்கள் விற்கும் கடையில் வாங்கினேன். சிதைந்த கோடு முதலிய கதைகள் என்ற தொகுப்பு ரவீந்திரநாத் தாகூர் அவர்களின் மொழிபெயர்ப்பு கதைகள். அந்த தொகுப்பை முன்பே வைத்திருந்தேன். இது தவிர தேவதாஸ், காட்டின் உரிமை, கவி வெந்தயகட்டியின் வாழ்வும் சாவும், போன்ற நாவல்களின் மொழிபெயர்ப்பை நூலகத்தில் பார்த்திருக்கிறேன். யோசிக்கையில்  தொடர்ந்து என்னுடைய வாசிப்பில் சு.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் மிகப்பெரிய பங்களிப்பையும், உதவியும் செய்து இருக்கிறார் என்று தான் உணர்கிறேன். இவ்வளவு வங்காள நூல்களையும் வாசிப்பதற்கு அவர்தான் ஒரு மிகப்பெரிய திறப்பாக அமைந்திருக்கிறார். இதை எழுதும் பொழுது மிக நன்றி உணர்வோடு அவரை நினைத்துக் கொள்கிறேன். மாபெரும் ரஷ்ய இலக்கியங்களை வாசிக்கும் போது எல்லாம் எப்படி CONSTANCE GARNET அவர்களை நினைத்துக் கொள்கிறோமோ , அதுபோலவே வங்காள இலக்கியங்களை வாசிக்கும் பொழுது சு. கிருஷ்ணமூர்த்தி அவர்களை நினைத்துக் கொள்வோம். 

கரையான் நாவல் நவீனத்துவ நாவல் என்று வரையறுத்துக் கொள்ளலாம். காரணம், இங்கு நிறைய கதை மாந்தர்கள் வருவதில்லை. ஷியாம் என்ற ஒரு முக்கிய கதாபாத்திரத்தை சுற்றி தான் முழு கதையும் நகர்கிறது. முழுக்க முழுக்க ஷியாம் உடைய வாழ்க்கை, உணர்வு நிலைகள், மன ஓட்டங்கள் இவைதான் நாவல் முழுவதாக நிரம்பி இருக்கிறது. நாவலின் களங்கள் மிக சுருங்கியதாக உள்ளது. பல பகுதிகள்  பெரும்பாலும் அவனுடைய அறையில் தான் நிகழ்கிறது. அவனுடைய அலுவலக அதிகாரி அவனை கெட்ட வார்த்தையால் திட்டி விட்டதால் வேலையை விட்டு வந்து விடுகிறான். ஒரு திட்டு தானே என்பதாக அவனால் அதை எளிதாக கடந்து விட முடியவில்லை. அந்த வார்த்தை அவனையே சற்று ஆழமாக சிந்திக்க வைத்திருக்கிறது. தான் ஏன் இது போல ஒருவரிடம் திட்டு வாங்கிக் கொண்டு அவரின் கீழே வேலை செய்ய வேண்டும். அப்படி வேலை செய்து சம்பாதிக்கின்ற இந்த பெரும் பணம் எல்லாம் எதற்காக என்பதாக அவனுக்குள் கேள்விகள் எழுகிறது. இந்த பெரும் பணமும் வசதியும் மேலும் மேலும் ஒரு வகையான நுகர்வு கலாச்சாரத்திற்கு தான் அவனை அழைத்து செல்கிறது என்பதை உணர்கிறான். ஆனால் தன்னைப் பற்றியோ தன்னுடைய அடையாளம் குறித்தோ, வாழ்க்கை குறித்தோ, சுய விழிப்புணர்வு அவனிடம் இல்லை. ஆனால் அந்த ஒரு கெட்ட வார்த்தையால் அவனுடைய வாழ்க்கை முற்றிலுமாக வேறு ஒரு பாதையை நோக்கி பயணிக்க தொடங்குகிறது. அவன் தன்னைக் குறித்தும் தன்னுடைய இருப்பை குறித்தும் தன்னுடைய உறவுகளை குறித்தும் நிறைய சுய பரிசோதனைகளுக்குள் செல்கிறான். தன்னுடைய உறவுகள், காதல்கள் எல்லாம் எதனால் கட்டமைக்கப்பட்டிருக்கிறது என்பதை பற்றி யோசிக்கிறான். எல்லாம் தற்காலிகமே என்ற ஒரு வகையான எண்ணம் அவனுக்குள் ஏற்படுகிறது. அப்படி என்றால் எல்லாமே ஒரு வகையான தற்காலிக