இணைய இதழ் 107சிறுகதைகள்

கர்ணம் – கவிதைக்காரன் இளங்கோ

சிறுகதை | வாசகசாலை

ன்னலின் மரச் சட்டகத்தின் கீழ் சுவர் விளிம்பில் சிறிய இடைவெளி இருந்தது. அச்சிறு இடைவெளியினூடே சல்லி வேர் ஒன்று மெலிந்த உருவில் படர்வதற்காக வெளிப்பட்டு தன் இளம் நுனியை பிடிமானம் வேண்டி காற்றில் அசையவிட்டுக் கொண்டிருந்தது. ஜன்னலின் முன்னால் போடப்பட்டிருந்த எழுதும் மேஜை குமரனுக்கு உரிமையானது. அதன் வலது மூலையில் கொஞ்சம் புத்தகங்கள் அடுக்கப்பட்டிருந்தன. ஒரு தண்ணீர் பாட்டில் ஊதா நிறத்தில் நீர்க்கோட்டை அளவிட்டிருந்தது. மேஜையின் மத்தியில் ஏ4 காகிதக் கற்றையும் அதன்மீது ஒரு பேப்பர் வெயிட்டும் பேனாவும் வைக்கப்பட்டிருந்தது. மேஜையின் இடப்பக்கத்தில் இருந்த ஒரு பீங்கான் குடுவைக்குள்ளிருந்த பென்சிலின் தலைக்கும் சிகப்பு நிற ஸ்கெட்ச் பேனாவின் தலைக்கும் நடுவே சிலந்தியொன்று புதிதாக ஒரு வலைநூல் பாலத்தை உருவாக்கியபடியே அங்கிருந்து வேறெங்கு தாவலாம் எனக் கணக்கிட்டுக் கொண்டிருந்தது. மர நாற்காலி கச்சிதமாக மேஜையின் கீழ்ப்பகுதிக்குள் தள்ளி வைக்கப்பட்டிருந்தது. மற்றபடி தூசு துணுக்கு எதுவும் இல்லாமல் மேஜை சுத்தமாக இருந்தது.

அந்த மேஜையை வீட்டில் உள்ள வேறு யாரும் பயன்படுத்த மாட்டார்கள். மேஜையின் முன்னே குமரன் இல்லையென்றால் மொட்டைமாடியில் நின்றபடி பரபரப்பாய் உள்ள தெருவை வேடிக்கை பார்த்திருப்பான். அல்லது ஸ்டான்லி மருத்துவமனையின் ஓ.பி வார்டில் நோயாளிகள் காத்திருக்கும் மர பெஞ்சில் உட்கார்ந்திருப்பான். அதுவுமில்லையென்றால் சென்ட்ரல் ரயில்வே நிலையத்தின் காத்திருப்புப் பகுதியில் உட்கார்ந்திருப்பான். உலகை வெறுமனே வேடிக்கை பார்ப்பதன் அர்த்தத்தை, அர்த்தமற்று போய்விடாதபடி அதனையே தனக்கான தேடலின் நுனியாக அவனுடைய மனம் பற்றிக்கொண்டு ஆறு மாதங்கள் ஆகிறது. அதற்கு காரணம் ஒரு சம்பவம்.

ரு நாள். இருள் கவியத் தொடங்கிய நேரம். பழைய ஜெயில் சாலையின் மாடிப்பூங்காவையொட்டி வெளிப்பக்கம் சாலையோரப் பாதையில் நடந்து கொண்டிருந்தான். கான்க்ரீட் சதுரங்களுக்கு நடுவே வேரூன்றி வளர்ந்திருந்த பெயரற்ற மரத்திற்கு அப்பால் உள்ள பஸ் ஸ்டாப்பின் அருகே சிறிய கும்பலொன்று தெருவிளக்கின் மங்கிய வெளிச்சத்தில் சூழ்ந்திருந்தது. பக்கத்தில் போய் பார்த்தபோது டி.வி.எஸ் 50 பழைய மாடல் வண்டியொன்று ஓரத்தில் சரிந்து கிடந்தது. அதன் முன்பக்க சக்கரம் வளைந்து கம்பிகள் தெறித்திருந்தன. கொஞ்சம் கண்ணாடிச் சில்லுகள் சற்றுத்தள்ளி சிதறிக் கிடந்தது. அதனருகே ஒரு மனிதர் அசைவற்று விழுந்து கிடந்தார். ஒரு காலில் செருப்பு இருந்தது. மற்ற காலின் பாதத்தின் கீழ்ப்பகுதி பிளந்து மடிந்திருந்தது. அப்போதுதான் விபத்து நடந்திருக்க வேண்டும். விபத்தை ஏற்படுத்திய வண்டி அங்கே இல்லை. சூழ்ந்து விட்டிருந்த யாருக்கும் என்ன செய்வதென்று புரியவில்லை. குமரன் அத்தனையையும் ஏககாலத்தில் உள்வாங்கிக்கொண்ட திகைப்போடு பார்த்திருந்தான். அப்போது சாலையின் எதிர்ப்பக்கத்திலிருந்து ஒரு ஆட்டோக்காரன் ஓடிவந்தான்.

