கவிதைகள்
Trending

மொழிபெயர்ப்பு கவிதைகள்- கு.அ.தமிழ்மொழி

மலையாள மூலம்:ஸ்ரீஜித் பெரும்தச்சன்
ஆங்கிலம்: லீனா சந்திரன்
தமிழில்: கு.அ.தமிழ்மொழி

விளக்குகள்

வீதியைப் பார்த்துக்கொண்டிருக்கையில்,
வெளிச்ச ஆறு வீதியில்

கண்கள் சொல்கின்றன உங்களிடம்:
ஒருபோதும் எந்த வாளையும் வெளிச்சத்தினால் உருவாக்காதீர்கள்
அல்லது
வாளே வெளிச்சமாகட்டும்

உங்கள் கண்களை மூடாதீர்கள் வெளிச்சத்தில்
ஓ! நான் எவ்வளவு ஏங்குகிறேன் மண்ணெண்ணெய் விளக்குக்காக
யாரோ முணுமுணுக்கிறார்கள்

இருக்கின்ற எல்லா விளக்குகளும் போதும்
அருள்கூர்ந்து அவற்றை வெளியே எடுங்கள்

கண்களின் எதிரியாய் விளக்குகள் மாறியதிலிருந்து
பாட்டி குறுக்கிடுகிறார்

மண்ணெண்ணெய் விளக்குகள்
பாட்டியை நினைவூட்டுகின்றன

அவர்களின் இருண்ட கண்கள்
அதே மங்கிய ஒளியில் எரிகின்றன என்பதற்காக மட்டுமல்ல

ஆனால் ஒன்று மட்டும் உறுதி
கண் விளக்குகள்
சில மருமங்களைக் கொண்டிருக்கின்றன
களிமண் விளக்குகளிடம் பகிர

*****************

சுருக்கம்

ஒரு காட்டைச் சுருக்கிக் கூற முடியுமா நீங்கள்? – கேள்வி வந்தது
இலை – விடையளித்தான் நண்பன்
(தலைவணங்குகிறேன் நட்பே!)

முடியுமா ? அப்படியானால் கடல்;
(அரைப்பக்கத்திற்கு மேலில்லாமல்)
நினைவுபடுத்துகிறேன் இதைத் துப்பாதே!
நல்லது, சொன்னேன் நான்: கண்ணீர்த்துளி

ஆடைகள்?
சுருக்கிச் சொல்லுங்கள்
அந்த நடிகையின் ஒளிப்படத்தைக் காட்டினேன் நான்

உயிர்வளி?
கரியமில வளி! – மழலையின் விடைக்குத் தட்டிக்கொடுத்தேன்
(ஏனெனில் உயிர்வளிக்கு அதில் எந்தக் கூட்டுத்தொகையும் இல்லை ஐயா)

நெல் வயலைப் பற்றிச் சொல்?
சிட்டுக்குருவி ஐயா

ஒரு மலை?
ஓரிரவு மற்றும் இரண்டு பெரிய சுமையுந்துகளைக் கேட்டு
அனைவரும் திரண்டு போட்டியிட்டனர்

பிறகு
ஒரு வயலினிலிருந்து உருவாகும் எல்லா தாளங்களையும்
சுருக்கிச் சொல்லச் சொன்னவள்தான் அவள்

நான் சொன்னேன்
என் அன்பே! அது மிக எளிது,
உன்னைத் தொடவேண்டும் நான் அவ்வளவுதான்

****************

ஆசிரியர் குறிப்பு:

ஸ்ரீஜித் பெரும்தச்சன் கேரள மாநிலம், கொல்லத்தில் பிறந்தார். பெற்றோர் ஆசிரியர்களாதலால் அது வாசிப்பு மற்றும் எழுதுவதில் அவர் ஆர்வத்தை வளர்த்துக் கொள்ளும் வாய்ப்பாக அமைந்தது. இளம் பாவலர்களுக்கான கேரள கலாமண்டலம் வழங்கிய வல்லதோல் விருதை அவர் பாத்திமா மாதா கல்லூரியில் படிக்கும் போது பெற்றார்.

முன்னணி மலையாள இதழ்களில் தவறாமல் வெளிவரும் அவரது படைப்புகள், நையாண்டி மற்றும் இரக்கத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளன. இது தவிர, அவர் பத்து புத்தகங்களை எழுதியுள்ளார். அவை  எழுத்து நடை மற்றும் கருத்துத் தேர்வு ஆகியவற்றில் தனித்துவம் பெற்றுள்ளன.. இந்தியாவின் பழமையான இலக்கிய இதழ்களில் ஒன்றான பாஷபோஷினியில், அவர் கடந்த ஆறு ஆண்டுகளாக ஒரு கட்டுரையாளராகவும், ஊடகவியலாளராகவும்  தொழில் வாழ்க்கையில் 15 ஆண்டுகளாகவும் உள்ளார். அவர் இப்போது கேரளாவின் புகழ்பெற்ற இதழான மலையாள மனோரமாவில் மூத்த துணை ஆசிரியராகப் பணிபுரிகிறார். இலக்கிய உலகில், அவர் தன்னைச் சுற்றியுள்ள வாழ்க்கையை ஒரு தூண்டுதலாகக் கருதுகிறார்.

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button