விளையாட்டு போன்று தான் என்று அவனுக்கு தோன்றுகிறது ; காதல் உட்பட. அவனுடைய காதலியான இதூ என்ற பெண் அவனை சந்திப்பதற்காக அவனுடைய அறைக்கு வருகிறாள். அவள் அவனைத் தொட வரும்போது அவள் கைகளுக்கு படாதவாறு அவன் விலகி சென்று கொண்டிருக்கிறான். முடிந்தால் என்னை தொட்டுப்பார்  என்பதாக ஒரு வகையான விளையாட்டுக்குள் இறங்குகிறான். அந்த அறையை சுற்றி அவன் மெல்ல ஓடிக்கொண்டே இருக்க அவளும் அவனை தொடுவதற்காக முயற்சித்து கொண்டே இருக்கிறாள். முதலில் மெதுவாக ஓட ஆரம்பித்த அவன் பிறகு சற்று வேகமாக அவளுடைய கைகளுக்கு சிக்கிக் கொள்ளாமல் அறையை சுற்றி சுற்றி ஓடி வருகிறான். அவளும் முதலில் விளையாட்டாக ஓட ஆரம்பித்து பிறகு சற்று தடுமாறி கீழே உள்ள பொருட்களில் எல்லாம் தடுமாறி குழப்பத்தோடு ஓடுகிறாள். ஒரு இடத்தில் அவளுடைய முந்தானை நெருப்பில் பட்டு லேசாக எரிய தொடங்கி விடுகிறது. உடனே அதை அவள் அனைத்து விட்டு அங்கிருந்து வெளியே செல்கிறாள். இவ்விடம், நாவலிலே எனக்கு மிக உக்கிரமான பகுதியாக தோன்றியது. வாழ்க்கையில் இருந்து விலகி, கறையான் போல எல்லாவற்றையும் உதிர்த்து, ஒரு வகையான துறவு நிலைக்கு சென்று கொண்டிருக்கும் அவன், தன் காதலில் இருந்தும் விலக இது போன்ற ஒரு  பிறழ்வுற்ற விளையாட்டை ஏன் விளையாட வேண்டும் ? இவ்விடத்தில் அவன் ஒரு இரக்கமற்ற, பிறரை  வதைத்து இன்பமுறும் SADDIST ஆக தோன்றுகிறான். ஷியாம் துறவு நிலையை நோக்கி செல்கிறானா அல்லது  எல்லாவற்றின் மீதான வெறுப்பிற்குள் செல்கிறானா என்ற கேள்வி இவ்விடத்தில் எழுகிறது. இன்னொரு இடத்தில் கையில் ஒரு சிறு கண்ணாடி துண்டை வைத்துக் கொண்டு வெயிலின் ஒளியை அந்த கண்ணாடியின் மூலம் சாலையில் சென்று கொண்டிருப்பவர்கள் மீது எல்லாம் பாய்ச்சிகிறான். அதில் ஒரு மோட்டார் சைக்கிள் காரனுக்கு தடுமாற்றம் ஏற்படுகிறது. இது ஒரு அபாயகரமான விளையாட்டாக இருந்தாலும் அதைப்பற்றி அவன் பெரிய அளவுக்கு அக்கறை கொள்ளவில்லை. இது போன்ற செயல்கள் எல்லாம் துறவியினுடைய செயலை போல தோன்றவில்லை. ஒரு துறவி என்பவன் இயல்பாக வாழ்வில் இருந்து, சமூகம் அவனுக்கு அளித்த அடையாளங்களிலிருந்து, அந்த அடையாளம் சார்ந்து மட்டுமே உருவான பிணைப்புகள், பற்றுகள், அதன் பின்னணியிலான செயல்கள் ஆகியவற்றிலிருந்து விலகிக் கொண்டே செல்லும் பொழுது, முழு உலகமும் அவனுக்கு உரியதாக மாறிவிடுகிறது. உலக மனிதர்கள் எல்லாம் அவனுடைய மனிதர்களாக ஆகிவிடுவார்கள். அவனுக்குள் பாராபட்சமோ, குறிப்பிட்ட குழுக்கள், அடையாளங்களின் போர்வைக்குள் சுருங்கிவிடுவதோ இருக்காது. ஆனால், ஷியாமோ அவன் விரும்பி ஏற்றுக் கொண்டு வாழும் தனிமை வாழ்வில் சிறு கசப்பை எப்போதும் உணர்ந்து கொண்டே இருக்கிறான் என்று தோன்றுகிறது. அதுதான் இது போன்ற சில செயல்களில் ஈடுபட வைக்கிறது என்று வாசிக்கும் போது நமக்கு தோன்றுகிறது.  