இணைய இதழ் 107சிறுகதைகள்

கற்புக் கோட்டில் சீதைகள் – நிலா பிரகாஷ்

சிறுகதை | வாசகசாலை

அம்மன் கோயில் எதிரே உள்ள பூக்கடையில் நிற்கையில் நெற்றி நிறையப் பொட்டு தலையில் மல்லிகைப்பூவுடன் மங்களகரமாக நின்றிருந்தாள் மாலதி.

“முழம் எவ்வளவுமா ?”

“ஐம்பது ரூவா எத்தனை முழம்மா ?”

“மூணு முழம் கொடுங்க ..”

தன்னிடம் பூ வாங்க நின்றிருந்த பெண்ணுக்கு கொடுத்து விட்டு கோயிலின் உள்ளே கடவுளுக்கு இடைவிடாது அபிசேகம் நடக்கையில் மட்டுமே இங்கே அமர்வதற்கு சிறிது ஓய்வு கிடைக்கிறது என எண்ணியவளாக அந்த மரப்பலகையில் அமர்ந்தாள் மாலதி.

“ஏமே, நாஷ்டா துன்னியா ??!!”

“இல்லக்கா இனிமேல்தான் சாப்பிடனும்”

“போ போய்த் துன்னுட்டு வா ..நான் பார்த்துகீறேன் ..உன் புருசன் உன்னை இங்கே இட்டாந்து ஆறு வருஷமாச்சு இன்னும் எங்க பாசை வரல உனுக்கு.”

பக்கத்தில் தேங்காய் கடை போட்டிருந்த மயிலாத்தாள் சொல்ல அவரிடம் புன்னகைத்தவளாகச் சற்று மறைவாக அமர்ந்து காலையில் டிபன் பாக்ஸில் போட்டு அடைத்து இருந்த இட்லியை எடுத்து உண்ணத் தொடங்கினாள். அது அவளது மாமியார் வைத்து நடத்தி வந்த பூக்கடை. அவளது திருமணம் பெரிதாக காதல் திருமணம் என்று எல்லாம் இல்லை. தாய் தந்தை இல்லை. உறவினர் வீட்டில் தங்கியிருந்து வேலைக்காரியாகவே வாழ்ந்து வந்தவளுக்கு கதிரேசனின் காதல் மொழி அவள் அனுபவித்து வந்த நரக வாழ்க்கையை ஏதோ ஒரு விதத்தில் தப்பித்து விடும் மந்திரமாகவே தெரிந்தது.

பதினெட்டு வயதான தனக்கு உறவினர்கள் காட்டிய நாற்பது வயது ஐம்பது வயது வரன்கள் கதிரேசனுடன் அவளுடைய காதல் திருமணத்திற்கு வழி வகுத்தது‌. அவனது சொந்த ஊரான சென்னை வந்து ஐந்தாறு வருடங்கள் ஓடி விட்டது. கல்யாணமான ஆறு மாதங்கள் மனைவியை நன்றாகத்தான் வைத்திருந்தான். முதலில் வாரத்திற்கு இரு நாட்கள் குடித்து வந்தான். பின் நான்கு நாட்கள்.. பின் அனைத்து நாட்களும் என்று ஆனது இதில் கல்யாணமான ஒரு வருடத்தில் மகள் மதிவதனி வேறு பிறந்து விட்டாள்

வேலைக்கே செல்லாது குடித்து விட்டு வரும் கணவனை வெறுத்து விட்டு எங்கே செல்வது என்ற கேள்வி அவளை அந்த நரக வாழ்க்கை சங்கிலியில் பிணைத்து வைத்தது. மாமியார் கமலா பாவப்பட்ட ஜென்மமாகவே அவள் கண்களுக்குத் தெரிந்தாள். முதலில் குடிகாரக் கணவன்.. பின் குடிகார மகனிடம் நிதம் போராடுகிறாள். அவரது பூக்கடைக்குச் சென்று பூ விற்க ஆரம்பித்தாள். வருமானம் வர வர கணவனின் வன்முறையும் அதிகமானது. சில சமயங்களில் அவனை அடித்துக் கூட பணத்தை மீட்டு இருக்கிறாள். நரிகளைப் போல் உடலுக்கு அழையும் மிருகங்களுக்கு நடுவில் செத்துச் செத்துச் சம்பாதிக்கும் பணத்தை சந்தேக வார்த்தைகளைக் கொட்டி கொட்டி பிடுங்கிச் செல்வான்