“என்னா சார்.. பாத்துக்கினு இருக்குறீங்க தூக்குங்க.. பக்கத்துலதான ஆஸ்பத்திரி போயிரலாம்..”

“போலீஸ் வரணும் தம்பி..”

ஒருவர் விபரமாகச் சொன்னார்.

“போயா..ங்.. தம்பி…! இப்டிக்கா வந்து ஒரு கை கொடுப்பா..”

குமரனைப் பார்த்து அவன் சொன்னதும் அவனுக்கு எதுவும் யோசிக்கத் தோன்றவில்லை. சட்டென்று முன்னே போய் அவருடைய கால்களைப் பிடித்துத் தூக்கினான். பிளந்த பாத நுனி ஆடியது. ஆச்சரியமாக அதிலிருந்து இரத்தமே வழியவில்லை. ஆட்டோக்காரன் அவருடைய இரு கைகளுக்குள்ளும் தன் கைகளை நுழைத்து வாகாகத் தூக்கிக் கொண்டான். அவருடைய அதிக உடல் எடை அவனிடம் போயிற்று. அவருடைய தலையில் இரத்தம் கசிந்து கொண்டிருந்தது. இருவரும் அவரைத் தூக்கிக்கொண்டு எதிர்ப்பக்க சாலையில் நின்றிருந்த அவனுடைய ஆட்டோவிற்குள் பின்பக்கம் கிடத்தினார்கள். குமரன் செய்வதறியாது நின்றான்.

“பார்த்துப் போ தம்பி..”

ஆட்டோ, கிளம்பிப் போயிற்று. அந்த மனிதருக்கு சுவாசம் இருந்தது. உடலில் சூடு இருந்தது. நினைவு இல்லை. தலைப்பகுதியிலிருந்து வெளியேறிய இரத்தம் ஆட்டோக்காரனின் சட்டையின் முன்பகுதியில் பரவியிருந்ததை இருட்டில் குத்துமதிப்பாக பார்க்க முடிந்தது. இரத்தத்தின் நிறம் சிகப்பாகத் தெரியவில்லை. வியர்வை பரவிய ஈரம் போலத்தான் அவனுடைய சட்டையில் ஒட்டியிருந்தது. குமரன் மீண்டும் சாலையைக் கடந்து விபத்து நடந்த பக்கமாக வந்தான். கூடியிருந்த கும்பல் ஆட்டோ போன திசையைப் பார்த்திருந்துவிட்டு, வளைவில் அது திரும்பி மறைந்ததும் கலைந்து விட்டார்கள்.

சரிந்து கிடந்த டி.வி.எஸ் 50-யிலிருந்து பத்தடி தள்ளி தார்ச்சாலையின் மையத்தில் தொடங்கி அவருடைய இரத்தம் கோடு போட்டது போல வழிந்து பக்கவாட்டு சாக்கடைப் பாதையில் போய் முடிந்திருந்தது. அவ்வளவுதான். அது ஒரு கரிய நிழல்கோடு. மங்கிய வெளிச்சத்தில் அந்தக் கோடு பளபளத்திருந்தது. சற்று தள்ளி வறண்ட சாக்கடைக் கால்வாயில் இன்னொரு செருப்பு கிடந்ததைப் பார்த்தான். கொஞ்சம் நேரம் அப்படியே தயங்கி நின்றான். அவர் உடல்நலம் சரியாகி தேறிவிட்டால் இதைத் தேடி வருவாரா? அதுவரை இந்த ஒற்றைச் செருப்பு இங்கேயே கிடக்குமா?