ஹோட்டலில் தினமும் மித்ரா என்ற நபரை சந்திக்கிறான். மித்ரா சுமார் 40 வயதை நெருங்கி இருக்கக்கூடிய நபர். ஆனாலும் அவர் தன்னுடைய வயதை மறைத்து குறைவாகவே சொல்கிறார் . தன்னுடைய காதலிக்கு கொடுத்த வாக்கினால் வேறு திருமணம் எதுவும் செய்து கொள்ளாமலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறார். தன்னுடைய தோற்றத்தைப் பற்றியோ ஆடையை பற்றியோ இப்போது ஷியாமுக்கு பெரிய கவலைகள் எதுவும் இல்லை. தன் மனதுக்கு போன போக்கில் அவன் வாழ்ந்து கொண்டிருக்கிறான். யாருக்கும் தான் பதில் சொல்ல வேண்டியதில்லை, அதேபோல யாரும் தன் மீது பெரிதாக அக்கறையும் காட்டப் போவதில்லை என்பதையும் உணர்கிறான். நாவலில் சில இடங்களில் ஷியாமின் தந்தை வந்து போகிறார். ஆனால் யாரோடும் அவனுக்கு இப்பொழுது பெரிய பற்றுதல் இல்லை. எல்லாவற்றையும் உதிர்த்து கொண்டே இருக்கிறான். ஆனாலும் அவனுக்கு மித்ரா போன்ற ஒரு நபர் உரையாட தேவைப்படுகிறார்.  அது போல அவன் ஒரு முழு துறவியாக ஆகவில்லை, அல்லது ஆக முடியாது என்பதை உணர்த்தக்கூடிய இடம், பல வருடங்கள் கழித்து அவனுக்கு லீலா என்ற பெண் மீது வரக்கூடிய காதல் நமக்கு காட்டுகிறது. ஆனாலும் அந்த காதல் அவனுக்கு கைக்கு எட்டுவதாக இல்லை. வாழ்வின் மீது லேசான தாகம் ஏற்படும் போது தண்ணீர் கிடைக்காமல் போகிறது. 

எழுத்தாளர் சீர்சேந்து முகோபாத்யாய

எதிர்காலத்தை பற்றிய பயம் தான் தனி மனித சுதந்திரத்திற்கு தடையாக அமைகிறது என்று உணரும் சியாம்,  தேவைப்பட்டால் பயன்படுத்தலாம் என்று மித்ரா சேகரித்து வைத்திருக்கும் தூக்க மாத்திரைகளில் சிலவற்றை அவனிடம் கேட்கும் பொழுது அவன் இன்னும் அந்த பயத்திலிருந்து முழுமையாக விடுபடவில்லை, மனிதன் ஏதோ ஒரு மூலையில் இன்னும் அத்தகைய பயம் இருந்து கொண்டு தான் இருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்கிறோம். இந்த முரண்நகை நிலை தான் நவீன மனிதனின் நிலை. இப்படியும் அல்லாமல் அப்படியும் அல்லாத ஒரே அலைக்கழிக்கப்படும் நிலை. இரண்டையும் சமன்படுத்திக் கொள்ள முயலும் நிலை. சியாம் ஒரு முழு துறவி கிடையாது. அவனுக்குள் இன்னும் சில பயங்கள் இருக்கத்தான் செய்கிறது, அத்தோடு அவனுக்கு மீண்டும் துளிர்க்கின்றது ஒரு காதல். ஷியாம் கதாபாத்திரத்திற்கு சற்று எதிர் நிலையில் மாற்றாக இருக்கக்கூடிய கதாபாத்திரம் ஜோர்பா தி கிரீக் நாவலில் வரக்கூடிய ஜோர்பா. அதே நாவலில் வரும் எழுத்தாளர் கதாபாத்திரம், ஷியாமோடு சில விஷயங்களில் ஒத்துப்போபவர். அவனால் முழுமையாக ஜோர்பா போல ஆகமுடியாத, ஆனால் ஆக விரும்பும் அன்றாட உலக மனிதன். ஜோர்பாவோ வருங்காலம் பற்றியோ கடந்த காலம் பற்றியோ பெரிதாக கவலைப்படாத அந்த தருணத்தில் முழுமையாக வாழும் ஒரு விடுதலை பெற்ற மனிதன். ஜெயகாந்தன் அவர்களின் ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் நாவலில் வரும் ஹென்றி