சேர்ந்தார்போல் பருத்த மேனி கொண்ட மூவர்
புரண்டு படுக்க இடமற்ற இந்த அறையில்தான்
அவர்கள் அடைந்து கிடக்கிறார்கள்
மிளகு பருத்தியைச் சுமந்த யானையைக்
கொண்டு வந்து நிறுத்தி
கொஞ்சம் இடம் கேட்டுக் கொண்டிருந்தான்
என்னிலும் மூத்தவன்
கரம்பை நிலத்தில் தட்டான்களை அவிழ்த்துவிட்டு
மழை பெய்யச் செய்யும் மந்திரம் கற்றவன்
ஒரு புலர் காலைப் பொழுதில்
உள் நுழைந்தான் ஆனந்தியை அழைத்தவாறு
எப்பொழுதும் வீடு தங்காத என் மூத்த சகோதரன்
சித்தாந்தத்தின் சிவப்புக் கொடியை ஏந்தியவாறு
வருவதும் போவதுமாய் இருக்கிறான்
வர்க்க அரசியலைப் பேசிக்கொண்டு
தாயை இழந்த பிள்ளை எனத் தவித்துக் கிடந்த
இளையவன்
மரநாய் உருவெடுத்து உலாவுகிறான்
முன்னொரு முறை கூடு நீங்கிப்போனவன்
பிணமான பின்புதான் திரும்பினான்
பிரபஞ்சத்தின் கடைசிப் படிக்கட்டில் நின்றவாறு
இவ்வாழ்வின் துயரை இடைமறித்து
இசைத்துக் கொண்டிருக்கும்
சினேகிதன்
முதன்முறையாக வீடு வருகிறான்
ஆசையாய்க் கேட்ட மலை மான் கொம்பை
கொண்டு வந்து நிறுத்தி
ஊர்க்காரி ஒருத்தியின்
காதலைச் சொல்லத் துவங்கினான் அண்ணன்
அப்போது அறையில் இடைவெளி இருந்த இடமெல்லாம்
துயர் அப்பிக்கொண்டது
அக்காளின் எலும்புகளைக் கொளுத்தி
இடையிடையே கதகதப்பாக்கிக் கொண்டார்கள் கடுங்குளிரை
கண்ணீரோடு கதை கேட்டு உறங்கிப் போனவர்கள் மீது
கொஞ்சம் கடல் கொண்டு வந்து
தெளித்துக் கொண்டிருந்தான் சங்காயக் கிழவிகளின் காதலன்
இந்தப் பத்துக்குப் பத்து அறைக்குள் அவர்களின் சொற்களுக்கு
நான் கிறங்கிக் கிடக்கிறேன்
வெளியேற வழியற்று.
****
நெடுந்தொலைவிற்கு எந்த நீர்நிலைகளும் இல்லை
நேற்றிலிருந்து பார்க்கிறேன்
தனித்து விடப்படுதலின் துயரத்தோடு அமர்ந்திருக்கிறது
அந்தச் சின்னஞ் சிறு பட்சி
அது துயரமா அல்லது தவநிலையா
என்னவென்றறியேன்
ஒன்பதாயிரம் கோடியை வாரக்கடனாய்
வாரிச் சுருட்டிச் சென்றவனின் வணிகக் குறிக்கு
அந்த அப்பாவிப் பறவையின் பெயர்தான் என்பதை அது அறிந்திருக்குமா?
ஏன் அவசியமற்ற கேள்விகளை
என்னை நோக்கித் தொடுக்கிறான் என்று நினைத்திருக்குமா?
எதைப் பற்றியும் அக்கறை காட்டாமல்
வறட்டு இருமல்காரனின்
தொண்டைச் சுண்ணாம்பாய் வானத்தைப் போர்த்தியபடி
இன்றும் அப்படியே அமர்ந்திருக்கிறது
அந்தச் சின்னஞ் சிறு உயிரி
யாரோடு உனக்குப் பிணக்கு என்று
நானும் கேட்கவில்லை அதுவும் சொல்லவில்லை
மற்றபடி இருவருக்கும் இடையில்
ஒரு குட்டியோண்டுத் தனிமை குதித்தபடி ஓடுகிறது.
****
ஒரு முப்பது வெள்ளிக்காசுக்கு ஆசைப்பட்டு
நீ என்னை முத்தமிட்டுக் காட்டிக் கொடுக்கலாம்
எத்தனை முறை வேண்டுமானாலும்
யார் என்றே தெரியாதென மறுதலிக்கலாம்
நூறு சிலுவைகளைச் சுமக்கச் சொல்லிக்
கசையடி கொடுக்கலாம்
யாவற்றுக்குப் பிறகும் உன் மீதான
பேரன்பு கசந்தபாடில்லை!
காட்டு மரங்களை கடும்பாறைகளைப் புரட்டி வரும்
காட்டாற்று வெள்ளம்
கரையோரத்து நாணல்களை முறிப்பதில்லை.
*******
மிகவும் நவீன பாடல் கலந்த சொற்கள்