“அந்த பிகிலு உன்னைப் பார்த்தா மட்டும் கடையில பூ வாங்கறானாமேபூ மட்டும் விக்கிறியா இல்லை… ”

பிகிலு என்னும் பிரபு அந்த பேட்டையின் ரௌடி. அடியாள் என்னும் பெயரில் அடங்கக்கூடியவன். வயதான தாயுடன் அவர்கள் வசிக்கும் குடிசை மாற்று வாரியக் குடியிருப்பு கீழ்தளத்தில் வசிக்கிறான் . எப்பொழுதும் அடிதடி திருட்டு கேஸ் என அவனைப் பற்றி கவலைப்பட்டுக் கொண்டே இருக்கும் மணியம்மாளை அவள் பல முறை பார்த்து இருக்கிறாள். அவனை அதிகம் பார்த்தது கூட இல்லை அவள். ஒரு முறை மணியம்மாளும் கமலாவும் அவளைப் பற்றிப் பேசியது கூட வீட்டில் சண்டை ஆனது.

“உன் மருமகளாட்ட ஒருத்தியை இட்டாந்தான்.. அதுக்கு அல்பாயுசு…போயிடுச்சு..”

அவர்கள் பேசியது அவளது கணவனின் மனதில் சந்தேகத்தை விதைத்தது.

“உன்னை மாதிரியே இருப்பாளா…இல்லை உன்னைத்தான் வரச் சொல்றானா?”

அவனது குரலில் முதன் முதலில் பிகிலைப் பார்த்தது நினைவு வந்தது.

அன்று ஒரு நாள் எரிவாயு உருளை போடும் சிறுவன் அவளிடம் சண்டையிட்டுக் கொண்டு இருந்தான்.

“இந்தாருக்கா.. மேல் மாடி ஏறதுக்குள்ள ஃகேர் ஆகுது..நீனே தூக்கிட்டு போ”

அவளுக்கு அவனிடம் கெஞ்சவோ சண்டையிடவோ நேரமில்லை. அவள் மாமியாருக்கு மருந்து கொடுத்து விட்டு கடைக்குச் செல்ல வேண்டும். இதை தூக்கிச் செல்ல கணவனிடம் கேட்க முடியாது. கடந்த ஒரு வாரமாக குடியிலேயே மிதக்கிறான்.

“சரிப்பா.. கீழே மணிக்கா வூட்ல வைச்சுட்டு போ”

அவள் சொல்லி விட்டு ஐந்தாவது மாடியில் இருக்கும் தன் வீட்டிற்குள் நுழைந்தாள்.

“கேஸ் இல்லை.. தண்ணீ இல்ல… மினுக்கிட்டு போற. பசிக்கு துண்ண வேணாவா?”

அவனின் அமிலச் சொற்கள் அவளிடம் எந்த எரிச்சலையும் உண்டு பண்ணவில்லை. போதையில் கிடந்த அவனுக்கு உணவைக் கொடுத்து மாத்திரையைத் தர அவளது சரிந்த மேலாடையையும் திமிர்ந்த அழகையும் வெறித்தவன் மீண்டும் தன் வாயில் இருந்து அமிலத்தை உமிழ்ந்தான்.

“இப்படி கொழுத்துக் கெடக்க. .கடையில  கெடைக்கற துட்டு இப்படி உடம்பு வளத்தப் பத்தாது…எவன்ட போற ..?”