ஆட்டோ ரவுண்டானாவில் திரும்பி அடுத்த வளைவில் இருந்த ஸ்டான்லி மருத்துவமனைக்குத்தான் போயிருக்கும். அதைத் தாண்டி ரயில்வே கேட்டைக் கடந்துதான் குமரன் தன் வீட்டுக்குப் போயாக வேண்டும். சுற்றும் முற்றும் பார்த்தான். எதிர்ப்பக்க பஸ் ஸ்டாப்பில் மூன்று பெண்கள் நின்றிருந்தார்கள். அவர்கள் இவனையே பார்த்திருந்தார்கள்.

இந்தப் பிரதானச் சாலை மேற்கே மூலக்கொத்தளத்திலிருந்து தொடங்கி கிழக்கே கடற்கரைச் சாலையில் உள்ள துறைமுகத்தை நோக்கிப் போகிறது. நடுவே உள்ள முதல் ரவுண்டானா, தங்கசாலை மணிக்கூண்டு. இங்குள்ளது இரண்டாவது ரவுண்டானா. அதன் இடப்பக்கம் தெற்குநோக்கி உயர்நீதி மன்றத்தை குறிவைத்து பிரகாசம் சாலையாக நீள்கிறது. அதன் நடுவே பிராட்வே உள்ளது. ரவுண்டானாவிலிருந்து வலப்பக்கம் வடக்கு நோக்கி பழைய வண்ணாரப்பேட்டைக்கு எம்.சி ரோடு போகிறது. ஜார்ஜ் டவுன் பகுதியின் விளிம்பாக பழைய சிறைச்சாலை சாலை என்னும் பெயரையும் தாங்கி நிற்கிறது இந்தப் பிரதானச்சாலையின் முதல் பாதி.

விபத்து நடந்த இடத்திலிருந்து ஆட்டோ திரும்பிப்போன வளைவினையொட்டி நூறு மீட்டர் நடந்தால் பெரிய சுற்றுச்சுவருள்ள வளாகத்தில் அமைந்திருக்கும் கட்டடத்தின் பெயர் மணிகர் சௌல்த்ரி. தமிழில் சொல்வதென்றால் மணியக்காரர் சத்திரம். அதனால்தான் அந்தச் சாலைக்கு எம்.சி. ரோடு என்று பெயர். பதினெட்டாம் நூற்றாண்டில் நிறுவப்பட்ட அக்கட்டடத்தின் முக்கியத்துவம் அறிந்த குமரனுக்கு அதைக் கடக்கும்போதெல்லாம் இனம்புரியாத வரலாற்றுத் தொடர்ச்சி மிகுந்த உணர்வொன்று மனத்திற்குள் எழுந்து அடங்கும். ஹைதர் அலியை பாடத்தில் படித்ததற்கும் கிழக்கிந்திய கம்பெனியின் பிரட்டிஷாருடன் அவன் ஏற்படுத்திக்கொண்ட முதல் ஆங்கிலோ-மைசூர் போர் நிறுத்த ஒப்பந்தத்தின் காரணங்களைப் பின்னர் படித்தறிந்ததற்கும் ஊடே கைமாறியிருக்க வேண்டிய மெட்ராஸில் பின்னர் ஏற்பட்ட பஞ்ச காலத்தை சமாளிக்க உருவான கஞ்சித்தொட்டி ஆஸ்பத்திரிக்கும் உள்ள சம்பந்தம் என்பது இரண்டு நூற்றாண்டுகளைக் கடந்தும் அவ்விடத்தில் உறைந்திருப்பதை அவனால் எப்போதும் ஜஸ்ட் லைக் தட் கடந்து போக முடிந்ததில்லை. அவ்விடம், அப்போதிலிருந்து இப்போது வரை ஆதரவற்ற, முதியோர்களுக்கான இலவசக் காப்பகமாக பரமாரிக்கப்பட்டு வருகிறது. ஆனால், உருவான நோக்கம் சிதையாத வரலாற்றுத் தடம்.