கதாபாத்திரம் ஜோர்பா கதாபாத்திரத்தை ஒத்ததுதான். ஆனால் ஒருவகையில் ஜோர்பாவோ, ஹென்றியோ லட்சிய கதாபாத்திரங்களாக, அன்றாட மனிதர்களிலிருந்து விலகி தனித்து ஒளிர்ந்து பிறரையும் தங்களை நோக்கி ஏங்கவைப்பவர்கள். சற்று ஆன்மீக தன்மை பொருந்தியவர்கள். அந்தவகையில் அவர்கள் பெரும்பையின் எதார்த்தத்திலிருந்து  சற்று விலகி இருப்பவர்கள். ஆனால் ஜோர்பாவில் வரும் எழுதாளனோ, கறையான் நாவல் ஷ்யாமோ அன்றாட பெரும்பான்மை  மனிதர்களின் பிரதிநிதிகள். பெரும்பான்மையின் கண்ணாடிகள். ஜோர்பாவோ, ஹென்றியோ, தாஸ்தவஸ்கியின் அசடன் நாவலின் பிரின்ஸ் மிஷ்க்கினோ நாம் இன்னும் செல்ல வேண்டிய தூரத்தை காட்டுபவர்கள்.  

ஷியாம் ஆல்பர்ட் காமியூவின் அந்நியன் நாவலின் கதாநாயகன் போலவே இருக்கிறான் என்று எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் குறிப்பிட்டிருந்தார். அதே போல நிலவரை குறிப்புகள் நாவலில் வரக்கூடிய நாயகனோடும் ஒப்பிட சில ஒற்றுமைகள் உள்ளது. அரசாங்க அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்ற ஒருவன் வாழ்க்கையை பற்றிய தன்னுடைய பார்வையை கூறுவதாக தான் அந்த நாவல் செல்லும். அந்த நாயகனின் நீட்சியாக தான் அந்நியன் நாவலின் கதாநாயகனும், கறையான் நாவலின் ஷியாமம் எனக்கு தோன்றுகிறார்கள். இவர்களோடு ஒப்பிடத்தக்க இன்னொரு கதாபாத்திரம் காப்காவின் உருமாற்றம் நாவலில் வரக்கூடிய கதாநாயகன். அதேபோல ஹெர்மன் ஹெஸ்ஸேவின் சித்தார்த்தா, தி கிரேட் கேட்ஸ்பி நாவலின் நாயகன்,  நட் ஹாம்சனின்  பசி நாவலில் வரக்கூடிய எழுத்தாளன், இவர்கள் எல்லோருக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு இருப்பதை இந்த நாவல்கள் எல்லாம் சேர்த்து வாசிக்கும் பொழுது உணர முடியும்.  இவை எல்லாம் நவீனத்துவ நாவல்கள். தனி மனிதனின் அகத் தேடல்களையும்,  அலைகளிப்பையும், அடையாளம் சார்ந்த சிக்கல்களையும் பேசுபவைகள்.  நாவலில் சில  இடங்கல் தாஸ்தவஸ்கியின் குற்றமும் தண்டனையும் நாவலை நினைவுறித்தின. துர்கநேவின் தந்தையும் மகன்களும் நாவலின் முக்கிய கதாபாத்திரமான பாசரவ்  இந்நாவலை வாசிக்கும்போது மிக அழுத்தமாக நினைவில் வந்து போனான். சென்ற வருடம் ஆதவன் சிறுகதைகள் முழு தொகுப்பை வாசித்தேன். அவருடைய எழுத்துக்களில் உள்ள தன்மையை கரையான் நாவலிலும் உணர்ந்தேன். ஆதவனும் நவீனத்துவ எழுத்தாளர் தானே ! சுந்தர ராமசாமியின் ஜே ஜே சிலகுறிப்புகள், சம்பத்தின் இடைவெளி, எஸ் ராமகிருஷ்ணனின் உறுபசி போன்ற நாவல்களும் நினைவில் வந்து சென்றன.  வாசிப்பின் ஓட்டத்தில் இப்படியான பல்வேறு நாவல்களின் கதாபாத்திரங்கள் என்னோடு உரையாடி சென்றனர். கறையான் நாவல் அகத்தேடல் குறித்த மிக முக்கியமான படைப்பு. 

**********

mmuzzammil470@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button