அவனின் ஏச்சுக்கு பழகிப் போனவள் அவனிடம் எதுவும் பேசாது இருக்க அவளது மாமியார் மணிதான் ஆதரவு குரல் எழுப்பினாள்.

“ஏன்டா பாடு, அது உனுக்கு சோறு போடறது பத்தாதுனு …”

கமலாவின் வார்த்தை அவனை இன்னும் வெறியாக்க இருவரும் ஏகத்துக்கு பேசத் தொடங்கினர் .கணவனும் மாமியாரும் காதில் கேட்கக் கூசும் வார்த்தைகளால் சண்டையிட அந்த வீடு உயிர்க் காற்று ஏதுமின்றி முற்றிலும் வெற்றிடமானது போல் மூச்சு முட்டியது அவளுக்கு. தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ள வெளிவந்தவள் படிகள் பிடிமானச் சுவரில் சாய, சற்றுமுன் தன்னிடம் சண்டையிட்ட இளைஞன் தோளில் எரிவாயு உருளையைச் சுமந்து வந்து கொண்டு இருந்தான்.

அவள் ஆச்சர்யமாகப் பார்க்க அவன் முனகிக்கொண்டே கீழிறங்க மாலதியின் கண்களில் அவன் தெரிந்தான். பிகிலு. அழுக்கு வேட்டி, நீண்ட தாடி. அடர்ந்த தேசம் வெட்டப்படாதிருக்க முறுக்கிய மீசையை அவளைக் கண்டதும் சரி செய்து விட்டு மறைந்து போனான். அவள் நினைவுகளில் மூழ்கியிருக்க கதிரேசன் மீண்டும் பேசினான்.

“என்ன என்னால ஒண்ணும் முடியலைனு ..”

அவனது அடுத்த வார்த்தைகளை ஊகித்தவளாக சீறினாள் மாலதி.

“டேய், செருப்புப் பிஞ்சிடும். நான் சரியா இருக்கிறது உனக்காகவோ இல்லை ஊருக்காகவோ இல்லை. என் உடம்பு மேல, என் மேல நான் வைச்சுருக்கிற மதிப்பு. காசை எறியறேன்.. பொறுக்கிட்டு போ. புள்ளை வர்ற நேரமாச்சு”

கடினப்பட்டு உழைத்து தனது பெண்ணை கான்வென்ட் ஸ்கூலில் சேர்த்து இருந்தாள். அன்று காசை எடுத்துக் கொண்டு போனவன் குடித்து விட்டுப் போதையில் வண்டி ஓட்டி கால் முடக்கமாகி இரு வருடமாகி இருந்தது.

இந்த இரு வருடத்தில் ஒரு பக்கம் இவனது சந்தேகத் தீ.. இன்னொரு பக்கம் பிணங்கொத்தி கழுகுகள் என சதைக்கு ஏங்கும் மிருகங்கள் நடுவில் தினமும் தீக்குளிக்கிறாள். அவளைப் போன்ற எத்தனை சீதைகள்தான் தீக்குளிக்கிறார்கள் அனுதினமும்!

கடையில் அவள் இரு வாய் உண்டிருக்க அவள் வீட்டுக்கு அருகில் இருந்த இசக்கி ஓடி வந்தான்.

“எக்கா… எக்கா .. கதிரேசன் அண்ணண் ..”

அவன் அழும் குரலில் சொல்ல மாலினிக்கு புரிந்துப் போனது. சென்ற முறையே டாக்டர் ‘ஒரு மாசம் ரெண்டு மாசம் தாங்குமானு தெரியலை’ என்றார். நேராக மயிலாத்தாள் கடைக்குச் சென்றாள். சீட்டு போட்டு பிள்ளை படிப்புக்கு வைத்திருந்த இருபதாயிரம் ஈமச் சடங்கு செலவுக்கு சரியா இருக்கும். வாங்கிக் கொண்டு சென்றாள்.