குமரன், ஓர் எட்டு மருத்துவமனைக்குள் நுழைந்து பார்த்து விடலாம் என்னும் முடிவில் விறுவிறுவென சாலையைக் கடந்து உள்ளே போனான். பிரதான நுழைவைத் தாண்டி வலதுபக்க ஒதுக்கில் பாதையை இடைமறிக்காமல் ஒரு ஆம்புலன்ஸ் நின்றிருந்தது. அதற்கு அடுத்ததாக அந்த ஆட்டோ நின்றிருந்தது. உள்ளே போனதும், ஏற்கனவே நன்கு அறிந்த பாதையை நூல் பிடித்தபடி அவசர சிகிச்சைப் பிரிவை நோக்கி நடந்தான்.

அங்கே, ஆண்களும் பெண்களுமாக ஆட்கள் அங்குமிங்குமாக இருந்தார்கள். அவ்விடத்தில் ஓர் அமானுஷ்ய அமைதி சூழ்ந்திருந்தது. மஞ்சள் நிற டங்க்ஸ்டன் வெளிச்சத்தில் கணிசமான நிழல் படிந்திருந்த எவர் முகங்களிலிருந்தும் எதையும் அறிந்துகொள்ள அவனால் முடியவில்லை. அவனுக்கு ஏற்கனவே நெஞ்சில் பாறாங்கல்லைத் தூக்கி வைத்ததைப் போல இருந்தது. ஆட்டோக்காரன் தண்ணீர் பாட்டிலிலிருந்து நீர் அள்ளி சட்டையில் இருக்கும் இரத்தக் கறையைப் போக்கிக் கொண்டிருந்தான். அவன் குமாரனைக் கவனிக்கவில்லை. குமரன் அவனை நெருங்கி தண்ணீர் பாட்டிலை வாங்கிக் கொண்டான். அவனுக்கு வாட்டமாய் கொஞ்சம் கொஞ்சமாக நீரை வார்த்தான். அவனுக்கது உதவியாக இருந்தது. சற்று நேரத்திற்கு இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை.

கொஞ்சம் தள்ளி ஒதுக்குப் புறமாகப் போய் நின்றுகொண்டு பாண்ட் பாக்கெட்டிலிருந்து பீடியெடுத்துப் பற்ற வைத்துக் கொண்டான். குமரனை பார்த்து கையை ஆட்டி அருகே வரும்படி அழைத்தான்.

“படிக்கிறியா..?”

“தியாகராயா காலேஜ்ல..”

புகை காற்றில் கலைந்து பறந்தது. பீடியின் துர்நாற்றம் குப்பென்று வீசியது. அவன் தலையை மையமாக ஆட்டிக்கொண்டான்.

“அந்த ஆளு.. பாக்கெட்ல ஃபோன் நம்பர் இருந்துச்சி.. வூட்டுக்கு சொல்லிட்டாங்க.. இங்கதான் ஹோமுக்கு யாரையோ பாத்துட்டு போலாம்னு வந்தாராம்.. இப்டி ஆயிடுச்சி.. விதியப் பாரு.. லோல் படணும்னு இருந்தா ஒன்னியும் பண்றதுக்கில்ல.. யாருக்கு இன்னா மனசு நோவோ..”

குமரன் அமைதியாக இருந்தான். அதற்கு என்ன பதில் சொல்லுவதென்று தெரியவில்லை. இதெல்லாம் எந்த மாதிரியான நாடகக் கணக்கு என்பதும் புரியவில்லை.

“போலீஸ்கிட்டயும் சொல்லியாச்சி.. கொஞ்ச நேரத்துல வந்துருவாங்க.. நீ இங்க நிக்காத கெளம்பு.. நான் பாத்துக்கறேன்.. டக்குன்னு வந்து ஹெல்ப் பண்ண பாரு.. அத மட்டும் வுட்டுறாத.. கெளம்பு..”

“ண்ணா.. ஒங்க பேரு..?”

“அது.. என்னாத்துக்கு.. உன்ட்ட கேட்டனா?”

குமரன் அவனை நோக்கி கையை நீட்டினான். அவன் ஒரு நொடி குமரனை ஏறிட்டுப் பார்த்துவிட்டு கைக்குலுக்கினான். குமரன் தலையை ஆட்டிவிட்டு திரும்பி நடந்தான். கையில் ஒட்டிய ஈரம் பிசுபிசுவென இருந்தது.

