
பகல்
உனக்குத்தர வேறென்ன இருக்கிறது
எனது பார்வையின் வெப்பத்தால்
இதன் ஆம்பல்கள் பழுத்துவிட்டன
எனது பாடல்களின் துயரத்தில்
இதன் தும்பிகளுக்கு
பைத்தியம் பிடித்துவிட்டது
எனது பெருமூச்சின் வேகத்தில்
இதன் இலைகள் உதிர்ந்துவிட்டன
நீ கையளித்துப் போன
பகல் ஒரு வாதை
அதை நீயே எடுத்துச் சென்றுவிடு.
***********
நமக்கிடையில்
நமக்கிடையே காலம்
நதியைப்போல்
ஓடிக்கொண்டிருந்தது
என் மீன்கொத்தி
அலகை நுழைத்து
அவ்வப்போது
உன்னைக் கவ்வி வந்தது
நமக்கிடையே தூரம்
ஒரு சமுத்திரம்போல்
அலைவீசிக் கொண்டிருந்தது
என்பாய்மரம்
உன் விழியசைவில்
திசையேகியது
நமக்கிடையே நினைவு
ஒரு வனத்தைப்போல்
மலர்ந்திருந்தது
எனது வண்ணத்தி
காதலின் தேனை
பருகியவாறிருந்தது
நமக்கிடையே உறவு
வானம்போல விரிந்து கிடந்தது
எனது பறவையோ
நீ கடைசியாய் முத்தமிட்ட
அந்தியை தூக்கியபடி
பறந்து கொண்டிருந்தது.
***********
குரங்கு
பகலில் யுனிகான் ஓட்டும் குரங்கை
நிறையபேருக்குத் தெரியும்
இரவில் புட்பக விமானத்தில்
பறப்பதோ யாருக்கும் தெரியாது
காலையில் போதியின்
கிளையில் தொங்குமதை சிலரறிவர்
அந்தியில் பிருந்தாவனக்
கிளைகளில் தாவுவதை யாரறிவார்?
சரயு நதிக்கரையின்
மரங்களில் தாவிய அதுதான்
ஈடன் தோட்டத்து ஆப்பிள் மரங்களிலும் குதித்தது
அதன் ஒரு கால்
அன்னை தெரசா கிளையையும்
மற்றொரு கால்
நயன்தாரா கிளையையும்
பற்றியிருக்கிறது
கடவுள், அதை தன் வளர்ப்பென பெருமைப்படும்போதெல்லாம்
‘ஆட்ரா ராமா, ஆட்ரா ராமா’
சொல்கிறான் சாத்தான்
அது ஆசியாவில் இருந்து
ஐரோப்பாவுக்கு பாய்கிறது
ஜெனீஃபர் லோபஸிலிருந்து
பிரியங்கா சோப்ராவுக்குத்
தாவுகிறது
டார்வின் அதை ‘டிஎன்ஏ’ என்கிறார்
சர்ச் ஃபாதர் ‘பாவம்’ என்கிறார்.
***********
யானை கண்கள்
முதன் முதலாகப்
உன்னை பார்த்ததை
எப்படி சொல்வது?
சாத்பூரா தொடரிலிருந்து
ஓர் இந்திய யானை
முதன் முறையாக
ரயிலைப் பார்த்ததை
எப்படி அது விவரிக்கும்?
***********
காதலிக்கத்
தடையாயிருப்பது
காதலிக்க சிலருக்கு
சாதி தடையாயிருக்கிறது
சாமி தடையாயிருக்கிறது
மொழி தடையாயிருக்கிறது
காசு தடையாயிருக்கிறது
காதலிக்க சிலருக்கு
அப்பாவோ அம்மாவோ
கணவனோ மனைவியோ
மகனோ மகளோ
மருமகளோ மருமகனோ தடையாயிருக்கிறார்கள்
நேற்று இரண்டு பாம்புகள்
அவ்வளவு அழகாகப்
பின்னிப் பிணைந்து
காதலித்தபடி இருந்தன
அந்த பாம்புகளுக்கு
சாதியில்லை
சாமியில்லை
காசு இல்லை
அப்பா அம்மா
கணவன் மனைவி
மகன் மருமகள்
மகள் மருமகன்
யாரும் இல்லை
அந்த பாம்புகளுக்கு
இருந்ததெல்லாம்
காதல் மட்டுமே.
***********
கழியுமொரு பருவம்
வானத்தில் கொக்குகள்
அதிகம் பறக்கின்றன
நீர் வற்றிய வாய்க்கால் மருங்கில் பசுமையிழந்த புற்களை
வற்றிய மடிகொண்ட பசுக்கள் சுவாரசியமற்று மேய்கின்றன
அறுவடை நிலங்களிலிருந்து
தானிய மூட்டைகளை
உழுகுடிகள் சந்தைக்கு
ஏற்றிச் செல்கிறார்கள்
ஊருக்கு செல்லும் மூதாட்டிகள் சுருக்குப் பையை அளைந்து
பேரப் பிள்ளைகளுக்கு
வெள்ளெரிப் பிஞ்சுகள் வாங்குகிறார்கள்
ஒரு வாடிக்கையாளனும் கிடைக்காமல் டீ குடித்தே பசியாறுகிறான் பாதையோரத்தில்
பனிக் குல்லாக்களை விற்பவன்
ஒரு பருவம் விடைபெறுகிறபோது
‘இந்த ஆண்டும் மகள் கேட்ட
நீல நிற ஸ்வெட்டரை
வாங்கித்தர முடியவில்லையே!’
வருத்தத்தில் நீண்ட
பயணத்திடையே
அறுந்த செருப்பை
தூக்கி எறிந்து
கோடையின் முதல் சூட்டில்
காலடி வைக்கிறான்
ஒரு கிராமத்துத் தந்தை.
***********
வீடு
என்னிடம்
சிறிது குற்றங்களிருக்கின்றன
சிறிது அநீதிகளிருக்கின்றன
சிறிது பொய்களிருக்கின்றன
சிறிது பாவங்களிருக்கின்றன
சிறிது துரோகங்களிருக்கின்றன
சிறிது வஞ்சங்களிருக்கின்றன
என்னால் யார்மீதும்
கல்லெறிய முடியாது
என்மீதும் யாரும்
கல்லெறிய வேண்டாம்
உங்கள் கற்களை
சேமித்து வையுங்கள்
ஒருநாள் கடவுளுக்கு
வசிப்பிடம் எழுப்ப
தேவைப்படலாம்!
***********
இருள்
பைத்தியக்காரர்கள் மீது
தெருநாய்கள் மீது
சரக்கொன்றை மரங்கள் மீது
எல்லையற்ற சமுத்திரம் மீது
கோபுரக்கலசம் மீது
தெருப்புழுதியைத்
தாய்மடியெனத் துயிலும்
குடிகாரர்கள் மீது
வாடிக்கை தகையாமல்
பசியோடுறங்கும்
பாலியல் தொழில் செய்பவள் மீது
கொலையைத் தொழிலாகக் கொண்டோர் கத்தியைக் கழுவும்
புண்ணிய நதியின் மீது
விட்டத்தில் தொங்கும்
அம்மாவின் இன்மையறியாது
கட்டிலில் உறங்கும்
குழந்தை மீது
பரவும் இருளே
யான் பெற்ற பேறே,
நீ வாழி.
***********