ஈமச் சடங்குகள் தொடங்கியது. பெரிய அழுகுரல் கேட்கத் தொடங்கியது. அமைதியாக தன் மகளை அணைத்துக் கொண்டு அமர்ந்து இருந்தாள்.

இறுதியாக பிணத்தை எடுக்க உற்றார் உறவினர் பெருங் குரலெடுத்து அழ, பிணத்தை எடுத்து எரிச்சு அஸ்தி ஆக்கும் வரை அவளது கண்ணில் இருந்து மட்டும் ஒரு துளி நீர் துளிர்க்கவில்லை. ‌ஆறு வருடத் தாம்பத்ய வாழ்வில் காதலுடன் இணைந்த ஆறு மாத காலக் காதல், அதன் பின்னான அத்தனை நரக சித்ரவதையில் அழிந்தே போயிருந்தது. வறண்டு கிடக்கும் மனதில் கண்ணீர் எங்கிருந்து வரும்?!!

“கண்ணுல ஒரு சொட்டுத் தண்ணீ இல்ல கல்லு மனசு ”

“ஒழுக்கங்கெட்ட தேவிடியா! எங்க அழுவப் போறா? ”

ஊராரின் எந்த வசையும் அவள் உடல்மொழியில் எந்த வித மாற்றத்தையும்  கொண்டு வர இயலவில்லை. நான்கு நாட்கள் கழித்து மீண்டும் கடைக்குப் போனாள்.

“ஏக்கா, நல்ல காரியத்துக்கு சாமிக்கு பூ சாட்ட போற. அவ கடையில போய் வாங்கற?”

மாலதியிடம் வாடிக்கையாக பூ வாங்கும் பெண் அவளது கடைத் தாண்டி நடக்க அவள் மனதில் எண்ணங்கள் தோன்றியது.

மனிதர்கள் மனதில் இருக்கும் அழுக்குகளை எத்தனை அபிசேகங்கள் செய்து கழுவி விட முயற்சிக்கிறார்கள் சிரிப்பு வந்தது அவளுக்கு

அவள் ஒன்றும் பேசாமல் மறுநாளில் இருந்து சற்று பெரிய பொட்டாக மஞ்சள் நிற சேலையில் செல்லத் தொடங்கினாள். கமலம் தன் மருமகளின் கோலம் கண்டு கேட்டாள்.

“மாலதி, பூ விக்கனும்னு இப்படி?”

“சாமி என் கைல பூ வாங்காதா அத்தை? மனசளவில நான் யாருக்கும் கெட்டது நெனைச்சதில்ல. நல்ல மனசு மாதிரி சாமிக்கு படைக்க நல்ல விஷயம் எதுவுமில்லை”

வயிறும் பசியும் ஏழைகளை எத்தகைய சூழ்நிலையிலும் இயங்க வைக்கும் வரத்தின் சாபம்

“அம்மா, பசிக்குது “

இந்த வார்த்தைகள் எந்த வலிகளையும் விழுங்கிக் கொள்ளச் செய்யும் அதிசயம். மாலதி வழக்கம் போல் கிளம்பிச் செல்ல பக்கத்து கடையில் பேசுவது கேட்டது.

“புருசன் செத்து நாலு நாள் ஆகல. அதுக்குள்ள வந்துட்டா பாரு”

இந்த பேச்சுகள் ஆறு மாதங்களில் குறையும் என நினைத்திருக்க அவள் எண்ணங்களுக்கு மாறாக அதிகமாகத் தொடங்கியது. ஆனால், அவளின் உழைப்பும் அதனுடன் சேர்த்து வெகுவாகவே அதிகரித்தது. மாவு அரைத்து விற்பது, பூக்கட்டுவது எனப் பம்பரமாக சுழலத் தொடங்கினாள். ஆனால், அந்த ஓட்டத்தில் ஒரு நாள் ஒரு நிமிடம் வறண்ட அவள் மனதை மெலிதாக மிக மிக மெலிதாக நனைத்தது.