ரயில்வே கேட்டைக் கடக்கும்போது எலக்ட்ரிக் ட்ரெயின் ஒன்று கடந்து போவதற்காக ஆட்கள் பொறுமையற்று நின்றிருந்தார்கள். தண்டவாளங்களின் கருமை, காத்திருந்த வாகனங்களின் அரைகுறை வெளிச்சம் பட்டு பளபளவென நீண்டு வெண்ணிற உலோகக் கோடாகி வேறெங்கோ இருளுக்குள் ஓடி ஒளிந்திருந்தது. தூரத்தில் அலறியபடி வந்து கொண்டிருக்கும் ட்ரெயினின் தடதடக்கும் ஓசை மருத்துவமனை வளாகம் முழுவதையும் தழுவித்தான் ஒவ்வொருமுறையும் கடக்கும்.

அக்கணம் குமரனின் மனத்திற்குள் திசையற்ற வெளியொன்று தடதடவென பல நூறு குதிரைகளின் குளம்பொலியாய் புழுதிச் சிதறக் கூட்டியெடுத்து வார்த்தைகளால் அவனைப் பிடித்து அரூபமாக வலை பின்னத் தொடங்கியதை புதிய அனுபவமாக்கி வீடு போய் சேர்ந்தான்.

ந்நிகழ்வின் தாக்கத்திற்குப் பிறகு அவன் கண்ணில் படுகிற சுற்று வட்டாரமே முற்றிலும் வேறாகிப் போனது. அனைத்தின் பின்னும் ஒரு வரலாற்றுத் தடம் மறைந்திருந்து அவனுடைய இளம் மனத்தில் விஸ்வரூபமெடுத்தது. ஜனங்கள் கூடும் பகுதிகள் ஒவ்வொன்றும் அவனுடைய இலக்காகிப் போனது. நண்பர்களோடு நேரம் செலவழிப்பதைத் தாண்டி, தனக்கான தேடலாகத் தனித்து அலையும் இந்தப் பழக்கத்திற்குள் நுழைந்து வெகு தொலைவு போயிருந்தான். வார இறுதி நாட்களின் மெரீனா கடற்கரைக் கூட்டமும் வருடத்திற்கு ஒருமுறை நடைபெறும் புத்தகக்காட்சியின் காணும் பொங்கல் நாளும் தீவுத்திடலில் நடைபெறும் பொருட்காட்சியும் போக அவ்வப்போது லோக்கல் காய்கறிக்கடை, மீன் மார்க்கெட், கறி மார்க்கெட் போன்ற இடங்களும் அவனுக்கு முக்கியத்துவமாகியிருந்தன.

மனித உடல்மொழிகளில் ஏற்படுகிற வித்தியாசங்களை இடத்திற்கு இடம் அவை மாறுபடுகிற காரணங்களை யோசித்தபடியே காலாற எங்கெங்கோ நடந்து திரிந்தான். மெட்ராஸின் பர்மா பஜார் கடைவீதியைப் போலவே உயர்நீதி மன்றத்தின் எதிர்ப்பக்க நடைபாதையில் பாரிமுனை கட்டடம் தொடங்கி மேற்கே பூக்கடை காவல் நிலையம் வரை நீண்டு விரிந்திருந்த ரகவாரியான கடைகள் ஒவ்வொன்றையும் நோட்டம் விட்டபடியே அவற்றின் வியாபாரக் கூச்சலை உள்வாங்கிக்கொண்டே எந்தவொரு பொருளையும் கவனமாகத் தொட்டுவிடாமல் அதே நேரம் ஆட்களையும் இடித்து விடாமால் வெறும் தோள் உரசலோடு லாகவமாய் நிதானமாய்க் கடந்து போவான்.

நகர்வலம் ஓய்ந்துபோய் அவனுடைய மேஜையின் முன் வந்தமர்ந்து கண்களை மூடினால், உள்ளுக்குள்ளே பலதரப்பட்ட குரல்கள் கலந்துகட்டி கேட்கும். குறிப்பிட்ட உரையாடல்களின் சிறு நுனிகளை நினைவடுக்கின் மேல்நோக்கி மனத்தின் ஆழத்திலிருந்து மெல்ல மெல்ல.. வெளியே இழுத்துப் பிரித்து எடுத்துக்கொள்ள அவனால் முடிந்தது.