அன்று அவள் மதிவதனிக்கு பள்ளிக் கட்டணம் செலுத்தி விட்டு இடைப்பட்ட நேரத்தில் வீட்டிற்கு வந்தாள். மாடிப்படி ஏறுகையில் மணியம்மாளின் குரல் கேட்டது.

“ஏண்டா, மெய்யாலுமே அந்த பொண்ணை இஷ்டப்பட்ட தானே? நான் கமலாண்ட பேசறேன்”

“நீ ஏதாச்சும் பண்ணிடாதே ஆயா. அது நல்ல பொண்ணு ஆயா. எனை எல்லாம் நிமிர்ந்துக் கூட பார்க்காது. இந்த பேச்சை இத்தோட விடு கண்டமானிக்கு பேசும் சனம்”

“அன்னாடம் அந்த பூக்கடையாண்ட நீ நிக்கறது எனக்கும் தெரியும் டா”

கீழே இறங்கி வருகையில் அவர்கள் பேசுவது அவள் காதில் விழுந்தது. அதற்கு மேல் அங்கு நில்லாது வேகமாகக் கடந்தாள். சில நிமிட முட்களை நிஜங்களின் அழுத்தத்தில் வேகமாகக் கடக்கத்தான் எவ்வளவு விசனப்படுகிறது மனது.

ஆனால், அன்றிலிருந்து ஒவ்வொரு நாளும் அவளையும் அறியாது அந்த மறைவில் நிற்கும் பிகிலை அவள் கண்கள் அவனும் அறியாது நோக்கி விட்டு திரும்பி விடும்

சில சமயங்களில் யாருடனாவது பேசிக் கொண்டோ, சில சமயங்களில் கோவில் வாசலில் நின்றோ தினமும் ஒரு முறை அவளை அவன் காண்பது நடந்துக் கொண்டேதான் இருந்தது.

காமத்தில் காதலில் இரண்டிலிலும் சேராத இந்த பார்வைகள், பிறரது எண்ணங்களின் வக்கிரத்திற்கும் வெகுளித்தனத்திற்கும் ஏற்ப மொழிபெயர்த்துக் கொள்ளப் படட்டும்; கறுப்புநிற ஆடையில் கறைகளைத் தேடித் தீர்க்கட்டும் என நாட்கள் நகர்ந்தது.

 அன்று வெள்ளிக்கிழமை அதுவுமாக நாள் முழுவதும் வேலை அதிகமாக இருக்க, இரு முறை பிகில் நிற்கும் மறைவை பார்த்துக் கொண்டு திரும்பிய மாலதியின் கண்களில் பிகில் ஓடி வருவது தெரிந்தது.

அவன் அவளது கடையின் முன்னே கீழே விழ, அவன் முதுகில் கத்தி சொருகியிருந்ததில் இரத்தம் வழிய, அவனது விழிகள் முதலும் கடைசியுமாக அவளது விழிகளை நேர்க்கோட்டில் சந்தித்து குத்தி நின்றது. அந்த உணர்ச்சிகளை மொழிபெயர்த்து எதையோ உணர்ந்தவன் போல் மகிழ்ச்சியில் இதழ்கள் வளைய உயிர் பிரிந்து அவன் விழிகள் அவளைப் பார்த்தப்படியே மூடியது.

மாலதி அந்தக் காட்சியின் கொடூரத்தின் விக்கித்து நின்றாள். மறுநாள் பிகிலின் ஈமச் சடங்குகள் நடக்க, மணியம்மாள் பெருங்குரலெடுத்து அழ அந்த குடியிருப்பே கீழே கூடி இருந்தது. கீழே பறை சத்தம் முழங்க அவன் உடல் அங்கிருந்து எடுத்துச் செல்லப்படும் சமயம் மாலதி கண்களில் இருந்து இரு பெரும் கண்ணீர் துளிகள் அவள் விழி தாண்டி வழிந்தோடியது.

-nilaprakash98@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button