அவற்றை நோக்கமேயில்லாமல் பக்கம் பக்கமாக எழுதிப் பார்ப்பதில் தொடங்கிய எழுத்துப் போதை அவனை தன்வசம் இறுகப் பிடித்து வைத்துக்கொண்டது. வாசிப்பும் எழுத்தும் கற்பனைக்குத் தீனி போடும் முகமாக அவனுடைய எண்ணவோட்டங்களைத் தாறுமாறாய் அலையவிட்டது. அவனால் ஒரு கட்டுமானத்திற்குள் அதைக் கொண்டுவர முடிந்ததேயில்லை. மல்லுக்கட்டிப் பார்த்துவிட்டு அதன்போக்கில் விட்டுவிட்டான்.

மொட்டைமாடி சிமிண்ட் நீர்த்தொட்டியின் பக்கவாட்டில் சிறிய அளவில் ஒரு நீர்க்கசிவு இரண்டு மாதங்களுக்கும் முன்பே உருவாகி இருந்தது.

அதைச் சரி செய்து தருவதற்கு மராமத்து வேலைகளில் கெட்டிக்காரரான புஷ்பராஜிடம் சொல்லி வைத்திருந்தார்கள். அவர் வந்து பார்த்துவிட்டு வெயில் காலம் வரும்வரை காத்திருக்கலாம்.. நான் சொல்லும்போது தொட்டியைக் காலி செய்து வெயிலில் காய வைத்தால் போதும் என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார். இடைப்பட்ட நாட்களில் நீரின் ஓதம் மாடியின் சுற்றுச் சுவர்களுக்குள்ளே பரவியதில் சுவரிடுக்கில் காக்கை எச்சத்தால் சிறிய செடியொன்று எப்போதோ முளைத்திருந்தது. அரசச் செடி. இரண்டு சிறு இலைகளைத் துளிர்த்திருந்த அதன் பச்சைமையைக் குமரன் தன் விரல்களால் வருடிக் கொண்டிருந்தபோது எதிர்வீட்டு ஓட்டுக் கூரையின் நிழல் ஒதுக்கலில் இருந்து தேன் நிறப் பூனையொன்று அவனையே வைத்த கண் எடுக்காமல் பார்த்தது. அதுவொரு பகல் வேளை.

அப்போதைக்கு, செடியைப் பிய்த்துப் போடாமல் அப்படியே விட்டுவிட்டான். எப்படியும் புஷ்பராஜ் அதைக் களைந்து விடுவார் என்பதும் அவன் அறிந்த விஷயமே. ஆனால், அவனுக்குத் தெரிந்தது வீட்டிற்குத் தெரிந்துவிட்டால் பெரிய பஞ்சாயத்தாக மாறும். யார் பார்வைக்கும் சட்டெனப் படாத இடத்தில் அது முளைத்திருந்தது. அவனுடைய அம்மாவின் கருணையால் மாடி முழுவதும் பூந்தொட்டிகளில் செடிகள் வளர்கிறபடியால் இது தனிக்கவனத்திற்கு வராது என்பது அவனுடைய கணக்கு. அதிலும் மொட்டைமாடியை குமரன் மட்டும்தான் புழங்குவான். ஏழாம் வகுப்பு படிக்கும் தங்கைக்கு மொட்டைமாடியில் அனுமதி கிடையாது.

இந்நிலையில்.. மேஜையை ஒட்டியிருக்கிற ஜன்னல் மரச்சட்டகத்தின் கீழ் சுவர் விளிம்பிலுள்ள சிறிய இடைவெளியில் மாடியிலுள்ள அரசச் செடியின் சல்லி வேர் தன் நுனிவிரலை நீட்டி அறைக்குள்ளே அபயம் தேடிக்கொண்டிருக்கிறது. அது இந்த மேஜையைப் பற்றிக்கொண்டால் முன்னெப்போதோ உயிரோடிருந்த மரத்தின் ஆன்மாவைத் துழாவி நூற்றாண்டைக் கடந்து பின்னோக்கி போய் அங்கேயும் வேர் விடுமோ என்று யோசித்தான்.

மறுவாரம் குமரனின் வீட்டில் முன்பகலில் பரபரப்பாகக் கிளம்பிக் கொண்டிருந்தார்கள். குமரனுடைய தாத்தாவின் நினைவு நாளுக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு எதிரிலிருக்கும் அந்த ஆதரவற்ற முதியோர்கள் காப்பகத்தில் அவர்களுக்கு மதியவேளை உணவு பரிமாற ஏற்பாடாகியிருந்தது. குமரனின் அம்மாவுடைய ஏற்பாடு அது. வருடா வருடம் தவறாமல் நடக்கிற நிகழ்வு. அவர்கள் குடும்பமாய் புறப்பட்ட வேளையில் புஷ்பராஜ் வாசல் ஏறி காலிங் பெல்லை அழுத்தினார்.

சிறிய பிரார்த்தனையோடும் நன்றி செலுத்துவதோடும் பெரியவர்களுக்கு அந்த மதியம் தொடங்கியது. ஆண், பெண் என அம்முதியோர்கள் கிட்டத்தட்ட அறுபது பேர் இருந்தார்கள். தன்னுடைய தாத்தாவை ஒரேயொரு முறை மனத்திற்குள் நினைத்துக் கொண்டான். அவனுடைய அம்மாவும் தங்கையும் உணவைப் பரிமாறினார்கள். குமரன் அனைத்தையும் வேடிக்கை பார்த்தபடி பின்பக்கம் கைக்கட்டி அமைதியாக நின்றிருந்தான். பெரியவர்கள் ஒவ்வொருவராக வரிசையில் நின்று தட்டுகளில் உணவை வாங்கிக்கொண்டு தங்கள் இருப்பிடம் நோக்கி நகர்ந்துகொண்டிருந்தார்கள்.

ஒருகாலத்தில் இவர்கள் எல்லோருக்கும் யாரோ ஒருவர் உறவென துணை இருந்திருக்கக்கூடும். இப்புதிய உறவுநிலைகளை சந்தர்ப்பம் மட்டுமே நிர்ப்பந்திப்பதில்லை. ஆனால், அவற்றுக்கு ஓர் அர்த்தத்தை உருவாக்கி வழங்கிட முன்னெப்போதோ யாரோ முன்வந்து செய்த ஒரு செயலின் நீட்சியாக அந்தத் தருணம் இருந்தது.

காப்பகத்தின் வளாகத்தில் மரங்கள் நிறைந்திருந்தன. எல்லாமே வயதான மூத்த மரங்கள். அவற்றின் உடல்மீது போர்த்தியிருந்த உயிர்ப்பட்டைகள் கருமையேறி தடித்திருந்தன. அம்மரங்களின் வேர்கள் மண்ணுக்குள் புதைந்தபடி சிறிய ஈரம் கிடைத்தாலும் தம்மிடமுள்ள சல்லி வேரை எதன்மீதாவது படரச் செய்து இன்னும் கொஞ்சம் காலம் தன்னை ஆழ ஊன்றிக்கொள்ள நூற்றாண்டுகள் கடந்தும் விடாப்பிடியாக முயல்கின்றன.

இந்நேரம் புஷ்பராஜ் தொட்டியின் நீர்க்கசிவை சரி செய்திருப்பார். அந்த அரசச் செடியையும் நிச்சயம் பிடுங்கி வீசியிருப்பார். இருந்தாலும், அவனுடைய மேஜையை நோக்கி விரலை நீட்டத் தொடங்கியிருக்கும் அதன் சல்லி வேர், இன்னும் கொஞ்சம் காலத்திற்கு அவனுடைய வீட்டில் யாருக்கும் தெரியப் போவதில்லை. அவன், மேஜையிலிருந்த புத்தகங்களை நகர்த்தி வைத்து அதை மறைத்திருந்தான்.

வெயில் வேண்டி மண்தரையில் படுத்துக் கிடந்த கருப்பு நிற நாய், தட்டில் உணவோடு திரும்பிக் கொண்டிருக்கும் முதியோர்களையும் குமரனையும் ஒருமுறை அண்ணாந்து பார்த்துவிட்டு படுத்துக் கொண்டது.

elangomib@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button